Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்

Featured Replies

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்
 

article_1490776103-article_1479829865-prதமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.  நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன. 

ஆனால், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில், அதிகமானோருக்கு என்ன காரணத்துக்காகத் தாங்கள் அழைத்து வரப்பட்டோம் என்றே தெரிந்திருக்கவில்லை.  

வெள்ளந்தியான பல தாய்மார், தாம் என்ன கூறி அங்கு அழைத்துவரப்பட்டோம் என்பதை, ஊடகவியலாளர்களிடம் எந்தவித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்தினர். 

அவர்களின் கைகளில் ‘எமது தலைவன்’ என்று நடிகர் ரஜினிகாந்தின் படம் தாங்கிய அட்டைகள் இருந்தன. அந்த அட்டைகளுக்குள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்வதில் அந்தத் தாய்மார் கவனம் செலுத்தினர். 

தம்மை கலைஞர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, மக்களை ஆர்ப்பாட்டக்களத்துக்கு அழைத்து வந்த நபர்கள், ஊடகவியலாளர்களின் கேள்விகளினால் அல்லாடினர்.    

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 150 வீடுகள் வவுனியாவிலுள்ள சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. 

குறித்த வீடுகளைப் பயனாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாகக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. 

அந்த அறிவிப்பினை அடுத்து, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலரினால் ரஜினிகாந்தை நோக்கி, விமர்சனத் தொனியிலான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அதில், தொல்.திருமாவளவனும் தி.வேல்முருகனும் முக்கியமானவர்கள். 

இந்த நிலைகளை அடுத்து, ரஜினிகாந்த் தன்னுடைய யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை இரத்து செய்வதாகக் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்தப் பின்னணியில்தான், குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.  

ஆதரவு- எதிர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவது தனி மனித உரிமை. ஆனால், போராட்டமொன்றின் பின்னணி பற்றி அறிந்து கொள்வது சில புரிதல்களைப் பெற்றுக் கொள்ள உதவும். அதன்போக்கில் சில விடயங்களை இந்தப் பத்தி சுட்டிக்காட்ட விளைகின்றது.  

ரஜினிகாந்தின் யாழ். வருகை பற்றிய செய்தி வெளியானதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பொன்றை யாழ். ஊடக அமையத்தில் நடத்தியிருந்தார். அங்கு, ‘ரஜினியின் வருகை இப்போது அவசியமானதா?’ என்கிற தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால், அந்தச் செய்தி இணைய ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்ததோடு சரி; யாழ். முன்னணிப் பத்திரிகைகளில் இரண்டில் துண்டுச் செய்திகளாகக்கூட வெளியாகியிருக்கவில்லை. வழக்கமாக, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஊடகச் சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஊடகங்கள், ஏன் ரஜினிகாந்தின் வருகையை கேள்விக்குள்ளாக்கிய அவரது செய்திக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் மட்டத்தில் சந்தேகத்தோடு உரையாடப்பட்டது. 

ஆனால், ரஜினிகாந்த் தன்னுடைய யாழ். வருகையை இரத்து செய்வதாக அறிவித்ததும், அடுத்த நாள் காலை, ‘மாவீரர் மண்ணைத் தரிசிக்க ஆவலாக இருந்த ரஜினியின் வருகை தடுக்கப்பட்டது’ என்கிற தோரணையில், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கேள்விகளைப் புறக்கணித்த ஊடகங்களே செய்தி வெளியிட்டன.

இது, சந்தேகங்களின் அளவினை ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும் அதிகரித்தது.  இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரினால் யாழ்ப்பாணத்தின் முன்னணி ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியினூடாகச் சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தின் முன்னணி நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனாலும், அதிகமான ஊடகவியலாளர்கள் அந்தச் சந்திப்பினைத் தவிர்த்திருந்தனர். இந்த நிலையில்தான் ஆர்ப்பாட்டப் போராட்டத்துக்கான அழைப்பு, ‘ஈழத்து கலைஞர்கள் - வடக்கு மாகாணம்’ என்கிற பெயரோடு விடுக்கப்பட்டது. 

குறித்த தகவலை இணையத்தில் முதலில் பகர்ந்தவர் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனாலும், அந்த நபர்கள் தொடர்பில் ஒருவிதமான சந்தேகமும் எள்ளலும் ஊடகவியலாளர்கள் மட்டத்திலும் இணைய வெளியிலும் பகரப்பட்டன. 

