Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்'

Featured Replies

'50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்'

சா. பீட்டர் அல்போன்ஸ்மூத்த காங்கிரஸ் தலைவர்
 
 

திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது.

பெரியார், அண்ணா

இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு.

தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை.

 

பொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள், திராவிட இயக்கத்தின் தலைவர்கள்கூட தங்கள் பொதுவாழ்வை தேசிய இயக்கத்தில்தான் துவக்கியிருக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை தத்துவார்த்த ரீதீயாக முரண்பட்ட இயக்கங்களாகத் தோன்றினாலும் உற்றுப் பார்க்கையில் அந்த இயக்கங்களில் பணிகள் ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்பதைக் காண முடியும்.

கொள்கைக்காக நின்ற 4 இயக்கங்கள்

அரசியல் சுதந்திரம் வேண்டி நின்றது தேசிய இயக்கம்.

பொதுவுடமைவாதிகளும் சோஷலிஸ்டுகளும் பொருளாதாரச் சுதந்திரம் முதன்மையானது என்றார்கள்.

அரசியலில் சுதந்திரம் கிடைத்து, பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டாலும் சமூக விடுதலை கிடைக்கவில்லையென்றால் என்ன பயன் என்று கேட்டன திராவிட இயக்கங்கள்.

அந்நிய ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்ற அரசியல் சுதந்திரத்திற்காக போராட்டக்களத்தில் நின்று போராடிய தேசியவாதிகள் பொருளாதார சுதந்திரமும் சமூக சுதந்திரமும் அரசியல் சுதந்திரம் வந்த பிறகு தானாகவே கிடைத்துவிடும் என்று எண்ணினார்கள்.

 

அதனை ஏற்காத கம்யூனிஸ்டுகள் வாக்கெடுப்பு நடத்தி வர்க்கப் போராட்டத்தில் வெற்றிகொள்ள முடியாது என உறுதியாக நம்பினார்கள்.

தீண்டாமை, மேல்சாதி ஆதிக்கம் போன்ற தடைகளை முதலில் அறுத்தெறிந்துவிட்டு அரசியல் சுதந்திரம் பற்றிப் பேசலாம் என்ற விவாதத்தை வைத்தார்கள் திராவிட இயக்கத் தலைவர்கள்.

அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமூக சுதந்திரம் ஆகிய மூன்றும் ஒரு சேர வாய்க்கப் பெறுவதுதான் முழுமையான சுதந்திர மனிதனை உருவாக்கும் என்பதில் இந்த இயக்கங்களை சார்ந்தவர்களின் உறுதியான நிலையாக இருந்தது.

அத்தகைய நிலையினை இந்தியா அடைய தங்களிடம் இருந்த அனைத்தையும் இழக்கத் துணிந்தார்கள் என்பதுதான் வரலாறு.

அண்ணா பதவியேற்பு Image captionஅதிகார அரசியலில் தொலைந்த கொள்கைகள்

தேர்தல் அரசியலில் தொலைந்த கொள்கைகள்

ஆனால், என்று இந்த இயக்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாக உருமாற்றி தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்து வெகுஜனத் தேர்தல் மூலம் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெறத் துவங்கினவோ, அன்றே இயக்கம் என்ற அடையாளத்தை தொலைத்துவிட்டன.

தேர்தல் ஜனநாயகத்தின் கட்டாயங்கள் இவர்களது தத்துவங்களையும் லட்சியங்களையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டன.

இன்றைய ஜனநாயகத்தால் ஏற்பட்ட தேர்தல் கூட்டணிகள் இவர்களது போராட்டக்களங்களை மாற்றி அமைத்தன.

இந்த இயக்கங்களே கொள்கை மாறுபாடுகளால் தலைமைக்கு ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் பல கூறுகளாகப் பிரிந்தன.

 

தேர்தல் வெற்றியைப்பெற எவ்விதமான கொள்கை சமரசத்திற்கும் தயாராக இருக்கிறார்கள்.

அதனால், இயக்கங்களாகப் பிறந்த இவர்கள் இன்று கட்சிகளாக வாழ்கிறார்கள். இதற்கு எந்த இயக்கங்களும் விதிவிலக்கில்லை.

இந்த அடிப்படையில்தான் இன்று தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளை நான் பார்க்கிறேன்.

பிற தென் மாநிலங்கள் கொண்டாடாத திராவிடம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிபேசும் மக்கள்தான் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆனால், திராவிடன் என்ற அடையாளத்தை தமிழர்கள் தவிர வேறு யாரும் கொண்டாடுவதாகத் தெரியவில்லை.

சொல்லப்போனால், தமிழக திராவிடக் கட்சிகளுக்கு மற்ற திராவிட மாநிலங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளைவிட தேசியக் கட்சிகளே மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.

 

நதிநீர்ப் பங்கீடு, முதலீடுகளுக்கான போட்டி, இயற்கை ஆதாரங்களைக் களவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோதல்கள் ஆகியவற்றால் தமிழ்நாட்டிற்கு மற்ற திராவிட மாநிலங்கள் அன்னியமாகிவிட்டன.

1967க்குப் பிறந்த தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

திராவிடம் என்ற அடையாளம் தங்களுக்குப் பொருந்தாது என கருதுகிறார்கள்.

சுயமரியாதைப் பாரம்பரியம் காலில் விழும் கலாசாரமான கதை

அதனால்தான் தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption`சுயமரியாதைப் பாரம்பரியம் காலில் விழும் கலாசாரமான கதை`

இந்தச் செல்வாக்கைப் பார்த்து அதிர்ச்சியுற்ற திராவிடக் கட்சிகளின் இன்றைய தலைவர்கள் நாம் திராவிடர்கள் என்று பேசுவதை விட்டுவிட்டு, தமிழ், தமிழ்நாடு, தமிழன் என்று பேசி திராவிடத்தின் சாயலில் இருந்து வெளியேவர முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

இறை மறுப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி என்பவைதான் திராவிட இயக்கத்தின் மூலக்கூறுகள்.

