Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-

Featured Replies

ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-

 
 
Siththar2.jpg
என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன்.
 
 
1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தக்காலத்தில் நடந்த பல ஊர்வலங்கள், போராட்டங்களில் அப்புவுடன் கலந்துகொள்வேன். மருதனார்மடம் சந்தியில் இருந்து கச்சேரி வரை இரவு நடந்த தீப்பந்த ஊர்வலம், மாட்டு வண்டி ஊர்வலம் என சிலவற்றை உதாரணமாக சொல்லலாம். இப்படி அப்புவின் பின்னால் சென்று, மெல்லமெல்ல தீவிர அரசியலிற்குள் வந்தடைந்தேன்.
 
 
1970 வரையும் எனது அரசியல் என்பது அப்புவின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள்தான். 1970களின் பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறை, தமிழ் தலைவர்களின் சாத்வீக போராட்டங்களிற்கு எதிரான கூட்டு அரசின் தீவிரமான அடக்குமுறைகள் என்பன தமிழர் அரசியலை மாற்றியது. அதுவரை சாத்வீக போராட்டங்களாக இருந்த தமிழர் அரசியல், தீவிர எண்ணமுடையதாக மாறத் தொடங்கியது. இளைஞர்கள் பலர் இதில் முக்கிய பாத்திரம் வகித்தனர். பத்மநாபா, வரதராஜபெருமாள், முத்துகுமாரசுவாமி, அளவெட்டி ஆனந்தன், இறைகுமாரன் போன்ற பல செயற்பாட்டாளர்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட, அவர்களுடன் நானும் பயணிக்க தொடங்கினேன்.
 
 
 
மாவை சேனாதிராஜாவால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையால் நடத்தப்பட்ட சாத்வீக போராட்டங்களில் நானும் பங்குபற்றினேன். ஆயுத நடவடிக்கைகளை முதன்முதல்  பொன்.சிவகுமாரன்தான் ஆரம்பித்தார். அவருக்கும் எனக்கும் இடையில் நெருக்கமான நட்பிருந்தது. தலைமறைவாக இருக்க பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்துவது, இருப்பிடங்களை மாற்றுவது, ஆயுதங்களை மாற்றுவது என சிவகுமாரனுக்கும் சில நண்பர்களிற்கும் உதவிகள் செய்தேன். அப்பு பிரபல்யமான அரசியல்வாதியாக இருந்தது எனக்கு வாய்ப்பாக இருந்தது. அவரது வாகனத்திலேயே இதை செய்வேன். சிவகுமாரனிற்கு அப்போது உதவி செய்தவர்கள் மிகச் சிலர்தான். தங்குவதற்கு இடமில்லாமல் மாந்தோப்புகளிற்குள் எல்லாம் படுத்திருந்தார்.
 
 
 
சிவகுமாரன் சிறிய குழுவாக இயங்கினார். அந்த காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் ஒரு குழுவாக செயற்பட்டார்கள். புதிய தமிழ் புலிகள் என்ற பெயரில் ஒரு குழுவும் செயற்பட்டது. புதிய தமிழ் புலிகளிற்கு செட்டி தனபாலசிங்கம் தலைவராக இருந்தார். அப்போது தம்பி (பிரபாகரன்) அதில் முக்கியமானவராக இருந்தார். அந்த அமைப்புடனும் நட்புறவில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் உதவிகளும் செய்திருக்கிறேன்.
 
 
 
செட்டி தனபாலசிங்கமும் வேறு சில தமிழ் இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுரத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சமயத்தில், செட்டி உள்ளிட்ட நால்வர் தப்பித்து வந்தார்கள். செட்டியும் இன்னொருவரும் என்னிடம் உதவி கேட்டு வந்தனர். அவர்கள் மறைந்து பாதுகாப்பாக தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்திருந்தேன்.
 
பின்னர் 1975 ஆம் ஆண்டு, செட்டியை சுன்னாகம் பொலிஸ் பகுதியில் வைத்து பிடித்து விட்டனர். நான்தான் தங்குமிட ஏற்பாடுகளை செய்ததாக செட்டி விசாரணையில் சொல்லிவிட்டார். அப்பொழுது இன்ஸ்பெக்டர் ஜீவரட்ணம் (பின்னாளில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்து ஓய்வுபெற்று மரணித்தவர்) சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்தார். இந்த பகுதியில் ஒரு பிரபல்ய தலைவராக இருந்தவர் என்ற அடிப்படையில் அப்புவிடம் இன்ஸ்பெக்டர் மரியாதை வைத்திருந்தார். இன்ஸ்பெக்டர் அப்புவிடம் வந்து சொன்னார், “இந்த விவகாரத்தில் உங்கள் மகனும் தொடர்புபட்டதாக செட்டி விசாரணையில் கூறியுள்ளார். நிலைமை சிக்கலாக உள்ளது. நான் இந்த விசாரணை அறிக்கையை கொழும்பிற்கு அனுப்புவதற்கு முன்னர் மகனை எங்காவது அனுப்பிவிடுங்கள்“ என. அத்துடன் கொழும்பிற்கு அறிக்கையை அனுப்புவதையும் தாமதப்படுத்தினார். இதற்குள் என்னை குடும்பத்தினர் இலண்டனிற்கு அனுப்பிவிட்டனர்.
 
