Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப்பொருள்கள்

Featured Replies

01_SriLanka.adapt_.1900.1-270x220.jpg

கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்ப்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கிமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்த முக்கியமான தடைகளில் ஒன்று இல்லாமற் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் இராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கான தனிநாடு என்ற இலக்கை வன்முறையின் மூலமாக சாதிக்க முடியுமென்று அந்த இயக்கம் நம்பியது. அதனால், பல சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய போதிலும் கூட, விடுதலைப் புலிகள் அதிகாரப் பரவலாக்கத்துக்கான எந்தவொரு திட்டத்தையுமே எதிர்த்தார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரச்சினையின் மற்றைய அரைப்பகுதி தொடர்ந்து நிலைத்துநின்றது. ராஜபக்‌ஷ நிர்வாகம் இனநல்லிணக்கத்தை விடவும் இனக்குழுமப் பெரும்பான்மைவாதத்தை வலுப்படுத்துவதிலேயே கூடுதலான அளவுக்கு கவனத்தைச் செலுத்தியது. எனவே, முதலாவது வாய்ப்பு பாழாக்கக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டில் ராஜபக்‌ஷ நிர்வாகம் உறுதியான முறையில் தோற்கடிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான கூட்டணி நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் தேர்தல்களில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணிக்குப் பிரதான தமிழ்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்தரங்கமான ஆதரவு இருந்தது. அதனால், புதிய அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதையும் ஓரங்கமாகக் கொண்ட அரசியலமைப்புச் சீர்த்திருத்த செயன்முறைகளை முன்னெடுத்தது. இலங்கை நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டதுடன், அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அக்குழு அதன் அறிக்கையை அரசாங்கத்துக்கு ஏற்கனவே கையளித்துவிட்டது. எனவே, சமூகங்களை மீள ஐக்கியப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பைப் அனுகூலமான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போதைய அரசியலமைப்புச் சீர்த்திருத்த செயன்முறைகளுக்கு உதவும் முகமாக கலாநிதி லக்சிறி பெர்னாண்டோவின் “ இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள்;

Issues-of-New-Constitution-Making-in-Sri-Lanka-Towards-Ethnic-Reconciliation.jpg

இன நல்லிணக்கத்தை நோக்கி” (Issue of New Constitution Making in Sri lanka; Towards Ethnic Reconciliation – இலங்கை விநியோகஸ்த்தர்கள் – லேக்ஹவுஸ் புத்தக நிலையம்) என்ற புதிய நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பொருட்சுருக்கம்

இந்த நூல் மிகவும் பொருத்தமான தருணமொன்றில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று இரு காரணங்களுக்காகக் கூறமுடியும். இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் என்பது இயல்பாகவே சிக்கலானதும் எளிதில் கையாளமுடியாததுமான ஒரு பணியாகும் என்பது முதல் காரணம். இப்பணிக்கு பரந்துபட்ட பங்காளர்களின் ஆதரவு தேவை. இலங்கையில் புத்திஜீவிகள் மிகுந்த ஊக்கத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறை தொடர்பில் மிகவும் துடிப்பான விவாதங்களும் ஆலோசனை கலப்புகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களுக்கு லக்சிறி பெர்னாண்டோவின் சிந்தனைகள் நிச்சயமாக ஒரு ஊக்கியாகச் செயற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதிகாரப்பரவலாக்கல் மற்றும் விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான கொள்கைகளை ஆதரிக்கின்றவர்களுடன் ஒப்பிடும்போது அவற்றை எதிர்ப்பவர்களின் குரல் மிகவும் ஓங்கி ஒலிக்கின்றது என்பது இரண்டாவது காரணமாகும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று பெர்னாண்டோ உறுதியாக வாதிடுகின்றார். இது விடயத்தில் கூடுதலான மிதவாதக் குரல்கள் இலங்கைக்குத் தேவை.

