Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை

Featured Replies

அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை
 

article_1482576811-syrian-tank-aleppo-1.

- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன.  

தகவல்களைப் பரப்பும் வழிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழலில், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இடைவெளி மெதுமெதுவாக இல்லாமல் போகிறது. பொய்கள் மெய்களாகப் பரப்பப்படுகையில், மெய்யைப் பொய்யென இலகுவில் நம்ப வைக்க முடிகிறது. இது ஆபத்தானது. இதை உணர மறுக்கும் சமூகங்கள், இதன் துர் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும்.  

அலெப்போ இன்று முக்கிய பேசுபொருளாயுள்ளது. சிரிய யுத்தத்தின் முக்கிய குறியீடாக அலெப்போ மாற்றப்பட்டிருக்கிறது. அலெப்போவில் மிகப்பெரிய மனிதாபிமான அவலம் நிகழ்வதாக எமக்குச் சொல்லப்படுகிறது. சிரியப் படைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இவையனைத்தும் ஒரு கேள்வியை நோக்கியே நகர்கின்றன. அலெப்போவில் என்ன நடக்கிறது என்பதே அவ்வினாவாகும்.   

அலெப்போ, சிரியாவின் அதிக சனத்தொகை கொண்ட மாநிலமாக அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, அலெப்போ முக்கியமான கேந்திர நிலையமாக இருந்து வந்துள்ளது. ஒட்டோமன் பேரரசின் கீழ், கெய்ரோ, கொன்ஸ்தாந்தினோப்பிள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக மிகப்பெரிய நகரமாக அலெப்போ திகழ்ந்தது.   

பட்டுவழிப் பாதையின் முக்கிய நகரமாகவும் மத்திய கிழக்கையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக நகராகவும் அலெப்போ திகழ்ந்தது. 1869 இல் சுயெஸ் கால்வாய் விரிவாக்கப்பட்டு, பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதையாக உருவெடுத்ததை அடுத்து, அலெப்போ தன் முக்கியத்துவத்தை இழந்தது.

மத்தியகாலக் கட்டடக்கலையின் எச்சசொச்சங்களை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பிரதேசங்களில் ஒன்றாக அலெப்போ திகழ்கிறது. 2006 ஆம் ஆண்டு ‘இஸ்லாமியப் பண்பாட்டின் தலைநகரம்’ என்ற பெயரையும் பெற்றது.  

2011 இல் சிரியாவில் மேற்குலக ஆதரவுடன் சிரிய ஜனாதிபதி பசீர் அல் அசாத்தின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கிளர்ச்சிகள் தொடங்கியபோது, அலெப்போவில் எதுவித கிளர்ச்சிகளோ, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ நடைபெறவில்லை. 2012 நடுப்பகுதியில் அலெப்போவை நோக்கிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் சிரிய யுத்தத்தை அலெப்போவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.   

இதைத் தொடர்ந்து, கிழக்கு அலெப்போ கிளர்ச்சியாளர்களின் வசமாக, மேற்கு அலெப்போ சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக அலெப்போவை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக கிளர்ச்சிக் குழுக்கள் தொடர்ச்சியாகப் போராடின.  

 சிரிய இராணுவம் மேற்கு அலெப்போவின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. அலெப்போவின் அமைவிடம் சிரிய யுத்தத்தின் முக்கிய பூகோள ரீதியிலான மூலோபாய மையமாக்கியது. இந்நிலையில் கடந்த மாதம், சிரிய இராணுவம், ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் அலெப்போவைக் மீளக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்கியது.   

இவ்விடத்தில் சிரிய யுத்தத்தில் ரஷ்யாவின் உள்நுழைவு, உலக அரசியல் அரங்கையே வியப்பில் ஆழ்த்திய ஒன்று என்பதை நினைவு கூரல்தகும். ரஷ்ய விமானங்களின் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்குப் பாரிய சேதங்களை ஏற்படுத்தியது. அதேவேளை, களமுனைகளில் சிரிய இராணுவத்துக்குத் துணையாகப் போரிடும் ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படையணியினர் எண்ணிறைந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  

இன்னொரு புறம் குர்தியப் போராளிகள் துருக்கியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவிகள் கிடைக்கும் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, வடக்கு சிரியாவின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்யை விரட்டியடித்துள்ளனர்.   

