Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கணங்கள் – நிலவனுடன் நேர்காணல்

Featured Replies

முள்ளிவாய்க்கால் இறுதிக்கணங்கள் - நிலவனுடன் நேர்காணல்

ஈழத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரும் ,கவிஞரும் ,எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமா நிஜத்தடன் நிலவன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அவலத்தின் சாட்சியங்களுள் ஒருவன். ஈழத்தவர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாளை இன்றைய தருணத்தில் மீட்டிப் பார்ப்பதில் ஒவ்வொரு ஆத்மாவும் சொல்லும் கதைகள் அதிகம். அந்தவகையில் போரின் சாட்சியமாக இறுதி யுத்த சாட்சியமாக இந்த நேர்காணலை பதிவு செய்கின்றோம்.

நேர் கண்டவர் யோகா பத்மன்

வலி நிறைந்த இரத்தம் தோய்ந்த செல்லப்படாத சாட்சியங்களும் வெளிவராத அவலங்களும் இன்னும் அதிகம் உண்டு

ஈழக்கலைஞன் நிஜத்தடன் நிலவன் (நிக்சன் சர்மா)

1) உங்கள் ஈழத்து ­வாழ்வு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :- எனது வாழ்வும் வளர்வும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம் . ஈழத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா ,என பல மாவட்டங்களில் என் இடம் பெயர் வாழ்வு தொடர்ந்தது. இறுதிக் கட்டமாக நடைபெற்ற நான்காம் ஈழப்போரில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப் பட்டிருந்த போர் தவிர்ப்பு வலயங்களிலே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட வெடி பொருட்களும் பயன்படுத்தப்பட்ட. பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறிய பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளனாக மரணத்தை எதிரே வைத்துக்கொண்டு கடமை ஆற்றினேன்.

2 ) இடப்பெயர்வும் அகதிவாழ்வும் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- அந்த முதலாவது இடப்பெயர்வு எனக்கு இன்னும் அரைகுறையாக ஞாபகமிருக்கிறது. 1987ன் கடைசி நாட்களிலும் 1988இன் முற்பகுதிகளிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தாங்க முடியாதளவிற்கு கடுமையாகின. எங்கள் சொந்த நிலங்களில் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டோம்.

எனது முதலாவது இடப்பெயர்வின்போது நெருங்கிய உறவுகள் உட்பட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 50 பேரளவில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் வைத்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது பல காயங்களுடன் எனது மாமாவும் சிறுமி ஒருவரும் உயிர் தப்பினர்.

ஒரு வாரத்துக்கு பின் என்று நினைக்கிறேன்- அகதி வாழ்வின் இன்னொரு கட்டத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டியிருந்தது.இப்படி எனது சிறு பராயம் முதல் 2006 வரையில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தேன்.

இவ்வாறு 2006 முதல்2009 வரை இடம்பெற்ற நான்காவது ஈழப்போர் காலகட்டத்தில் மரணத்தில் இருந்து தப்பிப்பிழைத்த பொழுதுகளே அதிகம். அன்றைய வாழ்வு துயர் மிக்கதாகவே இருந்தது. நம்பிக்கையற்றநிலமை, கனவுகளற்ற மனிதர்கள்,வெறிச்சோடிய தெருக்கள், அலைச்சல், இடப்பெயர்வு, தூக்கமற்ற இரவுகள், உயிரழிவுகள், உடைமை இழப்புகள்,சொல்லொணாத் துயரங்கள் என போரும் மரணமும் எல்லாப் பரிமாணங்களிலும் எங்களைத் துரத்தியபடியே அவல வாழ்வு தொடர்ந்தது.

3)நான்காவது ஈழப் போர் பற்றி சொல்லுங்கள் ?

பதில் :- பேரினவாதிகளின் இனப் படுகொலையில் ஈழத் தமிழர் ஆகிய நாம் தொடர் இழப்புகளால் துவண்டு போயிருந்த காலமது. ஐ. நா. வில் உறுப்புரிமை பெற்ற இலங்கை அரசுக்கு உலகெங்கும் உள்ள நாடுகளின் ஆதரவு இருந்தது. அரச பயங்கரவாதத்தைத் தமிழர் மீது ஏவி சர்வதேசத்தின் துணையோடு இனப் படுகொலைகளை 2008 – 2009 அரங்கேற்றியமையே நான்காவது ஈழப் போர் எனலாம்.

