Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பட்டுக்கூடு... ஸ்வீட் பாக்ஸ்... நடமாடும் தடுப்பரண்... வீரப்பன் வீழ்த்தப்பட்டதை விவரிக்கும் விஜயகுமார்

Featured Replies

பட்டுக்கூடு... ஸ்வீட் பாக்ஸ்... நடமாடும் தடுப்பரண்... வீரப்பன் வீழ்த்தப்பட்டதை விவரிக்கும் விஜயகுமார்

சொதப்பிய கேமரா... உதவிய மஞ்சள் விளக்கு

 

ந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்று 12 ஆண்டுகள் கழித்து, அந்த வேட்டையை நடத்திய அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதியிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த ரூபா பப்ளிகேஷன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட, ‘Veerappan: Chasing the Brigand’ என்ற இந்த ஆங்கிலப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படையிலிருந்து எஸ்.ஐ. வெள்ளத்துரை, சரவணன் என இருவரை அனுப்பி, வீரப்பனை நம்பவைத்து, ஓர் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து வீழ்த்திய இறுதி நிமிடங்களை முதல்முறையாக விஜயகுமார் விவரித்திருக் கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து வீரப்பனின் திக்திக் க்ளைமாக்ஸ் நிமிடங்கள் இங்கே...

p18.jpg

2004, அக்டோபர் 18, இரவு 10 மணி

இன்னும் 60 நிமிடங்கள்!

அமாவாசை முடிந்து நான்காவது நாள். எங்கும் கும்மிருட்டு. நாங்கள் காத்திருந்த பகுதியில் நான்கு பெரிய புளிய மரங்கள் கிளை பரப்பி, அந்தப் பகுதியை இன்னும் இருட்டாக்கி இருந்தன. ஆனாலும், கமாண்டோக்கள் தங்கள் கஷ்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சில நொடிகளில் எதிரியைத் தாக்கிக் கொல்ல வேண்டிய தருணத்துக்காக, பல மணி நேரம் இருட்டில் காத்திருப்பது அவர்களுக்குப் பழகிப் போன ஒன்று. இதைவிட மோசமான சூழல்களில் எல்லாம் அவர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்.

தர்மபுரியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் பாடி கிராமம். கண்ணனும் (அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன்) நானும் சாலையோரத்தில் இருக்கும் சிறிய பள்ளிக்கூடத்துக்கு அருகே நின்றிருந்தோம். மறைந்திருந்து சுடுவதற்கு ஏற்றபடி, அந்தப் பள்ளியின் கூரை, பாதுகாப்பு அரணாக இருந்தது. ஆறு கமாண்டோக்கள் அங்கு பதுங்கி, துப்பாக்கிகளோடு சாலையைக் குறிவைத்தபடி படுத்திருந்தனர். பழுதாகி நிற்பது போன்ற தோற்றத்தில், சாலையின் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டு ஒரு லாரியை நிறுத்தி வைத்திருந்தோம். பார்ப்பதற்கு, சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி போலத் தெரியும். இதற்கு, ‘ஸ்வீட் பாக்ஸ்’ எனப் பெயர் வைத்திருந்தோம்.  வீரப்பனை அழைத்து வந்த ‘பட்டுக்கூடு’ எனப் பெயரிடப்பட்ட ஆம்புலன்ஸ், அந்த இடத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு வேகத்தைக் குறைத்து நிற்க வேண்டும் என்பது திட்டம். அதற்காகவே, அந்த லாரியை அங்கு நிறுத்தியிருந்தோம். லாரிக்குள் எங்கள் வல்லுநர்கள் மூன்று பேர் பதுங்கி இருந்தார்கள். ஆம்புலன்ஸுக்குள் நாங்கள் ரகசியமாகக் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியிருந்தோம். லாரியை ஆம்புலன்ஸ் நெருங்கியதும், கேமராவின் சிக்னல்களைப் பெற்று, ஆம்புலன்ஸ் உள்ளே வீரப்பன் கும்பல் இருக்கிறதா எனப் பார்த்து உறுதிசெய்ய வேண்டியது லாரியில் இருந்த வல்லுநர்களின் பணி. அதன்பிறகே நாங்கள் தாக்க வேண்டும். சற்றுத் தள்ளி, மரங்களின் மறைவில் இன்னொரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. ‘நடமாடும் தடுப்பரண்’ என அதற்குப் பெயர் வைத்திருந்தோம். அதில் மணல் மூட்டைகள் இருந்தன. சந்திரமோகன் தலைமையிலான கோப்ரா படையினர் அதில் பதுங்கியிருந்தனர்.

