Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை நிலை

Featured Replies

உண்மை நிலை

 

வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. 

இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை தொடர்பில் உரையாற்றியிருப்பதும் கவனத்துக்கு உள்ளாகும் செய்தியாகும்.

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கவிருக்கிறது என்பது ஒரு புறமாகவும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பது மறுபுறமாகவும் கடும் நிபந்தனையின் அடிப்படையில் கால அவகாசம் அமைய வேண்டுமென்பது இன்னொரு புறமாகவும் கால அவகாசத்தைப் பெறுவதற்காக சிவில் அமைப்புகளை களமிறக்கியிருக்கும் அரசாங்கத்தின் மாற்று முயற்சிகள் வேறு ஒரு புறமாகவும் நிலைமோதிக் கொண்டிருக்கும் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றியிருக்கிறார்.

மங்கள சமரவீரவின் உரையில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் திடசங்கற்பமாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரணை வழங்கியது. இவ்வாறானதொரு இணையனுசரணை வழங்கி 15 மாதகாலத்துக்குள் பல சாதகமான நிலைகளை நோக்கி நகர்ந்துள்ளோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிடுவதாயின் குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி இறுதியாக இச்சபையில் உரையாற்றிய பின்னர் நாட்டில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.

1. பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச சாசனத்தை எமது அமைச்சரவை அங்கீகரித்தது.

2. பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக சர்வதேச தரத்திற்கு உட்பட்ட புதிய வரைபு தயாராகி வருகிறது.

3. காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

4. மீள்குடியேற்றத்துக்கு நிலையான தீர்வைக் காண்பதற்கான தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

5. காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

6. புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான 6 உபகுழுக்களின் அறிக்கைகள் பூர்த்தியாகியிருப்பதுடன் அவை அரசியல் அமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

7. நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட செயலணி, சுமார் 7 ஆயிரம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதுடன் அவை விரிவாக ஆராயப்பட்டு செயற்படுத்தப்படவுள்ளன.

இதுபோன்றே சித்திரவதைகள் பூச்சியமாக்கப்பட்டுள்ளன. உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபு விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்பு நிறைவேற்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமெனவும் பல்வேறு முன்னேற்றங்கள் இலங்கையில் நடந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அட்டவணை ப்படுத்திக் காட்டியுள்ளார்.

அமைச்சரின் முன்னேற்றகரமான அட்டவணை குறித்து ஆராய்வதற்கு முன்பு இன்றைய சூழலில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் போக்கும் இலங்கையின் சமகால நகர்வுகள் குறித்தும் சுருக்கமாக நோக்குவது கட்டுரைக்கு தெளிவு தரும்.

2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பல்வேறு சங்கடங்களையும் சர்ச்சைகளையும் இலங்கை அரசுக்கு உருவாக்கியிருந்தது. குறிப்பாக இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு, ஆதரவளிக்க இந்தியா தயக்கம் காட்டிய போதிலும் தமிழகத்தின் வலியுறுத்தல், நெருக்கடி நிலை காரணமாக தீர்மானம் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக முன்னாள் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் (19.03.2012) தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்குமென பாராளுமன்றில் அறிவித்திருந்தார். ஆதரவளிக்குமென பகிரங்கமாகக் கூறிவிட்டு இரண்டு திருத்தங்களையும் இலங்கைக்கு சார்பாக இந்தியா முன்வைத்தது. அமெரிக்க தீர்மானத்தை இது நீர்த்துப்போக வைத்ததாக விமர்சிக்கப்பட்ட அதேவேளை தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கியூபா போன்ற நாடுகள் முன் வைத்தபோதும் அமெரிக்கா அதை நிராகரித்து இருந்தநிலையிலும் இலங்கைக் கெதிரான தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் நடுநிலையாக 8 நாடுகளும் ஜெனிவா சமரில் பங்கு கொண்டன.

2013 ஆம் ஆண்டு இலங்கைக்கான நிலைமைகள் இன்னும் புதிய போக்கைக் கொண்டதாக மாறியது. 2013 ஆம் ஆண்டின் வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் நடுநிலையாக 8 நாடுகளும் காணப்பட்டன.

அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியில் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது என இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட நிலையில் இந்தியப் பாராளுமன்றில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கோஷம், ஆர்ப்பாட்டம், தமிழகம் எங்கும் வெடித்த மாணவர் போராட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பங்காளிக்கட்சியாக இருந்த தி.மு.க. இலங்கை விவகாரத்தை சாட்டாக வைத்துக் கொண்டு (19.03.2013) கூட்டணியிலிருந்து வெளியேறிமை, பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான ஆவணப்படம் (01.03.2013) (நோ பயர் ஸோன்) வெளிவந்தமை என்ற பின்னணியில் இந்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தீர்மானத்துக்கு ஆதரவு நல்கியது.

