Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு தேசம்!

Featured Replies

கறுப்பு தேசம்!

மோடி மேஜிக்!

 

றுப்புப் பணம் (Black Money), என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணம். அப்படி இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்ற உறுதியான தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், கறுப்புப் பணப் பதுக்கலுக்கு சொர்க்க புரியாகத் திகழும் ஸ்விஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப்பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 பில்லியன் அமெரிக்க டாலர் கறுப்புப் பணத்தை அங்கே டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ. 70 லட்சம் கோடிக்கும் மேல்.

p2b.jpg

1970-களில் இருந்தே!

ரகசியம் காக்கப்படுதல், நடுநிலைமை, தரமான சேவை ஆகிய மூன்று காரணங்களுக்காகத்தான் ஸ்விஸ் வங்கியைப் பணத்தை பதுக்கிவைக்க தேர்ந்தெடுக்கிறார்கள். கறுப்புப் பணம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த ஸ்விஸ் வங்கி, பெரும் நெருக்கடிக்குப் பின்னரே விவரங்களை வெளியிட்டது. அதுவும் பாதி தகவல்கள்தான். ஸ்விஸ் வங்கியின் அறிக்கைப்படி கறுப்புப் பணத்தை அதிகளவில் அங்கு டெபாசிட் செய்திருப்பதில் இந்தியாதான் முன்னிலையில் உள்ளது. ஸ்விஸ் வங்கி ஊழியர் ருடால்ஃப் எல்மர், ஸ்விஸ் வங்கியில் பதுக்கிவைத்திருக்கும் நபர்களின் பட்டியலை விக்கிலீக்ஸுக்கு வெளியிட்டார். அதில் டாப் இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

அவர் கொடுத்த ஆதாரங்களின்படி 1970-களில் இருந்தே இந்தியர்கள் பங்குச் சந்தை மூலமாகவும், போதைப் பொருட்கள் மூலமாகவும், அறக்கட்டளைகள் மூலமாகவும், போலி திட்டங்கள் மூலமாகவும் கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் டெபாசிட் வைக்க தொடங்கியதாகக் கூறியுள்ளார். சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தில், மற்ற நாடுகளின் மொத்த கறுப்புப் பணத்தைவிட இந்தியாவின் கறுப்புப் பணம் அதிகம். மொத்தம் 2 ஆயிரம் இந்தியர்களின் பெயர்களில் கறுப்புப் பணம் அங்கு டெபாசிட் செய்யப் பட்டிருக்கிறது. அவர்களில் டாப் லிஸ்ட் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. மேலும் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பெரும்பாலான கறுப்புப் பணம், பாகிஸ்தான் வழியாகவே ஸ்விஸ் வங்கிக்குப் போயிருக்கிறது என்ற pb.jpgகூடுதல் தகவலையும் அவர் வெளியிட்டார்.

யாரெல்லாம் கறுப்புப் பணம் வைத்திருக் கிறார்கள், அவர்களால் எப்படி தப்பிக்க முடிகிறது என்று பொருளாதார நிபுணரும் ஆடிட்டருமான எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.

“அமைச்சர்கள், மது நிறுவன அதிபர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியவர்களே கறுப்புப் பணம் வைத்திருப்பவர் களாக இருக்கிறார்கள். மக்களுக்கான நலத் திட்டங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை நேரடியாக அமைச்சர்கள்தான் கையாள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு பகுதியை சுருட்டிக்கொள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசு உயர் அதிகாரிகள் துணைபோகிறார்கள். அவர்களும் தங்கள் பங்குக்கு சில கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் அல்லது பிசினஸ்மேன்களைக் காட்டிலும் அதிக அளவில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்தான் இந்தப் பட்டியலில் அதிகம். இவர்களால் எந்த வேலையும் சரிவர நடப்பதே இல்லை. இதனாலேயே இந்தியாவின் 65 சதவிகித மக்கள், வாழ்வதற்கு ஏற்ற சூழல்கூட அமையாமல் அல்லாடுகிறார்கள்.

இப்படி பொதுத் திட்டங்கள் மூலமாக இவர்கள் அடிக்கும் ஊழல் பணம் ஒருபக்கம் இருக்க, கல்வி நிலையங்கள் மாணவச் சேர்க்கைக்கு வாங்கும் பல லட்சங்களும் கறுப்புப் பணமாகவே சேர்கிறது. மேலும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு மூலம் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடிகளைப் பதுக்குகிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பதுக்குவதுதான் பல லட்சம் கோடிகளாக இன்று வளர்ந்து நிற்கிறது. அப்படி பார்க்கும்போது உலக அரங்கில் இந்தியா வாங்கியிருக்கும் கடனைவிட இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் பல மடங்கு அதிகம்.

p2c.jpg

கார்ப்பரேட்டுகளின் புது ரூட்!

கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும் பணம் மட்டுமே கறுப்புப் பணம் அல்ல. மாறாக கார்ப்பரேட்டுகள் தங்களுக்கென புதிய ரூட்களை வைத்துள்ளன. பொய்யான வரவு-செலவு கணக்குகளைக் காட்டி அவை கறுப்புப் பணத்தைப் பதுக்குகின்றன. இவர்கள் மூலப்பொருட்களின் விலையை அதிகரித்து கணக்கில் காட்டுவது, அதிகம் செலவு செய்ததாக ஆதரங்களைத் தயார்செய்வது, நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அதிக அளவு சம்பளம் தருவதாக காட்டுவது, விபத்துகளில் அழிந்து போய்விட்டதாகக் கணக்கு காட்டுவது என பல வழிகளை வைத்திருக்கிறார்கள்.

மேலும் ஊழியர்களுக்குத் தர வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைத் தராமல் இருப்பது, போனஸ் போன்ற சலுகைகளைத் தராமல் பதுக்குவது, ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவது, விற்பது போன்றவற்றில் முறைகேடான மதிப்பைப் பதிவு செய்வது போன்றவையும் கறுப்புப் பண பதுக்கலுக்காக கார்ப்பரேட்டுகள் செய்யும் வழிகள்தான். இப்படி ஏதோ ஒரு வழியில் செய்யப்பட்டவைதான் இந்த டாப் 5 ஊழல்கள். 2ஜி அலைக்கற்றை - ரூ. 1.76 லட்சம் கோடி, காமன்வெல்த் கேம்ஸ் - ரூ. 70 ஆயிரம் கோடி, ஸ்டாம்ப் ஊழல் - ரூ. 20 ஆயிரம் கோடி, சத்யம் ஊழல் - ரூ. 14 ஆயிரம் கோடி, கால்நடைத் தீவன ஊழல் - ரூ. 900 கோடி” என்றார்.

இந்தியாவில் கறுப்புப் பணம் ஒருபக்கம் பிரச்னையாக இருக்க, மறுபக்கம் கள்ள நோட்டுகளின் புழக்கமும் அதிகரித்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கியின் தகவல்கள் உறுதி செய்கின்றன. இதுகுறித்து பொருளாதார பேராசிரியர் இராம சீனுவாசனிடம் பேசினோம். “கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகளில் புழக்கத்தில் இருந்த தொகை 40 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 76 சதவிகிதமும், 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 109 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் ரூபாய் நோட்டுகளில் 10 சதவிகிதம் கள்ள நோட்டுகளே. சாதாரண மக்களுக்கு அவை அச்சு அசல் நோட்டுகளைப் போலவே தெரியும் அளவுக்கு திறமையாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. தீவிரவாத கும்பலும், போதைப் பொருள் மாஃபியாக்களும் தங்களுடைய பரிவர்த்தனை களுக்கு கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையுமே பயன்படுத்துகிறார்கள்.

p2a.jpg

ஏனெனில் பொதுவாகக் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், கள்ள நோட்டுகள் அடிப்பவர்களுக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கையாள்வதுதான் எளிது. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் ரொக்கமாகவே பணப்பரிவர்த்தனை செய்வார்கள். அவர்களால் வங்கிகள் மூலமோ, வங்கிகளின் சேவை மூலமோ இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாது. இதனால் அவர்களுக்கு ரொக்க பணத்துக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. மேலும் பெரும்பாலான வியாபாரிகளும் கணக்கில் காட்டாத தங்களுடைய பணத்தை மூட்டைகளில் கட்டித்தான் பதுக்கி வைத்திருப்பார்கள். இந்தப் பணமெல்லாம் வங்கியின் பக்கம் போகவே போகாது. இப்போது 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற நிலையில் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. அவை வெறும் காகிதம்தான். இந்திய ஜி.டி.பி-யில் இந்தியாவின் கறுப்புப் பணம் 30 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறது.

தீவிரவாதப் பரிவர்த்தனைகளுக்கு அடுத்து உள்நாட்டுக்குள் பதுக்கப்படும் கறுப்புப் பணம் பெரும்பாலும் பயன் படுத்தப்படுவது, தேர்தல்களில்தான். அதற்கு அடுத்ததாக ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை தங்கம், வைரம், வெள்ளி உலோகங்கள் மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. கறுப்புப் பணத்தினால் ஒரு நாட்டின் வளர்ச்சி குறைந்து, வறுமை மிகுந்து, விலைவாசியும், பணவீக்கமும், வரி விதிப்பும் உயர்கிறது. இந்தியச் சொத்துகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் நம் நாடு வளர்ச்சியையே சந்திக்காத நிலை ஏற்படுகிறது” என்று கூறினார்.

