Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவிலிருந்து வந்த அத்தான்

Featured Replies

அமெரிக்காவிலிருந்து வந்த அத்தான் - லட்சுமி ராஜரத்தினம்

 

’நாளைக் காலையில் நாம் கொடைக்கானல் கிளம்புகிறோம்; தயாராக இரு.’ ‘உண்மையாகவா?’ இதழ்களை சற்றே விரித்துக் கண்கள் மலர அவளிடம் வசந்தி கேட்டாள். மகிழ்ச்சியில் அவன் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். இரவின் உறக்கம் அவளைக் கொடை ஹில்லின் நினைவுடனேயே தழுவுகிறது.

’என்ன இப்பொழுதே இப்படி நடுங்குகிறாயே? இந்த ஸீஸனில் அவ்வளவு குளிர் கிடையாது. இது செகண்ட் ஸீஸன்..’ ப்ரெஞ்ச் ஸீசன் என்று பெயர்.’

கொடைக்கானல் மலையின் ‘ரிசர்வ்’ செய்யப்பட்ட அறையில் இருவரும் தங்கி இருந்தார்கள். அவளுடன் பேசும் பொழுது, அவளுக்குத் தெரிந்த ஒன்றை விளக்கும் பெருமை அவனிடம் பொங்கி வழிந்தது. எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்ளும் திறமையை விட, அதை விளக்கும் பொழுது ஏற்படும் கர்வமே அதிகம் அவனுக்கு.

கண்ணாடி சன்னலின் வழியாக வந்த கலரில் உள்ள குரோட்டன்ஸ் பூக்கள் அசைந்தாடுவது தெரிந்தது. சிவந்த பூக்களின் நடுவில் பூத்த அடர்ந்த மகரந்தக் குமிழ்கள். அவைகள் கருப்பாக இருக்கின்றன என்பதனால் கறுப்பாக இருக்கின்றன என்பதனால் பூக்கள் வெட்கப்படவில்லையா?’ தனக்குள் அவள் சிரித்துக் கொண்டாள். சிவந்த இதழ்களினால் ஒரு வட்டத்திற்கு அழகா, அல்லது கருவட்டத்தினால் இதழ்களுக்கு அழகா? கரு வட்டத்தினால் மலருக்கு அழகு தான் கூடுகிறது. அவர்கள் வாழ்க்கையில் யார் கருவட்டம்?

தூரத்தில் மலையின் அடிவாரத்திலிருந்து வைகை மணலும், பச்சைப் பசுமையும் கண்ணுக்கு விருந்தாய் அமைந்த காட்சியைக் கால்களில் செருப்பு மின்ன மலையில் நடந்து ரசித்த அவர்கள், இரவின் குளிரில் அறைக்குத் திரும்புகின்றனர். இனந் தெரியாத காட்டுச் செடியின் மணம் ‘கம்’மென்று நாசியில் மோதிற்று.

‘நாம் இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு ‘போட்டிங்’ போகப் போகிறோம்’.

‘வேண்டாம், ஸ்ரீகாந்த். இந்தக் குளிரில்..’ தனிமையில் இருக்கும் பொழுது அவனைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்ற அவனுடைய ஆசையை மீற முடியாமல் அப்படி அழைத்தாள் வசந்தி.

இரவு அமைதியின் உறக்கத்தின் நடுவில் வரும் இனிமையான கனவாய் மலர்கிறது அந்த போட்டிங் காட்சி. முகம் கூப்பிய தாமரைகளை கைகளை நீட்டிப் பறித்த வசந்தி ஒவ்வொரு இதழாகப் பிரித்தாள்.

இரவின் மோனத் துடிப்பில், கானடாவின் இனிமையைக் குழைத்து, இதயத்தையே பிழிந்தவாறு ஸ்ரீகாந்தின் பாடல் மலைகளின் மீது ஒலிக்கிறது. ஏதோ ஒரு சக்தி பிடித்து இழுப்பது போல் பாடினான் அவன்.

அவனுடைய குரலில் அவளுக்கு என்றைக்குமே ஒரு பிரேமை. அவளுடைய உள்ளத்தில் எங்கோ நிரம்பி இருக்கும் இனிமையைத் தொடுகிறது அவனுடைய குரல்!

போட்டிலிருந்து கரை ஏறுவதற்குக் கையை கொடுத்து உதவினான் ஸ்ரீகாந்த்.

‘ஹலோ, வசந்த்!’ குரலுடன் கூட மெல்ல, செல்லமாக முதுகில் பட்ட அடியுடன் இனிமையான கனவில் இருந்து விழித்துக் கொண்டாள். எதிரில் முரளி – அவள் அத்தான் – நின்று கொண்டிருந்தான்.

’அத்தான், நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?’

‘நான் அமெரிக்காவிலிருந்து போன வாரம் தான் திரும்பினேன். இன்னும் ஒரு வாரத்தில் பம்பாய் போய் வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கம்பெனியின் பொறுப்பு ஐயா கையில்..’

