Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுக் கன்றுகளின் காலம் (சிறுகதை)

Featured Replies

580_Image_islington_play_street[1]

பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள்.

ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள்.
சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது. அந்த வளையங்களை விரல்களை ஒவ்வொன்றாக மடித்து எண்ணி, ‘ஆறு’ என்று கத்தினாள் அபிராமி ஆங்கிலத்தில்.
‘தப்பு, ஐந்தரை!’ என மறுப்புச் சொன்னான் ரோனி.
எப்படி அரை வரும்? என அபிராமிக்கு ஆதரவாகக் குறுக்கிட்டான் யோன்.
‘கடைசி வளையத்தின் போது என்ஜினை நிற்பாட்டியாயிற்றே…!’ நாக்கு நுனியை சிறிது வெளியே தள்ளி ‘கெக்கே’ காட்டினான் ரோனி.

இவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஆரம்பபாடசாலையில் ஒன்றாகப் படிப்பவர்கள். அடுத்த தெருவில் வசிக்கும் பீட்டரும், ஜேம்ஸும் ‘Cul-de-sac’இல் சேர்ந்து கொண்டால் மாலை வேளையில் ஒரே கும்மாளம் தான்.
ஆஸ்திரேய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஆரம்ப பாடசாலைகளில் அதிபுத்திசாலி மாணாக்கரை தேர்ந்தெடுக்க நாலாம் வகுப்பில் மாநில அளவிலே போட்டிப் பரீட்சைகள் நடக்கும். பரீட்சையில் தெரிவு செய்யப்படும் மாணாக்கருக்கான opportunity Class (O-C) எனப்படும் பிரத்தியேக வகுப்புக்கள், சில ஆரம்பப் பாடசாலைகளில் நடாத்தப்படும். யோனும் அபியும் இத்தகைய வகுப்பொன்றில் படிக்கிறார்கள். ரோனிக்கு எப்போதும் விளையாடிலேயே ஆர்வமதிகம். அவன் அதே பாடசாலையில் சாதாரண வகுப்பில் படிக்கிறான்.


‘Hi, Is your mum at home….? எனக் கேட்டவாறே சாரதி ஆசனத்தில் இருந்து கீழே குதித்தான் அல்பேட். யோனின் பதிலை எதிர்பார்க்காமல் ‘பியர் கேஸ்’ ஒன்றை கீழே இறக்கியவன் பெட்டியைப் பிரித்து போத்தல்களை குளிர்ப் பெட்டிக்குள் வைக்குமாறு கூறினான். அல்பேட் வந்தால் திருவிழாதான். போகும்வரை தொடர்ந்து பல நாட்கள் யோன் வீட்டில் பாட்டியும் கும்மாளமும்தான். இந்த நாள்களில் யோன் அதிகம் விளையாட்டில் கலந்து கொள்வதில்லை. அவனுக்கென்றே வீட்டில் பல தொட்டாட்டு வேலைகள் காத்திருக்கும்.


யோன் உள்ளே சென்றதும் சிறுவர்களின் விளையாட்டு குழம்பிப்போனது. அபி வீதியை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலையால் அன்று நேரத்துடன் வந்த அபிராமியின் அம்மா இவை அனைத்தையும் படுக்கை அறையன்னலூடாகப் பார்த்திருக்கவேண்டும். ‘அபி…’ என்று அம்மா உரத்துக் கூப்பிடுவதற்கும் அப்பாவின் கார் ‘Drive way’இல் நுழைவதற்கும் சரியாக இருந்தது.


