Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலி புராணம் (சிறுகதை)

Featured Replies

images40AM8WRQ

‘என்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்கு, வேலையால் வந்த களை! அத்துடன், சமையலை கெதியாய் முடித்தால்தான், மகளின் படிப்பைக் கவனிக்கலாம்.
அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும், இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள்.
சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது.
‘சுளகு இருந்தால் தாருங்களோ, நான் புடைத்துத் தருகிறேன்…’ என்றார் எனது அம்மா. இரண்டு மாதங்களின் முன்புதான் என்னுடன் இருப்பதற்கு நிரந்தர விசா அனுமதி கிடைத்து அம்மா சிட்னி வாசத்தை ஏற்றிருந்தார். அவர் ஒரு கைம்பெண்.

‘இஞ்சை எங்கை மாமி சுளகு இருக்கு… கையாலைதான் பொறுக்க வேணும்’ என்று கூறிய மனைவி, புதினப் பேப்பர் ஒன்றில் அரிசிசையைக் கொட்டிப் பரப்பினாள். மாமியும் மருமகளுமாக அரிசிக்குள் இருந்த எலிப் புழுக்கைகளைப் பொறுக்கத் தொடங்கினார்கள்.
‘ஏனப்பா உந்தக் கரைச்சல்! அரிசியைத் தண்ணீருக்குள் போட்டால் நிறைகுறைந்த எலிப்புழுக்கை தண்ணீரில் மிதக்கும். அரிசி தாழும். இலகுவாக பிரித்து விடலாம்..!’ என்றேன். விஞ்ஞான பாடங்களிலே ஒரு கரை கண்டவன் என்ற தற்பெருமை எனக்கு.

‘பாரம் கூடின புழுக்கை இருந்திருந்தால் என்ன செய்யிறது?’ இது எனது மனைவி. இப்படி எதிர்க் கேள்வி கேட்பாள் என்பது நான் சற்றும் எதிர்பாராதது. அவளும் விஞ்ஞானம் படித்தவள்.
‘அரிசி மூட்டையை தமிழ்க்கடை ஒன்றிலைதான் வாங்கினனான். திரும்பிக் கொடுத்துவிட்டுப் புது அரிசி வாங்கலாம்…’ என்று சொல்லிக் கொண்டே கராஜில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டையின் வாயைக் கட்டிக் காருக்குள் ஏற்றும் பணியில் ஈடுபட்டேன்.

என்ன மாயம்? பக்கவாட்டில் இருந்த ஓட்டையில் இருந்து அரிசி நிலத்தில் கொட்டுண்ணத் தொடங்கியது. கூர்ந்து பார்த்தேன். ஓகோ, அரிசி மூட்டையின் இந்த ஓட்டை எலியின் கைவண்ணம் என்பதில் சந்தேகமே இல்லை.
‘கடைக்காரன் எலிப்புழுக்கையோடை அரிசியைத் தரேல்லை, இங்கை தான் எலி புகுந்து விளையாடி இருக்கு’ என்ற விடயத்தை விபரமாகச் சொன்னேன்.
‘இஞ்சையும் எலி இருக்குதோ..?’ ஆச்சரியத்துடன் அம்மா கேட்டார். அவருக்கு எலித் தொல்லை, பாம்புத் தொல்லை, மனிதர் தொல்லை, செல்லடித் தொல்லை (Year 2000) என எல்லாத் தொல்லைகளும் இலங்கையில்தான். அவற்றை எல்லாம் தொலைத்துவிட்டு அவுஸ்திரெலியாவில் குடியேறுவதற்கு நம்பிக்கையுடன் வந்தவர் அவர்.
‘இங்கை மாமி எலி மட்டுமில்லை, கொக்குறோச், லிசெட், சிலெந்தி எண்டு எல்லாப் பூச்சி பூரான்களும் இருக்கும். ‘சமருக்கு’ (Summer) எத்தினை விதமான பூச்சியளைப் பார்க்கப் போறியள் எண்டு இருந்து பாருங்கோவன்’ என அவுஸ்திரேலியாவின் சூழல், சுற்றாடல் பற்றிய தனது ஞானத்தினை சந்தர்ப்பத்தை நழுவவிடாது, என் மனைவி மெதுவாக அவிழ்க்கத் துவங்கினாள்.

