Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்ஜிஆர் 100

Featured Replies

  • தொடங்கியவர்
 

எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!

 
 
mgr1
mgr
mgr11
mgr1

M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’

சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.

ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.

எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • Replies 101
  • Views 46.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 52 - புரட்சித் தலைவர் வாழ்க!

 
 
 
 
 
 
mgr11
mgr
mgr111
mgr11

M.G.R. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 53 - உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை!

 
 
 
mgr1
mgr11
mgr
mgr1
mgr11

M.G.R. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.

1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’

இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.

‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவ னின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த் தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.

அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன் னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’

அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!

- தொடரும்...

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!

 

mgr111
mgr1
mgr
mgr11
mgr111
mgr1

M.G.R. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!

 

mmgr1
mmgr
mmgr11
mmgr111
mmgr1
mmgr

M.G.R. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

 

mgr11
mgr1
mgr
mgr11
mgr1

M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.

‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.

ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.

‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’

பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்தி ரோதயம்’, ‘குடி யிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங் கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.

சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.

‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.

‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.

அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.

சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!

 

mgr1
mgr11
mgr
mgr1
mgr11

M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 58 - நடனக் கலைஞர்!

 

mgr11
mgr
mgr1
mgr11
mgr

M.G.R. நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.

‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.

இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.

ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.

திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.

திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.

பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.

இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.

நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.

‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.

இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.

அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...

‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 59 - உரிமைக்குரல்!

 

mgr1
mgr11
mgr
mgr1
mgr11

M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.

எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.

அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.

வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.

‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.

‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.

அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.

காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!

பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.

எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!

 

mgr11
mgr1
mgr111
mgr
mgr11
mgr1

M.G.R. திரைப்படத்துறையிலும் அரசியல்துறையிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய நாடகக் கலையின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர். நாடகங்களை ஊக்குவித்தவர். நாடக உலகில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வந்தவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு உண்டு.

நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் அவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர். படிக் கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற் பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட் டது. அவர்தான் பின்னர் 1951-ல் ‘ராஜாம் பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ராமசாமி சுப்பிரமணியம் மனோகர் என்ற ஆர்.எஸ்.மனோகர்.

எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.

படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.

அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.

இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.

அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.

எம்.ஜி.ஆருடன் மனோகர் பல படங் களில் சண்டைக் காட்சிகளில் நடித் துள்ளார். என்றா லும், ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தைக் காட்டும் இடை வேளைக்கு முந்தைய ரசமான காட்சி ரசிகர்களைத் துள்ள வைக் கும்.

கதைப்படி, அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒருபகுதி ஹாங்காங் கில் உள்ள ஒருவரின் வீட்டில் இருக்கும். டைம் பீஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாங்கிக் கொள்ள எம்.ஜி.ஆர். அங்கு செல்வார். வில்லன் அசோகனின் கையாளாக வரும் மனோகரும் அந்தக் குறிப்பை அடைவதற் காக நாய் வியாபாரி போல, பெரிய கன்றுக் குட்டி சைஸில் இருக்கும் இரண்டு முரட்டு நாய்களுடன் அங்கு வருவார்.

மனோகர் வந்திருப்பதன் நோக்கத்தை நொடியில் எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டு விடுவார். புருவங்களை உயர்த்தி, உதடுகளை லேசாக விரித்து, மூச்சை உள் ளிழுத்து புன்முறுவல் பூக்கும்போதே, தாக்குதலை சமாளிக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்ந்து தியேட்டர் அமர்க்களப்படும். தொடர்ந்து மனோகருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் நடக்கும். எம்.ஜி.ஆர். நடந்து கொண்டே அறையின் மூலைக்கு சென்று கண்ணாடி ஜன்னலின் வழியே கீழே நோட்டம் விட்டுத் திரும்புவார்.

ஒரு கட்டத்தில் கோபமடையும் மனோகர், வீட்டின் சொந்தக்காரரை பார்த்து விரலை சொடுக்கியபடி, ‘‘சார், அப்படீங்கறதுக்குள்ளே, அவர் கையில் உள்ள டைம் பீஸை நாய் கொண்டுவந்துடும். பாக்கறீங்களா?’’ என்று சவால் விடுவார்.