 
 
இந்தக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயர் மாற்றம் பெற்று ஒரு அமைப்பு வடிவம் எடுத்தது. அதன் முதல் தலைவராக உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் நில அளவையாளராக செயற்பட்டதுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளை தலைவராகவும் இருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளாக இயங்கத் தொடங்கிய பின், இந்த அமைப்பிற்காக இலண்டனில் ஒரு கிளைய அமைத்தோம். கிருஸ்ணன், குகன், நான் ஆகிய மூவரும் இதை ஆரம்பித்தோம். அதுதான் விடுதலைப்புலிகளின் முதலாவது சர்வதேச கிளை. இந்த சமயத்தில் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் இருந்தார். அவரில் எங்களிற்கு ஈர்ப்பிருந்தது. அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும் அவரை தம்முடன் இணைக்க முயன்றது. அந்த அமைப்பின் உத்தமன் அடிக்கடி பாலா அண்ணையுடன் பேசினார். நாங்களும் விடாமல் அவரை சந்தித்து பேசினோம். இறுதியில் அவர் எங்களுடன் (விடுதலைப்புலிகளுடன்) இணைந்து செயற்பட தொடங்கினார்.
 
 
 
புலிகள் முதன்முதலில் பத்து கொலைகளிற்கு உரிமைகோரி வீரகேசரிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். பாராளுமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் வைத்தே அந்த கடிதத்தை ஊர்மிளா தட்டச்சு செய்தார். அவர் விடுதலைப்புலிகளின் தீவிரமாக செயற்பாட்டாளர்.
 
 
 
இரத்மலானையில் அவ்ரோ விமானம் தகர்க்கப்பட்டது. இதை வெளிநாட்டில் இருந்து உரிமை கோரினால், அமைப்பைப் பற்றிய பிரமாண்ட அபிப்பிராயத்தை உருவாக்கலாம் என்பதற்காக இலண்டனில் இருந்து “விடுதலைப்புலிகள்தான் அதை செய்தார்கள்“ என உரிமை கோரினோம்.
 
 
 praba.jpg
1980ம் ஆண்டு தம்பிக்கும் (பிரபாகரன்), உமாமகேஸ்வரனிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய அப்போது இலண்டனிலிருந்த நானும், பாலசிங்கமும் ஒரு முயற்சி செய்தோம். நான் யாழ்ப்பாணம் வந்து தம்பியுடன் பேசி ஒற்றுமைப்படுத்த முயற்சித்தேன். தம்பியுடன் பேசியபோது, ஊர்மிளாவிற்கும் உமாமகேஸ்வரனிற்கும் இடையில் இருந்த காதல் விவகாரம் இயக்க நடைமுறையை மீறியதென்றார். அப்போது புலிகள் அமைப்பின் விதிகளில் ஒன்று, காதலிக்கவோ திருமணம் செய்யவோ கூடாதென்பது. காதலும், திருமணமும் மனிததேவைகள், இதை பிரச்சனையாக்காமல் விடலாம் என்ற என் அபிப்பிராயத்தை தம்பியிடம் சொன்னேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அந்த சமரச முயற்சி வெற்றிபெறவில்லை. அப்போது உமாமகேஸ்வரன் இந்தியாவில் இருந்தார். பாலசிங்கம் இந்தியா சென்று அவருடன் பேசினார். அதுவும் வெற்றியளிக்கவில்லை. உமாமகேஸ்வரனுடன் நான் பின்னர் பேசியபோது, ஊர்மிளாவுடன் காதல் விவகாரமே இல்லை, நல்ல இயக்க தோழி மட்டுமே என்றார்.
 
 
பின்னர் ஈரோஸ் அருளரும் ஒரு சமரச முயற்சி செய்தார். அதன்படி, விடுதலைப்புலிகள் என்ற பெயரை யாரும் பாவிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்தார்கள். இதன் பின்னர்தான் புலிகள் அமைப்பை விட்டுவிட்டு, குட்டிமணி, தங்கத்துரையுடன் ரெலோ அமைப்பிடன் இணைந்து செயற்பட தொடங்கினார் பிரபாகரன். உமாமகேஸ்வரன் புளொட்டை ஆரம்பித்தார்.
 
