Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாத்திமா

Featured Replies

பாத்திமா

haifa-bitar.jpg

- ஹைஃபா பீதர்(haifa bitar)

தமிழில் விக்னேஷ்

பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப்  பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒரு மௌன இரைச்சல் என் மனதைக் கிழிக்கிறது.

பிச்சை எடுப்பவளிடம் இத்தனை தன்னம்பிக்கையை எதிர்பார்த்திராததால்   பாத்திமா எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே எனக்குப் பெரும் புதிராக இருந்தாள். பிச்சை எடுத்தல் இழிவான, தரம் தாழ்ந்த தொழிலாக இருப்பினும் பாத்திமா தன்னில் சிறந்த கண்ணியத்தையும் சுயமரியாதையும் கொண்டிருந்தாள். அவள் கண்ணியத்தின் அர்த்தத்தை அறிந்திருக்க மாட்டாள், ஏன் அப்படி ஒரு வார்த்தை உள்ளது கூட அவளுக்குத்  தெரிந்திருக்காது, ஆனால் கரி மூடிய வைரம் போல அவள் தன்னுள் கண்ணியத்தைக் காத்திருந்தாள்.

பாத்திமா என்னை முழுமையாகக் கவர்ந்து என் மேல் ஆதிக்கம் செலுத்துகிறாளோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. நான் நன்றாக உஷ்ணப்படுத்தப்பட்ட என் அலுவலகத்தில் அமர்ந்து அதன் சூட்டை  ரசித்தபடி,  ஒவ்வொரு செய்தி அறிக்கையும் தரும் மன அழுத்ததைக் குறைக்க உதவும் காப்பியைக் குடித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே  தொலைக்காட்சியை விட்டு என் பார்வை ஜன்னல் வெளியே பெய்யும் அடை மழையை ரசித்தது.

பாத்திமா நடமாடும் சோளக்கொல்லைப் பொம்மையைப் போல என் அலுவலகத்துக்குள் வந்தாள். எலும்பும் தோலுமான உடலைச் சுற்றி கந்தல் ஆடைகளை அணிந்த அவள் பாதங்கள் குளிரால் நைந்து அழுக்கான கிழிந்த காலணிகளையும் தாண்டித் துருத்திக் கொண்டிருந்தது. இளமையின் சுவடே தெரியாமல் வலியாலும் சோர்வாலும் மாசடைந்த தன் முகத்தை நிமிர்த்திக்கொண்டு சலித்த புன்னகையுடன் உள்ளே வந்தாள். ஏனோதானோ என்று கத்திரிக்கப்பட்டிருந்த அவள் முடியில் இருந்து வழியும் மழைநீர் அவள் கழுத்தையும் தோள்களையும் நனைத்தது. அவள் வலது கையில் ஒரு கருப்பு சாக்குப் பையைப் பிடித்திருந்தாள்.

“இந்த சுவெட்டரை வாங்குவீங்களா?” அவள் குரலில் சற்றும் கெஞ்சல் இல்லை.

சாக்குப் பையில் இருந்து ஒரு பச்சை வண்ண சுவெட்டரை எடுத்து நான் அந்த கிழிசலை வாங்கப் போவதில்லை என்று தெரிந்தும் என் முன் விரித்தாள்.

அவளை என்னால் துரத்த முடியவில்லை. பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் கிடைக்கும் சில்லறையை அவர்கள் கையில் திணித்துவிட்டு  வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்வதுதான் என் வழக்கம். அக்குழந்தைகளின் கந்தலான தோற்றம் என்னை வருத்ததிலும்,  கோபத்திலும் ஆழ்த்தும்.

ஆனால் பாத்திமா ஏதோ மாயம் செய்து என் ஒவ்வொரு அணுவாலும் அவளைக் காணச் செய்கிறாள். அவள் ஆளுமையின் புதிர் என்னைக் கவர்ந்தது. தனித்து, பசித்து, குளிரில் நடுங்கியபடி கிட்டத்தட்ட வெறுங்காலில் நிற்கும் இந்த சிறு உருவத்திற்குள்தான் எத்தனை உறுதி, எத்தனை சுயகௌரவம். அவள் புதிரான பார்வையை, அவள் செலுத்தும் மாயத்தை விலக்கத்தான் நான் நினைத்தேனோ?

“யார் நீ” என்று நான் கேட்டேன்.

“பாத்திமா” என்றாள் அவள்.

“சரி பாத்திமா, நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்”

அவள் வெறுமனே தோள்களைக் குலுக்கி, பழுப்பேறிய பற்களைக் காட்டிச்  சிரித்தாள்.

