Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுவில் முதலிடம் பெற்ற நாம் கல்வியைக் கடைசியாக்கினோம்!

Featured Replies

11614.jpg

தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்றுதான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர்.

இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.
இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை.

இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதையற்ற நாடு என்ற தொனிப்பொருள் கொண்ட நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.

அங்கு உரையாற்றிய அவர், மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்த போது நெஞ்சு அடைத்துக் கொண்டது.

 கல்வி கற்ற ஒரு சமூகமாக, பண்பாட்டின் அடித்தளமாக, தமிழ் என்றால் யாழ்ப்பாணம் என்று கூறக்கூடிய பெருமைக்குரியதான எம் மண்ணில் இன்று மது விற்பனை முதலிடத்தைப் பெற்றுள்ளது எனில், எங்கள் நிலைமை என்ன? இதுபற்றி யார் தான் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விகள் எழுகின்றன.

இலங்கையின் மதுபான விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி கூறுகின்ற அளவில் எங்கள் நிலைமை அவலமாகி வருவதை உணரமுடிகின்றது.

தமிழ் மக்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்குடன் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்கள் வாழ்ந்த பூமியில் இப்படி ஓர் அவலம் ஏன் நடக்கவேண்டும்?

எங்கள் இளம் சமூகம் மதுபானத்துக்கு அடிமையாகி விட்டதா? என்றெல்லாம் மனம் நினைந்து நினைந்து வெதும்புகிறது.

ஓ! யுத்தத்துக்கு பின் எங்கள் மண்ணில் சாதாரண சூழ்நிலை இருக்கவில்லை. தமிழ் மக்கள் தங்களின் வாழ்வியல் கோலங்களில் இருந்து பிறழ்வு அடைய வேண்டும் என்ற திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக சில தீயசக்திகள் எங்கள் இளம் சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சதி வேலைகளைச் செய்தன.

 இதுதவிர வேலைவாய்ப்புகள், உயர் கல்விக் கான சந்தர்ப்பங்கள் என்பன கிடைக்காத நிலையில் உழைப்பாளர் படையாகிய இளம் சமூகம் தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டது.

இத்தகைய நிலைமையின் முடிவுதான் இலங்கைத் திருநாட்டின் மதுபான விற்பனையில் யாழ் ப்பாண மாவட்டம் முதலிடம் என்ற பெயரை பெற காரணமாயிற்று.

ஒரு காலத்தில் கல்வியில் முதலிடம் என்றிருந்த யாழ்ப்பாண மண் இன்று கல்வியில் கடைசி நிலை என்ற இடத்தை பிடித்துக்கொண்டு மதுபாவனையில் முதலிடம் என்றதாக தன்னை மாற்றியுள்ளது.

இத்தகைய பாதகமான நிலைமையை நாம் எப்பாடுபட்டாவது மாற்றியமைக்க வேண்டும். இது விடயத்தில் வீடும், பாடசாலைகளும், மக்கள் சமூகமும், பொது அமைப்புக்களும்  கடுமையாகப் பங்காற்றுவது கட்டாயமானதாகும்.

இன்றைய யாழ்ப்பாணம் என்பது மதுபானத்துடன் போதைவஸ்து என்ற விடயத்தில் சிக்கியுள்ளது என்பதால் இந்த விடயத்தை முதன்மைப்படுத்தி அதனை வேரறுக்க காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தேவையானதாகும்.

சட்டவிரோத மதுப்பாவனை, போதைவஸ்து விநியோகம் என்ற தீய நடவடிக்கைகளை கட்டுப்ப டுத்துவதில் பாதுகாப்புத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் பண்பாடு மிகுந்த எங்கள் யாழ்ப்பாணத்து மண்ணை காப்பாற்ற முடியும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11614&ctype=news

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

தமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு!

தமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு!