அரச பயங்கரவாதத்தினால் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமித்திட இலங்கை 2006 ம் ஆண்டு சிறு சிறு சமர்களைத் தொடக்கி பல பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடக்கியது .

2006 ஆவணியில் யாழ் குடா நாட்டிலும், மாவிலாறு தொடர்பாகச் சம்பூரிலும், சிங்களப் படை தொடக்கிய சமர்களினால் தாக்குதல்கள் வீச்சுடன் கிளம்ப, சிங்களப் படையினை எதிர்திர்பாத்திருந்த தமிழர் தரப்பு பல முறியடிப்பு சமர்களையும் நிகழ்த்தியது. வன்னியில் பல முனைகளில் கொடும் தாக்குதல்களை, வான்வழி, கடல் வழி, தரை வழியாகத் தொடுத்து, சிங்களப் படை முன்னேற தொடங்கியது.

களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஆங்காங்கே நடைபெறும் சமர்களில் தோல்வி என்பது ஒன்று. போராட்டத்தின் தோல்வி என்பது மற்றொன்று. போராட்டத்தில் தோல்வி என்ற பேச்சு எழ நியாயமில்லை. ஏனெனில் எதிரியின் இனப் படுகொலைக் கொள்கை அறமற்றது. தமிழரின் விடுதலைப் போர் அறம் சார்ந்தது.

4) நான்காவது ஈழப் போரின் போது நீங்கள் நேரில்கண்ட சம்பவங்கள் ?

பதில் :- நான்காவது ஈழப் போரில் அரச படையினர் நடத்திய இன அழிப்பு சம்பவங்கள் பலவற்றை பார்த்திருக்கின்றேன். அரச பயங்கரவாதம் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்திய விமான குண்டு வீச்சுகளையும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் குண்டு, எறிகணை,உந்துகணைத் தாக்குதல்கள் மட்டுமல்லாது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான நேரடித் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள்,கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டன. உணவு, குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள்,இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்தி சொல்லமுடியும்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிவரை போராடிய போராளிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டுகள் மூலம் அழித்தொழித்தமையும், அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய சிங்களம் அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை இரவு பகல் பராது இடைவிடாது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றழித்த நிகழ்வுகளையும் நேரில் பார்த்த காட்சிகள் என்னுள் சாட்சியாய் உள்ளன.

5) மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- அரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணியாற்றி வந்தேன். மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு முரணான செயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர் உத்தியாகவே கையாண்டது.

வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற போதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் அமைந்திருந்த பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்கு அன்ரனா மற்றும் மண் மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக் கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் வார காலப்பகுதியில் கிபிர் விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதி முற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்த உடலங்களை கட்டட இடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்து நாட்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து அடக்கம் செய்ததுவும் இங்கு நினைவு கூரப்படுவது அவசியமானது.

7)பின்பு எப்படி மக்களுக்கு மருத்தவ வசதிகள் கிடைத்தன?

பதில் :- பாடசாலைகளே தற்காலிக மருத்துவ மனைகளாக மாறியிருந்தன. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவமனையை இலக்கு வைத்து அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியானார்கள்.

8) மருத்துவர்கள் தாதிகளின் சேவைகள் கிடைத்தனவா?

பதில் :- மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகி இருந்ததாலும் படுகாயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளித்தது அழுகும் உடல்களின் தூர்நாற்றமும் தெற்று நோய்கள் வருவதற்காண வாய்ப்புகளும் உடல்களை உண்ணவரும் மிருகங்கள் பறவைகளின் தொல்லைகளும் சமாலிக்க முடியாத நிலை காணப்பட்டது

இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இயந்திர மனிதர்கள் போலவே செயற்பட்டனர். படு காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னரே காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது ஒரேயொரு சத்திர சிகிச்சைக் கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

முள்ளிவாய்க்காலில் இயங்கிய தற்காலிக வைத்தியசாலையில் சேவை செய்துவந்த மருத்துவர்கள், தாதிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உட்பட உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு வந்தவர்கள் உடல் சிதறிச் செத்தார்கள். எல்லோரும் நடைப்பிணங்களாக இருந்த நிலையில்… யார் யாரைப் பராமரிப்பது? கடுங்காயம் அடைந்த பலர் ஆங்காங்கே கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.