இலங்கையில் அரசியலமைப்பு ஆட்சிமுறையின் பரிணாம வளர்ச்சி, பின்காலனித்துவ அரசியல் மற்றும் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மீதான செழுமையானதொரு தகவல் வளமூமாகவும் பகுப்பாய்வாகவும் பெர்னாண்டோவின் நூல் அமைந்திருக்கிறது. இது மூன்று பரந்த பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது பகுதி, அரசியலமைப்பு விவாதப் பொருள்கள் தொடர்பான பெதுவான அக்கறைகளைப் பற்றியது. இரண்டாவது பகுதி, பிரதானமாக மக்கள் பிரதிநிதித்துவக் குழுவுக்கு பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. மூன்றாவது பகுதி, தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளை ஆராய்கிறது. அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான நியாயப்பாடு, மனித உரிமைகள் நிலவரம், ஜனநாயகம், உள்ளூராட்சி நிறுவனங்கள், தேர்தல் முறைச் சீர்த்திருத்தம் மற்றும் இன நல்லிணக்கம் போன்ற முக்கியமான விவகாரங்களை இந்த நூல் பகுப்பாய்வு ரீதியாக கையாளுகின்றது. அதிகாரப் பரவலாக்கல் மற்றும் நல்லிணக்கம் என்ற இரு தொனிப்பொருள்களும் நூலின் ஊடாக இழையோடியிருக்கிறது.

அதிகாரப் பரவலாக்கல்

அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்திருக்கக்கூடிய விளக்கத்தின் அடிப்படையில் நோக்கும்போது தற்போதைய அரசியலமைப்புச் சீர்த்திருத்தச் செயன்முறைகள் மூன்று பிரத்தியேகமான துறைகளை இலக்காகக் கொண்டிருக்கிறது. (1) அதிகாரப்பரவலாக்கல். (2) தேர்தல்முறைச் சீர்த்திருத்தம். (3) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை மறுசீரமைத்தல். அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையின் அடிப்படை அம்சமாகவும் அதிகாரப்பரவலாக்கத்தை கருத முடியும். அதிகாரப்பரவலாக்கத்தைப் பற்றி பொருத்தமான இரு கருத்துக்களை பெர்னாண்டோ முன்வைக்கிறார். (1) இன நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்பது ஏனைய காரணிகளுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. (2) அதிகாரப் பகிர்வுக்கான (Power Sharing) மாற்றீடாக கூட்டாகப் பொறுப்புக்களைக் (Shared Responsibility) கையாளுகின்ற செயன்முறை அமைய முடியும்.

முதலாவது கருத்தைப் பொறுத்தவரை, உண்மை ஆணைக்குழுவொன்று அல்லது உண்மைகளைக் குழுபாணியிலான பொறிமுறையொன்று நல்லிணக்கத்துக்கான பிரதான கருவியாக இருக்கவேண்டும் என்று நம்புகின்ற சிந்தனைமுறையொன்று (School of thought) இருந்துவருகிறது. இந்தச் சிந்தனை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் உண்மை நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள் விளைவுகளைப் பற்றி தெரிந்தோ தெரியாமலோ அதிகாரப் பரவலாக்கலின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் மனக்குறைகளை அரசியலமைப்பு வழிமுறைகளின் ஊடாக தீர்த்துவைக்காமல் இலங்கையில் இன நல்லிணக்கத்தைச் சாதிக்க முடியாது என்ற கருத்தை நான் இடையறாது வலியுறுத்தி வந்திருக்கிறேன். அரசியலமைப்பு வழிமுறைகளின் ஊடாக தங்களது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையானால் தமிழர்கள் தொடர்ந்து போராடவே செய்வார்கள் என்பது இப்போது மிகமிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான திட்டமொன்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உண்மைகளைக் குழு பாணியிலான பொறிமுறையொன்று இன நல்லிணக்கத்துக்கான துணை நிறைவான (Supplementing) தந்திரோபாயமாக உதவக்கூடும்.

