Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்!

selvam book

       ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.
ஆனால், உள்ளே விடயங்கள் காத்திரமானவை. பாலியற்தொழிலாளர்களை நோக்கும் விதம், பயணத்தில் தற்செயலாகச் சந்தித்த அம்மா இறந்ததைச் சொல்லியழவும் ஆளில்லாத இளைஞனை ஆறுதற் படுத்துவது, இருக்க இடமில்லாத யாரென்று அறியாத ஒரு பெண்ணுக்கு எல்லோருமாக இடம் ஒதுக்குவது, மொழியறிவற்றவர்களாக உலைவது, சாப்பாட்டு நேரத்தில் அறைக்கு நண்பர்கள் வர வர உணவு போதாத நிலையிலும் உபசரிக்கச் சமையலில் திடீர்மாற்றங்களை செய்வது, ஏனைய நாட்டு அகதிகளையும் மரியாதையோடு நினைப்பது எனக் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் ஒவ்வொன்றும் மானுடநேயமும் அகதிகளின் அந்தரிப்புமாக வாசிப்புச் சுவையோடு எழுதப்பட்டிருக்கிறது.
எண்பதுகளில்-தொண்ணுாறுகளில் அகதிகளாக வந்திறங்கியவர்கள் வதிவிட உரிமை, சொந்த வீடு, வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், பிரஜாவுரிமை எனக்காலூன்றி விட்டவர்கள் வருடாவருடம் விடுமுறைக்குப் பயணங்களை மேற்கொண்டால், அது பொதுவில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த எல்லோருடைய நிலையுமென ஊரிலுள்ளவர்கள் அனேகர் நினைத்து விடுகின்றனர். ஆனால் இப்போதும் எழுதித் தீராப்பக்கங்களில் எழுதப்பட்டதைப் போல் அறைகளில் அடைந்து வேலையும் அகதிஅந்தஸ்துக்கான அலைச்சலுமாக வாழ்பவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கிறார்கள். தற்போது சிலருக்கு உறவுகள் , நண்பர்கள் என ஓரளவு ஆறுதலுண்டு. அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாமல் அதற்கான வழக்குகளோடு இருக்கும் இளைஞர்கள் பலருள்ளனர்.
இங்குள்ள ஏராளம் பலசரக்குக் கடைகளில் மற்றும் உணவகங்களில் பதிவு செய்யப்படாமல் கறுப்பில் சம்பளம் வாங்குபவர்களது துயரம் தீர்ந்தபாடில்லை. தொழிலாளருக்கான சட்டப்படியான சலுகைகள் ஏதுமற்று நாள் முழுதும் வேலை. குறைந்த சம்பளம் என முன்னொரு காலம் அகதிகளாக வந்து முதலாளிகளான தமிழ் முதலாளிகளே இந்த இளைஞர்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சட்டத்தரணிகளுக்காகவும் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்காகவும் செலவளிக்க வேண்டியவற்றுக்கும் மிச்சம் பிடித்து நாட்டிலுள்ள உறவுகளுக்கும் உதவிடவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே, இது பழைய கதைகளடங்கிய தொகுப்பென யாரும் நினைக்கக்கூடாது. எழுதப்பட்டுள்ள சம்பவங்கள் போல இன்னுமின்னும் புதிய புதிய பிரச்சனைகளும் அவலங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. இங்கு அதை அனுபவிப்பவர்களால் எழுதிவிட முடியாதளவு மன நெருக்குவாரம் இருக்கிறது. துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான். இயலுமானவர்கள் இந்தப் புத்தகத்தை ‘வெளிநாட்டில சொகுசாக வாழுறார்கள்’ எனச் சொல்பவர்களுக்கு ஒரு பிரதி அனுப்பலாம்.

