Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்த்தான் பூச்சாண்டி காட்டுவோரின் பின்னணி என்ன?

Featured Replies

 

9704_1493443989_ez.jpg

பாகிஸ்த்தான் பூச்சாண்டி காட்டுவோரின் பின்னணி என்ன?

 

(அவதானி)இலகுவான வாய்ப்பாடு  கிழக்கில் அடிக்கடி  பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மக்களுக்கெதிரான நஞ்சை விதைப்பது. இல்லாவிட்டால் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்தைச் சொல்வதன் மூலம் வடகிழக்கு எந்தக் காலத்திலும் இணைந்து விடக் கூடாது என்ற உணர்வை அவர்களுக்கிடையே ஆழமாகப் பதிய வைப்பது. இதன் மூலம் இவர்கள்  யாருடைய தேவையை நிறைவேற்றுகின்றார்கள் என்பது சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.
`ஊரில்`எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்` என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அதன்  உண்மையான நிலை அப்போது தான் இவர் அந்தக் கதையை  ஆரம்பிக்கிறார் என்பதே. சிண்டு முடிவோர் இச் சொல்லைத்தான் அடிக்கடி பயன்படுத்துவர். `கிழக்கில் தமிழர்கள்  மீது அறிவிக்கப்படாத இஸ்லாமிய யுத்தம்` என்ற கட்டுரை நிச்சயமாக இந்த வகையைச் சேர்ந்தது தான். முதல் பந்தியே இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டாவது பந்தி தமிழர்களுக்குக்  கொம்பு சீவி விட்டு இன உறவை மேலும் மோசமாக்கும் நோக்கம் கொண்டது.  
`கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் எழுச்சி பெறா விட்டால்  கிழக்கின் வரலாறு மாற்றி எழுதப்படும் என ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்`  என்ற வசனமும் இப் பதில் கட்டுரையின்  ஆரம்பத்தில் குறிப்பிட்டதை உறுதிப் படுத்துகிறது.  
முஸ்லீம் பெண்களுக்கான தனியான பேரூந்து சேவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.  சில அச்சங்கள் தவிர்க்க முடியாதவை. உதாரணத்துக்கு 1/12/1990 அன்று ஆரையம்பதியில் விஜி (நல்லதம்பி அனுஷ்யா) என்கிற உயர்தர வகுப்பு மாணவி தமிழ் அரசியல் கட்சியொன்றின்  ஆயுதக் குழுவினால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனை எந்த தமிழ் அரசியல் கட்சியும் கண்டிக்க வில்லை. மூத்த ஊடகவியலாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வோரும் இந்தப் படுபாதகச்  செயலை வெளிக்கொணர முயலவில்லை. ஏன் இன்று கிழக்கின் அதி விசுவாசிகளாகக் காண்பிக்க முயல்வோரும் அன்று வாய் திறக்கவில்லை. மாறாக இந்த  ஆயுதக் குழுவின் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளரை மாகாண சபை உறுப்பினராக்கி அழகு பார்த்தது தமிழரின் பிரதான அரசியல் கட்சி.    
அதுபோல 26/01/2006 அன்று வெலிக்கந்தையில் வாகனத்தில் பயணம் செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர் வட்டக்கச்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி பிறேமினி  என்பவரைக் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிப் படுகொலை செய்தது இன்னொரு ஆயுதக்குழு. இந்தக் குழுவின் பொறுப்பாளரே  மகிந்தவால்  கிழக்கின் முதல் அமைச்சராகப்  பின்னர் நியமிக்கப்பட்டார்.
ஏன் மாகாண சபை உறுப்பினராக  விளங்கும் இன்னொரு உறுப்பினரான இரா. துரைரத்தினம் என்பவர் 1988 ல் காத்தான்குடியைச் சேர்ந்த ரிபாயா என்ற முஸ்லீம் யுவதியைக் கைது செய்தார். இந்த யுவதி பின்னர் காணாமல் போனார். இந்த விடயத்தையும் எந்தத் தமிழ் அரசியல்  கட்சியும்  வெளிக்கொணர முயலவில்லை. இந்த நிலையில் தமது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் முஸ்லிம்களுக்கு எழுவது இயல்பானதே.  
