Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்

jaffnaஇன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர்.  தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.

இவ்வாறு Quartz India ஊடகத்தில், Tomasz Augustyniak எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

வெள்ளிக்கிழமைகளில், யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு  பேரங்காடி (shopping mall) முன்புறமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதைக் காணலாம். காற்றில் அற்புதமான வாசனை கலந்திருக்கும். குர்தாக்கள் அணிந்திருக்கும் தாய்மார்கள் தமது அழகிய பிள்ளைகளுடன் நிற்பதைக் காணலாம். இளைஞர்கள் தமது உந்துருளிகளில் இருப்பார்கள். இவர்களில் சிலர் இளம் பெண்களை நோட்டம் விட்டவாறு நிற்பதையும் இங்கு காணலாம்.

இங்கு சமீபத்திய இந்திய வெற்றிப்படங்கள் திரையிடப்படுகின்றன. பீட்சா, கோழிப் பொரியல், சூடாக கேக் போன்ற  உணவுப் பொருட்கள், குளிர்களி போன்ற ன விற்கப்படுகின்றன.

இந்த அங்காடியை நோக்கிப் பெருமளவான மக்கள் செல்வதால், யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் தமது விற்பனையை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணமானது, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுறும் வரை புலிகளின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று பத்தாண்டு கால யுத்தத்தின் போது 80,000 தொடக்கம் 100,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 2009ல் சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஐந்து மடங்கான 200 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.

வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணமானது யுத்த காலத்தில் கண்ணிவெடிகளாலும் துப்பாக்கி ரவைகளின் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது. இந்த நகரானது கடந்த சில ஆண்டுகளாக தன்னை மீளவும் புனரமைத்துக் கொள்வதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.

jaffna

யுத்தமானது யாழ்ப்பாண வாழ் மக்களுக்கு பல்வேறு விடயங்களைப் புகட்டியுள்ளது. ‘போர்க் கால பொருளாதாரமானது எமது மக்கள் தமக்கான உணவைத் தாமாகவே தயாரிப்பதற்கும், கார் போன்ற வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதற்கும், மின்சார விளக்குகளுக்குப் பதிலாக மண்ணெண்ணை விளக்குகளையும் பயன்படுத்தப் பழகினர். வேறெந்த ஆடம்பரப் பொருட்களிலும் தமது பணத்தைச் செலவழிப்பதற்கான சூழல் மக்களுக்கு இருக்கவில்லை. இதனால் இவர்கள் தமது சேமிப்பை அதிகரித்தார்கள்’ என மூத்த பத்திரிகையாளரான என்.வித்தியாதரன் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து உறவினர்களால் அனுப்பப்படும் நிதி, தமது சேமிப்பு நிதி போன்றவற்றின் மூலம் யாழ்ப்பாணத்து தமிழர்கள் செழுமைமிக்கவர்களாகவும் வன்னி மற்றும் தென்னிலங்கையிலிருந்த தமது உறவினர்களை விட செழிப்பானவர்களாகவும் இருந்தனர். அண்மைய ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்துக் கோயில்கள் மீளவும் புனரமைக்கப்படுகின்றன. இங்கு பல ஆடம்பர விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிதி வழங்கும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை பல இடங்களில் காணமுடியும்.

அரசாங்க நிதியுடன் யாழ்ப்பாண நகர தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2014 தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான தொடருந்துப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாத்துறையானது வளர்ச்சி பெற்று வருகிறது. யாழ்ப்பாண நகரின் கலாசார நிறுவகங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. புதிய வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

பொதுவாக, மக்கள் தமது நிதியை ஆடம்பர வாழ்விற்காகச் செலவழிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த செலவீனமானது 2009ல் சராசரி 158 டொலர்களாகவும், 2013ல் இது 246 டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் சராசரி குடும்பச் செலவீனமானது இதன் இரண்டு மடங்காகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது 2009லிருந்து யாழ்ப்பாணத்து வாழ் மக்களின் பொருளாதாரமானது வீழ்ச்சியுற்றுள்ளது என்பதை அறியலாம்.