 

https://thoomai.wordpress.com/2016/06/29/துன்பங்களைச்-சொல்வதும்/

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதி…எழுதித் தீராப்பக்கங்கள்

புஷ்பராணி 

selvam book      நாம்   கடக்கும்போது  நினைத்தே    பார்க்கமுடியாத    வலிகளையும் அதிர்ச்சிகளையும்  திருப்பங்களையும்   தந்த   நிகழ்வுகளைத்  தட்டுத்   தடுமாறிக்  கடந்தபின்,வந்த  வழியைத்  திரும்பிப்  பார்க்கும்போது,அவை தரும்  உணர்வலைகள் எழுத்தில் வடிக்க  முடியாதவையாக மனம் முழுவதும் வியாபித்துச் சுகானுபவம்  கொள்ளவும் பெருமூச்சு  விடவும்  வைக்கின்றன.
செல்வம் அருளானந்தம்   தான்  இந்த அகதி வாழ்வைக் கடக்கும் போது  அனுபவித்த வலிகளையும் , அவதிகளையும் எழுதி  நகைச்சுவை தெறிக்க  எம்மை வாய்விட்டுச் சிரிக்க  வைக்கின்ற போது அவை சிறந்த பதிவுகளாகி விடுகின்றன. இவ்வாறான அனுபவக்குறிப்புகளில் செல்வம் தன் கூர்ந்த அவதானிப்புகளால் எங்கேயோ போய்விட்டார்!
இந்நினைவுக்குறிப்புகளை,ரெயிலில்  பிரயாணம்  செய்யும்போது தான்  படிக்க  ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில்  என்னை  மறந்து  வாய்  விட்டுச்சிரித்து விட்டேன். பக்கத்தில்  அமர்ந்திருப்போர்  ஏதாவது   நினைக்கப்  போகின்றார்கள்  என்றெண்ணிச்  சிரிப்பை  அடக்கப்  பார்த்தேன்…முடியவில்லை. வாயைக்   கைகளால் பொத்திக் கொண்டு அடக்க  முடியாமல் சிரித்தேன்.  ‘பிரான்ஸைப் பற்றி  ஒன்றும் பெரிதாகத் தெரியாவிட்டாலும்  நெப்போலியன்   போனபாட்  என்ற  பெயர்  எனக்குத்  தெரிந்திருந்தது. பாரிசில் அந்த  மாவீரனுக்கு எப்படியும் பெரிய  நினைவுச் சின்னம் இருக்கும். அதைப்  பார்ப்போம்  என்றெண்ணி,பிரான்ஸ் எண்டவுடன் என் நினைவுக்கு வாறது நெப்போலியன் தான்’ என்றேன்  தட் சூணிடம்.  ‘இந்த வெள்ளெனவோ…இங்கினக்கை  குடிக்கிறதெண்டால்  சரியான  காசு ஆனால் நெப்போலியன் எடுக்கமாட்டினம்,வலன்டைன் தான்’  என்றார்.  ஏதோ  யோசனையில் இருந்த அருள்நாதர்  திடுக்கிட்டு ‘அடைக்கல முத்தற்றை  வலண்டைனும்   பாரிசுக்கு   வந்திட்டானோ?’ என்று  குழம்பினார்.
இந்த வரிகளே என்னை அப்படிச் சிரிக்க  வைத்தன. இப்படிப்  புத்தகம் நெடுகிலும் ,தான்  பட்ட  இடர்களை  நகைச்சுவையாக இவர்  கூறிக் கொண்டே  போகும் விதம் எழுதித் தீராப்பக்கங்கள் புத்தகத்தைக் கீழே  வைக்கத்  தடுக்கின்றது.
மொழி  தெரியாமல் பட்ட  சிரமங்களையும்  சிரிப்பினூடே தான் சொல்லிக் கொண்டு  போகின்றார். நானும்  வந்த  புதிதில் ஃபிரெஞ் மொழியை விளங்கத் திணறியதை  மீட்டுப்  பார்க்கின்றேன்.
இதில்வரும்  அங்கிள்  செக்கூரிற்றி  சோசியலுக்குப்   [Securite  sociale  ] போன  கதையும் நினைக்குந்தோறும் சிரிப்பையூட்டுகின்றது. அங்கிருந்து  இவருக்கு வந்த  கடிதமொன்றைக் கையில்  வைத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள முகவரியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று விழிபிதுங்கிக் கொண்டு மற்றவர்களிடம்  எப்படி விசாரிப்பது என்ற மொழி தெரியாத மலைப்போடு…வழியில்  தென்பட்ட ஒரு  ஃபிரெஞ்சுப் பெரியவரிடம்  கடிதத்தைக்  காட்டி எப்படியோ கேட்க , அவரும் தன்  பின்னாலே வரும்படி  சைகையால்  காட்டிச்  சுற்றி வளைத்துக்  கூட்டிப்  போகின்றார். இவரும்  பின்னே  ஓடியோடிப்  போகின்றார்….கடைசியில் அவர்  கூட்டி வந்து  நிறுத்தியது அங்கிளின்  வீட்டுக்கு   முன்னால். கடிதத்தின்   ஒரு  மூலையில்  இருந்த  அங்கிளின்  வீட்டு  விலாசத்துக்குத்தான் அவர்  கூட்டிவந்து  விட்டிருக்கின்றார். வேறு  வழிகளால் போனதால் முதலில் அங்கிளுக்கு  விளங்கவில்லை.இப்படி நிறைய அவல நகைச்சுவைகள் தொடர்கின்றன.