“நீ பள்ளிக்குச் செல்லவில்லையா ?”

“நான் அஞ்சாவது வரைக்கும் போயிருக்கேன்”

“பின் ஏன் பள்ளியில் இருந்து நின்றாய் பாத்திமா?”

“ நான் வேலைக்குப் போறதுக்காக அம்மா நிறுத்தச் சொல்லிட்டாள்“

“உன் அம்மாதான் உன்னைப் பிச்சை எடுக்க வைக்கிறாளா?”

“ஆமாம்.”

ஒரு ஜடத்தை, காட்சிப் பொருளைப் போல அவளைப் பார்த்தேன். அவளது பெரிய செந்தவிட்டு நிற கண்கள் தெளிவாக, சந்தேகமற அவற்றின் நோக்கத்தைக் கூறின, அவள் வேண்டுவது அன்பை, கருணையை அல்ல. “என்னை அப்படிப் பார்க்காதே, உன் கருணையால் என்னை அவமானப் படுத்தாதே, நானும் உன்னைப் போல ஒரு உயிர்தான்; என்ன, என் நிலைமை சற்று கடினமானது.” என்று அவை கூறுவது போல இருந்தது.

நான் அவளுக்குப் பணம் குடுத்தேன், அவளை சந்தோஷப்படுத்தவோ, என் மன நிம்மதிக்காகவோ அல்ல, அதன் காரணம் இன்னும் ஆழமானது. தன்  ஆளுமைக்கு என்னை அடிமைப்படுத்திய அவளை அவள் கனவிலும் நினைக்காத தொகையைக் கொடுத்து எனக்கு அடிமைப்படுத்த நினைத்தேன்.

பெரிய படபடப்பு இல்லாமல் காசை வாங்கி தன் காற் சட்டைப் பையில் சொருகிக் கொண்டாள் அவள். என் முகத்தைப் பார்த்து நன்றியுடன் சிரித்தாள்.

நான் கேட்டேன் “உன் குடும்பத்தைப் பற்றி சொல், உன் அம்மா, அப்பா-“

இடை மறித்து “ அப்பா இரண்டு வருடம் முன் கேன்சர் வந்து செத்துட்டார். எனக்கு நாலு தம்பிங்க” என்றாள் பாத்திமா.

“உன் அம்மா, அவள் என்ன செய்கிறாள்”

“சும்மா இருக்கா.”

“பின் நீங்கள் எப்படிப் பிழைக்கிறீர்கள்?”

அவள் தோள்களைக் குலுக்கியபடி, “கடவுள் காப்பாத்தறார், சில நேரம் சொந்தக்காரங்க சாப்பாடு குடுப்பாங்க”

துயரம், தாயின் கல்மனம், நசிந்த தன் குழந்தைப் பருவம் என்ற தன்  சூழ்நிலையை எந்த எதிர்ப்பும் இன்றி அவள் ஒத்துக்கொண்டு சரணடைந்தது கண்டு எனக்குக் கோபம் வந்தது. ஆனால் இத்தனை வேதனையிலும் அவள் அன்பைத் தேடுகிறாள். என் கோபத்தை அடக்கிக் கொண்டு அவளோடு தொடர்ந்து பேசினேன்.

“நீ ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கி பிச்சை எடுப்பது உன் அம்மாவுக்குத் தெரியுமா?”

“தெரியும்.”

“அவளுக்கு பயம் இல்லையா. உன்னை யாராவது அடிக்கவோ, விரட்டவோ, கடத்தவோ இல்லை –“

இடையில் நிறுத்தி: “தெரியல, தெரியாதுன்னு நினைக்கறேன்.”

“நீ காலையில் எப்போது கிளம்புவாய்”

“ஏழு மணிக்கு.”

“எப்போது திரும்பிப் போவாய்?”

“எட்டுல இருந்து ஓம்பதுக்குள்ள போயிடுவேன்.”

“அதுவரை என்ன செய்வாய்?”

“பிச்சை எடுப்பேன்.”

அவள் நான் கேட்பதை விளையாட்டாக எண்ணி மறுபடியும் தன் தோள்களைக் குலுக்கினாள். பிச்சை எடுப்பது இழிவானது என்று அவள் உணர்ந்ததாகத் தோன்றவில்லை. ஏழ்மையின் குறுகிய மூலையில் பசி அரக்கனின் கரங்களில் அவளும் அவள் தம்பிகளும் அகப்பட்டு இருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள்.

“சரி, பிச்சை எடுத்தால் நிறைய காசு கிடைக்குமா?”

“எப்பவும் இல்ல.”