கூட்டுப் பொறுப்பு

ஆனால், பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்வது அல்லது கூட்டாக பொறுப்புக்களைக் கையாளுவது என்பது பிரச்சினைக்குரியதொரு யோசனையாகவே அமையலாம். லக்சிறி பெர்னாண்டோ மிகவும் பொருத்தமான முறையில் கூறியிருப்பதைப் போன்று ஐக்கிய அரசாங்கங்கள், கூட்டரசாங்கங்கள் அல்லது ஐக்கிய முன்னணிகள் கூட்டுப் பொறுப்பை உருவகப்படுத்துபவையாக இருக்கமுடியும். அவ்வாறானால், அது அடிப்படையில் ஒரு அரசியல் ஏற்பாடேயாகும். அரசியல் ஏற்பாடுகள் தேர்தல் யாதார்த்தங்களைச் சார்ந்திருப்பவையாகும். இலங்கையைப் பொறுத்தவரை, ஒரு தீர்வு என்ற வகையில் கூட்டுப் பொறுப்புக் கோட்பாடு பல அடிப்படைப் பிரச்சினைகளைக் கொண்டதாக இருக்கிறது. முதலாவதாக, அது தமிழ் மக்களுக்கு எதையும் உத்தரவாதப்படுத்துவதாக இல்லை. ஏனென்றால், அது அமைப்பியல் ரீதியான (Structural Arrangement) ஏற்பாடு அல்ல. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் அமைப்பியல் ரீதியான ஏற்பாட்டையே கோரி வந்திருக்கிறார்கள் என்பதே எனது புரிதலாகும். அதனால், கூட்டுப் பொறுப்பை தமிழர்கள் சூழ்ச்சித்தனமான ஒன்று என்று பெரும்பாலும் நிராகரித்துவிடுவார்கள்.

இரண்டாவது, பெர்னாண்டோ வலியுறுத்திக் கூறுவதைப் போன்று, கூட்டுப்பொறுப்பு என்பதை அரசியலமைப்பினால் விளக்க முடியாது அல்லது அரசியலமைப்பு அதை விளக்கக்கூடாது. எனவே, இந்த யோசனை அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களில் பெருமளவுக்குப் பொருத்தமானதல்ல. மூன்றாவது, அமைப்பியல் ரீதியிலான ஏற்பாடு ஒன்று இல்லாதபட்சத்தில், கூட்டுப்பொறுப்பு ஏற்பாடுகளில் இருந்து தமிழ் அரசியல் கட்சிகள் அனுகூலத்தைப் பெறுவது சாத்தியமில்லாமல் போகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கட்டு நிலை இதற்குச் சிறந்த உதாரணமாகும். 2015ஆம் ஆண்டில் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்திருக்க முடியும். ஏனென்றால், தேர்தல் யதாரத்தநிலை கூட்டமைப்பையும் ஒரு பங்காளியாகக் கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்குச் சாதகமானதாக இருந்தது. உண்மையில் அரசாங்கத்தில் இணைவதை கூட்டமைப்பின் சில தலைவர்கள் விரும்பினார்கள் என்பதே எனது அபிப்பிராயம். ஆனால், அது எதிரணி வரிசையில் இருக்கவே தீர்மானித்தது. நாடாளுமன்றில் இப்போது அது பிரதான எதிர்கட்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் தீர்வொன்று இல்லாத நிலையில் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக மாறுவதென்பது கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அடுத்த பொதுத் தேர்தலில் பெரும் அனர்த்தமாகவே முடியும்.

ஆனால், லக்சிறி பெர்னாண்டோ அதிகாரப்பரவலாக்கத்தை எதிர்க்கவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும். அதிகாரப்பரவலாக்கத்தை அவர் ஆதரிக்கின்ற அதேவேளை அந்தப் பரவலாக்கம் சம்ஷ்டி முறைக்கு நெருக்கமானதாக வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். அந்த விவகாரத்தில் இலங்கை பின்னோக்கியே செல்லவேண்டும் என்றும் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். இலங்கை அரசியலின் பல முற்போக்கு அவதானிகள் இந்த மதிப்பீட்டை ஆதரிப்பார்கள்.