புலம்பெயர்   நாட்டின்   மொழி  புரியாப்   படலம்   பல  இடங்களில்   சிரிக்க  வைக்கின்றது. ஏயார்ப்போர்ட்டுக்கு     இவர்  வேலைக்குப்  போனபோது,  போனவழி -வந்தவழி  தெரியாமல்  திகைத்துக்   குழம்புவதும்  …பசியெடுத்தபோது   ,கீழே   வைத்துவிட்டு  வந்த  சாண்ட்விச்சின்  ஞாபகம்   வந்தபோது   ,கீழே   எப்படிப்  போவது   என்று  விளங்காமல். ‘சாண்ட் விச்சை  எடுக்கப்  போகவேண்டும் ?’ என்று எப்படிப்  ஃபிரெஞ்சில் கேட்பது என இவர் முழி  பிதுங்கி  நின்றது  அந்தரிப்பான நிலை.ஆனால் இன்று அது சிரிப்பைத் தருகின்றது.

இன்னோர்   இடத்தில் ,ஒரு நாள்  ஓர்  உணவுச்சாலையில் போய்  வேலையிருக்கோ  எனக்  கேட்டபோது , ‘முதலாளி  போல்  நின்றவர் ஏதோ  சொன்னார்…எனக்கு விளங்காமல் நின்றபோது அவர்  கையை  நீட்டினார்…கை தரப் போகின்றார்  என்ற சந்தோசத்தோடு கையை  நீட்டிய போது கையைப் பிடித்துக் கொண்டு போய்  வெளியில்  விட்டுவிட்டு  ஏதோ பேசிக்கொண்டும் போனார்.’ இந்த  வரிகளினூடே  தன்னைத்தானே பகிடி பண்ணினாலும்  மொழி தெரியாமல்  நாம் பட்ட  அவதிகளும், அவமானங்களும் .கண்ணீர்  நினைவுகளும் பீறிட்டு  வெளியே  வருகின்றன.

முதன்முதலாகப் பாரிஸுக்குள் காலடி  வைத்துத் தான்  வசிக்கப்போகும் சிறிய  அறையைப் பார்த்து செல்வம்  திகைத்து நின்றபோது,  ‘நாங்கள்  எல்லாம் அஞ்சாறு  பரப்புக் காணிக்குள்ளை  வீடும், வீட்டில் இருந்து  ஐந்நூறு யார்  தள்ளிக்  கிணறும்  வளவு  மூலைக்கு  கக்கூசும்  எண்டு விட்டு வீதியாய் வாழ்ந்தவர்கள்தான்…என்ன  செய்யிறது, இனிப்  புதுச் சூழலைச் சமாளித்துப்  பழகவேண்டும்’ என்றார் இவரைக்   கூட்டிவந்தவர்.