கடந்த ஆறு மாதங்களில் சிரிய நிலவரம் மிகவும் மாறியுள்ளது. ஒருகட்டத்தில் சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும், அசாத் கைது செய்யப்படுவார் எனவும், முகம்மர் கடாபிக்கும் சதாமுக்கும் நடந்தது அசாத்துக்கும் நடக்கும் என ஊடகங்கள் எழுதி, அந்தப் பொன்நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தன. அந்நாள் இன்றுவரை வரவில்லை. இனியும் வருவதற்கான சாத்தியங்களை அண்மைய நிகழ்வுகள் இல்லாமலாக்கியுள்ளன.   
கடந்த வாரம் கிழக்கு அலெப்போவைக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சிரியப் படைகள் மீட்டன. சிரியப் படைகள் கிழக்கு அலெப்போவில் நுழைந்ததை அறிவித்தத்தையடுத்து, கிழக்கு அலெப்போவில் வாழ்ந்த சிரியர்கள் வீதிகளுக்கு இறங்கி, மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொண்டாடிய காணொளிகள் வெளியாகின.

இவை ஊடகங்களின் கண்களுக்குத் தெரியவில்லை. மாறாக, அலெப்போவில் மனிதாபிமானப் பேரவலம் நடந்தேறுவதாக அவை எழுதின. இவை தெரியாமல் செய்யப்பட்ட விடயமல்ல. மாறாக, திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயற்பாடாகும். அதன் தொடர்ச்சியே இன்று, அலெப்போ தொடர்பில் பரப்பப்படும் பொய்கள்.   

அலெப்போவை சிரியப் படைகள் விடுவித்தது, சிரிய யுத்தத்தின் முக்கிய திருப்புமுனையாகும். அமெரிக்காவும் மேற்குலகும் எதிர்பாராத ஒரு திருப்பம் சிரியாவில் ஏற்பட்டு விட்டது. சிரியாவில் ஆட்சிமாற்றம் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பில் மண்விழுத்திய ஒரு செயலே அலெப்போ விடுதலை. இந்தப் போரியல் தோல்வியை அமெரிக்காவாலோ மேற்குலகாலோ சகித்துக் கொள்ள இயலவில்லை.  

 இதனால், அலெப்போவில் சிரிய இராணுவம் போர்க்குற்றங்களைப் புரிவதாக ஒரு கதை கட்டமைக்கப்பட்டது. அது மேற்குலக ஊடகங்களால் பரப்பப்பட்டு நம்ப வைக்கப்பட்டது. அதையே ஏனைய ஊடகங்களும் செய்திகளாக்கின. அலெப்போவின் அவலம் உலகையே உலுக்கும் செய்தியாகக் காட்டப்பட்டது. சிலர் அதை முள்ளிவாய்காலுடன் ஒப்பிடும் அபத்தத்தைச் செய்தனர். ஊடகம் தனது வலிமையால் பொய்யை உண்மையென நிறுவ முயன்றது.   

கிழக்கு அலெப்போவில் மனிதாபிமானப் பேரவலம் நிகழ்வதாகச் சொல்கிற ஊடகங்களின் கண்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு அலெப்போவில் அரங்கேறிய அநியாயங்கள் தெரியவில்லை.   

கிழக்கு அலெப்போவில் ஏழு வயதுக் குழந்தைகளைக் கொலைசெய்து அதைக் காணொளியெடுத்து, உலகுக்கு அனுப்பிய, கொண்டாடிய கிளர்ச்சியாளர்களையே அமெரிக்காவும் மேற்குலகும் விடுதலைப் போராளிகள் எனப் போற்றுகின்றன.

அலெப்போவை சிரிய இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் மேற்குலகும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போவில் இருந்து வெளியேற, சிரிய இராணுவம் அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இக்கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலும் ஓங்கி ஒலித்தது.   

இக்கோரிக்கை இரண்டு விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. அலெப்போவில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கோரப்படும் கிளர்ச்சியாளர்கள் யார் என்பது முதன்மையானது. கிழக்கு அலெப்போவில் சிரிய இராணுவத்தினருக்கெதிராகப் போராடுபவர்கள் அல்-கைடாவின் சிரியப் பிரிவான அல் -நுஸ்ராவாகும்.  

அல்-கைடாவைப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததோடு, அதற்கெதிராகப் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை’ முன்னெடுக்கும் அமெரிக்கா, ஏன் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறது என்ற சந்தேகம் எழலாம். ஆனால், எல்லாவற்றினதும் ஆதிமூலம் ஒன்றே. அனைத்தும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவையே. ஒருபுறம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்; மறுபுறம் அதே பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு.   

இன்று, கிழக்கு அலெப்போவில் சிக்கியுள்ள அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளைக் காப்பாற்றப் பகிரதப் பிரயத்தனத்தை மேற்குலகம் முன்னெடுக்கிறது. இதன் பின்னணியில் மறைக்கப்படுகின்ற இன்னொரு உண்மை ஒளிந்துள்ளது.   
கிழக்கு அலெப்போவை விடுவித்த சிரிய இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, பதுங்கு குழியில் ஒளிந்திருந்த 14 நேட்டோ அதிகாரிகளைக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரெஞ்சு, இஸ் ரேல் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதேவேளை, சவூதி அராபியா, கட்டார், மொராக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினரையும் கைது செய்துள்ளனர். இது அல்-நுஸ்ராவுக்கு நேட்டோ நாடுகளும் மத்திய கிழக்கு முடியரசுகளும் நேரடியாகக் களத்தில் உதவி செய்துள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.   

