Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை

Featured Replies

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை
சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை
 

 

  • gallerye_235419699_1810650.jpg

 

 
 

பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு, ரூபா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கெனசில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம்

 

பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத் தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை,டி.ஐ.ஜி.,யான நான்,

 

சசிகலா,சிறப்பு,சமையல் அறை, சிறைத்துறை ,அதிகாரி,அறிக்கை

ஆய்வு நடத்தியதை, தங் களுக்கு . இவ்வாறு அந்த அறிக்கையில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்களி டம் ரூபா கூறுகையில்இதே அறிக்கையை, ஊழல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்,'' என்றார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1810650

  • தொடங்கியவர்

சிறையில் சகல வசதிகளுடன் சசிகலா: சிறைத்துறை உயரதிகாரி ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்

 

 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை | கோப்புப் படம்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை | கோப்புப் படம்.
 
 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா விஐபி சலுகைகளைப் பெற்று சவுகரியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று அவர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனி சமையலறை..

சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையிலடம் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை உள்துறை செயலருக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் ராவ்..

இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி சத்தியநாராயண ராவ் கூறும்போது, "சிறைச்சாலையை நான் சோதனை செய்துவருகிறேன். அங்கு எந்த முறைகேடும் நடப்பதாகத் தெரியவில்லை. ஊழல் நடந்ததாகவும் தெரியவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரூபா அதை எப்படி நிரூபிக்கப்போகிறார் என எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்னதாக ரூபாவுக்கு இரண்டு முறை மெமோ கொடுத்திருக்கிறேன். அந்த மெமோக்களுக்கு பழிவாங்கும் முயற்சியாக ரூபா இப்படியொரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்கிலம் சார்பில் ரூபாவைத் தொடர்பு கொண்டபோது அவர் எவ்வித கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

ரூபா தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்..

1. மத்திய சிறையில் போதை வஸ்துகள் பயன்பாடு இருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் ஜூலை 10-ம் தேதியன்று 25 கைதிகளுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தியதில் 18 கைதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. சிலர் கஞ்சாவும் சிலர் பென்சோடியசபைனும் பயன்படுத்தியது உறுதியானது. ( இது தொடர்பாக சிறைத்துறை தலைமை எஸ்.பி. கிருஷ்ணகுமாருக்கு அறிக்கை அளித்தும் சிறைக்குள் போதை வஸ்துகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை )

2. சிறைக் கைதிகளின் மருத்துவ கோப்புகளைப் பாதுகாக்கும் அறைக்கு அரசு நியமிக்கும் வார்டனே கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். ஆனால், சிறைக் கைதிகளே இந்த அறைக்கு பாதுகாவலர்களாக நியமிக்கப்படுவதால் பல வழக்குகளுக்குத் தேவைப்படும் பல முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன.

3. சிறையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டபோது சிறைக்கைதி ஒருவர் செவிலியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். இது தொடர்பாக பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறைச்சாலை மருத்துவர்களை கைதிகள் மிரட்டுகின்றனர். தங்களை சிறை மருத்துவமனையிலேயே வைத்திருக்கும்படி மிரட்டுகின்றனர்.

4. சிறைக்கைதிகளையே பார்மஸியில் பணியமர்த்துவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தூக்க மருந்துகள் போன்றவற்றை பிற கைதிகள் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

http://tamil.thehindu.com/india/சிறையில்-சகல-வசதிகளுடன்-சசிகலா-சிறைத்துறை-உயரதிகாரி-ரூ2-கோடி-லஞ்சம்-பெற்றதாக-புகார்/article9763835.ece?homepage=true