ஆனால், அன்றிரவே பெரியளவில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டிகளை ஒட்டுவது உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்வதற்கான ஒப்பந்தம் அரசியல் கட்சியொன்றை நடத்தும் நபரொருவருக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டளவானவர்கள், சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளையும் பெறவுள்ள பயனாளர்கள். அவர்களிடம் வீடுகளை வழங்குவது தொடர்பிலான கூட்டம் என்று கூறி அழைத்து வரப்பட்டார்கள். 

இன்னொரு பகுதியினர் யாழ்ப்பாணம்,  வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் எதிர்காலத்தில் வீட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் என்று கூறப்பட்டதாக அங்கு வந்திருந்த தாய்மார் கூறினர் 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 30 சதவீதமானவர்களுக்கே தாம் ஏன் அங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது. அவர்களில் பலருக்கும், “ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், வீடுகள் வழங்கப்படாது” என்கிற தொனியிலான விடயமும் பகரப்பட்டிருக்கின்றது.  

முள்ளிவாய்க்கால் கொடூரங்களைச் சந்தித்துவிட்டு, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தகரக் கொட்டில்களில் வாழும் மக்களுக்கு வீடு எவ்வளவு முக்கியமானது என்பது, அந்த வாழ்க்கையோடு உழன்று பார்த்தவர்களுக்குப் புரியும்.

ஆனால், அந்த மக்களின் நிலையைத் தங்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவும் நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்வதிலுள்ள வக்கிரம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடுகள் என்பது தவிர்க்க முடியாத தேவை. அவர்களை நோக்கி, “பிச்சையெடுக்க வந்திருக்கின்றார்கள், இவர்களினால்தான் தமிழ்த் தேசியப் போராட்டங்களுக்கே அவமானம்” என்கிற தோரணையிலான வசைபாடல்கள் ஒருவகையில் பொறுக்கித்தனமானவை. 

அதிகாரத்தின் கைகள் அல்லது சதி வலைகளைப் பின்னியவர்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை நோக்கி ஓர் ஏளன மனநிலையோடு கைகளை நீடிக்கொண்டு துப்புவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 

எப்போதுமே அதிகாரத்தின் கைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடும் மக்கள் சில நேரங்களில், அதன்போக்கில் பயணித்தே அந்தக் கொடுங்கரங்களுக்குள் இருந்து வெளி வந்திருக்கின்றார்கள்.

இதுதான் கடந்த கால வரலாறும் கூட. இதற்கான உதாரணங்கள் சிலவற்றையும் இங்கு பட்டியலிடுவது சுலபமானது. வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், யாழ். நகரப்பகுதியில், வடக்கின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகளைக் கொண்டு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 

அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடத்தியது யார்? எந்தத் தரப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் போராளிகளுக்கு எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பதுவும் தெரியும்.  

அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற அரச ஆதரவுக் கூட்டங்களுக்கு மக்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதுவும் நாம் அறிந்தது.

அப்போதெல்லாம், அரசாங்கத்தோடு கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மஹிந்தவினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் எப்படியானதோ, அதேமாதிரியான ஒப்பந்தமே நல்லூரில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை அழைத்து வருவதற்காகவும் விடுக்கப்பட்டது. 

இதில், என்ன புதுமை என்றால், மஹிந்த காலத்தில் ஒப்பந்தக்காரராக செயற்பட்ட ஒருவரே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் ஒப்பந்தக்காரராக இருந்தார் என்பதுதான்.  

இந்தப் பத்தியாளரிடம் இளம் ஊடகவியலாளர் ஒருவர் கூறினார், “அண்ணா, ரஜினியின் வருகையை பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ரஜினியை அழைத்து வருவதன் மூலம் தாம் பெரியவர்கள் என்கிற விலாசம் காட்டவும் தனிப்பட்ட வர்த்தக இலாபங்களைப் பெறவும் ஒரு தரப்பு முயற்சித்தது.

அந்தத் தரப்பிடம் பெரும் பணம் உண்டு. அந்தப் பணத்துக்கு அரசியல் தரகர்கள் இணங்கிச் செல்வதும் இயல்பு. ஆனால், தங்களைத் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்கின்ற ஊடகங்கள் சிலவும் பணிந்திருப்பதுதான் வருத்தமான செய்தி” என்றார்.

நிலைமை இப்படியிருக்க, இந்த அப்பாவி மக்களை நோக்கி வசை மாரிகளைப் பொழிந்துதான்,  உங்களின் தமிழ்த் தேசியப் பற்றினையெல்லாம் காட்ட வேண்டியதில்லை. அலைக்கழிப்பின் வலி பெரியது. அந்த மக்களுக்காக இரங்குவோம். சூழ்ச்சிகளை இனம்கண்டு தோற்கடிப்போம்.    