‘டிரக்கை'(Truck) பார்த்ததும் அப்பாவுக்கு ‘மூட்’ அவுட் ஆகிவிடும் என்பதை, அபி அறிவாள். அவள் எதிர்பார்த்த வாறே ‘Bloody nuisance’ என அல்பேட்டையும் அவனது ‘டிரக்’ வண்டியையும் சபித்தவாறே அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். அல்பேட் அங்கு ‘டிரக்’ நிறுத்துவதை அப்பா விரும்புவதில்லை. இதனால் வீட்டின் பெறுமதி குறைந்துவிடுமென்பது அப்பாவின் அபிப்பிராயம்.
‘அபியை நீங்கள் தான் கேளுங்கோ. எந்த நேரமும் றோட்டிலை, வெள்ளைக்கார பெடியன்களோடை குதியன்குத்திறது….’ வழமையான அம்மாவின் முறைப்பாடுதான் இது. அப்பா எதுவும் பேசவில்லை. நேரே மாடிக்கு போய் விட்டார். நீண்டகால இடைவெளியில், அதுவும் ஆஸ்திரேலியா வந்த பின் பிறந்ததினால் அபி, அப்பாவின் செல்லம்.

‘நீங்கள் தான் அவளுக்குச் செல்லம் குடுக்கிறது. அவளைக் கண்டிச்சுப் போடாதேங்கோ. இந்த வயதிலைதானே சங்கீதா இங்கை வந்தவள். வெள்ளைக்கார குஞ்சுகளோடையே சுத்தி திரிஞ்சவள்? அபியாலை பின்னுக்கு ஏதேன் பிரச்சனை வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்பவே சொல்ப் போட்டன்…’ எனப் பல்லவி பாடியவாறே அப்பாவைப் பின் தொடர்ந்தார் அம்மா.
இந்த வீட்டிற்கு அபி குடும்பம் சென்ற ஆண்டுதான் வந்தது. அப்பாவுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரன் ஒருவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டினைக் காணி வாங்கி புதிதாக கட்டியிருந்தான். அமைதியான சூழலிலே படுக்கை அறைகளை மாடியிலே சுமந்துகொண்டிருந்த அழகிய வீடு. இத்தகைய ஒரு வீடு பற்றி அபியின் அப்பா கனவு கண்டு கொண்டிருந்தாரேயொழிய தனக்கு சொந்தமாக வாய்க்கலாம் என்று நினைத்துப் பார்த்ததில்லை. வீட்டைக் கட்டிய வெள்ளைக்காரன் வேலை மாறி அடுத்த மாநிலத்துக்கு போக இருந்ததால் அவசரமாக காசு தேவைப்பட்டது. வீட்டினைக் கொள்விலைக்கே விற்கப் போவதாக கந்தோரில் அறிவித்திருந்தான். இவ்வாறுதான் அந்த வீடு அவருக்கு வாய்த்தது. வீட்டின் அமைப்பையும் பின் வளவிலே இருந்த விஸ்தாரமான காணியையும் பார்த்த அம்மா, திறந்தவாயை மூடவில்லை. பிள்ளைகளின் படிப்பிற்கான அநுகூலங்களையும் அம்மா விசாரித்து அறிந்து கொண்டார். மூத்த மகள் சங்கீதா, பல்கலைக்கழகத்திப் படிக்கிறாள். சங்கீதாவின் பல்லைக் கழகத்துக்கும், அம்மாவின் அலுவலகத்துக்கும்அடுத்த தெருவில் நேரடி பஸ்கள் கிடைப்பதும் வசதி. சின்னவள்தான் அபி. பத்து வயசு வித்தியாசம். அவள் படிக்கும் ஆரம்ப பாடசாலையும் அருகில்தான். இத்தகைய அனைத்து வசதிகளையும் கொண்ட அந்தச் ‘சொர்க்க’ வீட்டிற்கு உறுத்தலாக வந்து சேர்ந்தான் ‘டிரக்கி’ (Truckee) அல்பேட் என்பது அம்மாவின் ஆத்திரம்.