மேலும் 1985 ல் பாவற்கொடிசேனையில் நிகழ்ந்த மிக மோசமான அனுபவங்கள் அவர்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான விடயங்களை முதலில் பாதிக்கப்பட்டோரின் நிலையில் தான்  இருந்து பார்க்க வேண்டும். அதேவேளை மட்டக்களப்பைச்  சேர்ந்த தமிழர் முதலமைச்சராக இருந்த போது நிகழ்ந்தவற்றை திரும்ப நினைவு படுத்திப் பாருங்கள். பஸ்நிலையப் பகுதிக் கடைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பாக மட்டக்களப்பு  மாநகரசபையைச் சேர்ந்தவருக்கு தானே நேரில் களத்தில் இறங்கிச் சங்கிலியால் அடித்தார் கிழக்கு முதல்வர்.  இந்நிலையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கொடுப்பது எப்படி என்று சிங்களவர் கேட்கும் நிலை உருவானதல்லவா?
குடும்பிமலைக்கு அப்பால் உள்ள மேய்ச்சல்தரைக் காணிகளைப்  பொலநறுவைச் சிங்களவர்களுக்கு வழங்கினார். இதற்கும் முஸ்லிம்கள்தான் காரணமா?   
பிரதியமைச்சர் முரளிதரன் தனது பதவிக்காலத்தில் செய்த சாதனைகள் என்ன?  பிரதியமைச்சரும் முன்னாள் முதல்வரும் வடக்கு வாசிகளுக்கெதிராக எடுத்த நிலைப்பாடுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? இதனால் நன்மை அடைந்தவர்கள் யார் ? ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.  
பதவி இருக்கும் போது மூளை இல்லை.  மூளை இருக்கும் போது பதவியில்லை என்று சிங்களவர்கள் சொல்வார்கள். அதுதான் இந்த இருவர் விடயத்திலும் நடந்தது.   
மட்டக்களப்பில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக வடக்கைச்சேர்ந்த ஒருவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  மட்டு. சிறையிலிருந்து மேல் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஒரு நாள் சிறைக்காவலரொருவர்  இவரது குடும்ப விபரங்களைக் கேட்டார். 16 மற்றும் 18 வயதான இரு பிள்ளைகளை முள்ளிவாய்க்காலில் இழந்ததாக இவர் குறிப்பிட்டார்.  18  வயதான பிள்ளை மாவீரர் எனவும் சொன்னார். ஒரு பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வளவுதான்! சிறைக்காவலரின் முகம்மாறிற்று "இந்தப் போராட்டத்தால் மட்டக்களப்பு மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன ? பாருங்கள் உங்களுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில். மட்டக்களப்பாருக்கு எதுவுமே கிடையாது"  என்றார் அவர். இரு பிள்ளைகளை இழந்தமை, தடுத்து வைக்கப்பட்டிருப்பது, குடும்பம் பிரிக்கப்பட்டிருப்பது எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஒரு பிள்ளை வெளிநாட்டில் என்றதுதான் அவருக்குக் கடுப்பேறி விட்டது.
இவ்வாறான மனநிலையில் உள்ள யாரோ ஒருவர்தான் அக் கட்டுரையை யெழுதியிருப்பார். இவர்களுக்குப் போராட்டத்தின் யதார்த்தம், தியாகம் எதுவுமே தெரியாது. முஸ்லிம் மக்களின் பங்களிப்புத்தான் இந்திய இராணுவ காலத்தில் போராட்டத்தைக் காத்தது. (குறிப்பாக உயிராபத்தைப் பொருட்படுத்தாமல் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமானவற்றைப்  போராளிகளிடம் கொண்டுவந்து சேர்த்தமை)
களத்தில் நின்றும் முஸ்லிம்கள் போராடியிருக்கிறார்கள். தமிழீழ நாகபடையை ஆரம்பித்த ஜுனைதீன் பின்னர் புலிகளில் இணைந்து மாவீரராகியிருக்கிறார். காத்தான்குடி, ஒல்லிக்குளம் போன்ற இடங்களிலும் முஸ்லீம் மாவீரர் குடும்பங்கள் உள்ளன என்ற விபரமெல்லாம்  போராட்டத்துடன்  சம்பந்தப்பட்டோருக்கு மட்டுமே புரியும். முஸ்லிம்களை   குற்றம்சாட்டுவோருக்கு  நிச்சயம் விநாயக மூர்த்தியின் மகனுடன் தொடர்பு இருந்திருக்கும். கேட்டால் அவர் சொல்லுவார்  ஒட்டமாவடி உட்பட எந்தெந்த ஊரில் முஸ்லீம் வீடுகளில் சாப்பிட்டதென்றும் அதில் எந்த வீட்டுச் சாப்பாடு அதிக சுவையாக இருந்ததென்றும்.