- See more at: http://www.tamilmirror.lk/193959/ரஜ-ன-ய-ன-ய-ழ-ப-ப-ண-வர-க-ய-ம-ன-வ-த-த-த-றந-த-அரங-க-கள-#sthash.sxCRjuL6.dpuf
  • தொடங்கியவர்

ரஜினி செய்த குற்றம் என்ன?

 

 
 
thalaiva_3148946f.jpg
 
 
 

இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம், ஞானம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாக அதை ரத்துசெய்துவிட்டார். அதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை சிந்திக்க வைக்கிறது. “தங்களது உரிமைக்காக, சுய கௌரவத்துக்காக ரத்தம் சிந்தி மடிந்து, தங்களைத் தாங்களே சுய சமாதியாக்கிக்கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்த்துச் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக என்னுள் இருந்தது” என்று அந்த அறிக்கையில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார். இது நல்ல விஷயம் அல்லவா! ரஜினியைப் போன்ற புகழ்மிக்க நடிகரை வைத்து இலங்கை அரசு ஆதாயம் தேடும் என்று திருமாவளவனே சொல்லியிருக்கிறார். எனில், தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ரஜினி வேண்டுகோள் விடுத்தால், அதற்கு இலங்கை அரசு செவிசாய்க்கும் என்றே எடுத்துக்கொள்ளலாமா?

சரி, இலங்கைப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் செய்தது என்ன? அறிக்கைப் போராட்டம்தானே? திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி வைத்தார்கள். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் ஆதரவு தருவோம் என்ற அடிப்படையிலா கூட்டணி உடன்பாடு செய்துகொண்டார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் என்பது தீர்வு சார்ந்தாக இருக்க வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு தேவை. அது இந்த விஷயத்தில் அவர்களுக்கு இருக்கிறதா?

“மக்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய கடமை. அடுத்த முறை கலைஞன் என்ற முறையில் நான் இலங்கை சென்றால், அதை அரசியலாக்கி என்னைத் தடுக்காதீர்கள்” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். அதன் அர்த்தங்கள் பல.

திருமாவளவன், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை அதிபர் ராஜபக்சவைச் சந்தித்த பிறகு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டனவா? சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சி வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. அதன் பின்னர் புகை பிடிக்கும் காட்சியில் ரஜினி நடிப்பதில்லை. இலங்கை போகக் கூடாது என்றார்கள். அவர் போகவில்லை. பதிலுக்கு அந்தக் கலைஞன் அரசியல் தலைவர்களிடம் ஏதாவது கோரிக்கை வைத்தால், அதை அவர்கள் ஏற்பார்களா? சம்பந்தப்பட்ட தலைவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/ரஜினி-செய்த-குற்றம்-என்ன/article9606832.ece

  • தொடங்கியவர்
ரஜினி வருகை எனும் கூத்து
 
30-03-2017 12:52 PM
Comments - 0       Views - 27

article_1490859321-Rajanikath-new.jpg - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு வரவிருக்கிறார் எனவும், அறக்கட்டளையொன்றால் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்கு வழங்கிவைக்கவுள்ளார் எனவும், சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே, அவர் வரமாட்டார் என்ற செய்தி, அதைவிடப் பெரியளவில் வெளியாகியது.  

ரஜினிகாந்த் வரமாட்டார் என்ற செய்தியும், அதன் பின்னரான சில சம்பவங்களும் ஏற்படுத்தியுள்ள கருத்துப் பரிமாற்றங்கள், இலங்கை, இந்தியத் தமிழ்ச் சூழலில், மிகப்பெரியளவு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இவ்விடயத்தைப் பற்றி ஆராய்வது, பொருத்தமானது.  

ரஜினிகாந்த், இலங்கைக்கு வருகிறார் என்ற செய்தி வெளியானதும் கூட, இலங்கையில் முழுமையான வரவேற்புக் காணப்பட்டிருக்கவில்லை. அவரைக் காண்பதற்கு, அவரது இரசிகர்கள் ஆர்வமாக இருந்த போதிலும், யாரோ ஒருவர் கட்டிய வீடுகளை வழங்குவதற்காகத் தான் வருகிறார், அதுவும், அவரது திரைப்படத்துக்கான விளம்பரத்தைத் தேடவே அவர் வருகிறார் என்ற விமர்சனமும் காணப்பட்டது.  