அபியின் அம்மா அல்பேட்டை எப்போதும் ‘டிரக்கி'(Truckee) என்றே குறிப்பிடுவார். டிரக் வண்டியோட்டுபவர்கள் அனைவரும் முரடர்கள், பெண்கள் விடயத்தில் பொல்லாதவர்கள் என்பது அம்மாவின் அபிப்பிராயம்.
அல்பேட் பலசாலி, வாட்டசாட்டமானவன். கடா மீசை. தோல் தெரிய தலையை மழித்திருப்பான். பெண்களின் கவர்ச்சிகரமான தோற்றங்களைத் தனது பரந்த மார்பிலும் கைகளிலும் பச்சை குத்தியிருந்தான். இவை அம்மாவுக்கு அவன்மீது வெறுப்பினை அதிகரிக்க உதவின. அவனது தோற்றம் நாகரீகவானுக்குரியதல்லவாயினும், அவன் அயலவர்களுடன் கனவானாகவே நடந்து கொண்டான். டிரக்கை நிறுத்தி வைக்கும் காலங்களில், யோன் வீட்டில் அடைபட்டுக் கிடப்பான். ஆனாலும் அவனைப்பற்றிய மேலதிக விபரங்கள் திரட்டுவதிலும் ‘விடுப்பு’ பார்ப்பதிலும் அபியின் அப்பாவும் அம்மாவும் அதீத அக்கறை செலுத்துவது, அபியின் பிஞ்சுமனசுக்குத் தோதுப்படவில்லை.
அபியைப் போன்ற சிறார்கள் மத்தியில் அல்பேட் ஒரு ஹீரோ. இரண்டு மூன்று பெட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த பென்னாம் பெரிய தொடர்வண்டிகளை ஒட்டுவது லேசுப்பட்ட விஷயமில்லை. சிறந்த பயிற்சியும் பிரத்தியேக லைசென்சும் தேவை. இத்தகைய டிரக் வண்டிகளே ஆஸ்திரேய பெரு நிலப்பரப்பின் வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே உணவு மற்றும் பொருள்களை எடுத்துச்செல்வன. வீதி வளைவுகளில் தொடர்வண்டியை அல்பேட் லாவகமாகத் திருப்புவதைக் காண சிறுவர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். இத்தகைய வல்லமை பொருந்திய அல்பேட்டை ஏன் அப்பாவும் அம்மாவும் வெறுக்க வேண்டுமென்பதையும் அபியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அபியின் அம்மா இன்னமும் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் அருமை பெருமைகளை சுவாசித்தே வாழ்கிறார். இந்த வீட்டிற்கு குடியேறும்போது பழைய வீட்டிருந்து கறிவேப்பிலை மரத்துடன், மாமரம், வாழைமரம், மல்லிகை, கனகாம்பரம் என வேருடன் கிளப்பக்கூடிய மரங்களை எல்லாம் மண்ணுடன் கிளப்பிக்கொண்டே வந்திருந்தார். காசைக் காசென்று பார்க்கவில்லை. அந்த மரங்களை உரிய முறையிலே நாட்டுவதற்கு அப்பாவும் இரண்டு நாள் லீவு எடுத்திருந்தார். அம்மாவின் ஆசை பிழைக்கவில்லை. ஒரு வருடத்தில் வளவின் பின்புறத்தே குட்டி யாழ்ப்பாணம் துளிர்த்து உருவானது. அம்மாவின் விரல்கள் ‘Green fingers’ எனவும் நிரூபணமாகியது. கறிவேப்பிலை உட்பட சகல மரங்களும் சேட்டமாக வளர்ந்தன. பின் வளவின் அந்தலையில் வெள்ளைக்காரன் நட்டு வைத்த ‘யூக்கலிப்ரஸ்’ மரம் கிளைவிட்டு வளர்ந்திருந்தது. ஆஸ்திரேலிய நாட்டுக்கே உரித்தான யூக்கலிப்ரஸ் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தல் லேசுப்பட்ட காரியமில்லை. கவுன்ஸிலின் அனுமதி பெற படாதபாடுபடவேண்டும். அதனால் அது பிழைத்து நின்றது.

