Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம்

Featured Replies

இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம்
 

image_cf3d166d68.jpg

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 

16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. 

பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில், முதலிரு இடங்களிலும் காணப்படும் அன்டி மரேயும் நொவக் ஜோக்கோவிச்சும், அண்மைக்காலத்தில் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்த பின்னணியில், அவர்களது ஃபோர்ம் பற்றிய கேள்வியுடன் களமிறங்குகின்றனர். 

அண்மைக்காலம் வரை பின்தங்கிக் காணப்பட்ட ரபேல் நடால், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், முழுமையான ஆதிக்கத்தை வௌிப்படுத்தியிருந்தார். ஆனால், புற்தரை ஆடுகளத்தில், அவருக்கு இன்னமும் பலவீனம் காணப்படுவதாகவே கருதப்படுகிறது. 

விம்பிள்டனின் ராஜா எனக் கருதப்படும் ரொஜர் பெடரர், அண்மைக்காலத்தில் ஓரளவு சிறப்பான ஃபோர்மில் காணப்படுகிறார். பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்குபற்றாது, இந்தத் தொடருக்காக, அவர் தயார்படுத்தியிருந்தார். எனவே, இத்தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, அவர் கருதப்படுகிறார். 

எனினும், முதல் 4 இடங்களிலும் காணப்படும் எந்தவொரு வீரரும், பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். 

பெண்கள் ஒற்றையர் போட்டிகளைப் பொறுத்தவரை, முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், தனக்கு ஏற்பட்ட கர்ப்பம் காரணமாக, இந்தத் தொடரைத் தவறவிடும் நிலையில், பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள், ஏனைய வீராங்கனைகள் அனைவருக்கும் உண்டு என்றே கருதப்படுகிறது. 

முதல்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், கடந்த பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஃபோர்மைத் தொடர்ந்து, தனது முதலிடத்தைத் தக்க வைக்க, போராட்டத்தை எதிர்கொள்கிறார்.  

அதேபோல், சிமோனா ஹலெப், கரோலினா பிளிஸ்கோவா, பெட்ரா குவிற்றோவா ஆகியோரும், அதிக வாய்ப்புகளைக் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். 

இன்று இடம்பெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில், 12ஆம் நிலையிலுள்ள ஜோ வில்பிரட் சொங்கா, 9ஆம் நிலையிலுள்ள கீ நிஷிகோரி, 7ஆம் நிலையிலுள்ள மரின் சிலிச், 5ஆம் நிலையிலுள்ள ஸ்டான் வவ்றிங்கா, 4ஆம் நிலையிலுள்ள ரபேல் நடால், முதலாம் நிலையிலுள்ள அன்டி மரே ஆகியோர் விளையாடவுள்ளனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், 11ஆம் நிலையிலுள்ள பெட்ரா குவிற்றோவா, 10ஆம் நிலையிலுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 8ஆம் நிலையிலுள்ள டொமினில்கா சிபுல்கோவா, 7ஆவது நிலையிலுள்ள ஸ்வெட்லானா குஸ்னெற்ஸோவா, 6ஆம் நிலையிலுள்ள ஜொஹன்னா கொன்டா, 4ஆம் நிலையிலுள்ள எலினா ஸ்விட்டோலினா, முதலாம் நிலையிலுள்ள அங்கெலிக் கேர்பர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.    

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இன்று-ஆரம்பிக்கிறது-விம்பிள்டன்-கோலாகலம்/44-199760

  • தொடங்கியவர்

இன்று தொடங்குகிறது விம்பிள்டன்... களமிறங்கும் ஜீவன் நெடுஞ்செழியன்!

 
 

wimbledon

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2017, இன்று லண்டன் நகரில் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. இன்று தொடங்கி, வரும் 16-ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்தத் தொடரில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் டாப் வீரர் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் என அதிரடிப்படை களமிறங்குகிறது.

மேலும், இந்தியா சார்பில் சானியா மிர்ஸா, லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, புரவ் ராஜா, திவிஜ் சரண் ஆகியோரும் பங்கேற்கின்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில், பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கென்ஸுடன் இணைந்து விளையாடுகிறார், சானியா. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பயஸ் - கனடாவின் அடில் ஸமாஸ்தின், போபண்ணா - பிரான்ஸின் ரோஜர் வாசலின், புரவ் ராஜா - திவிஜ் ஆகிய இணைகள் பங்கேற்கின்றன.

jeevan

இந்தத் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன் பங்கேற்க இருக்கிறார். அமெரிக்காவின் ஜாரெட் டொனால்டுசன்னுடன் இணைந்து விளையாடுகிறார், ஜீவன். மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் பேரன்தான், ஜீவன் நெடுஞ்செழியன். 

http://www.vikatan.com/news/sports/94125-wimbledon-starts-today-at-london.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலேப், வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹாலேப், வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலேப், வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ரொமானியாவின் சிமோனா ஹாலேப் நியூசிலாந்தின் மரினா எராகோவிக்கை எதிர்கொண்டார். இதில் ஹாலேப் 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் எராகோவிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

10-ம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பெல்ஜியத்தை சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார். முன்னணி வீராங்கனையான வீனஸிற்கு எலிஸ் மெர்டென்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் சுற்று ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(9)- 6(7) என வீனஸ் முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-4 என எளிதில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