“அதிகப்படியாக உனக்கு எவ்வளவு கிடைத்திருக்கிறது”

“ஒரு வாட்டி ஒரே நாள்ல நூறு லிரா கிடைச்சிருக்கு.” அலுவலக ஊழியனின் ஒரு வார சம்பளம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

திடீரென இந்த உரையாடலைத் தொடர முடியாது என்று எனக்குத் தோன்றியது. எங்களிடையே ஒரு ஆழமான பிளவு உருவானது, இனி எத்தனைப் பணத்தை அவளுக்குக் கொடுத்தாலும் என்னால் அந்த பிளவைக் கடக்க முடியாது. அவள் இருப்பை என்னால் தாங்க முடியவில்லை என்பதையும் என் மன உலைவுக்குக் காரணம் தான் தான் என்றும் உணர்ந்து கொண்ட பாத்திமா தன் சாக்குப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயார் ஆனாள். நான் அவளைத் தடுத்து அவளிடம் ஒரு மிட்டாயைக் கொடுத்தேன். அவள் நன்றியுடன் தன் மெல்லிய கையை நீட்டி மிட்டாயை வாங்கிக் கொண்டாள், ஆனால் அவளுக்கு அதை உண்பதற்கான ஆர்வம் இருந்ததாய்த் தோன்றவில்லை.

“சாப்பிடு,” என்றேன்.

“இல்லை, இத என் அம்மாவுக்கு குடுக்கணும், அவளுக்கு மிட்டாய்னா ரொம்ப பிடிக்கும்”

உன்னுடைய இந்தப் பாசத்துக்கு உன் அம்மா தகுதியானவளா? என்று அவளிடம் கேட்க நினைத்தேன். கத்தக் கூடாது என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் என் எண்ணத்தின் விஷத்துளி அவள் முகத்தில் தெறித்தது.

“ஏன் பாத்திமா, உன்னை சாலைதோறும் பிச்சை எடுக்க வைக்கும் அம்மாவை உன்னால் எப்படி நேசிக்க முடிகிறது” என்று கேட்டேன்.

அந்தக் குழந்தையின் மனதில் இருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது “எப்படி நேசிக்காம இருக்க முடியும், அவள் என் அம்மா”

அவள் தெளிவற்ற கண்களால் என்னைப் பார்த்தாள். அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது என் மனம் கனத்தது. அவள் செல்வதற்காகத் திரும்பும்போது அவள் விழிப்பள்ளங்களையும், தோள்பட்டைகளையும், குறுகிய இடுப்பெலும்பையும் கண்டேன். அவள் கால்கள் காய்ந்த குச்சிகளைப் போல இருந்தும், தன் உடல் சோகையையும், துயரத்தையும் மீறி அவள் நடை கம்பீரமாக இருந்தது.

அன்று அறையில் இருந்து வெளியேறிய பாத்திமா என் அடுத்தடுத்த  நாட்களை ஆக்கிரமித்தாள், என் வாழ்வின் ஒரு பகுதி ஆனாள், என் வாழ்வுக்குப் புது அர்த்தம் கொடுத்தாள். எங்கும் அவள் நீக்கமற நிறைந்தாள். காரில் செல்லும் போது, அவள் என்னைத் தன் பெரிய கண்களால் பார்த்தபடி சாலையில் எங்கோ அலைந்து கொண்டு இருக்கிறாள் என்று கற்பனை செய்தேன். என் சரிவிகித ஊட்டசத்து நிறைந்த உணவை உண்ணும்போது பாத்திமாவின் பசியை உணர்ந்தேன்… இந்தச் சிறிய பிச்சைக்காரி என்னை மிகவும் குழப்பினாள், நான் அவளைப் பார்க்க விரும்புகிறேனா, இல்லையா என்று எனக்கே புரியவில்லை.

சில நாட்களுக்குப் பின் அவள் என் அலுவலகத்துக்குள் நுழைவதைப் பார்த்ததும் மகிழ்ந்தேன். அழகான பிசாசு போல அவள் மெல்லிய உறுதியான அடி வைத்து என்னை நெருங்குகையில் நான் அறியாத ஒரு நெருக்கம் எங்களுள் ஏற்பட்டு விட்டதை என்னால் உணர முடிந்தது. இதை வெளிக்காட்டாமல் அவளை சாதாரணமாக வரவேற்றேன்.

“நீங்க குடுத்த மிட்டாயை சாப்டுட்டு என் அம்மா எவ்வளவு சந்தோஷப் பட்டாங்க தெரியுமா” என்று உண்மையான சந்தோஷத்துடன் கூறினாள்.

