Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்!

Featured Replies

'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

5f5b78d1-49dc-44c2-ba1b-63edc3941060_182


இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்து வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாக கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும், எம்.எல்.ஏ-க்கள் இணைவதற்காக ஓ.பி.எஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி மற்றும் தங்கம் ஆகியவை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/92081-times-now-released-mla-for-sale-sting-tapes.html

  • தொடங்கியவர்

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க கோடிக்கணக்கில் பேரம்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

 
கோப்புப் படம்
கோப்புப் படம்
 
 

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் அணி மாறத் தொடங்கினர். இதனைத் தடுப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டனர்.

எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக ஓபிஎஸ் அணிக்கு மாறிய எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ‘‘சொந்த ஊரில் இருந்த வந்த எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் மடக்கி ரூ.2 கோடி தருவதாக கூறினர். எம்எல்ஏ விடுதியில் இருந்து ஆளுநர் மாளிகை சென்றபோது ரூ.4 கோடியானது. கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தபோது ரூ.6 கோடி தருவதாக உறுதி அளித்தனர். ஒரே நேரத்தில் பணமாக திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாகக் கூறினர்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது. ஓபிஎஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்) அமைச்சர்களாகி விடுவோம். ரூ.500 கோடிதான் எங்கள் இலக்கு’’ என பேசியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஓபிஎஸ்-அணிக்கு-செல்லாமல்-தடுக்க-கோடிக்கணக்கில்-பேரம்-வீடியோ-வெளியானதால்-பரபரப்பு/article9725717.ece?homepage=true

  • தொடங்கியவர்

'அதிமுகவில் பேரம்': ட்விட்டரில் கலாய்த்த திமுக எம்.எல்.ஏ

 
ஜெ.அன்பழகன் | கோப்புப் படம்: ம.பிரபு
ஜெ.அன்பழகன் | கோப்புப் படம்: ம.பிரபு
 
 

கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியானது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்செய்தி வெளியானது முதல் ட்விட்டரில் #MLAsForSale என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர் அரசு மக்களால் மக்களுக்காக இருத்தல் வேண்டும் ஆனால் அதிமுக அரசோ பணத்தால் பணத்துக்காக இருக்கிறது என்று பொருள்படும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.

anbu12_3174491a.jpg

அதேபோல் ஜெ.அன்பழகனை ட்விட்டரில் பின்பற்றும் நபர் ஒருவர் How to Activate the TN Governor? (தமிழக ஆளுநரை செயல்பட வைப்பது எப்படி?) எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்ப அதற்கு ..

செயல்முறை விளக்கம்:

> இரு சிம் கார்டுகள் கூடிய மொபைல் வாங்கவும்

> ஒரு சிம் தமிழ்நாட்டுக்கு மற்றொன்று மகாராஷ்டிராவுக்கு

> டெல்லியில் தேசிய ரோமிங் என சிம்மை முடுக்கிவிடவும்

> பின்னர் பாஜக என டயல் செய்தால் மொபைல் செயல்படும்

இவ்வாறு கிண்டலாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

nbua_3174486a.jpg

 

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவின் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுகவில்-பேரம்-ட்விட்டரில்-கலாய்த்த-திமுக-எம்எல்ஏ/article9725864.ece?homepage=true

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: எம்எல்ஏக்கள் கூவத்தூர் பேரம்- 'சின்ன ஆத்தா வையும்'!

 

 
 
 
kasu2_3174517f.jpg
 
 
 

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து #MLAsForSale என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதுகுறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

RaNa‏ @ranjith23896

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 200 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி- செய்தி.

அப்படியே அவருக்கும் ஒண்ணு வாங்கிக் குடுங்க #MLAsForSale

Arul‏ @Arul_Raja

#MLAsForSale Part II - படம் ரிலீசு பண்றமாதிரி அவங்கவங்க வயித்துல புளிய கரைக்குறாய்ங்க.

Mani Vasu‏ @ManiVasu2

வட இந்திய ஊடகத்துக்கு தமிழக அரசியலில் என்ன ஆர்வம்? இதற்கு மோடி மேஜிக் என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். #MLAsForSale

தனிமனிதன்‏ @Sankarbilla26

#MLAsForSale இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு, கூவத்தூர் கூத்து நடந்த சமயத்திலேயே நமக்கு தெரியாதா... உள்ள என்ன நடந்ததுன்னு?

