Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1

- சொர்ணவேல்

நான் ‘விம்பம்’ திரைப்பட விழாக்கள் மூலமாக தற்காலக் குறும்படங்களில் காணக்கிடைக்கும் உருவ, உள்ளடக்கம் சார்ந்த சில அவதாணிப்புகளைப் பகிர விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் பொதுவாகக் காணப்படும் முதிர்ச்சி என்னவென்றால், குறும்படத்துக்கான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான உருவ - உள்ளடக்கத்துக்கான தேடலைச் சொல்லலாம். முன்னர் வந்த படங்களில் ஒரு முழு நீளப் படத்துக்கான கருவை வைத்துக்கொண்டு பலர் குறும்பட உருவத்துக்குள் அதை அடைக்கச் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாப் படங்களின் மீதும் அத்தகைய விமர்சனத்தை வைக்க முடியாது எனினும், பல படங்களில் அந்தப் போக்கைக் கண்டிருக்கிறேன்.

இந்த வருடம் வந்த குறும்படங்கள் சில நீளத்தில் பெரிதாக இருந்தபோதிலும் கால அளவில் சுருக்கமாகவும், அதே நேரத்தில் அவற்றின் குறும உள்ளடக்கத்தினால் காத்திரமான குறும்படமாக உருப்பெறக்கூடிய சாத்தியங்களையும் கொண்டிருந்தன. இன அழிப்பு எனும் சோகம் சாதாரணமானது அல்ல. அன்றைய காலத்தில் வந்த படங்களின் சாராம்சமான பேரிழப்பின் ஆதங்கத்தின் வெளிப்பாடு குறும்படச் சட்டகத்தை மீறிச்சென்றதை அன்றைய காலகட்டத்திலேயே நான் பெரிய குறையாக நினைக்கவில்லை. எடுத்துக்கொண்ட பொருளின் வீச்சு, கட்டுக்கடங்காத கதையாடலாக விரியும்போது அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று ஒரு குழுவாகப் பார்த்து, அந்த இயக்குநர்கள் / எழுத்தாளர்களுடன் உரையாடினோம். இந்த வருடம் வந்த குறும்படங்களின் தேர்ச்சி என்பது, குறும்பட உருவத்துக்கு ஏற்ற உள்ளடக்கத்தை அவை கொண்டிருந்த விதம்தான்.

1497983427a.jpg

குறும்படத்துக்கும் ஒரு சிறுகதைக்குமான தொடர்பைத் திரைக்கதையைப் பற்றி எழுதுபவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். நானும் எழுதியிருக்கிறேன். எப்படி ஒரு குறும்படம் சிறுகதைக்கான அழகியல்களான துரித அறிமுகமும், பிரச்னைக்கான காரணத்தையும், காத்திரமான முடிவையும் தனது ஆதாரமாகக் கொண்டுள்ளது என்று. எல்லாவற்றுக்கும் மேலாக அதன் உள்ளடக்கத் தேர்வு கவிதையாகவோ, நமது அன்றாட வாழ்வின் அசாதாரண அவதானிப்பாகவோ, கூர்மையான அரசியல் விமர்சனமாகவோ விரித்தெடுக்கக்கூடிய சாத்தியங்களைப் பெற்றிருந்தால், இலக்கை அடைவது சுலபமாகி விடுகிறது. சினிமாவின் தொழில்நுட்பத் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் குறும்படம் ஒரு களமாகத் திகழ்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சிறிய டிஎஸ்எல்ஆர் (DSLR) டிஜிட்டல் கேமராக்களைக்கொண்டு ஹை டெபினிஷனில் (HD- High Definition) படமெடுக்கக்கூடிய சாத்தியங்களை அளித்து, நிறைய குறும்படங்கள் தயாரிக்க உதவி புரிந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் படங்களை ஹை டெபினிஷன் வீடியோவில் எடுக்க மட்டுமல்ல; தொகுத்து யூடியூப், விமியோ போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களிடம் நாமே எடுத்துச் செல்லவும் உதவுகிறது. இது, ஊடக வெளியில் ஒரு ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நாம் எடுக்கும் படத்துக்கான செலவை இத்தகைய சமூக வலைப்பின்னல் தளங்களின் வாயிலாக மீட்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