இந்திய சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையை வைத்துப் பிழைத்துக் கொள்வோர் ஏராளம். எனவே, ரஜினிகாந்த்தின் யாழ்ப்பாண விஜயத்தை வைத்துக் கொண்டு, அவரது திரைப்படத்துக்கான விளம்பரம் தேடப்படும் என்ற சிந்தனை, தவறானதல்ல. வியாபாரம் என்ற வகையில், அதைத் தடுக்க முடியாது என்ற போதிலும், “எங்களது வலிகளை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்” என்று சொல்வதற்கான உரிமை, மக்களுக்கு நிச்சயமாகவே உண்டு.  

மறுபக்கமாக, அவரது வருகையின் உட்காரணம் என்னவென அறியாத நிலையில், அவரது வருகையை எதிர்ப்பதும், ஒருவகையில் தவறானது தான். அவரது வருகை தொடர்பான சந்தேகங்கள் காணப்பட்டால், அவருடன் அல்லது அவரது பிரதிநிதிகளுடன் பேசி, தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். அவ்வாறானதொரு முயற்சி இடம்பெற்றதாகத் தெரியவில்லை.  

இவையெல்லாம் பழைய கதைகள். ஏனென்றால், இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது எனத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தனது பயணத்தை, ரஜினிகாந்த் இரத்துச் செய்துள்ளார். இலங்கைத் தமிழர் விடயங்களைக் குத்தகைக்கு எடுத்து, அதன் மூலம் அரசியல் செய்துகொண்டிருக்கும் தொல். திருமாளளவன் போன்றோரே, இந்தப் பயணத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்.  

எதற்காக ரஜினிகாந்த், இலங்கைக்கு வரக்கூடாது என்று தடுத்தார்கள் என, திருமாவளவன் தரப்பினர், நேற்று முன்தினம் விளக்கமளித்தனர். இதில், காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்கள் திசைதிருப்பப்படக்கூடாது என்பதைத் தெரிவித்ததோடு, ஒரு கட்டத்தில் “ரஜினிகாந்த் அமரும் மேடையில், சிங்கள எம்.பிக்கள் அமரவிருந்தார்கள்” என்று தெரிவித்தனர்.  

காணாமல் போனோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம், நடிகரொருவரின் வருகையால் திசைதிருப்பப்படுமென்பது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.  ஏனென்றால், தமது உறவுகள் குறித்து விடையளிக்கப்படும் வரை, தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என, அம்மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அதேபோன்று. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும், திருமாவளவன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய எதிர்ப்பு, அரசாங்கம் மீது இருக்கிறதே தவிர, பெரும்பான்மையினர் மீது கிடையாது.  

இலங்கை விடயத்தில், இந்தியத் தலையீடு என்பது, காலங்காலமாகவே இருந்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயிற்றுவித்தமை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், இந்திய அமைதிகாக்கும் படைகள், இறுதி யுத்தம் என, இந்தியாவின் பங்களிப்பு, நீண்டு செல்கிறது. அதேபோன்று தான், தமிழகத்தின் பங்கேற்பும்.  

“தொப்புள்கொடி உறவு”களுக்கான போராட்டம் என்று, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள்,சில உயிர்களையும் இழக்கச் செய்திருந்தன. அவ்வாறு, இலங்கைத் தமிழ் மக்களுக்காக உயிரை விடுமளவுக்குக் காணப்பட்ட உணர்வுகளை, மதிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

ஆனால் அதையும் தாண்டி, யதார்த்தமென்ற ஒன்று உள்ளது. தமிழகத்தின் போராட்டங்கள், யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமையால் மேற்கொள்ளப்படுகின்றன என்ற வாதம், நீண்டகாலமாகவே உண்டு.  

குறிப்பாக, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென்பது, ஒரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம், பாரிய தவறுகளைச் செய்துள்ளது என்றே வைத்துக் கொண்டாலும், முழு நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அனைவரும்தானே பாதிக்கப்படுவர்? இந்தப் போரை எதிர்த்த பெரும்பான்மையின மக்கள், இந்தப் போரில் நேரடியாகப் பங்குபெறாத முஸ்லிம் மக்கள், இந்தப் போரால் அதிகளவு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர், பொருளாதாரத் தடையின் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழக அரசியல்வாதிகள்தான், இலங்கை மீது தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுக்கின்றனர்.  

அதேபோல்தான், இலங்கைக்கு ரஜினிகாந்த் வருவதால், இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பா, நன்மையா என்பதை, அம்மக்கள் தான் முடிவுசெய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, தமிழகத்தில் இருந்துகொண்டு, “இதனால் உங்களுக்குப் பாதிப்பு” என்று முடிவுசெய்வது, இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஆரோக்கியமான சூழல் கிடையாது. “தொப்புள்கொடிகள்”, கழுத்தைச் சுற்ற ஆரம்பித்துள்ளன என்பதையே, இது காட்டுகி‌றது.  