தமிழவன் சந்திரசேகர்‏ @nan_thamizhavan

இன்னைக்குதான் புதுசா இவங்க பொட்டி வாங்குற மாதிரி... அவர் அவ்வளவு வாங்கிட்டார், இவர் இவ்வளவு வாங்கிட்டாருன்னு ஒரே பொலம்பலா இருக்கு... #MLAsForSale

Dinesh‏ @dineshuit

#MLAsForSale ஜனநாயகப் படுகொலை.

Thamu‏ @thamu94

நல்ல அரசியல்வாதிகளை விட நல்ல செய்தி ஊடகங்கள்தான் தமிழகத்தின் இன்றைய தேவை.

Arunkumar‏ @ArunkumarTNR

தமிழகத்தில் பண அரசியலும், பதவி அரசியலும் படுஜோராக நடைபெறுகிறது. மக்கள் பிரச்சனைக்கோ மயான அமைதி நிலவுகிறது. #MLAsForSale

SENTHILKUMAR A K‏ @aksenthil_24

ஊடகங்கள் உண்மையாக இருந்தால், ஏன் நாட்டில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதில்லை?

kasu1_3174518a.jpg

Arun Mohan‏ @arunmohanseo

#MLAsForSale இதை இரண்டு நாட்கள் பேசுவோம், அதையும் மறந்துவிடுவோம். அதுசரி விவசாயிகள், மீத்தேன் பிரச்சினை என்னவானது?

KVVR @Vijuvenkatram

கூவத்தூர் சந்தைக்கு போறேன்...

சின்ன ஆத்தா வையும், காசு குடு... #MLAsForSale

பாலசுப்ரமணியம்

தமிழகம் பற்றிய செய்தி ஒன்று அகில இந்திய அளவில் ட்ரெண்டானால் பெருமைப்படலாம். ஆனால் இந்த ட்ரெண்டில் நமது மானம் போகிறது.

வெட்டி வினோத்‏ @vinothsara

அலிபாபாவும் 40 திருடர்களும்... - அதுசரி அலிபாபா யாரு?

tamilalan‏ @tamilanraja

#MLAsForSale எப்படியோ மாட்டு இறைச்சி விவகாரங்களை மறைக்க ஒரு விவகாரம் கிடைத்துவிட்டது.

Uday‏ @udayaTWEETS

தீபா- தீபக் மோதலை மூடி மறைக்க இந்த முயற்சியா?

smartcovai‏ @smartcovai

சரவணன் இருக்க பயமேன்? #தமிழகம் #TnPolitics #MLAsForSale

kasu_3174519a.jpg

Makesh‏ @Makesh82

#MLAsForSale தமிழக அரசியல்வாதிகள் நம்மள எப்பவுமே பரபரப்பாவே வச்சிட்டு இருக்காங்கப்பா. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போறோமோ---?

Vijin Rassel‏ @vijinr

எது எடுத்தாலும் பத்து... எது எடுத்தாலும் பத்து... #MLAsForSale

Sivakumar Rajendran‏ @tvlrsivakumar

மாடு வாங்க/ விற்கத் தானே சட்டம் போட்டீங்க, மனுசனை விற்க கிடையாதே! #MLAsForSale

kasu3_3174516a.jpg

RamBus SundarDore‏ @manik_baashha

கையும் களவுமாக மாட்டியுள்ள புதிய திருடர்களுக்கும், தொழில்முறை திருடர்களுக்கும் இடையில் மாட்டியிருக்கிறது இந்தியாவும், தமிழ்நாடும். #MLAsForSale

piraikannan‏ @piraikannan

இந்த கோவா, மணிப்பூர் வீடியோ ஏதும் இல்லீங்களா? #MLAsForSale

Manimaran Thendral‏ @ilayathendral

Big Breaking News-ன்னு ஒன்னுமே இல்லாத செய்திகளை ஒளிபரப்பிய தமிழக ஊடகங்கள் உண்மையான Breaking News-ன் போது என்ன செய்கின்றன? #MLAsForSale

Alex Palanisamy‏ @Alexps001

#MLAsForSale என எள்ளி நகையாடுபவர்களில் முக்கால்வாசிப் பேர் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டவர்கள்தான்.