1497983427b.jpg

உதாரணத்துக்கு, சிபிஎம் (CPM என்பது காஸ்ட் பெர் தௌசண்ட் - Cost Per 1000 என்கிற விளம்பரத்துறை சார்ந்த பதமாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. M என்பது ரோமன் நியுமெரலில் 1000-த்தைக் குறிக்கும்) என்று சொல்லப்படுகிற ஆயிரம் பேர் சுட்டியை தட்டி (1000 ஹிட்ஸ்) பார்க்கும்போது எட்டு டாலருக்குக் குறைவாக விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயை யூடியூபின் உரிமையாளரான கூகுள் நிறுவனம் 45/55 சதவிகிதம் என்று தனக்கும், உள்ளடக்கத்தை அளிப்பவர்/பதிவேற்றம் செய்பவருக்கான சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு 800 டாலர்களுக்கும் குறைவாக - தோராயமாக 760 டாலர்கள் கிட்டும். 760 X 65 என்று கணக்கிட்டால், தோராயமாக 49,400 ரூபாய் கிடைக்கும். அதிலும் பிறர் காப்புரிமை பெற்ற இசையைப் பயன்படுத்தினால் அந்த வருவாய் கிட்டுவதில்லை. அப்லோடு செய்வதிலும் சிக்கலேற்படும். சில ஆயிரம் பேர் மட்டும் பார்க்கும்போது அதன் மூலமான வருவாயைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. கூகுள் யூடியூபின் மூலம் விநியோகம் மற்றும் பார்வையாளருக்கான வெளியை விஸ்தரித்திருப்பது பாராட்டுக்குரியதே.

1497983427c.jpg

ஆயினும், கூகுள் தயாரிப்பாளர்கள்/இயக்குநர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சதவிகிதமும் நாம் பதிவேற்றம் செய்பவர்கள்/நுகர்வோர்கள் என்ற தகுதியினடிப்படையில் குரல் கொடுத்தோம் என்றால் உயர வாய்ப்பிருக்கிறது. ஆறு கோடிக்கும் மேலிருக்கும் தமிழர்கள் ஒரு லட்சம் சொடுக்குகள் மூலம் அரிய ஆவணப்பட/குறும்பட/மாற்று முயற்சிகளுக்கு உதவக்கூடிய சூழலை, சமூக வலைதளங்கள் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். நான், எனது தங்கம் (Thangam, 1995), ஐ.என்.ஏ (INA: The Indian National Army, 1996), வில்லு (Villu/ The Bow, 1997), கருகத்திருவுளமோ (Karugathiruvulamo, 1999) போன்ற படங்களைத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், வீடியோ டெக்குகளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ராயபுரம், அம்பத்தூர் போன்ற இடங்களில் அரசுப் பள்ளிகளில் போட்டுக்காட்டியது நினைவிலோடுகிறது. அன்று, ஆவணப்படங்ளுக்கான எளிய, சீரான விநியோகம் பற்றி கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. ஆயினும், இன்றைய நகர வெளிகளிலுள்ள ‘ஹாட் - ரியல் எஸ்டேட்’டாக மாறியுள்ள தியேட்டர்களில் அல்லாமல் டிஜிட்டல் டெக்னாலஜி அளிக்கும் சாத்தியங்களில் நமது மாற்றுவெளிகளுக்கான தேடுதல் அமைய வேண்டும். எப்போதும் போலவே ‘விம்பம்’ திரைப்பட விழாவில் பங்கேற்ற இளைஞர்களிடமும், இன்றைய சூட்டிப்பான இளைய தலைமுறையினரிடமும் அவர்களின் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை உள்ளவனாகவே இருக்கிறேன். இத்தகைய சூழலில் குறும்படம் எடுப்பதன் பயனென்ன என்று ஆராய்வோம்.

