Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

Featured Replies

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக  உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அணுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும்  நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். 

சர்வதேச அரசியற்கட்டமைப்பு என்பது அடாவடித்தனம் கொண்டது. எல்லா அரசுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகளோ அல்லது பலம் வாய்ந்த உலக அரசுகளுக்கான கட்டமைப்போ என எதுவும் இல்லாத உலகில் அடாவடித்தனம் கொண்ட சர்வதேச கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது.

உலகின் காவல்காரன் என்று எவரும் இல்லாத நிலை என்பது பலம் இல்லாதவன் அடிபட்டு போகவும் பலம் கொண்டவன் வாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கிறது. தற்கால சர்வதேச அரசியற் கட்டமைப்பே இதற்கு காரணமாக உள்ளது.

உலகின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் இன்று நின்மதியாக இரவில் தூங்க முடிகிறது என்றால் வடக்கே உள்ள கனடாவிலும் தெற்கே உள்ள மெக்சிகோவிலும் பார்க்க அதீத பலம் கொண்ட நாடாக ஐக்கிய அமெரிக்கா இருப்பதே காரணமாகும்.

ஆக இந்த உலகில் எந்த ஒரு நாடும் முடிந்த அளவு பலம் கொண்டவையாக இருப்பதன் ஊடாகவே நடைமுறைக்கு சாதகமான பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும். இங்கே பலம் என்பது இயற்பியல் சார்ந்த இராணுவ மற்றும் பாதுகாப்பு பலம் (Physical power) மட்டுமல்ல மென்பலம் (Soft power) என்று குறிப்பிடக்கூடிய இராசதந்திர, பொருளாதார பலத்தையும் உள்ளடக்கும்.

அரசுகளின் சபையாக கொள்ளப்படும் ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகளில் இடம் பெறும் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் சபையாக அல்லாது பலம் கொண்ட நாடுகளின் அடாவடி தர்பாராகவே கொள்ளப்பட கூடும். இது அரசுகளின் அரசாங்கம் என்று பார்ப்பது தவறானதாக கருதப்படுகிறது.

சர்வதேச அரசியலில் இத்தகைய அடாவடித்தனம் குறித்த கட்டமைப்பை ஆய்வு செய்யும் பண்பை மெய்யியல்வாத பண்பாடாக (Realist tradition) பார்க்கின்றனர்.  இந்த பண்பாடு அரசுகளை மையமாக கொண்டவை, அவற்றின் அடாவடித்தனத்தை ஏற்றுக்கொண்டவை, உடனடி தேவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாக செயற்படக் கூடியவை, பாதுகாப்பையும் அதிகாரத்தையும் சர்வதேச அரங்கில் தேடிக்கொள்ளும் பொருட்டு என்றும் மாறாத பண்பை கொண்டதாக இந்த மெய்யியல் பண்பாடு உள்ளது.

இந்த அடிப்படையில் தெற்காசிய நாடுகளில் இருந்து இந்த கட்டுரைத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டபாகிஸ்தான், மியான்மர், சிறீலங்கா ஆகிய நாடுகள் உள்நாட்டில் பல்வேறு பொதுபண்புகளை தம்மகத்தே கொண்டுள்ள அதேவேளை தற்போதைய அனைத்துலக கட்டமைப்பில் தமது முக்கியத்துவம் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை நன்கு அறிந்து கொண்டு, மேலைத்தேய வலிய நாடுகள் மத்தியிலே தமது தேவைக்கு ஏற்ப தக்கவைத்து கொள்ள தலைப்பட்டுள்ளன.

மிகவும் வறிய சமூக பொருளாதாரத்தை கொண்ட இந்நாடுகள் உள்நாட்டு அரசியலில் இராணுவத்தின் தலையீடு, மத நிறுவனங்களின் தலையீடு, ஊழல் அரசியல் என ஏற்றுக் கொள்ளமுடியாத சனநாயக பண்புகளை கொண்ட நிர்வாக கட்டமைப்புகளையும் பல்வேறு இன மத சமூக கலாச்சார வேறுபாடுகளையும் தம்மகத்தே கொண்டுள்ளன.