Murugan Periyannan‏ @Murugan_DMK

மாடுகள் விற்க தடை.

எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு.

http://tamil.thehindu.com/tamilnadu/நெட்டிசன்-நோட்ஸ்-எம்எல்ஏக்கள்-கூவத்தூர்-பேரம்-சின்ன-ஆத்தா-வையும்/article9725907.ece?homepage=true

  • தொடங்கியவர்

வீடியோவில் இருப்பது நான்தான், ஆனால்... எம்.எல்.ஏ சரவணனின் அடடே விளக்கம்!

 

எம்.எல்.ஏக்களுக்குப் பேரம் பேசப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ பற்றி ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, எம்.எல்.ஏ.சரவணன்  விளக்கமளித்தார்.

MLA saravanan
 

அ.தி.மு.க இரு அணிகளாகப் பிளவுப்பட்ட சமயத்தில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் கோல்டன் பே தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்துவிடாதிருக்க அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர்களுக்குப் பணம், பரிசு பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இதனிடையே மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூரிலிருந்து தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார். சசிகலா அணியினர் எம்.எல்.ஏக்களுக்குப் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதாக சரவணன் குற்றம்சாட்டினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பொறுப்பேற்றார். அதன்பின்னர் கூவத்தூர் விடுதியில் உண்மையில் என்ன நடந்தது, எதற்காக எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டனர் உள்ளிட்ட கேள்விகள் விடை தெரியாமலேயே அடங்கிப் போயின .

இந்நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ் கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நேற்று திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டது. அந்த ஆதாரத்தில் இருந்தது வேறு யாருமில்லை, கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ சரவணன்தான். அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ குறித்து விளக்கமளிக்க ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்துப் பேசினார் சரவணன். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரவணன், ’அந்த வீடியோ பொய்யானது. குதிரை பேரம் குறித்து நான் பேசுவதுபோல் வேறு யாரோ குரல் கொடுத்துள்ளார்கள். அந்த வீடியோ வேறு இன்டர்வியூவுக்காக எடுக்கப்பட்டது. அதில் என்னைப் போன்று யாரோ டப்பிங் கொடுத்துள்ளார்கள். நான் இதைச் சட்டப்படி சந்திக்கவுள்ளேன்’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/92154-mla-saravanan-gives-explanation-about-koovathur-video.html

  • தொடங்கியவர்

'நான்  எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை; இது இறைவன் மீது ஆணை!'- தமிமுன் அன்சாரி திட்டவட்டம்

 

சசிகலா அணியில் எம்.எல்.ஏக்களை சேர்க்க பல கோடி பேரம் பேசப்பட்டதாக அ.தி.மு.க எம்.ஏல்.ஏ. சரவணன் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தெரிவித்திருந்தார். இதில் அதிகபட்சமாக எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் தர பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

தமிமுன்  அன்சாரி 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு தன் கண்டனத்தையும் மறுப்பையும் தெரிவித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான எம்.தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

' 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் சரவணன் எம்.எல்.ஏ., அவர்கள் பல அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறியுள்ளதாகவும் அதில் எனக்கும் 10 கோடி ரூபாய்  கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் .

நோன்பு துறந்துவிட்டு வீட்டில் அமர்ந்திருந்த எனக்கு இச்செய்தி வந்ததும் மிகுந்த வேதனையடைந்தேன். அ.தி.மு.க எதிர்ப்பு என்ற அடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியும் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது.

நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும்.

செங்கோட்டையன் 

மேலும், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்துக்கு வந்தபோது 'கரண்ஸி பாலிடிக்ஸ்' எங்களுக்கு பிடிக்காது என்பதையும் கூறினோம். அவரும் எங்களைப்பற்றி முழுமையாக தெரிந்தவர் என்பதால் சிரித்துக்கொண்டே அதை ஆமோதித்தார். எங்களிடம் நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.
உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம்.

உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின்  தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

அப்போது இதைத்தவிர நாங்கள் எதுவும் பேசவில்லை. எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை. இது இறைவன் மீது ஆணையாகும்! இது அ.தி.மு.க தலைவர்களும் அறிந்த உண்மையாகும்.

இப்படியிருக்க சமீப காலமாகவே எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இடையில் சில முரண்பாடுகள் நிலவி வருகிறது.
அ.தி.மு.க அரசுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு செய்யும் சூழ்ச்சிகளை நாங்கள் உரத்த குரலில் கண்டித்து வருகிறோம்.

இந்நிலையில், 'டைம்ஸ் நவ்' வழக்கமான விளம்பர பரபரப்புக்காக ஊடக அறத்தை மீறி செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இதற்கு 'பின்னணி' என்ன என்பது டெல்லியை கவனிப்பவர்களுக்குப் புரியும்.

சரவணன் எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டை 100 சதவிகிதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். இது தொடர்பாக ம.ஜ.க சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நான் உடல் நலம் குன்றி, இப்போது தான் தேறி வந்த நிலையில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் அரசியலுக்கு வந்தோம்? நமக்கு இதுவெல்லாம் தேவையா ? என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது. தமிழக ஊடக நண்பர்களும், சமூக, இணையதள செயல்பாட்டாளர்களும் தயவுசெய்து இவ்விஷயத்தில் உண்மையாகவும் விசாரித்தும் கருத்துகளை வெளியிடும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/politics/92102-tamimun-ansari-denies-the-charge-of-getting-money.html

  • தொடங்கியவர்

எம்எல்ஏ சரவணனின் விடியோ கிடைத்தது எப்படி? மூன் டிவி எடிட்டர் ஷானவாஸ் கான் பேட்டி

 

 
shanawas


சென்னை:  மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணனின் பேட்டி கிடைத்தது எப்படி என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகி ஷானவாஸ் கான் விளக்கம் கொடுத்துள்ளார்.

எம்எல்ஏ சரவணனின் பேச்சுகள் அடங்கிய விடியோவை வெளியிட்ட ஆங்கில தனியார் செய்தி ஊடகத்தில், ஷானவாஸ் பேட்டி இடம்பெற்றுள்ளது.

அப்போது அவர் கூறியதாவது, 
சரவணனிடம் பேசியது எப்படி? என்ற கேள்விக்கு, 
கூவத்துரில் என்ன நடந்தது என்பது குறித்து அறிய அனைவருக்குமே ஆர்வம் தான்.  அதனால்தான் அது பற்றிய அறிய ஸ்டிங் ஆபரேஷன் நடத்த முடிவு செய்தோம். கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியே வந்த முதல் நபர் சரவணன். எனவே அவரிடம் பேச நினைத்தோம்.

ஒரு சிலரைப் பிடித்து அவருடன் தொடர்பு கொண்டோம். அவர் எங்கள் அலுவலகத்துக்கு வர ஒப்புக் கொண்டார். இது  ஒரே நாளில் நடந்த விஷயம் அல்ல. 

அவருடன் பேசிய அனைத்துப் பேச்சும் பதிவு செய்யப்பட்டது. கிட்டதட்ட 6 நாட்கள் இதுபோன்ற சந்திப்பு நிகழ்ந்தது. 

அவருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, மற்றவர்களுக்கு எவ்வள்வு கொடுக்கப்பட்டது, பேரம் பேசிய விவகாரம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை எம்எல்ஏ சரவணன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சசிகலா அணி தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடியோ திங்கட்கிழமை இரவு வெளியானது.

அதிமுக ஏம்எல்ஏக்கள், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்த போது, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், அங்கிருந்து தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

தோற்றத்தை மாற்றிக் கொண்டு கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்ததாக அவர் அப்போது பரபரப்பான பேட்டியை அளித்திருந்தார். 

இந்த நிலையில், தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசிய விடியோ நேற்று வெளியானது. ஆங்கில தனியார் தொலைக்காட்சியில் வெளியான இந்த விடியோவால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அந்த விடியோவில் பதிவாகியுள்ள முழு விவரம் வருமாறு, 

கேள்வி : கூவத்தூர் எப்படி இருந்தது? 
கூவத்தூரில் எந்த தப்பும் நடக்கவில்லை, அங்கு ஊடகங்களில் சொன்னது போல பெண்கள் எல்லாம் இல்லை, மிரட்டல் விடுக்கப்படவில்லை. தண்ணி மட்டுமே இருந்தது.