ஏன் காலை 7 மணிக்குத் தனது கடையைத் திறக்கும் ஒரு தமிழரைக் காட்ட முடியுமா? இந்த நிலைமைக்கும் முஸ்லிம்கள் தான் காரணமா ? அவர்களின் காத்திருப்பு, கடின உழைப்பு  வாடிக்கையாளர்களைத் தக்க வைத்திருக்கிறது. ஏன் ஒரு தமிழரின் கடையில் உடுப்பு வாங்கச் சென்றால் அது இல்லையாயின் இப்போது வரத்து இல்லை எனப் பதிலளிப்பார்கள்.
ஆனால் முஸ்லிமோ வாடிக்கையாளரை இருத்திவிட்டு இன்னொரு முஸ்லீம் கடையிலிருந்து குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து கொடுப்பார். தான் மட்டுமே உழைக்க வேண்டும் என்பதுதான் தமிழ் வியாபாரியின் எண்ணம். தான் இல்லா விட்டாலும் இன்னொரு முஸ்லீம் உழைக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு.
அடுத்து  படுவான்கரை வயல் காணிகள் குறிப்பிட்டளவு முஸ்லிம்கள் வசம் போனதென்றால் குடிக்கும், வீண்  செலவுக்குமாகத்  தமிழர் விற்றமைதான் காரணம்.
தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளை, உதவிகளை, வாய்ப்புக்களை முஸ்லிம்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் தமிழரின் நிலைமை ? வாகரைப் பகுதியில் நன்நீர் மீன் வளர்ப்புக்குக் கிடைத்த வாய்ப்பைக் கெடுத்தவர்கள் தமிழ் அரசியல் வாதிகளேயன்றி முஸ்லிம்  களல்ல.
இதேவேளை கல்குடாவில் அமையவுள்ள சாராயத்  தொழிற்சாலைக்கு திரைமறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேட்டால் 125 பேருக்கு வேலை வாய்ப்பாம். ஏன் நன்நீர் மீன்வளர்ப்புத் திட்டமூலம் 125 தமிழர் பயன் பெற மாட் டார்களா? சாராயத்தை விட நன்நீர் மீன் எப்படி தமிழருக்குப் பாதகமானது? ஏற்கனவே குடியில் முன்னணியில் நிற்கும் மாவட்டம் மட்டக்களப்பு திருட்டாகவும் சட்ட விரோதமாகவும் கொண்டு செல்லப்படும் சாராயம் நிச்சயமாகத் தமிழரின் குடும்ப வாழ்வை சீரழிக்கும். பிள்ளைகளின் எதிர் காலத்தை நாசமாக்கும். ஆனால் இவர்களின் விளக்கம் சோளமும் , நெல்லும்  நேரடியாக சாராய ஆலைக்குக்  கூடிய விலைக்கு விற்கலாமாம். ஆகவே முஸ்லீம் வியாபாரிகளுக்குத் தான் பாதிப்பு என்று விளக்கம் அளிக்கிறார்கள்.  
  முஸ்லிமுக்கு எதிரானது என்று சொன்னாலே தமிழர் வரவேற்பார்கள் என்று கணக்கிட்டார்களே அதுதான் தமிழர் அரசியலின் பலவீனம்.  இந்நிலையில் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்று கூக்குரலிடுவது நியாயமா?அவர்கள் நெருங்கி வருவதற்கான முதலடியை நாங்கள் தான் வைக்க வேண்டும். அரசியலில் எத்தனையோ தவறுகள், துரோகங்கள் நிகழ்ந்திருந்தாலும் கிழக்கு முதல்வர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெருந்தன்மையுடன் நடந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.       
காத்தான்குடியில், கல்முனையில் ஈச்சமரச்சாலை என்று மார்பில் அடிப்பானேன்? கொக்கொட்டிச்சோலையிலோ, மண்டூரிலோ , சித்தாண்டியிலோ,அமிர்தகழியிலோ வில்வை, நாகலிங்கம் , நெல்லி மரச்சாலைகளை அரசுடன் கூடிக் குலாவிய தமிழ் அரசியல் வாதிகளால் அமைக்க முடியாமல் போனதென்றால் பழி முஸ்லிம்கள் மீதா? இவ்வாறான முயற்சியேதும்   எடுத்த போது முஸ்லிம்கள் எதிர்த்தார்களா?   இன்று சிவசேனாவை இறக்குமதி செய்துள்ளார் பிரபல தமிழ் அரசியல் வாதி.முஸ்லிம்கள்