இதனால் கடுப்படைந்த அமெரிக்கா, இவ்வாரம் இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தன்னை ஒரு புனிதனாகச் சித்தரித்து, நியாயம் கோருகின்ற பெயரில் கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தைக் கோரியது. அதற்கான ஆதரவு கிடைக்காத நிலையில், கடுந்தொனியில் பேசிய ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர், “ருவாண்டா, சேர்பனிஸா வரிசையில் அலெப்போவும் சேர்கிறது” என்றார்.   

உலகம் மிகப்பெரிய குற்றங்களைப் பட்டியலிட்ட பவர், அதில் தவற விட்டவை ஏராளம். அதில், அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்டவை பல. ஜப்பான் மீது அணுகுண்டுத் தாக்குதல், வியட்னாமில் இரசாயனக் குண்டுகளை வீசியது என்பன குறிக்கத்தக்கன. 

இவற்றோடு இன்றைய உலகப் பாதுகாப்பையே திருப்பிப் போட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலை அவர் தவறவிட்டார். இது தெரிந்தே செய்தது. எந்த இயக்கம் அத்தாக்குதலை நிகழ்த்தியதோ அவ்வியக்கத்தினரையே காக்க, அமெரிக்க இப்போது ஐ.நாவில் முயல்கிறது. இவை சிரியாவில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பது யார் என்பதை கேள்விக்கிடமின்றி நிரூபிக்கின்றது.   

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவுக்கு ஆதரவாக முண்டுகொடுத்த, பிரித்தானியாவின் மனிதாபிமான முகம், திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றில் தவிடுபொடியானது. பாதுகாப்புச் சபையில், அலெப்போவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன, இதற்கெதிரான சர்வதேசத் தலையீடு அவசியம் என அலெப்போவில் நேர்ந்த தோல்வியை ஏற்கவியலாத இயலாமையின் கையறுநிலையை தனது உரையினூடாக ஐ.நாவுக்கான பிரித்தானியத் தூதர் வெளிப்படுத்தினார்.   

திங்கட்கிழமை, பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர், யெமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளால் நடாத்தபடுகின்ற விமானக்குண்டு வீச்சுகளுக்கு பிரித்தானியாவால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதிசெய்தார்.

யுத்தங்களில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்துவதை தடைசெய்யும் சமவாயத்தில் பிரித்தானியா 2008 இல் கையொப்பமிட்டது. அச்சமவாயமானது கொத்துக் குண்டுகள் உற்பத்தி செய்தல், விநியோகித்தல், பயன்படுத்தல் என்பவற்றைத் தடைசெய்கிறது. அது கொத்துக் குண்டுப் பாவனையை போர்க்குற்றமாகக் கருதுகிறது. இன்று, யெமனில் சவூதிக் கூட்டுப்படைகளின் குண்டுவீச்சினால் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள்.

அது ஒரு குற்றமாக எவர் கண்களுக்கும் தெரிவதில்லை.    அலெப்போ நிலவரத்தை மனிதாபிமான நெருக்கடியாக உருவகிப்பதன் மூலம் அமெரிக்க - மேற்குலகு ஆதரவுப் படைகளின் தோல்வியை மூடிமறைப்பதோடு இப்போரில் சிரிய இராணுவம் அடைந்த மாபெரும் வெற்றியை கேவலப்படுத்துவதன் ஊடு, மதிப்பிறக்கம் செய்ய முனைகிறது. அலெப்போ விவகாரத்தில் அமெரிக்காவின் ஆக்ரோசமானது அதன் அவமானகரமான தோல்வியின் வெளிப்பாடே.   

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரஷ்யா, அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான நம்பகமான சான்றுகளைக் கேட்டது. அதற்கான சரியான பதிலை அமெரிக்காவால் வழங்க இயலவில்லை.

கருத்துரைத்த ஐ.நாவுக்கான ரஷ்ய தூதர், “அன்னை தெரேசா போல் வேடமிடாதீர்கள், ஈராக்கில் நீங்கள் விதைத்ததன் அறுவடைகள் தான் இன்று சிரியாவில் அரங்கேறுகின்றன. உங்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட விஷக் களைகளைச் சிரிய இராணுவம் சிதைப்பதை, சகிப்பது கடினமானதுதான்” என்று பதிலளித்தார்.   