பூகோளமயமாக்கலானது யாழ்ப்பாணத்தில் மேலும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இது பெரும்பாலும் இந்தியாவின் ஊடாகவே ஏற்பட்டுள்ளது. கொழும்பை விட இந்தியாவின் புதுடில்லி மற்றும் சென்னையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அறிந்து கொள்கின்ற வீதம் அதிகமாகும். இவர்களது குடும்பத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக சிறிலங்காவில் வாழ்ந்து வந்துள்ள போதிலும், இந்தியர்கள் தமது சகோதரர்கள் என இந்த மக்கள் அதிகம் எண்ணுகின்றனர். இவர்கள் இந்திய தொலைக்காட்சி சேவைகளைப் பார்வையிடுவதுடன், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் இசையை ரசிக்கின்றனர். தாங்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்காகவா அல்லது சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களுக்காகவா கரகோசம் செய்வது என்பதைக் கூட இந்த மக்கள் சிலவேளைகளில் மறந்து விடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் நடுத்தர நகரத்து மக்கள் மேற்குலக துரித உணவுகளையும் இந்திய பொப் கலாசாரத்தையும் நாடிச் செல்கின்றனர். இங்கு ஆடம்பர சாதனங்கள் பயன்படுத்தப்படுவதானது புதிய குறியீடுகளாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணமானது தற்போதும் பழமையைப் பின்பற்றுகின்ற ஒன்றாக உள்ளபோதிலும் உலகில் சுற்றுலா செய்யக்கூடிய மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தின் உள்நாட்டு மக்கள் அதிகளவில் நுகர்வோர்களாக மாறிவருகின்றனர்.

‘யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முறைமையானது தற்போது மாற்றமடைந்துள்ளது. அதேபோன்று இவர்களது பணச் செலவழிப்பு முறைமையும் மாற்றமுற்றுள்ளது’ என உள்ளுர் வர்த்தக மற்றும் தொழிற்றுறை சம்மேளனத்தின் பிரதி அதிபர் என்.நாதறூபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் முதியோர்கள் தமது கடந்த காலத்தை நினைத்து வருந்துவதாகவும் அவ்வாறானதொரு சூழல் யாழ்ப்பாணத்தில் இனியொருபோதும் வரப்போவதில்லை எனவும் கூறுகின்றனர். இந்த நகரின் சமூக வாழ்வியலின் அடிப்படை மாற்றமுற்றுள்ளது எனவும் முதியோர் சுட்டிக்காட்டுகின்றனர். போரின் போது தப்பிப்பிழைத்த யாழ்ப்பாணத்தவர்கள் பலர் தற்போது நாட்டின் வேறிடங்களில் வாழ்கின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

‘போரின் போது யாழ்ப்பாணத்தில் பல வீடுகள் அழிக்கப்பட்டன. இன்னும் பல பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகவே இவை இடிக்கப்பட்டுள்ளன. யாழ் நகர மக்கள் பலர் தாம் இன்று தென்னாசியாவில் சிறந்த வீடுகளைக் கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவின் பேராசிரியர் பி.அகிலன் தெரிவித்தார்.

போரின் பின்னர் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் மக்கள் பலவற்றை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது சிலவேளைகளில் அதிருப்தியும் துயரம் மிக்கதாகவும் அமைகின்றது.

jaffna

மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்புக்கள் போன்றன அதிகமாகக் காணப்படுகின்றன. மக்கள் தமக்கான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனங்கள் கடன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ‘கடனை அடைப்பதற்காக மக்களால் வழங்கப்படும் சில காசோலைகள் செல்லுபடியற்றதாகவும், சில கொடுப்பனவுகள் ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். பெரும் நெருக்கடி ஒன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகளே இவையாகும்’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஹற்றன் நசனல் வங்கியின் முகாமையாளர் எஸ்.சுந்தரேஸ்வரன் தெரிவித்தார்.