201707032033225870_Venus-Williams-s._L_s

அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்ஸ், பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா, சீனாவின் வாங் கியாங், இத்தாலி வீராங்கனை கமிலா கியோர்கி ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 1-ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே, 9-ம் நிலை வீரரான நிஷிகோரி, 12-ம் நிலை வீரர் டிசோங்கா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/03203320/1094365/wimbledon-halep-venus-murray-moved-2nd-round.vpf

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் : முதல் சுற்றில் முன்னணி வீரர் அதிர்ச்சித் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் வாவ்ரிங்கா.

waw_09395.jpg

 


உலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம்  போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது. 131-வது விம்பிள்டன் போட்டியின் முதல் நாளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப் 5 வீரரான வாவ்ரிங்கா, 49 -ம் நிலை வீரரான மெட்வேதேவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், வாவ்ரிங்கா கடுமையா முயன்றும் மெட்வேதேவை தோற்கடிக்க முடியவில்லை. மெட்வேதேவ் 6-4, 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் வெற்றிபெற்றார். பட்டம் வெல்ல வாய்ப்புள்ளவர்களில் வாவ்ரிங்காவும் ஒருவராகக் கருதப்பட்ட நிலையில், அவர் முதல் சுற்றிலே தோல்வியடைந்து வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்ற ஆட்டங்களில், நடால், முல்லர், முர்ரே  போன்ற முன்னணி வீரர்கள் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இன்று நடக்கும் முதல் சுற்றில், புல்தரை நாயகன் பெடரர் ஆட உள்ளார். 

ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் நடைபெரும்  போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. போபன்னா, ஜீவன் நெடுஞ்செழியன், சரண்-ராஜா இணை, பயஸ் என ஆண்கள் இரட்டையரில் மட்டும்  மொத்தம் ஐந்து இந்திய வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். பெண்கள் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா - ஃப்லிப்கென்ஸுடன் இணைந்து விளையாட உள்ளார்.

http://www.vikatan.com/news/sports/94245-wawrinka-lost-in-first-round-of-wimbledon-tennis.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடிய லக்சம்பர்க் வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நான்கரை மாத கர்ப்பத்துடன் களம் இறங்கி விளையாடிய லக்சம்பர்க் வீராங்கனையின் தன்னம்பிக்கையை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

 
 
விம்பிள்டன் டென்னிஸ்: நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடிய லக்சம்பர்க் வீராங்கனை
 
ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சிறிய நாடு லக்சம்பர்க். இந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மான்டி மினேலா. 31 வயதாகும் இவர், தற்போது நான்கரை மாத கர்ப்பிணியாக உள்ளார். என்றாலும், தன்னம்பிக்கையுடன் விம்பிள்டன் டென்னிசில் விளையாட விரும்பினார்.

அதன்படி ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் களம் இறங்குகிறார். ஒற்றையர் பிரிவில் நேற்று முதல் சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கா ஸ்சியாவோனை எதிர்கொண்டார். தன்னம்பிக்கையுடன் விளையாடினாலும் மான்டி மினேலா 1-6, 1-6 என நேர்செட்களில் தோல்வியடைந்தார்.

201707041559046389_menelle1-s._L_styvpf.

இறுக்கனமான ஆடை அணியாமல், தளர்வான ஆடை அணிந்து விளையாடினார் மிலானே. தோல்வி அடைந்தாலும், நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடிய அவரின் தன்னம்பிக்கையை அனைவரும் மனதார பாராட்டினார்கள். இரட்டையர் பிரிவில் லாத்வியா வீராங்கனையுடன் இணைந்து களம் இறங்குகிறார். இவர் தான் கர்ப்பமாக இருக்கும் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

201707041559046389_menelle2-s._L_styvpf.

ஏற்கனவே, அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் தொடரில் விளையாடிய மினேலா ‘‘இந்த சீசனில் இதுதான் என்னுடைய கடைசி தொடர்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/04155901/1094517/Minella-plays-Wimbledon-while-4-and-half-months-pregnant.vpf

  • தொடங்கியவர்

"விம்பிள்டன் 2017" தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்

 
"விம்பிள்டன் 2017"படத்தின் காப்புரிமைSHAUN BOTTERILL/GETTY IMAGES

மிக நேர்த்தியான மேற்பரப்புகள், வெள்ளை ஆடை முறை, ஸ்ட்ராபெர்ரி பழங்கள், மற்றும் மிக முக்கியமாக உலகின் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் உலகில் அதிக கௌரவ மிக்கதாக கருதப்படும் ஒரு விளையாட்டின் பரிசுகளுக்காக ஆக்ரோஷமாக மோதும் களம் விம்பிள்டன்.

"விம்பிள்டன் 2017" போட்டி இங்கிலாந்தில் திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கியுள்ளது.

விம்பிள்டன்2017படத்தின் காப்புரிமைJUSTIN TALLIS/AFP/GETTY IMAGES

``விம்பிள்டன் போட்டிக்கென்று, ஒரு வித அழகும், கம்பீரமும் இருக்கிறது. தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அதன் பசுமையான மேற்பரப்பு தோன்றும் நேர்த்தியைச் சொல்லலாம் ``, என்கிறார் ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர் , ஜான் மெக்கென்ரோ .

மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களை பாக்கலாம்

தகுதி சுற்று டென்னிஸ் ஆட்டங்கள்

திங்கள்கிழமை டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கியிருந்தாலும், இந்த விளையாட்டு போட்டி குறித்த பரபரப்பு ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது.

"விம்பிள்டன் 2017" போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கடந்த ஜூன் 26 ஆம் தேதி திங்கள்கிழமையே தொடங்கிவிட்டன.

_96791449_gettyimages-806568374.jpgபடத்தின் காப்புரிமைMICHAEL STEELE/GETTY IMAGES

இந்த போட்டியில் விளையாடக்கூடிய முன்னிலை டென்னிஸ் வீரர்களுக்கு அப்பாற்பட்டு மேலும் 16 ஆடவர் இடங்களுக்கும் 12 பெண்கள் இடங்களுக்கும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் போட்டி தகுதி சுற்றுகளாக நடைபெற்றுள்ளன.

பிரிட்டனின் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரும், தற்போதைய விம்பிள்டன் சாம்பியனுமாக இருக்கின்ற ஆன்டி மெர்ரி இந்த ஆண்டு மைய விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் போட்டியை ஆடி வெற்றிபெற்றுள்ளார்.

மெர்ரி இந்த ஆண்டு கோப்பையை வெல்வாரா?

2013 மற்றும் 2016 ஆண்டுகளில் விம்பிள்டன் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பிரிட்டிஷ் வீரரான ஆன்டி மெர்ரி இந்த ஆண்டு கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

_96791451_gettyimages-806225408.jpgபடத்தின் காப்புரிமைDAVID RAMOS/GETTY IMAGES

அவருக்கு இடுப்பில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக சாம்பியனாக இருக்கும் தற்போதைய நிலையை தக்க வைக்க மர்ரி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

30 வயதாகும் மர்ரி, ஏகோன் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தர வரிசையில் 90வது இடத்திலுள்ள ஜோர்டான் தாம்சனிடம் முதல்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வராலற்று பதிவு 8வது சாம்பியன்ஷிப்பை துரத்தும் ரோஜர்

7 முறை விம்பிள்டன் சாம்பியன்ஷிப் வென்றிருக்கும் ரோஜர் பெடரர் , ஜெர்மனியில் நடந்த ஹாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காவது முறையாக கோப்பையை வென்று உற்சாகமாக விம்பிள்டன்னில் களம் இறங்குகிறார்.

_96791733_gettyimages-804051784.jpgபடத்தின் காப்புரிமைCLIVE BRUNSKILL/GETTY IMAGES

35 வயதாகும் இவர், ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 18வது கிரான்ட்சலாம் கோப்பையை வென்று வரலாற்று பதிவை உருவாக்கியுள்ளார். இவரும் இந்த ஆண்டு விம்பிள்டன் கோப்பையை வெல்லக்கூடியவராக பலராலும் பார்க்கப்படுகிறார்.

விம்பிள்டன் 2017 - ஆடவர் முதல் பத்து டென்னிஸ் வீரர்கள்

 
1 அன்டி மெர்ரி
2 நோவக் ஜோகோவிச்
3 ரோஜர் பெடரர்
4 ரஃபேல் நடால்
5 ஸ்டான் வாவ்ரிங்கா
6 மிலோஸ் ராயோனிக்
7 மரின் சிலிக்
8 டோமினிக் தீம்
9 கெய் நிஷிகோரி
10 அலெக்ஸாண்டர் செவ்ரெவ்
_96791739_gettyimages-599527190.jpgபடத்தின் காப்புரிமைEDUARDO MUNOZ ALVAREZ/AFP/GETTY IMAGES

ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரும் இந்த போட்டியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சிறப்பாக ஆட்டங்களை வெளிப்படுத்தக்கூடியவர்களாக உள்ள்னர்.

"விம்பிள்டன் 2017" - 10 முன்னிலை வீராங்கனைகள்

   
1 ஏஞ்சலீக் கெர்பர்
2 சிமோனா ஹொலப்
3 கரோலினா ப்லீஸ்கோவா
4 எலீனா ஸ்விட்டோலினா
5 கரோலைன் வோசினியாக்கி
6 யோகானா கோன்டா
7 ஸ்விட்லானா குஸ்னெட்சோவா
8 டோமினிக்கா சிபுல்கோவா
9 அக்னியஸ்கா ரட்வான்ஸ்கா
10 வீனஸ் வில்லியம்ஸ்
_96791737_gettyimages-806524028.jpgபடத்தின் காப்புரிமைADRIAN DENNIS/AFP/GETTY IMAGES)

எண்களில் விம்பிள்டன்

   
9 ஒற்றையர் சாம்பியன்ஷிப் வரலாற்று சாதனை (மார்ட்டீனா நவ்ராடிலோவா)
250 பந்து எடுத்து கொடுக்கும் சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை
14 ஆயிரத்து 979 மத்திய விளையாட்டு அரங்கிலுள்ள இருக்கைகளின் எண்ணிக்கை
39 ஆயிரம் விளையாட்டு திடல்களில் ஒரே நேரத்தில் இருக்கும் மக்கள்
54 ஆயிரத்து 250 இந்த சாம்பியன்ஷிப் போட்டியின்போது பயன்படுத்தப்படும் மொத்த பந்துகளின் எண்ணிக்கை
ஒரு லட்சத்து 40 ஆயிரம் மேலெறிந்து அடிக்கப்படுவதற்கு விற்பனை செய்யப்படும் பந்துகள்
3 லட்சத்து 20 ஆயிரம் பெரிய கண்ணாடி டம்ளர் விற்பனை
3 கோடியே 16 லட்சம் பவுண்ட் 2017 ஆம் ஆண்டு மொத்த பரிசுத்தொகை
_96791735_gettyimages-806567958.jpgபடத்தின் காப்புரிமைOLI SCARFF/AFP/GETTY IMAGES

