Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா?  - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா?  - யதீந்திரா

 

தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? 
 

 

கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி, எது மகிந்த தரப்பு – என்று பிரித்தறிய முடியாதளவிற்கு 'எழுக தமிழை' எதிர்ப்பதில் அனைவருமே ஓரணியில் திரண்டிருக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானராச தேரர் தொடங்கி தங்களை இடதுசாரியினராக காண்பித்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன வரையில் வடக்கில் மீண்டும் இனவாதம் தோன்றிவிட்டதாகவும், புலிகள் விட்டுச்சென்ற இடத்தை விக்கினேஸ்வரன் பிடிக்க முயற்சிக்கின்றார் என்றவாறும் ஆவேசமாக பேசி வருகின்றனர். இது எதிர்பார்க்கப்பட்ட விடயமும் கூட.

தமிழ் மக்கள் தங்களின் நியாயபூர்வமான உரிமைகள் தொடர்பில் பேசுகின்ற போது அதனை இனவாதம் என்பதும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி பயங்கரவாதம் என்பதும் தெற்கின் வழமையான அணுகுமுறைகளில் ஒன்றுதான். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் இவ்வாறு ஆவேசமாக அறிக்கைகளை பிரசுரித்திருப்பவர்கள் எவருமே, 'எழுக தமிழ்' மக்களெழுச்சியின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தர்க்க ரீதியில் எதிர்க்கவில்லை. உண்மையில் அவர்களால் எதிர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தர்க்க ரீதியில் எதிர்க்க முடியாத கையறுநிலையின் விளைவே மேற்படி வெற்றுக் கூச்சல்களாகும். இந்த விடயம்தான் தமிழ் மக்கள் ஆழமாக கவனிக்க வேண்டிய விடயமுமாகும்.

'எழுக தமிழ்' - ஏன் இந்தளவிற்கு எதிர்க்கப்படுகிறது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளும் வீழ்ச்சியடைந்து விட்டன என்பதே கொழும்பின் பொதுவான கணிப்பாகும். இதில் மைத்திரி, ரணில், சந்திரிக்கா என்றெல்லாம் பேதங்கள் கிடையாது. இவர்கள் அனைவரும் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவுடன் அதிகாரப் போட்டியில் மல்லுக்கட்டிக் கொண்டாலும் கூட, இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தில் கருத்தொருமைப்பாடு கொண்டவர்களாவர். அதாவது, நாங்கள் யுத்தத்தில் வெற்றிபெற்றவர்கள் - தமிழர்களோ தோற்றுப் போனவர்கள் - யுத்தத்தில் தோற்றுப் போதல் என்பது நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளிலும் தோற்றுப்போதல் என்பதுதான். இதுவே 2009இற்கு பின்னரான பொதுவான சிங்களப் புரிதலாகும். இதற்கு கொழும்பின் அதிகாரத்தை தங்களுக்குள் பங்கிட விரும்பும் எந்தவொரு தென்னிலங்கை கட்சியும் விதிவிலக்கல்ல. இதில் உதய கன்மன்பிலவிற்கும், டில்வின் சில்வாவிற்கும் இடையில் ஒரு வேறுபாடும் கிடையாது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், எழுக தமிழின் பின்னர் முஸ்லிம் தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்து வருவதுதான். முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழியை உடைத்துவிடுவது போன்று, இது ஒரு தேவையில்லாத வேலை என்று கூறியிருக்கிறார். இதேபோன்று ஏனைய சில முஸ்லிம் தலைவர்களும் எழுக தமிழை கடுமையாக எதிர்த்து பேசி வருகின்றனர். இத்தனைக்கும் இதே முஸ்லிம் தலைவர் தங்களின் பள்ளிவாசல்களை பொதுபலசேனா தாக்கிய போது, ‘இனவாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ என்று கூச்சல் போட்டவர்கள். ஆனால் இன்று, தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் புத்த விகாரைகள் - புத்த சிலைகள் எதற்கு? என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கேள்வியெழுப்புவதை இனவாதம் என்கின்றனர். இப்போது விக்கினேஸ்வரனை எதிர்ப்பதில் முஸ்லிம் காங்கிரசும் பொதுபலசேனாவும் ஓரணியில் நிற்கின்றன. இதிலிருந்தாவது தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டாமா?