ஆரம்ப காலத்தில் பிரான்ஸ்  வந்தவர்கள்  பட்ட சொல்லொணாத துயரங்களைக் காதாரக்  கேட்டவள்    நான். இருக்க   இடம் தேடி ,யார்  வீட்டுக்குப்  போனால் சாப்பாடு தருவார்கள் என்று  பசியின் கொடுமையோடு போராடி…. எவ்வளவோ போராட்டத்தின் பின்  நித்திரை செய்யும்போது கால் நீட்டவும் முடியாத சில அறைகளில் ஒருவர் எழும்ப அடுத்தவர் உறங்குவதுமான நிலையிலாவது இருக்க இடம் கிடைத்து ….மொழியோடும் ,இடம் வலம்  தெரியாமலும்  அல்லாடி…விசா  எடுப்பதற்குப்   பசியோடு  அலைந்து , இங்கே ஒரு அகதியாக அனுமதி பெற்றுக் காலூன்றுவதற்கு ஒவ்வொருத்தரும்  பட்ட பாடுகளைத்  தன் நூலில் அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கின்றார் செல்வம்.
ஃபிரெஞ்சு மொழியும் தெரியாமல் வேலை தேடி அலைவதை இவர்  கூறுமிடங்களில் மனம்  வலிக்கின்றது.  கைகளில் பணமுமின்றி ,உணவுமின்றி  ஒவ்வொரு உணவு விடுதியாக வேலை கேட்டு அலைந்த காலங்கள் பறந்துவிட்ட போதிலும் அவை  மனதில்  ஆழப் பதிந்திருப்பதை எப்படி  மறக்கமுடியும்? புலம்பெயர்ந்து வந்தோர் பட்ட  துயரங்களை  இந்நூல் ஒட்டு மொத்தமாகக் கொட்டுகின்றது.
இவருடைய  கவித்துவம்  மிகுந்த ரசனையும் பல  இடங்களில்,எளிமையான எழுத்தோட்டத்தில் இரசிக்க  வைக்கின்றது. ஊரில்  பனையோலை கொண்டு  வீடு  மேய்வது  பற்றிய வேலையைச் சில  பக்கங்களை ஒதுக்கியிருக்கின்றார். பனையோலையை வெட்டி  எடுப்பதிலிருந்து, அதைப்  பதப்படுத்தி  மேயும்  அழகையும்…அணுவணுவாகக் கிரகித்து இவர் வர்ணித்து  எழுதியிருக்கும்   சுவையும், வீடு   வேயத்   தலைமை  தாங்கும்  வியேந்தம்மானின் குணாதிசயங்களும்  கண்முன்னே நிறுத்துகின்றன.

பிரான்ஸ்   வரும்போது   எல்லையில்   வைத்து   அதிகாரிகளிடம்    இவரும்   கூட  வந்தவர்களும்   பிரச்சனைப்பட்டபோது,இரண்டு   பாலியல்   தொழிலாளிப்   பெண்கள்  இவர்களுக்காக,அதிகாரிகளுடன் வாதாடித் தப்பிப் ஃபிரான்ஸ்க்குள் நுழைவைதற்கு உதவியது  பற்றிக்  குறிப்பிடும்  கட்டத்தில் , இவரைக்  காரில்  கூட்டி  வந்தவர்  ‘அவளவை    இங்கை   திரியிற ….’எனத்  தொடங்க ‘இல்லை  அண்ணை…அதுகள்   தெய்வங்கள்’ என்று  சொல்லுமிடத்தில் செல்வம்  வானோங்கி   நிற்கின்றார்.
பெல்ஜியத்தில்   இருந்து   களவாக   இவரை   ஃபிரான்சுக்குக்  கூட்டி   வந்தவரிடம்   கேட்கின்றார்,
‘நீங்கள்   வெளி  நாட்டுக்கு  வந்து   எத்தனை  வருஷமாயிற்று?
‘நாலுவருஷம்’  .
‘நாலு  வருஷமோ ?….இவ்வளவு  காலமும்  ஊருக்குத்  திரும்பிப்  போகேல்லையே ….. நான்  ஆச்சரியப்பட்டேன்.

‘இன்னும்  நாலு  வருசத்துக்குப்  பிறகு  கூடப்  போகச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது’ என்றார்.

‘என்ரை  கடவுளே !’

‘ஏன்  இதுக்குக் கடவுளைக்  கூப்பிடுகின்றீர்கள்?‘ எனச்  சிரித்தார்.