இன்னும் சற்றுத் தள்ளி, அதே சாலையில் டி.எஸ்.பி திரு தலைமையில் அதிரடிப்படை, சாதாரண கார் ஒன்றில் காத்திருந்தது. ஆம்புலன்ஸ் அந்த இடத்தை நெருங்கும்போது, அதை இவர்களின் கார் பின்தொடரும். வேறு எந்த வாகனமும் இடையில் சிக்கி விடாமல் தடுக்கவும், ஆம்புலன்ஸ் அவசரமாக ரிவர்ஸ் எடுத்து அங்கிருந்து சென்றுவிடாமல் தவிர்க்கவுமே இந்த ஏற்பாடு. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், நான்குபுறமும் இருக்கும் போலீஸ் படைகளுக்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்து சிக்கிக்கொள்ளும்.

p18b.jpg

தர்மபுரி நகரத்தில் இன்னொரு டி.எஸ்.பி காத்திருந்து, ஆம்புலன்ஸுக்கு எதிர்திசையில் வாகனங்கள் எதுவும் வராமல், எல்லாவற்றையும் வேறு சாலையில் திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார். வேறு எந்த வகையிலும் இடையில் யாரும் சிக்கி, உயிர்ச்சேதம் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

எங்களிடமிருந்து வெகுதூரத்தில், அதிரடிப் படையில் ரகசியமாகப் பணியாற்றும் வீரரான குமரேசன், தனியாக சாலையோரம் இருளில் மறைந்து காத்திருந்தார். ஆம்புலன்ஸ் வருவதை உறுதி செய்து எங்களுக்குத் தகவல் சொல்ல வேண்டியது அவருடைய பணி. நான், ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணன், ஆம்புலன்ஸில் வந்த வெள்ளத்துரை மற்றும் கண்ணன் ஆகியோர் தவிர,  ‘இந்த ஆபரேஷன், வீரப்பனைப் பிடிப்பதற்காக’ என்ற ரகசியம் தெரிந்த ஐந்தாவது நபர், குமரேசன்.

குமரேசன் இங்கு காத்திருப்பது, வீரப்பன் கும்பலை ஆம்புலன்ஸில் கூட்டிவரும் வெள்ளத்துரைக்குத் தெரியும். ஆம்புலன்ஸ் அந்த இடத்தை நெருங்கியதும், வெள்ளத்துரை கையை வெளியில் நீட்டி, தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார். வழக்கமாக விழிப்போடு இருக்கும் வீரப்பன், அன்று இயல்புக்கு மாறாக அலட்சியத்தோடு இருந்தான். அவன், இதைக் கவனிக்கவில்லை. ஆனால், இருளில் காத்திருந்த குமரேசன் கவனித்தார். வேறு இரண்டு விஷயங்களையும் அவர் கவனித்தார். ஆம்புலன்ஸின் மேலே நீல நிற சுழல்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ‘வீரப்பன் குழுவில் எல்லோருமே உள்ளே இருக்கிறார்கள்’ என்பதற்கான சிக்னல் அது. ஆம்புலன்ஸின் முகப்பு விளக்கோடு, பனிமூட்டம் மற்றும் மழைநாட்களில் எரியவிடும் மஞ்சள் விளக்கும் சேர்ந்து எரிந்தது. அது உணர்த்திய சிக்னல், ‘வீரப்பன் குழுவில் எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன’ என்பதுதான்!

குமரேசன் உடனே செல்போனை எடுத்து, சங்கேத மொழியில் தகவல் சொன்னார், “தபால் அனுப்பியாச்சு!’’

இன்னும் 10 நிமிடங்கள்!

குமரேசன் போன் செய்தது கண்ணனுக்குத்தான். தகவலைக் கேட்டதும் கண்ணன் என் பக்கம் திரும்பி, கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார். அதேநேரத்தில், சத்தம் குறைத்திருந்த எங்களின் வயர்லெஸ்ஸில் ‘க்ளிக்’ சத்தம் கேட்டது. அது, திரு அனுப்பியிருந்த சிக்னல். ஆம்புலன்ஸ் அவர் பார்வைக்குள் வந்துவிட்டது; அவர் அதை தன்னுடைய வாகனத்தில் பின்தொடரப் போகிறார்.

“பட்டுக்கூடு இன்னும் 10 நிமிடங்களில் இங்கு வந்துவிடும்’’ என்றார் கண்ணன்.