‘எலி கராஜிற்குள்தான் நிக்குது, கண்டபடி கதவுகளைத் திறந்து விடாதையுங்கோ. வீட்டுக்கை வந்திட்டால், இருக்கிற சாமான் எல்லாத்தையும் வெட்டிப் போடும்…’ என்று குடும்பத் தலைவன் என்கிற, என் பொறுப்பைப் பறை சாற்றி விட்டு. இந்த எலியைக் கொல்வது எப்படி என்று சிந்திக்காலானேன்.
இந்த வீடு நான் Land com எனப்படும் அரச திணைக்களகத்திடம் காணிவாங்கிக் கட்டியது. முன்பு பண்ணையாக இருந்த பிரதேசத்தை பிரித்து எண்ணூறு சதுர மீற்றர் காணித் துண்டுகளாக விற்பனைக்கு விட்டிருந்தார்கள். எனது காணித்துண்டை நான் வாங்குவதற்கு முன்பு அது இயற்கையான நிலமா அல்லது சமீபத்தில் மண்கொட்டி நிரப்பப்பட்ட தரையா என்றெல்லாம் ஆராய்ந்து எந்தவிதப் பழுதுமற்ற காணியை வாங்கி வீடுகட்டியிருந்தேன்.

அப்பொழுது பூச்சி கறையான்கள் தாக்காது இருக்குத் பொருட்டும் நிலத்தைப் பதனப்படுத்தியுமிருந்தேன். கட்டிய முதல் இரண்டு வருடங்களும் எந்த விதத் தொல்லையும் ஏற்படவில்லை. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கொக்குறோச், சிலந்தி என்று தலைகாட்டத் துவங்கின. அவுஸ்திரேலியாவில் அதுகளைச் சமாளித்து வாழத்தான் வேணும். ஆனால் இப்பொழுது கூடவே எலியாரும் வந்து சேர்ந்திருக்கிறார். எலியைப் பெருக விட்டால் பெருநாசம் வந்து சேரும் என்ற எண்ணம் என்னைப் பிறாண்டியது. எலியை ஒழிச்சுக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்னும் ஆவேசத்தில் உடனேயே காரை எடுத்துக் கொண்டு ‘சுப்பர் மார்க்கெற்’றுக்கு போனேன். கொக்குறோச் மருந்துகளுடன் அங்கு எலி மருந்தும் அடுக்கப்பட்டிருந்தது. ‘சீஸ்’ போன்ற தோற்றமுடைய எலிப்பாஷாணம் ஒன்றை வாங்கி வந்து கராஜுக்குள் வைத்த பின்பே என்னால் மற்ற வேலைகளை நிம்மதியாக கவனிக்க முடிந்தது.

அடுத்த நாள் காலையில் என் வெற்றியை நோட்டமிட கராஜை ஆராய்ந்தேன். எதுவித அசுமாத்தையும் காணவில்லை. எலிப் பாஷாணத்தில் எலியின் முன் இரண்டு பல்லும் பட்ட அடையாளம் மட்டும் தெரிந்தது.
அடுத்த நாளும் எலித் தொல்லையின்றி விடிந்தது. தொலைந்தது தொல்லை என்று நிம்மதியானேன். எலிப்பிள்ளை பாஷாணத்தைக் கடித்து எங்கேயாவது ஓடிப்போய் செத்திருக்கும் என்ற எண்ணம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அன்று சனிக்கிழமை.
சில நண்பர்களை சாப்பிட வரும்படி அழைத்திருந்தேன். சமையலைத் தொடங்கிய மனைவி கத்தினாள்.
‘என்னப்பா, இஞ்சையும் எலிவந்திட்டுது. இஞ்சை பாருங்கோ, குசினி அலுமாரிக்குள் இருந்த செத்தல் மிளகாய் எல்லாத்தையும் வெட்டிப் போட்டுது. பருப்புக்குள்ளும் எலிப்புழுக்கை…!’ என்று புராணம் ஒன்று பாடி முடித்தாள்.
‘எவ்வளவு மிளகாய் வெட்டி இருக்கு… எலி உந்த குசினி அலுமாரிக்குள்தான் நிற்கும். எல்லா ரின்னையும் வெளியே எடுத்துப் போட்டுப் பாருங்கோ…’ என்று அம்மா பரபரப்பு அடையாமல் சொன்னார். அனுபவம் பேசியது!

