Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Featured Replies

12494.jpg

 

 

ண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை.
அதனால்த்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர்.
ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி,
மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர்.
எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும்,
அவனால் எவ்வளவுதான் கெட்டித்தனமாகச் சொல்லப்பட்டாலும்,
பொய் தனது சுயரூபத்தை விரைவில் வெளிப்படுத்திவிடும்.
அதனால்த்தான், ‘கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு’ எனும்,
அனுபவப் பழமொழி பிறந்தது.

✤✦✤

அரசியல் கட்டுரையில் எதற்காகப் பொய் பற்றி இவ்வளவு நீண்டவிளக்கம்? என யோசிப்பீர்கள்.
வேறொன்றும் இல்லை, நம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாரின்,
‘இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிட்டிவிடும்.’ என்ற,
தொடர்ச்சியான பொய்பற்றிய யதார்த்த நிலையை உணர்த்தவே இம்முயற்சி.

✤✦✤

புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்தபிறகு சில தலைவர்களுக்கு ஏற்பட்ட கதியை நினைந்து,
உயிர் பிழைத்தாலே பெரியவிடயம் எனக் கருதி வேற்று நாடுகளிலும், கொழும்பிலுமாக,
பாதுகாப்போடு பதுங்கியிருந்தனர் இன்றைய நம் தமிழ்த் தலைவர்கள்.
சிலகாலத்தின் பின்னர் உலகுக்குக் காட்ட ஒரு ஜனநாயக முகமும் தேவை என்று உணர்ந்த புலிகள்,
முன்னர் தாம் எதிரிகளாய்க் கருதிய முன்னால் போராளிக்குழுக்கள் சிலவற்றையும்,
அதுவரை தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாகக் கருதப்பட்ட,
முன்னாள் கூட்டணி உறுப்பினர்கள் சிலரையும் ஒன்றிணைத்து,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பினை உருவாக்கி,
அவ் அமைப்பைச் சார்ந்தோரைத் தேர்தலில் குதிக்க வைத்தனர்.
தமிழரசுக் கட்சியின் தொன்மையையும், சம்பந்தனாரின் மூப்பையும் மனங்கொண்ட புலிகள்,
அவரை இவ் அமைப்புக்குத் தலைவராய் அமர வைத்தனர்.
 
✤✦✤

புலிகளின் அங்கீகாரம், பாராளுமன்றப் பதவி என இரண்டும் ஒருமித்துச் சேர்ந்து வந்ததில்,
அதுவரை புலிகளுக்குப் பயந்து ஒளிந்து திரிந்தோர்க்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
புலிகளின் மக்கள் ஆதரவைத் தமக்காக்கி பாராளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி கொண்டு
புலிகளின் கைப்பொம்மைகளாய் பாராளுமன்றத்துள் சென்று அமர்ந்து,
அவர்கள் பதவிச் சுகம் அனுபவிக்கத் தொடங்கினர்.

✤✦✤

அந்நிலையைத் திடீரெனக் காலம் புரட்டிப் போட்டது.
யாரும் எதிர்பாராத வண்ணம் உலக நாடுகள் ஒன்றிணைந்து புலிகள் அமைப்பை அழித்தன.
புலிகளின் அழிவுக்குப் பின் தமிழர்தம் தலைமை ஆசனம் வெறுமையாய்ப் போய்விட,
தாமே தமிழர்களின் ஏகத்தலைமை என உரைத்து,
ஆடிக்கொண்டிருந்த தமது தலைமை ஆசனத்தை,
காலம் அறிந்து உறுதி செய்து கொண்டனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்.
சம்பந்தனாரும் தான் !

✤✦✤

கூட்டணிக்காலத்தில் அதன் ஆளுமைத் தலைவர்களாய் இருந்த,
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் முன்னிலையில்,
சம்பந்தன் என்றும் தனித்துப் பிரகாசித்ததில்லை.
தமிழரசுக்கட்சி என்று பார்த்தால்கூட,
கிழக்கு மாகாணத்தில் இராஜதுரை போன்ற ஆளுமையாளர்களுக்கு அடுத்த நிலையிலேயே,
சம்பந்தன் முன்பு கணிக்கப்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான பின்பும்,
புலிகளின் கண்ணசைப்புக்கேற்ப இயங்கவேண்டிய நிலையிலேயே அவர் இருந்தார்.
அதனால் பத்தோடு பதினொன்றாக இருக்கும் தலைவராகவே அவர் நிலைமை என்றும் இருந்தது.
அதனால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து,
கட்சிக்கோ இனத்திற்கோ தனித்துத் தலைமை தாங்கவேண்டிய,
ஆற்றலோ அனுபவமோ சம்பந்தனாருக்கு வர வாய்ப்பில்லாமல் போயிற்று.

