சிஎஸ்கே-வில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? - வீரர்கள் ஏலம் மீதான எதிர்பார்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 244 பேர் இந்திய வீரர்கள், 115 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதிகபட்சம் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படலாம். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம். சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது? ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில் கடைசி இடத்தையே பிடித்தது. அதனால், பல வீரர்களை அந்த அணி இம்முறை விடுவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேட் செய்து சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே. இப்போது சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரீவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், ராம்கிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, கலீல் அஹமது, நாதன் எல்லிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 16 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால், அந்த அணி இன்னும் அதிகபட்சமாக 9 பேரை வாங்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். இந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 43.40 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. கேமரூன் கிரீனை வாங்க வேண்டுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார் கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீதுதான் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக கடந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத அவர், இந்த ஏலத்தின் முதல் செட்டில் (பேட்டர்கள்) இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.30 கோடி ரூபாய்), சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளிடமுமே அதிக தொகை இருப்பதால், இவ்விரு அணிகளும் கிரீனுக்காக கடுமையாகப் போட்டியிட வாய்ப்பு உள்ளது. முந்தைய ஐபிஎல் ஏல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்றும், 30 கோடி ரூபாயைக்கூட தாண்டலாம் என்றும் பேசப்படுகிறது. அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கேமரூன் கிரீன் அவசியம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. "கேமரூன் கிரீனை வாங்கினால் சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் நன்கு பலமடையும். கிரீன், பிரீவிஸ், துபே ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். அவர் நான்காவது வீரராக விளையாட நன்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அவர், தேவைப்பட்டால் ஓப்பனராகவும் கிரீனால் விளையாட முடியும் என்கிறார். மறுபுறம் கிரீனை முதன்மையான இலக்காக வைக்க வேண்டாம் என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. "நைட் ரைடர்ஸுக்கு நிச்சயம் கிரீன் தேவை. அவர்களின் கையில் பெரிய தொகை இருப்பதால், அதைக் குறைப்பதற்காக சிஎஸ்கே கிரீனுக்கு ஏலம் கேட்க வேண்டும். ஆனால், ஓர் அளவு வரை ஏலம் கேட்டுவிட்டு விட்டுவிட வேண்டும். ஏனெனில், சிஎஸ்கே வேறு சில இடங்களை நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் அவர். கிரீனுக்கு பதில் வேறொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வேண்டாம் என்று சொல்லும் நானீ, இன்னொரு ஆஸ்திரேலிய வீரரை சூப்பர் கிங்ஸ் குறிவைக்க வேண்டும் என்கிறார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, ரவீந்திர ஜடேஜாவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். "ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். அதை நிரப்ப இரண்டு வீரர்களே தேவைப்படும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர் வேண்டும். கிரீன் அப்படிப்பட்ட வீரர்தான் என்றாலும், சுழற்பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு மிகவும் அவசியம்" என்கிறார் நானீ. தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் நூர் அஹமது, ஷ்ரேயாஸ் கோபால் என இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அஷ்வின், ஜடேஜா என பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய இரண்டு பெரிய வீரர்களை சிஎஸ்கே இழந்திருப்பதால், அதுதான் அந்த அணியின் பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்கிறார் நானீ. அதனால்தான் கிரீனுக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கூப்பர் கானலியை சிஎஸ்கே வாங்க வேண்டும் என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜடேஜாவின் இடத்தை கூப்பர் கானலியை வைத்து நிரப்ப வேண்டும் என்கிறார் வர்ணனையாளர் நானீ "கூப்பர் கானலி பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவர் சூப்பர் கிங்ஸுக்கு பொருத்தமான வீரராக இருப்பார். இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், இடது கை ஸ்பின் என ஜடேஜாவின் இடத்தை அவரால் அப்படியே நிரப்ப முடியும். அவர் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன் போலச் செயல்படுவார். சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக் கூடியவராக வருவார். மிகவும் நிதானமான மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். நல்ல இடது கை ஸ்பின்னர். அற்புதமான ஃபீல்டரும்கூட. இதே வயதில் ஜடேஜா எப்படி இருந்தாரோ, அதைவிடத் திறமைசாலியாக இப்போது கானலி இருக்கிறார்" என்று கூறினார் நானீ. ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடிவிட்டார் 22 வயதான கானலி. 