கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1
🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும்
காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலந்த குரலில், ஆர்வத்துடன், “தாத்தா, நாம் எங்கே போறோம்?” என நிலன் கேட்டான்.
“என் சிறிய ஆராய்ச்சியாளனே, அதை நீயே விரைவில் பார்ப்பாய்” என்று தாத்தா சிரித்தபடி “இது ஒரு பெரிய ஆச்சரியம்!” என்று சொன்னார்.
வெல்வின் கார்டன் சிட்டியின் தெருக்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட புதர்கள், அழகாக சுத்தமான வீடுகளுடன், ஒரு குழந்தைப் புத்தகக் கதையைப் போல் தோன்றின. பறவைகள் கீதம் பாட, மர இலைகள் மெதுவாக அசைந்தன. தாத்தா மெதுவாக காரை ஓட்டிச் சென்றார். வழியில், அங்கு காணப்பட்ட சிறிய, அழகான விவரங்களையும் மற்றும் மனதில் தோன்றிய சிறு சிறு விடயங்களையும் சுட்டிக்காட்டினார் – ஒரு தோட்டத்தில், சோம்பேறித்தனமாக கால்களைக் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூனை, ஒரு வேலியுடன், அனாதரவாக சாய்ந்து நின்ற சிவப்பு மிதிவண்டி, மற்றும் நடைபாதையில் குறுக்கே வேகமாகச் செல்லும் ஒரு சிறிய அணில் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு சென்றனர்.
தாத்தா கூட்டிக் கொண்டு போன இடத்தை அடைந்ததும் நிலனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "இது... ஒரு பூங்காவா?" அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு கிசுகிசுத்தான்.
“ஆம், ஆனால் இது சாதாரண பூங்கா அல்ல,” என்று தாத்தா கார் கதவைத் திறந்தார்.
குழந்தைகள் கற்களால் ஆன ஒரு பாதையில் ஒன்றாகப் பாய்ந்து ஓடினர். அங்கு உயரமான வேலிகளுக்குப் பின்னால் ஒரு இரகசிய தோட்டம் மறைந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், ஊதா நிற மலர்கள் வானவில் போல் மலர்ந்திருந்தன. லாவெண்டர் [lavender] மற்றும் ரோஜாக்களின் வாசனை காற்றை நிரப்பியது.
திடீரென்று, ஒரு மென்மையான சிரிப்பு நிலனின் கவனத்தை ஈர்த்தது. “Welcome to Adventure Grove” ["சாகச தோப்புக்கு வருக"] என்று ஒரு சிறிய மர பலகையில் எழுதப்பட்டிருந்தது. அது அவர்களை புன்னகையுடன் பேசி வரவேற்றது. அதன் பின் சிறிய பாதைகள், பாலங்கள், ஓடைகள், விலங்குகளின் சிற்பங்கள் — எல்லாம் சேர்ந்து ஒரு கற்பனை உலகம் போல விரிந்து பரவி இருந்தது.
“தாத்தா! பாருங்க!” என்று திரேன் கத்தினான். தோட்டத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறிய கோட்டையை சுட்டிக்காட்டினான். அதில் கோபுரங்களும், காற்றில் பறக்கும் சிறிய கொடிகளும் இருந்தன. "நாம் உள்ளே போகலாமா?” என்று கேட்டான்.
"நிச்சயமாக!" என்று தாத்தா பதிலளித்தார்.
அங்கு தான் முதல் அதிசயமான அனுபவம் அவர்களுக்கு ஆரம்பமானது. குழந்தைகள் வளைந்து நெளிந்து ஓடி, மறைந்திருக்கும் மூலைகளைக் கண்டுபிடித்தனர்: வாத்துக் குஞ்சுகள் மிதக்கும் ஒரு சிறிய குளம், ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் ஒரு செதுக்கப்பட்ட மர நரி சிற்பம், மற்றும் அவர்களுக்காகவே செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு வில்லோ மரத்தின் [அலரி மரம் or காற்றாடி வகை மரம் / willow tree] கீழ் மறைந்திருக்கும் ஒரு ஊஞ்சல் என பலவற்றை மூலை முடுக்குகளில் கண்டு பிடித்தனர்.