சம்ஷ்டித் தீர்வொன்றுக்கான தமிழர்களின் கோரிக்கை ஒன்றையாட்சிக் கட்டமைப்புக்குள் ஒரு அரசாங்கம் தங்களுக்குத் தருகின்றவற்றை இன்னொரு அரசாங்கம் திரும்பப் பறித்துவிடுமென்ற அவர்களின் பீதியுடன்தான் கூடுதலான அளவுக்கு சம்பந்தப்பட்டதே தவிர, அதிகாரப்பகிர்வின் மட்டத்துடன் பெருமளவுக்கு சம்பந்தப்பட்டதல்ல என்பது கொழும்பில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். ஒற்றையாட்சி அரசொன்றில் நாடாளுமன்றமே அதி முதன்மையானது என்பதால், பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை சட்டம் ஒன்றின் மூலமாக திருப்பியெடுத்துவிட முடியும். சமஷ்டி முறையொன்றிலே கோட்பாட்டு அளவில் மத்திய அரசாங்கமும் சம்ஷ்டி அலகுகளும் அரசின் அழிக்கமுடியாத பகுதிகளாகும். அதனால், ஒன்றை மற்றது இல்லாமல் செய்யமுடியாது. இத்தகைய ஏற்பாடு தமிழ் அலகிற்கும் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களுக்கும் நிரந்தரத் தன்மையை உறுதிசெய்யும் என்று தமிழர்கள் நம்புகிறார்கள். எனவே, சம்ஷ்டி கட்டமைப்பு அல்லது அரைச் சமஷ்டிக் கட்டமைப்பு தமிழர்களின் அச்சங்களைப் போக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது எனலாம்.

13ஆவது திருத்தம்

இலங்கையில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான எந்தவொரு விவாதமுமே தவிர்க்க முடியாத வகையில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதாகிறது. இதற்கு லக்சிறி பெர்னாண்டோவின் ஆய்வும் விதிவிலக்கானதல்ல. சுதந்திரமடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஜனநாயக முறைமை சாதித்திருக்கக்கூடிய மிகவும் முற்போக்கான கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்றால் அது மாகாண சபை முறைதான் என்று பெர்னாண்டோ கூறுகிறார். மாகாண சபை முறை ‘மிகவும் முற்போக்கான சாதனை’ என்ற கருத்து இடையுறவுகொண்ட இரு அம்சங்களை உடையதாகும்.

முதலாவது, இதுநாள் வரையில் சாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ‘மிகவும் முற்போக்கான கட்டமைப்பு மாற்றத்துக்கு’ இலங்கையர்கள் உரிமைகோர முடியாது. லக்சிறி பெர்னாண்டோ சரியாகக் கூறுவதைப் போன்று, புதுடில்லியிடமிருந்து வந்த தீவிரமான நெருக்குதலே மாகாண சபைகளை யதார்த்தமாக்கியது. 1987ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது தமிழ் அரசியல் சமுதாயத்தில் ஒரு பரந்தளவு பிரிவினர் அதுபோதுமானதல்ல என்று நிராகரித்தனர். விடுதலைபுலிகள் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் நிராகரித்தனர். தமிழர் விடுதலை கூட்டணியும் கூட, அதை போதுமானதல்ல, திருப்தியானதல்ல, நியாயமானல்ல என்று கருதியது. தெற்கில், ஜனாதிபதி ஜெயவர்தன மாகாண சபை முறைக்கு ஆதரவாளராக இருக்கவில்லை. 13ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபைகளுக்கும் வகைசெய்த இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஜனதா விமுக்தி பெரமுனையும் (ஜே.வி.பி.) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடூரமாக எதிர்த்தன. உடன்படிக்கைக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. எனவே, மாகாண சபை முறைக்கு இலங்கையர்கள் சொந்தம் கொண்டாடவில்லை அல்லது ஆதரவாக இருக்கவில்லை. இந்த விடயத்தில் எமது சொந்தத்தில் மிகவும் முற்போக்கான/ முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நாம் செய்துகாட்டவேண்டிய தருணம் இதுவாகும்.

இரண்டாவது, மாகாண சபைகள் மிகவும் முற்போக்கான கட்டமைப்பு மாற்றம் என்ற கருத்து இரு விசேட குழுக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. (1) இன்னமும் கூட மாகாண சபைகளை எதிர்க்கின்ற ஒரு சிறிய பிரிவு சிங்களத் தேசியவாதிகள். (2) வட பகுதி தமிழர்கள் (இன்னமும் கூட தனிநாடொன்றில் நம்பிக்கை கொண்டவர்களும் நியாயமான அளவு அதிகாரப் பரவலாக்கலுக்காக குரல்கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் இதில் அடங்குவர்).