9) பொஸ்பரஸ் குண்டு என்பதற்கு என்ன அடையாளம் உண்டு?

பதில் :- உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகை குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த குண்டுகள் ஒட்சிசனை கடுமையாக உள்ளேடுப்பதால் அங்குள்ள மக்களுக்கு சுவாசிக்க முடியாது மூச்சுத்திறலும் ஏற்படும்

இந்த வகை குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின் அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டதை நேரில் கண்டேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளாகி பலர் இறந்தார்கள்.

கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக் குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடைசெய்யப் பட்டவையாகும்.யுத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை யுத்த வலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்கள் நன்கறிவர்.

10) கொத்துக்குண்டுகள் தொடர்பான உங்கள் அனுபவம் என்ன?

பதில் :- கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக பிரிந்து அனைத்து திசைகளிலும் சீறிப்பாயும்.

இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. இக் கொத்துக் குண்டின் பகுதிகள் வெடிக்காமல் ஆங்காங்கே கிடக்கும். அவற்றை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு. இப்படி நடந்த பல சம்பவங்களில் ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 சித்திரை இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் இருந்தனர் .

காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

காயமடைந்தவர்களை கடும் சிரமத்தின் மத்தியில் முல்லைத்தீவு பொது மருத்துவமனை சிகிச்சை நிலையத்துக்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கும் அனுப்பிக் கொண்டிருந்த போது பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடத்தியிருந்தனர்

11) எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள் பற்றி முன்பு குறிபிப்பிட்டுள்ளீர்கள் அவை பற்றி என்ன அறிந்துள்ளீர்கள்?அதன் அனுவம் என்ன?

பதில் :- வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடாத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் பங்குனி மாத இறுதி வாரத்தில் வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பலியானார்கள்.

இதே போன்று இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் எறிகணை தாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்த நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வந்து பதுங்குகுழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு, பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை வெறித் தாண்டவத்தை ஆடியது. இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் எரிந்து,அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர்.

கருகிய நிலையில், அடையாளம் காண முடியாத நிலையில் இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில், அவர்கள் உயிர்தப்பிப் பிழைப்பதற்காக அமைத்துக்கொண்டிருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராது தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக் கொண்டார்கள். பாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

12) ஆரம்பகாலம் தொடர்பில் மக்கள் தம்மை பாதுகாக்க ப-துங்கு குழிகளை பயன்படுத்தியுள்ளனர்.அதனுள் எவ்வாறு சமாளிக்க முடிகின்றது?

ஆரம்ப கால யுத்த நேரங்களில் பதுங்குழி பாதுகாப்பானதாகவே இருந்தது. ஆனால் 2009 காலப்பகுதியில் மருந்தளவும் பாதகாப்பு இருக்கவில்லை. அத்தகைய குண்டுகளின் நெருக்கடி பதுங்குகுழிகளால் பாதுகாப்பை பெறமுடியவில்லை.

பதில் :- என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக் கிடந்தன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதைத் துண்டுகளுமாகக் கிடந்தன.மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து சென்றேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப்பட்டு இருந்தார்கள். இன்னமும் எறிகணைகள் பதுங்கு குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே வந்துவிட்டார்கள்.

நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அங்கேயே தங்கிவிடுவதா என்ற குழப்பதில் இருந்தேன்.

13) அன்றைய நேரங்கள் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை விலைகள் அதிகம் தண்ணீர் இல்லை எப்படி உயிருடன் மீளமுடிந்தது?

பதில் :- பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் சிங்களப்படைகளின் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது

பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. கர்பிணித் தாய்மார், சிறார்கள், முதியோர்கள் அனைவருமே மூன்று நான்கு நாட்களாக அசுத்த நீரினை பருகியதால் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக ஆரம்பித்தனர். சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று வீழ்ந்தனர். கூடுதலான முதியோர் பட்டினி நிலைமையினால் மயக்கமுற்றும், கோமா நிலையினை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். முதியோர்களும் சிறார்களும் வயிற்றோட்டத்திற்கு ஆளாகி இலகுவில் பாதிக்கப்பட்டார்கள்.இதனால் பலர் இறந்து போயினர்.

கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறிய குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக்கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது

கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதை பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது. சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்.

காப்பாற்றுவதற்காக நிறையவே போராட வேண்டியிருந்தது.

14) இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வரும் படியும். சரணடையும் படியும் அழைப்பு விடுக்கப்பட்ட போது மன ரீதியில் எப்படி உணர்ந்து கொண்டீர்கள் ?

பதில் :- இழப்புக்களை சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் படையினரிடம் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.

எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்தார்கள். விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களைப் படையினர் வாகனங்களில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தார்கள்.

மக்களில் கதறல்களோ கெஞ்சல்களோ இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் ,பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது.பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்து திரிந்தார்கள். இன்னும் முடிவின்றி பதிவின்றி கண்ணீருடன் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

15) மக்களின் இடைத்தங்கல் முகாம் வாழ்வில் வசதிகள் போதுமானதாக இருந்ததா?

பதில் :- வவுனியா மாவட்டமே கேந்திர நிலையமாக இயங்கியத. அங்கு தற்காலிக வாழ்விடங்களாக பாடசாலைகள் கூட்டுறவு பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பல்கலைக்கழக வளாகம், மெனிக்பாம் முகாம், மற்றும் செட்டி குளம் பகுதியில் பல வலயங்களாகப்பட்டு தற்காலிக கொட்டகைகளில் மக்கள் குடியேற்றப்பட்டு இருந்தனர். முதல் ஒரு வாரத்திற்கு குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை

முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம்.அந்த முகாமில் கிட்டத்தட்ட 400,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். படையினர் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினார்கள்.

அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினராலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் விசாரணை என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் உடல் உள ரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். சிலர் கொலை செய்யபபட்டு முகா.ம் அருகில் உள்ள ஆற்றில் வீசப்பட்டனர். சிலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

16. நலன்புரிநிலைய வாழ்கையின் மக்களும் மீள்குடியேற்றி விட்டனரா ?

பதில் :- முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்களுடன் சொல்ல முடியாத அவலங்களையும், துயரங்களையும் சுமந்திருந்தனர் மக்கள். சொத்து, சுகம் என எல்லாவற்றையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்த மக்களுக்கு இந்த போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியேற்றங்களும் செயற்பாடுகளும் எந்தவகையிலும் போதுமானதல்ல.

மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்பொழுது தான் வெளியுலகிற்கு தெரியவரப்போகின்றனவோ!மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தொடர்கின்றது. விழிகளை பிதுங்க வைக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது

போர் இடம் பெற்று காலங்கள் கடந்து சென்ற நிலையிலும் போர் தந்து விட்டுப்போன வலிகளின் வடுக்கள் இன்னமும் ஆறாமல் நெஞ்சில் நெருஞ்சியாய் குத்த நடைப்பிணங்களாய் வாழுகின்ற நிலையே தொடர்கிறது.

நலன்புரி நிலையங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சொந்த இடங்களிற்கு மீள் குடியமர்த்தப்பட்ட, போர் தின்ற மக்களின் வாழ்வு இன்னமும் நிலையில்லாது தொடர்கிறது

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலின் தன்மையும் அதன் முறைமையும் எங்களை உறைய வைக்கின . இவ்வாறான ஒரு வாழ்வை நாம் வாழ்வோமா என சிந்தித்துப் பார்க்கையில் எம் மனதில் இனம்புரியாத ஒர் நெருடல் இன்று வரை தொடர்ந்தவாறே உள்ளது.

சொந்த இடங்களுக்கு திரும்பாத பலர் இன்னமும் உள்ளனர். காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆண்களற்ற குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டம் முழுமையாக கொடுக்கப்படவில்லை. முக்கால் வாசியும் வன்னி மக்களை சாட்டி அரசியல் வாதிகள் தான் பிழைப்பு நடத்துகின்றனர். அவர்கள் தான் சொகுசாக வாழ்கின்றனர் மக்கள் அவலப்படுகின்றனர்.