  • தொடங்கியவர்

தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் #VikatanExclusive

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய்கள் பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர்களின் நெருக்கம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் சிறை அதிகாரிகள். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளி உலகில் வலம் வருகின்றன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, இங்கு அடைபட்டிருந்தபோது ஏ.சி உள்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சுரங்க முறைகேடு வழக்கில், ரெட்டி சகோதரர்கள் சிறைபட்டிருந்தபோது சர்வசாதாரணமாக வெளியில் சென்று வந்தனர் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி ரூபா நடத்திய திடீர் ஆய்வு சசிகலா உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், “சிறைக்கு வந்த நாள் முதலாக, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் சசிகலா. அவருடன் அடைக்கப்பட்ட இளவரசிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது. சிறையில் பலமுறை மயங்கி விழுந்தார். 
அவருக்குத் தேவையான மருந்துகளை விவேக் கொண்டு வந்து கொடுப்பார். இதுதவிர, வாரத்தில் மூன்று முறை வழக்கறிஞர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசுவது வழக்கம். சிறைக்கு வந்த மறுநாளே, ‘எங்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துக் கொள்கிறோம். அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்' எனக் கேட்டார் சசிகலா. அவருடைய கோரிக்கையை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தோம். அவர்களோ, ‘நாளொன்றுக்கு சிறைக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவை சசிகலா பெயரில் வருகிறது. அந்தக் கடிதங்களை எல்லாம் கர்நாடக தமிழர்கள்தான் எழுதுகிறார்கள். ஜெயலலிதா மரணம் அவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், சசிகலா குடும்பம்தான் என அவர்கள் நம்புகின்றனர். 

இந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் உதவும் தகவல் தெரிந்தால், வெளியில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். அரசின் கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். சிறை அமைந்திருக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார் விவேக். பெங்களூரு வரும்போதெல்லாம் அங்குதான் தங்குவார். இந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. சிறைத்துறைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக பெண் அதிகாரி ரூபா பதவியேற்றார். அவர் வந்த பிறகுதான் எங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன" என விவரித்தவர், " கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம். சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை இந்த நபர்தான் செய்து கொடுத்தார். பெங்களூருவுக்குப் பக்கத்திலேயே இருப்பதால், என்ன தேவையென்றாலும் இந்த நபரைத்தான் தொடர்பு கொள்கின்றனர். ‘இப்படியொரு பதவியில் இருந்து கொண்டு சிறைக்கு வரலாமா?' என பன்னீர்செல்வம் அணியினர், இவரைப் பற்றி விமர்சனம் செய்தனர். 

பரப்பன அக்ரஹாரா சிறை

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிறை அதிகாரிகள் உதவியோடு சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். டி.ஐ.ஜி ரூபா இதைப் பற்றி விரிவாக விசாரித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தினார். அப்போதுதான் தனி சமையல் அறை விவகாரம் வெளியில் தெரிந்தது. அவரது குடும்பத்தாரோடு தொடர்பு கொள்ள, செல்போன் பயன்படுத்துகிறாரா என்றும் தீவிரமாக சோதனை செய்தார் அதிகாரி. என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படியொரு ரெய்டு நடந்த விவகாரம், டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் தெரியாது. விளக்கம் கேட்டு அவர் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா அளித்த பதில்தான், பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. டி.ஜி.பிக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் முழு விபரங்களும் வெளியாகிவிட்டன. சசிகலாவுக்கு உதவி செய்த வகையில் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். சிறை நன்னடத்தை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட குற்றத்துக்காக, சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த விவகாரத்தில், டி.ஜி.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக. 

" இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். ‘தமிழக காங்கிரஸ் பிரமுகர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்கள் சென்றுள்ளன. அதன்படியே சசிகலாவுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன' என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த ரெய்டைத் தொடர்ந்து, பெண் அதிகாரி அனுப்பிய பதிலும் வெளியில் கசிந்துவிட்டது. இதன்மூலம், குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பில்லை. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும்" என்கின்றனர் கர்நாடக அ.தி.மு.கவினர். 

 

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் விதித்த கெடுவுக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டங்களுக்கும் மத்திய உளவுத்துறை வைத்த அதிரடிதான் இந்தச் சோதனை. சசிகலா சிறையில் இருக்கும் வரையில், தங்களுக்குத் தேவையானதை தமிழகத்தில் சாதித்துக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறது டெல்லி பா.ஜ.க.

http://www.vikatan.com/news/tamilnadu/95331-individual-kitchen-flat-sasikala-gets-trapped-due-to-jail-visits.html

  • தொடங்கியவர்

உமா பாரதி, எடியூரப்பா, சசிகலா! - கர்நாடகாவை கதிகலக்கும் பெண் டி.ஐ.ஜி. ரூபா

 
 
 

ரூபா திவாகர் ஐ.பி.எஸ்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. ‘என்னுடைய பணியின் ஓர் அங்கம் இது. சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என அதிர வைக்கிறார் ரூபா. 

கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்குப் பதிலளித்த ரூபா, ‘ சிறைக்குள் சசிகலாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தனி சமையலறையே செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக, இரண்டு கோடி ரூபாய் வரையில் லஞ்சம் பெற்றுள்ளனர்’ என விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் பத்திரிகைகளில் வெளியாகி, டி.ஜி.பிக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்தது. துறையின் உயர் அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு இன்று அவர் விளக்கம் அளித்தபோது‘ இந்த ஊழலில் டி.ஜி.பிக்கும் பங்கு உண்டு’ எனப் பகிரங்கமாகவே சுட்டிக் காட்டினார். 

“இதுதான் அவருடைய சுபாவம். அரசுப் பணியில் நேர்மையாகச் செயல்படுவது என்பது அதிகாரிகளின் கடமைகளில் ஒன்று. அதை மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார். அவருடைய குடும்பத்தில் பெற்றோர் இருவரும் அரசு அதிகாரிகள். அவருடைய தங்கை ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரி” என விவரித்த பெங்களூரு அரசு அதிகாரி ஒருவர், “வெறுமனே பேட்டிகளின் மூலம் மட்டுமே, அதிர வைக்கும் அதிகாரியாக அவர் இருந்ததில்லை. ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாக செயல்பட்டவதற்குப் பல பரிசுகளை வாங்கியிருக்கிறார். அதேபோல், பலவித சோதனைகளையும் கடந்தே வந்திருக்கிறார். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகா மாநிலம், தாவனகரே பகுதிதான். படிக்கும் காலத்திலும் சிறந்த மாணவியாக வலம் வந்தார். அவருடைய 15-வது வயதில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் கையால், ‘சிறந்த என்.சி.சி மாணவி’ என்ற விருதையும் பெற்றார். பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி படிப்புகளில் கர்நாடக மாநில ரேங்க் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.

பரப்பன அக்ரஹாரா சிறை

கல்லூரியிலும் முதுநிலை உளவியல் படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்த பெருமை ரூபாவுக்கு உண்டு. அவருடைய முக்கியமான பொழுதுபோக்கே அழகிப் போட்டிகளில் பங்கு பெறுவதுதான். ‘மிஸ் தாவனகரே’ பட்டத்தையும் வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் அவர் குவித்துள்ள பதக்கங்களுக்கு அளவே இல்லை. பரதநாட்டியம், ஹிந்துஸ்தானி இசை என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. 2000-ம் ஆண்டு நடந்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர், காக்கிச் சட்டையின் மீதிருந்த காதலால் ஐ.பி.எஸ் பணியைத் தேர்வு செய்தார். பயிற்சிக்காலத்திலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்து, ‘சிறந்த அதிகாரி’ எனப் பெயர் வாங்கியவர். 2003-ம் ஆண்டு முனிஷ் மோட்கில் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முனிஷ் மோட்கில் ஐஏஎஸ், தற்போது கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தின் மின்சார நிறுவன இயக்குநராக உள்ளார். இந்த ஆட்சிப் பணி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்” என்றார் விரிவாக. 

ரூபா திவாகர் “ரூபா பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார். ‘எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும், கர்நாடகாவைவிட்டு நகர மாட்டேன்’ என அடிக்கடி சொல்வார். ஒருமுறை பணி நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு அவர் கணவர் இடம் பெயர்ந்தபோதும், கர்நாடகாவைவிட்டு அவர் நகரவில்லை. அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதிரடி இல்லாமல் இருந்ததில்லை. 2007-ம் ஆண்டு பா.ஜ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்தில் கால் வைத்தவுடன் கைது செய்தார். இந்த நடவடிக்கையை சக அதிகாரிகளே எதிர்பார்க்கவில்லை. அரசியல்ரீதியாக எந்த நெருக்கடி என்றாலும், அதை எதிர்கொள்வதில் ரூபாவுக்கு நிகர் அவர்தான்” என உற்சாகமாகப் பேசிய ரூபாவின் நண்பர் ஒருவர்,

 

“பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றபோது, ‘மக்களுக்குச் சேவை செய்யத்தான் காவல்துறை’ என உறுதியான நிலைப்பாடு எடுத்து, அரசியல்வாதிகளுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் அளித்து வந்த அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பைத் தளர்த்தினார். இதனைத் தொடர்ந்து, ‘பதவியில் இல்லாத முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிகப்படியான சேவைகள் வழங்கப்படுகின்றன’ எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகளையும் குறைத்து அதிரடி காட்டினார். பொறுப்பான காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல், பெண் உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பதை அடிப்படை கடமையாக வைத்திருக்கிறார் ரூபா திவாகர்” என்றார் நெகிழ்ச்சியோடு.

http://www.vikatan.com/news/india/95369-uma-bharti-yeddyurappa-and-now-sasikala-a-woman-dig-who-is-shaking-karnataka.html

  • தொடங்கியவர்

‘சசிகலாவுக்கு சிறையில் நெருக்கடி?’ - ரகசிய கண்காணிப்பில் மூன்றுபேர்

 
 
 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை

சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் நடவடிக்கைகளை சிறைத்துறை 24 மணி நேரமும் ரகசியமாக கண்காணித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை சரிவர தூங்கவும் விடுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி, சுதாகரன். இவர்களுக்கு வி.ஐ.பி-களுக்கான சலுகைகளோடு கூடுதல் சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் செய்துகொடுத்தாகத் தகவல் வெளியாகியுள்ளன. இதை கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியான ரூபா அம்பலப்படுத்தியுள்ளார். சசிகலாவுக்கு, சிறையில் தனி சமையலறை இருந்தாகவும் ரூபா, தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது, சசிகலாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சில நாள்களுக்கு முன்பு டி.ஐ.ஜி ரூபா அதிரடி சோதனை நடத்தினார். அந்தச் சோதனையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத்துறை விதிமுறைகளை மீறி சில சலுகைகள் செய்து கொடுப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் ரூபா விரிவாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் சிறைத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மூன்று பேரின் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தகவல் கொடுத்துவருகின்றனர்.

சசிகலாவுக்கு மட்டுமல்ல சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.வி.ஐ.பி.களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். சசிகலா விவகாரத்தால் தற்போது அவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி பெற்ற சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. தண்டனைக் கைதிகளை பொறுத்தவரை, அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். அடுத்து காலை உணவுக்குப்பிறகு சிறைத்துறை கொடுக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். சிறையில் சீருடை கட்டாயம் அணிய வேண்டும். இந்த விதிமுறையிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

டி.ஐ.ஜி ரூபாவின் அதிரடியால் அவர்களுக்கும் தண்டணை கைதிகளுக்குரிய விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கைதியின் அறை காலை ஆறு மணிக்கு திறக்கப்பட்டு மாலை ஆறு மணிக்கு மூடப்படும். ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட பெங்களூரு சிறையில் உள்ள வி.வி.ஐ.பி.களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர்களையும் அதிகாலையிலேயே சிறை காவலர்கள் எழுப்பிவிடுகின்றனர்.

அடுத்து, மாலை ஆறு மணிக்கு அறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு ஏழு மணியளவில் கைதிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு சசிகலாநைட் ரவுண்ட்ஸ் நடக்கும். இது, கைதிகளை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் யுக்தி. அந்த நடைமுறைகளில் சசிகலா, இளவரசி, சுதாகரனின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. சிறைத்துறை நடவடிக்கை குறித்து சசிகலா, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்" என்றார்.

சசிகலா தரப்பில் பேசியவர்கள், "குடியரசுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்ததும் காங்கிரஸால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், டி.டி.வி.தினரகனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாமல் டெல்லி போலீஸார் திணறிவருகின்றனர்.

தற்போது, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், சிறையில் உள்ள சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையின் விதிமுறைகளை மீறி சலுகைகளைப் பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். வழக்கம் போல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் சிறை மாறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்" என்றனர்.

சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரும் பதிலளிக்கவில்லை.

 

சசிகலா, விவகாரத்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை பரபரப்பாகியுள்ளது. சிறைத்துறை அதிகாரிகளின் அதிரடியால் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு இன்னும் சிக்கல்கள் எழும் என்று சொல்கின்றனர் உள்விவர வட்டாரங்கள்.

http://www.vikatan.com/news/coverstory/95464-police-decided-to-monitor-sasikala-for-24-hours.html

  • தொடங்கியவர்

ரூ.2 கோடி மட்டுமல்ல: மாதம் ரூ.10 லட்சம்: ஆதாரங்களை வெளியிடப் போவதாக குமாரசாமி தகவல் - சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயார்

 

குமாரசாமி
குமாரசாமி
 
 

பெங்களூரு சிறையில் சிறப்புச் சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டுமல்லாமல், மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக‌ முன்னாள் முதல்வரும், மஜத மாநில தலைவருமான குமாரசாமி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. டிஐஜி ரூபா டி. மவுட்கில் தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கியுள்ள னர். சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.