எப்போதும் ஆர்வமுள்ள நிலன், ஒரு மலர் படுக்கையின் அருகே ஏதோ மின்னுவதைக் கவனித்தான். மண்டியிட்டு [குனிந்து] அவன் பார்த்த பொழுது, வண்ணமயமான கூழாங்கற்களால் [colorful pebbles] அமைக்கப்பட்ட சிறிய ரகசிய பாதை ஒன்றைக் கண்டான். "புதையல் வேட்டை!" என்று அவன் கூச்சலிட்டான். தாத்தா சிரித்துக்கொண்டே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய கூடையைக் கொடுத்தார். அவர்கள் கூழாங்கற்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்பொழுது அங்கே, அந்த ரகசிய பாதையில், ஒவ்வொரு முறையும் ஒரு பட்டாம்பூச்சி கலைந்து பறந்து செல்லும்போதும் அல்லது ஒரு பறவை கலைந்து குரல் கொடுக்கும் போதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் பசுமையான புல்வெளியில் அமர்ந்தனர். தாத்தா ஒரு சாப்பாட்டு கூடையை திறந்தார். அதில் சாண்ட்விச் [sandwich], பழங்கள், பிஸ்கட்டுகள் [Biscuits] என பல சிற்றுண்டிகள் இருந்தன. தாத்தா சிரித்தபடியே, “இது என் சிறிய சாகச வீரர்களுக்கான காலை விருந்து,” என்றார்.
நிலன் ஒரு ஸ்ட்ராபெர்ரி [strawberry] எடுத்து, அதன் இனிப்பை ருசித்தான். திரேன் "புதையல் வேட்டையின்" [“Treasure Hunt”] வெற்றியை பெருமையுடன் எல்லோருக்கும் விவரிக்க, குட்டி ஆரின் தாத்தாவின் மடியில் கைத்தட்டி கைத்தட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு அதிசயம் [ஆச்சரியம்] காத்திருந்தது. தாத்தா குழந்தைகளை ஒரு மறைக்கப்பட்ட மூலையில், ஒரு சிறிய மர மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு திரைக்குப் பின்னால் இருந்து, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி தொடங்கியது - பேசும் விலங்குகள் மற்றும் மாயாஜால சாகசங்கள் பல அங்கு நிறைந்து இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அவற்றின் பெயர்களைச் சேர்த்து கவனமாக விபரமாக கொடுத்தது. ஒரு பொம்மை டிராகன் [a puppet dragon], அங்கே நிலனை வணங்கிய பொழுது, நிலன் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டான். கூச்ச சுபாவமுள்ள குட்டி ஆரின் கூட தனது தாத்தாவின் கைகளிலிருந்து சிரித்தான்.
நேரம் செல்லச் செல்ல, கதிரவன் மேலே மேலே ஏறினான். குழந்தைகள் கதிரவனின் வெப்பத்தை, ஒரு வெதுவெதுப்பான அரவணைப்பை, உணர்ந்து, அதில் மகிழ்ச்சியிலும் அன்பிலும் மூழ்கினர் — உண்மையில் சூரிய ஒளியிலிருந்து மட்டுமல்ல, கண்டுபிடிப்பின் சிலிர்ப்பாலும், குடும்பத்தின் ஆறுதலாலும், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் காலையில் அனுபவித்த மாயாஜாலத்தாலும் மூழ்கி இருந்தனர். தாத்தா, சிரித்துக் கொண்டே, இவை தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம் என எண்ணினார்.
சாகச தோப்பை விட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது, குழந்தைகள் சோர்வாக இருந்தனர், ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்களின் மனம் அரண்மனைகள், ரகசிய பாதைகள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. "நன்றி தாத்தா," நிலன் மெதுவாக தனது இருக்கையில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் கூறினான். “இது என் வாழ்நாள் சிறந்த அதிசயம்." தாத்தா என்றான், சோம்பல் முறித்தபடி.
தாத்தா மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார். "சாகசம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, குழந்தைகளே. அது தொடரவேண்டும் என்றால், அடுத்த வாரம் தொடங்கும், உங்கள் கோடை விடுமுறை வரை காத்திருங்கள்." என்றார்.
இரகசிய தோட்டத்தையும் சிரிப்பின் எதிரொலிகளையும் ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு, அவர்களின் அற்புதமான பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராக கார் வீடு நோக்கி மெதுவாகச் சென்றது.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பாகம்: 02 தொடரும்
துளி/DROP: 1978 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1
https://www.facebook.com/groups/978753388866632/posts/33171634115818475/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.