இதைக் கேட்டதும் எனக்குக் கோபம் பொங்கியது. தன் குழந்தையை ஒரு கொடுமைக்கார அம்மாவால் தான் பிச்சை எடுக்கச் சொல்லி சாலையில் தள்ள முடியும் என்றும், அத்தகையவள் வெறுக்கத் தக்கவளே அன்றி வேறு எதுவும் இல்லை என்றும் பாத்திமாவிற்குப் புரிய வைக்க விரும்பினேன். ஆனால் வெறுப்பு என்றால் என்ன என்றே தெரியாத இந்தக் குழந்தையின் தூய்மையான ஆன்மாவை வெறுப்பு அசிங்கமாக்கிவிடும். அவளுக்கு குழந்தைச் சுரண்டலுக்கு எதிரான சட்டங்களைக் கற்றுக் கொடுக்கவும், அவள் சூழ்நிலைக்கு எதிராகப் போராடவும், அவள் அம்மாவைக் கேள்வி கேட்கவும், அந்தக் கேள்வியின் மூலம் அவள் குழந்தைப் பருவத்தைச் சுரண்டும் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு எதிராக எழுந்து நிற்கவும் அந்த வெறுப்பு கற்றுக் கொடுத்து விடும்.

“அந்த மிட்டாயை நீ சாப்பிட்டு இருக்க வேண்டும்” என்று கோபமாக சொன்னேன்.

“ஆனால் என் அம்மாவுக்கு மிட்டாய் ரொம்பப் பிடிக்கும்”

“உன் அம்மா மிகவும் விநோதமானவளாக இருக்கிறாள். எப்படி அவளால் உன்னைச் சாலைகளில் பிச்சை எடுக்க வைக்க முடிகிறது?”

இதைச் சொல்லும்போதே என் குரல் எத்தனை விஷத்தைக் கக்க முடியும் என்று எனக்குப் புரிந்தது. ஆசையும் சந்தோஷமுமாக என் அலுவலகத்திற்குள் நுழைந்த இந்தக் குழந்தைக்கு என் கோபம் எத்தனை துயரத்தைத் தந்திருக்கும். அவள் மாட்டியிருக்கும் மீளாப் படுகுழியைப் பற்றி எனக்கு என்ன தெரியும், நான் எப்படி அவளையும், அவள் தாயையும் அவமதிக்க முடியும்? இவள் எனக்கு ஒரு மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டாள், என் அவமரியாதை என் அறியாமையின் அறிகுறி.

என் கோபத்தை அடக்கிக் கொண்டு அவளுக்கு பணம் கொடுத்தேன், அவள் உடைந்து போனவளாய், என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து பணத்தை வாங்கிக் கொண்டாள். என் வலு குன்றியது போல இருந்தது, உடனே  அவளை என் அருகே வரச் சொன்னேன் . அவள் தன் கையில் இருந்த சாக்குப் பையை கீழே வைத்தாள், அதில் என்ன உள்ளது என்று நான் கேட்கவில்லை. என் அருகே வந்த அவளை நான் கட்டிக் கொண்டேன். எத்தனை ஒல்லியாக இருக்கிறாள், உடம்பில் வனப்பே இல்லை.

“பாத்திமா, நீ சாப்பிடுவதே இல்லையா?” என்று கேட்டேன்.

“சாப்பிடுவேனே, தினமும் இரவு வீட்டுக்குப் போனதும் சாப்பிடுவேன்”

“பகலில்?”

“பெரும்பாலும் ஒன்னும் இல்லை, சில நேரம் பசிச்சா கொஞ்சம் பீன்ஸ் வாங்கி சாப்பிடுவேன்”

“சாப்பிடாமலே இருந்தால் எப்படி வளர்ந்து பெரிய பெண் ஆவாய்?

அவள் தன் உடம்பைச் சற்று திருப்பி என் கன்னத்தோடு கன்னம் வைத்துச் சொன்னாள் “நான் என் அம்மாவிடம் உங்களைப் பற்றி சொன்னேன்”

“அப்படியா. என்னவென்று சொன்னாய்”

அவள் சிரித்தபடி “நல்ல விஷயங்களைச் சொன்னேன்”

“உன் அம்மா ஏன் வேலைக்குப் போக முயற்சி செய்யவில்லை?” என்று கேட்டேன்.

“தெரியலை, என் தம்பிகள் சின்ன பசங்க தானே, அவங்களை எப்படி விட்டுட்டுப் போக முடியும்?”

“உன் அப்பா, அவர் என்ன செய்து கொண்டு செய்தார்?”