தகரப் பேணிகள் முதல், எல்லாச் சாமான்களையும் வெளியில் எடுத்தோம். அம்மாவின் ஆரூடம் பொய்க்கவில்லை. எலி ஒன்று அலுமாரிக்குள் இருந்து பாய்ந்தோடி எனது மகள் இருந்த அறைக்குள் ஒளித்தது. மகள் சிறியவள். பத்து வயது. பூச்சி பூரான்களைக் கண்டால் மிகுந்த பயம். எலியைக் கண்டதும் கதிரைக்குமேல் ஏறி நின்றாள். எலியைப் பிடிக்கும் மட்டும் இறங்க மாட்டேன் என்றும் அடம்பிடித்தாள். எப்படியாவது அவளின் கண்களிற்கு முன்னால் எலியைப் பிடித்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம்.

சமையலைப் பிற்போட்டுவிட்டு, எலி புகுந்த அறைக்குள் புகுந்து மூலைக்கு ஒருவராக தேடலானோம். கட்டில் கதிரையை அரக்கும் போது எலி ஒரு மூலையில் இருந்து இன்னுமொரு மூலைக்கு ஓடி எங்களுடன் கிளித்தட்டு விளையாடியது.
என் மூத்த மகன் ஒரு யோசனையை முன் வைத்தான்.
‘வைக்கூம் கிளினரின்’ (Vacuum cleaner) முன்பக்கத்தைக் கழட்டிவிட்டு எலியை ‘சக்’ (Suck) பண்ணிப் பிடிக்கலாமென்றான் அவன். இது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஒரு வேளை எலி பிடிப்பட்டுவிட்டால், என்ற நப்பாசையில் எதைச் செய்தாகிலும் எலியைப் பிடி என்று அவனை விட்டுவிட்டேன்!
முன் குழாய்த்துண்டை ஒரு கையிலும், அது பொருத்தப்பட்ட ‘வைக்கூம் கிளினரை’ மறு கையிலும் பிடித்துக் கொண்டு கட்டில், கதிரை என அவன் கருமே கண்ணாக ஏறி இறங்கிக் குதித்தான். இறுதியில் தடுக்கி விழுந்து தனது காலையும், ‘வைக்கூம் கிளினரையும்’ உரைத்துக் கொண்டதுதான் மிச்சம். எலி பிடிபடவே இல்லை.
அன்று இரவு வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எலித் தொல்லை பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான எலிபிடிக்கும் முறையை சிபார்சு செய்தார்கள்.

எப்பொழுதும் எதிலும் குறைகண்டு பிடிக்கும் நண்பன் ஒருவன், ‘என்னதான் உவங்கள் ‘குவாறன்ரின்’ என்று பிளேன் முழுக்க மருந்தடிச்சு, வாறவையைக் கரைச்சல் படுத்தினாலும், இஞ்சை இருக்கிற பூச்சி பூரானை எந்தக் கடலிலை கொண்டு போய்க் கொட்டுறது? ஜேர்மனி எண்டால் இப்பிடியே? அங்கை ஒரு சிலந்தி பல்லியைக் காண மாட்டியள்..!’ என்று அலுத்துக் கொண்டான். அவன் சமீபத்தில்தான் ஜேர்மனியில் இருந்து புலம் பெயர்ந்து வந்திருக்கிறான். அவனுக்கு எல்லாமே ‘Made in Germany’ தான் திறம். பிறகு என்னத்துக்காக இங்கே வந்தவனாம்…?
குழந்தைப் பிள்ளையள் இருக்கிற வீட்டில் எலி மருந்துகள் வைப்பது அவ்வளவு உசிதமில்லை என்றும், எலிப் பொறி வைப்பதுதான் நல்லதென்று மீண்டும் அம்மா ஆலோசனை வழங்கினார்.
அடுத்த நாளே நாலைந்து எலிப் பொறிகள் வாங்கி வந்து கடைக்காரன் சொன்ன ஆலோசனைகளில் இருந்து இம்மியும் பிசகாது எலி நடமாட்டமுள்ள முக்கிய இடங்களில் வைத்தேன்.
எலியோ மாட்டுவதாக இல்லை!

பொறிகளிலே ‘சீஸ்’ துண்டு வைப்பதிலும் பார்க்க, கருவாட்டுத் துண்டுக்கு எலி ஓடி வரும் என்ற புதிய திருத்தத்தை அம்மா முன் மொழிந்தார்.

அம்மாவின் ஆலோசனைப்படி பக்கத்துத் தமிழ்க் கடையில் வாங்கிய ‘அறுக்குளா’ கருவாட்டுத்துண்டுகள் ஒவ்வொரு எலிப் பொறியிலும் பொருத்தப்பட்டன.
எலியோ அகப்படவில்லை!