இதனால் வல்லரசுகள் உட்பட சர்வதேச நிறுவனங்களும் இம் மூன்று நாடுகளினதும் உள்ளக விவகாரங்களிலும் தலையிட கூடிய தன்மையை கொண்டுள்ளன. உள்ளக அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உறுதியான ஒரே தேசியம் நோக்கியதான பார்வையில் இயங்காத நிலையினால் வலுவிழந்து பிரிவினைகள் கண்டு வல்லரசுகளின் தேவைகளுக்கு ஏற்ப செல்லும் நிலை உள்ளது.

அதேவேளை சர்வதேச ஒழுங்கு ( international system)  என்ற விடயத்தின் அடிப்படையில் உலகில் உள்ள ஒவ்வொரு அரசுகளும் ஒவ்வொரு அலகுகளாக பார்ப்போமானால் அந்த அலகுகள் ஒவ்வொன்றும் தமது வலுநிலைக்கு ஏற்ப தமது இடத்தை எடுத்து கொள்ளும் தன்மை சர்வதேச ஒழுங்காக பார்க்கப்படுகிறது.

பொருளாதார நலன்கள், பாதுகாப்பு, சமூக கலாச்சார தனித்துவம், தொழில் நுட்ப வளச்சி ஆகிய விடயங்கள் சர்வதேச ஒழுங்கினை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளாக அமைகின்றன.  சிறிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நலன்களை தேடும் பொருட்டு வல்லரசுகளின் உதவியை நாடிநிற்கின்றன. வல்லரசுகள் அதே காரணிகளுக்காக சிறிய நாடுகளினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முயலுகின்றன.

பல மைய அரசியலை நோக்கி நகரும் உலகில், சீனாவின் வளர்ச்சியும் மென்மையான நகர்வும் சீனாவினால் ஆதிக்க அரசியலில் தலையீடு செய்யாமல் தனது வளர்ச்சியை நடைமுறைப்படுத்த முடியுமா அல்லது சீனா மேலை நாடுகளை மிஞ்சி விடும் அளவுக்கு வளர்ந்து அதிகாரம் செய்ய முற்படுமா என்ற  சிந்தனை இன்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.

சீனா , அமெரிக்கா ஆகிய இரு பெரும் அரசுகளும் சர்வதேச இராசதந்திர வரைமுறைகளில் மெய்யியல்வாத பண்பாட்டுக்கு ஏற்ப செயற்படுகின்றன.  பிராந்திய மற்றும் பூகோள வல்லாதிக்க நிலையை பேணும் பொருட்டு சிறிய நாடுகளைஅவற்றின் பூகோள நிலையம் காரணமாக மூலோபாயம் என்ற பெயரில் தமது நலன்களுக்க ஏற்ப கையாளுகின்றன.

ஆக பர்மா , பாகிஸ்தான்,  சிறீலங்கா  ஆகிய நாடுகள் இந்த விதிமுறைகளில் இருந்து விலகாது தமது உள்ளக அரசியல் பொருளாதார  நலன்களை பெற்று கொள்கின்றன.

இங்கே முக்கியமான விடயம் ஒன்றை காண கூடியதாக உள்ளது வல்லரசுகள் தமது போக்கிற்கு ஏற்றது போல உள்ளக பொறிமுறை நகர்வுகளில் தலையிடுவதை தவிர்க்க முடியாத நிலையிலேயே இம் மூன்று நாடுகளும் உள்ளன. ஆனால் தேவைக்கு ஏற்ற வகையில் இனங்களின் உரிமைகளும புவியியல் நிலைகளும் கையாளப்படுகின்றன.