ஆதரவு நல்கிய போதும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இவ்வாறு கூறியிருந்தார்.

இலங்கையை எதிரிநாடாகக் கொண்டு இந்தியா செயற்பட முடியாது என்று கூறியதுடன் அமெரிக்கா இலங்கையுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் கருத்தானது முற்று முழுதாக இலங்கையை ஆதரிப்பதாகவேயிருந்தது. இதன்பின் நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்தின் கனதி குறைக்கப்பட்டு தீர்மானம் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவால் 2013 இல் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானமானது அதிகளவு மென்தன்மை கொண்டதாக இருந்த நிலையில் இந்த மென் தன்மைக்கு இந்தியாவின் செல்வாக்கே காரணமென சர்வதேச மன்னிப்புச் சபை இந்தியாவின் மீது குற்றம் சாட்டியிருந்தது.

2014 ஆம் ஆண்டு எல்லாமே தலைகீழாக மாறிய நிலையில் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் நடுநிலையாக 12 நாடுகளும் ஆகிக் கொண்ட நிலையில் 11 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட இந்தியா தீர்மானத்துக்கு எதிர்ப்பாகவும் நடுநிலை வகித்த நாடுகளின் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது என தனது கவலையைத் தெரிவித்திருந்தார்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் போக்கு இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில்தான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2014 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது விஜயத்தின்பின் 74 விடயங்களை உள்ளடக்கிய 20 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ் அறிக்கையானது இலங்கை ஆட்சியாளர்களை கடும் நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது.

நவநீதம்பிள்ளையின் ஓய்வைத் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் அறிக்கையொன்றை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் (13.09.2015) வெளியிட்டு உரையாற்றியிருந்தார்.

குரூரமான பாலியல் வன்முறைகள், நீதிக்குப்புறம்பான கொலைகள், குற்றம் இழைத்தவர்க்கு தண்டனையில்லை, சரணடைந்த பலரைக் காணவில்லை, வெள்ளைவேன் கடத்தல்கள், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள், மனிதாபிமானமற்ற சித்திரவதைகள், சிறுவர் ஆள்சேர்ப்பு என்றவகையில் இந்த அறிக்கையினூடாக வெளிக்கொண்டுவரப்பட்ட மீறல்கள் முழு சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் பாரதூரமான குற்றங்களாகும்.

எனவே விசேட கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரியுங்கள். சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகளை உள்ளடக்குங்கள் என்ற பரிந்துரையையும் அவர் செய்திருந்தார்.

இத்தகைய வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் கால அவகாசத்தைக் கோருவதாக கூறப்பட்டாலும் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்து வருவதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பான மூன்று அறிக்கைகள் இத்துடன் ஐ.நா.உறுப்பு நாடுகளின் ஐரோப்பியப் பிரிவின் தீர்மானம் என பலமுனை தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக விமர்சிப்புகள் வெளியாகிவருகின்றன.

இதேவேளை இலங்கையிலிருந்து சென்ற அரசசார்பற்ற அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா.குழுக்கூட்டத்தில் முன்வைத்துள்ளனர். இவ்வகையான சூழ்நிலையில் இம்முறை கூட்டத்தொடர் இலங்கைக்கு முக்கியமானதாகக் காணப்படுகிறதென்றும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்து மூல அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளாரென்றும் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற விவாதத் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதியும் இடம்பெற்று 23 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த விவாதங்களும் இடம்பெற்று வாக்கெடுப்புக்கு விடப்படுமென்ற முன் அறிவித்தல் தரப்பட்டுள்ளன. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட, முன்வைக்கப்படவுள்ள முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் தொடர்பிலுள்ள நிதர்சன நிலைகளை சற்றுக் கூர்மையுடன் நோக்குவோம்.

பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சர்வதேச சாசனத்தை இலங்கை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என்ற விடயத்தை அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் 1990 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்களான காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது? இவ் அறிக்கையையும் இதனுடன் உடலகம அறிக்கை, மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை, அமெரிக்க தீர்மான அறிக்கை என்பவற்றை பாராளுமன்றில் 2015 இல் சமர்ப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த தகவலையும் பெறமுடியவில்லையென்று கூறியிருந்தார். இப்பிரச்சினைக்கு இன்னும் அரசாங்கத்தால் தீர்வு காணப்படவில்லை. தீர்வும் காணமுடியாத நிலையே காணப்படுகிறது. இதன்பின்னணியில் யார் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்துக்கு வெளிப்படையாகவே தெரியும்.

