Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை தொடர்ந்து கண்காணிப்போம்! ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூற முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லய் மார்கோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது மனித உரிமைகள் தொடர்பான நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த சலுகை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தில் இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயங்களைப் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்காகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய மனித உரிமைகள் சார்ந்த பல விடயங்கள் எஞ்சியுள்ளதாகவும், துன்புறுத்தல்கள், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை இன்னும் அவதானம் செலுத்த வேண்டி இருக்கிறது.

எனினும், தேசிய அரசாங்கம் விரைவில் அதனை சீராக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதோடு, இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டங் லாய் மார்கு குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/business/01/145914?ref=home-feed

  • தொடங்கியவர்

கிடைத்தது ஜி.எஸ்.பி. : கடுமையான கண்காணிப்பு முன்னெடுக்கப்படும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

05-9688b0a3f4c3bfb02ab6a5c00d79e4db2291cab7.jpg

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும்

சித்திரவதை, சிறுவர் திருமணம் நிறுத்தப்படுவது அவசியம்

நாட்டின் நிலைமை முற்றுமுழுதாக நன்றாக இல்லை

நல்லிணக்கத்தில் முன்னேற்றம் விரைவாக அவசியம்

300 மில்லியன் யூரோ வருடாந்தம் கிடைக்கும்

வெள்ளிக்கிழமை முதல் சலுகை அமுலுக்கு வரும் 

இலங்கையின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான கடுமையான கண்காணிப்புடன் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற் கான பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கு சுங்கவரி அறவிடப்படமாட்டாது. இது இலங்கைக்கு ஒரு நற்செய்தியாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லை மார்க் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழ்ஙகப்படுவதன் மூலம் வருடாந்தம் 300 மில்லயன் யூரோ கிடைக்கவுள்ளது. இதன்மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் நன்மை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் தற்போது சிறந்ததொரு முன்னேற்றமான நிலைமை காணப்படுவதாக நாங்கள் கூறவில்லை. சித்திரவதை, சிறுவர் திருமணம் உள்ளிட்ட பல விடயங்கள் இன்னும் இடம்பெறுகின்றன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டியுள்ளது. இவற்றில் அரசாங்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்காணிப்பை முன்னெடுக்கும். சிறந்த வகையிலான நல்லிணக்க செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் மார்க் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஒன்றியத்தின் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

இலங்கைக்கு ஒரு நல்ல செய்தியை நாங்கள் வெளியிடுகின்றோம். இலங்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகையை உத்தியோகப்பூர்வமாக மீண்டும் பெற்றுக்கொள்கிறது. நாளை வியாழக்கிழமை வெளிவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவண ரீதியான அறிவிப்பில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுவது தொடர்பில் குறிப்பிடப்படும்.

அதன்பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கு சுங்க வரி அறவிடப்படமாட்டாது. அந்தவகையில் மே 19 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நேரடியாக அமுலுக்கு வரும். இலங்கையைப் பொறுத்தவரையில் இது நல்ல செய்தியாகும்.

இதன்மூலம் இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும். தற்போதைய நிலைமையில் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியைப் ஐரோப்பிய ஒன்றியமே பெற்றுக்கொள்கிறது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 30 வீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்கிறது. இலங்கைக்கு இந்த சலுகை கிடைப்பதானது பொருளதார ரீதியில் பாரிய நன்மையை ஏற்படுத்தும். விசேடமாக ஆடை, றப்பர், தேயிலை, மீன், மற்றும் உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை இனிவரும் காலங்களில் முழு பொருளாதார நன்மையுடன் ஏற்றுமதி செய்யலாம்.

இதன்மூலம் இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக மீதியானது சாதகமான தன்மையை நோக்கி நகரும். வருடாந்தம் இலங்கைக்கு 300 மில்லியன் யூரோ இந்த சலுகை மூலம் கிடைக்கவிருக்கிறது. இது எதிர்காலத்தில் ஒரு பில்லியன் யூரோவாகவும் அதிகரிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கைக்கு இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினால் பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகள் கிடைக்கவிருக்கின்றன. இலங்கையின் உள்ளக நிறுவனங்கள் புதிய உற்பத்திகளை நோக்கி நகரலாம். ஏற்றுமதி உற்பத்திகளை ஊக்குவிக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து புதிய நிறுவனங்களை ஆரம்பிக்கும். இதன் மூலம் இலங்கைக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும்.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் இதன்மூலம் பாரிய நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் நிறுவனங்கள் அதிகளவில் நன்மை அடையும். இலங்கை அரசாங்கம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜி.எஸ்.பி. சலுகை மூலம் இந்த துறையினருக்கும் நன்மை கிடைக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சலுகை பாரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.