2022 அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டிருந்தார். கிரீனை வாங்காமல் கானலியை வாங்குவதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்றும், அதன்மூலம் இந்திய ஸ்பின்னர், வெளிநாட்டு ஃபினிஷர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆகிய இடங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். அதோடு, "வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டைப் போல மிகப்பெரிய தொகைக்குப் போக மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால், சிஎஸ்கே அவரை வாங்கலாம். அவர் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம்" என்று கணிக்கிறார் நானீ. வெளிநாட்டு ஃபினிஷர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லரை லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிலீஸ் செய்திருக்கிறது ஒருவேளை பிளேயிங் லெவனில் இன்னும் அனுபவமிக்க வெளிநாட்டு ஃபினிஷர் வேண்டுமென்று சூப்பர் கிங்ஸ் நினைத்தால், லியாம் லிவிங்ஸ்டனை வாங்கலாம் என்று சொல்கிறார் நானீ. அவராலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப முடியும் என்கிறார் அவர். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு ஐபிஎல் சாம்பியன் ஆகியிருந்த லியாம் லிவிங்ஸ்டன் அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். அவருக்கும் இந்த ஏலத்தில் பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஒரேயொரு பிரச்னை என்னவெனில், அந்த நாளில் எப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் களம் காண்பார் என்பதைத்தான் சொல்ல முடியாது. கணிக்க முடியாத வீரர் அவர்" என்கிறார் நானீ. அதேநேரம் டேவிட் மில்லர் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன். "ஃபினிஷிங் ரோல் செய்வதற்கு டேவிட் மில்லர் பொருத்தமான வீரராக இருப்பார். நல்ல அனுபவம் கொண்டவர். துபே பந்துவீச்சில் தற்போது நல்ல முன்னேற்றம் கொண்டிருப்பதால், ஆல்ரவுண்டரைத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஓரிரு ஓவர்களை துபேவால் நிரப்ப முடியும்" என்கிறார் அவர். லக்னௌ அணியால் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் டேவிட் மில்லர் ஐபிஎல் அரங்கில் மூவாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார் அவர். சாம்சன், மாத்ரே, கெய்க்வாட், பிரீவிஸ் என வலது கை பேட்டர்கள் நிறைந்த சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் இடது கை பேட்டர் ஒருவர் இணைவது அணிக்குக் கூடுதல் பலமாக அமையும். எந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் விக்னேஷ் புத்தூர் ராகுல் சஹர், ரவி பிஷ்னாய் என இந்தியாவின் இரண்டு முன்னணி ஸ்பின்னர்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றிருப்பதால், அவர்களுள் ஒருவரை சிஎஸ்கே வாங்க முயலக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பிஷ்னாய், சஹர் இருவரில் ஒருவரை வாங்குவதென்றால், சஹரை வாங்குவது நல்லது. ஏனெனில், பிஷ்னாய் கிட்டத்தட்ட ஒரு மிதவேகப்பந்துவீச்சாளர் போலத்தான். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரே மாதிரி கூக்ளியாக வீசுவார். அது சேப்பாக்காத்திற்கு ஒத்து வராது" என்று சொல்லும் நானீ, 'ஃபிங்கர் ஸ்பின்னர்' தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று கூறினார். அப்படியான அனுபவ இந்திய பௌலர்கள் ஏலத்தில் இல்லாததும் கானலியின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறுகிறார் அவர். "ஒருவேளை விக்னேஷ் புத்தூர் கிடைத்தால் அவரைக்கூட வாங்கலாம். சென்னைக்கு ஏற்ற வீரராக இருப்பார்" என்றார் நானீ. ஏற்கெனவே இன்னொரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அஹமது இருக்கிறாரே என்று கேட்டதற்கு, "அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா இருவருமே இந்திய அணிக்கு ஆடுகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான். நல்ல தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரே மாதிரியான திறமையுள்ள வீரர்கள் ஆடுவதில் தவறேதும் இல்லை" என்கிறார். கூடுதலாக, வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன்கூட சூப்பர் கிங்ஸுக்கு ஏற்ற வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத். பதிரணாவா வேறு வேகப்பந்துவீச்சாளரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 மெகா ஏலத்துக்கு முன்பாக ரீடெய்ன் செய்த பதிரணாவை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவை சூப்பர் கிங்ஸ் ரிலீஸ் செய்திருந்த நிலையில், அவரை சூப்பர் கிங்ஸ் மீண்டும் இந்த ஏலத்தில் வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்து அவரை வாங்க வேண்டியதில்லை என்பதே அவர்கள் இருவரின் கருத்தாகவும் இருக்கிறது. முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, லுங்கி எங்கிடி போன்ற 'பேஸ் ஆஃப் தி விக்கெட்' போடும் பௌலர்களை வாங்கலாம் என்று கூறும் நானீ, ஜேசன் ஹோல்டர்கூட நல்ல தேர்வாக இருப்பார் என்கிறார். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்கிறார் அவர். வித்யுத்தோ, ஜம்மு காஷ்மிரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபியை வாங்கலாம் என்கிறார். "ஆகிப் நவி நல்ல ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் பந்தை நன்கு நகர்த்தக் கூடியவர். அதேபோல டெத் ஓவர்களில் யார்க்கர்களையும் சிறப்பாக வீசுவார். அவர் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பலமாக்குவார்" என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxg3ng9q7yo
By
ஏராளன் · 5 minutes ago 5 min
Archived
This topic is now archived and is closed to further replies.