Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம்

Featured Replies

ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம்
 

article_1481610632-jya-new.jpg- கே.சஞ்சயன் 

இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது.  

இந்தளவுக்கும், ஜெயலலிதா ஒன்றும் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளரோ, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தீவிரமான ஆதரவை அளித்து வந்தவரோ இல்லை.  
1980 களின் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற போது, தமிழ்நாடு தான், அதன் பின்தளமாக விளங்கியது. போராட்டத்துக்கான வளங்களும் அங்கிருந்தே கிடைத்தன. பயிற்சிகளும் அங்கேயே அளிக்கப்பட்டன. அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கும் அங்குதான் அடைக்கலம் அளிக்கப்பட்டது.  

தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையில் இருந்த பூர்வீக உறவும் தமிழர் என்ற உணர்வும் சிங்களப் பேரினவாதிகளின் அடக்குமுறைகளும் தான், தமிழ்நாட்டின் கரிசனைப் பார்வை, ஈழத் தமிழரின் போராட்டத்தின் மீது திரும்பியதற்குக் காரணமாகும்.  

ஈழத்தமிழர் விவகாரம், தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியளவுக்கு உணர்வுபூர்வமான விவகாரங்களில் ஒன்றாக இருந்ததால், அங்குள்ள அரசியல் கட்சிகளும் போட்டிபோட்டு ஆதரிக்கும் நிலை ஒன்றும் உருவானது.   
அதற்காக, தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் அரவணைப்பை முற்றிலும் சுயநலத்துடனானது என்று, குறுகிய நோக்கில் கொச்சைப்படுத்தி விட முடியாது.  

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு முழு ஆதரவையும் அளித்திருந்தார். அவர் விடுதலைப் புலிகளை அரவணைப்பதில் கூடுதலாக ஆர்வம் காட்டினார்.  
அதேவேளை, தி.மு.க தலைவர் கருணாநிதி ரெலோ மீது பரிவும் பாசமும் கொண்டிருந்தார்.  

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்ட தலைமைத்துவக் குழப்பங்கள், இலங்கையில் இந்தியத் தலையீட்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவற்றினால், அ.தி.மு.கவின் கரிசனை ஈழத்தமிழரின் மீது குறைந்து போனது. அந்தச் சந்தர்ப்பத்தை தி.மு.க பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.  
எனினும், 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலாவது முறை முதலமைச்சராகப் பதவியேற்ற போது, ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னரான சூழல் என்பதால், அவரது ஆட்சியில் ஈழத்தமிழருக்கு எதிரான, கடுமையான நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  

தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் கடுமையான அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. தமிழ்நாடு சென்ற ஈழத்தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலையும் காணப்பட்டது.  
காலப்போக்கில் அந்த நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஈழத்தமிழருடனும், அவர்களின் போராட்டத்துடனும் ஜெயலலிதா நெருங்கி வந்திருக்கவில்லை.  

விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரையில், அவர்களுடன் ஜெயலலிதா நெருக்கத்தை ஏற்படுத்தவுமில்லை. அவ்வாறான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கவுமில்லை.  
இறுதிக்கட்டப் போர், முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது தான், ஜெயலலிதாவின் அணுகுமுறையில், கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 

அப்போது, அவர் ஆட்சியில் இருக்கவில்லை. ஆனால், இலங்கையில் நடந்து கொண்டிருந்த போரை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். அதேவேளை, தனித் தமிழீழம் மட்டும்தான் தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வாக அமையும் என்றும் பிரசாரங்களைச் செய்தார். 

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் தீவிர கரிசனை காட்டத் தொடங்கினார். அவரது ஆளுமை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுவதற்கும் அந்த மாற்றம் வழியேற்படுத்தியது.  
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், ஜெயலலிதாவின் புகழும் செல்வாக்கும் தமிழ்நாட்டையும் தாண்டிப் பரவத் தொடங்கியது.  

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்துடனும், இலங்கை அரசாங்கத்துடனும் முட்டி மோதினார்.  

ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் போர்க்குற்றம் இழைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அப்போதைய மஹிந்த அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின.  

இந்தத் தீர்மானங்கள், ஜெயலலிதாவை நோக்கி ஈழத்தமிழர்களை ஈர்த்து வந்தது. போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டு மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்தவர் அவர். மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, குன்னூரிலும் தாம்பரத்திலும் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்பித் தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தியவர்.  அதற்குப் பின்னர், இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அறவே இல்லாமலும் செய்திருந்தார்.  