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக வடகிழக்கில் நீண்ட காலமாகவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையும் அப்போராட்டங்கள் இன்னும் ஓயவில்லையென்பதற்கு உதாரணமாக கடந்த வாரம்கூட கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தமை செய்திகளாக வெளிவந்துள்ளன. இவ்வாறான நிலையில் காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச சாசனத்தை எமது அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என மங்கள சமரவீர தெரிவித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகவே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்னேற்ற செயற்றிட்டங்களில் இன்னொன்று பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக சர்வதேச தரத்துக்கு உட்பட்ட புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளோம் என்ற செய்தியாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் எத்தனையோ அப்பாவி தமிழ் இளைஞர்கள், யுவதிகள் காவு கொள்ளப்பட்டார்கள் என்பது நாடறிந்த விடயம். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின் எத்தனையோ மனித உரிமை அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் மேற்படி சட்டத்தை நீக்குங்கள் என பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் செவிடன் காதில் ஊதிய சங்குபோலவே ஆகியிருந்தது. நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் தன்னிச்சையான தடுப்புக்காவல்களை அனுமதிக்கும் ஒழுங்குவிதிகளை இலங்கை உடனடியாக நீக்க வேண்டுமென காட்டமாகக் கூறியிருந்தமையை இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. இதுவிடயம் தொடர்பில் தற்போதைய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் 2015 ஆண்டு அறிக்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் உடனடியாக உயர்மட்ட மீளாய்வு ஒன்று செய்ய வேண்டும். அதற்குப்பதிலாக சர்வதேச தரத்துக்கு அமைந்த தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்தார்.

மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்த சர்வதேச தரத்துக்கு உட்பட்ட, புதிய வரைபு எந்தளவுக்கு தமிழ் இளைஞர்களையும் அரச ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஏனைய சமூக இளைஞர்களையும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கும் என்பது பற்றி பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. புதிய பயங்கரவாத சட்ட வரைபு தொடர்பில் அண்மையில் பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வரைபு பற்றி கருத்து தெரிவிக்கையில், ஏலவேயுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு அப்பால் புதியது கடுமையாக இருக்கப் போகிறது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவ்வாறு பார்க்கின்றபோது இலங்கையின் புதிய அரசாங்கமானது எவ்வகை முன்னேற்றங்களை நாட்டின் யதார்த்தப்போக்கை இல்லாமல் செய்துவந்துள்ளது என்பது மீண்டும் மீண்டும் கேட்கவேண்டிய கேள்வியாகவேயுள்ளது.

இலங்கை அரசாங்கம் இன்று தன்னைப் பெருமைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கின்ற விடயம் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படுவதுடன் இந்நாட்டில் வாழும் சகல இனமக்களும் சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழும் சூழ்நிலையொன்று உருவாகுமெனக் கூறிவருகிறது.

மங்கள சமரவீர மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும்போது புதிய அரசியல் சாசனம் பற்றி பிரஸ்தாபிக்கையில் புதிய அரசியல் சாசனமானது நாட்டுமக்களின் உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும். 70ஆவது சுதந்திர தினத்தை நாம் 2018 இல் கொண்டாடும் போது கடந்த காலத்தில் பிரிந்திருந்த மக்கள் இணையும் வாய்ப்பு உருவாகுமென கூறியிருந்தார். அமைச்சரின் இந்த எதிர்பார்ப்பையே நாட்டிலுள்ள சகல மக்களும் இலக்காகக் கொள்ள நினைக்கின்றார்கள். ஆனால் யதார்த்தம் மறுமுனை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வோ அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சாசனமாகவோ புதிய அரசியல் சாசனம் அமையப்போவதில்லையென்ற அதிருப்தியும் விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதையே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையாக இன்று காணப்படுகிறது. எதிர்பார்த்ததுமில்லை, இழப்புக்களுக்கு ஈடுகட்டும் பரிகாரமுமில்லை. தியாகங்களும் இளைஞர்களின் அர்ப்பணிப்புகளும் விடுதலை மரணிப்புக்களும் தீய்ந்து போனவையாகவே ஆகிவிடுமோ என்றே பயப்பட வேண்டியுள்ளது.

 

மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்புக்களில் புதிய அரசாங்கம் கூட எவ்வளவு தூரம் விடாக்கண்டனாகவும் கொடாக்கண்டனாகவும் இருந்துவருகிறது என்பதை வடக்கில் 6124 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கவேண்டுமென சிறுபான்மை மக்கள் குறித்த ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா பரிந்துரை செய்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான் மூடி மறைக்கும் நாடகங்களை இலங்கை சர்வதேச அரங்கில் நடத்த முயன்றாலும் இலங்கையின் உண்மை நிலை வேறாக இருக்கிறது என்பது புரியாத விடயமல்ல. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-04#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.