Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்முறையை அறிதல்: காட்சியும் கருத்தியலும்

Featured Replies

வன்முறையை அறிதல்:  காட்சியும் கருத்தியலும் 

மனித உணர்வுகள், செயல்பாடுகள், உள்ளழுத்தங்கள் என்பவற்றில் மிக வலிமையானது வன்முறை, மற்ற உணர்ச்சிகளையும் வெளிப்பாடுகளையும் தன் அழுத்தத்தின் வழியாக உருமாற்றவும் நிலைமாற்றவும் கூடிய ஆற்றல் உடையது இது.  வன்முறையைப் பொது வடிவில் வரையறை செய்யவோ அளவிட்டுக் காட்டவோ தேவையில்லை என்றாலும் வன்முறையின் வகைமைகளை அதன் உருவ வேறுபாடுகளை அடையாளப்படுத்திக் கொண்டு பிறகு கலை-இலக்கியங்களில் அதன் இடம் மற்றும் வடிவம் பற்றிப் பேசுவது இலகுவாக இருக்கும்.
மனித உள்ளுணர்வுகள், அடிப்படை உணர்ச்சி நிலைகள் மற்றும் உணர்வு வழியான வெளிப்பாடுகளை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பாடுகளாகப் பகுத்து அறிந்தாலும் (தொல்காப்பியம்) வீரம், பயாநகம், அற்புதம், பீபத்ஸம், சிருங்காரம், கருணா, ஹாஸ்யம், ரௌத்திரம், சாந்தம் என ஒன்பது ரசங்களாகப் பகுத்து விளக்கினாலும் (நாட்டியசாஸ்திரம்) , அமைதி, ஊக்கம், ஒழுக்கம், இச்சை, சினம், குறுக்கம், மயக்கம், தேக்கம், திணக்கம் என ஒன்பது குணங்களாகப் பிரித்துப் பெயரிட்டாலும் (கூத்துநூல்) கோபம், இச்சை, சிறுமை, சோர்வு, படபடப்பு, பாய்ப்புறுதல், அகங்காரம், பற்றுடைமை, வெறுப்புறுதல், கொடுமை செய்தல், எடுத்தெறிந்து பேசுதல், பொறாமை, தாழ்மையுணர்வு, பயம், தெவிட்டல், சோம்பல், மகிழ்தல், கையாறு, அமைதி, மயக்கம், களித்தல், வெறித்தல், பிடிவாதம், கவலை, அழுகை, நினைத்தல், நெட்டுயிர்ப்பு, பேதுறல், உறக்கம், கனவு, விழிப்பு, நாணம், தெய்வமுறல், பேய்மயக்கம், நஞ்சுறல், மிதப்பு, காப்பு, விதிர்விதிர்ப்பு, நோக்கியறிதல், ஒப்புமை, அகநோய், புறநோய், சன்னிவெளி, ஏமாற்றம், கொதிப்புறல், தயக்கம், பசி, தாகம்   எனக் கூத்துநூல் மரபின்வழி நாற்பத்தெட்டு இழைகளாகப் பகுத்து விளக்கினாலும் இவை அனைத்தும் இன்பம்-துன்பம், சமநிலை-தடுமாற்றம், நல்லுணர்வு- வல்லுணர்வு என்ற எதிரிணைகளால் வகுபடக் கூடியவையாக இருப்பதைக் காணலாம்.
பிறத்தல்-இறத்தல் என்ற மறைபொருளான இருமுனைகளைத் தவிர்த்து இருத்தல், இயங்கல், துய்த்தல், துயருறுதல் என்ற வாழ்வியல் செயல் பாடுகளை இறப்புணர்வு, வாழ்வுணர்வு என்ற எதிர்வுகளில் அடக்கி விளக்கும் பிராய்டிய உளப்பகுப்பு முறையும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ற இறைச்செயலாக விளக்கும் தமிழ்ச் சித்தர் மரபும் இன்பம்-துன்பம் என்ற எதிரிணைகளில் மனித நிலையைப் பொருத்திக்காட்டி மாற்றவியலாத ஒரு மனித விதியை உறுதிப்படுத்துகின்றன.
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்  / இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் /  துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் /மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.           என்றும்
இன்பம் இடரென் றிர ண்டுற வைத்தது / முன்பவர் செய்கையி னாலே முடிந்தது /  இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் /  அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.   