✤✦✤

திடீரென பொம்மைத் தலைவராய் அன்றி,
நிஜத் தலைவராய்த் தமிழினத்திற்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பை,
அவர் வேண்டாமலே காலம் அவர் மடியில் போட்டது.
ஆனால் அப்போதும் சம்பந்தனுக்கு அதிர்ஷ்டம் வேலை செய்தது.
இறுதிப் போரில் நிகழ்ந்த பேரழிவால் தமிழர்கள் மீது ஏற்பட்டிருந்த உலகநாடுகளின் அனுதாபம்,
முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சில வல்லரசுகளுடனான பகை என்பவை,
ஈழத்தமிழர்க்குச் சார்பாக,
ஆற்றல் தேவைப்படாமலேயே வல்லரசுகளின் வழிகாட்டுதலில் இயங்கக்கூடிய சூழ்நிலை,
அப்போதும் அவருக்கு வாய்த்தது.
கேட்பாரில்லாத பலமான ஓர் சூழ்நிலையில்,
தமிழ்மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் அவர்.

✤✦✤

புலிகளின் அழிவுக்குப் பின்னான ஜனாதிபதித் தேர்தலில்,
மஹிந்தவை எதிர்த்த இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை,
தமிழ்மக்கள் சார்பாக ஆதரித்த அப்போதைய அவரது முடிவு பலராலும் விமர்சிக்கப்பட்டது.
அடிப்பித்தவனை எதிர்ப்பதற்காக அடித்தவனோடு கைகோர்ப்பது சரியாகுமா? என,
பலர் கேள்வி எழுப்பினர்.
ஆனாலும் தனது ஏகத்தலைமை அதிகாரங்கொண்டு அவ் விமர்சனங்களைப் புறந்தள்ளி,
அதன் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போதிய வெற்றி பெற்று,
தன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டார் அவர்.

✤✦✤

அத்தேர்தல் காலத்திலேயே கூட்டமைப்பில் இணைந்திருந்த,
கட்சியினருக்கிடையில் சலசலப்பு ஆரம்பித்துவிட்டது.
வேட்பாளர் நியமனத்தில் தமிழரசுக்கட்சி தம்  இஷ்டப்படி பொருத்தமற்ற வேட்பாளர்களையும் நியமித்து,
அணிக்குள் இருந்த மற்றைக்கட்சியினரின் மனக்கசப்பைச் சம்பாதித்தது.
அதுமட்டுமன்றி கூட்டமைப்பை ஓர் கட்சியாய்ப் பதிவு செய்யவேண்டுமென்ற,
மற்றைக் கட்சிகளின் கருத்தையும் அலட்சியம் செய்த அக்கட்சி,
தாமே தமிழர்தம் ஏகோபித்த தலைமையாளர்கள் என உறுதி செய்ய முனைய,
கூட்டமைப்புக்குள் பிளவுகள் மேலும் பெரிதாகத் தொடங்கின.
 
✤✦✤

சம்பந்தருக்கு வெள்ளி திசை நடந்ததோ என்னவோ?
தொடர்ந்து அவருக்கு ஏற்றத்தின் மேல் ஏற்றம்.
2015 இல் யாரும் எதிர்பாராத வகையில்,
பேரினத்தாரின் தலைமைக்கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து,
மஹிந்தவுக்கு எதிராக நடத்திய அரசியல் புரட்சியில் எதிரணிகளின் கூட்டு வெற்றி பெற்றுவிட,
அக்கூட்டணியை ஆதரித்து மத்திய அரசின் வலிமையில்  தானும் பங்குதாரரானார் சம்பந்தன்.
பேரினக்கட்சிகள் ஒன்றானதால் மூன்றாம் அணித்தகுதி பெற்று,
இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவர் தமதாக்கிக் கொண்டார்.