இதில், ரஜினிகாந்தின் மேல், பிழைகளைக் கூற முடியாது. தனது திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் கிளை அறக்கட்டளை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்யும் சேவைகளில் பங்கெடுக்குமாறு கோரப்பட, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற அடிப்படையில், இதற்கான தேவை, அவருக்கு இருந்தது. அதேபோல், நற்பணியொன்றில் தனது பங்களிப்பும் காணப்படலாம் என அவர் நினைத்ததிலும் தவறு கிடையாது.  

எனவே, இவ்விடயத்தில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்கள், தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களே தவிர, இவ்விடயம் தொடர்பான எதிர்ப்புகள் கிடையாது.  

அதேபோல், குறித்த அறக்கட்ளை நிறுவனத்தின் மீதும், முழுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது. அவ்வறக்கட்டளை, இலங்கையில் பல முக்கியமான சேவைகளைச் செய்துவருகிறது.  

இம்முறை வழங்கப்படவுள்ள 100 வீடுகள் தான், அந்நிறுவனம் வழங்கும் முதல் தொகுதி வீடுகளும் கிடையாது. ஏற்கெனவே பல தொகுதி வீடுகளை, அவ்வறக்கட்டளை வழங்கியுள்ளது. எனவே, அந்தப் பணிகளுக்குத் தலைசாய்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. போருக்குப் பின்னரான ஒவ்வோர் அபிவிருத்திச் செயற்பாட்டையும் மெச்ச வேண்டிய தேவை இருக்கிறது.  

அதேபோல், தனது பணிக்கான விளம்பரத்தைத் தேடிக்கொள்ள அந்நிறுவனம் விரும்பியமையையும், முற்றாகத் தவறு என்று கூறிவிட முடியாது. ஏற்கெனவே பல சேவைகளைச் செய்துள்ள அவ்வறக்கட்டளை, தனது இந்தப் பணிக்கு, மக்கள் கவனம் திரும்ப வேண்டுமென எண்ணியிருக்கலாம். கோவிலுக்கு வழங்கும் எவர்சில்வர் தட்டில், பெயர்பொறித்துக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்ட நாம், பல மில்லியன் ரூபாய் செலவில் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்பவர்கள், அதற்கான பெயரைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எண்ணுவது, நியாயமற்றது.  

ஆனால், ரஜினிகாந்த்தின் வருகை, இரத்துச் செய்யப்பட்ட பின்னர், அவ்வறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயங்கள், முகஞ்சுழிக்க வைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். “ஈழத்துக் கலைஞர்கள்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட, “ரஜினிகாந்தின் வருகையை இடைநிறுத்தியமைக்கு எதிரான” ஆர்ப்பாட்டத்தில், அந்நிறுவனத்தின் வீட்டுத் திட்டம் மூலம் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பங்குபெற வைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதுவும், யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் என்று கூறப்பட்டே அவர்கள் அழைக்கப்பட்டதாகவும், அவ்வாறு வராவிட்டால், வீடு வழங்கப்படாது என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இவை அனைத்தும் உண்மையாக இருந்தால், அது கீழ்த்தரமான நடவடிக்கையாகும். அவர்களுடைய மாபெரும் திட்டம், நியாயமற்ற முறையில் இல்லாது செய்யப்பட்டது என்று அவர்கள் கருதினாலும் கூட, மக்களாக விரும்பி மேற்கொள்ளாத ஆர்ப்பாட்டங்களால் எவ்வித பயனும் கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

அதேநேரத்தில், அந்தப் “போராட்டத்தில்” கலந்துகொண்ட மக்களை, சமூக ஊடக இணையத்தளங்களில், சிலர் கேலி செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது. நாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்ட மக்கள், தாங்கள் இருப்பதற்கான வீடொன்றை, அறக்கட்டளையொன்றின் உதவியுடன் பெறவிருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள், தங்களுக்கு விருப்பமில்லாத சில விடயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது, இப்பிரச்சினையால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், அந்த மக்கள் மாத்திரமே என்பதைக் காட்டி நிற்கிறது என்பதுதான் யதார்த்தமானது.

அதைத் தவிர, இலங்கைக்கு ரஜினிகாந்த் வர முற்பட்ட விடயத்தால், வேறு எவரும் பாதிக்கப்படவில்லை என்பதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.    

- See more at: http://www.tamilmirror.lk/194036/ரஜ-ன-வர-க-என-ம-க-த-த-#sthash.n9qM7pwS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.