என்றும் கூறும் திருமந்திரம் இன்பம், இடர் என்ற இருமைகள் வழி இறைமையையும் அதனை அடைவதற்கான அறத்தையும் (வழி) விளக்கி மனித உளவியலின் மிக அடிப்படையான ஒர் அலகைத் தொட்டுக் காட்டுகிறது.
‘இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து’ எனச் சிவத்தை உருவகிக்கும் திருவாசகம் இறையைத் துன்பத் தொடர்பறுக்கும் சோதி என்று கூறுவதன் உளவியல் மறைபொருள் கொண்டதல்ல. இது உலகின் சமயங்கள் அனைத்திற்குள்ளும் ஊடாடியிருக்கும் உணர்வுத்தளம். சுவர்க்கம், நரகம் என்ற கற்பனை மண்டலங்களை முன்வைக்கும் மதங்கள் அனைத்திலும் உள்ள  நன்மை-தீமை, இன்பம்-துன்பம் என்ற எதிர் முரண்கள் மனித அறிதல் முறை, அறிவுருவாக்கம், புலன் செயல்கள், பண்பாடு, அரசியல், அழகியல் என அனைத்தையும் இயக்கும் சக்திகளாக உள்ளன.
மனித மனஅமைப்பில் இன்பம் பற்றிய விழைவை விட இடர் பற்றிய அச்சமும் இடர் அற்ற வாழ்வு பற்றிய பெருவிருப்பமும் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றன.  ‘ஆய கலைகள் அறுபத்து நான்கி னையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள் இருப்பள் இங்கு வாராதிடர்’ என இடர் நீங்கிய நிலையையே இறையருளாகக் கொள்வதன் அடிப்படையாக உள்ளது தான் வன்மை, வன்செயல், வல்லுணர்வுகள் பற்றிய அச்சமும் அதனின்று மீளும் இச்சையும்.
தன் உடல் மீதும், உள்ளத்தின் மீதும் நிகழும், நிகழ்த்தப்படும் வன்முறைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது பற்றிய தனிமனித உள்ளுணர்வு பிறர் மீது தான் வன்முறையைச் செலுத்துவதற்கான தொடர் சாத்தியம் பற்றி தெளிவற்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ‘எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே’ என்ற தாயுமானார் வரியின் உள்ளாக அலைக்கழியும் ஒர் உளவியல்பும் ‘அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை’ என்று வள்ளுவம்  குறிப்பிடும் முரணியைபு நிலையும் மனித வன்முறைகள் பற்றி மிக அடிப்படையான சிக்கல்களைத் தெளிவுபடுத்தக்கூடிய குறிப்புகள்.
வன்முறை பற்றிய உள்ளுணுர்வுதான் மனிதநிலை, மனித அமைப்பு, மனித இனம் என்ற கட்டமைப்புகளைச் சாத்தியமாக்கி வருகிறது. மொழியின் தொடக்கம், மொழியின் அடிப்படைச் செயல்பாடு இரண்டிலும் வன்முறையை, வன்செயலை ஒத்திப்போடுதல் அல்லது வன்முறையைக் கையாளாமல் இருப்பதற்கான ஒப்பந்தச் செயல்பாடு உள்ளடங்கியிருக்கிறது. மொழியின் வழி உருவாகும் வன்முறை, மொழியின் வன்முறை, மொழியால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் பற்றி நெடிய விவாதங்கள் இருந்து வருகின்றன.   மனித சமூகத்தின் பெரும் வன்முறைகள் மொழியின் வழி உருவாக்கப்பட்டவையே என்ற கருதுகோள் ஒரு பகுதி உண்மையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏனெனில் மொழி வன்முறையை உருவாக்குவது மட்டுமில்லை வன்முறையை உணரவும், அறியவும், அதனை நீக்கவும் உரியவர்களாக மனிதர்களை உருவாக்குகிறது. மனித அறிதல் முறையில் வன்முறை மற்றும்  வன்முறையின்மை என்ற இருவகைக் கருத்தியல்களும் மொழி வழியாக உருவாக்கப்பட்டவை.