✤✦✤

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்பதா? வேண்டாமா? என்று குழம்பி,
வலிய நாடுகளின் வழிமொழிவால் அதனை ஏற்கும் நிர்ப்பந்தம் ஏற்பட,
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அப்பதவி அவசியம் எனக்கூறி,
அப்பதவியையும் மகிழ்வோடு அவர் ஏற்றுக் கொண்டார்.

✤✦✤

அடுத்தடுத்து வந்த தலைமைப் பொறுப்புக்களால், 
சம்பந்தன் ஐயா சற்றுத் தடுமாறிப்போனது உண்மையிலும் உண்மை.
யாழ்ப்பாணத்தில் ரணிலுடன் சேர்ந்து மேடையில் சிங்கக்கொடியை ஆட்டிவிட்டு,
பின் அதனைக் காளியின் கொடி என்றதும்,
கூட்டமைப்பு புலிகளால் நியமிக்கப்படவில்லை என்று,
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துப் பேட்டி கொடுத்ததும்,
அவர் தடுமாற்றத்தின் சாட்சிகள்.

✤✦✤

பதவிகள் அடுத்தடுத்து வந்து சேர,
ஒன்றுபட்டதாய்க் காட்டி நின்ற கூட்டமைப்புக்குள்,
மேலும் குழப்பங்கள் உருவாகத் தொடங்கின.
கட்சிக்குள் ஆற்றலாளராய்க் கணிக்கப்பட்ட சுமந்திரனை மட்டும்,
தம் கையாளாய் வைத்துக் கொண்டு கட்சியை இயக்க முனைந்தார் சம்பந்தர்.
 
✤✦✤

இவ்விருவர் தம் கூட்டுத்தலைமை,
தம்மோடு இணைந்த மற்றை அணியினரை என்று மட்டுமல்லாமல்,
தம் கட்சியின் மற்றை உறுப்பினரைக் கூட அலட்சியம் செய்து ஆளத்தொடங்கியது.
ஈழத்தமிழர்தம் பிரச்சினைகள் சம்பந்தமாக உலகநாடுகளுடனும், புலம்பெயர் தமிழர்களுடனும்,
தனியராய்ச் சென்று பேசித் திரும்பிய சுமந்திரனார், அப் பேச்சுக்கள் பற்றிய விபரங்களை,
மாற்றணித் தலைவர்களுக்கோ, தன் அணி உறுப்பினர்களுக்கோ,
ஏன்? தமிழ் மக்களுக்கோ கூடச் சொல்ல மறுத்து அதிகாரம் செய்தார்.
இதனால் பலரது வெறுப்பிற்கும் அவர் ஆளானார்.

✤✦✤

இதற்கிடையில் வடமாகாண சபைத் தேர்தல் வர,
யாரை முதலமைச்சராய் நியமிப்பது? என்ற கேள்வி பிறந்தது.
கூட்டமைப்பில் இணைந்திருந்த கட்சித் தலைவர்கள் பலரும்,
தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிலரும்,
இப்பதவிக்காய்ச் ‘சப்புக் கொட்டத்’ தொடங்கினர்.
மேடைகளில் தமிழினத்திற்காய் தாம் தாம் செய்த தியாகங்களை,(?)
தாமே பறைசாற்றித் தற்புகழ்ந்து இப்பதவிக்காய் வலை விரிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மாற்றுக்கட்சிகளுடனும் தன் கட்சி உறுப்பினர்களுடனும் கலக்காமல்,
முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரத்தை,
தன் கையில் எதேச்சாதிகாரமாய் எடுத்துக் கொண்டார் சம்பந்தனார்.

✤✦✤

தமது கட்சிக்குள் முதலமைச்சர் பதவிக்கு,
தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு,
சமுதாய உறுப்பினர்கள் சிலர் தூண்ட,
கூட்டமைப்புக்குள்ளும், தமது கட்சிக்குள்ளும் எழுந்த சில முரண்பாடுகளை அலட்சியம் செய்து,
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களை,
அப்பதவியை ஏற்க வரும்படி வீடுதேடிச் சென்று அழைத்தார் சம்பந்தர்.
 
