Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கழுகிற்கும்_உந்துதல்_அவசியமே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது..அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது

.கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும். தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் ’எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.முட்டைப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சி ஆக மாறுகிறது என்பதை உயிரியல் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நேரடியாகப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த முட்டையில் இருந்து வெளியே வர அது முயலும் கட்டத்தில் அதையே எந்தத் தொந்திரவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கச் சொல்லி விட்டு அவர் வெளியே சென்று விட்டார். அந்த முட்டைக் கூட்டிலிருந்து வெளியே வர அந்தப் பூச்சி படும் பாட்டைக் கண்ட ஒரு மாணவனுக்கு மனம் இரங்கியது. அந்தப் பூச்சி கஷ்டப்படாமல் வெளியே வர ஏதுவாக அந்த முட்டைக் கூட்டை உடைத்து விட்டான். அந்தப் பூச்சி சிறிது நேரத்தில் இறந்து போயிற்று

.திரும்பி வந்த ஆசிரியரிடம் நடந்ததை மாணவர்கள் கூறினார்கள். ஆசிரியர் அந்த மாணவனிடம் சொன்னார். “அந்த முட்டையில் இருந்து வெளியே வர அந்த வண்ணத்துப் பூச்சி செய்யும் கடும் முயற்சியில் தான் அதன் சிறகுகள் பலம் பெறுகின்றன. அது வண்ணத்துப் பூச்சியாக மாற அந்த கஷ்டப்பட்டு செய்யும் முயற்சிகள் உதவுகின்றன. நீ அந்த கடும் முயற்சியை நிறுத்தியதன் மூலம் அது வண்ணத்துப் பூச்சியாக உருவாவதையும் தடுத்து விட்டாய்”வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல. கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி அதிலிருந்து மீள்வது என்று கற்றுக் கொள்வது தான் அந்தக் கஷ்டங்களை வெற்றி கொள்ளும் வழி. ”கஷ்டங்களே தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வது “வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வதற்கு சமம். பெற்றோர் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம். ஆனால் வழிநெடுகக் கூடப் போய் அவர்களைப் பலவீனர்களாக்கி விடக்கூடாது.

எப்போதுமே அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறவர்களாக இருத்தி விடக்கூடாது. பெற்றோர்களே! நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அவரவர் கால்களில் நிற்கும் காலம் வந்த பின்பும் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால் தாய்க்கழுகைப் போல உங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி.

இளைஞர்களே! பெற்றவர்களுடைய தயவிலோ, மற்றவர்களுடைய தயவிலோ சொகுசான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்து விடுவது நல்லது. வாழ்வில் சுதந்திரமும், வலிமையும், அர்த்தமும் பெற சிறகை விரித்துப் புறப்படுங்கள். உங்களால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்ளாதீர்கள். பலவீனர்களாக இருக்க இறைவன் உங்களைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் சமர்த்தர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் இருக்கச் செய்யும் எல்லா முயற்சிகளிலும் இறைவன் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருப்பான்

 

இரா. சுந்தர மூர்த்தி to படித்ததில் பிடித்தது

 

முகப்பு புத்தகத்தில் படித்த பெற்றோருக்கு அவசியமான ஒரு கருத்தை அப்படியே இதில் இணைக்கிறேன். 14, 15 வயதுக்கு பிள்ளைகள் வரும் போது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் முன்னால் பல கேள்விகளை வைக்கின்றனர். அதில் ஓன்று நான் அடைந்த துன்பங்கள் என் பிள்ளைகள் படலாமா?
இதில் நான் விதி விலக்கு அல்ல? சிந்திக்க வைக்கும் கட்டுரை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.