“அவர் பஸ் ஓடுவார் .”

“எங்காவது வேலைக்குப் போனாரா?”

“ஆமாம்”

“அவர் இறந்த பின் அவர் அலுவலகத்தில் இருந்து எந்த பணமும் வரவில்லையா?”

“என் அம்மாவுக்கு அப்பாவின் பாதி சம்பளம் வரும், இரண்டாயிரம் லிரா”

இரண்டாயிரம் லிரா ஐந்து குழந்தைகளின் சாப்பாட்டுச் செலவுக்கே பத்தாது என்று நினைத்தேன்.

அவள் இல்லை என்று சொல்லி என்னை ஆச்சரியப் பட வைக்கப் போவதை எதிர்பார்ப்பது  போல நான் அதே முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டேன் “பாத்திமா, நீ உன் அம்மாவை விரும்புகிறாயா?”

அவள் என்னைக் குற்றம் சாட்டுவதைப் போல பார்த்துக் கேட்டாள், “தன் அம்மாவைப் பிடிக்காத யாரும் இருக்க முடியுமா?”

பாத்திமாவிற்கு எல்லாமே அவள் அம்மாதான், அம்மாதான் அவள் உலகம். அவள் அம்மாதான் அவள் தேசம், தேசத்தைத் தாய் என்று தானே நாம் பார்க்கிறோம்.

பாத்திமா அவள் அம்மாவின் மேல் வைத்திருந்த பாசத்தின் முழு அளவு, ஒரு மாதம் கழித்து அவள் அம்மாவிற்குக் கடிதம் எழுத நினைத்த அந்த நாள் எனக்குத் தெரிந்தது. இதுதான் சரி என்று நான் உறுதியாக நினைத்ததால் கடிதம் எழுத வேண்டும் என்ற முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அவள் மகள் மேல் கருணை கொள்ளத் தூண்டி, பாத்திமா பிச்சை எடுப்பதை நிறுத்த வைக்க வேண்டும். அவளை ஊக்கப்படுத்தி வேலை தேட வைத்து தன்  குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

நான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் பாத்திமாவின் துயரின் நிழல் படர்ந்தது. அன்று காலை பாத்திமாவைப் பார்த்தேன், அவசரத்தில்  கொஞ்சம் பணம் கொடுத்தேன். மதியம் கடுமையான புயல் அடித்து, மரங்களும் மின்சார கம்பிகளும் வேருடன் சாய்ந்தன. மேல் உடுப்பை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு, டாக்ஸி டிரைவரை கவனமாக ஓட்டச்  சொன்னேன். அப்போது பாத்திமா அங்கிருந்த ஒரு கட்டிட வாசலில் நின்றிருந்ததைப் பார்த்தேன், அவள் ஒரு கையில் சாக்குப் பையை வைத்துக்  கொண்டு மறு கையை வாயின் அருகே வைத்து ஊதிக் கொண்டு இருந்தாள். நான் என் அலுவலகத்தில் இருந்து தொலை தூரத்தில் இருந்தேன். பாத்திமா இத்தனை தூரம் பிச்சை எடுக்க வந்தாளா என்று வியந்தேன். அந்தக் காட்சி என்னை அசைத்தது, அன்று முழுவதும் என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அன்று மாலையே பாத்திமா என் அலுவலகத்திற்கு வந்து  என்னை ஆச்சரியப் படுத்தினாள்.

“இன்னும் நீ வீட்டுக்குச் செல்லவில்லையா? இந்த புயற்காற்றில் வெளியே சாலைகளில் எப்படி நீ சுற்றலாம்?”

என்னையே என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. என் வார்த்தைகள் கருணை இல்லாததாக இருந்தது. ஆனால் அவள் கண்ணீர் வடியும் முகம் என் வார்த்தைகளைத் தடுத்தது. அவள் அறையை  வெப்பூட்டுவிக்கும் கருவியின் அருகே ஓடிச் சென்று அதோடு ஒட்டி நின்று கொண்டு அதன்மேல் குளிரில் சிவந்த தன் சிறுகைகளை வைத்துக் குளிர் காய்ந்தாள். சட்டையின் கைப் பகுதியால் தன் ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் “ஆமாம், ரொம்ப குளிர்.”

“இன்று வருமானம் எவ்வளவு?” என்று கிண்டலாகக் கேட்டேன்.

“பரவாயில்லை, அம்மாவுக்காக நூறு லிரா சேர்த்திருக்கிறேன்.”