வீடு முழுவதும் கருவாட்டு வாசனை வீசியதுதான் மிச்சம்.
சில நாட்களாக எலியின் தொல்லை இல்லை. தன்பாட்டுக்கு வெளியில் போய்விட்டது என்று எண்ணினேன். வீட்டிலும் எலிபற்றிய பிரஸ்தாபம் குறைந்தது.
அந்தச் சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

என் மனைவியின் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமாரிக்குள் இருந்து எலி ஒன்று பாய்ந்தோடியதைக் கண்டதாக எனது மகன் ஒருநாள் கூறினான்.
அவன் கூறியது பொய்யில்லை. நாலைந்து சேலைகளை எலி பதம் பார்த்திருந்தது. அதில் ஒன்றுக்கு மகத்தான Sentimental மதிப்பு இருந்தது. அந்தச் சேலையின் கோலத்தினைப் பார்த்து மனைவியின் கண்கள் பனிப்பதை நான் அவதானித்தேன்.
‘இந்த வீட்டிலை மூன்று ஆம்பிளையளும் தண்டத்திற்குத் தான் இருக்கிறியள்! ஒரு எலியைப் பிடிக்க முடியவில்லை…!’ எனக் கோபமும் அழுகையும் பொங்கக் கூறினாள் மனைவி.
பதினாலும் பதினைந்தும் வயதுடைய என் இரு மகன்களையும் முழு ஆண்பிள்ளைகளாகக் கணக்கெடுத்தே அப்படி அவள் சாடியிருக்கிறாள், என்ற சூக்குமத்தினைப் புரிவதற்கு எனக்கு கொஞ்ச நேரம் எடுத்தது.

இந்த நேரத்தில் எனது மகள் அபாயம் தரும் வகையில் ஒரு யோசனையைச் சொன்னாள். வீட்டில் ஒரு பூனையை வளர்த்திருந்தால் இற்றைவரையில் அது எலியை பிடித்திருக்கும் என்றாள். அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவளுக்கு இப்படியானதொரு ‘பதிவு’ எப்படி ஏற்பட்டதென்று முதலில் யோசித்தேன். சற்று சீரியஸாகவே விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியாயின. புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்து வாழும் அவள் தமிழையும் தமிழ்க் கலாசாரத்தையும் மறக்கலாகாது என்பதிலே வீட்டில் எல்லோர்க்கும் அக்கறை. இதனால் அவள் சனிக் கிழமைகளிலே நம்மவர்களினால் நடத்தப்படும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு சென்று வருகின்றனாள். அவளுடைய தமிழ் ஆர்வத்தைப் பெருக்குவதிலே அம்மாவும் தீவிரம் காட்டினார். தமிழ்ப்பாடத்திலே ‘பூனை எலி பிடிக்கும், நாய் வீட்டைக் காக்கும்’ என்கிற அறிவை அவள் அங்கு பெற்றிருந்தாள். இதனால் பூனை வளர்த்தால் எலிப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள்.

மகள் பூனை ஒன்றினை வீட்டிலே வளர்க்க ஆசைப்பட்டாலும், நாய், பூனை, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வீட்டிலே வளர்க்கத் தயங்கினேன். இவை வீட்டை அசுத்தப்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, காலம் செல்லச் செல்ல அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பும் என்னிடம் அல்லது எனது மனைவியிடம் வந்து பொறிந்துவிடும் எனவும் பயந்தேன்.
‘நீங்கள் எல்லாம் பள்ளிக்கூடம், வேலை எண்டு போனால் ஒரு காக்கைக் குருவி கூட இஞ்சைவராது. அவள் ஆசையோடை கேட்கிறாள். ஒரு பூனையை வாங்கிவிடன்! எலியும் பிடித்ததாகுது எனக்கும் ஒரு பாராக்காகப் போகுது…’ என்று எனது மகளுக்கு வக்காலத்து வாங்கினார் எனது தாயார். மிக மூத்ததும் மிக இளையதும் கூட்டணி சேர்ந்துவிட்டால் அதற்கு அப்பீல் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டேன்.
அடுத்த நாளே Pet shop ஒன்றிக்குச் சென்று வடிவான பூனைக்குட்டி ஒன்றினை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