சீமந்தினால் ஆன ‘Garden bench’ ஒன்று பின்வளவில் இருந்தது. அதன் அருகிலேயே கறிவேப்பிலை மரம் நாட்டப்பட்டிருந்தது. அபியின் பெற்றோருக்கு அவ்வப்போது அது போதிமரம் போன்று பயன்படும். எத்தனையோ ஞானங்கள் கறிவேப்பிலை மரத்தடி வாங்கில் (Garden bench) அமர்ந்த போதுதான் ஏற்பட்டிருக்கின்றன. வாங்கில் அமர்ந்து ஓய்வெடுத்து ஊர் வம்பளக்கவும் அவர்களுக்கு அது பெரிதும் உதவியது.
அதி புத்திசாலி மாணாக்கருக்கான வகுப்பில் (O.C Class) அபியுடன் யோனும் படிக்கிறான் என்பது ஆரம்பத்தில் அபியின் அம்மாக்கு, மகா புதினமாகத் தோன்றியது. ‘ஒரு ‘டிரக்கி’யின் மகனுக்கு, இந்தளவு அரை யண்டத்துக்கு மத்தியில் கல்வியில் அக்கறையும் வெற்றியும் கிடைக்குமா?’ என்று அபியின் அம்மா வாயைப் பிளந்தார்.
‘யோன் டிரக்கியின் மகன் இல்லையாம். அவன்ரை தகப்பன் வேறையாரோ. அவனை விட்டிட்டு, இவள் இப்ப, இரண்டு வருஷமாய்தான் அல்பேட்டோடை கூடி இருக்கிறாளாம்.’

‘முதல் புருஷனை ஏன் விட்டவளாம்?’
‘ஆருக்கு தெரியும்? அதுகளின்ரை சீவியம் ஒரு கிலிசகெட்ட சீவியம் தானே?
இதனால்தான் அபியை அவங்களோடை விளையாட விடக்கூடாது என்று தலையை உடைக்கிறன்’ எனப் பல்லவியை ஆரம்பித்தார் அம்மா.

நிலமையை சுமுகமாக்க அப்பா சங்கீதாவின் பேச்சை துவங்கினார். அவள் பற்றிய சமாச்சாரங்களும் பெரும் பாலும் இந்த வாங்கிலேதான் பேசப்படும். வீட்டுக்குள் பேசினால் ‘அதுகளின்’ செவிகளில் விழுந்துவிடுமென்ற பயம்.
சங்கீதா சாடைமாடையாக ராகவனில் ஆசைப் படுகிறாள் என்பதை அம்மா அறிந்திருந்தார். ராகவன் சுந்தரம் மாமாவின் மூத்த மகன். சுந்தரம் மாமா சிட்னியில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் வசிப்பவர். அவரும் அப்பாவும் முன்பு கொழும்பில் ஒரு அலுவலகத்தில் பணி புரிந்தவர்கள். அம்மாவுக்கு தூரத்து உறவும். அந்த நட்பையும் உறவையும் பிறந்த நாள் விழாக்களுக்கான அழைப்புக்கள் மூலம் அப்பா சிட்னியிலும் தொடர்ந்தார்.
சுந்தரம் மாமாவின் இளைய மகன் சரவணன் அபியின் வகுப்பில் படிக்கிறான். மற்றவர்களைச் சீண்டுவதிலே மகா சுகம் காண்பவன். வெள்ளைக்காரப் பிள்ளைகளிடம் வாலாட்ட அவனுக்குப் பயம். அபிராமி கொஞ்சம் பயந்த சுபாவம். இதனால் அபியிடம் தன் கைவரிசையைக் காட்டுவான். அப்பொழுதெல்லாம் யோன், அபிக்கு உதவுவான். கால ஓட்டத்தில் அபியின் அபிப்பிராயத்தில் யோன் நல்ல நண்பனாய் உயர்ந்தான்.