சமூக அமைப்பின் மாற்றவியலாத முன்நிபந்தனையாக உள்ள வன்முறை- வன்முறை நீக்கம், போர்-போர்நிறுத்தம் என்ற இணையமைப்புகள் அரசியல் மற்றும் வரலாற்றின் பெரும் இயந்திரவியலாக இருப்பவை. தனிமனித உளவியல் தளத்தில் இயங்கும் அன்பு-வெறுப்பு என்ற கட்டமைப்பின் நுண் மையமாக உள்ள வன்முறையின் இரண்டக – இருமுனைத் தன்மை இன்னும் தீர்க்கப்படாத ஒரு சிக்கலாக இருந்து வருகிறது. உழைப்பு, ஊக்கம் மற்றும் உற்பத்திச் செயல்களிலும் வன்முறையின் உலோகச்  சட்டகங்கள் உள் பொதிந்துள்ளன.
தற்கால உளப்பகுப்பு முறையில் மிக அடிப்படையான உள்ளுணர்வுக் கூறுகளாகக் கணிக்கப்பட்டுள்ள பாலிச்சை, வன்முறை இரண்டின் வழி இன்றைய மனிதக் கட்டமைப்புகள் அனைத்தையும் ஓரளவு விளக்க இயலும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். இந்த இரண்டில் வன்முறையே பாலிச்சை, பாலியல்பு இரண்டையும் விட கூடுதலான வலிமை கொண்டது என்பதுதான் நம் கவனத்துக்குரியது.
இன்பம் சார்ந்த விழைவின் ஒரு பகுதியான பாலிச்சையும்; பாலிச்சையின் உருமாற்றத் தொடர்மங்களாகவும்  தலைகீழாக்கம் பெற்ற வடிவங்களாகவும் உள்ள காதல், அன்பு, நட்பு, பாசம், பற்று, நேசிப்பு என்பதான மெல்லுணர்வுகளும் மனிதர்களைப் பிணைக்கக்கூடிய உணர்வுத்தளங்கள்.  இந்த மெல்லுணர்வுகள்   ‘தான்’ மற்றும் ‘பிறர்’ என்ற  உடல் சார்ந்த இருப்பை ஏற்று, உடல் சார்ந்த இன்புறுதலை ஒப்புக்கொண்டு உடல் தன்மையின் அடிப்படையில் அமைந்த மனத்தன்மையின் வேறு பாடுகளைக் கொண்டாடுதலாக விரிவடைகின்றவை. ஒரு குழந்தையைக் கையில் எடுத்து முகத்துடன் ஒத்திக் கொஞ்சும் மிக எளிய மனித நடத்தையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். நம் பாசத்திற் குரியவர்களின் முகத்தில் தோன்றும் சிறுசோர்வும் நம்மைப் பதற்றத்திற்குள்ளாக்குதலை உடல் சார்ந்த ஏற்பின் தொடர்ச்சியாக நிகழும் துயரம் உணரும் நிலை எனச் சொல்லலாம்.
இன்புறுதலும் உடல் ஏற்பும் பாலிச்சையும் இதில் எங்கு இணைகின்றன என்ற கேள்வி எழலாம். பாசம் பற்றிய மிகையான மதிப்பீடுகளைக் கொண்ட இந்தியச் சமூகங்களில் பெண்களும் பிள்ளைகளும் திருமண உறவின் வழி இணைந்து வாழுத் தொடங்கும் போது தாய், தந்தையர்களிடம் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். பெண்ணும் ஆணுமாக அவர்கள் கொண்ட இச்சை சார்ந்த பிணைப்பை ஏற்றுத் தம் பாசத்தைத் தொடரும் பெற்றோர்கள்,  அவர்களின் இச்சை சார்ந்த,  உடல்- மனம் சார்ந்த பிணைப்பை  ஏற்க இயலாமல் பல்வேறு மன நெருக்கடிகளை அடைந்து, பலவித நெருக்கடிகளை உருவாக்கிக் கசப்பைப் பெருக்கும் பெற்றோர்கள், தம் பிள்ளைகளிடம் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளும் பெற்றோர்கள் எனப் பல வகையினரைக் காணலாம். இந்தச் சிக்கல்களை ஒரு குழந்தைப் பிறப்பின் வழியாகக் கடந்து குடும்ப அமைப்பைத் தொடருவது இந்தியாவின் பொதுவான ஒரு சமூக உளவியல்.  இந்தச் சிக்கலின் உள்பகுதியாக உள்ளதுதான் உடல் – மன ஏற்பில் உள்ள  குழப்பங்கள். தனது பாலிச்சைகளுக்கும் பிறரின் பாலிச்சைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், சமநிலைகள், வேறுபாடுகள் பற்றிய புரிதலுடன் பிரிக்கவியலாத உறவைக் கொண்டவை மெல்லுணர்வுகளும் தனிமனித பிணைப்புறவுகளும்.