இவ்வாறானதொரு மக்களெழுச்சி தொடர்பில் விவாதித்த போது, இலங்கை தமிழரசு கட்சி இதனை மறுத்துவிட்டது. இதில் தங்களுக்கு உடன்பாடில்லையென்றும் இதனை நிறுத்துமாறும் கோரியிருந்தது. ஆனாலும் இது அவசியம் என்பதை உணர்ந்தவர் தங்களது நியாயத்தை இவ்வாறு விபரித்திருந்தனர்: மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்காது விட்டால், வெற்றியின் இறுமாப்பில் ஒன்றுபட்டிருக்கின்ற சிங்கள ஆளும் வர்க்கம் தாங்கள் நினைத்த ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்துவிடும் ஆபத்துண்டு. எனவே இவ்வாறானதொரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம்தான் நாங்கள் விழிப்பாக இருக்கின்றோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் வலியுறுத்த முடியும். ஆனாலும் இதனை ஏற்க மறுத்த தமிழரசு கட்சி தங்களால் இதில் பங்குகொள்ள முடியாது என்றும் தெரிவித்தது மட்டுமன்றி, மக்களையும் இதில் பங்குகொள்ள வேண்டாமென்றும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் 'எழுக தமிழ்' ஒரு வெற்றிகரமான எழுச்சியாக அமையுமா? இப்படியொரு கேள்விதான் அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் இதனை ஏற்பாடு செய்த தமிழ் மக்கள் பேரவையும் இதில் பங்கெடுத்திருந்த பிரதான அரசியல் தலைவர்களான சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அண்ணளவாக 10000 – 15000 அளவான மக்கள் யாழ் முற்றவெளியில் திரண்டனர். கலந்துகொண்ட மக்களின் தொகை இதனை விடவும் அதிகம் என்று கூறுவோரும் உண்டு. இவ்வாறானதொரு மக்கள் தொகையை கற்பனை செய்திராத அரசாங்கமும், அதனுடன் இணைந்து செயற்படும் சக்திகளும் மற்றும் மகிந்த தரப்பும் ஒன்றுபட்டு இதனை எதிர்த்து நிற்கின்றனர். 2009 உடன் தமிழ் மக்கள் தங்களின் அடிப்படையான உரிமைகள் அனைத்தையும் சாகவிட்டுவிட்டனர் என்னும் வெற்றிக் கற்பனையில் திளைத்திருந்தவர்களுக்கு 'எழுக தமிழ்' ஒரு வலுவான அடியை போட்டது. அந்த அடியின் வலியே அவர்களை கூச்சல்போட வைத்திருக்கிறது.

இவர்கள் அவைரும் பாகுபாடின்றி எதிர்ப்பதற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அப்படியென்ன புதிதாக கூறிவிட்டார்?

தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? 

'எழுக தமிழ்' பேரணியின் நிறைவில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான இருதய சத்திரசிகிச்சை நிபுணர் லக்ஸ்மன், 'எழுக தமிழ்' பிரகடனத்தை வாசித்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உரையாற்றுகின்ற போது ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதாவது, இது அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல, மேலும் தமிழரசு கட்சிக்கும் எதிரானதல்ல. மாறாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளே இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் எவையும் புதியவையுமல்ல. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும்.

விடயம் இவ்வாறு தெளிவாக குறிப்பிடப்பட்ட பின்னரும் கூட ஏன் இந்தப் பேரணி இந்தளவிற்கு பாரதூரமாக எதிர்க்கப்படுகிறது? அவ்வாறாயின் தமிழ் மக்கள் பேரவையும் அதனுடன் இணைந்துநிற்கும் தலைவர்களும் சந்தேகப்பட்டது போன்றே, அரசாங்கம் ஒரு ஏமாற்று நாடகத்தைத்தானா அரங்கேற்றப் போகிறது? அந்த ஏமாற்று நாடகத்திற்குத்தானா தமிழரசு கட்சியும் துணைபோய்க் கொண்டிருக்கிறது? தெரிந்தே துணை போகிறதா அல்லது தெரியாமலா? உண்மையில் தங்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் இப்போதும் உறுதியாக இருப்பது உண்மையெனின் த.தே.கூட்டமைப்பின் முதலமைச்சர் ஒருவரை கொழும்பின் அனைத்து சிங்கள – முஸ்லிம் அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டு தாக்குகின்ற போது, சம்பந்தனும் அவரது தொண்டரடிப் பொடிகளும் தமிழ் மக்களின் பக்கமல்லவா நின்றிருக்க வேண்டும். அது விக்கினேஸ்வரனின் கோரிக்கை அல்ல, அது கூட்டமைப்பின் கோரிக்கை – அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் - இப்படியல்லவா தமிழரசு கட்சி விக்கினேஸ்வரனை பாதுகாத்திருக்க வேண்டும்! ஆனால் சம்பந்தனும் அவரது விசுவாசிகளும் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதன் பின்னணி என்ன? அரசாங்கமும் தாங்களும் வேறுவேறல்ல என்பதையா? அவ்வாறாயின் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்கும் உத்திதானா? இனி இக்கேள்விகளுக்கான பதிலை தேடுவது மக்களின் பணியாகும்.