ஒரு குறும்படமெடுத்துத் தயாளிப்பாளர்களிடம் காட்டி, முழு நீளப் படமெடுப்பதற்கான சாத்தியங்கள் தற்சமயமுள்ளது. இன்றைய சில முன்னணி இயக்குநர்கள் அவ்வாறு வந்தவர்கள்தான். அத்தகைய போக்கு குறும்படமெடுக்கும் இளைய தலைமுறையினர்களிடம் இருப்பது தவிர்க்க முடியாதது. குறும்படங்களுக்கென விநியோக முதலீட்டை லாபகரமாக மீட்கக்கூடிய சாத்தியங்கள் இல்லாதபட்சத்தில், அதன் மூலமாக வேறு இலக்குகளை அடைவது ப்ராக்டிக்கலான விஷயமே. முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளவெளிகள் ஆக்குபேஷன் வால் ஸ்ட்ரீட் அரப் ஸ்ப்ரிங் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற போராட்ட அரசியலுக்கு வழிவகுக்கும் அதேவேளையில், தற்கால மார்க்சீய அறிஞர்களான ரோபர்ட்டோ சிமானோவ்ஸ்கி (Prof. Roberto Simanowski, City University of Hong Kong) போன்றவர்கள் கூறுவதைப்போல, நாம் இன்று டிஜிட்டல் கேபிட்டலிசத்தின் ஊடாக வாழ்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது. அத்தகைய ஒரு சூழலில், டிஜிட்டல் வெளிகளைப் பயன்படுத்தி, மைய நீரோட்ட சினிமாவுக்கான பயிற்சிக்களமாகக் குறும்படங்களை எண்ணுவது இயல்பானதே. மேற்கேயுள்ள வணிக சினிமாவும் சரி, கிழக்கேயுள்ள மைய நீரோட்ட சினிமாவும் சரி... இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத் தேர்ச்சியையும் கதை சொல்லலில் நுண்மையான மெருகையும் எதிர்பார்க்கின்றன. அதற்கு, குறும்படமென்பது சாதகமான வெளியே.

1497983427d.jpg

உதாரணத்துக்கு இந்த விழாவில் பங்கேற்கும் அறமுற்றுகையைக் (Aramutrugai)கூறலாம். பழியை மைய கண்ணியாகக்கொண்டு, தொடர்ந்து விழும் கொலைகள் மூலம் கதாபாத்திரங்களுள் ஊடுபாவும் உறுதியற்ற தற்கால இணைப்பைச் சொல்லும் அறமுற்றுகையைச் சிவலிங்கம் சிவராஜின் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் மயன் காந்தன் இயக்கியுள்ளார்.

1497983427e.jpg

இத்தகைய படங்களுக்கு மாறாகக் குறும்படத்தை அரசியலுக்காகவும், அதனுடைய தனித்துவத்தை முன்னிறுத்தும் விதமாகவும் படமெடுப்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்தவாறுள்ளது. அவர்கள் குறும்படம் மூலமாகவே தங்களது வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கொள்கிறார்கள். தொடர்ந்து, தளராது இயங்குவதால் இவர்களின் படங்களில் தொழில்நுட்பம் மட்டுமல்லாது, சினிமொழியும் இயல்பாக உருவ - உள்ளடக்கத்துக்குத் தகுந்தவாறு உள்ளது. உதாரணத்துக்கு, பிரெஞ்சு நண்பர்களான பாஸ்கி மன்மதன், சதாபிரணவன் மற்றும் அவதாரம் அமைப்பைச் சார்ந்தவர்களையும் மற்றவர்களையும் சொல்லலாம்.

1497983427f.jpg

இண்டி கோ கோ (Indie Go Go) அல்லது கிக்ஸ்டார்ட்டர் (Kickstarter) போன்ற சமூகப்பின்னல் தளங்கள் மூலமாகச் சிறிது சிறிதாகப் பணத்தை முதலில் நண்பர்கள் மூலமும் உறவுகளின் மூலமும் ஆரம்பித்துக் கிடைக்கும் சிறிய பொருளுதவியைக் கொண்டு படத்தைச் சிறிதளவு எடுத்து, பின்னர் அதை யூடியூப் மூலமாகவோ அல்லது விமியோவில் பாஸ்வேர்ட்டுடன் பாதுகாப்பாக வெளியிட்டு, வெளியில் பொதுமக்களிடமும் எடுத்துச்சென்று கிடைக்கும் முதலீட்டை வைத்துக்கொண்டு படத்தை முடிக்கலாம். நண்பர் லெனின் சிவம் தனது புகழ்பெற்ற ‘கன் அண்ட் த ரிங்’கிற்குப்(Gun And The Ring) பிறகு அடுத்தப் படத்தை முடிக்கும் தருவாயிலுள்ளார். அவரது கன் அண்ட் த ரிங்கை ஹீரோ டாக்கீஸின் வலைதளத்தில் பார்த்து நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கலாம்.