முதலில் பெரிய அளவில் ‘பிகு’ பண்ணிய விக்னேஸ்ரவன்,
பின்னர் “அனைவரும் சேர்ந்து அழைத்தால் வருவேன்” என்று கூறி அதன்படியே வந்து,
அனைவரது ஆதரவுடன் தேர்தலில் பெரு வெற்றி பெற்றார்.

✤✦✤

என்ன நடந்ததோ தெரியவில்லை.
திடீரென சம்பந்தன், சுமந்திரன் கூட்டிற்கும்,
முதலமைச்சருக்கும் இடையிலான தேனிலவு முறிந்து போயிற்று.
அப்போது வந்த பாராளுமன்றத் தேர்தலில்,
தான் ஓர் கட்சியால் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் என்பதை மறந்து,
‘தனிப்பட யாரையும் தான் ஆதரிக்கப் போவதில்லை’ என்று முதலமைச்சர் அறிக்கை விட்டார்.
தேர்தல் நேரத்தில் ‘வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என,
கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தை மறைமுகமாய்க் குறித்து இரட்டுற மொழிந்து அவர் பேச,
அவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியை மறைமுகமாய் ஆதரிக்கிறார் என்பது,
பகிரங்க ரகசியமாய்ப் பலருக்கும் அப்போது தெரியவந்தது.
மாற்றணியினருடன் பகைத்து விக்னேஸ்வரனைக் கொணர்ந்த,
சம்பந்தனதும், சுமந்திரனதும் நிலை திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையாயிற்று.

✤✦✤

ஆனாலும் அத்தேர்தலில் கஜேந்திரகுமார் அணி,
ஒரு ஆசனத்தைக் கூடப் பெறாமல் பரிதாபமாய்த் தோற்றுப்போக,
முதலமைச்சரின் முனைப்பு சற்று மழுங்கிப்போயிற்று.
ஆனாலும் எப்போதும் தன்முனைப்பு உள்ளவராகிய அவர்,
கூட்டமைப்பினரை மடக்கப் புதிய வழிகளைத் தேடினார்.
 
‘தமிழ்மக்கள் பேரவை’‘எழுகதமிழ்’ என அடுத்தடுத்து அவர் நடத்திய தாக்குதலால்,
கூட்டமைப்பின் அத்திவாரம் சிறிது ஆடத் தொடங்கியது உண்மை.
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் செயல்களால் எரிச்சலுற்றிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர் சிலர்,
முதலமைச்சரின் எதிர்ச் செயற்பாட்டு அரங்குகளில் தோன்றத் தொடங்கியது இதற்காம் சான்று.
சம்பந்தன், சுமந்திரன் குழுவினர் அரசோடு ஒத்துப்போக நினைந்திருந்த வேளையில்,
அனைத்து விடயங்களிலும் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கி,
தமிழ் மக்களின் உரிமை இழப்புக்களையும், போர் இழப்புக்களையும் திரும்பத் திரும்பக் கூறி,
பின்விளைவுகள் பற்றி சிறிதும் சிந்திக்காமல் மக்களை உணர்ச்சிவயப்படவைத்து,
முதலமைச்சர் மக்கள் ஆதரவை இலகுவாய்ப் பெற்றுக்கொண்டார்.

✤✦✤

இன்றைய நிலையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே,
முதலமைச்சர் மீதான ஆதரவு பெருகி இருப்பது மறுக்கமுடியாத உண்மையாம்.
பயனிருக்கிறதோ இல்லையோ எல்லா விடயங்களிலும் அரசோடு மோதி நிற்கும் முதலமைச்சரை,
பல தசாப்தங்களாக போர்ப்பார்வையாளர்களாக இருந்த தமிழ்மக்களுக்கு நிரம்பப் பிடித்துப் போயிற்று.
அதைப் பயன்படுத்தி அவர் தன்னை தமிழினத்தின் ஓர் தனித்தலைவராய் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