தங்களுக்கென எதையெல்லாம் செய்தார்களோ அதேபோல் சிவசேனாவிடமோ, இந்தியாவிடமோ  நிதி பெற்று உருப்படியாக எதாவது செய்திருக்கலாமே?

நல்ல விடயங்களை யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்வதில் தவறில்லை.கண் தானம்,மூத்தோரை வணங்குவது,  மதிப்பளிப்பது என்பன சிங்களவரின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள். அது போல அரசோ, தனி நபர்களோ, வெளிநாடுகளோ, மத அல்லது சமூக அமைப்புக்களோ வழங்கும் உதவிகளை தமது இனத்திற்காகப் பயன்படுத்துவது முஸ்லிம்களின்  வழக்கம். இதெல்லாம் தமிழருக்கு நடக்க வில்லையென்றால் முஸ்லிம்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தவறு. மாறாக எங்களுக்கு இவ்வாறன உதவிகள் , வசதிகள் கிடைக்க என்னசெய்யவேண்டும் எனச் சிந்தித்துச் செயலாற்றுவது தான்  பயன் அளிக்கும். இதனை விடுத்து பாகிஸ்த்தான் பூச்சாண்டி காட்டி தமிழ்மக்களை மிரள வைக்க முயலக்கூடாது..  
வடமாகாண சபையில் நிகழும் கூத்துக்களைப் பார்த்த பின் தமிழன் என்றுமே ஒற்றுமையாக இருக்க மாட்டான்: எல்லாவற்றையும் தானாகவே போட்டு உடைப்பான் என்று கருதி  கொண்டு போய்த் தொலையுங்கள் என சிங்களவனாகப் பார்த்து தமிழீழத்தைக் கொடுத்தாலும் அதை இந்தியா  அனுமதிக்காது. இந்தியாவின் உளவுத்துறைக் கட்டமைப்பு பிரமாண்டமானது, திறமை மிக்கது. பாகிஸ்தானின் ஊடுருவல் என்று சொல்லி  அதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது .
எனவே தமிழரைப் பீதிக்குள்ளாக்கி தமிழ் முஸ்லீம் உறவை நெருக்கடிக்குள் ளாக்காமல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பண்புள்ள மனிதராக விளங்க நாம் கூடியவரை முயற்சிப்போம்.
 அவதானி

http://battinaatham.com/description.php?art=9704

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.