இலங்கையானது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரி கடந்த வருடம் ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது. அதன்பின்னர் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் இடம்பெற்றன. குறிப்பாக மனித உரிமை சிவில் உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை சார்ந்த 27 சர்வதேச சாசனங்களை அமுல்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. இந்த விடயத்தில் ஒரு முன்னேற்றத்தை நாங்கள் கண்டோம். அதனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகையை இலங்கைக்கு வழங்க தீர்மானித்தது.

அதற்காக இலங்கையில் அனைத்து விடயங்களும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. இன்னும் பல முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாங்கள் முயற்சிப்போம். குறிப்பாக சித்திரவதைகள், சிறுவர் திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு மீறல் விடயங்கள் இன்னும் இடம்பெறுவதாக எமக்கு தெரிகிறது. இவற்றை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தவகையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் என்றார்.

கேள்வி: பயங்கரவாத தடைசட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் என்ன கூறுகின்றது?

பதில்:- இதனை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய சட்டமானது சர்வதேச தரங்களுக்கு உட்பட்டதாக அமையவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம். இதுதொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக செய்படுவோம். இந்த விடயத்தில் எங்களது கண்காணிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும். அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவோம்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

பதில்: கண்காணிப்பு நடவடிக்கைகள் வருடாந்த அடிப்படையில் நடைபெறும். 27 சர்வதேச சாசனங்கள் தொடர்பில் நாம் கண்காணிப்போம். அரசாங்கம் எவ்வாறு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் கண்காணிப்போம்.

கேள்வி: ஏதாவது திட்டக்கட்டமைப்பு இருக்குமா?

பதில்: நிச்சயமாக ஒரு திட்டகட்டமைப்பு இருக்கும். ஆனால் அது எவ்வாறானது என்பதை இப்போதே கூறுவது கடினம்.

கேள்வி: புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை பார்த்தீர்களா?

பதில்: அரசாங்கத்தின் பல வரைபுகளைப் பார்க்கின்றோம். எவ்வாறெனினும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சர்வதேச தரங்களுக்கு அமைவானதாக இருக்கவேண்டும். இதனை நாங்கள் கண்காணிப்போம்.

கேள்வி: அப்படியாயின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பார்க்காமல் ஜி.எஸ்.பி. சலுகையை கொடுத்துவிட்டீர்கள்?

பதில்: இதில் தவறான புரிதல்கள் உள்ளன. அதாவது ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை நாங்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை. இதன்மூலம் மக்கள் பயனடைகின்றனர். இதுவொரு செயற்பாட்டு படிமுறையாகும். இதில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. சில விடயங்களை முன்னெடுக்குமாறு இதனூடாக நாங்கள் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். ஒரு விடயத்தை ஆரம்பத்திலேயே கூறினேன். நாங்கள் ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கைக்கு வழங்குகிறோம் என்பதற்காக இலங்கையின் அனைத்து செயற்பாடுகளும் சிறப்பாக இருக்கின்றன என்று அர்த்தமில்லை. பல முன்னேற்றங்கள் காணப்படவேண்டியுள்ளது. அரசாங்கம் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது.

கேள்வி: ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குவதற்கான பிரதான காரணம் என்ன?

பதில்: கடந்த 2010 ஆம் ஆண்டு பல்வேறு குறைபாடுகளின் காரணமாக இந்த சலுகையை நாங்கள் நிறுத்தினோம். குறிப்பாக சித்திரவதை, சிறுவர் திருமணம், சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினை என பல்வேறு விடயங்கள் காணப்பட்டன. தற்போது புதிய அரசாங்கம் இவை குறித்து எதிர்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது. எனவே நாங்கள் இதனை வழங்குகிறோம். ஆனால் நாட்டின் நிலைமை முற்று முழுதும் சிறப்பாக இருப்பதாக நாங்கள் கூறவில்லை.

கேள்வி: ஐ.நா.வின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்கிறீர்களா?