ஆனாலும், வீரப்பன் எந்த நிமிடத்திலும் தன் திட்டங்களை மாற்றக்கூடியவன். பாப்பாரப்பட்டி ஜங்ஷனில் அவன் பாதை மாறிப் போகச் சொல்லலாம். அல்லது பல்லியின் குரல் கேட்டு திரும்பிப் போகலாம். ‘அங்கிருக்கும் அதிரடிப் படையை சேர்ந்த நவாஸையும், ஒகேனக்கல் சாலையில் இருக்கும் சண்முகவேலையும் அலெர்ட்டாக இருக்கச் சொல்லுங்கள். எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாது’ என கண்ணனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னேன்.

p18a.jpg

இன்னும் 5 நிமிடங்கள்!

கடைசி முறையாக, படையினரைச் சுற்றிலும் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பே ரிகர்சல் செய்து குறித்துவைத்த பொசிஷன்களில் எல்லோரும் தயாராக இருந்தனர். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நகர்ந்தது. ‘ஏன் ஆம்புலன்ஸ் வர இவ்வளவு நேரமாகிறது?’ என இதயம் துடிதுடித்தது. ‘அமைதியாக இரு’ என மனம் கட்டளையிட்டது.

கோப்ரா படையினர் பரபரப்பாக களமிறங்கினர். கடந்த வாரம் முழுக்க அவர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் பயிற்சி செய்திருந்தனர். மூன்றே நிமிடங்களில், 144 மணல் மூட்டைகளை அடுக்கி, ஐந்து அடி உயரத்தில் ஒரு தடுப்பரண் அமைத்துவிட்டு, அதன் பின்னால் துப்பாக்கியோடு பதுங்கிக்கொள்ள அவர்களால் முடியும். அதை நடமாடும் தடுப்பரண் டீம் செய்தனர். ‘ஸ்வீட் பாக்ஸ்’ லாரியில் இருந்த வல்லுநர்கள் குழு, தங்கள் கருவிகளை உயிர்ப்பித்தது. ஆம்புலன்ஸ் அருகில் வந்ததும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் பார்த்து, இலக்கை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இருளிலும் ஒளிரக்கூடிய நான்கு தடுப்புகளை எடுத்துவந்து, சாலையில் பக்கத்துக்கு இரண்டாக அதிரடிப்படையைச் சேர்ந்த சார்லஸ் வைத்தார். ஆம்புலன்ஸ் வந்து நிற்க வேண்டிய இடம், ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணனுக்கு தெரியும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘கூம்பு வடிவிலான நான்கு தடுப்புகளுக்கு மையமாக ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டும்’ என சரவணனுக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தது.

என்னுடைய ஏகே 47 துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டேன். இரண்டு கைகளையும் உயர்த்தி எல்லோருக்கும் சிக்னல் கொடுத்தேன். இப்போது, எல்லா துப்பாக்கிகளும் அந்தத் தடுப்புகளின் மையத்தை குறிவைத்தன.

இன்னும் 120 நொடிகள்!

‘ஸ்வீட் பாக்ஸி’ல் இருக்கும் வல்லுநர்கள் குழுவிடம் சென்ற கண்ணன், பதற்றமாக என்னிடம் ஓடிவந்தார். “வந்து கொண்டிருக்கிற ஆம்புலன்ஸின் உள்ளே நான்கு பேர் இருப்பது உறுதி. ஆனால், கேமராவில் தெரியும் காட்சிகள் கலங்கலாக உள்ளன. கேமரா சொதப்பிவிட்டது’’ என்றார்.

ஒரு நொடி எனக்கு மூச்சு நின்றது. தாக்கலாமா? அந்த நான்கு பேரும் வேறு யாராவது அப்பாவிகளாக இருந்தால்? முழுப் பழியும் என் தலையில் விழும். ஒருவேளை வீரப்பன் கும்பலாக இருந்து தாக்காமல் விட்டால், இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமலே போகலாம். என்ன செய்வது?

ஆம்புலன்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் எங்களை நெருங்கிக்கொண்டே இருந்தது. சில நொடிகளில் முடிவெடுக்க வேண்டும். திரும்பிப் பார்த்தேன். ஹெட்லைட்டோடு மஞ்சள் விளக்கும் எரிந்தது. ‘தாக்குவோம்’ என தலையாட்டினேன். ஒரு இசையமைப்பாளர் போல கண்ணன் கைகளை உயர்த்தி, எல்லா குழுக்களுக்கும் சிக்னல் செய்தார். எல்லோரும் நிசப்தத்தில் உறைந்தனர். ஆம்புலன்ஸ் ஓசையைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

p18c.jpg

இன்னும் 60 நொடிகள்!