மகளுக்கு அளவில்லாத சந்தோஷம். ஆனால் மகனுக்கு, தான் கேட்ட நாய் வாங்கித் தரவில்லை என்ற கோவம். பூனை வாங்கியதற்கு ஒரு காரணமிருந்தது. எலிக்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்? நாய் எலி பிடிக்காதல்லவா! விஷயத்தைப் பக்குவமாக விளக்கியும் என் மகன் இரண்டு மூன்று நாள் முகத்தை நீட்டிக் கொண்டு திரிந்தான்.
செல்லப் பிராணிகள் கடையில் வாங்கிய பூனைக்குட்டி என்ற படியால் வீட்டின் சோறு கறிகளை சாப்பிடாமல், சண்டித்தனம் செய்தது. மீன் கறியுடன் சேர்த்துக் குழைத்தும் வைத்துப்பார்த்தார் அம்மா. ஊகூம்! பூனை அம்மாவின் அநுசரணையைச் சட்டை செய்யவே இல்லை. பூனையின் பட்டினிப் பரிதாபத்தை பார்க்க முடியாத என் மனைவி ‘சுப்பர் மாக்கற்றில்’ பூனைகளுக்காக விற்கப்படும் உணவு ரின்கள் சிலவற்றை வாங்கி வந்தாள்.

‘பூனைக்கும் சாப்பாடு கடையிலை விக்குதோ…’ என்று ஆச்சரியப்பட்டார் அம்மா.
நேரம் தவறாது எனது மகள் பூனைக்கு உணவு கொடுத்து, குளிப்பாட்டி தன்னுடனே வைத்துக் கொண்டாள். பூனை ருசி கண்டுவிட்டது. வயிறு புடைக்க உண்டுவிட்டு மகளின் கட்டிலின் ஒரு மூலையில் படுத்துக் கொண்டது.
என்னைப் போலவே அந்தப் பூனையும் நேரம் தவறாது சாப்பிட்டுவிட்டு ஒரு கவலையும் இல்லாமல் தூங்கி எழும்புவதாக, என் மனைவி என்னை சீண்டுவதற்கு, இது அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
‘பூனைக்கு உந்த கண்டறியாத சாப்பாடுகளைக் கொடுத்தால் எப்பிடி எலி பிடிக்கும்…? வயிறு பசிக்க விடவேணும்!’ என்று அம்மா இடையில் புகுந்து என்னுடைய கௌரவம் மேலும் பாதிக்காதிருக்கப் பார்த்துக் கொண்டார்.
அம்மாவின் ஆலோசனைக்கு மரியாதை செய்வது போல் பூனைக்குச் சாப்பாடு குறைக்கப்பட்டது.
ஆனாலும் பூனை எலியைப் பிடிக்கவில்லை! எலித் தொல்லையும் குறைந்தபாடில்லை.
எலி பிடிப்பதெப்படி என்ற விடயத்தில் எனது விஞ்ஞான மூளையைக் கசக்கிப் பிழிந்து விட்டேன். இதற்காகப் பெரிய புத்தகங்களைக்கூடப் புரட்டிப் பார்த்தேன்.

‘நீங்களும் ஒரு ஆம்பிளை…ஒரு எலி பிடிக்கத் தெரியவில்லை!’ என்ற மனைவியின் குத்தல் கதைகள் எலி வர்க்கத்தின் மீதே தீராத வெறுப்பினை ஏற்படுத்தியது.
அன்றைக்கு எனக்கு வயிற்றுக் கோளாறு.

அதற்கு முன்தினம்தான் நண்பண் ஒருவன் வீட்டில் விருந்து. விருந்தை கனம் பண்ணுவது எனது சுபாவம். எனவே வெட்கம் பாராது வயிறு புடைக்க உண்டு மகிழ்ந்து திரும்பினேன். படுத்திருந்த போது வயிற்றைக் கலக்கியது.
ரொயிலற்றுக்குப் போவதற்காக லைற்றைப் போட்டேன்.ரொயிலற்றை ஒட்டியபடிதான் என் மகளின் அறையும் அமைந்திருந்தது. நான் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த எலி ரொயிலற் மூலையில் இருந்து ஓடி, பூனைக்கு மேலால் பாயந்து எங்கோ ஒளித்துக் கொண்டது.