அம்மா என்ற வார்த்தையை மறுபடி கேட்டதும் நான் வெடித்தெழுந்தேன். அப்பொழுதே அவளுக்குக் கடிதம் எழுத நிச்சயித்தேன். நான் என்ன எழுதினேன் என்று நினைவில்லை, ஆனால் என் வார்த்தைகள்  பாத்திமாவின் இனிமையான முகத்தைக் களங்கப் படுத்த அதில் சோகத்தின் நிழல் படர்ந்தது. முதல் முறையாக அவளிடம் நெருக்கடியையும், பயத்தையும், பாதுகாப்பின்மையும் கண்டேன். அவள் வலியுடனும், எதிர்ப்புடனும் மறுத்துத் தலையை ஆட்டினாள், ஆனால் நான் அவளை அவள் அம்மாவிடம் அந்த கடிதத்தைக் கொடுக்கவும், அவள் அம்மாவை என்னை வந்து சந்திக்கச் சொல்லவும் சொல்லி வற்புறுத்தினேன். பசி அரக்கனின் பிடிக்கு தன் குழந்தைகளைத் துரத்தும் அந்தத் தாயை நான் காண விரும்பினேன்.

பாத்திமா அந்த கடித்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றாள். அலுவலகத்தின் கதவை அடைக்க வெளியே சென்ற நான், அவள் அந்தக் கடிதத்தைக் கிழித்து காகிதத் துண்டுகளை கதவருகே வீசி சென்றதைக்  கண்டு அதிர்ந்தேன். கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அந்தப் பிச்சைக் காரியை என் வாழ்க்கையை விட்டு வெளியேற்ற முடிவெடுத்தேன். அவளுக்கு என்னால் உதவ முடியவில்லை. அவளை சில வாரங்கள் புறக்கணித்தேன், இல்லை அவள் என்னைப் புறக்கணித்தாள். அவள் என் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தினாள், சாலையில் எதிரெதிரே சந்தித்தாலும் விலகிச் சென்றாள். அவளை துன்புறுத்தி விட்டேன் என்று  புரிந்தது. என் பெருந்தன்மையால் அவளைப் பிச்சை எடுக்க நான் ஊக்குவித்திருக்கிறேன்.

கையில் சாக்குப் பையுடன், வழக்கமான உறுதியுடன், சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒன்றாக பாவிக்கும் தன்னம்பிக்கையுடன் அந்த சிறிய உருவம் சாலையில் அலைவதை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தேன். சில சமயம் படிகளில் உட்கார்ந்திருப்பாள் அல்லது சூரியகாந்தி விதைகளை தோல் நீக்கிக் கொண்டிருப்பாள். அநேகமாக இப்படி அமர்ந்து சுற்றி நடக்கும் விஷயங்களை தன் பெரிய கண்களால் பார்ப்பதுதான் அவளின் மிகப் பெரிய ஓய்வாக இருக்க முடியும். ஆனால் அந்த சூரியகாந்தி விதைகளை அவள் உண்பதை நான் பார்த்ததே இல்லை.

பாத்திமா என் வாழ்வில் எப்போதும் இருந்தும் இல்லாதவளாக ஆனாள். தன்  தடயங்களை விட்டுவிட்டு அவள் சென்று விட்டாள், ஆனால் அவளின் ஒரு பகுதி என் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டு என்னை இம்சித்தது. அவள் மனத்தால் தாங்க முடியாத சோகத்தைத் தாங்கிக் கொண்ட அமைதியான அவள் முகமும், அவள் தேன் நிறக் கண்களும் என்னைச் சிறைப்பிடித்தன.

பாத்திமாவும் அவளைப் போன்ற மற்றவர்களும், சமூகத்தில் உள்ள பலவிதமான பிரச்சனைகளைப் போல நாம் ஒத்து போகவேண்டிய உண்மைகள். மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் திருடர்கள் செல்லும் ஆடம்பரமான காரை பார்க்கையில் தோன்றும் வலியையும் மனவுலைவையும் ஒத்தது இந்தக் குழந்தைகள் பிச்சை எடுக்கும் காட்சி. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

பாத்திமா எந்த அளவு என்னுள் கலந்து விட்டாள் என்பது எங்களுள் பிரிவு  ஏற்பட்ட பல நெடும் வாரங்கள் கழித்துத்தான் புரிந்தது. நான் கறிக்கடையில் எனக்கான பொருட்கள் தயாராவதற்காகக் காத்திருந்தேன். சமைக்காத மாமிசத்தின் நாற்றத்தில் இருந்து தப்பிக்க கடையை விட்டு வெளியே வந்த நான் எதிர்பாராமல் பாத்திமாவின் பிம்பத்தை கடையின் கண்ணாடியில்  பார்த்தேன். அவள் சாலையின் எதிர்புறத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அங்கிருந்து நகரவோ, திரும்பிப் பார்க்கவோ இல்லை. அவளும் அங்கேயே நின்று இளகிய, முடிவிலாப் பார்வையால்  என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கடையின் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தேன்.