இராஜதந்திர, சட்ட நெறிமுறைகளை மீறாமல் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக, நடைமுறைப்படுத்துவதில் ஜெயலலிதா உறுதியான போக்கை வெளிப்படுத்தினார்.  இலங்கை அரசாங்கத்துக்கும் சிங்கள மக்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜெயலலிதாவின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.  

அதனால், அவரை எப்படியாவது தமக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்வதற்கும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் பெரும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தன.  

ஈழத்தமிழர்கள் மீது ஜெயலலிதாவின் கவனம் இன்னும் அதிகமானதற்குக் காரணம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைப்பதற்கு எடுத்த முடிவாகும். அதற்குப் பின்னர், அவர்களை விடுதலை செய்வதற்கு, சட்டத்துக்குட்பட்ட வாய்ப்புகள் அனைத்தையும் அவர் பயன்படுத்தி முயற்சிகளை முன்னெடுத்து வந்தார்.  

இது ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி, தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் கூட அவரை நோக்கித் திரும்ப வைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் ஆட்சிமுறை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. சாதாரண மக்களை நோக்கி அவரது கவனம் ஒன்று குவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் மீதும் கரிசனைகள் காட்டப்பட்டன.  

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள், சிக்கல்களைத் தீர்த்து வைத்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் பங்கீட்டு வசதிகளையும் முகாம்களில் உள்ள அகதிகளுக்கும் பெற்றுக் கொடுத்தவர்.  

அதுமட்டுமன்றி, இலங்கை அகதிகள் நீண்டகாலத்துக்குப் பின்னர் கௌரவமாக வாழக்கூடிய நிலையும் ஜெயலலிதா ஆட்சியில்தான் ஏற்பட்டது.இவையெல்லாம், அவரது ஆட்சியின் பிற்காலப் பகுதியில் ஈழத்தமிழருடன் நெருக்கத்தை அதிகப்படுத்தின.  

இருந்தாலும், இலங்கைத் தமிழ் அரசியலுடன் ஜெயலலிதாவுக்கு அவ்வளவு நெருக்கம் ஏற்படவில்லை என்பது உண்மையே.  
உதாரணத்துக்கு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வவரன் பொறுப்பேற்ற பின்னர், கடைசி வரையில் அவர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசவேயில்லை. இந்தக் காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் கூட அவ்வாறே பேசுகின்ற நிலை ஏற்படவில்லை.  

ஈழத்தமிழ் அரசியலுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பான களம் ஒன்று காணப்பட்ட போதிலும், அதனை இரண்டு தரப்பும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  
கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றபோது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பமும் வெளியிட்டிருந்தார்.  
அப்போதுதான், ஜெயலலிதா ‘விரைவில் சந்திப்போம்’ என்று பதில் அளித்திருந்தார். எனினும், அதற்கான காலம் கனிவதற்கு முன்னரே ஜெயலலிதாவின் மறைவு இடம்பெற்று விட்டது.  

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஈழத்தமிழர்களின் மீது பரிவு கொள்வதற்கு யாருமில்லை என்ற இறுமாப்பு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் காணப்பட்டது.  

அப்போது, அந்த இறுமாப்புவுக்குச் சவால் விடுத்தவர் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் அந்த எதிர்க்குரல், இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான சவாலாகவே இருந்தது.   

தமிழ்நாட்டின் ஆதரவு தமிழர்களுக்கு இருக்கிறது; குறிப்பாக ஜெயலலிதாவின் ஆதரவு இருக்கிறது என்ற ஒரு மறைமுக கவசம் இப்போதும் இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்கின்றது.  
அதற்காக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், அடக்குமுறைகள் முற்றாகவே கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று அர்த்தமில்லை.   

இப்போது, ஜெயலலிதாவின் மறைவினால் ஈழத்தமிழர்களுக்கு இருந்து வந்த அந்த மறைமுக கவசம் உடைந்து போயிருக்கிறது. இது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை, காலஓட்டத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும்.  

தாயகத்திலும் தமிழர்கள் வலுவாக இல்லாத நிலையில், தமிழகத்திலும் ஜெயலலிதா போன்ற ஒரு வலுவான தலைமை இல்லாத நிலை தோன்றியிருப்பது தமிழர்களுக்கு துரதிஷ்டம் தான்.    

- See more at: http://www.tamilmirror.lk/187965/ஜ-யலல-த-ந-ரப-ப-ம-ட-ய-த-வ-ற-ற-டம-#sthash.lJcppeSb.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.