Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 ஐ நினைவு கூர்வது எப்படி?

Featured Replies

மே 18 ஐ நினைவு கூர்வது எப்படி?

இம்மாதம் 6ஆம் திகதி கனடாவின் ஒன்றாரியோ மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை அத்தீர்மானம் ஓர் இனப்படுகொலை என்று சித்திரித்திருந்தது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் மேற்படி தீர்மானம் கனடாவில் உள்ள சக்திமிக்க சீக்கிய டயஸ்பொறாவிற்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். 1984இல் அப்போது இந்தியப்பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவருடைய மெய்க்காவலர்களான இரு சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதையடுத்து தலைநகர் டில்லியிலும், பிற பகுதிகளிலும் சீக்கியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படுகொலையை ஓர் இனப்படுகொலையாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கான முன்மொழிவு கடந்த ஆண்டும் ஒன்றாரியோ சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வெற்றிபெறவில்லை. இந்த ஆண்டு வெற்றி பெற்றிருக்கின்றது. இது நடந்தது 6 ஆம் திகதி.

நேற்று, அதாவது 22ஆம் திகதி பிரான்சின் தலைநகராகிய பரிசில் ஆர்மினியர்கள் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்தார்கள். திருச்சபைப் பிரதானிகள் பங்குபற்றிய அந்நிகழ்வில் ஆர்மினிய இனப்படுகொலையின் 102 ஆவது ஆண்டு நினைவு கூரப்பட்டது. ஆர்மினிய இனப்படுகொலை எனப்படுவது கடந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையாகும்.

இவ்வாறான ஓர் அனைத்துலகப் பின்னணியில் இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளானது ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் அனுஸ்;டிக்கப்பட்டது. வட மாகாணசபை அதை உத்தியோகபூர்வமாக நினைவு கூர்தலுக்கான நாளாக அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஸ்டிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதையும் உத்தியோகபூர்வமாக செய்திருக்கவில்லை. தன்னிடமுள்ள நிறுவனபலம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி நினைவு கூர்தலை ஒரு பொதுசன நிகழ்வாக ஒருங்கிணைத்திருக்க வேண்டிய வடமாகாணசபை அதை பெருமளவிற்கு அரசியல்வாதிகளின் நிகழ்வாகவே அனுஸ் டித்தது.

குறைந்தபட்சம் மாகாணசபையின் நிர்வாகத்திற்குள் வரும் அரச அலுவலகங்களிலாவது அதை எப்படி அனுஸ்டிப்பது என்பது தொடர்பில் சிந்திக்கப்படவில்லை.

குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அதை எப்படிப் பொருத்தமான விதங்களில் அனுஸ்டிக்கலாம் என்று சிந்திக்கப்படவில்லை.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை ஒரு வெகுசன நிகழ்வாக ஒருங்கிணைக்கத் தேவையான அரசியல் தரிசனம் எதுவும் வடமாகாண சபையிடம் இருக்கவில்லை. இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு கொள்கைத் தீர்மானமாக நிறைவேற்றியதற்கும் அப்பால் அதை ஒரு செய்முறையாக முன்னெடுப்பதற்கு வேண்டிய அரசியல் தரிசனமும் பிரயோகப் பொறிமுறையும் இல்லாத ஒரு மாகாண சபையிடம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பிலும் கூடுதலாக எதிர்பார்க்கக் கூடாதுதான்.

இப்படியாக ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு எதுவுமற்ற ஒரு பரிதாகரமான வெற்றிடத்தில் ஒவ்வொரு கட்சியும், அமைப்பும், மத நிறுவனங்களும் தத்தமது சக்திக்கேற்ப கடந்த ஆண்டு நினைவு நாளை அனுஸ்டித்தன. இவ்வாறு அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வுகளில் மொத்தமாக சில ஆயிரம் பேரே பங்கேற்றியிருந்தார்கள். அதற்கும் சில நாட்களின் பின் வந்த வற்றாப்பளை அம்மன் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

இப்படி ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத காரணத்தால் பெருமளவிற்கு அரசியல்வாதிகளின் நிகழ்வாகவே கடந்த ஆண்டு மே 17 அனுஸ்டிக்கப்பட்ட ஓர் அனுபவத்தின் அடிப்படையில் இவ்வாண்டாவது அதை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஸ்டிப்பதற்கு முன் வரப்போவது யார்?