வசந்தி தன் கணவருக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். ஒப்புக்காக வணக்கத்தைத் தெரிவித்த ஸ்ரீகாந்திற்கு முதல் பார்வையிலேயே முரளியைப் பிடிக்கவில்லை. வசந்தியுடன் சளசளவென்று பேசிவிட்டு மறுநாள் சந்திப்பதாக கூறிப் போய்விட்டான் முரளி.

‘இவன் நம்முடைய திருமணத்திற்கு வரவில்லை, இல்லையா?’

‘அப்பொழுது இவர் அமெரிக்காவில் இருந்தார். அதனால் வரவில்லை.’

இருளின் கருமையில் ஸ்ரீகாந்தின் முகம் தெரியவில்லை வசந்திக்கு.

குறிஞ்சி ஆண்டவரைத் தரிசிக்க இருவரும் கிளம்பிய பொழுது மூக்கில் வியர்த்தது போல் ஓடி வந்து தொற்றிக் கொண்டான் முரளி. அவனது வருகை ஸ்ரீகாந்திற்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வசந்தி தவித்தாள். அது அந்த அமெரிக்க ரிட்டேனுக்குப் புரிந்ததா? மலையிலிருந்து கீழே இறங்கியபோது, ‘வசந்தி, நீ ஏன் முரளீயைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ திடீரென்று கேட்டு விட்டான்.

‘நாங்கள் இருவரும் ஒன்றாய் வளர்ந்தவர்கள். எங்கள் மனதில் சகோதர பாசமே உருவாகி இருந்தது. இருந்தாலும் என் அத்தைக்கு என்னையே தன் மகனுக்கு மணந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் என் அப்பாவுக்கு நான் ஒரே பெண் ஆனதால், அத்தானை மணந்தால் நானும் அமெரிக்கா சென்று விடுவேன். தன்னுடைய கடைசி காலத்தில் என்னைப் பார்க்க முடியாமற் போய் விடுமோ என்று அஞ்சி அவருக்கு என்னைத் தர விருப்பம் இல்லை.’

சென்னை வந்து சேர்ந்ததும் அவர்கள் சுமுகமாகவே இல்லை. ஸ்ரீகாந்தின் மனத்தில் ‘முரளி அமெரிக்கா போகாமல் இருந்தால், வசந்தியின் அப்பா அவனுக்கு அவளைத் தந்திருப்பாரோ?’ என்ற எண்ணமே வாட்டி வதைத்தது.

அத்துடன் முரளி பம்பாயிலிருந்து அடிக்கடி ‘டூர்’ என்ற பெயரில் சென்னையில் வசந்தியின் வீட்டிற்கு  வருவது வழக்கமாகிவிட்டது.

ஒரு நாள் ஸ்ரீகாந்த், வசந்தியிடம், ‘முரளி ‘டூர்’ என்ற பெயரில் இங்கு வருவது எனக்குப் பிடிக்கவில்லை; இனிமேல் அவன் வரக் கூடாது என்று சொல்லி விடு!’ என்று சீறிச் சொன்னான்.

’நீங்கள் சொல்லுவது சரியா, என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். டெல்லியில் நாங்கள் என் அப்பாவின் வீட்டில் ஒன்றாய் வளர்ந்தவர்கள். தூக்கி எறிந்தாற்போல் எப்படிச் சொல்லுவது?

‘நீ சொல்லப் போகிறாயா, இல்லையா?’

‘நான் சொல்ல மாட்டேன். அவரை ‘வராதே’ என்று சொல்லுகிற ஒரு சொல் என்னைச் சந்தேகப்படுவது போல இருக்கிறது. அதற்கு உன்னையே சந்தேகப்படுகிறேன் என்று சொல்லிவிடலாமே?’

’இவ்வளவு ஒட்டுறவுடன் பேசும் நீ முரளியையே மணந்து கொண்டிருக்க வேண்டும்’.

 

scan0003a.jpg

 

 

இனிமையான வீணையின் தந்தி அறுந்தது போல், உடைந்த வீணையாகக் காட்சி அளித்தது வீடு. இருவரும் பேசாமல், தங்கள் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தனர். அவனுடன் பேசுவதற்கு வசந்தி செய்த முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை.

இரண்டொரு நாட்கள் சென்ற பின் ஒரு நாள் ஸ்ரீகாந்த் தன் பீரோவைத் திறந்து ஏதேதோ தேடிக் கொண்டிருந்தான். பீரோவினுள் இருந்த சாமான்கள் எல்லாம் வெளியே வந்து விழுந்தன. அவன் தேடிய பொருள் கிடைக்கவில்லை.

சுவரைப் பார்த்தவாறே, ‘இங்கே ஒரு ஃபைல் வைத்திருந்தேன். பார்த்தாயா, வசந்தி?’

சுவரில் மாட்டியிருந்த காந்தி, புத்தர், விவேகானந்தர், பரமஹம்சர் ஆகியோருடைய படங்கள் எல்லாம் சேர்ந்து அவனைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

‘இந்தப் பைல் தானே கேட்டீர்கள்? இதோ…..’