. ” ‘நாலைந்து வருசம்  ஊரையும்,  உறவையும் விட்டுப்  பிரிந்திருக்க முடியுமா?  நான் இரண்டு வருசத்திலை  போய்விடுவன்’ என்றேன் .

அவர்  ஒரு  நக்கல்  சிரிப்புச்   சிரித்தார்.

‘வீட்டை  விட்டு  வெளிக்கிட்டு ,இண்டைக்கு முப்பத்தைந்து  வருஷமாயிற்று’
இந்த  வரிகளையெல்லாம் படித்தபோது, என்னையே  இதில்  கண்டேன்.  ஃபிரான்சுக்கு  வந்த  புதிதில்  வீட்டை  நினைத்து  அழுது…செத்துப்போன   அம்மாவை   நினைத்து   அழுது  …இங்குள்ள   சூழல் கட்டிடங்களும் வீதிகளுமாக இருப்பதைப் பார்த்து, சாப்பாடு  எதுவுமே பிடிக்காமல் அழுது ”ஒரு  வருசத்துக்குள்ளை    நான்   வந்துவிடுவேன்.” . என்று   தம்பி ,தங்கைகளுக்கு  அழுதுகொண்டே  நான்  கடிதம்  எழுதியது  நினைவு வருகின்றது. நானும்  வந்து முப்பது  வருடங்கள் ஆகப்போகின்றது……இன்னும் ஊர்ப் பக்கம்  எட்டியும் பார்க்கவில்லை.

தங்கள் அறையில் இருப்பவர்கள்   சமறி பிரிப்பது பற்றி அங்கிள்  கூறுவதும் வித்தியாசமாயிருந்தது.‘ஒருவர்   எவ்வளவு   சாப்பிடுவார்   என்பது   பார்த்துதான்    காசு   தீர்மானிக்கப்படும்’ இதில்  உண்மை  இருந்தாலும்  மனசு  வலித்தது. செல்வம்  இன்னோர்  பக்கத்தில் எழுதிய, ‘எவ்வளவு சாப்பிட்டாலும்  அரை வயிறுதான் சாப்பிடுகின்றான்’ எனச்  சொல்லும்  அம்மாவின் அன்பு  நினைவில்  வந்தது.” என்ற  வரிகள்  இங்கு  முன்னே வந்து நின்றன. தன் பிள்ளை சாப்பிடுவதை எந்தவொரு தாயும் அளவுகோல் கொண்டு பார்ப்பதில்லை. இயக்கங்களிடமிருந்தும்,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்றித் தம் பிள்ளைகள் எங்காவது போய்  உயிரோடாவது இருக்கட்டும் எனக்  காணிபூமி ,நகைநட்டை  விற்று  வளரிளம்  பருவத்தில்  பிள்ளைகளைக்  கண் காணாத  நாடுகளுக்கு  அனுப்பும்போதே ,ஊண் நினைந்தூட்டும்  பாசமும்  அந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றது…  

அகதிகளாகப் புலம் பெயர்ந்து  வந்த  பல  இளைஞர்கள் அகதி அந்தஸ்து வழங்கப்படாமல், வேலையில்லாமல், இருக்க நிரந்தர முகவரியோ இடமோ இல்லாமல், திருமணம் நிறைவேறாத விரக்தியால் இப்படிப் பல காரணங்களால் ,மனச் சிதைவுக்காளாகித்  தீராத குடிகாரர்களாக அல்லது  மனநிலை  பிறழ்ந்தவர்களாக அலைகின்றார்கள்  என்ற அதிர்ச்சியூட்டும் துயரத்தை  நம் நாட்டில் இருந்துகொண்டு  வெளிநாடு பற்றிக்  கனவு காண்போரும் , எந்த நேரமும் பணம்  அனுப்பும்படி தொந்தரவு செய்யும் பெற்றோரும் ,உறவுகளும்   அறிவார்களா?