ராகவன் மருத்துவம் படிக்கும் பல்கலைக்கழகத்தில்தான் அக்கா சங்கீதாவும் பொருளாதாரம் படிக்கிறாள். இப்பொழுது சில காலமாக ராகவன் தன் ஸ்போட்ஸ் மொடல்காரில் சங்கீதாவை வீட்டில் கொண்டு வந்து இறக்கி விடுகிறான். இடையிடையே சங்கீதா அவனுடன் பாட்டிக்கும் போய் வருகிறாள். அடிக்கடி தன்னை அழகு படுத்தி கண்ணாடியில் முகம் பார்த்து தனக்குத்தானே கதைத்தும் கொள்கிறாள். மொத்தத்தில் ராகவனின் நட்பு சங்கீதாவை ஆகாயத்தில் பறக்க வைத்தது. இந்த திருப்பம் அம்மாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி தந்தது. காதல் என்றாலும் தமிழ்ப் பையனுடன், அதுவும் விரைவில் டாக்டராகப் போகிறவனுடன்…
இந்த தொடர்பு சம்மந்தமாகவும் கறிவேப்பிலை மரத்தடி வாங்கில் அமர்ந்து அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள்.

‘இது சரிவந்தால் நல்ல சம்மந்தப்பா…, பொடியனை கொஞ்சம் அணைச்சு வை…’
‘நீங்கள் சொல்லித்தான் இதெனக்கு தெரியவேணும். பொடியனுக்கு தோசை விருப்பமெண்டு சங்கீதா சொன்னவள். அதுதான் சனிக்கிழமை தோசை சுட்டனான். அன்ரியின்ரை தோசை நல்லாய் இருக்குதெண்டு, கட்டியு மெல்லே கொண்டு போனவன்’
‘அப்ப அடுத்த சனிக்கிழமையும்…’
‘நான் விடுவனே? எல்லா அடுக்கும் செய்து போட்டன்.
நேற்றும் சங்கீதாவை கொண்டுவந்து விடேக்கை ‘எப்ப அன்ரி அடுத்த தோசை?’ எண்டு முசுப்பாத்தி போலக் கேட்டவன். நாளைக்கு அபியை ரியூஷன் கிளாஸாலை கூட்டி வரேக்கை தமிழ்க் கடையிலை மசாலாப் பொடியும் நல்லெண்ணைப் போத்தலும் வாங்கி வாங்கோ…, நல்ல சாம்பர் ஒண்டு வைச்சு முறுகல் தோசை சுடலாம்.’
‘சங்கீதா பிறந்த உடனை, எங்கடை அளவெட்டி வினாசித் தம்பி சாத்திரியார் சொன்னவரெல்லே இவளுக்கு களத்திர ஸ்தானம் நல்ல உச்சமாய் இருக்கு, திறமான சம்பந்தம் வந்தமையுமெண்டு…’

அவர்களைக் கனவுலகிலே சஞ்சரிக்கச் செய்யும் உரையாடலை வேரறுப்பதுபோல, அபி அழுதுகொண்டு பின் வளவுக்கு ஓடிவந்தாள். அவளைத் துரத்திக் கொண்டு வந்த சங்கீதா ‘உந்த வெள்ளைக்காரப் பெடியங்களோடை சேர்ந்து, வயசுக்கு மிஞ்சின ஊத்தைக் கதையளும் பச்சைப் பொய்யும்…’ எனப் பொரிந்து தள்ளினாள்.
விசாரணை ஆரம்பமாயிற்று!