ஒரு நண்பர், அவர் ஒரு கூர்மையான அரசியல் அவதானி, தன்னுடைய கைபேசியிலிருந்து எல்லா அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் இடையறாது அழைத்து கேள்வி கேட்பவர். போராட்டத்தில் இழப்புக்களைச் சந்தித்த ஒருவர். அவர் பின்வருமாறு சொன்னார். “முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பதை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடிக்க வேண்டுமே தவிர அதை வேறு எங்கோதான் தொடங்க வேண்டும். ஈழப்போரில் சாதாரண பொதுமக்கள் கொத்தாகக் கொல்லப்பட்ட முதல் சம்பவம் எங்கு நிகழ்ந்ததோ அங்கிருந்து தொடங்க வேண்டும். அங்கேதான் முதல் விளக்கு ஏற்றப்பட வேண்டும்.

அங்கிருந்து தொடங்கி அது போன்று கொத்துக் கொத்தாக பொது மக்கள் கொல்லப்பட்ட எல்லா இடங்களுக்கும் தீபம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்துச் செல்வது போல. இப்படியாக எல்லா இடங்களிலும் விளக்கேற்றும் நிகழ்வை அவ்வப்பகுதி உள்ளூர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், மத நிறுவனங்கள் பொறுப்பேற்கலாம். இவ்வாறு எல்லா இடங்களிலும் ஏற்றப்பட்ட தீபங்களில் இறுதியானதும், பெரியதுமாகிய தீபத்தை முள்ளிவாய்க்காலில் ஏற்றலாம்…..” என்று.

நல்ல திட்டம் – இப்படிச் செய்யும் போது நினைவு கூர்தல் எனப்படுவது கிராமங்களை நோக்கி பரவலாக்கப்படும். அதிலும் குறிப்பாக ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையை அக்கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றி நினைவு கூரலாம். இதனால் நினைவு கூர்தலை ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்தலாம். அது சாதாரண சனங்களுக்கு ஆறுதலைக்கொடுக்கும். நினைவு கூர முடியாதிருந்த ஒரு முட்டுத்தாக்கை நீக்க அது உதவும். அது உளவியல் ரீதியாக ஒரு குணமாக்கற் செய்முறையாகும். அது மட்டுமல்ல அது ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுரிமை. அதோடு, நிலைமாறுகால நிதிப்பொறி முறைகளில் இழப்பீடு என்ற பகுதிக்குள் அது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகும். அதாவது நினைவு கூர்தலுக்கான உரிமை.

ஆனால் யார் இதையெல்லாம் ஒருங்கிணைப்பது? இப்படித் திட்டமிட்டு நினைவு கூர்தலைச் செய்வதென்றால் அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக்குழு அல்லது அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்குள் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும், சிவில் சமூகப்பிரதிநிதிகளும், மதநிறுவனங்களும், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு பொது நிதியும் திரட்டப்பட வேண்டும். இவ்வாறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தான் மே 18ஐ ஒரு பொதுசன நிகழ்வாக ஒருங்கிணைக்க முடியும். அதை யார் செய்வது?

அப்படிச் செய்யக் கூடிய ஒரு தலைமையோ அல்லது ஒரு அமைப்போ இல்லாத வெற்றிடத்தில் தான் நினைவு கூரலை முன்னட்டு உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தப்போவதாக ஓர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு ஏற்கெனவே தமிழ்ப்பகுதிகளில் வேறு சில செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறது. மே 18 ஐ நினைவு கூர வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தது சரியானது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதில்தான் அவர்களிடம் பொருத்தமான ஓர் அரசியற் தரிசனம் இருக்கவில்லை.

அந்த அமைப்பிடம் மட்டுமல்ல தற்பொழுது தமிழ்ப்பகுதிகளில் துடிப்பாகச் செயற்படும் பல அமைப்புக்களிடமும் பொருத்தமான அரசியற் தரிசனம் எதையும் காண முடியவில்லை. ஓர் இளம் தலைமுறை பொருத்தமான அரசியல் தரிசனம் இன்றிச் செயற்படுகின்றது என்று சொன்னால் அதற்கு அச்சமூகத்திற்குத் தலைமை தாங்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், செயற்பாட்டாளர்களும், படைப்பாளிகளும், ஊடகங்களுமே பொறுப்பேற்க வேண்டும். கடந்த எட்டாண்டுகாலப் பகுதிக்குள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட செயல்வாதம் ஒன்று பல தளங்களிலும் முன்னுக்கு வந்து விட்டது. பொழுது போக்கிற்கும் செயல்வாதத்திற்கும் இடையில் வேறுபாடு தெரியாத ஒரு பகுதி இளையோரை உற்பத்தி செய்தமைக்கு முழுத் தமிழ்ச் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக தமிழ்த் தலைமைகளும், கருத்துருவாக்கிகளும் இது தொடர்பில் ஆழமாகச் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும்.