அவள் எனக்குத் தன்னை முழுதாகக் காட்டிக் கொண்டு நிற்கையில் நாள் அவளுக்கு என் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறேன் என்று உணர்ந்தேன். நாங்கள் ஒரு உயிரை மற்றொரு உயிர் பார்ப்பதாக  கண்ணாடியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம், அடுத்தவர்  மூலமாக தன்னையே உணர்ந்து கொண்டோம், நான் இதுவரை பெற்றிடாத அனுபவம் இது. கலங்கி, நான் திரும்பினேன். நாங்கள் பேசவோ சைகை செய்து கொள்ளவோ இல்லை. அவள் சாலையைக் கடந்து என் அருகே வந்து நீட்டிய என் கைகளின் இடையே புகுந்து தன்னைக் கட்டிக் கொள்ள அனுமதித்தாள். நான் அவளின் சின்ன சுருள் முடிகளைக் கலைத்தேன்.

“முடியை என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டேன். நான் சாதாரணமாக கேட்பது போல நடித்தேன்.

“அம்மா வெட்டி விட்டுட்டா” என்று அவள் சிரித்தாள்.

“ஏன் பாத்திமா. ஏன் இப்படி வெட்டி விட்டுருக்கிறாள்; அடையாளமே தெரியவில்லை”

“அப்பத்தான் யாரும் என்னைத் தொல்லை பண்ண மாட்டாங்க” என்று சிரித்தாள்.

“சரி, வேறு என்ன விஷயம் பாத்திமா, இன்னும் சாலைகளில் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறாயா?”

“ஆமாம்.”

அவள் அம்மாவுக்குக் கடிதம் எழுதியது எவ்வளவு முதிர்ச்சியற்ற காரியம், எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். நான் என்ன சமூக சீர்திருத்தவாதியா, இல்லை வித்தைக்காரனா, இந்தக் குடும்பத்தின் நிலைமையை மாற்ற? நான் அவள் கையைப் பிடித்துக் கொண்டேன், அவள் என்னை முன்னே செல்ல விட்டாள். உலகின் இறுதி வரை கேள்வி கேட்காமல் என் பின்னால் வரத் தயாரானாள்.

என் அலுவலகத்தில் அவளுக்கு வழக்கம் போல பணம் தந்தேன், பின் பழகிய நண்பர்கள் போல அவள் சாக்குப் பையில் உள்ளதை எனக்குக் காட்டச் சொல்லிக் கேட்டேன். அவள் விற்க நினைத்து வைத்திருந்த ஒரு ஜோடி கிழிந்த காற்சட்டைகளை வெளியே எடுத்தாள். அவள் கொஞ்சம் பீன்ஸை சாப்பிட்டு கோலாவைக் குடித்தாள். குளிர்காலம் முடிந்ததாக எண்ணி தன் குடையை விற்று விட்டதற்காக வருந்தினாள். வருந்தும் தோனியில் தன் இரு கைகளையும் தட்டி விட்டுச் சொன்னாள் “பாருங்களேன், நான் குடையை விற்ற அடுத்த நாளே அடை மழை. நாளைக்கே அந்தக் கடைக்காரரிடம் போய் குடையைத் திரும்பிக் கேட்க வேண்டும்.”

அவள் மலிவான காலணிகள் நன்றாக இருப்பதாகப் பாராட்டினேன், காலணிகளை ஈகைத் திருநாளுக்காக வாங்கியதாகச் சொன்னாள். அவள் ஈகைத் திருநாள் அன்று பிச்சை எடுக்கச் சென்றாளா என்று அவளிடம் கேட்டேன்.

“ஆமாம். அன்னிக்கு நிறைய காசு கிடைத்தது.” என்றாள்.

விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே பாத்திமா தன் அம்மாவிற்கும் வீட்டு உரிமையாளருக்கும் நடந்த சண்டையைப் பற்றிச் சொன்னாள். அவர்களை வீட்டை விட்டுத் துரத்த முயல்வதாகவும், அவள் அம்மாவை வீட்டை விட்டு வெளியே தெருவில் தள்ள தான் கண்டிப்பாக அனுமதிக்கப் போவதில்லை என்றும் சொன்னாள்.