கேள்வி: பேரம் கமிட் பண்ணினார்களா
கமிட் எல்லாம் பண்ணவில்லை. சொல்லப் போனால் நேரடியாக எதுவுமே பேசவில்லை. பேருந்தில் ஏறும் போது 2 சொன்னார்கள். கூவத்தூர் போனதுமே 4 என்று சொன்னார்கள். அதாவது ஏர்போர்ட் போகும் போது 2 ஆக இருந்தது பிறகு கவர்னரை பார்க்கப் போகும் போது 4 ஆக ஆனது. அப்புறம் 6 என்று சொன்னார்கள். இப்படி ஏற்றிக் கொண்டே போகிறார்களே கொடுப்பார்களா என்று தோன்றியது.

அடுத்த நாள் வந்து எங்குமே பணம் இல்லையாம், எனவே, பணத்துக்குப் பதிலாக தங்கம் தருகிறோம் என்று சொன்னார்கள். அடடா பணம் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு போய் தங்கம் தான் வாங்க வேண்டும். அங்கும் ஏமாற்றி விடுவார்கள். எப்படி வாங்குவது என்று தெரியாது. எனவே எல்லா பிரச்னையும் முடிந்துவிட்டது. 

அந்த நொடியே பேசியதை கொடுத்திருந்தால் யாருமே அந்த அணியை விட்டு வந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், திறந்துவிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லிவிட்டிருந்தாலே போதும். இதுவரை ஆட்டு மந்தைகள் போலத்தானே இருந்தோம். எந்த கேள்வியும் யாரும் கேட்டதில்லையே. எங்க வந்து கூப்பிட்டாலும் கையெழுத்து போடுங்கள் என்று சொல்லியிருந்தாலே போதும். எல்லாரும் வந்திருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு கூவத்தூரில் போட்டு அடைத்துவைத்துவிட்டு, மீடியாக்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்து எல்லாமே போச்சு என்று முடித்திருக்கிறார்.

3 எம்எல்ஏக்கள் மட்டும் பணத்தை வாங்கி விட்டார்கள். இவர்களுக்கு அதிகபட்ச தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2017/jun/13/shahnawaz-khan-speech-about-his-sting-operation-2719816.html

  • தொடங்கியவர்

#MLAsForSale வீடியோவை ஏன் டைம்ஸ் நவ்விற்கு கொடுத்தோம்..? - விளக்கம் கொடுக்கும் மூன் டி.வி

 
 

எம்.எல்.ஏ விற்பனைக்கு  டைம்ஸ் நவ்

.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதற்காகப் பல கோடி ரூபாய் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளியாகிவரும் வீடியோ தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின், 'எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததன் மூலம் அ.தி.மு.க ஆட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இந்த ஆட்சி இனியும் நீடிக்கக்கூடாது' என்று கூறி உள்ளார். சட்டமன்றம் கூட்டம் நடைபெற்றுவரும் சூழலில், அடுத்தடுத்து இன்னும் வீடியோக்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வருவதால், மீண்டும் இவ்விஷயத்தில், பரபரப்பு கூடியுள்ளது.

அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபிறகு, அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. தற்போது மூன்று அணிகளாக செயல்படத் தொடங்கியுள்ளது.  முதன்முதலில், சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கியபோது, சசிகலா தரப்பினர் தங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியும் எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதனைத்தொடர்ந்து சசிகலா தரப்பு, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை கூவத்தூர், 'கோல்டன் பே ரிசார்ட்'டில் தங்க வைத்தார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்தச் சம்பவங்களின்போது, அங்கு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் பேரம் நடைபெற்றதாக செய்திகளும் வெளிவந்தன. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிகளான, 'டைம்ஸ் நவ்' மற்றும் 'மூன் தொலைக்காட்சி' உள்ளிட்டவை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், 'கோல்டன் பே ரிசார்ட்'டிலிருந்து முதன்முதலில் தப்பி ஓடிவந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசிக்கொண்டிருப்பதாக காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பிட்ட அந்த வீடியோக் காட்சிகளில், ''எம்.எல்.ஏ-க்களை விமான நிலையத்திலேயே மடக்கி 2 கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். அடுத்து எம்.எல்.ஏ விடுதியில் இருந்து கவர்னர் மாளிகைக்குச் சென்றபோது 4 கோடி தருவதாகச் சொன்னார்கள். பிறகு கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தபோது 6 கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார்கள். அதனைத் தங்கமாகத் தருவதாகவும் கூறினார்கள்'' என எம்.எல்.ஏ சரவணன் பேசுவதாக வீடியோக் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த எம்.எல்.ஏ சரவணன், “அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அதில் உள்ள வாய்ஸ் என்னுடையது இல்லை” என மறுத்திருந்தார். 