✤✦✤

வரப்போகும் ஏதேனும் ஒரு தேர்தல்தான்,
தமிழ்மக்கள், முதலமைச்சரின் பின் நிற்கிறார்களா?
அல்லது கூட்டமைப்பின் பின் நிற்கிறார்களா? என்பதை அறியத்தரப்போகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி,
அதன் பின்னர் விடுதலைப்புலிகள்,
அதன் பின்னர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என,
வழி வழி சிந்தித்துப் பழகிய தமிழ்மக்கள்,
கடந்த தேர்தலில் கஜேந்திரகுமாரை ஏமாற்றியது போல,
முதலமைச்சரை ஏமாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

✤✦✤

கட்டுரையின் ஆரம்பத்தில் உண்மையின் ஆற்றல் பற்றி உரைத்து விட்டு,
வேறு ஏதேதோ அரசியல் விடயங்களைப் பேசுவதாக நினைப்பீர்கள்.
மேற்சொன்ன அரசியல் விடயங்களை மீட்டிக்கொண்டால்த்தான்,
உண்மை பற்றி நான் சொல்ல வருகிற விடயம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
அதற்காகத்தான் அம் முன்னுரையைச் சொன்னேன்.
இனி விடயத்திற்கு வருகிறேன்.

✤✦✤

கூட்டமைப்பு இனி எங்கள் சொத்து என்றும்,
தன்னோடு இணைந்திருந்த மாற்றணியினரை மதிக்கவேண்டிய அவசியமில்லை என்றும்,
ஆரம்பத்தில்  மகிழ்ந்திருந்தார் சம்பந்தன் ஐயா.
பட்டி, விக்கிரமாதித்தன் போல் இயங்கிய சுமந்திரனும் தானும் நினைப்பது தான்,
இனி கூட்டமைப்பின் தீர்மானம் என முடிவாக்கியிருந்தார் அவர்.
விதி வேறுவிதமாய் விளையாடிற்று.
அவர்கள் கையை எடுத்து அவர்கள் கண்ணிலேயே அது குத்திவிட்டது.

✤✦✤
 
கேட்பார் எவரும் இல்லை எனும் துணிவில்,
எந்தப் பொய்யையும் மக்களிடம் சொல்லிவிட்டு,
அழிவையும், தமிழர்தம் உரிமையையும் பற்றிப் பேசி, 
அப்பொய்களை தேவைக்கேற்ப மூடிக்கொள்ளலாம் என நினைத்த காரணத்தால்,
எந்தவித நடைமுறைச் சாத்தியமும் இல்லை என்பது தெரிந்தும்,
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது,
2016 க்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என அறிக்கை விட்டார் அவர்.
அவரது ‘சத்தியவாக்கை’ நம்பி தமிழ் மக்களும்,
தமது முழுமையான ஆதரவைக் கூட்டமைப்புக்கு வழங்கினர்.
இன்று அவர் வழங்கிய காலக்கெடு, முடியும் நிலையை எய்திக்கொண்டிருக்கிறது.
காலக்கெடு கிட்டக்கிட்ட அளித்த வாக்குறுதிக்கான புதிய புதிய வியாக்கியானங்கள்,
அவரிடமிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

✤✦✤

எங்கள்  தலைவர்களுக்கு இறுதிக்கட்டத்தில்தான் ஞானம் வருகிறது.
மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில்,
அறுபது வீதத்தைச் செலவழிக்காமல் இருந்துவிட்டு,
பதினொரு மாதத்தில் செலவழிக்காத தொகையை,
ஒரே மாதத்தில் செலவழித்து விட்டதாய் முன்பு அறிக்கை விட்டார் முதலமைச்சர்.
அதே போல காலக்கெடு முடியம் வரை ‘ஹாயாய்’ இருந்து விட்டு,
இன்று அது முடியப் போகும் நிலையில்த்தான்,
சம்பந்தனார்க்கும் ஞானம் உதிக்கத் தொடங்கியிருக்கிறது.
எந்தக் காரியமும் இதுவரை நடக்கவில்லை என்றும்,
தந்த வாக்கை செயற்படுத்தத் தவறின் அரசோடு மோதுவோம் என்றும்,
அண்மைக்காலமாய் அடுத்தடுத்து அவர் விடும் அறிக்கைகளைக் காண,
நகைப்புத்தான் வருகிறது.
சம்பந்தர் சொன்ன காலக்கெடு முடிய இருக்கும் நாட்களை எண்ணி,
இளைஞர் படை ஒன்று முகநூலில்  ‘கவுண்ட்டவுண்’ செய்ய ஆரம்பித்திருக்கிறது.
பூனை மெலிந்தால் எலிகள் சுகம் கேட்கத்தான் செய்யும்.