விக்கி விழுங்கி சங்கீதா சொன்ன விபரங்களால் அம்மா பத்திரகாளியானார். அப்பாவின் பின்னால் மறைந்து நின்ற அபியின் முதுகில் நாலு அறை விழுந்தது. இந்த விடையத்தில் அபியின் சார்பாக அப்பாவால் பேச முடியவில்லை.
அபியை குற்றவாளியாக்கிய சமாச்சாரம் இதுதான்!
அபி பாடசாலைக்குச் செல்லும் வழியில் ராகவனின் காரை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அவனையும் அவனது சிவப்புநிற ஸ்போட்ஸ் மொடல்காரையும் அபிக்கு நல்லாய் தெரியும். அந்தக் காரிலே, அவன் பக்கத்திலே, அக்கா சங்கீதா வருகிறாளா என அவள் அக்கறையுடன் பார்ப்பாள். அடிக்கடி ராகவனுடன் பல வேறுஇனப் பெண்களும் உல்லாச பவனி வருவதை பார்த்திருக்கிறாள். அவனுக்கு அத்தனை Girl-friends இருந்தால் அக்கா சங்கீதாவின் நிலைமை என்ன என்று அந்த பிஞ்சு மனம் அக்கறைப் பட்டிருக்கிறது. ஆஸ்திரேய சூழலில் பிறந்து, திறந்த சமுதாய கட்டமைப்பில் வளரும் அபிக்கு ராகவன் அக்காவை ஏமாற்றுகிறான் என்பது விளங்காததொன்றல்ல. வஞ்சகமில்லாமல் இதை அக்காவுக்கு சொல்லப் போய்த்தான் ‘பொய் சொல்லிப் பழகாதை…’ என்று அக்கா காதை திருகி, இறுக்கி குட்டினவளாம்.

‘இவளை after school classக்கு அனுப்பினால்தான் ஒழுங்காக வருவாள்…’ என அம்மா ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டார்.
கோடை வந்தது!
அதனை எதிர்பார்த்து இளவேனில் காலத்தில் நட்ட ‘யாழ்ப்பாணத்து’ மரக்கறிகள் பின் வளவில் காய்த்து குலுங்கின. தென்புற மூலையில் நட்ட மொந்தன் வாழையும் குலை தள்ளியிருந்தது. புடலங்கொடியொன்று அதற்கெனப் போடப்பட்ட பந்தலில் இருந்து இயல்பாகவே விலகி, யூக்கலிப்ரஸ் மரத்தைப்பற்றி படரத் தொடங்கியது. மட்டுவில் முட்டிக் கத்திரிக்காயின் புகழ் நண்பர்கள் வட்டாரத்திலும் அம்மாவின் கந்தோரில் வேலை செய்யும் தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் பரவியது.