புலம்பெயர்ந்த நாடுகளில்  நம்மவர்களால் தெருத்தெருவாக இழுக்கப்படும் தேர்கள்-சாமத்தியச் சடங்குகள் – பிறந்த நாள்- இறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்று வீண் ஆடம்பரங்களையும் பிரமிப்புகளையும் செய்யும் ஆட்களும் இங்கு இதே போன்ற பல துன்பங்களைப் பசி பட்டினிகளை அனுபவித்தவர்களே தான். வருந்தியுழைத்து வரட்டுக் கௌரவத்தை நிலநாட்டுபவர்கள் தான். ‘கண்டறியாதவன் பெண்டிலைக் கட்டினால்  காடு  நாடெல்லாம் கொண்டு திரிவானாம்’ என்று  ஊரில் சொல்லும் பழமொழியை இப்போதெல்லாம் அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கின்றது.நம்மவர்கள் வேடிக்கையான  கூட்டம்.

நாம் வந்த  இடத்தில் இனத் துவேஷத்தையும் விட்டு வைக்கவில்லை நம்மவர்கள் என்பதையும் மறக்காமல் எழுதியிருக்கின்றார் நூலாசிரியர். இதற்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கின்றார்.

83  இனக்கலவரமும், வெலிக்கடைச் சிறையில்   தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டகொடூரமும் பாரிசில் எப்படி எதிரொலித்தது என்பதைக் கனமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.உண்மையான செய்திகளைவிட வதந்திகள் தான் எல்லாப்  பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன  என்பதற்குப் பாரிஸ்  வாழ்  தமிழ்-சிங்கள மக்களும் ஒருவருக்கொருவர்  வன்முறைகளில் ஈடுபடுவதற்குப் பெரும்  காரணங்களாய்  இருந்திருக்கின்றன.  ‘யாழ்ப்பாணம்   முழுக்கப்  பிரேதங்களால்   நிறைந்து   கிடக்கின்றது என்றும், கொழும்பில் தமிழர்களின் கடைகள், வீடுகள் எல்லாம் கொளுத்துகின்றார்கள் என்றும்  வதந்திகளும் ,செய்திகளும் தலையை வலிக்கப் பண்ணியது’  என்ற  வரிகள் போதும்  இதற்கு….
‘சிங்கள   இராணுவ   வீரர்களின்   பிரேதங்கள்   யாழ்   வீதியெங்கும்   நிறைந்து   கிடக்கின்றன’ என்ற வதந்தியே 1983  கலவரத்துக்கு மூலகாரணம் என்பதும்  நாம் அறிந்ததே.
அடுத்த பொங்கல்  ஈழத்தில் தான்  என்ற  அதீத நம்பிக்கையாகட்டும்….அதைவிட மேலோங்கிய  நம்பிக்கையாய், இந்திரா தலையிட்டு எமது பிரச்சனையை விரைவில் முடித்து வைப்பார். நாமெல்லாம் எமது நாட்டுக்குத் திரும்பிவிடுவோம் என்று   புகலிடத்தில் வசிப்போரும்  பகல்  கனவில் அமிழ்ந்து மிதப்பதிலாகட்டும்……எதையும் குறை  வைக்காமல்  குறிப்பிட்டிருக்கின்றார் செல்வம்.
அட…இன்னும் கூட இந்தியா தலையிடும் தமிழ் நாடும் மக்களும்  எமக்காகக்  குதிப்பர்  என்று இல்லாத ஒன்றைத்  தமக்குள்ளேயே  வளர்த்து உக்கிப் போகும் எம்மவரை யாராலும் திருத்தவே முடியாது!

அகதிகளாக வந்த ஈழத்தவர் பலர்  பெரும் குடிகாரர்களாக மாறிப் போனதை செல்வம் விபரிக்கும் விதம்  சுவையானது….அந்த வரிகளை அப்படியே தருகின்றேன்..

‘புது  நாட்டிலிருந்த  மதுபானக் கடைகளைப்  பார்த்துப் பிரமித்துப் போனான் ஈழத்தமிழன்.

இதென்னடா  இது…வைன்   எண்டால்   ஆயிரம்  வகை…பியர்  எண்டால்   நூற்றுக்கணக்கில்….வர்ண வர்ணப் பெட்டிகளில்  மயக்கும் விஸ்கி, பிரண்டி, வொட்கா…. எல்லாம் ஆயிரக்கணக்கில்…ஆண்ட  பரம்பரைத்  தமிழன்,மீண்டும்  பலமுறை புரண்டு எழுதற்கு எதைக்  குடிப்பது…எதைத் தவிர்ப்பது என்று புரியாமல் குழம்பிப்  போனான்.