✤✦✤

பாரளுமன்றத்தை அரசியல் அமைப்புச் சபையாய் மாற்றி,
அச்சபையின் கீழ் ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு,
அக்குழுக்களின் சிபாரிசுகள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட அளவில் மட்டுமே,
முன்னேற்றம் நிகழ்ந்நிருக்கிறது.
வரும் 19 ஆம் திகதி அரசியலமைப்புச் சபையாய்க் கூடவுள்ள பாராளுமன்றத்தில்,
மேற்படி குழுக்களின் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டபின்,
வரும் ஜனவரி 10 இல் புதிய அரசியல் அமைப்பை அறிமுகம் செய்யப்போவதாய்,
பிரதமர் அறிவித்திருக்கிறார்.
சட்டமாய் வர இன்னும் பல ‘கண்டங்களை’ தீர்வுத்திட்டம் தாண்டவேண்டியிருக்கும் என்பது நிச்சயம்.
இனப்பிரச்சினைத் தீர்வில் காலத்தை இழுத்தடிக்கும்,
இத்தகு முயற்சிகள் பலவற்றைத் தமிழினம் ஏற்கனவே கண்டுவிட்டது.
கோழி கொக்கரிப்பதோடு விடயம் முடிந்து போகுமா? அல்லது
முட்டை கைக்கு வருமா? என்பதற்கான பதிலை காலம்தான் சொல்லவேண்டும்.

✤✦✤

பெரும்பாலும் சம்பந்தர் சொன்ன காலக்கெடுப்பொய் உடையப்போகிறது.
முன்பாயிருந்தால் வேறொரு பொய்யைச் சொல்லி,
அவரும் அவரைச் சார்ந்தோரும் கொஞ்சம் கூட நாணம் இல்லாமல்,
இன்னொரு காலக்கெடுவை உறுதிபட உரைத்து,
மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றத் துணிந்திருப்பார்கள்.
இனி அதற்கும் வாய்ப்பில்லை.
ஏகத்தலைமை என்ற நிலை மாறி மாற்றணி ஒன்று வளரத் தொடங்கியிருக்கும் நிலையில்,
தொடர்ந்து அவர்கள் உரைக்கப்போகும் பொய்கள் அவர்களைப் பலயீனப்படுத்தப் போவதோடு,
மாற்றணியினரைப் பலப்படுத்தப் போவதும் நிச்சயம்.

✤✦✤

இவ்விடத்தில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
கூட்டமைப்பினராயினும் மாற்றணியினராயினும்,
ஓர் உண்மையை அவர்கள் மறக்காதிருப்பது அவசியம்.
முறைப்படியான அரசியலுக்குள் நுழைந்து விட்டாலும்,
தம்மை இந்நாட்டிலுள்ள மற்றைய அரசியல்வாதிகளைப் போல,
இவர்கள் நினைத்துக் கொண்டால் அது மாபெரும் தவறாகும்.
முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து முடிந்த உரிமைப்போரில் நிகழ்ந்த,
உயிரிழப்பு, உறவிழப்பு, உடைமையிழப்பு, உறுப்பிழப்பு என,
கணக்கிடமுடியாத இழப்புக்களின் எண்ணிக்கை ஒருபுறம்.
இப்போரால் சிதைந்துபோன கலை, கலாசார பண்பாட்டுச் சமூகச் சிதைவுகள் ஒருபுறம்.
இறுதிப்போரில் நிகழ்ந்த எண்ணற்ற ஏக்கம் தரும் கொடுமைகள் ஒருபுறம் என,
இவை அனைத்தாலும் இடப்பட்ட அத்திவாரத்திலேயே,
இன்றைய தமிழர்தம் அரசியற் கட்டிடம் எழுப்பப்படுகிறது என்பதே அவ் உண்மையாம்.