‘யாழ்ப்பாணத்தில் வாங்கிச் சாப்பிட்டது போலத்தான்…’ என்ற பெருமை லேசுப் பட்டதல்ல. அதனால் அப்பாவும் தோட்டத்தின் அபிவிருத்தியிலே அதிக கவனம் செலுத்தினார்.
மட்டுவில் முட்டிக் கத்திரிக்காய் என்றால் அடுத்த தெருவில் வசிக்கும் மரகதம் பாட்டிக்கு உயிர். அவர் மட்டுவிலில் பிறந்து வளர்ந்தவர். அப்பாவுக்கு மாமி முறை. கத்தரிக் காய்க்காகவே சுகநலம் விசாரிப்பதாக பாவனை பண்ணிக் கொண்டு அடிக்கடி வீட்டிற்கு வருவார். அம்மாவுக்கோ அவரைப் பிடிப்பதில்லை.
‘கிழவிக்கு வேறை வேலையில்லை. வீட்டுக்கு வீடு திரிஞ்சு ஊர்ப்புதினம் கதைக்கிறதுதான் தொழில். கிழவியின் கண் பட்டுத்தான் கத்தரி முழுக்க சூத்தை குத்துது….’ என்று பாட்டி போனபின் புறுபுறுப்பார். பாட்டி கேட்கும் போதெல்லாம் கண்ணுறு கழியுமென்று சூத்தை கத்தரிக் காய்களையே அம்மா கொடுத்தனுப்புவார். வருமானவரி இலாகாவில் பணியாற்றும் அம்மா தனது வீட்டுத் தோட்டப் பெருமையை தம்பட்டமடிக்க தன்னுடன் வேலை செய்யும் தமிழ் சிநேகிதிகளுக்கு, புடலங்காயும் கத்தரிக்காயும் விநியோகம் செய்வது, தமிழ் வீடுகளுக்கு பொழுதுபோக்கத்திரியும் பாட்டிக்கு தெரியாததல்ல. இருப்பினும் யாழ்ப்பாணத்து மரக்கறிகளுக்காகவே அம்மா மேலுள்ள வெப்பிசாரத்தை மனசுக்குள் அடக்கிக்கொண்டு பாட்டி அபி வீட்டிற்கு வந்து போனார்.
வருமானவரி இலாகா சமீபத்தில் அறிமுகம் செய்த ஜீ.எஸ்.ரி. வரிபற்றி விளக்க, அவ்வப்போது சிறுவணிக நிறுவனங்களுக்கு அபியின் அம்மா செல்வதுண்டு. பல சந்தர்ப்பங்களில் காலையில் வீட்டிருந்து நேராக அத்தகைய நிறுவனங்களுக்குச் சென்று பின்னர் அலுவலகம் செல்வது வசதியானது. இந்த வசதி கருதி முதல் நாள் மாலை அலுவலகக் காரை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். அலுவலகக் காரை ஒட்டுவது பெருமையானது என நினைப்பதும் அம்மா சுபாவம். அதனால் வீட்டின் முன்புறத்தே அரசமுத்திரை தெரிய காரை Drive wayஇல் நிறுத்தியிருந்தார். காலையிலே தன்னுடன் பணிபுரியும் மோனிக்காவையும் ஏற்றிக்கொண்டு சிறுவணிக நிறுவனம் ஒன்றுக்குச் செல்ல வேண்டும். இந்தச் சிந்தனைகளுடன் போவதற்கான வழியைப்பற்றி யோசித்துக்கொண்டு காரை ஸ்ராட் செய்து வீதிக்கு றிவேஸ் செய்தார். வீட்டில் உள்ள ரெலிபோன் சிணுங்கியது. அது மேலதிகாரியாக இருக்கலாம் அல்லது மோனிக்காவாகவும் இருக்கலாம். இந்த பதகளிப்பிலும் அவசரத்திலும் என்ஜினை நிப்பாட்டாமலே Central lockஐ தவறுதலாக அமத்தி அம்மா கார்க் கதவைச் சாத்திவிட்டார். தொலைபேசியில் பேசித் திரும்பிய பொழுதுதான், செய்த பிழை தெரிந்தது. என்ஜின் ஓடிக் கொண்டிருந்தது. கதவை திறந்து உள்ளே நுழைய முடியவில்லை. வீட்டில் யாருமில்லை. இனி என்ன செய்வது…?

அப்பொழுதுதான் பாடசாலைக்குப் போகவென வீதியில் இறங்கிய யோன், அபியின் அம்மா பதட்டப்படுவதைக் கண்டான். விசயத்தை கணப்பொழுதில் புரிந்து கொண்டவன் தன் வீட்டுக்கு ஓடிச்சென்று அல்பேட்டை அழைத்து வந்தான். வரும்பொழுதே நீண்டதொரு கம்பியுடன் வந்த அல்பேட் தீவிர கதியிற் செயற்பட்டு, இரண்டே நிமிடங்களில் கதவைத்திறந்து என்ஜினை நிப்பாட்டினான்.