இச்சை சார்ந்த இந்த வகையான சிக்கல்களைக் கடந்து அனைத்திற்குள்ளும் ஊடுறுவி, அனைத்தையும் உருக்குலைக்கக் கூடிய ஒரு மனித உணர்வாற்றல் இருக்கும் என்றால் அது வன்முறை மட்டுமே. ஆம், அன்பின் வழியது உயிர் நிலை என்பது பெருவிருப்பம், ஆனால் அன்பின்மை, அருளின்மை என்பவை விருப்பமின்றியும், விழைவு இன்றியும், முயற்சி யின்றியும் உருவாகும் ஒரு நிலை.
வன்முறை எதனுடனும் கலக்காமல் எதன் துணையும் இல்லாமல் நுண் அளவில் இருந்து, பேரளவுவரை செயல்படக்கூடிய, நிகழக்கூடிய, வெளிப்படக்கூடிய கொடுவலிமை கொண்டது. அதே போல மனிதப் புலன் செயல்கள் எதனையும் தன் கருவியாகக் கொண்டு தன்னை நிகழ்த்திக் கொள்ளக்கூடியது. பாலிச்சை வன்முறையின் கூறுகளுடன் வெளிப்படும் போதோ, வன்முறை பாலியல் செயலை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளும் போதோ அங்கு நிகழ்வது  வன்முறையே தவிர பாலின்பச் செயல் அல்ல.
உடல் பாலியல் செயலை ஒரு மனித உடல் மீது ஆகக் கொடுமையான வன்முறையாகச் செலுத்த முடியும் என்பதையும், ஒரு மனிதர் இருப்பதையே  கண்டு கொள்ளாமல், அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உருமறைப்புச் செய்து அவர்மீது ஆகக்கொடிய வன்கொடுமையை நிகழ்த்த முடியும் என்பதையும் வைத்து நாம்  ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும்: வன்முறை ஆகப்பெரும் கவனத்துடன் திட்டமிட்டு, அதிக சக்தியைச் செலவிட்டு முழுவிளைவுகள் நிகழும்படி செய்யத் தகுந்த மனித செயல்பாடாக உள்ளது. அதனைவிட கவனம் அற்று, திட்டமின்றி, எத்தனிப்புகள் ஏதும் இன்றி,  அதிக சக்தியைச் செலவிடாமல் அளவுக்கு அதிகமான விளைவுகளை நிகழ்த்திக் காட்டக்கூடிய செயல்பாடாகவும் வன்முறை உள்ளது. இதனை உலக வழக்கில் மிக எளிதாகச் சொல்வதென்றால் அழித்தல் எளிது, ஆக்கல் அரிது. வன்முறையை உருவாக்க முயற்சிகள் தேவையில்லை செயலின்மை, முயற்சி யின்மை, கவனமின்மை, அன்பின்மை, உறவின்மை என்ற இன்மைகளின் வழி அது உருவாகிக் கொண்டே இருக்கும்.
நன்மை, நல்லுணர்வு, மென்மை, மெல்லுணர்வு என்பவை மனிதர்களின் தொடர் முயற்சியால், தொய்வற்ற பயிற்சியால் உருவாகக் கூடியவை. மனம், மொழி, மெய் என்ற மூன்றின்  இடைவிடா ஊக்கத்தின் வழி “நிருவாணம்” அடையலாம் என்பது பௌத்த மார்க்கம். நிருவாணம் அடையத் தேவையான அதே இடைவிடா ஊக்கமும் பயிற்சியும் வன்முறையற்ற வாழ்க்கைக்கும், சமூகத்திற்கும் தேவையாக உள்ளன.
அநித்யம், துக்கம், அனாத்மியம் என்ற பௌத்த மும்மெய்களில் மையமாக உள்ள துக்கத்துடன் உறவுடையதுதான் நாம் இங்கு விளக்க முனையும் வன்முறையும் வன்முறையின் நிமித்தங்களும்.  துக்கம், துக்க காரணம், துக்க நிவிர்த்தி, துக்க நிவிர்த்திக்கான வழி என்ற பௌத்த மார்க்கத்தின் நான்கு சத்தியங்களும் நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்ற துக்க நிவர்த்திக்கான எட்டு வழிமுறைகளும் சுற்றிச் சுழலும் இடம் வன்முறை மீதான வெறுப்பும் வன்முறை நீங்கிய வாழ்வு மீதான விருப்பும்தான். இதனை அறத்திலிருந்து அரசியலுக்கும், தனிமனிதரில் இருந்து சமூகத்திற்கும் விரிவுபடுத்தும் நிலையில் நாம் தற்கால மாற்றுச் சிந்தனைகளின் களத்திற்கு வந்து சேர்கிறோம்.