இந்த நிலையில், 'மூன் தொலைக்காட்சித் தரப்பினர் தாங்கள் ரகசியமாகப் பதிவு செய்த வீடியோக்களை தங்களது சேனலில் ஒளிபரப்பாமல், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டனர்' என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக மூன் டி.வி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கானிடம் பேசினோம்...

மூன் தொலைக்காட்சி“அது வெறும் வதந்திதான். நாங்கள் யாருக்கும் வீடியோக்களை விற்கவில்லை. டைம்ஸ் நவ் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் இந்த வீடியோக்களை ஒளிபரப்பினால், அதன் வீச்சும் தாக்கமும் அபரிமிதமாக இருக்கும். மக்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் செய்துவரும் மோசடிகள் பெரும்பான்மை மக்களை சென்றடையவேண்டும்; அவர்கள் விழிப்புஉணர்வு பெறவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகவே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு வீடியோக்களை ஒளிபரப்பினோம்... அவ்வளவுதான்!

அந்த வீடியோவில் இருப்பது அனைத்தும் உண்மை. அ.தி.மு.க உடைந்த பிறகு எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்கு பெரும் குதிரைப் பேரம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள். இதை அப்படியே கடந்துபோக முடியவில்லை. ஒரு பத்திரிகையாளராக, ஒளிப்பதிவாளராக இதை அப்படியே மக்களிடம் அம்பலப்படுத்தத் திட்டமிட்டோம். அதன்படி, கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-க்களைக் கண்காணித்தோம். முதன்முதலில் ரிசார்ட்டில் இருந்து தப்பித்து வந்த எம்.எல்.ஏ சரவணனைத் தொடர்ந்து கண்காணித்தோம். அவரிடம் தொடர்ந்து பேசினோம். எங்கள் அலுவலகத்துக்கு அவரை வரவைத்து, நடந்தது குறித்து நேர்காணல் நடத்தினோம்.

மூன்று நாள் அவருடனேயே பயணித்துள்ளோம். திருநெல்வேலிவரை அவர் கூடவே சென்றுள்ளோம். அவர் கொடுத்த தகவல்களின்படி, அடுத்து சில எம்.எல்.ஏ-க்களிடமும் இதுகுறித்துப் பேசியுள்ளோம். அனைத்தையும் வீடியோக்களாகவும் பதிவு செய்துள்ளோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ம்தேதியில் இருந்து மே 25-ம் தேதிவரை இதற்காக உழைத்தோம். அந்தப்பணி முடிந்ததும்தான் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். நாங்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் அனைத்தும் உண்மை. எம்.எல்.ஏ-க்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்தது முதல் அவர்களுடன் பேசிய அனைத்தையும் பதிவு செய்துள்ளோம். 

 

எம்.எல்.ஏ பேர விவகாரத்தில், அனைத்துக்கும் காரணமாக இருந்ததோடு, எம்.எல்.ஏ-க்களையும் இயக்கிய முக்கியப் புள்ளியையும் வீடியோ எடுத்துள்ளோம். அத்துணை வீடியோக்களும், இன்றும் நாளையும் வெளியாகும். இறுதியாக ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, இதுகுறித்து விளக்கவும் உள்ளோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராக எங்கள் பணியை முழுமையாகச் செய்துள்ளோம்” என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/92283-this-is-why-we-gave-the-mlasforsale-video-to-timesnow.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.