விலைவாசியில் மற்றப் பொருட்களோடு ஒப்பிடுகையில் போத்தல்கள் பெரிய விலையாகத் தெரியவில்லை.’ஏன்  குடித்துத்   திரியிறாய் ?   என்று  கேட்க  ஆளில்லை..ஊரை  உறவைப்  பிரிந்து  அகதியாய் அலையும் சோகம்  எனப் பல  மன உளைவுகளால் பெரும்பாலானவர்கள் குடியில் மூழ்கிப்  போனார்கள்…. இப்படி மதுவருந்துவதைப் பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகின்றார்.

இங்குள்ள புல் வெளிகள் பற்றி ஓரிடத்தில், நம்மூர் பசு இந்தப் புல்லைப் பார்த்தால் நெஞ்சடைத்தே  சாகும்…என்று  செல்வம்   ஓரிடத்தில்   எழுதியிருப்பதைப்   படித்ததும் ஒரு  ஞாபகம்   சட்டென்று   வந்தது.

ஃபிரான்சுக்கு வந்த  புதிதில் இங்குள்ள அடர்ந்த பச்சைப்  பசேலென்ற  புல்வெளிகளை  நான் இரசித்துக் கொண்டிருந்தபோது ,அப்போது என்னோடு கூட  வந்த  என்  சகோதரன் புஷ்பராஜா , ‘இந்தப்  புல்லுகளைக்  கண்டால் எங்கடை ஊர் ஆடு-மாடுகள் எதைக் கடிப்பது என்று தெரியாமல் அங்கலாய்ப்பில் ஓடித்திரியும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிரான்சுக்கு வந்தபோது இருந்த நிலைமைகள் இன்றில்லாவிட்டாலும்,இன்னும் பல ஈழத்து அகதிகள் வருடங்கள்  பல  கடந்தும் அகதியாகஅங்கீகரிக்கப்பட்டு நிரந்தர விசா கிடைக்காமல் இதனால் அரசின்  எவ்வித உதவியுமின்றி ….செய்யும் வேலைக்குத் தகுந்த ஊதியமின்றி நாள்  முழுவதும் முதலாளிகளால் [இதில்   தமிழ்  முதலாளிகளும்   அடக்கம்] சுரண்டப்பட்டும்…..குடியிருக்க நல்ல வசிப்பிடமின்றிக் கூட்டு அறைவாசிகளாக நெருக்கியடித்துக் கொண்டும்…. வேறு பலர் கார் விடும் இடங்களை வீடு போல் கொஞ்சம்  மாற்றிக் கொடிய வாடகைக்கு விடுவோரின் குறுகிய காற்றோட்டமில்லாத இடங்களில் உழல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

புத்தகத்தைக் கீழே வைக்கவிடாமல்  சுவைபட இயல்பாக எளிமையாக எழுதியிருப்பவர்,  -எழுதித் தீராப் பக்கங்கள்- என்ற  அழகிய  தலைப்பையும் தந்தவர், உள்ளே  அத்தியாயங்களின் தலையங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

-சிங்காரி  வந்தாள்   சிரிப்பை   மூட்டினாள் -மாயக்.கிழவியும்,மந்திரக்  கண்ணாடியும்-போன்று  சித்திரக்கதைப்  புத்தகங்களின்  தலைப்புகள் போல சிறுபிள்ளைத் தனமாக இவை  இருக்கின்றன. உதாரணமாக…

-பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்-

-மாஸ்ரரும் நரகலோக நங்கையும்-எனத் தலைப்பிட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

.இந்தத் தலைப்புகளில் கொஞ்சம் கனதியைக் கொண்டு வந்திருக்கலாம்.ஓவியங்களும் கவனத்தை  ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே வரையப்பட்டன போல தேவையில்லாத கவர்ச்சியுடன் மிகைப்பட்டுத் தோன்றுகின்றன.  இவ்விதமாகத் தலைப்புகளும் இளம் பெண்களின் ஒயிலான படங்களும் எனக் கவர்ச்சி மூலம் தான் வாசகர்கள் இவற்றைப் படிக்க வேண்டுமென இதைத் தொடராக வெளியிட்ட பத்திரிகையும் செல்வமும் தொகுப்பாக்கிய  பதிப்பகமுமாக  நினைத்தனரோ?