17) மக்களின் சமூக, பொருளாதார சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது?

பதில் :- முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் சமூக, பொருளாதாரத் துறைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.

யுத்த மோதல்களின்போது, இடத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், கையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் தம்முடன் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்துச் சென்ற சொத்துக்கள், வாகனங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டு விட்டன. வெறும் கையுடனேயே அவர்களில் பலர் மீள்குடியேற்றத்தில் தமது ஊர்களுக்குத் திரும்பி, தமது வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

விவசாயம், கூலித்தொழில், மற்றும் மீன்பிடியுமே மக்களின் பிரதான ஜீவனோபாயத் தொழில்களாகும்.

விவசாயிகளைப் பொறுத்தமட்டில் வன்னியில் உழவு இயந்திரம் இல்லாதவர்கள் கைகளை இழந்தவர்களுக்கு சமமாகவே இருக்க முடியும். ஏனெனில் விவசாயத்திற்கு அடிநாதமாக அடிப்படை உதவியாக இருப்பது உழவு இயந்திரமே. அதனை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு கடனடிப்படையிலேயே அரசினால் சிலருக்கு உதவி வழங்கப்படுகின்றது.

புதிய வாழ்க்கைக்கான அடிப்படை உதவிகள் எதுவுமே இல்லாதவர்கள் கடன் பெற்றே தமது வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். கடன் கேட்பவர்களிடமும் கடனை மீள் செலுத்த முடியாதவர்களிடமும் பாலியல் லஞ்சம் கோருகின்றார்கள்.

இதன் மூலம் அவர்கள் அவமானப்பட்டவர்களாகவும் கடனாளிகளாக வாழவே நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள்.

யுத்தத்தில் அவர்கள் இழந்த முக்கிய சொத்துக்களுக்கு இழப்பீடு என்ற வகையில் எதுவுமே வழங்கப்படவில்லை. மீனவர்களின் வாழ்க்கையும் இத்தகைய ஒரு நிலையிலேயே இருக்கின்றது. வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் இத்தகைய கடனடிப்படையிலான முறையிலேயே தமது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று கடனாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதையும் விட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கணவன்மாரையும், உழைப்பாளிகளையும் இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்தும், இன்னும் அகற்றப்படாமல் உள்ள இராணுவச் சூழ்நிலையில் இந்தக் குடும்பங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளவர்களும், சமூக விரோதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள்.

இத்தகைய சமூக சீர்கேடு நாளுக்குநாள் அதிகரித்துச் சென்ற வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுத்து நிறுத்துவதற்கும் உறுதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பிடியில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ள மக்கள் அரசியல் சமூக, பொருளாதார, சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்திருப்பதையே காணமுடிகின்றது.

இந்தச் சவால்களுக்கு எப்போது முடிவு ஏற்படும், எப்போது உறுதியான சிறந்த தலைமைத்துவம், சட்டம் ஒழுங்குடன் கூடிய சிறப்பான சிவில் நிர்வாகச் சூழலும் இந்த மக்களுக்குக் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானிப்பது இன்றைய சூழ்நிலையில் கடினமானதாகவே இருக்கின்றது. மக்கள் தான் தங்ளை தாங்கள் பார்க்கவேண்டியவர்களாக உள்ளனர்.

18) போருக்கு பின் மக்களின் உளவியல் நிலை? எவ்வாறு உள்ளது?

பதில் :- ஈழத்தில் பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் 2008- 2009 ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உளவியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒரு தனிமனிதனது அறிவு அனுபவம் செயற்பாடுகளில் தாக்கத்தின் அளவு கூடுதலாக காணப்படுகின்ற போது அவன் உளவியல் பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றான்

பதகளிப்பு நிலை, பயம், பதற்றம், ஏக்கம், கவலை, ஆறுதலின்மை, களைப்பு, நித்திரையின்மை, பயங்கரக் கனவுகள், எப்போதும் எரிச்சல்படுதல், அனர்த்தத்திற்கு பிற்பாடான நெருக்கீட்டு நிலை , தனிமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, உடலியல் குணங்குறிகள் பல காணப்படுகின்றன.