இந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி இருக் கிறது. தற்போது ஆதாரத்தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா டி. மவுட் கில் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல. உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். அப்போது தான் இந்த விசா ரணையால் உண்மையைக் கண்டறிய முடியும். இல்லாவிட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில‌ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லாவிட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்னை மட்டும் குறி வைக்கக் கூடாது: ரூபா

rubha_3186243a.jpg

டிஐஜி ரூபா டி.மவுட்கில் கூறும்போது, “நான் காவல் துறை விதிமுறைகளையும், சிறைத்துறையின் சட்டதிட்டங்களையும் மீறவில்லை. நான் குற்றவாளி அல்ல. ஒரு அதிகாரியாக சிறையை பார்வையிட்டு உயர் அதிகாரிக்கு அறிக்கை அளித்தேன். நான் முதலில் ஊடகங்களிடம் போய் பேசவில்லை. டிஜிபி சத்தியநாராயண ராவ் தான் முதலில் ஊடகங்களிடம் பேசினார். சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்புச் சலுகை அளித்த விவகாரத்தில் என்னை மட்டும் குறி வைப்பது நியாயம் அல்ல. இந்த விவகாரத்தில் அனைவர் மீதும் நியாயமான‌ நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. நான் காவல் துறையின் விதிமுறைகளையும், சட்ட திட்ட‌ங்களையும் மதிக்கிறேன். உயர்மட்ட விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/india/ரூ2-கோடி-மட்டுமல்ல-மாதம்-ரூ10-லட்சம்-ஆதாரங்களை-வெளியிடப்-போவதாக-குமாரசாமி-தகவல்-சசிகலாவிடம்-லஞ்சம்-வாங்கிய-அதிகாரிகள்-பட்டியல்-தயார்/article9769229.ece?homepage=true

  • தொடங்கியவர்

சிறையில் சசிகலாவுக்கு மட்டும் அல்ல இவருக்கும் சிறப்புக் கவனம்தான்! - அதிர்ச்சிதரும் ரிப்போர்ட்!

 
 
 

ரூபா

ரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்படுகிறது என்று பகீர் புகாரைக் கிளப்பினார் டி.ஐ.ஜி ரூபா.

போலீஸாருக்கு நெருக்கடி

இந்த நிலையில் ரூபாவுக்கு கர்நாடகா அரசின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிறையில் விசாரணை மேற்கொண்ட விவரங்களை மீடியாக்களிடம் ஏன் தெரிவித்தீர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் ஒரு சேர புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் கர்நாடகா அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, "இது முழுக்க, முழுக்க விதிமுறைகளுக்கு மாறானது. இந்தக் குற்றசாட்டைக் கூறும் முன்பு ரூபா, தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் இது பற்றிப் பேசியிருக்க வேண்டும். மீடியாக்களிடம் தகவல்களை ரூபா வெளியிட்டதால், போலீஸ் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறி இருக்கிறார்.

எனக்கு மட்டும் விதிமுறையா?

முதல்வரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டி.ஐ.ஜி ரூபா, "உண்மையில் நான் மீடியாக்களிடம் பேசவில்லை. எனது விசாரணையின் விவரங்களை டி.ஜி தான் கொடுத்திருக்கிறார். விதிமுறைகள் என்பது எனக்கு மட்டும் விதிக்கப்பட்டது அல்ல. எல்லோருக்கும் அந்த விதிமுறைகள் பொருந்தும். இது குறித்த அரசின் எந்த வித விசாரணைக்கும் நான் சம்மதம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தில் என்னை மட்டும் குறிவைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

ரூபா-சத்யா நாராயண ராவ்

சிறையில் ஆய்வு நடத்தியது குறித்த அறிக்கையை உள்துறை மற்றும் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் ஆகியோரிடம் ரூபா அறிக்கை அளித்திருக்கிறார். அந்த அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்குச் சிறை விதிமுறைகளை மீறி தனியாக சமைத்து உணவு வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்