தமிழ் தேசிய அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், மக்கள் புதிய சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப தங்களுக்கான புதிய தலைமைகளை தெரிவு செய்திருக்கின்றனர். ஜி.ஜி.பொன்னம்பலம் தொடங்கி சம்பந்தன் வரையில் மக்களின் தெரிவுகள் அவ்வாறுதான் அமைந்திருந்தன. 1977இல் அப்போதைய மிதவாத தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரானதைத் தொடர்ந்து, தமிழ் தேசிய அரசியல் மிதவாதிகளின் ஆளுகைக்குள்ளிருந்து விடுபட்டு, இயக்கங்களின் முழுமையான ஆளுகைக்குள் அடங்கிப்போனது. அதன் பின்னர் 2009இல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்துதான் மீண்டும் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் மீளவும் தலைவர்களாக மக்கள் முன் தோன்ற முடிந்தது. ஆனால் கடந்த ஏழு வருடங்களில் சம்பந்தன் தலைமையிலான அரசியல் முன்னெடுப்புக்களில் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாலோசனை தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டது. அதன் தொடர் உரையாடலின் விளைவாகவே இன்று 'எழுக தமிழ்' பேரணியொன்று இடம்பெற்றிருக்கிறது. இப்போது துருத்திக்கொண்டு மேலெழும் கேள்வி: அடுத்தது என்ன?

அரசியல் நிலைப்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒரு வலுவான அரசியல் ஸ்தாபனம் (Political institution) அவசியம். ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லாமல் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் முன்கொண்டு செல்ல முடியாது. இந்த வாதத்தின் அடிப்படையில் சிந்திப்பதாயின் தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக வெளிவந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேரவையால் மட்டும் முன்னெடுக்க முடியாது. அதற்கு பேரவையை பக்கபலமாகக் கொண்டு, விடயங்களை முன்கொண்டு செல்வதற்கு ஓர் அரசியல் ஸ்தாபனம் தேவை. அதேவேளை தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் உடைவை தொடர்ந்தும் ஒரு உடைவாகவே பேணிப் பாதுகாக்கும் திட்டங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் பேரவையும் அதனுடன் இணைந்து நிற்கும் கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.

இங்கு நான் உடைவென்று குறிப்பிடுவதன் பொருள் வேறு. அதாவது, விடுதலைப்புலிகளின் வீழ்சிக்குப் பின்னர், கடந்த ஏழு வருடங்களில் மக்கள் பெருந்தொகையில் வீதிக்கு வந்திருக்கும் முதல் சந்தர்ப்பம்தான் 'எழுக தமிழ்'. இதுவரை அச்சம், பதட்டம், தடுமாற்றம் ஆகியவற்றால் படலையை தாண்டுவது தொடர்பில் கேள்விகளுடன் வாழ்ந்த மக்கள் மத்தியில்தான் இவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனையே இப்பத்தி உடைவுண்ட பகுதி என்கிறது. அவ்வாறாயின் உடைவுறாத பகுதிகள் நோக்கியும் பேரவையின் பார்வை விரிய வேண்டும். இந்த உடைவுண்ட மக்கள் கூட்டத்துடன் இன்னும் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் கூட்டமும் உடைத்து சேர்க்கப்பட வேண்டும். அது ஒரு பெரும் திரளாக உருப்பெற வேண்டும்.

இவ்வாறு சிந்திக்கத் தலைப்படும் போது, இதனை அவசரப்பட்டு அரபுலக எழுச்சியோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியதில்லை. அரபுலக எழுச்சியின் அடிப்படை வேறு. அது ஆட்சியை கவிழ்ப்பதற்கான (Toppling the Regimes) ஒரு தொடர் செயற்பாடு. ஆனால் 'எழுக தமிழ்' போன்ற நிகழ்வுகள், ஒடுக்கப்பட்ட இனமொன்று தனது உரிமைகளை வலியுறுத்தி நிற்பதற்கான, அதற்கான உணர்வலையை தக்கவைப்பதற்கான செயற்பாடு. உலகின் ஏனைய பகுதிகளில் ஆட்சி கவிழ்ப்புக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளை, ஆட்சியதிகாரமில்லாத தமிழ் மக்களின் செயற்பாடுகளோடு ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமற்றது. அரபுலக எழுச்சியும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய சக்திகள் தொடர்பிலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்.

மொத்தத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தொடர்பிலும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்பிலும் காண்பிக்கப்பட்டுவரும் கடுமையான எதிர்ப்புக்கள், பிறிதொரு புறம் எழுக தமிழின் வெற்றியையே உறுதிப்படுத்துகின்றது. இதன் தொடர்ச்சியான முன்னெடுப்புக்கள் இலங்கை தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சக்திகளான அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற அதிகாரங்களையும் நிச்சயம் சிந்திக்கத் தூண்டும். 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=134d120a-622f-4119-bf34-c31f3206d0af

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.