✤✦✤

வெறும் வார்த்தைகளில் மட்டும் கண்ணீர் வடித்துக் கொண்டு,
வஞ்சனையாய் பதவிச் சுகம் தேட முனையும் நம் தலைவர்கள் யாராயிருந்தாலும்,
நிச்சயம் அவர்கள் இனத் துரோகிகளாகவே மக்களால் கருதப்படுவார்கள்.
பொய் உரைப்பதற்கு அரசியலில் அங்கீகாரம் உண்டு என இவர்கள் நினைத்தால்,
நிச்சயம் தவறிழைத்தவர்கள் ஆவார்கள்.
இன்றைய நிலையில் உறுதி இல்லாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து,
அரசியற் செல்வாக்குப் பெற நினைப்பதை விட மூடத்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது.
வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால்,
கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி பொய் வளர்க்கவே முயன்று நிற்கிறது.
புதிதாய்க் கிளம்பியிருக்கும் மாற்றணியும் இப்பொய்மையை நம்பியே இருப்பதாய்ப்படுகிறது.

✤✦✤

அரசோடு மோதுவதாய்க் காட்டி தம்மை வளர்த்து வரும்,
முதலமைச்சர் தலைமையிலான மாற்றணியினர்கையில் நாளை அதிகாரம் வந்தால்,
அவர்களால் மட்டும் கூட்டமைப்புச் செய்யாத எதைச் செய்துவிடமுடியும்? எனும் கேள்விக்கு,
அவர்களிடம் பதிலேதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
இது முடிவு! இது அம்முடிவை அடைவதற்கான வழி!
இது அவ்வழியில் பயனிக்க நம்மிடம் இருக்கும் பலம்! என,
நியாயபூர்வமாய்த் தமது வாதங்களை அவர்களால் முன் வைக்க முடியுமா?
அவர்களும் பொய்மையைப் பொய்மையாலேயே வெல்லப் பார்த்து நிற்கின்றனர்.
இப் பொய்த் தலைவர்கள் தம்முடைய பொய் வழியை மாற்றத் தவறின்,
மக்களால் என்றோ ஒரு நாள் நிச்சயம் தூக்கி எறியப்படுவார்கள்.
அதற்குள் இன்னும் என்னென்ன பேரழிவுகள் நிகழப்போகின்றதோ?

✤✦✤

ஒராண்டில் பிரச்சினைக்குத் தீர்வு வரும் என்று சம்பந்தனார் சொன்னபோது,
அதன் சாத்தியப்பாட்டைப் பற்றி ஆராயாமல் அதனை நம்பியதும் ஆதரித்ததும் நம் குற்றம்.
ஏமாற்றுகிறவன் மட்டுமல்ல ஏமாறுகிறவனும் குற்றவாளிதான்.
பலதசாப்தங்களாய் புரையோடிப்போய்க்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு
மந்திரத்தால் மாங்காய் விழுத்துவது போல,
ஒரே ஆண்டில் சம்பந்தனார் தீர்வைக் கொண்டுவருவார் என நம்பியிருந்தால்,
நம்மைப் போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இருக்கமுடியாது.
உண்மை, பொய்களை ஆராயத் தெரியாமல்,
தலைவர்களின் வாக்கை வேதவாக்காய்க் கொண்டு அங்கீகரிக்கும் மூடத்தனத்தை,
தமிழினம் என்று தொலைக்கிறதோ அன்றுதான் நம் இனம் உருப்படும் என்பதில் ஐயமில்லை.

✤✦✤

முடிவாக ஒன்றைச் சொல்லவேண்டும்.
மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரைக்கும் தலைவர்களின் நாடகம் தொடரப்போவது நிச்சயம்.
இன்று நேற்றல்ல கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்த நாடகம்தான் நடந்து கொண்டிருகிறது.
அவ்வப்போது பாத்திரங்கள் மாறியிருக்கின்றன அவ்வளவும்தான்.
கதை, வசனம், இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.
மக்கள் இவ் உண்மையை உணராமல்,
புதிய பாத்திரம் வந்ததும் புதிய நாடகம் வந்துவிட்டதாய் ஏமாந்து,
முடிந்த நாடகத்தையும், பழைய நடிகரையும் தூற்றி,
புதிய நாடகத்தையும், புதிய நடிகரையும் ஏற்றி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலை மாறத்தவறின் ஈழத்தமிழர்களின் கதி அதோகதிதான்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.