இவ்விடத்தில் அலெப்போவில் உள்ள மனிதாபிமானப் பணியாளர்களிடமிருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலேயே அங்கு குற்றங்களும் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஐ.நாவின் பேச்சாளர் ஈவா பார்ட்லெட் கருத்துரைக்கும் போது, “அலெப்போவில் மனிதாபிமான நிறுவனங்கள் எதுவும் இல்லை, குறிப்பாக ஊடகங்களில் சொல்லப்படுவது போன்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லை.

மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பகம், வெள்ளைத் தொப்பிக்காரர்கள் போன்ற அரசாங்கத்துக்கு எதிரான மேற்குலகால் நிதியுதவி வழங்கப்படுகின்ற அமைப்புகளே தரவுகளை வழங்குகின்றன. இதன் உண்மைத் தன்மை கேள்விக்குரியது” என்றார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பல்மேராவிலிருந்து கடத்தப்படுகின்ற புராதனப் பொருட்கள், அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படுகின்றன. அதிலிருந்து பெறப்படும் பணம் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்குப் பயன்படுகின்றது என்பது தொடர்பில் பல்மேராவை சிரியப் படைகள் மீட்டபோது குறிப்பிட்டிருந்தேன்.

கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தின் களஞ்சியமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக சுவிஸ்லாந்தின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக பல்மேராவில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒன்பது கலைப்பொருட்கள் முக்கியம் பெறுகின்றன.  

 

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை துருக்கியில் ரஷ்யத் தூதுவரைச் சுட்டுக்கொன்ற நபர் “அலெப்போவை மறக்காதீர்கள்” எனக் கத்தியதை மேற்குலக ஊடகங்கள் அலெப்போவில் ரஷ்யாவின் ஈடுபாட்டுக்கு சிரிய மக்களின் எதிர்வினை எனக் கதையுருவாக்கம் செய்கின்றன.   

குறித்த கொலையாளி ஒரு பொலிஸ் அதிகாரி என்றும், அவர் இவ்வருடம் ஜுலையில் துருக்கியில் தோல்வியில் முடிந்த இராணுவப் புரட்சியில் அரசுக்கெதிராகப் பங்குபற்றியவர் என்பதும் முக்கியமானது. மேலும், அப்புரட்சியை அமெரிக்க ஆசிர்வாதத்துடன் இயக்கியவராகச் சொல்லப்படும் அமெரிக்காவில் வகிக்கும் துருக்கிய மதகுருவான பெட்துல்லா குலானின் ஆதரவாளர் என்பதும் முக்கியமானது.

இவை இக்கொலையின் காரணங்கள் குறித்து பல ஐயங்களை எழுப்புகின்றன.    இன்று, அலெப்போவில் நிகழ்பவை பற்றிச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் களத்தில் இல்லாத ஊடகவியலாளர்களால் உருவாக்கப்படும் செய்திகளே. செய்திகளின் அபத்தமும் ஆபத்தும் இங்கேயே உட்பொதிந்துள்ளன. அலெப்போ பற்றிய தவறான செய்திகள், ஊடகங்களின் மீதான அடிப்படையான நம்பிக்கையையே கேள்விக்குட்படுத்துகின்றன.  

 எமக்கு இது புதில்ல; இலங்கையின் யுத்தம் அவலமான முடிவை நோக்கி எட்டிக்கொண்டிருக்கும் போது சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு அதைப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகக் காட்டி, மாபெரும் மனிதாபிமான அவலத்தை மூடி மறைத்தார்கள் என்பதை அறிந்த போதும், சர்வதேச ஊடகங்களில் வரும் செய்திகள் எதுவித கேள்வியுமின்றி அப்படியே பிரசுரிக்கும் மனப்போக்கை என்னவென்பது? ஓரு சமூகமான நாம் முன்னேற நிறையவே இடமுண்டு.  

ஆலெப்போவின் விடுதலை, உலகளாவிய அரசியல் நகர்வின் முக்கியமான திருப்புமுனை. அமெரிக்காவில் நினைத்த இடத்தில், நினைத்த விடயத்தைச் செய்ய இனியும் இயலாது என்பதை சிரியா மீண்டும் உணர்த்தியுள்ளது. உலகம் மாறிவருகிறது; போர்களங்களின் தன்மையும் மாறிவருகின்றன.

ஆனால், ஆட்சிபீடத்தைக் கைவிடத் தயாரில்லாத சர்வாதிகாரி போல், அமெரிக்கா தன் வலிமையின் உதவியால் உலகப் பொலிஸ்காரனாக தொடர்ந்தும் நிலைத்திருக்க விரும்புகிறது. உண்மை யாதெனில், வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு.  

- See more at: http://www.tamilmirror.lk/188573/அல-ப-ப-ச-ர-ய-ய-த-தத-த-ன-த-ர-ப-ப-ம-ன-#sthash.MuJp8JXP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.