ஈழத்தில் உறவுகள் இறந்தவர்களின் உடல்களையும் காணமுடியாது போனதும் உரிய கலாச்சார விழுமியங்களுடன் இறுதிக் கிரிகைகளைசெய்ய முடியாது போன சூழலினால் இழவிரக்கத்தின் விளைவுகள் பலர் மத்தியில் காணப்படுகிறது.

குழப்பநிலை, இழவிரக்கம், அறிமுகமற்ற நிலை, மறதி, நித்திரையின்மை, பசியின்மை, செவிப்புல, கற்புல மயக்கம், குற்ற உணர்வு, அதிர்ச்சி, கவலை, உயிர்பிழைத்த குற்றவுணர்வு, தனிமை, கவலை, அச்சம், வெறுப்பு, கோபம், சோர்வு, பதட்டம்,எரிச்சல், பழிவாங்கும் உணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம், வெறுப்பு, ஏக்கம், ஏமாற்றம், இயலாமை, நம்பிக்கையின்மை,மனக்குழப்பம், மனச்சோர்வு, தற்கொலை உணர்வு என பல சொல்முடியாத உள நோய்களையும் கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள்.

தமிழினப்படுகொலைகள் நித்தம் நித்தம் ஈழத்தில் அரங்கேறி க் கொண்டுதான் இருக்கின்றன. போர்பூமியில் படுகொலைகள்,பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போகச் செய்தல், தாங்கொணா சித்திரவதை போன்ற கொடுமைகள் மூலம் மனிதம் கேள்வி முறையின்றி ஈழத்தில் சிதைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களிடத்தில் பலர் இறப்பின் உச்சம் வரை சென்றிருந்தார்கள். இதன் தாக்கம் ஒரு புறம் இருக்க இன்றும் தொடர்கின்றது ஆயுதமுனை இல்லாத இன அழிப்பு.இவைகளினாலும் மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக் கொண்டிருக்கிறார்கள். இவற்றினால் கொலை கொள்ளை களவு போதைக்கு அடிமையாதல் என்ற நிலையில் இளம் சமூகம் படையெடுக்க தொடங்குகின்றது.

19. முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் தமிழ் அரசியற் தலைவர்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்… ?

பதில் :- அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும், நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம்.

ஈழத்தமிழர் ஒரு தேசத்தினர் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வுத் திட்டத்தை தெளிவாக மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் யுத்த மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்புக் குறித்த விசாரணைகள் அனைத்துலக விசாரணைகளாக அமைய ஆவன செய்ய வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களதும் போராளிகளதும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும் ஈழத் தமிழ் தேசத்தின் மேம்பாட்டை உறுதிப்படுத்தவும் தேவையான நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தமிழக மற்றும் இந்திய மக்களுடன் நல்லுறவை வலுப்படுத்தி ஈழத் தமிழர்கள் ஒரு தேசம் என்பதற்கான அங்கீகாரத்தை இந்தியா மற்றும் அனைத்துலக நாடுகளிடம் பெற்றுக் கொள்வதற்கான செயற்திட்டங்கள் வகுத்துச் செயற்பாடுகளை விரிவு படுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த நம்மவர்கள் நினைவாக ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்.

அரசியற் கட்சிகளும் தலைவர்களும் போதிய வினைத்திறனுடன் இயங்குவதனை ஊக்குவிப்பதற்கும் அவர்களை சரியான திசையில் வழிநடாத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் போதிய சமூக இயக்கங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாதிருப்பதும் ஒரு மிகப் பெரிய போதாமையாகும்.

இதனால் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் செயற்படுவதற்கு தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத சமூக இயக்கங்களை ஈழத் தமிழ் தேசம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வலுவான சமூக இயக்கங்கள் செயற்படும் சமூகங்கள், தாம் எதிர்கொள்ளும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வலுப்பெற்றவையாக இருக்கும்.இத்தகைய சமூக இயங்கங்கள் ஈழத் தமிழர் தேசத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக உள்ளன. இவையே முள்ளிவாய்க்கால் நினைவுடன் எம்முள் எழும் சிந்தனைகளாகும்.

http://thuliyam.com/?p=27223

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.