சிறைத்துறை டிஐஜிக்கு ரூபா தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா விவகாரம் மட்டும் இன்றி மேலும் பல அதிர்ச்சித் தகவல்களும் இடம் சசிகலாபெற்றுள்ளன. போலி ஸ்டாம்ப் பேப்பர் வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்கிக்கும் வி.ஐ.பி அந்தஸ்துடன் தனி கவனிப்பு செய்யப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. சிறைத் துறையில் உள்ள மருத்துவ அலுவலர்கள், கைதிகளுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்வதாகவும் ரூபா கூறி இருக்கிறார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சத்யா நாராயண ராவ், சிறைத் துறையில் உள்ள சட்ட நடைமுறைகள் ரூபாவுக்குத் தெரியவில்லை. சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பது புதிதாக அவர் கண்டுபிடித்த ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பெறுகின்றனர். அதைத் தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.

 

சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் பற்றி புகார் சொன்னவரையே கார்னர் செய்வது கர்நாடகா மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தினந்தோறும் சிறையில் கஞ்சா புழங்குகிறது என்று சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவே கூறி இருப்பதும் சிறை கண்காணிப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

http://www.vikatan.com/news/india/95620-this-man-too-receives-vip-treatment-in-parappana-agrahara-prison.html

  • தொடங்கியவர்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிப்பதாக புகார்! ஆதாரம் அழிக்கப்பட்டதாக டிஐஜி அறிக்கை

 
சசிகலா, தெல்கிக்கு சிறப்பு சலுகை அளிப்பதாக புகார்!படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஎனது விடியோ ஆதாரங்கள் அழிப்பு: டிஐஜி ரூபா

பெங்களூரு சிறையில் அதிமுக "அம்மா அணி" பொதுச் செயலாளர் சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்ஹி ஆகியோருக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தொடர்பான தனது விடியோ ஆதாரங்கள், சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா ஜி.மொடுகில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது துறை மேலதிகாரியும் சிறைத்துறை தலைமை இயக்குநருமான (டிஜிபி) எச்.என்.சத்யநாராயணா ராவிடம் டிஐஜி ரூபா சில தினங்களுக்கு முன்பு அறிக்கை அளித்திருந்தார்.

அதில் சத்யநாராயணா மீதே ஊழல் புகாரை ரூபா சுமத்தியிருந்த நிலையில், சனிக்கிழமை இரண்டாவது அறிக்கையை அவர் அளித்துள்ளார்.

சசிகலா, தெல்ஹிக்கு சலுகைகள்

முதலாவது அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தமது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருடன் சேர்த்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட வி.கே.சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில் தனி சமையலறை, உதவியாளர் வசதிகள் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சசிகலா, தெல்கிக்கு சிறப்பு சலுகை அளிப்பதாக புகார்!படத்தின் காப்புரிமைARUN SANKAR

அந்த வசதிகளை அளிப்பதற்காக தமது உயரதிகாரியான சத்யநாராயணராவுக்கு ரூபாய் ஒருகோடியும், மீதமுள்ள அதிகாரிகள், ஜெயில் வார்டன்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூபாய் ஒருகோடியும் பகிர்ந்து வழங்கப்பட்டதாக ரூபா தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், முத்திரைத்தாள் மோசடி வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்ஹிக்கும் அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் உயர் ரக மெத்தை அடங்கிய படுக்கை வசதி, தண்ணீர் கேன், எல்இடி தொலைக்காட்சி போன்றவையும் உள்ளதாக ரூபா கூறியிருந்தார்.

அதிகாரிகளின் தீடீர் ஆய்வு

இதையடுத்து கர்நாடக சிறைத் துறை கூடுதல் தலைவர் வீரபத்ரசாமி, சசிகலா, தெல்ஹி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகங்களை வெள்ளிக்கிழமை இரவு பார்வையிட்டார்.

கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா Image captionகர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் சில அதிகாரிகளுடன் டிஜிபி சத்யநாராயணராவ் சிறை வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அவர் அங்கு இருந்து விட்டு திரும்பினார்.