உடல் இச்சையில் தொடங்கி உலகப் போர்கள் வரையில் நீளும்  வன்முறைகளை விளக்க முயன்ற வில்ஹெம் ரீச்  (Wilhelm Reich 1897-1957) தனிமனிதர்களின் உடல் மற்றும் மனதின் மீதான கண்காணிப்பு, தண்டனை முறைகள் வழியாக  அரசு மற்றும் அரசியலை விளக்க முனைந்த மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault  1926-84) போன்ற அமைப்பாய்வுச் சிந்தனையாளர்களும், மொழியின் கட்டமைப்பிலும் அதன் செயல்பாட்டிலும் இயங்கும் ஆணதிகார வன்முறைகளை விளக்கிய பெண்ணியச் சிந்தனையாளர்களும் வன்முறை, வன்முறைக்கான நிமித்தங்கள், வன்முறையின் வடிவங்கள், வன்முறையின் மாறுவேடங்கள், வன்முறைக்கெதிரான எதிர்ப்புகள், வன்முறை குறைந்த அமைப்புகள் பற்றியெல்லாம் மிக விரிவான பேச்சுகளை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழின் நவீன கருத்தியல் தளத்திலும் வன்முறை பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த உரையாடல்கள் தனிமனிதர்களின் வன்முறை, தனிமனிதர்கள் மீதான வன்முறை, அரசின் வன்முறை, அரசுக்கெதிரான வன்முறை, அரசியல் சார்ந்த வன்முறை, உடல் மீதான வன்முறை, மனதின் மீதான வன்முறை என்று வகைமைகளில் அடங்கக்கூடியவை. ஆனால் வன்முறையின் வகைமைகள், வடிவங்கள், வேறுபாடுகள், வன்முறையின் நுண்மைகள்-பெருக்கங்கள், வன்முறையை உணரும் முறை, வன்முறையை வரையறுக்கும் விதிகள், வன்முறையை அடையாளம் காணும் அளவீடுகள், மொழியின் வன்முறை, குறியீட்டு வன்முறை, இடப்படுத்துவதில் உள்ள வன்முறை, பொதுவெளியின் வன்முறை, நகர-கிராம-வாழிடங்களின் அமைப்பு முறையில் உள்ள வன்முறை,  தனிமனித உறவுகளில் நிகழும் வன்முறை, குடும்பம், சாதி, பாலிணைகளின் வழி நிகழும் வன்முறை, தீண்டாமை போல வாழ்வு மறுக்கும் ஒதுக்குதல் வன்முறை, வன்முறையில் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லி வன்முறைகளால் நிறைந்துள்ள சட்டம், ஒழுங்கு, நீதி அமைப்புகளின் வன்முறை, மொழிப்படுத்தப்படும் வன்முறை, மொழியில் அனுமதிக்கப்படாத வன்முறை  என நீளும் வன்முறைகள் பற்றிய சொல்லாடலும் கதையாடலும் தமிழில் குறைவு. தமிழின் கலை இலக்கியப் பரப்பு நன்மை-தீமை, இன்பம்-துன்பம், வன்முறை-நன்முறை என்பவை பற்றிய பழமையான பொதுப் பகுப்பு முறையை இன்றும் இயக்கவிதியாகக் கையாள்வதுதான் இதற்குக் காரணம்.
இந்தப் பொது இயக்கவிதியின் வழியாகத் தற்கால வாழ்வின் இன்பியல், துன்பியல் பற்றி நம்மால் உணரவோ பேசவோ முடியாது. ஒரு சமூகத்தின் இன்பியல்-துன்பியல் புலன்கள் ஊனமுறுவதன் வழி அச்சமூகத்தின் சமூக, அரசியல், அறவியல் உணர்வுகள் செயலற்றுப் போகும், இச்செயலின்மை மிகக்கொடிய சமூக நோயாக உருவாகும். தமிழின் தற்கால அழகியலில், திளைப்பு முறையில், பாலின்பச் சொல்லாடலில், பொது உணர்வில் அதிக இடம் பெற்றுள்ள வன்முறையின் காட்சியின்பம், காட்சியின்பத்தின் வன்முறை பற்றிய உரையாடல் தவிர்க்க இயலாமல் ஒரு நோய் பற்றிய, சமூகத் துன்பியல் பற்றிய பேச்சாக மாறிவிடுகிறது.