 

http://www.bbc.com/tamil/sport-40488624?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் புதிய சாதனை

 
 

உலகின் பழைமையான கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னில் போட்டிகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, ஃபெடரர் புதிய சாதனையைப் படைத்தார்.

roger1_09155.jpg


ஃபெடரர், டென்னிஸ் உலகின் ஜாம்பவான் என்றால் மிகையல்ல. அதிலும் புல்தரை என்றால் புலியாக மாறிவிடுவார். அதனால்தான், புல்தரையில் நடக்கும் விம்பிள்டன் தொடரில், ஃபெடரர் தொடர் வெற்றிகளைக் குவித்துவருகிறார். நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில், டோல்கோபாலோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், காயம் காரணமாக பாதியில் வெளியேறினார் டோல்கோபோலோவ். இதனால், இந்தப் போட்டியில் ஃபெடரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது, அவருக்கு விம்பிள்டன் தொடரில் கிடைத்த 85-வது வெற்றி.

இந்த வெற்றியின் மூலமாக விம்பிள்டன் தொடரில் அதிக வெற்றியைப் பதிவுசெய்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் ஃபெடரர். இதற்கு முன்பாக, ஜிம்மி கோன்னோர்ஸ் 84  வெற்றிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளி, தற்போது  முதலிடம் பெற்றுள்ளார். 

அவரை தவிர்த்து, ஜோகோவிக், டொமினிக் தீம், டிமிட்ரோவ் போன்ற முன்னணி வீரர்களும் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இன்று, இரட்டையர் ஆட்டங்கள் தொடங்க உள்ளது. இதில், இந்திய வீரர்கள், சரண்-ராஜா இணை மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் விளையாட உள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா,  ஃப்லிப்கென்ஸுடன் இணைந்து தனது முதல் போட்டியில் இன்று விளையாட உள்ளார். 

http://www.vikatan.com/news/sports/94386-new-record-by-roger-federer-in-wimbleton-tournament.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றில் அசரன்கா, சோங்கா வெற்றி

 

 
 
 
விம்பிள்டன் டென்னிஸ் 2-வது சுற்றில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா. படம்: ஏஎப்பி
விம்பிள்டன் டென்னிஸ் 2-வது சுற்றில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா. படம்: ஏஎப்பி
 
 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் சோங்கா, விக்டோரியா அசரன்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 12-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா, 313-ம் நிலை வீரரான இத்தாலியின் சிமோன் போலேலியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சோங்கா 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

16-ம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லர், 215-ம் நிலை வீரரான செக் குடியரசின் லூக்காஸ் ரசோலை எதிர்கொண்டார். சுமார் 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் முல்லர் 7-5, 6-7, 4-6, 6-3, 9-7 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரி 6-4, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில், 54-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பாசில்லாஷிவிலியை வீழ்த்தினார்.

19-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபேர்டோ பவுதிஸ்டா அகுட் 6-2, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், 140-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்ஸ்கியை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா, 93-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை எதிர்த்து விளையாடினார். இதில் சிபுல்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவையும், ஜெர்மனியின் ஹீதர் வாட்சன் 6-0, 6-4 என்ற நேர் செட்டில் லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர்.

6-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா, 58-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்கை எதிர்த்து விளையாடினார். சுமார் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் ஜோகன்னா ஹோன்டா 7-6, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-போட்டி-2வது-சுற்றில்-அசரன்கா-சோங்கா-வெற்றி/article9751303.ece?homepage=true

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்- 4 மணி நேரம் போராடி பயஸ் ஜோடி தோல்வி

ஜோகோவிச்
ஜோகோவிச்
 
 

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 136-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஆடம் பாவ்லஸ்கை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது.

13-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவ் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 65-ம் நிலை வீரரான சைப்ரஸ் நாட்டு வீரரான மார்க்கஸ் பகாதிஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 39-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரரர், 61-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை எதிர்த்து விளையாடினார்.

ஜான் இஸ்னர்

இதில் பெரர் முதல் செட்டில் 3-0 என முன்னிலை வகித்த போது ஸ்டீவ் டார்சிஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் பெரர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 15-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் 7-6, 6-4, 6-4 என்ற செட்டில் 50-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மண்டை வீழ்த்தினார்.

23-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6, 6-7, 7-5, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் 90-ம் நிலை வீரரான இஸ்ரேலின் டூடி செலாவிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது. 27-ம் நிலை வீரரான ஜெர்மனியின் மிச்சா ஜிவெரேவ் 6-1, 6-2, 2-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 118-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் மிகைல் குஷ்கினை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் குஸ்நெட்சோவா, சகநாட்டை சேர்ந்த 47-ம் நிலை வீராங்கனையான கேத்ரினா மகரோவாவை 6-0, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தார். 24-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான்டேவெஹ்கி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 74-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தினார்.