சமூக சிதைவு என்பது ஒரு இனத்தின் கலாசார விழுமியங்களின் சீரழிவிலிருந்து பிறப்பெடுக்கின்றது. இத்தகைய சீரழிவுக்கு தூண்டுகோலாக விளங்கும் காரணிகளில் பிரதானம் பெறுபவை மது, புகைத்தல், மற்றும் போதைப் பொருட்களின் அதீத பாவனைகள் எனலாம். தற்கால தமிழ் சமூகத்தில் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு ஆழப்புரையோடியுள்ள இவ்வாறான துர்பாவனைகள், இவற்றின் தொடர்ச்சியாகப் பெருக்கமடைந்து வருகின்ற சமூக விரோத செயற்பாடுகள் அதாவது குற்றச்செயல்கள், அநீதிகள், அதர்ம காரியங்கள் முதலியவை நாட்டையே அபாயகரமான சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளன. வட மாகாணமே அதிலும் குறிப்பாக யாழ். மாவட்டமே மதுப் பாவனைகளில் மகத்தான இடத்திலிருக்கின்ற சாதனையையும் தக்கவைத்திருக்கின்றதெனில் எமது இனம் எங்கு நிற்கின்றது என்பதை அறிய முடியும். ஒரு நாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக்கு கனதியான பங்களிப்பை நல்குவது இளவயதுப் பிரிவினரேயாகும். அத்தகைய வயதினரின் ஊழியமானது வீணடிக்கப்படுவதையும் அது தவறான திசையை நோக்கித் திருப்பப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இந் நிலைமை மேலும் தொடராதிருக்கவும் சீரழிந்து வருகின்ற இன்றைய இளம் சந்ததியை மீள்கட்டமைக்கவும் சட்டம் ஒழுங்குகளை இறுக்கமடையச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகிறது.

சமகாலத்தில் மது, புகைத்தல், போதைப் பொருட்களின் மீதான நுகர்வு நாட்டமானது இளையோர் மத்தியில் அசாதாரண ரீதியாக பல்கிப் பெருகி வரும் நிலைமையானது எமது சமூகத்தினுடைய முதுகெலும்பின் உடைவுக்கு வழிவகுத்துள்ளது. தற்போதைய ஊடங்களின் பேசுபொருளாகவும் பிரதானம் பெறுகின்ற செய்தியாகவும் விளங்கிவருகின்ற இப் பிரச்சினைகளானவை எதிர்காலத்தில் நம் சமூகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களுக்கு கட்டியம் கூறி நிற்கின்றதெனில் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உலகமயமாக்கல் என்ற எண்ணக்கருவின் விளைவாக பல நன்மையான விடயங்கள் அறுவடை செய்யப்படினும் குறிப்பிடத்தக்கவாறான சில எதிர்கணியமான தாக்கங்களும் உணரப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இவற்றை நாம் சாதாரண சம்பவங்கள் போல கருதி விட்டுவிட முடியாது. ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டென்பதனை உணர்ந்து அவற்றை நிவர்த்திக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்குண்டு.

மனித சமூகத்தை சீரழிக்கும் இவ்வாறான துர்ப்பாவனைகளின் கருக்கொள்ளலைக் கருவறுப்பதென்பது இலகுவான விடயமல்ல. உள சமூக பிரச்சினைகளாக நோக்கப்படும் இத்தகைய அதீத பாவனைகளுக்கு தூண்டுகோலாக விளங்கும் முக்கியமான காரணிகளைப் பார்த்தோமேயானால் சூழல்,காலம்,வயது,பால், தனிமனித ஆளுமை குடும்ப, சமூகக் காரணிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கின் அதீத பாவனைகள் போன்றவை இவ்வாறான துர்ப்பாவனைகளைத் தூண்டுபவையாக விளங்குகின்றன. இவற்றை மிகவும் சுருக்கமாக நோக்கின், தற்போது காலமாற்றத்திற்கேற்ப நாம் வாழும் காலமும் சூழலும் மாற்றம் கண்டு வருகின்றன.