‘இதைப் படித்தாயா, வசந்தி?’

‘படித்தேன். கணவன் – மனைவி ரகசியம் கூடாது. இதை நீங்கள் ரகசியமாய் வைத்திருந்தாலும், தவறுதலாக என் கையில் கிடைக்கும்படி வைத்துவிட்ட சந்தர்ப்பத்தினால் நான் படித்தேன்.’

கோயில் சிலையாய் அவள் முகம் படிந்திருந்தது.

அவன் மெல்லச் சொன்னான்.

‘எனக்கும் இக்கடிதம் எழுதிய பெண்ணுக்கும் சந்தர்ப்ப வசத்தினால் கல்யாணம் நடைபெற முடியவில்லை.’

‘நான் முரளியை சகோதரனாகப் பாவிப்பதினால் எங்கள் திருமணம் நடைபெறவில்லை!’

‘இக்கடிதங்களினால் நீ என்ன நினைக்கிறாய்?’

‘நான் நினைப்பது என்ன? உங்களை விட பெரிய பதவியும், பணக்காரனாக இன்னொரு வரன் கிடைத்துவிட்டதனால் உங்களை அவள் மறந்துவிட்டாள்!’

‘உண்மைதான்; நான் அவளால் ஏமாற்றப்பட்டேன், வசந்தி, இருந்தாலும் அவன் உன்னுடன் சகோதரனாகப் பழகினாலும், அவன் உன்னுடைய அத்தான் என்ற நினைவுதான் எனக்கு அவனைப் பார்க்கும் பொழுது வருகிறது.’

‘அது சரி, இந்தக் கடிதங்களில்…காதலன் – காதலியாய் பழகி இருக்கிறீர்கள்…சந்தித்தீர்கள்…அதற்கு என்ன சொல்கிறீர்கள்?’

‘ஐயோ, வசந்தி அதுதான் சந்தர்ப்பம் சதி செய்து விட்டதே! ஆனால் அவளையே நினைத்து ஏங்கவில்லை. இதை நீ புரிந்து கொள் வசந்தி.’

‘நான் இந்தக் கடிதங்களைப் படித்ததினால் தங்களை வெறுக்கிறேன் என நினைக்காதீர்கள். உங்கள் காதலியை போல் ஏமாற்றுபவள் கோடியில் ஒருத்திதான் இருக்க முடியும்’.

‘நான் அவளுக்கு எல்லா உரிமைகளும் திருமணம் ஆகுமுன்பே கொடுத்து இருந்தேன். என்னை அவள் ஏமாற்றிவிட்டாள்.’

இகழ்ச்சியாகச் சிரித்தாள் வசந்தி, ‘உரிமையை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்தது உடைமை. ஒரு பெண்ணும், ஒரு ஆணும் ஒருவரையொருவர் தங்களை மற்றவர்களுக்குத் தருவது உடைமை. ஆம்; அது வெறும் உமி அல்லது பதர். அதற்கு அரிசி என்ற உயிர்ச் சத்து வேண்டுவது போல் திருமணம் நிகழ்ந்தால்தான் உரிமை கிடைக்கிறது.’

‘அந்த உரிமையின் பெயரில் தான் உன்னுடைய அத்தான் இங்கு வரக் கூடாது என்று சொன்னேன்’ என்றான் அவன்.

‘என் அத்தான் யாரோ ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறானாம். அவன் கல்யாணம் வெகு விரைவில் நடக்கப் போகிறது. சகோதரியாய் வந்து இருந்து என்னைக் கல்யாணத்தை நடத்தித் தரச் சொல்லி இருக்கிறான்.’

‘அப்படியா?’

ஸ்ரீகாந்தின் குரலில் ஆச்சரியம். அமைதிப்பெருமூச்சாக வெளிப்பட்டது.

‘இந்தக் கடிதங்களைப் பற்றியோ உங்கள் செய்கைகளைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. இவை இளமையின் பிதற்றல்கள் என எனக்குத் தெரியும்’ என்றாள் அவள்.

இளமையின் செயல்கள் பூவில் கருவட்டம். அது பூவைப் பொறுத்தவரை அதன் வளர்ச்சிக்கு உதவும் மகரந்தக் குமிழ்கள். அதன் மீது படிந்த கறையோ, வெறுமையோ பூவின் வளர்ச்சியைத் தான் பாதிக்கும். ஆனால் மற்றவர்களுக்கோ அதன் கறை தெரியக் கூடாது. முழுப்பூவின் ஒளிக்கதிர்களோடு கூடி ஒளிச்சிதறல்கள்தான் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் பூவின் அழகு தெரிய முடியும். அதன் அருமையையும் அறிய முடியும்.’

‘உன் விளக்கம் என் இதயமெல்லாம் அமைதியை நிரப்பி விட்டது. இனி…இனிச் சலனத்திற்கு இடம் இல்லை வசந்தி!’ ஸ்ரீகாந்த் சொல்லிவிட்டு பச்சைக் குழந்தை போல அவள் மீது துவண்டான்.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.