10-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, 60-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்காலேவை 5-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்றது.

பயஸ் ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், கனடாவின் சம்சுதீன் ஜோடி, ஆஸ்திரியாவின் ஜூலியன், பிலிப் ஓஸ்வால்டு ஜோடியை எதிர்த்து விளையாடியது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பயஸ் ஜோடி 6-4, 6-4, 2-6, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-3வது-சுற்றுக்கு-முன்னேறினார்-ஜோகோவிச்-4-மணி-நேரம்-போராடி-பயஸ்-ஜோடி-தோல்வி/article9753078.ece?homepage=true

  • தொடங்கியவர்

பெட்ரா விட்டோவா அதிர்ச்சி தோல்வி

 

தோல்வி அதிர்ச்சியில் பெட்ரா விட்டோவா. படம்: கெட்டி இமேஜஸ்
தோல்வி அதிர்ச்சியில் பெட்ரா விட்டோவா. படம்: கெட்டி இமேஜஸ்
 
 

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இருமுறை சாம்பியனான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

11-ம் நிலை வீராங்கனையான பெட்ரா விட்டோவா, 95-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் பிரங்கிளை எதிர்த்து விளையாடினார். இதில் விட்டோவா 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளைக்காரன் ஒருவனிடம் கத்திக்குத்து பட்டு கையில் தீவிர காயம் அடைந்த விட்டோ, அதில் இருந்து குணமடைந்த நிலையில் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்றார். போட்டியின் போது திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முதலுதவி பெற்ற பின்னர் மீண்டும் விளையாடினார்.

விட்டோவா கூறும்போது, "திடீரென மூச்சுவிட சிரமமாக இருந்தது. உடல் நிலை சரியில்லாதது போல் உணர்ந்தேன். அந்த சமயத்தில் சோர்வடைந்த விலங்கு போன்று காணப்பட்டேன்" என்றார்.

-----------------------------------------------------

நெடுஞ்செழியன் ஜோடி தோல்வி

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய இந்தியாவின் ஜீவன் நெடுஞ் செழியன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போராடி தோல்வியடைந்தார்.

விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அவர், அமெரிக்காவின் ஜாரெட் டொனால்டுசனுடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் மார்க்கஸ் வில்லிஸ், ஜே கிளார்க் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6 (4), 7-5, 6-7(3) 0-6, 3-6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டம் குறித்து ஜீவன் நெடுஞ்செழியன் கூறும்போது, “3-வது செட்டில் 6-5 என நாங்கள் நெருங்கிய நிலையில் டை பிரேக் கரில் எங்களை விட அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 5-வது செட்டிலும் அவர்கள் வலுவாக விளையாடினார்கள், இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான வர்கள்” என்றார்.

--------------------------

சானியா, பூரவ் ராஜா ஜோடிகள் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பூரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல் சானியா, கிர்ஸ்டன் பிளிப்கென்ஸ் ஜோடியும் முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

பூரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி தங்களது முதல் சுற்றில் இங்கிலாந்தின் எட்மண்ட், போர்ச்சுகலின் ஜோயோ சோவுஸா ஜோடியை எதிர்த்து விளையாடியது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூரவ் ராஜா ஜோடி 7-6 (7-2), 3-6, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றது.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிளிப்கென்ஸ் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக ஜப்பானின் நவோமி ஒஸாகா, சீனாவின் ஷாய் ஹெங் ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவடைந்தது.

 

http://tamil.thehindu.com/sports/பெட்ரா-விட்டோவா-அதிர்ச்சி-தோல்வி/article9753073.ece?homepage=true

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: 4-வது சுற்றில் ஹாலேப், அசரென்கா, வோஸ்னியாக்கி, கார்சியா

 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஹாலேப், அசரென்கா, வோஸ்னியாக்கி மற்றும் கார்சியா ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 
 
கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலேப் நியூசிலாந்தின் எராகோவிக்கை எதிர்கொண்டார். இதில் ஹாலேப் 6-4, 6-1 என எளிதில் வெற்றி பெற்ற 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

201707072104038418_azerenka-s._L_styvpf.
அசரென்கா

மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா பிரிட்டன் வீராங்கனை வாட்சனை எதிர்கொண்டார். இதில் அசரென்கா 3-6, 6-1, 6-4 என வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

201707072104038418_Wozniacki-s._L_styvpf
வோஸ்னியாக்கி

21-ம் நிலை வீராங்கனை கார்சியா 6-4, 6-3 என ப்ரெங்கிளை வீழ்த்தினார். 5-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி பிரோங்கோவை 6-3, 6-4 என வீழ்த்தினார். 8-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவிற்கு அதிர்ச்சி அளித்து 27-ம் நிலை வீராங்கனை கொஞ்ஜுஹ் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/07210357/1095196/Wimbledon-Halep-Azarenka-Wozniacki-Garcia-moved-4rth.vpf

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆண்டி முர்ரே, கெர்பர் முன்னேற்றம்

 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஆவேசமாக பந்தை திருப்பி அடிக்கிறார் முகுருசா. படம்: ராய்ட்டர்ஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஆவேசமாக பந்தை திருப்பி அடிக்கிறார் முகுருசா. படம்: ராய்ட்டர்ஸ்
 
 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று போட்டியில் இங்கி லாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஜெர்மனி வீராங்கனை கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படும் விம்பிள்டன் டென் னிஸ் போட்டிகள் தற்போது லண் டனில் நடந்து வருகின்றன. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரரான பாபியோ போகினியை எதிர்த்து ஆடினார்.

நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே, இப்போட்டியில் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக முர்ரேவுக்கு போகினி கடும் சவாலாக விளங் கினார். முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக இழந்த போஜினி, அடுத்த செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென் றார். இதற்கடுத்த செட்டை முர்ர்ரே 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி னார். இதனால் 4-வது செட் கடும் போட்டியைக் கொண்டதாக இருந்தது. இதில் கடுமையாக போராடிய முர்ர்ரே 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அதைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 6-2, 4-6, 6-1, 7-5 என்ற செட்கணக்கில் வென்று 4-வது சுற்று போட்டிக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் அவர், பினோட் பைரை எதிர்த்து ஆடவுள்ளார்.

இப்போட்டி குறித்து நிருபர்க ளிடம் கூறிய முர்ரே, “நான் இன் றைய போட்டியில் சிறப்பாக ஆடியதாக கருதவில்லை. இருப் பினும் இதில் போராடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பாபியோ போகினியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அவரை வெல்ல கடுமையாக போராட வேண்டி இருந்தது. போதாததற்கு மைதானம் ஒரே சீராக இல்லாததால் ஆடுவது கடினமாக இருந்தது” என்றார்.

மகளிர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா, ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டி யாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் முகுருசா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 1 மணி 10 நிமிடங்களில் முடிந்தது. மற்றொரு 3-வது சுற்றுப் போட்டியில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்க னையான ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை போராடி வென்றார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-போட்டி-ஆண்டி-முர்ரே-கெர்பர்-முன்னேற்றம்/article9756157.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: கெர்பரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் முகுருசா

விம்பிள்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முகுருசா, வீனஸ், குஸ்நெட்சோவா, ரிபாரிகோவா, ஓஸ்டாபென்கோ ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 
 
விம்பிள்டன்: கெர்பரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் முகுருசா
 
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது.

8 போட்டிகளின் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான குஸ்னெட்சோவா, 9-ம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்காவுடன் மோதினார். இதில் குஸ்னெட்சோவா 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் தரநிலை பெறாத ரிபாரிகோவா - மார்டிக் ஆகியோர் மோதினார்கள். முதல் செட்டை ரிபாரிகோவா 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை மார்டிக் 6-2 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை ரிபாரிகோவா 6-3 எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

உக்ரைனைச் சேர்ந்த 4-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா, 13-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் மோதினார். இதில் ஓஸ்டாபென்கோ 6-3, 7-6 என வெற்றி பெற்றார்.

201707101931107924_5-ostapenko-s._L_styv
ஓஸ்டாபென்கோ

மற்றொரு போட்டியில் முதல் நிலை வீராங்கனையாக ஏஞ்சலிக் கெர்பர், 14-ம் நிலை வீராங்கனையான முகுருசாவை எதிர்கொண்டார். முதல் செட்டை கெர்பர் 6-4 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் முகுருசா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அவரது ஆட்டத்திற்கு கெர்பரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முகுருசா கடைசி இரண்டு செட்டையும் 6-4, 6-4 எனக் கைப்பற்றி கெர்பரை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

201707101931107924_5-Venus-s._L_styvpf.g
வீனஸ் வில்லியம்ஸ்

மற்றொரு போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 27-ம் நிலை வீராங்கனையான கோன்சுவை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/10193108/1095661/Wimbledon-muguruza-beats-kerber-and-reached-quarter.vpf

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை கோன்டா

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை கோன்டா பெற்றுள்ளார்.

 
விம்பிள்டன்: 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை கோன்டா
 
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றது.

ஒரு போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா, பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். 6-ம் நிலை வீராங்கனையான கோன்டாவிற்கு கார்சியா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(3) என கோன்டா முதல் செட்டை கைப்பற்றினார்.

201707102152541767_7-Konta001-s._L_styvp

2-வது செட்டில் கார்சியா 6-4 என கார்சியா வெற்றி பெற்றார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கோன்டா சிறப்பாக விளையாடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 1984-ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 33 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார். கோன்டா அரையிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.

201707102152541767_7-Konta-s._L_styvpf.g

சிமோனா ஹாலெப் அசரெங்காவை 7(7)- 6(3), 6-2 என நேர்செட்டில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கியை 24-ம் நிலை வீராங்கனையான வான்டேவெகே வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

4 மணி நேரம் 48 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார் ரபேல் நடால்

 

நடால். | படம்.| ஏஎப்பி.
நடால். | படம்.| ஏஎப்பி.
 
 

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றில் இருமுறை சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபேல் நடால் போராடி தோல்வியடைந்தார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடால், 16-ம் நிலை வீரரான லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கில்லஸ் முல்லரை எதிர்த்து விளையாடினார். முதல் இரு செட்களையும் நடால் 3-6, 4-6 என இழந்தார். எனினும் அடுத்த இரு செட்களிலும் பதிலடி கொடுத்தார்.

3 மற்றும் 4-வது செட்டை நடால் 6-3, 6-4 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் மிகவும் பரபரப்பானது. இந்த செட்டில் முல்லர் கடும் நெருக்கடி கொடுத்தார். முடிவில் அவர் இந்த செட்டை 15-13 என தனதாக்கினார்.