ஆர்வம் காட்டாத அரசு!

இதுவரையில் இப்படி பதுக்கப்பட்ட கறுப்புப் பணம், ஹவாலா முறையின் மூலமே பெரும்பாலும் அந்நிய செலாவணிகளாக மாற்றப்பட்டு அறக்கட்டளைகள் மூலமோ, வெளிநாட்டு முதலீடுகள் மூலமோ வெள்ளையாக்கப் பட்டிருக்கிறது. சில நேரங்களில் வெளிநாடுகளிலேயே நிறுவனங்களாகவோ,  சொத்துகளாகவோ மாற்றப்பட்டு விடுகிறது. அப்படி அம்பலமானவைதான் சமீபத்தில் வெளியான பனாமா பேப்பர்ஸ் ஊழல். இன்னும் சிலர் ரொம்பவே ஸ்மார்ட்டாக அவற்றை விலை உயர்ந்த வைர, பிளாட்டின ஆபரணங்களாக மாற்றி இந்தியாவுக்குள் கொண்டுவந்து விடுவதாக சொல்கிறார்கள்.  

ஆனால், சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல்கள், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் அரசுக்கு கிடைத்தும் அவற்றை கொண்டு கறுப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் எவ்வளவு தகவல்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் பற்றி  வெளியிட்டும் அது வீணாகவேப் போகிறது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த, வருமான வரிச் சட்டம் 1961, வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA), மத்திய கலால் மற்றும் சுங்கவரிச் சட்டம் 1994, சேவை வரிச் சட்டம் 194, வணிக வரிச் சட்டம் என பல சட்டங்கள் இருந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.

- ஜெ.சரவணன்


‘‘கறுப்புப் பணத்தைப் பதுக்கும் இடங்களை ஒழிக்கவேண்டும்!’’

p2.jpgலாயல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் ராமசாமி என்ன சொல்கிறார்?

‘`500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தது குறுகிய காலத்துக்கு நன்மை பயக்கும் நல்லதொரு நடவடிக்கையாகும். கறுப்புப் பணமானது தங்கத்திலும் வைரத்திலும் முதலீடு செய்யப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.  தங்கத்தை வாங்குவதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் பணப் பரிவர்த்தனை அல்லாத வேறு முறைகளை அனுமதிக்க கட்டாயப்படுத்த வேண்டும். பருத்தி விவசாயிகள்கூட தங்களிடம் உள்ள பருத்தியை ஆலைகளுக்கு விற்கும்போது வங்கி மூலம் பணம் பெறுவதற்கான பரிவர்த்தனைகளை ஒப்புக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது  தங்கம் வாங்கும்போது மட்டும் அவர்களால் வங்கி மூலம் பணம் செலுத்த முடியாது என்கிற வாதம் மடத்தனமானது.

மேலும், நாடு முழுவதுமுள்ள நிலங்களுக்கு அதனுடைய உண்மையான சந்தை மதிப்பை எடுத்துச் சொல்லும்படியான டிஜிட்டல் மேப் ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கமானது  நிலத்தை எளிதில் கையகப்படுத்த முடியும். இன்றைக்கு பெரு நகரங்களுக்கு வெளியே நிலத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருப்பதால், கறுப்புப் பணத்தைப் பதுக்க ரியல் எஸ்டேட் என்பது எளிதான வழியாக உள்ளது.

தங்கக் கடத்தல் மூலம் தீவிரவாதிகளுக்குத் தேவையான பணம் எளிதாகக் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. கறுப்புப் பணத்தைப் பதுக்க கடத்தல் தங்கம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கொண்டுவருவதற்கான இறக்குமதி வரியை முற்றிலும் ஒழிப்பதன் மூலமே கடத்தல் மூலம் தங்கம் கொண்டுவருவது தடுக்கப்படும்.

கறுப்புப் பணம் கடத்தல், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. கடத்தல் மூலம் தங்கமானது நம் நாட்டுக்கு வருவதை ஒழித்தால்தான் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியும்.
ஆக மொத்தத்தில், கறுப்புப் புணம் பதுக்கும் இடங்களை ஒழிக்காவிட்டால், கறுப்புப்பணம் ஒரு சிறிய இடைவேளைக்குப்பின் மறுபடியும் விஸ்வரூபம் எடுக்கும்!’’

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.