முழுத்தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பைத் தீர்மானிக்கும் விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த்தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒட்டு மொத்தத் திட்டமோ, அரசியல் தரிசனமோ, வழிவரைபடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப்பிரக்ஞையாகும். ஒரு மக்கள் கூட்டத்தை புரட்சிகரமான வழிகளில் திரளாக்கும் எல்லாச் செயற்பாடுகளும் தேசியத்தன்மை மிக்கவைதான். மாறாக, ஒரு மக்கள் திரளை கூறுபோடும் அல்லது துண்டு துண்டாக்கும் எல்லாச் செயற்பாடுகளும் தேசியத்துக்கு எதிரானவைதான்.

தமிழ் மக்களின் துக்கம் ஒரு கூட்டுத் துக்கம். அவர்களுடைய காயங்களும் கூட்டுக் காயங்கள். அவர்களுடைய மனவடுக்களும் கூட்டு மனவடுக்கள் தான். எனவே அவற்றிற்கான தீர்வும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக ஒரு கூட்டுப் பொறிமுறையாகவே அமைய வேண்டும். எனவே தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவையும் கூட்டாக எடுக்கப்பட வேண்டும். இக் கூட்டுப்பொறுப்பை உணர்ந்த தமிழ்த்தலைவர்கள் எத்தனை பேர் எம்மத்தியில் உண்டு?

ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் மட்டுமல்ல ஒரு மாவீரர் நாளில் மட்டுமல்ல, ஜெனீவாவைக் கையாள்வது தொடர்பில் மட்டுமல்ல இவை போன்ற பல விடயங்களிலும் தமிழ் மக்கள் ஒரு மையத்திலிருந்து சிந்திக்காத ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது.

அண்மை மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களில் ஒரு வித தளர்வை அவதானிக்க முடிகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரின் பின் இப் போராட்டங்கள் தொய்வுறத் தொடங்கிவிட்டன. ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாமையே இதற்குக் காரணம். இது விடயத்தில் போராடும் தரப்புக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு எந்த ஒரு கட்சியாலும் முடியவில்லை. எந்தவொரு பொது அமைப்பாலும் முடியவில்லை.

முள்ளிக்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் ஆயர் இல்லத்தால் கடந்த புதன்கிழமை ஒரு அமைதிப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் கூடுதலாக பிரமுகர்களே பங்குபற்றியிருக்கிறார்கள். மன்னாரில் ஆயரின் அழைப்பை ஏற்று அதிக தொகை மக்கள் வராதது ஏன்?

அண்மையில் வவுனியாவில் ஒரு கோப்ரேற் நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகளைக் கையளிப்பதற்கு ரஜனிகாந்த் வர இருந்தார். அதற்கு எதிர்ப்புக் காட்டப்பட்டதையடுத்து அவரது வருகை நிறுத்தப்பட்டது. அவரது வருகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டன, நல்லூரில் ஒரு சிறு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அதை மேற்படி கோப்ரேற் நிறுவனமே ஒழுங்கு படுத்தியதாக நம்பப்படுகிறது. அதே சமயம் மற்றொரு கோப்ரேற் நிறுவனம் இந்தியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து லண்டனில் பெருவிழா ஒன்றைச் செய்திருக்கிறது.

கடந்த புத்தாண்டுத் தினத்தன்று நந்திக்கடற்கரையில் மாட்டுவண்டிச்சவாரி நடாத்தப்பட்டது. ஆனால் சவாரித்திடலிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் கேப்பாபிலவில் சிறு தொகை மக்கள் தமது காணிகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே நாளில் யாழ்ப்பாணம் பண்ணாகத்தில் பெருமெடுப்பில் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மருதங்கேணியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வற்குக் கூடக் காசில்லை என்று கூறப்படுகிறது. ஒரு புறம் பெருமெடுப்பிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், இன்னொருபுறம் கறுப்பாடை அணிந்தபடி கிளிநொச்சியில், வவுனியாவில், கேப்பாப்பிலவில், முல்லைத்தீவில் முள்ளிக்குளத்தில், மருதங்கேணியில் திருகோணமலையில் சிறுதொகை மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தாண்டுத் தினத்தன்று காணப்பட்ட இந்த முரண்பாடான காட்சி தற்செயலானது அல்ல. தமிழ் மக்கள் ஒரு திரளாக இல்லை என்பதையே புத்தாண்டு நிரூபித்திருக்கிறது. வரவிருக்கும் மே நாள் நிகழ்வுகளும் அதை நிரூபிக்கப் போகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவு நாளும் அதை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

http://thuliyam.com/?p=65495

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.