ஒளிரும் தடுப்புகளைப் பார்த்ததும், ஆம்புலன்ஸை ஓட்டிவந்த சரவணனுக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ‘கச்சிதமாக பிரேக் போடு. ஆம்புலன்ஸ் உள்ளே இருக்கும் விளக்குகளின் சுவிட்ச்சைப் போடு. வீரப்பன் கும்பலுக்குச் சுற்றி இருக்கும் எதுவும் தெரியக்கூடாது. ஆனால், அவர்களை நாம் பார்க்க வேண்டும்’ என்று தரப்பட்ட கட்டளைகள் ஞாபகத்துக்கு வந்தன. 

ஆம்புலன்ஸ் உள்ளே இருக்கும் மூன்று விளக்குகளின் சுவிட்களையும் ஆன் செய்தார். தன் உடலின் முழு சக்தியையும் வலது காலில் இறக்கி, பிரேக்கை அழுத்தினார். கச்சிதமாக சாலை நடுவே, தடுப்புகளின் மத்தியில் ஆம்புலன்ஸ் நின்றது. திடீர் பிரேக்கால் டயர்கள் தேயும் வாசனை காற்றில் பரவியது. 

ஆம்புலன்ஸை பின்தொடர்ந்துவந்த திரு, சட்டென தன் வாகனத்தின் ஹெட்லைட்டை எரிய விட்டார். ஆம்புலன்ஸின் பின்பக்கம் அது வெளிச்சம் பாய்ச்சியது. எல்லா கண்களும் ஆம்புலன்ஸ் மீது பதிந்தன.

இன்னும் 5 நொடிகள்!

துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாப்போல, ஆம்புலன்ஸின் டிரைவர் சீட்டிலிருந்து சரவணனும், பக்கத்து சீட்டிலிருந்து வெள்ளத்துரையும் குதித்து இறங்கினார்கள். ‘கேங்க் உள்ளே இருக்காங்க’ என்றபடி சரவணன் எங்களை நோக்கி ஓடிவந்தார். வெள்ளத்துரை ஒரு கையெறி குண்டை ஆம்புலன்ஸின் உள்ளே போட்டுவிட்டு, நான்கே நொடிகளில் அது வெடிப்பதற்குள் உசைன் போல்ட் போல ஓடி, பாதுகாப்பான மறைவிடத்தில் சேர்ந்தார். இனி எங்கள் ஆட்கள் துப்பாக்கிச்சூட்டில் சிக்கும் பயமில்லை.

கண்ணன் மெகாபோனை எடுத்து எச்சரிக்கை செய்தார்: “உங்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம். சரணடைந்துவிடுங்கள்’’ என்றார்.

சில நொடிகள் கடந்தன. ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த வீரப்பன் குழுவில் யாரோ முதலில் ஏகே-47 துப்பாக்கியை எடுத்து சுட்டதும், மற்றவர்களும் இணைந்து சுட்டனர். ஆம்புலன்ஸின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. புளியமரத்தில் இருந்த பறவைகள் பதற்றத்தில் பறக்க, எங்கோ தூரத்தில் நாய் குரைக்க ஆரம்பித்தது.

p18d.jpg

ஒருவேளை நால்வரும் கைகளை உயர்த்தியபடி வெளியில் வந்திருந்தால், அவர்கள் சரணடைவதை நாங்கள் ஏற்றிருப்போம். ஆனால், அவர்கள் சுட ஆரம்பித்ததும் எங்கள் பதிலடி தீவிரமாக இருந்தது. எல்லா திசைகளிலிருந்தும் துப்பாக்கிகள் சீறின. சில நிமிடங்களில் எல்லோரும் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்தோம். அப்போதும் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்து இலக்கற்று யாரோ சுட்டார்கள். கண்ணன் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்தார். ஆனாலும், அவர்கள் சுடுவது நிற்கவில்லை. மீண்டும் ஒருமுறை எங்கள் குழு அதிவேகத்தோடு சுட்டது. சில நிமிடங்களில் எல்லோரையும் நிறுத்தச் சொல்லி சிக்னல் செய்தேன். ஆம்புலன்ஸ் புகையாலும் புழுதியாலும் சூழப்பட்டிருந்தது. அங்கிருந்த அதிரடிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ராஜராஜன் மற்றும் உசேனிடம் நான் சிக்னல் செய்ய, இன்னொரு கையெறி குண்டு ஆம்புலன்ஸ் உள்ளே வீசப்பட்டது. அது வெடித்தபிறகு டார்ச் அடித்தபடியே ஆம்புலன்ஸை நெருங்கினோம்.