சுமார் 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கில்லஸ் முல்லர் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சில வாரங்களுக்கு முன்பு 10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற நடால், விம்பிள்டனில் 4-வது சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

விம்பிள்டன் போட்டியில் நடால், கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறுவது இது 5-வது முறையாகும். 31 வயதான அவர், 2010-ம் ஆண்டுக்கு பிறகு விம்பிள்டனில் பட்டம் வென்றது இல்லை. கடைசியாக 2011-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறியிருந்தார்.

இந்த தோல்வியின் மூலம் விம்பிள்டனில் 3-வது முறையாகவும் ஒட்டுமொத்தமாக 16-வது முறையாகவும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் நடாலின் கனவு தகர்ந் துள்ளது. போட்டி முடிவடைந்ததும் நடால் கூறும்போது, "நான் திரும்பி வரப்போவதில்லை என்று ஒருபோதும் கூறியதில்லை.

விம்பிள்டனில் நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். இங்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு உணர்வுப்பூர்வமானது. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.

அதேவேளையில் 34 வயதான கில்லஸ் முல்லர், முதன்முறையாக விம்பிள்டன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்த்து விளையாட உள்ளார். 28 வயதான மரின் சிலிச் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் முல்லர், தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சி யாக 22 ஆட்டங்களில் அடைந்த தோல்வி களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/4-மணி-நேரம்-48-நிமிடங்கள்-போராடி-வீழ்ந்தார்-ரபேல்-நடால்/article9761559.ece

  • தொடங்கியவர்
விம்பிள்டன் அரையிறுதியில் வீனஸ், கொன்டா
 

image_defdda0d88.jpg

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகளுக்கு, வீனஸ் வில்லியம்ஸ், ஜொஹன்னா கொன்டா, கார்பைன் முகுருஸா ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

விம்பிள்டனை இதுவரை 5 தடவைகள் கைப்பற்றியுள்ள வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் போட்டிகளில் தனது 100ஆவது ஒற்றையர் போட்டியில், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் சம்பியனான லத்வியாவின் ஜெலீனா ஒஸ்தபென்கோவை எதிர்கொண்டார்.

முதலாவது செட்டை 6-3 என்ற கணக்கில் இலகுவாகக் கைப்பற்றிய வீனஸ், 2ஆவது செட்டை, சற்றுப் போராடி, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, நேர் செட் கணக்கில், அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

2ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6ஆம் நிலை வீராங்கனையான பெரிய பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்டார். இதில், முதலாவது செட்டை 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ஹலெப், அடுத்த 2 செட்களையும் 6-7, 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று, வெளியேறினார்.

7ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா, 14ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸாவை எதிர்கொண்டார். இதில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில், முகுருஸா வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், 24ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் கொகோ வன்டெவெகே, தொடருக்காகத் தரநிலைப்படுத்தப்படாத, ஸ்லோவாக்கியாவின் மக்டலீனா றைபரிக்கோவாவை எதிர்கொண்டார். இதில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்ற மக்டலீனா, அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/விம்பிள்டன்-அரையிறுதியில்-வீனஸ்-கொன்டா/44-200474

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே காலிறுதியில் போராடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

 
விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே காலிறுதியில் போராடி தோல்வி
 
லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், நடப்பு சாம்பியனான பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் 24-ம் தரநிலை வீரரான சாம் கெர்ரியை எதிர்கொண்டார்.

அனுபவ வீரரான முர்ரே இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், அவரது முயற்சியை அமெரிக்காவின் இளம் வீரரான சாம் கெர்ரி தொடர்ந்து முறியடித்து அதிர்ச்சி அளித்தார். முதல் செட்டை கெர்ரி கைப்பற்றினார். இரண்டாம் செட்டை முர்ரே வசமாக்கினார். ஆனால், டைபிரேக்கர் வரை நீடித்த மூன்றாம் செட்டை, முர்ரே கைப்பற்றினார். அதன்பிறகு முர்ரேவை திணறடித்த கெர்ரி, அடுத்தடுத்து இரண்டு செட்களை கைப்பற்றினார்.

201707122138131065_marin-cilic._L_styvpf

இறுதியில் 3-6, 6-4, 6-7 (4-7), 6-1, 6-1 என்ற செட்கணக்கில் கெர்ரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், 2009ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் ஆண்டிரோடிக் அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை கெர்ரி பெற்றுள்ளார்.

ஆண்டி முர்ரே இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருப்பதால், உலகத் தரவரிசையில் அவரை நோவக் ஜோகோவிச் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், குரோஷிய வீரர் மரின் சிலிக், லக்சம்பர்க் வீரர் கில்லஸ் முல்லருடன் மோதினார். 5 செட் வரை நீடித்த இப்போட்டியில் மரின் சிலிக், 6-3, 6-7(8-6), 5-7, 7-5, 1-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார்.

அரையிறுதி ஆட்டத்தில் மரின் சிலிக்-சாம் கெர்ரி பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/12213808/1096039/Wimbledon-2017-Andy-Murray-loses-to-Sam-Querrey-in.vpf

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: 12-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் ஃபெடரர்!

 

விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கனடா நாட்டின் மிலோஸ் ராயோனிக் மோதினர்.