தமிழ்ச் சமூகத்தின் காட்சியின்பம் பற்றிப் பேசுவதால் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு தீமை  பற்றி நாம் பேசுவதாகக் கொள்ளத் தேவையில்லை. இன்று காட்சிக் கதைகள் புழக்கத்தில் உள்ள பல சமூகங்களில் வன்முறை சார்ந்த நிகழ்வுகள், வரைவுகள், காட்சிப்படுத்தல்கள் கொண்டாட்டத்திற் குரியதாக மாறி யிருக்கின்றன. திரைப்படங்கள்,  நுண்மின்னியல் ஊடகங்கள், விளையாட்டு மென்பொருள்கள், கையடக்க காட்சித் திரைகள் எனப் பல வடிவங்களினூடாக வன்முறையின் காட்சித் திளைப்பு பெருக்கப்படுகிறது.
வன்முறையின் காட்சித்திளைப்பு நவீன ஊடகங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பது நமக்குத் தெரியும்.  தொல் சமூகங்களின் பலிச்சடங்கில் அதன் கூறுகள் இருந்தன, அடிமைப் படுத்தப்பட்ட மனிதர்களை மோதவிட்டு கேளிக்கை கொண்டாடுதல், பொது இடங்களில் தண்டனைகளை நிறைவேற்றுதல் என வேறு சில வடிவங்களில் வன்முறையின் காட்சியாக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் நவீன காட்சிக் கலைகளில் இதன் செயல்பாடு முற்றிலும் வேறுபட்டது.
காட்சியாக்கப்படும் வன்முறைகளும், அச்சுறுத்தும் நிகழ்வுகளும் உண்மையில் நிகழ்வன அல்ல என்பதால் காட்சியின்பம் பெறுவோர் எந்தவித குற்ற உணர்வோ ஒழுக்கத் தடையோ இன்றி அவற்றைத் தம் நரம்பியல் செயலின் வழி உள்வாங்கிக் கொள்கின்றனர்.
அந்த வன்முறையை நிகழ்த்துபவராகவும் அதனால் பாதிக்கப்படுபவராகவும் மாறி மாறித் தம்மை வடிவமைத்துக் கொண்டு இறுதியில் அதிக வன்முறையைச் செய்து வெற்றியடைகிற அல்லது உயிர் பிழைக்கிற ஒருவரின் உருவத்துடன் தன் உணர்வு நிலையை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
[உடல்களின் மீதான நேரடித் தாக்குதல்கள், மனிதர்கள் மீதான ஆயுதத் தாக்குதல்கள், சித்திரவதைகள், பொருள்களைச் சிதைத்தல், பெரும் இடிபாடுகளைக் காட்சியாக்குதல், வாழிடங்களைச் சிதறடித்தல், ஒரு நகரம் அல்லது நாடு அழியப்போவதாக அறிவித்துக் கதையை அமைத்தல் என்பவை அதிகம் பழகிய வன்முறை மற்றும் அச்சுறுத்தும் காட்சி உத்திகள். இவை எதுவும் தனித்தனியாக காட்சி வடிவம் பெற்று காட்சியின்பச் செயலாக மாறுவதில்லை. மாறாகக் கதையாக்கம் பெறுதல்,   வாழ்வியல் தொடர்மமாக  மாறுதல், வரலாற்றாக்கம் பெறுதல் என்ற நெடும் செயல்பாட்டின் துண்டுகளாக, துணை நிகழ்வுகளாக அமைந்து களிப்பு, துய்ப்பு சார்ந்த வடிவம் பெறுகின்றன. இவை அனைத்திலும் மனித உடல் மீதான தீமைகள், உயிர்க்கொலையின் பல்வேறு  வடிவங்கள்தான் காட்சிக் கூறுகளாக உள்ளன.]