‘2013ல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறிய வர்த்தகர்கள் உட்பட 30 வர்த்தகர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் உள்ளன. வர்த்தகர்கள் வங்குரோத்து நிலையில் தமது நிறுவனங்களை நடத்துவதால் அவற்றைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ என நாதறூபன் தெரிவித்தார்.

தனது வாடிக்கையாளரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் சுந்தரேஸ்வரன் போரின் பின்னான பொருளாதார மாற்றத்தின் பெறுபேற்றால் தற்கொலைகள் அதிகரித்துள்ளன என்கின்ற தலைப்பில் ஆக்கம் ஒன்றைப் பிரசுரித்திருந்தார். இதன் பின்னர் மக்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் நிதியின் அளவு குறைக்கப்பட்டது. ஆனாலும் இன்றும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.

போரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புதிய வங்கிகள் மிகவும் குறைவான கட்டுப்பாட்டுடன் கடன்களை வழங்கின எனவும் இதனால் விவசாயிகள் அதிகம் கடன்களைப் பெற்றனர் எனவும் இது விவசாயிகளை அதிகம் பாதித்ததாகவும் அரசியல் பத்தி எழுத்தாளரும், பல்கலைக்கழக ஆசிரியருமான எம்.நிலாந்தன் தெரிவித்தார். இந்த விவசாயிகள் தமக்கான வாகனங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவியந்திரங்கள் போன்றவற்றைப் புதிதாகக் கொள்வனவு செய்வதற்காக தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடமும் கடன்களைப் பெற்றன. உண்மையில் அவர்களுக்கு இவற்றுக்கான தேவை ஏற்படவில்லை.

விவசாயிகள் பலரும் தற்கொலை செய்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்காவில் 6000 மக்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகில் தற்கொலை வீதத்தில் நான்காவது இடத்தில் சிறிலங்கா உள்ளது.

‘அறுவடையை முன்னிட்டு வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. ஆனால் விவசாயிகள் இந்தக் கடனை ரூபா 50,000 பெறுமதியான தொலைக்காட்சிகளை வாங்குவது போன்ற பிற ஆடம்பரங்களுக்காகச் செலவிடுகின்றனர். ஆனால் இவர்கள் பயிர்களை விற்கும் போது இவர்களால் தமது செலவுகளை ஈடுசெய்ய முடிவதில்லை. தமது கடன்கனை அந்தந்தக் காலத்தில் செலுத்த முடிவதில்லை. இதன் பின்னர் இவர்கள் தமது தொலைக்காட்சியை ரூபா 40,000 இற்கு விற்கிறார்கள். இதன் பின்னர் இவர்களிடம் பணமும் இருக்காது, தொலைக்காட்சியும் இருக்காது’ என நிலாந்தன் குறிப்பிட்டார்.

பல பத்தாண்டு கால யுத்தமானது சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இவர்களின் தொழில் சார் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டன. இவர்களின் கட்டடங்கள் சேதடைந்தன. தொழில் சார் தகைமையைக் கொண்ட தொழிலாளர்கள் வேறிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் யுத்தத்தில் பங்குகொள்ள வேண்டிய நிலையும் தோன்றியது. ஆனால் இவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பாதிப்புற்றது.

சிறிலங்கா அரசால் தாம் பாரபட்சப்படுத்தப்படுவதாக உள்ளுர் தொழில் முயற்சியாளர்கள் கருதுகின்றனர். யாழ்ப்பாணத்தின் வீதிகள் இன்று பழைய மற்றும் புதிய மாற்றங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. போரின் போது நாசம் விளைவிக்கப்பட்ட இடங்கள் இன்று புதிய கட்டடங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் சிங்கள தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணத்தில் பாரிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் மற்றும் தென்னிலங்கையர்கள் யாழ்ப்பாணத்தில் தமது விடுதிகள் மற்றும் நிறுவனங்களை அமைத்து நடத்துவதென்பது அவர்களுக்கு இலகுவானதாகும் எனவும் ஆனால் தென்னிலங்கைச் சந்தைகளில் தமிழர்கள் உள்நுழைவதென்பது நடக்காத காரியம் எனவும் உள்ளுர் விவசாயிகள் சுட்டிநிற்கின்றனர்.