எமது சமூகத்தினைப் பொறுத்தவரையில் கலாசாரக் கட்டுடைவின் விளைவை அனுபவித்து வரும் இவ்வேளையில் எம் இனத்தின் இருப்பும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. இனத்துவ அடிப்படையிலான முரண்நிலைகள் வலுக்கொள்ளும் போதும் ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு - பறிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் மேலெழும் போதும் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வெளிக்கிளம்பும் எதிரான உணர்வலைகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றின் செயல் வீச்சத்தை கட்டுப்படுத்தவும் எழுச்சியுடனான பயணிப்பினை திசைமாற்றவும் அதிகார வர்க்கம் முதலாளித்துவ சிந்தனையின்பாற்பட்டு கையாளும் உத்திகளுள் ஒன்றாக விளங்குவது, ஒடுக்கப்படும் இனத்தின் பண்பாட்டில் - இன அடையாளங்களில் சிதைவை ஏற்படுத்துவதாகும்.

கடந்த கால யுத்தப்பாதிப்பின் விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் அவர்களது உளவுரணைச் சிதைத்துள்ள யுத்தப் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கான வடிகாலாக மது மற்றும் போதைப் பொருட்கள் மீது தமது நாட்டத்தை செலுத்துவர். இது எல்லோருக்கும் பொருந்தும் பொது இயல்பாகும். இது போன்ற துர்நடவடிக்கைகளுக்கான களத்தை, சந்தர்ப்பத்தை, வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கையில் அவற்றின் பாவனை வீச்சமானது வேகமாக உயர்வடையும்.இந்நிலையானது தொடரும் போது நீண்ட காலத்தில் சமூகக் கட்டமைப்புச் சிதைவை ஏற்படுத்தும். அடுத்து ,வயது மற்றும் பால் போன்ற காரணிகளை நோக்கினால், இளவயதுப் பிரிவினரிடத்தே அதிலும் ஆண்களிடத்தே இத்தகைய போக்குகளுக்கு அடிமைப்படும் தன்மை அதிகம் காணப்படுகிறது.

இவர்கள் நன்மை தீமைகளை பகுத்தாய்ந்துணரும் மனப்பாங்கு குறைந்தவர்கள்,எதிலுமே வேகம், ஆர்வம் தூண்டற்பேறு, எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை, எதையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், துடிப்பு மற்றும் வன்முறை மீது அதிக நாட்டம்; காணப்படுவதுடன் எதிர்காலம் பற்றிய பிரக்ஞை, வாழ்க்கை பற்றிய புரிதல்கள், பொறுமை என்பவை மிகவும் குறைவாகவே காணப்படும். இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அடித்தளமானது நிர்ணயம் செய்யப்படுவது இவ் வயதிலேயேயெனலாம். எனவே இவ்வாறான தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படும் வயதினராக காணப்படுவதனால் மது, போதைப் பொருட்களின் பாவனை வீதமானது இந்த வயதினரிடையே அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமன்றி இவ்வகையான துர்ப்பாவனைகளுக்கு அடிமைப்படுவோர் இலகுவில் அவற்றிலிருந்து விடுபடமுடியாது வாழ்க்கை முழுவதும் நிழல் போல தொடரும் அபாயமும் உண்டென்பதை மறுதலிக்க முடியாது. மேலும் ஒருவரது தனிமனித ஆளுமைப் பிறழ்வுளும் இத்தகைய பொருட்களின்பால் மனமானது ஈர்க்கப்பட காரணமாகின்றது. மனித ஆளுமையானது ஒருவனுக்கு பிறப்பிலிருந்தே அமையும் தன்மை பொருந்தியதுடன்; அதன் வளர்ச்சியானது சிறுபிராயத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. மேலும் பரம்பரையலகுகளும் மரபியல்சார் விடயங்களும் காத்திரமான பங்கினை வகிக்கின்றன.