அப்போதுதான் அம்மாவுக்கு போன உயிர்திரும்பி வந்தது. ‘தாங்ஸ் அல்பேட்’ என்று அன்றுதான் அம்மா அவனது பெயரை, முதன்முதலாக உச்சரித்தார். அம்மாவின் நன்றியை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட அல்பேட் காரை எடுத்து வீதியிலே ஓடத் துவங்கும்வரை ஆதரவாக செயல்பட்டான். அவனுடைய செயல்பாடுகள் அனைத்துமே கடமை உணர்வுள்ள ஓர் அயலவன் என்கிற பாங்கில் அமைந்திருந்தது.
சிறிது காலமாகவே சங்கீதா உற்சாகமற்றவளாகக் காணப்பட்டாள். பெரும்பாலும் அறையிலேயே அடைபட்டுக் கிடந்தாள். ராகவன் முன்னர் போல் வருவதும் இல்லை. பரீட்சைக்காலங்களின் Stressஎன அபியின் பெற்றோர்கள் இயல்பாகவே எண்ணிக் கொண்டனர்.
அன்று சனிக்கிழமை. ஆனாலும் விரத நாள். கத்தரிக்காய் சமைப்பது என்று மரகதம் பாட்டி தீர்மானித்து அபியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
‘நியூஸ் பேப்பர் வருகுது’ என்று அம்மா அடித்த கொமென்ற் பாட்டிக்கு கேட்டிருக்கவேணும்.
‘உனக்கொரு புதினம் தெரியுமே…?’ தனது கோபத்தை மறைத்து பாட்டி கதையை துவங்கினார்.
கிழவி ஏதோ ஊர் விடுப்பு சொல்லப் போகுது என்று அம்மா சிரத்தை காட்டவில்லை. அம்மாவின் அசட்டை பாட்டியின் ஆத்திரத்தை கிளறியது.
‘உவள் சங்கீதா உங்களுக்கு சொல்லேல்லையே…? இந்த கதை யூனிவசிற்றி பெடியள் எல்லாத்துக்கும் தெரியும், உங்களுக்குத் தெரியாதே…? இவன் சுந்தரத்தின்ரை மகன் ராகவனெல்லே, வீட்டுக்கும் தெரியாமல் யூனிவசிற்றியிலை படிக்கிற நோத் இண்டியன் பெட்டையை றிஜிஸ்ரர் பண்ணிப் போட்டானாம்.’
அம்மாவின் முகத்தில் ஈயாடவில்லை, உடம்பு இலேசாக நடுங்கியது. அம்மாவுக்கு பாடம் புகட்டிய திருப்தியில் கத்தரிக்காயையும் மறந்து பாட்டி வெளியேறினார்.
சில நாட்களாக வீட்டில் ஒருவகை மௌனம்கலந்த இறுக்கம். வீட்டு நிலைமையை உணர்ந்து அபிராமியும் விளையாடப் போகவில்லை. அனைவரும் வீட்டிலேயே அடைந்து கிடந்தனர்.
அன்று விடுமுறை நாள். வாசல்மணி ஒத்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் யோன் அபியை விளையாட அழைக்க வந்திருந்தான். வந்தது தமிழ் ஆட்கள் இல்லை என்று உறுதி செய்துகொண்டு கதவடிக்கு வந்த அப்பா, ‘போய் விளையாடன்’ என்றார். அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போவது நல்லதெனப்பட்டது அபிக்கு. அம்மாவைத் தேடி பின்வளவுக்குள் ஓடினாள்.
கறிவேப்பிலை மரத்தடி வாங்கு காலியாக இருந்தது.
வழமைக்கு மாறாக, புடலங்கொடி பற்றிப்படர்ந்த யூக்கலிப்ரஸ் மரத்தின்கீழ் மரக்குத்தியொன்றிலே, அம்மா ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.
ஆஸ்திரேயச் சூழலிலே ‘யாழ்ப்பாணம் மட்டும்’ என்று வேலியடைத்து வாழ்தல் தோதுப்படமாட்டாது என்ற ஞானத்தினை, அம்மா யூக்கலிப்ரஸ் மரத்தின்கீழே பெற்றிருக்க வேண்டும்.
– ஆசி கந்தராஜா-

 

http://www.aasi-kantharajah.com/சிறுகதைகள்/ஒட்டுக்-கன்றுகளின்-காலம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு.அகிர்வுக்கு நன்றி ஆதவன்.

  • தொடங்கியவர்

இவ்வாசிரியரின் ஏனைய சிறுகதைகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.