 
ஒருநாள் தம்பி எனது இதே வீட்டிற்கு (யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ளது) வந்தார். அவரிடம் ஒரு புது ரிவோல்வர் இருந்தது. அதை எடுத்துக்காட்டி “அண்ணை தமிழீழ கோரிக்கையை யார் கைவிட்டாலும் இதுதான் பதில் சொல்லும். அது நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி“ என்றார். வேறு தலைவர்கள் யாரும் செய்யாத இரண்டு விடயத்தை தம்பி செய்தார். நம்பிய கொள்கையை கடைசிவரை கைவிடவில்லை. முழு குடும்பத்தையும் அதற்காக பலிகொடுத்தார். இந்த இரண்டு விடயங்களும்தான் எனக்கு தம்பி மீதான மதிப்பை உயர்த்தியது.
 
 
எனது அப்புவிற்கும் தம்பிக்குமிடையில் ஒரு ஈர்ப்பிருந்தது. நான் புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட தொடங்கிய பின்னரும், தம்பி எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். வந்து அப்பமும், பாலும் சாப்பிட்டுவிட்டு போவார்.
 
 
நான் இலண்டனில் பன்னாட்டு நிறுவனமொன்றில் உதவிக் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1983 இல் அந்த பணியை விட்டுவிட்டு, முழுநேரமாக இயக்கப்பணியில் ஈடுபடத் தொடங்கினேன். இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில்தான் பணியாற்றினேன். அல்ஜீரியா, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் அதிக தொடர்புகளை வைத்திருந்தோம்.
 
 
உமாமகேஸ்வரன் முதலில் இந்தியாவிலிருந்து லெபனான் செல்லும்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. அப்போது சிரியாவிற்கு நேரடியாக செல்ல விசா எடுப்பது கடினம். அதனால் டெல்லியிலிருந்து லண்டன் செல்ல ரிக்கெற் எடுப்போம். ரான்ஸ்சிற் டமாஸ்கஸ். அங்கு இறங்கி, காசு கொடுக்க விசா அடித்து உள்ளே விடுவார்கள். லண்டனில் சிறினி என்பவர் இருந்தார். அவருக்கு சிரியா செல்ல விசா இருந்தது. அவர் இந்தியா வந்து, தனது பாஸ்போர்டை உமாவிடம் கொடுக்க, அதை பாவித்து உமா டமாஸ்கஸ் சென்றார். பின்னர் சிறினி உமாவின் பாஸ்போர்ட்டில் டமாஸ்கஸ் சென்று, தனது பாஸ்போர்டை வாங்கிக்கொண்டு இலண்டன் சென்றார். டமாஸ்கஸில் ரான்ஸ்சிற்றில் காசுகொடுக்க உள்ளே விடுவார்கள் என்பதை உமாதான் கண்டுபிடித்தார். அப்போது இந்திய மக்களிடம் ஈழத்தமிழ் இயக்கங்களில் நிறைய அபிமானமிருந்தது. விமானநிலைய அதிகாரிகளும் எங்களை கண்டும் காணாமலும் விட்டுவிடுவதே, இவ்வளவு வாய்ப்புக்களை ஏற்படுத்தியது.
 
 
 
யசீர் அரபாத்தின் தலைமையில் இயங்கிய பற்றா அமைப்புத்தான் முதன்முறையாக தமிழ் ஆயுத இயங்கங்களிற்கு பயிற்சியளித்தது. இது 1977 இல் நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் இரட்ணசபாபதியும், ராஜிசங்கரும் இதனை ஒழுங்கு செய்தனர். அப்போது இலண்டனில் இருந்த பத்மநாபா, சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரும் நேரடியாக அங்கு பயிற்சிக்கு வந்தனர். அப்போது புலிகளில் இருந்த உமாமகேஸ்வரன், பிரபாகரன் இருவரையும் பயிற்சிக்கு அழைத்தனர். உமாமகேஸ்வரனும், விச்சுவேஸ்வரனும் பயிற்சிக்கு சென்றனர்.
 
 
 
லெபனானில் பி.எவ்.எல்.பி அமைப்புடன் (popular front for the liberation of palestine- லெபனானில் டொக்ரர் ஹபாஸின் தலைமையில் இயங்கியது) புளொட்டிற்கு தொடர்பு மகாஉத்தமன் மூலம் ஏற்பட்டு, லெபனானில் நூறுபேர் வரையில் அங்கு சென்று பயிற்சி பெற்றார்கள்.
 