சனநாயக பண்பாட்டிற்கு அப்பாற்பட்டு இனப்படுகொலைகள், தேர்தல் ஊழல்கள், பொருளாதார சுயநல நடவடிக்கைகள் என பல்வேறு தரம் தாழ்ந்த சனநாயக பண்புகளுக்கும் மத்தியில் உலகின் பிரதான வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் சுதந்திரமான கேந்திர பாதுகாப்பு நிலைகளுக்கான தீவிர தேடுதல்களின் பலனாக பாகிஸ்தான் , பர்மா , சிறீலங்கா போன்ற இன்னும் பல நாடுகள் சிக்கிப்போய் உள்ளன.

உதவித் தொகைகளின் அடிப்படையில் பார்ப்போமானால் பாகிஸ்தான் மிக அதிக பொருளாதார உதவிகளை இருபகுதியிடமிருந்தும் பெற்றுக் கொண்டுள்ளது. அவ்வளவு பாரிய உதவிகளை வழங்கும் அளவுக்கு பாகிஸ்தான் இருபகுதிக்கும் முக்கியமானதாக இருப்பதை இங்கு காணலாம். இஸ்லாமிய அடிப்படைவாதம், அணுஆயுத கையாழுகை,  கேந்திர முக்கியத்துவம் ஆகியன மிகவும் பெறுமதி வாய்ந்ததகவே தெரிகிறது.

45 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன – பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பும்,  நாட்டிற்கு நெடுக்காக அதிவேக பெருந்தெருக்களை அமைக்கும் திட்டமும் சீன – பாகிஸ்தான் நலன்களின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை பாகிஸ்தான் , அமெரிக்க மக்களது வரிப்பணத்திலிருந்து 2001ஆம் ஆண்டிலிருந்து 24.59 பில்லியன் பணத்தை பெற்றுள்ளது. இதனால் அமெரிக்க நலன்களை பாகிஸ்தான் உதறித் தள்ளிவிட முடியாது என்பது அமெரிக்க பத்திரிகைகளின் பார்வையாக உள்ளது.

பாகிஸ்தானிய அரசியல் தலைவர்கள் இரு வல்லரசுகளிடமிருந்தும் எவ்வாறு தமது தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதிலே மிகவும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். வல்லரசுகளும் நிதி உதவியையே பெரும்பாலும் தமது கட்டுப்பாட்டு காரணியாக பயன்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக உதவியாக கொடுக்கப்பட்ட உதவிதொகைகளின் விபரத்தை வெளியிடுவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பலம் வல்லரசுகளுக்கு உள்ளது.

ஆனால் பர்மிய தலைமைத்துவம் இராணுவ ஆட்சிகாலத்தில் சீனாவுடன் உறவு கொண்டிருந்தமையால் நிதியாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. பதிலாக போதை வஸ்து உற்பத்தி, தாதுப்பொருட்கள் விற்பனை, இயற்கை வளங்களை விற்றல் என் பல்வேறு வகையான நலன்களை பெற்று கொண்டிருந்தது.

அமெரிக்காவின் பொருளாதார தடை நீக்கத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டதன் காரணமாக  செப்டெம்பர் மாதம் பர்மா மீதான தடையும் நீக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக இருந்து வரும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் இராணுவ ஆட்சி காலத்தின் போது நிகழ்ந்த  மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் என பல உள்ளக பொறிமுறைகள் பர்மாவை மேலும்  தாக்கத்திற்கு உள்ளாக்கக் கூடியன.