அவர் புறப்பட்ட சில மணி நேரத்தில் டிஐஜி ரூபாவும் சிறை வளாகத்துக்கு வந்தார். சிறைத்துறை ஊழியர்கள் சிலரிடம் அவர் பேசிய பிறகு சத்யநாராயண ராவ் அலுவலகத்துக்குச் சென்றார்.

2-ஆவது அறிக்கை தாக்கல்

பின்னர் வெளியே வந்த ரூபா செய்தியாளர்களிடம் பேசும்போது, "எனது இரண்டாவது அறிக்கையை சமர்ப்பித்து விட்டேன். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்கிபடத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE Image captionமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்கி

தனது இரண்டாவது அறிக்கை நகலை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், உள்துறைச் செயலாளர், கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக ரூபா கூறினார்.

"ரூபாவின் அறிக்கையில் ஊடகங்களுக்கு தனது அறிக்கையை வலியச்சென்று கசியவிடவில்லை. இது பற்றி விசாரணை நடத்தினால் அதற்கு ஒத்துழைக்கத் தயார். சிறையில் சேகரித்த ஆதாரங்களை அழித்து விட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளதாக இந்திய தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை செய்திகள் ஒளிபரப்பாகின.

ஆதாரங்கள் அழிப்பு

இதையடுத்து ரூபாவிடம் செய்தியாளர்கள் பேச முயன்றபோது, "சிறையில் ஆய்வுக்காக நான் சென்றபோது எனது செல்லிடப்பேசியில் தொலைத்தொடர்பு வசதி இயங்கவில்லை.

அதனால் சிறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கேமிராவை எடுத்துச் சென்று சில பகுதிகளை படம் பிடித்தேன். பின்னர் அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஒரு பென் டிரைவில் பதிவேற்றம் செய்து தருமாறு கூறினேன்.

ஆனால், சிறையில் உள்ள அதிகாரிகள் எனக்கு எதிராக இருந்தனர். நான் பதிவு செய்த ஆதாரங்களை அழித்து விட்டனர். என்னிடம் வேறு ஆதாரங்களும் உள்ளன. அவற்றை உள்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளேன்" என்றார்.

தனது உயர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவரிடமே அந்த விவகாரம் பற்றி ரூபா அளித்த அறிக்கை, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸுக்கு மட்டுமின்றி தமிழகத்திலும் ஆளும் முதல்வர் பழனிசாமி அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வலைபதிவீட்டாளர்கள் ஆதரவு

டிஐஜி ரூபாவை "ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்" ஆக சில தொலைக்காட்சிகளும் வலைபதிவீட்டாளர்களும் புகழந்து வருகின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், ரூபாவின் டுவிட்டர் முகவரியைக் குறிப்பிட்டு, அவரது சேவையைப் பாராட்டினார்.

சசிகலா, தெல்கிக்கு சிறப்பு சலுகை அளிப்பதாக புகார்!படத்தின் காப்புரிமைTWITTER

"எங்கு பணியமர்த்தப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும். நீங்கள் நாட்டுக்குத் தேவை. உங்களைப் போல இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இளைய தலைமுறைக்கு நீங்கள் அளிப்பீர்கள்" என்று கிரண் பேடி கூறினார்.

அதற்கு பதில் பதிவிட்ட ரூபா, "உங்களின் ஆதரவான வார்த்தை, நூறு யானைகளின் பலத்துக்கு ஒப்பானது" என்று கூறினார்.

சசிகலா ஆதரவாளர் விளக்கம்

இதற்கிடையே சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்று கர்நாடகத்தில் உள்ள அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறினார்.

அதே சமயம், டிஐஜி ரூபாவின் செயலை ஆதரிப்பதாக தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு தெரிவித்தார்.

விசாரணை குழு அமைப்பு

இந்த நிலையில் சிறை விதிகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன் என்று ரூபாவுக்கும் அம் மாநில சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவுக்கும் கர்நாடக உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா பதில் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே சிறையில் ஊழல் நிலவுவதாக ரூபா அளித்த அறிக்கை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயதிகாரி வினய் குமாரை கர்நாடக முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார்.

வினய் குமார் குழு சிறை வளாகத்துக்குச் சென்று விசாரணை நடத்தும் முன்னரே, புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாரயணராவ், ரூபா ஆகியோர் அடுத்தடுத்து பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சனிக்கிழமை சென்று வந்துள்ளனர்.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-40619423

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.