பதில்: ஐ.நா.வின் பரிந்துரைகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பரிந்துரைகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். உண்மை நிலைமையை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.இது முடிவல்ல ஒரு வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும். அதாவது எமது கண்காணிப்பு செயற்பாடுகளின் ஆரம்பம் என்று கூறலாம்.

கேள்வி: எவ்வளவு காலத்திற்கு இந்த சலுகை நீடிக்கும்?

பதில்: இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக வரும்வரை நீடிக்கும். 2021 அல்லது 2023 என அவ்வப்போதைய நிலைமைகளின்படி இந்த சலுகை நீடிக்கும்.

கேள்வி: இனி எந்தப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும்?

பதில்: ஒருசில பொருட்களுக்கு மட்டுமே வரி அறவிடப்படும். விவசாயத்துறை சார்ந்த சிறியளவிலான பொருட்களுக்கு அறவிடப்படும். ஆனால் சலுகையுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பெரியவிடயமேயல்ல.

கேள்வி: இதனை ஒரு நல்ல செய்தி என்று குறிப்பிட்டீர்கள்? இலங்கையிடமிருந்து என்ன நல்ல செய்தியைப் பெற்றீர்கள்?

பதில்: தற்போதைய இலங்கையின் நிலைமையானது முற்றுமுழுதாக சிறப்பானதாக இல்லாவிட்டாலும் முன்னேற்றங்கள் வருகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம். ஐ.நா. விசேட நிபுணர்கள் இலங்கை வருகின்றனர். நாங்கள் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: குற்றவாளிகள் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசாங்கத் தலைமை கூறியுள்ளது. அவ்வாறாயின் எப்படி முன்னேற்றத்தை எதிர்பார்ப்பீர்கள்?

பதில்: சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகும்.

கேள்வி: பொருளாதார ரீதியில் என்ன நன்மை?

பதில்: பல நன்மைகள் உள்ளன. இலங்கைக்கு வருடாந்தம் 300 மில்லியன் யூரோ கிடைக்கும். புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யும். இதன் மூலம் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும். இது ஒரு முக்கியமான செயற்பாடாகும். இந்த விடயத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பாரிய விவாதங்கள் நடைபெற்றன. அனைத்து விடயங்களும் ஜனநாயக ரீதியாவும், வெளிப்படையாகவும் நடைபெற்றன. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக நாம் கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம்.பல படிமுறைகள் இதில் காணப்பட்டன. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்து ரீதியில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்.

கேள்வி: வடக்கு, கிழக்கு எவ்வாறு நன்மை அடையும்?

பதில்: இந்த வரிச்சலுகை மூலம் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நன்மை கிடைக்கும்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாடுகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவையெல்லாம் எவ்வளவுதூரம் சாத்தியம்?

பதில்: நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக நீங்கள் பன்மையுடன் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரிட்டன் என்ற ஒரு நாடே ஒன்றியத்திலிருந்து விலகுகிறது. அதேவேளை புதிதாக நான்கு நாடுகள் உள்ளே வர காத்துக்கொண்டிருக்கின்றன. இதுதான் நிலைமை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினாலும் ஐரோப்பிய ஒன்றியமானது தொடர்ந்து இலங்கையுடனான சிறந்த வர்த்தக பங்காளராக இருக்கும் என்பதை அறிவிக்கின்றோம்

கேள்வி மனித உரிமை விவகாரம் காரணமாக இந்த சலுகையை இழந்த முதல்நாடு இலங்கையா?

பதில் முதல் நாடு இலங்கைதான். வேறு நாடுகளுக்கு மஞ்சள் அட்டை போன்ற எச்சரிக்கைகள் உள்ளன என்றார்.

இதேவேளை இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் சிசிலியா மெல்ம்ஸ்ரோம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கை மேலும் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைந்து கொள்ளவே இந்த சலுகை வழங்கப்படுகின்றது. இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும். இலங்கையானது சர்வதேச சாசனங்களை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தைக் காட்டவேண்டும். இலங்கையின் நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக இங்கு யாரும் பாசாங்கு செய்யவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. சித்திரவதைகள், சிறுவர் திருமணங்கள், ஒரு சமூகங்களுக்கு எதிரான அநீதிகள் என்பன தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை அரசாங்கத்துடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நெருக்கமாக செயற்படும். இலங்கையின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.