உடல்கள் சிதைக்கப்படுதல், துண்டாக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் என்ற அனைத்தும் இறுதியில் மீந்திருக்கும் மனிதர் அல்லது மீந்திருக்கும் காட்சியின் பின்னால் மறைந்து மறதிக்குள்ளாக்கப்படுகின்றன. பாதிக்கப்படும் மனிதர்கள் மீதான இரக்கம் ஒரு கட்டத்தில் தான் அந்த நிலையில் இல்லை என்ற எதிர்நிலை வடிவில் தப்பித்திருக்கும் உணர்வாக மிஞ்சுகிறது. இவை அனைத்துக்கும் மேலாக வன்முறையைத் தொழில் நுட்பமாக, நிகழ்த்து கலையாக, அழகியல் உத்தியாக, செய்நேர்த்தி கொண்ட ஒரு செயல்பாடாகக் காட்சிக் கதைகள் மாற்றியிருப்பதால் விளைவுகள் அற்ற விளையாட்டாக வன்முறைகளின் வகைமைகள் காட்சிநிலை வடிவம் பெறுகின்றன. இந்தப் போலி வடிவங்கள் மனித உடல்கள் மற்றும் உளவியல் செயல்பாடுகள் பற்றிய பிழையானதும் கெடுதி நிறைந்ததுமான குறியீட்டுப் பதிவுகளை உருவாக்குகின்றன. இந்த வகையான பிழைபட்ட குறியீட்டுப் பதிவுகள் ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு விதமான விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
கொடுஞ்செயல்கள், மனிதஉயிர்களை அழித்தல் என்பவைற்றைவிட துயருறும் மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருத்தல், மனிதர்களின் வாழ்வாதாரங் களைக் கொள்ளையிடுதல், சுரண்டல், மக்களை வறுமையில் வைத்திருத்தல் , அடிமைப் படுத்தல், ஆதிக்கம் செலுத்துதல், அடக்குமுறை செய்தல் எனத் தொடரும் அரசியல்-சமூக வன்முறைகள் மிகக் கொடுமையானவை இல்லையா? அவற்றை நியாயப்படுத்தவதும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் செல்வதும்  அவற்றைவிடக் கொடுமை நிறைந்தது.
தம்மீதான கொடுமைகளை, அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் மக்களை வன்முறையாளர்கள் என்று அடையாளப் படுத்துவது  தமது வன்முறையை மகிமைப்படுத்திக் கொள்ளும் உத்தி, வன்முறையைச் செலுத்த தனக்கு மட்டுமே அதிகாரம், உரிமை உள்ளது என்னும் வன் கொடுமை அரசியல் அது.  வன்முறையின் வழி கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்குள் உருவாக்கப்படும் வன்முறைக்கெதிரான கருத்தியல்கள் அறம் பற்றிய பேச்சுகளைப் பொருளற்றவை களாக்குகின்றன.  இந்த வகை கருத்தியல்கள் இன்னும் பலவகை வன்முறையின் நுண்ணிய வடிவங்கள் பற்றிய ஓயாத நினைவூட்டலைத் தொடர்பவைதான் கலை-இலக்கிச் சொல்லாடல்கள், அதன் நீட்சிகள்தான் தத்துவ, கோட்பாட்டாகச் செயல்பாடுகள். காட்சிவழி வன்முறைகள் இந்த கோட்பாட்டாக்கத்தைத் தடைசெய்கின்றவை. அவற்றை உடல் அளவிலான வைகளாகக் குறுக்கி மனித அமைப்பாக்கங் களை மறதிக்குள்ளாகுகின்றன.
“இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.”
“எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது.”
“சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.”  (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை , கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்.)
மிகவும் பழகிய இந்த வாக்கியங்கள் திறந்து காட்டும் ஒரு உலகம் நம் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும்  அறங்கள் நசுங்கும் தளமாக நமக்கு விளக்கும்போது வன்முறையின் தொடக்கம் எது என்ற கேள்வியை எழுப்பி பதிலையும் சொல்கிறது. தனித்த உடல்  அல்ல முழு வரலாறும், மனித இருப்பும் வன்முறையின் களமாக விளக்கப்படுகிறது.
வன்முறைகள் எவை என்பதை வரையறுக்கும், அடையாளப்படுத்தும் சொல்லாடல்கள், குறியமைவுகளில்தான் வன்முறை தொடக்கம் கொள்கிறது.  அதற்கெதிரான போராட்டமோ அந்தக் குறியமைவுகளை உடைத்துக் கலைப்பதில் தொடங்குகிறது.

http://panmey.com/content/?p=961

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.