சைக்கிள் டியூபிலிருந்து காற்று வெளியேறுவது போல உள்ளே ஒரு சத்தம். யாரோ மரணத்தின் இறுதி கணங்களில் மூச்சு விடுகிறார்கள் என்பது புரிந்தது. அதன்பின் பெரும் நிசப்தம். இருபது ஆண்டுகள் காத்திருப்பு, இருபது நிமிட என்கவுன்ட்டரில் முடிந்துவிட்டது.

ஆம்புலன்ஸ் உள்ளே இருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வீரப்பன், சேதுமணி, சந்திரகவுடர் ஆகிய மூன்று பேரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். சேத்துக்குளி கோவிந்தன் தனியாகக் கிடந்தான்.

வீரப்பனை முதன்முதலாக அப்போதுதான் பார்க்கிறேன். மரணத்தின் வாசலில் இருந்த அவனால் பேச முடியவில்லை. இடது கண்ணுக்குள் ஒரு குண்டு துளைத்திருந்தது. வழக்கமான பச்சை சட்டை, பெல்ட் இல்லாமல் சாதாரண உடையில் இருந்த அவனது மீசை ‘ட்ரிம்’ செய்யப்பட்டிருந்தது. (52 வயதிலும் உறுதியாக இருந்தான். அவனை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் வள்ளிநாயகம், ‘கண்களில் இருந்த பிரச்னை தவிர, மற்றபடி 25 வயது இளைஞன் போல வீரப்பன் இருந்தான்’ என என்னிடம் பிறகு சொன்னார்.) மீசைக்கு டை அடிக்கும்போது அலர்ஜி ஆகி, அவனுக்குக் கண் பார்வைக்குறைவு ஏற்பட்டது. கண்ணுக்கு சிகிச்சை எடுக்க மீசையைக் குறைத்தவன், கடைசியில் அதனாலேயே இறந்தான். மொத்தமாக 338 குண்டுகளை நாங்கள் சுட்டோம். கோவிந்தன் உடலில் ஏழு குண்டுகள் இருந்தன. இரண்டு குண்டுகள் வீரப்பனைத் துளைத்து வெளியில் வந்திருந்தன. ஒன்று, அவன் உடலிலேயே இருந்தது.

இது வீரப்பனுக்கான என்கவுன்ட்டர் என்பதை அறிந்த எங்கள் ஐந்து பேரைத் தவிர, மற்ற காவலர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். ‘இது வீரப்பனா அல்லது வீரப்பன் போல இருக்கும் வேறு யாராவதா?’ என அவர்களுக்கு சந்தேகம். ‘இது வீரப்பன்தான்’ என்று சொன்னதும், அவர்களுக்கு உற்சாகம் எகிறியது. என்னை அப்படியே தோள்களில் தூக்கிக்கொண்டனர். வார்த்தைகளற்ற ஆனந்தம் எல்லோர் மத்தியிலும் பரவியது.

p18e.jpg

என்னை அவர்கள் கீழே இறக்கியதும், பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று, முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு போன் செய்தேன்.

‘முதல்வர் தூங்கப் போய்விட்டார். எதுவும் அவசரமான விஷயமா?’ எனக் கேட்டார், முதல்வரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்.

‘நான் சொல்லப்போகும் தகவலை அவர் விரும்புவார்’ என்றேன். சில நிமிடங்களில் முதல்வரின் குரல் கேட்டது.

‘நாங்கள் வீரப்பனைப் பிடித்துவிட்டோம்’ என்றேன். நடந்த என்கவுன்ட்டரை விவரித்துவிட்டு, ‘வீரப்பனையும் மற்றவர்களையும் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அநேகமாக யாரும் பிழைப்பது சந்தேகம்’ என்றேன். எங்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர், அதிரடிப்படையினர் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதையும் விசாரித்தார். ‘முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து நான் கேட்ட மிக நல்ல செய்தி இதுதான்!’ எனச் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

நான் திரும்பி ஆம்புலன்ஸைப் பார்த்தேன். அதன் உச்சியில் இருந்த நீல விளக்கு இன்னமும் எரிந்தபடி சுழன்றுகொண்டிருந்தது. இவ்வளவு பெரிய துப்பாக்கிச் சண்டையில், அதன்மீது ஒரே ஒரு குண்டுகூட படாதது பெரும் ஆச்சர்யம்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.