தன் அம்மாவையும் தம்பிகளையும் அந்த அறையில் இருந்து யாரும் வெளியேற்றிவிட அனுமதிக்கப் போவதில்லை என்று சத்தியம் செய்திருப்பதாக முகம் பிரகாசிக்க கண்கள் மின்ன சொன்னாள் பாத்திமா. ஒரு வயதான கடைக்காரன் எப்படி அவள் ஒவ்வொரு முறை அவன் கடையைக் கடக்கும்போதும், அவளுக்குப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி அவள் முன் பணத்தை வீசிக் காண்பித்துக் கொண்டிருந்தான் என்பதையும்  இந்த உறுதி கொண்ட சிறுமி சொன்னாள். நான் அவளை எச்சரித்த போது சிரித்துக் கொண்டே தனக்குத் தெரியும் என்று என்னை சமாதானப் படுத்தினாள். என் எச்சரிக்கைக்குத் தேவை இருக்கவில்லை.

ஒரு நாள் சாயங்காலம், பாத்திமா தாமதமாக என்னைச் சந்தித்து ஆச்சரியப் படுத்தினாள். கடிகாரத்தைப் பார்த்து “பாத்திமா, மணி ஒன்பது ஆகிறது, இன்னும் ஏன் வீட்டுக்குச் செல்லவில்லை?”

“நான் போயிடறேன், ஆனா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.”

அவளுக்கோ அவள் குடும்பத்தில் ஒருவருக்கோ ஏதேனும் தவறாக நடந்து விட்டதோ என்று வியந்தேன். “என்ன பாத்திமா?” என்று கேட்டேன்.

“அந்த கடித்தை ஏன் கிழித்தேன்னு உங்க கிட்ட சொல்லணும் …” என்று அவள் திக்கினாள், பின் ”ஏன்னா என் அம்மா என்னை அடிச்சிருப்பா. கொஞ்ச நாள் முன்னாடி, உங்களை மாதிரியே ஒரு அக்கா அம்மாவுக்கு ஒரு கடிதம் கொடுத்தாங்க, அதைப் பார்த்து அம்மா என்னை காட்டுத்தனமா அடிச்சுட்டு சொன்னா: ‘அடுத்தவங்க கிட்ட பேசாத, பிச்சை மட்டும் தான் கேட்கணும்’”

அவள் கண்களில் கண்ணீர் முட்டியது. சட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் “இப்போ சொல்லுங்க, எல்லாம் என் தப்பா?”

“இதைச் சொல்லத்தான் வந்தாயா?”

“ஆமாம், இதெல்லாம் என் தப்பா?”

அவள் இந்த சமூகத்திடம் கேட்ட கேள்வி இது. “இல்லை, பாத்திமா நீ செய்தது சரி.” என்னால் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை.

அவள் கைகளைப் பிடித்து அவள் வீடு செல்ல நேரம் ஆகிவிட்டதாகக் கூறினேன். அவள் சாக்குப் பையில் எடுத்து வைக்க விரும்பிய சில இனிப்புகளை சாப்பிட வைத்தேன். அவள் படுத்து உறங்கப் போகும் அந்த சபிக்கப்பட்ட வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்லப் போகும் பேருந்துக்காக ஆவலுடன் காத்திருந்தோம். அவள் பஸ்ஸில் ஏறும் முன் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள், “உங்களுக்கு தெரியுமா, நீங்க என்னைப் பார்த்து கேப்பிங்களே, இன்னும் சாலைகளில் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறாயா– அப்படின்னு என்னைப் பார்த்து நீங்க சொல்லுவிங்களே, அது எனக்குப் பிடிக்கும்.”

என் வார்த்தைகளில் என்ன இருந்தது, பாத்திமா சிரிக்க? அவளால் அழுகைக்கும் சிரிப்புக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாததா? நான் பாத்திமாவின் நாட்களை எண்ணிப் பார்த்தேன், எப்படி அவள் சாலைகளில் திரிகிறாள் என்பதை, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று பிச்சை எடுத்து, அவள் கேட்கும் வார்த்தைகளை, யாரிடமும் சொல்லாத அவள் அவமானங்களை.

பாத்திமா, பாசத்தையும் அன்பையும் தேடும்போது அவள் மேல் தினமும் வன்முறையை வாரி வீசும், அவள் திரியும் இந்த நகர சாலைகள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் கரையும் அவள் குழந்தைக் கனவுகள்.  கரையும் கனவுகள், அவள் சாக்குப் பையில் உள்ள துணிகளைப் போல நைந்து போன கனவுகள்.

ஆம் பாத்திமா, உன் கனவின் விலை என்ன?

http://www.sramakrishnan.com/?p=5343

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.