பூனையும் கண்ணைத் திறந்து எலியைப் பார்த்த பின் மீண்டும் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டது. எனக்குப் பூனை மேல் படுகோவம். பூனைக்கு விரைவில் ஓரு வழிபார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே, வயிற்றின் அவசர அலைக்கழிவுக்குப் பணிந்தேன்

அன்று சனிக்கிழமை.
என்னுடைய பல்பலைக் கழகத்தில் பணிபுரியும் வெள்ளைக்கார நண்பன் ஒருவன் என்னைக் காண வந்திருந்தான். அவன் மிருக விஞ்ஞானத் துறையின் விரிவுரையாளன். அவன் வீடே ஒரு மிருகக் காட்சி சாலை போன்று காட்சியளிக்கும். அவன் வரும் போது அவனுடன் கூடவே அவன் மிகவும் செல்லமாக வளர்க்கும் நாயும் வரும். அன்றும் வழக்கம் போல அவனுடன் நாயும் வந்திருந்தது.

நெருங்கிய சிநேகிதர்களை நான் என் வீட்டின் பின்புற மண்டபத்திற்கே கூட்டிச் சென்று கதைப்பதுண்டு.
நாம் இருவரும் பல்கலைக்கழக விடையங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். அவனது நாய் அவனுக்கு அருகே பின்னங்கால்களை மடித்து நிலத்தில் குந்தி இருந்தது. சுவரோமாக சயனத்தில் இருந்த எங்கள் வீட்டுப் பூனையைக் கண்ட நாய், இரண்டு தடவை உறுமியது.

‘Stop it’ என்றான் நண்பன். அடங்கிவிட்டது நாய்!

அம்மா இப்பொழுதெல்லாம் வீட்டில் சுதந்திரமாக பழக தொடங்கிவிட்டார். எனது மகளின் அறையிலேயே அவரும் படுத்துக் கொள்வார். பூனையும் வழக்கம் போலவே வயிறு முட்டத்தின்று விட்டு மகளுடன் படுத்துக் கொள்ளும்.
அம்மா தான் கொண்டுவந்த சீலையை மீண்டும் புரட்டி அடுக்கிக் கொண்டிருந்தார். வேர்வையும் குளிரும் சேர்ந்தால் வெள்ளைச் சேலையில் ‘கரும்பேன்’ பிடித்துவிடும் என்பது அவரது கருத்து.

அலுமாரிக்குள் இருந்து வேறொரு பெட்டியை அம்மா அரக்கிய சத்தம் கேட்டது. கூடவே ‘கிறீச்’ என்ற சத்தத்ததுடன் எங்கள் வீட்டை ஆக்கிரமித்திருந்த அந்த எலி வெளியே ஓடி வந்தது. அம்மா சத்தமிட்டார். எலி பூனைக்கு மேலால் பாய்ந்தோடி நாம் இருந்த பக்கமாக ஓடி வந்தது.
எலியைக் கண்டதும் என் நண்பன் ‘Catch it’ என்று தன் நாய்க்கு கட்டளையிட்டான்.
நாய் பாய்ந்தெழுந்து, ஓடியது!

மின்னல் வீச்சில் அது எலியைத் தன் வாயிலே கவ்வி, இரண்டு தடவைகள் தலையை ஆட்டிவிட்டு எலியை கீழே போட்டது.
எலியின் ஜாதகம் அத்துடன் முடிந்தது!
இவ்வளவு அமளிக்குள்ளும் எமது பூனை அரைக் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் ஆனந்த சயனத்தில் ஆழ்ந்தது!
‘பார்த்தீங்களா…? உங்களைப் போலத்தான் நீங்கள் வாங்கி வந்த பூனையும்..! பூனையின்ரை அலுவலை இப்ப நாய் செய்யுது… வீட்டிலை உங்கடை வேலைகளையும் நானெல்லோ செய்ய வேண்டியிருக்கு’ என இடைக்கிடை பிள்ளைகளைத் தானே ரீயூஷனுக்கு கூட்டிக் கொண்டு போவதை, குத்திக்காட்டினாள் மனைவி.
ஊரில் பூனைகள் எலி பிடிக்கும். அது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவுஸ்திரேலியாவில் பூனைகள் எலி பிடிப்பதில்லையோ…?

தமிழ்ப்புத்தகத்தில் உள்ள ‘வாசகம்’ மறு பதிப்பில் நிச்சயம் திருத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் அது அவுஸ்திரேலியச் சூழலை மனங்கொண்டு எழுதப்பட்ட தமிழ் நூல்!
ஆசி கந்தராஜா (2000)

http://www.aasi-kantharajah.com/சிறுகதைகள்/எலி-புராணம்-சிறுகதை

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது.பகிர்தமைக்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.