‘தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் வடக்கில் தமது நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான அனுமதிகளை மிக விரைவாகப் பெற்றுக் கொள்கின்றனர்’ என யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழிற்றுறை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரி.யுறிசன் ஜெனராஜ் தெரிவித்தார்.

தமிழ்ப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபடும் சிங்கள சில்லறை வியாபாரிகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தமிழ் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இவை தவிர, தமிழ் மக்களுடன் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், ஒவ்வொரு சட்டங்களையும் கூறி தமிழ் வர்த்தகர்களின் அனுமதிகளைப் புறந்தள்ளுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தகர்கள் மீது தனிப்பட்ட ரீதியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என சிறிலங்காவின் தேசிய கோட்பாடுகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 5.2 சதவீதத்தினர் வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். 2014ல் இதன் உள்ளுர் பொருளாதார உற்பத்தியானது 2.8 பில்லியன் டொலராகும். இது சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 3.6 சதவீதமாகும். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரமானது சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகளிலேயே தங்கியுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இதன் பொருளாதாரம் காணப்படவில்லை. ‘சிறிலங்கா அரசாங்கத்தின் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவில்லாமல், நாங்கள் எமக்கான உற்பத்தித்துறையை விருத்தி செய்ய முடியாது’ என ஜெனராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்து மக்கள் இன்று தம்மை அபிவிருத்தி செய்தாலும் கூட அவர்கள் பெற்றுக்கொண்ட வடுக்கள் மிகவும் ஆழமானவையும் ஆற்றுப்படுத்த முடியாதவையும் ஆகும். இங்கு ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவரேனும் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். போரில் தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் உள்ளனர். இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர்.  தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கமானது இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.

‘சிங்கள அரசியல்வாதிகள் அடுத்த கிளர்ச்சியைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் எங்களால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகமாகும்’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் Groundviews நிறுவுனர் சஞ்சனா கொற்றோருவ தெரிவித்தார்.

‘சிறிலங்கா அரசானது தமிழ் மக்களுக்கு எதனைச் செய்கின்றது என்பதை தற்போதும் எஞ்சியிருக்கும் இராணுவமயமாக்கல் சுட்டிநிற்கிறது. நாங்கள் இன்னமும் இழந்து போன எமது உறவுகளினதும் காணாமற் போனவர்களினதும் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை. இராணுவத்தினர் கையப்படுத்தியுள்ள நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. புலனாய்வாளர்களால் நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம். காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர்களுக்கு அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது சந்தேகத்தின் பேரில் எவர் எப்போதும் கைதுசெய்யப்பட முடியும் என்கின்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது’ என்கிறார் நிலாந்தன்.

மனவடுக்களின் பாதிப்புக்களுடன் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் தொழில்வாய்ப்புக்கள், குடிநீர் போன்ற எந்தவொரு வாய்ப்புக்களும் இன்றி இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தாம் என்றோ ஒரு நாள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வோம் என்கின்ற நம்பிக்கையையும் இழந்து வாழ்கின்றனர். யாழ்ப்பாணம் தொடர்ந்தும் வளர்ச்சியுறுவது போல தமிழ் மக்களின் நம்பிக்கையும் வளர்ச்சி பெறவேண்டும்.

‘வாழ்க்கை என்பது ஒரு மசாலா திரைப்படம் அல்ல. நாங்கள் எம்மை முன்னேற்றுவதற்கு இன்னமும் காலஅவகாசம் தேவைப்படுகிறது’ என பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிலன் தெரிவித்தார்.

 

http://www.puthinappalakai.net/2016/03/31/news/14989

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.