அலகு குத்தி, மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு தங்கள் தலைவர்கள் பயணிக்கும் கார்களின் டயர்களைக் கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் இவர்கள் எப்படி திராவிட இயக்கத்தின் லட்சியங்களைச் சுமக்க முடியும்?

கொள்கைச் சுவர்கள் வீழ்ந்து, தத்துவக் கலவை

கருணாநிதி, சோனியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதேசியமும் திராவிடமும்

தேசியம், பொதுவுடமை, திராவிடம் என்ற லட்சியங்களுக்கிடையே இருந்த சுவர்கள் தற்போது விழுந்து இன்று அரசியல் கட்சிகளுக்குள் ஒரு தத்துவக் கலவை ஏற்பட்டிருப்பதை புறந்தள்ளிவிட முடியாது.

தேசம் முழுவதும் வியாபித்திருந்த தேசியக் கட்சிகளின் செல்வாக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் துவங்கியதால் மாநிலக் கட்சிகளை தேர்தல் வெற்றிகளுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்டது.

 

தேசியக் கட்சிகளோடு கொண்ட உறவின் காரணமாக, மத்திய அரசில் பங்கு கிடைத்த மாநிலக் கட்சிகள் அதிகாரத்தை அதிகம் சுவைக்க வேண்டுமென்றால் தேசியக் கட்சிகளின் உறவு தங்களுக்குத் தேவை என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டன.

காணாமல் போன இறை மறுப்பு, தளரும் இந்தி எதிர்ப்பு

அதிமுக தொண்டர்கள் மொட்டைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமொட்டை போடும் கலாசாரம்

முன்னேற்றம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவை வேண்டும் என்றால், முதலீடுகளும் முதலாளிகளும் தவிர்க்க முடியாதவை என்பதை பொதுவுடமை இயக்கங்கள் தெரிந்துகொண்டன.

அதேபோல, திராவிட இயக்கத்தின் முக்கியமான அடையாளங்களில் சில கால வெள்ளத்தின் தாக்கத்தால் தொலைந்துபோனதை யாரும் மறுக்க முடியாது.

இறை மறுப்பு என்பதை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இப்போது பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தி எதிர்ப்பு என்பதுகூட மிகவும் தளர்ந்துபோய்விட்டது என்றே நான் கருதுகிறேன்.

 

நடைமுறை வழக்கில் சுயமரியாதை பேசுகின்ற திராவிடக் கட்சிகள் மத்தியில்தான் இன்று காலில் விழும் கலாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்கூட காலில் விழும் கலாசாரம் வேண்டாம் என்று பகிரங்கமாக அறிக்கை கொடுத்தார்.

`திமுக மட்டுமே திராவிட இயக்கத்தின் நீட்சி`

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption`திமுக மட்டுமே திராவிடத்தின் நீட்சி`

திராவிட இயக்கத்தின் நீட்சி என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நான் அங்கீகரிப்பேன்.

கலைஞர், பேராசிரியர் போன்ற திராவிட இயக்கத்தின் மூல புருஷர்கள் இன்றும் வாழ்ந்து, வழிகாட்டுவதால் அவர்கள் திராவிட இயக்கத்தின் சாயல்களைக் கொண்டாடுகிறார்கள்.

திராவிடக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளும் மற்றவர்களிடம் என்னால் அந்த சாயலைக்கூட பார்க்க முடியவில்லை.

எது எப்படி இருந்தாலும் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.

மாநில சுயாட்சி

இன்று அதிகம் தேவைப்படுகின்ற மாநில சுயாட்சி என்ற அரசியல் லட்சியத்தை முதன்முதலில் முன்னெடுத்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததிலும் கலைஞரின் பங்கு மகத்தானது என்பதை மாற்று முகாம்களில் இருக்கின்ற விவரம் தெரிந்தவர்கள்கூட ஏற்றுக்கொள்வார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தங்களது சிந்தனைத் தொட்டியில் பிரசவித்து, பின்பு அதனை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு.

 

வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதமாக தமிழ் மொழியைச் செழுமைப்படுத்துவதிலும் சாதிகளற்ற தமிழ் சமூகத்தை வடித்து எடுப்பதிலும் திராவிட இயக்கங்கள் தோற்றுவிட்டன என்பதுதான் வரலாற்றின் சரியான மதிப்பீடாக அமையுமென நான் கருதுகிறேன்,.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது இந்தியா மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் நம் நெஞ்சை நிறைக்கின்றன.

மதம் கொண்ட யானையாக கட்டுத்தறிகளை உடைத்தெறிந்துவிட்டு நம் மத்தியில் சர்வசாதாரணமாக உலவும் சாதீயம் கலந்த மதவாத அரசியலை வீழ்த்தும் பொறுப்பு திராவிட இயக்கத்தின் மரபில் வந்த திராவிடக் கட்சிகளுக்கு இருக்கிறது.

 

திராவிடக் கட்சி என்று அழைத்துக்கொண்ட சிலரால் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு தூரம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம்.

இந்த அழுக்குக் கறைகளை துடைத்தெறிந்து வளமான தமிழகத்தையும் வலுவான பாரதத்தையும் அமைக்க திராவிட இயக்கத்தின் நான்காவது தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் மனமுவந்து செயல்படும் காலம் மிக அருகில் இருக்கிறது என்பதே எனது மதிப்பீடு.

(கட்டுரையாளர் சா. பீட்டர் அல்போன்ஸ் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்)

http://www.bbc.com/tamil/india-39830328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.