பெற்றோர் இத்தகைய தீய பழக்கங்களுக்குட்பட்டிருப்பின் அவர்களது சந்ததிக்கும் கடத்தப்படும் அபாயமும் உண்டென்பதுடன் குடும்பத்தில் மட்டுமல்லாது உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் முதலானோருக்கு இப் பழக்கங்கள் இருக்கும்போது அதனைப் பின்பற்றி ஏனையோரும் தொடரும் நிலைமையும் உண்டு. மேலும் இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் இவற்றுக்கு அடிமைப்படும் பண்பும் பலமாக காணப்படுகிறது. அதாவது தற்கால நவீன திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இணையத்தளங்கள் குறிப்பாக சமூக வலைத் தளங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் முதலானவற்றின் தவறான பயன்பாடுகள் அதிகரித்து வருவதானது இவற்றுக்கு அடிமையாகும் சாத்தியத் தன்மையை அதிகரித்துள்ளது. இத்தகைய ஊடக சாதனங்களின் பயன்பாடுகள் வேகமெடுத்து வருகின்றமை மக்களின் பெறுமதியான நேரத்தினை விழுங்கி வருகின்றமை துரதிஸ்டவசமானது. தற்போதைய திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் காட்சிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் அனைத்தும் மக்கள் மனங்களில் நச்சு விதைகளையே விதைக்கின்றன.

தற்போது அத்தியாவசிய தேவையாகிவருகின்ற இக்காண்பிய வடிவங்களில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் மனித விழுமியக் கூறுகள் மற்றும் ஆக்கபூர்வமான விடயங்கள் என்பவை கானல் நிராகி வருவதுடன் மனித சமூகத்தை சீரழித்துவருகின்ற மது, புகைத்தல், போதைப்பொருட்களின் பாவனைகளுக்கான தூண்டல்களுக்கு அதிகம் தூபமிடப்படுகின்றன எனலாம். உடல், உள, சமூக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் “மது, போதைக்கு அடிமையான நிலை” என்பதற்கான விளக்கத்தை விபரிக்கையில் National council on Alcoholism and Drug Dependence எனும் சர்வதேச அமைப்பானது கீழ்வருமாறு விபரித்துள்ளது. “மதுவைக் குடிக்கும் அல்லது போதையை உள்ளெடுக்கும் பழக்கத்தில் கட்டுப்பாடின்மை, எப்போதுமே மது, போதைவஸ்து சார்ந்த நினைப்பு, தீங்கு விளைவிக்கும் ஏது நிலைகள் இருந்தபோதும் கூட அவற்றை உள்ளெடுப்பது மற்றும் சிந்தித்தலில் நிலை குலைவு போன்ற அறிகுறிகள் கொண்ட முதன்மையான நீடித்த நோய்” என வரையறுத்துள்ளது. ‘Diagnostic and Statistical Manual of Mental Disorders’ என்றஉளவியல் பருவ இதழில் “பாதக விளைவுகளிலிருந்தும் திரும்பத்திரும்ப அளவுக்கதிகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவதையும் அவற்றை பயன்படுத்துவதை திடீரென நிறுத்தினால் ஏற்படும் அறிகுறிகள் எதிர்விளைவுகள் தென்படல் மற்றும் பயன்படுத்துவதிலுள்ள அடக்கமுடியாத பேராசை போன்றவற்றின் ஒருங்குசேர்ந்த அணுகுமுறையை அடிமை: தங்கியிருக்கும் நிலை எனக் குறிப்பிடப்படும்.