தனியே ஆண்களாகச் சேர்ந்து சமையல் செய்யும்போது ,அதில் பலர் கைதேர்ந்த சமையல்காரர்களாக இருப்பதும், இங்கு மிகச் சர்வ சாதாரணம்.

ஓரிடத்தில் நண்பர் ஒருவர்  -குஸ்குஸ்- செய்யும் வித்தியாசமான முறைபற்றி இவர் எழுதியிருப்பது வேடிக்கையாயிருக்கின்றது. சாதாரணமாகக் குஸ்குஸ் செய்யும் முறையையே இது புரட்டிப் போடுகின்றது.’நெத்தலிக் கருவாட்டைப் பொரித்துக்  குஸ்குஸ் உடன் கலந்து .மாட்டிறைச்சிக் கறியுடன் அவர் சமைப்பது அப்படி ருசியாய் இருக்கும்…அந்த ருசி இன்றும் நாவில் தங்கியிருக்கு’ என்பது  போல்  இவர்  எழுதியிருப்பது கண்டு இப்படி ஒருக்காச்  செய்து பார்க்க  வேண்டும் என்ற ஆவலைத் தந்திருக்கின்றது…செய்து பார்க்கவேண்டும்.

30 வருட  காலம்  ஈழத்தில் நடந்த யுத்தம் எப்படியெல்லாம்  மக்களைப் பல  தேசங்களுக்கும் விரட்டியது என்பதையும் எத்தனை இடையூறான வழிகளை  ….நாடுகளைக் கடந்து தாம் போக நினைத்த நினைக்காத  நாடுகளுக்குள்  வந்து சேர்ந்தார்கள் என்பதைக் கலகலப்புத் தொனிக்க எழுதியிருந்தாலும் அவற்றினூடே தெரியும் வலிகளும், அவை தந்த மறக்க முடியாத பேரனுபவங்களும் ,அவலங்களும் புலம் பெயர்ந்து வாழ்வோரால் மட்டுமே உணர  முடியும்.

ஈழத்தில் இருந்து கொண்டு தனிப்பட்ட ரீதியான அரசியல் நெருக்கடிகள் ஏதுமற்றவர்களாக நல்ல படிப்பு,வேலை,இயற்கை எழில் மிகுந்த சூழல் என வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட அங்கிருப்பதை விட்டுவிட்டு ,வெளி நாடுகளுக்குப் போயே  தீரவேண்டும் என்று முனைகின்றனர். இக்கனவுகளில் உழல்வோருக்கு எப்படிச் சொன்னாலும் விளங்கித்  தீராது. இங்கு வந்து மொழியறிவற்ற அகதிகளாக வாழ்வைக் கொண்டு சென்று ஒரு நிம்மதியான நிலையை அடைவதென்பது பெரும் போராட்டங்கள் நிறைந்த சவால். அதை எதிர் கொள்ள முடியாமல் மனநோயாளிகளாகவும் கொலைகாரர்களாகவும் சமூகவிரோதிகளாகவும் மாறிவிட்ட இளைஞர்களைப் பார்க்கிறோம். எதிர்பார்த்து வந்த வெளிநாட்டுப் பளபள வாழ்வு உண்மையில்லை என்ற பெண்களின் ஏமாற்றங்களும் தற்கொலைகளும் பற்றி அறிந்துகொண்டு தானிருக்கிறோம். இவையெல்லாம் இன்னுமின்னும் எழுதப்படவேண்டிய தீராப்பக்கங்களாய் நம்மிடையே மறைத்தும் மறைந்தும் கிடக்கின்றன.

நன்றி  ஆக்காட்டி 12

https://thoomai.wordpress.com/2016/12/20/எழுதி-எழுதித்-தீராப்பக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.