1497983427g.jpg

அதைப்போலவே, நண்பர் சுஜீத் ஜீ தனது த லாஸ்ட் ஹால்ட் (The Last Halt / கடைசி தரிப்பிடம், 2016) எனும் முழு நீளப்படத்தை எடுக்குமுன் எடுத்த குறும்படத்துக்குப் பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறோம். அவரது லாஸ்ட் ஹால்ட்டின் லயமும் அவரைக் கதைசொல்லும் முன்னணிக் கலைஞராக அறிவிக்கிறது. யூடியூபில் அவரது படத்தைப் பார்த்து நாம் நமது பங்களிப்பை ஆற்றலாம். அதைப்போலவே கவிதாயினி/எழுத்தாளர் கலைஞர் சுமதி அவர்களின் நியோகா ஒரு புதிய களத்தில் இயங்குகிறது. பெண்ணிய நோக்கு மட்டுமல்ல, மனோதத்துவத்தை மையமாகக் கொண்டுள்ள அதன் கதையாடலும், நடிகர்களிடம் அவர் வேலைவாங்கியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.

1497983427h.jpg

தனது குறும்படங்கள்மூலம், பல பரிசுகளைப் பெற்றுள்ள சதாபிரணவனின் செரெஸ் (Cérès) அவரது கியரில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டுகிறது. அவர் இப்போது நீள்படத்துக்கான முழு தகுதியுடன் அதில் தனது முனைப்பைச் செலுத்துகிறார். ஸ்டேட் அண்ட் ரிலீஜன், அரசு மற்றும் மதம் எப்படி இதயமற்று மக்களை அழிக்கிறது என்பதை செரெஸில் (Cérès) தேனுகா கந்தராஜாவின் அருமையான நடிப்புடனும் சினிமொழியின் நுட்பத்துடனும் பதிவுசெய்துள்ளார். தம்பி பாஸ்கி தொடர்ந்து இயங்குபவர். அவரது ஆற்றலும் ஆர்வமும் சினிமாவில் நம்பிக்கையுள்ளோருக்கு உந்துதலளிப்பன.

1497983427i.jpg

தம்பி பாஸ்கி மற்றும் நிகிதா ரீகனின் அருமையான நடிப்பிலும் எம். பாஸ்கரின் இயக்கத்திலும் உருப்பெற்றுள்ள பூக்களைக் கொய்யாதீர்கள் (Pookkali Koyyatheergal)முக்கியமானது.

1497983427j.jpg

தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமும், கம்ப்யூட்டர்களின் மூலமும், கைபேசிகளின் மூலமும் பரவும் (ஆண்களின்) வக்கிரத்தன்மை, போரில் சிக்கி, இழப்புகளுக்கு ஆளான பெண்களை மீண்டும் தீவிர ஒடுக்கத்துக்கும் கொடுமைக்கும் உள்ளாக்குகிறது என்பதை மனிதம் வறட்சியடைந்து பதற்றம் நிறைந்துவரும் இன்றைய சமகால வாழ்வின் பின்னணியில் காத்திரமாகச் சித்திரித்துள்ளது.

1497983427k.jpg

குறும்படத்துக்கு ஏதுவான அரசியல் உள்ளீடுகள் நிறைந்த அழகியலில் பரிணமித்த படங்களாக இலங்கையிலிருந்து சிவலிங்கம் சிவராஜ் இயக்கத்தில் உதித்துள்ள செருக்களம் (Cherukkalam), மதி சுதாவின் பாதுகை (Paathugai) மற்றும் பூனே திரைப்பள்ளியைச் சார்ந்த பிரதீபன் செல்வரத்தினத்தின் சருகுவெளியைக் (Saruguveli/ The White Feather) கூறலாம்.

1497983427l.jpg

பிரதீபனின் காத்திரமான இயக்கத்தில், சேவா சவானின் அருமையான நடிப்பில், வெள்ளை வேன் ஒன்றில் பதினைந்து வருடத்துக்கு முன் அரசினால் கூட்டிச்சென்று, இன்றுவரை வீட்டுக்குத் திரும்பாத தனது தந்தைக்காக சதா ஏங்கும் மூதாட்டியான பாட்டியை, மரணிக்கும் தறுவாயில்கூட விட்டுப்போக மனமில்லாத பேரனின் அன்பை சித்தரிக்கும் படம் சருகுவெளி.

1497983427m.jpg

அருமையான தொகுப்பை உள்ளடக்கிய சருகுவெளி, அப்பேரனின் கவித்துவம் நிறைந்த அன்பின் ஊடாக, இன்றைய உறவுகளின் நீர்த்துப்போன தன்மையைத் தனது அழகியலின் மூலம் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. ஜெ.சரத்தின் புல்லாங்குழலும் ஒலியமைப்பும் பிரதீபனின் அருமையான படத்துக்கு வலுசேர்க்கிறது.