ரோஜர் ஃபெடரர்


ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஃபெடரருக்கு, உலகின் ஏழாம் நிலை வீரரான மிலோஸ் ராயோனிக் கடுமையான டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே ஃபெடரரின் கையே ஓங்கியது. இதனால்,  6-4, 6-2, 7-6 (7/4) என்ற செட் கணக்குகளில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.


இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் 12-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் தாமஸ் பெர்டிச்சுடன் மோத உள்ளார். தாமஸ் கடந்த 2010-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸில் இறுதிப் போட்டி வரை தகுதிப் பெற்றவர். 

விம்பிள்டன் டென்னிஸில் நடால், முர்ரே, ஜோகோவிக் போன்ற முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், அனைவரது பார்வையும் தற்போது ஃபெடரரின் பக்கம் திரும்பியுள்ளது. நடப்பு விம்பிள்டன்னையும் அவர் தன் வசப்படுத்தும்பட்சத்தில், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறை கைப்பற்றும் முதல் வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைப்பார். 

http://www.vikatan.com/news/sports/95305-federer-enters-semi-final-in-wimbledon-open.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்

 

விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

 
 
 
 
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்
 
 
லண்டன்:
 
லண்டன் நகரில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் மோதினர். கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக காலிறுதி போட்டிக்கு ஜோனா கோண்டா தகுதிபெற்றார். அவர் தனது திறமையான ஆட்டத்தால் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
 
இந்த வருடம், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விம்பிள்டன் கோப்பையை வெல்வார் என அந்நாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அரையிறுதி போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன்மூலம் இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
முன்னாதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் முகுருசா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விம்பிள்டன் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் - முகுருசா சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/13210955/1096213/venus-williams-enters-wimbledon-finals.vpf

  • தொடங்கியவர்

விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர், மரின் சிலிச் தகுதி

 

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் அரையிறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிச் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 
விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர், மரின் சிலிச் தகுதி
 
லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் அரையிறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிச் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் மற்றும் அமெரிக்காவின் சாம் குரேரி பலப்பரீட்ச்சை நடத்தினர்.

முதல் செட்டை சிலிச் இழந்தாலும் அடுத்தடுத்த செட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். சிலிச்-க்கு சவால் அளித்தாலும் குரேரியால் அடுத்த செட்களை வெல்ல முடியவில்லை. 4 செட் வரை சென்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 6-7 6-4 7-6 7-5 என்ற செட் கணக்கில் சிலிச் வெற்றி பெற்று முதன் முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

201707150020290052_tennis1._L_styvpf.gif

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் செக் குடியரசின் தாமஸ் பெர்டைச் மோதினர். முன்னணி வீரரான பெடரருக்கு சரியான சவால் அளிக்கும் விதமாக பெர்டைச் விளையாடினார். இருப்பினும், அவரால் ஒரு செட்டை கூட வெல்ல முடியவில்லை. முடிவில் 7-6, 7-6, 6-4 என்ற கணக்கில் பெடரர் வென்று 11-வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுநாள் (16-7-17) நடக்க உள்ள ஒற்றையர் இறுதிப்போட்டியில் பெடரர், சிலிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/15002022/1096389/Roger-Federer-and-Marin-Cilic-in-the-Wimbledon-finals.vpf

  • தொடங்கியவர்

பெடரர் விளையாடிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த சச்சின்

 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் அரையிறுதியின் ரோஜர் பெடரர் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.

 
பெடரர் விளையாடிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த சச்சின்
 
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) 100 சதங்களை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும் அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டை தவிர மற்ற ஏதும் தெரியாதவர் என்று அவரது ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில், சச்சின் தெண்டுல்கர் டென்னிஸின் தீவிர ரசிகராக இருந்தார்.

குறிப்பாக லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று பார்க்க விரும்புவார். இவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர்.

நேற்று விம்பிள்டன் அரையிறுதி ஒன்றில் பெடரர், தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார். தற்போது லண்டனில் இருக்கும் சச்சின் இந்த போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார். இந்த போட்டியில் பெடரர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

201707151734098213_2-Sachin-Tendulkar1-s

ரோஜர் பெடரரின் போட்டியை கண்டுகளித்த சச்சின் கூறுகையில் ‘‘எப்போதும் இங்கே வருவது எனக்கு சிறப்பான ஒன்று. நான் டென்னிஸ் விளையாட்டின் தீவிர ரசிகன். விம்பிள்டன் தொடரைவிட சிறந்தது ஒன்றுமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ரோஜர் பெடரரின் ஆட்டத்தை கண்டுகளித்து வருகிறேன். ஆகவே, இங்கே வந்து ரோஜர் பெடரருக்கு மீண்டும் ஆதரவு அளிக்கிறேன்.

201707151734098213_3-sachin-s._L_styvpf.

விளையாட்டு வீரர்கள் அல்லது டென்னிஸ் வீரர்கள் யாராக இருந்தாலும் உலக ரசிகர்கள் பாராட்டுவார்கள். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். உலகளவில் பல்வேறு சாதனைகளை பெற்றுள்ள பெடரர், தன்னடக்கம் உள்ளவர். இப்படி இருப்பது சிறப்பானது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/15173407/1096552/Wimbledon-2017-Sachin-Tendulkar-pays-tribute-to-humble.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.