இத்தகைய துர்ப் பாவனைகளினால் ஏற்படும் உடல்சார்ந்த விளைவுகளை நோக்குகையில் கல்லீரல் பாதிப்பு கணைய அழற்சி, காக்காய் வலிப்பு, பன்மை நரம்புகளின் இயக்கத்தடை (polyneuropathy) மதுசார் மறதிநோய், அறிவாற்றல் இழப்பு, இதய நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள், வயிற்றுப்புண், பால்வினை செயல்ப்பிறழ்வு, இதயக்குழாய் நோய்கள், நரம்புமண்டல பாதிப்புகள் கடுமையான புலனுணர்வு சார் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதுடன் இறுதியில் மரணம் கூட சம்பவிக்கலாம். இவற்றின் பாவனைகளால் எற்படும் உளம் சார்ந்த சீர்குலைவுகளை நோக்குகையில் நீண்டகாலத்திற்கு மது, போதைப்பொருட்களை பயன்படுத்துகையில் பலவகையான மனநல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். தொடர் பாவனையால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து மூளையின் செயற்பாட்டை பாதிக்கும். இதனால் மனநிலை வெகுவாக பாதிப்படையும். பொதுவாக மனக்கலக்கம்,சிந்தனைக்குழப்பம்,மனப்பதட்டம், தவிப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம்,மன அமைதியின்மை, ஆளுமைச்சிதைவுள் போன்ற மனச்சீர்கேடுகள் ஏற்படும். அத்துடன் இவற்றைத் திடீரென நிறுத்துகையிலும் இதுபோன்ற மனப்பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாகத் தவிர்க்கும்போது இவை மறைந்துவிடும். மேலும் மூளையில் நரம்பு வேதியல் முறை பாதிப்படைந்து மனச்சிதைவு நிலை தோன்றலாம்.

மது,போதையை நிறுத்தியபின்பும் தொடரும் சாத்தியமும் உண்டு. கடுமையாக இவற்றிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமுண்டு. இவர்கள் தற்கொலை செய்வதற்கான சூழிடர் நிலை அதிகமிருப்பதற்கான காரணம், மூளை வேதியல் மாற்றமடைந்து உயிரியல் சார் உருக்குலைவு, சமூகத்தினின்றும் தனிமைப்படல், மிகையச்சம் என்பவற்றால் தற்கொலை முயற்சியில் இறங்குவதற்கான தூண்டற்பேறு அதிகமாக இருக்கும். பொதுவாக இளவயதினரே அதிகம் தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். மேலும்,இன்று உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 50 சதவீதமானவை மது, போதைக்கு அடிமை நிலையினால் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சுருங்கிய தீர்வுகளுடன் கூடிய அவசரமான முடிவெடுக்கப்படுவதற்கு மனம் உந்தப்படுவதால் வாழ்வமைதி சீர்கெட்டு தற்கொலையில் ஈடுபட எத்தனிக்கின்றனர். இறுதியாக போதை தருகின்ற போதையால் பாதை மாறும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்களை சார்ந்தது.இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தின் சிற்பிகள். நாளைய சமூகத்தை வழிநடத்த வேண்டியவர்களே இன்று பாதை மாறிச்செல்லும் போது நம் எதிர்கால சந்ததியின் நிலை பரிதாபகரமானதாகவே இருக்கப் போகின்றது.

இன்று நடைபெற்றுவரும் குடும்பவன்முறை அதனால் விளையும் விவாகரத்துகள், அவர்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்கள், சமூக விரோத செயற்பாடுகள், வீதி விபத்துகள் அவற்றின் வழியான உயிர் அவயவ இழப்புகள், பொருளாதார நெருக்கடிகள், சமூகத்தில் இவர்களுக்கிருக்கும் ஆறாத வடு என பிரச்சினைகள் நீண்டுகொண்டே செல்கின்றன. அத்துடன் பாலியல் வன்முறைகளும் உச்சம் பெறுவதுடன் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களும் வகைதொகையின்றி நடைபெறுவதற்கும் சிறைச்சாலைகள் அத்தகைய குற்றங்களால் நிரம்புவதற்கும் வழிசமைக்கின்றன. உலக சுகாதார நிறுவன தகவலின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 வீதமான செலவுகள் மதுப்பாவனைகளால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்வதற்காக செலவழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே சமூகத்தை ஏன் நாட்டையே சீர்குலைவுக்குள்ளாக்கும் இத்தகைய மது, புகைத்தல், போதைப்பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகம் சிரத்தை கொள்வதுடன், நாட்டின் நீதித் துறையானது விழிப்புடன் செயற்பட்டு சட்டம் ஒழுங்ககளை இறுக்கமடையச்செய்து கட்டுப்படுத்த முன்வரும்போது நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் பெருமளவால் குறைந்து எமது நாடு சொர்க்கபுரியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

http://malarum.com/article/tam/2016/08/20/15286/தமிழ

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.