 
 
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதியை 1983இல் இனக்கலவரத்தின் பின் சந்தித்தேன். எனது தந்தையாருக்கும் அவருக்குமிடையில் நெருங்கிய உறவிருந்ததன் காரணமாக, என்னுடனும் நல்ல உறவில் இருந்தார். சந்தித்த முதல் நாளிலேயே சொன்னார், “சித்தார்த்தன் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஒருபோதும் ஈழம் உருவாகுவதை அனுமதிக்காது. ஆகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை பெற முயற்சியுங்கள்“ என. புளொட் அப்போது பெரிய இயக்கமென்பதால், புளொட்டின் வளர்ச்சியை இந்தியா கண்ணும் கருத்துமாக இருந்து மட்டுப்படுத்தியது. எமது இரண்டு ஆயுத கொள்களன்களை சென்னையில் கைப்பற்றி, ஆயுத வரவை தடுத்திருந்தார்கள். இயக்கங்களின் ஆயுத வரவை மட்டுப்படுத்தி  வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. சிரியாவிலும் இதனை பார்த்திருக்கிறேன். சிரியாவிலிருந்து லெபனானிற்குள் நுழையும் போராளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, மட்டுப்படுத்திய அளவில்தான் அனுமதிப்பார்கள். அதை மீறி போவதென்றால் மலைப்பாதைகளால் செல்லும் கள்ளப்பாதையால்தான் போக வேண்டும். நானும் அப்படியான பாதைகளிற்குள்ளால்தான் லெபனான் சென்றேன்.
 
 
 
இந்தியாவின் இப்படியான கட்டுப்பாட்டை மீறி புளொட்டால் வளர முடியவில்லை. ஆனால் தம்பி அந்த சவாலை கடந்து புலிகளை பிரமாண்டமாக கட்டியெழுப்பியது உண்மையில் பெரிய விடயம்.
 
 
 
பங்களாதேஷை போல இலங்கையில் இந்தியாவின் தலையீடு இருக்குமென அந்தக் காலத்தில் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள். ஆனால் தனது நலன்கள், தேவைகளிற்குள் நமது விவகாரத்தை சம்பந்தப்படுத்தித்தான் எந்தநாடும் சிந்திக்கும். இந்த அரசியலை நாம் சரியாக புரிந்து, அதற்கேற்ப செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது பல நடவடிக்கைகள் இந்தியாவை தள்ளிவைத்துவிட்டது. ராஜீவ் கொலை, புளொட் இயக்கம் வெளியிட்ட வங்கம் தந்த பாடம் நூல் என்பன இந்தியாவை நிறைய அதிருப்திப்பட வைத்திருந்தது.
 
 
 
2009 இல் இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். இந்தியா தலையிட்டு யுத்தத்தை நிறுத்துமோ என்ற பயம் மகிந்த, கோத்தபாய ஆகிய இருவரிடமும் இருந்தது. தேர்தல் காலத்தில்கூட இந்தியா அந்த அழுத்தத்தை கொடுக்காததற்கு, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைவிட்டு இந்தியா தள்ளிச் சென்றதுதான் காரணம்.
 
 
 
பலர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தனில் பிழை சொல்கிறார்கள். சம்பந்தனின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக நாங்களும் ஆதரிப்பதாக சொல்கிறார்கள். சம்பந்தன் அண்ணையின் சில முடிவுகளில் விமர்சனம் இருக்கலாம், அங்கத்துவ கட்சிகளுடன் ஆலோசனை செய்யாமல் நினைத்ததை செய்கிறார்கள் என்ற அதிருப்திகள் இருந்தாலும், புதிய அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்படும் இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களின் ஒற்றுமையின்மையை சாட்டாக கூறி, சிங்கள ஆட்சியாளர்கள் தீர்வு முயற்சிகளிலிருந்து பின்வாங்கலாம்.
 
 
 
தென்னிலங்கை அரசியலை நீண்டகாலமாக பார்த்து வருபவன் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைகளை தீர்க்கும் நீண்டகால தீர்வை இந்த அரசு வழங்குமென்ற நம்பிக்கை என்னிடமில்லை. இருந்தாலும், புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை நாம் குழப்பிவிட்டோம் என்று அரசும், சர்வதேசமும் குற்றம் சுமத்துவதற்கு பாத்திரவாளியாக இருக்கக் கூடாதென்பதே என்னுடைய கருத்து. (நன்றி -தீபம்)

https://globaltamilnews.net/archives/25357

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதை இப்ப எழுதுகிறார் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.