பர்மாவுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டொலர் உதவித்தொகையாக கொடுத்துள்ளது. இராணுவ ஆட்சி காலத்திலும் அதன் பின்பும் சீன பொருளாதார மேலாதிக்கத்திற்குள் இருந்து வெளியே வர முற்பட்டாலும் சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் குறித்தும் பாரிய முதலீடுகள் குறித்தும் கவலை கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளது

அமெரிக்கா பொருளாதார தடையை ஒரு கட்டுப்பாட்டு காரணியாக பயன்படுத்தி வந்தது. தற்பொழுது சனநாயகம், மனித உரிமை மீறல்களின் மீதான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்களை தனது கட்டுப்பாட்டு காரணிகளாக பயன் படுத்துகிறது

சிறீலங்கா உள்நாட்டு அரசியலில் பெரும்பான்மை சனநாயகத்தை நிலை நாட்ட கலாச்சார தனித்துவத்தை பேணும் போக்கில் செய்த இனஅழிப்பை மறைத்துக் கொள்ள, மேலை நாடுகளின் தேவையும் அதேவேளை சர்வதேச அரங்கில் சீன உதவியும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவோம்.

அரச தலைமைத்துவத்தை கட்டுக்குள் கொண்டுவர மனித உரிமை மீறல்களே பெரும் பங்கு வகிக்கிறது. 2009 மே மாத தமிழின அழிப்பு என்பது மிக கொடூரமானது. தேவையான ஆதாரங்களை தமிழர்களே கொடுத்து விட்டார்கள்.  ஆனால் நடவடிக்கை எடுப்பதை பிற்போடுவதன் மூலமும் காலம் தாழ்த்தும் தந்திரம் மூலமும் சிறீலங்கா அரசு கையாளப்படுகிறது.

சிறீலங்காவுக்கு அமெரிக்க உதவியாக சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து 2 பில்லியன்  டொலர் கொடுக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச காலத்தில் மனித உரிமை மீறல்கள் முதன்மையாக பேசப்பட்டது . தற்போழுது தமிழர்களின் அதிகாரப்பரவலாக்கல் என்ற பதத்தின் மூலமும் உள்நாட்டு இனவாத சக்திகளை தூண்டுவதன் மூலமும் ஆளும் தரப்பு கையாளப்படுகிறது.

ஒப்பீட்டு அடிப்படையில் சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் மற்றைய இரு நாடுகளையும் பார்க்க குறைவாகவே உள்ளது எனலாம். ஆனால் தமிழர் தரப்பின் புலம்பெயர் செயற்பாடுகளின் பலம், வல்லரசுகளின் உதவி இல்லாது விடின் சிறீலங்கா தாக்குப்பிடிக்க முடியாது குலைவடைந்து  போகலாம். இதனால்  புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான பல்வேறு ஊடறுத்து குலைக்கும் செயற்பாடுகள் சிறீலங்காவுக்கு  அவசியம் தேவையாக உள்ளது.

தமிழ் மக்கள் மெய்யியல்வாத சர்வதேச அரசியல் பண்பாட்டை புரிந்து பொதுவான கருத்தோட்டத்துடன் வல்லரசுகளை கையாழும் தன்மையை பெற்று கொள்வது மிக அவசியமானதாகும். மேலைத்தேய கொள்கை ஆய்வு கட்டுரைகள், பேட்டிகள் இன்று தமிழர் தரப்பு தலைமைத்துவங்களின் கருத்தை அறிவதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும் மேலைநாடுகளிலும் தமிழர் தலைமைத்துவம் மத்தியில் ஒரே அபிலாசைகள் இருப்பது தற்போது மிகவும் முக்கியமானதாகும்

ஏனெனில் இந்த சர்வதேச அரசியற்பண்பாட்டின் வளர்ச்சி வல்லரசுகளின் தலைமைத்துவ போட்டியின் கூர்மையை மேலும் அதிகரிக்கவே முற்படும் என்பது பொதுவான பார்வையாக உள்ளது. இதனால் மேலும் சிறிய பிரதேசங்களும் பலம் இழந்து இருக்கும் இன முக்கியத்துவமும் முதன்மைப்படும் என்பது ஆய்வாளர்களின் பார்வையாகும்.

முற்றும்.

– லண்டனில்இருந்து புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி*

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

http://thuliyam.com/?p=45146

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.