சிங்களத் தரப்பில் உள்ள எதிர்ப்பைப் பொறுத்தவரை, மாகாண சபைக்கு எதிரான இயக்கம் பெருமளவுக்கு அருகில் போய்விட்டது. மாகாண சபைகள் யதார்த்தமாகிவிட்டது என்பதையும், கூடுதல்பட்சமான அதிகாரப்பரவலாக்கல் வடிவமாக அது பயன்பட முடியும் என்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக பலர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு விட்டார்கள்.

மறுபுறத்தில், பல தமிழர்கள் மாகாண சபைகளைப் போதுமானவையாக கருதவில்லை. அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் நிறுவப்பட்டதே மாகாண சபைகள் தொடர்பில் இருக்கின்ற பிரதானமான பிரச்சினையாகும். உண்மையில் அரசியலமைப்பின் ஒற்றையாட்சி திட்ட நிலையில் இருந்து மாகாண சபைகள் விலகிச்செல்லவில்லை என்ற அடிப்படையில் மாத்திரமே காரணமாகக் கொண்டு 13ஆவது திருத்தத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது.

“மாகாண சபைகள் சுயாதீனமான சட்டவாக்க அதிகாரங்களைச் செயற்படுத்தவில்லை. அவை நாடாளுமன்றத்துக்கு கீழ்ப்பட்டவையாக மட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்க அதிகாரங்களைச் செயற்படுத்துகின்ற துணை அமைப்புகள் மாத்திரமே” என்று உச்ச நீதிமன்றம் பிரகடனம் செய்தது. எனவே, 13ஆவது திருத்தத்தின் மூலமாக சாதிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் நிரந்தரமான ஒன்றாக இல்லாமல் போகக்கூடும் என்ற தமிழர்களின் பீதியை மாகாண சபைகள் தொடரச் செய்தன. உதாரணமாக, முதலமைச்சரின் ஆலோசனையுடனோ அல்லது ஆலோசனையில்லாமலோ ஆளுநர் மாகாண சபையைக் கலைக்க முடியும். அதனால், மாகாண சபைகளின் நிலைபேறு என்பது பெருமளவுக்கு கொழும்பின் நல்லெண்ணத்திலேயே தங்கியிருக்கிறது. அதிகாரப்பகிர்வின் முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாட்டைப் பேணுவதால் 13ஆவது திருத்தத்தின் கீழ் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. பொதுப்பட்டியல் (Concurrent list) இதற்கு ஒரு உதாரணமாகும். லக்சிறி பெர்னாண்டோ சுட்டிக்காட்டுவதைப் போன்று பொதுப்பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கம் மாகாண சபைகளின் விவகாரங்களில் சுலபமாகவே ஆக்கிரமிப்புச் செய்ய முடியும். அதனால், மாகாண சபைகளை முற்போக்கான கட்டமைப்புகள் என்று தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

எனவே, லக்சிறி பெர்னாண்டோவின் ஆய்வுகள் முற்போக்கானதும் சிந்தனையைத் தூண்டுகின்றதுமான அனுமானங்களைக் கொண்டிருக்கின்றன எனலாம். இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கத்துடன் சம்பந்தப்பட்ட பல முக்கியமான விடயதானங்கள் குறித்து இவர் ஆராய்ந்திருக்கிறார். இலங்கையில் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றில் அக்கறையுடையவர்களுக்கு ஒரு தகவல் தேட்டமாக அவரது நூல் பயன்பட முடியும். அந்த முக்கியமான நூலில் லக்சிறி பெர்னாண்டோ முன்வைத்திருக்கும் கருத்துக்களை இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கருத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

1133923343-e1482736977463-150x150.jpgகலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்

கலாநிதி கீதபொன்கலன் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தில் முரண்நிலைத் தீர்வு திணைக்களத்தின் தலைவராக பணியாற்றுகிறார்.

 

http://maatram.org/?p=5311

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.