1497983427n.jpg

தனது பாதுகையை விட்டுச்சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பாத போராளி மகனுக்காக ஏங்கும் தாய்க்கும், போரிலிருந்து மீண்டு வந்து தனிமையில் வாடும் அப்போராளியின் நண்பனுடனான உறவையும், அந்தத் தாய் தனது மகனின் நண்பனை தனது மகனாகப் பாவிப்பதையும் தீர்க்கமான குறும்பட அழகியலுக்கு ஏற்ற திரைக்கதையின் மூலம் சொல்கிறது மதி சுதாவின் பாதுகை.

1497983427o.jpg

திரைக்கதையும், இயக்கமும் பாதுகையை உருவகமாக மென்மையாகவும் ஆழமாகவும் பதிவுசெய்துள்ளது. தாயாக நடித்திருக்கும் ஜஸ்மின் (பவுன் அம்மா) தனது பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார். அவர் படத்தின் இறுதியில் போராளி மகனின் பாதுகையைத் தனது மடியில் கட்டிச்செல்வது மனதில் நிற்கிறது.

1497983427p.jpg

சிவலிங்கம் சிவராஜின் செருக்களம் கிராமத்திலுள்ள சிறிய கிரிக்கெட் மைதானத்தை மையமாகக்கொண்டு, போரினால் பிரியும் இளம் கிரிக்கெட் நண்பர்களின் மூலம் போரின் இழப்பை அவ்விள மனதுகளில் ஏற்படும் பிரிவின் சோகத்தைக்கொண்டு பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் போர் முடிந்து, அந்த மைதானத்தில் நண்பர்கள் கூடும்போது அங்கே ஒரு வேலி போடப்பட்டு, ராணுவம் அம்மைதானத்தை வளைத்துக்கொண்டது குறும்படத்துக்கான முடிவென்பது சிறுகதையைப் போல உணர்வெழுச்சியுடன், அரசியலையும் சுட்டி மனதை வருடி நெஞ்சையடைப்பதாக அமைந்துள்ளது.

1497983427q.jpg

சிவராஜ் இலங்கைக் கிராமமொன்றில் வீசிய பந்து, மதி சுதாவின் பந்து (Panthu) எனும் குறும்படத்தின் நாயகனின் கரங்களில் நகரத்திலுள்ள பூங்கா ஒன்றில் அவன் அமர்ந்திருக்கும் வேளையில் வந்து சேர்கிறது.

1497983427r.jpg

அந்த பந்துடன் நினைவுகளின் சிறகிலேறி பந்தைச் சுற்றிய தனது பால்ய காலத்துக்கும், அதன் மையமாக இருந்த தனது ஊரின் வெளிகளுக்கும் உறவுகளுக்கும், குறிப்பாகத் தனது உயிர் நண்பனுடனும் கிரிக்கெட்டுக்கான டென்னிஸ் பந்துகளை விற்கும் கடைக்காரருடனும் பயணித்து பந்துடனேயே மீண்டும் நகரவெளிகளில் வந்து அமர்ந்திருக்கிறான்.

1497983427s.jpg

தில்லையம்பாளையம் சுதாகரனெனும் மதி சுதாவின் இயக்கத்தில் விசையுறும் பந்தின் வீச்சு நம்மை ஈர்க்கிறது.

இதைப்போலவே என்னை ஈர்த்த இந்திய - இலங்கை கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த வள அழிப்பைப் பேசும் பார்டர் (Border), ஒரு மாற்றுத்திறனாளியின் உழைப்பின் அடிப்படையாக இருக்கும் மகிழ்ச்சியைப் பேசும் அறன் (Aran), வளர்ந்துவிட்ட டெக்னாலஜியால் வழிமாறிப்போகும் தலைமுறையைத் திரும்பிப் பார்க்கவைக்கும் மறைந்திருக்கும் சந்தோஷம்(Hidden Happiness) உள்ளிட்ட பல குறும்படங்களைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்...

கட்டுரையாளர் குறிப்பு:

1497983427t.jpg

சொர்ணவேல், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆங்கிலம் மற்றும் ஊடகத்துறைகளில் பணியாற்றுகிறார்.

கட்டுரையாளரின் பிற கட்டுரைகள்:

டெரென்ஸ் மலிக்கின் ‘நுண்ணிய குருதிக் கோடு’ – THE THIN RED LINE

An Occurrence at Owl Creek Bridge குறும்பட திறனாய்வு!

 

https://minnambalam.com/k/2017/06/21/1497983427

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.