இதை எதிர்பார்த்தவராய், மின்ன லாய் பாய்ந்து சென்று ஏற்கெனவே நோட்டமிட்டு வைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே குதித்து எம்.ஜி.ஆர். அங்கிருந்து தப்புவார். அதற்கு முன் அவர் சொல்லும் வசனம் குத்துமதிப் பாகத்தான் காதில் விழும். அந்த அளவுக்கு அணை உடைத்த பெரு வெள்ளமாய் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலும் ஆரவாரமும் தியேட்டரை நிரப்பும். மனோகரைப் பார்த்து எம்.ஜி.ஆர். சொல்லும் அந்த வசனம்...

‘‘நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும், என்னோட திறமையை நீ பாரு!’’

- தொடரும்...

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 61 - முப்பிறவி எடுத்தவர்!

 

mgr
mgr11
mgr111
mgr1
mgr
mgr11

M.G.R. முப்பிறவி எடுத்தவர் என்று அவரது ரசிகர்கள் புகழ்வது வழக்கம். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிழைத்தது இரண்டாவது பிறவி என்றும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியது மூன்றாவது பிறவி என்றும் கூறுவார்கள். அப்படி இரண்டாவது பிறவி எடுப்பதற்கு முன் அவரது உயிருக்கு ஆபத்து வந்த நாள் 1967 ஜனவரி 12. அன்றுதான் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார்.

நாடகத்துறையிலும் வயதிலும் எம்.ஜி.ஆரை விட மூத்தவர் எம்.ஆர்.ராதா. அவரை எம்.ஜி.ஆர். எப்போதும் அண்ணன் என்றுதான் மரியாதையுடன் அழைப்பார். எம்.ஜி.ஆர். மீது எம்.ஆர்.ராதாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். 1966-ம் ஆண்டில் எம்.ஆர்.ராதா அளித்த பேட்டியில், ‘‘படப்பிடிப்பு நடக்கும்போது மற்றவர்களையும் ‘ஜோர்’ படுத்தி வேலை வாங்குகிறவன் நான். இதே பழக்கம் எம்.ஜி.ஆரிடமும் இருந்ததைப் பார்த் தேன். இந்த ஒரு காரியத்திலேயே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் சண்டைக் காட்சிகள் படமானபோது அவரது திறமை மெச்சத்தக்கதாயிருந்தது. எம்.ஜி.ஆர். தன்னுடைய நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கிறார். அமெரிக்க, இந்தி நடிகர்களைப் பார்த்து காப்பி செய்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. ஆகையினாலே எம்.ஜி.ஆர். ஒரு ஒரிஜினல் நடிகர்’’ என்று புகழ்ந்துள்ளார்.

அண்ணன், தம்பியாக இருந்தவர் களிடையே அரசியல் புகுந்தது. அரசியல் மாறுபாடு இருந்தாலும் எம்.ஜி.ஆர். யாரையும் விரோதியாக கருதியதில்லை. 1967-ம் ஆண்டு தேர்தல் சமயம். ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்,‘‘தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதற்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா, ‘‘எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது. ஒருமாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்று பேசினார்.

அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரையும் காங்கிரஸையும் தந்தை பெரியார் ஆதரித்தார். ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், ‘‘பச்சைத் தமிழர் ஆட்சியைக் கவிழ்க்க அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ராஜாஜி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள்’’ என்று பெரியார் பேசியதாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் பதிவு செய்துள்ளார். கூட்டத்தில் எம்.ஆர்.ராதா வின் பேச்சிலும் எம்.ஜி.ஆர். மீதான கோபம் வெளிப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த நிலையில், ஜனவரி 12-ம் தேதி மாலை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்தது. பிரசாரத்துக்குப் புறப்பட வேண்டிய நிலையிலும், வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். வரவேற் றார். வாசுவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பின்னர், எம்.ஆர்.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார். இருவரும் பிழைத்தது தெரிந்த கதை.

‘எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு அரசியல் கோபம் இருந்தது’ என்பது ஆர்.எம்.வீரப்பனின் உறுதியான கருத்து. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உள்ளே சிகிச்சைக்குச் செல்லும்போது, ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் என்பவரிடம் எம்.ஆர்.ராதா தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையில் ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் சாட்சியம் அளித்தார். MSZ 1843 என்ற காரில் ரத்தகாயத்துடன் வந்த எம்.ஆர்.ராதாவை சப் இன்ஸ்பெக்டர் துரை என்பவரின் உத்தரவுப்படி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு சென்றதாகவும் ஆஸ்பத் திரிக்கு உள்ளே செல்லும்போது, எம்.ஆர்.ராதா தன்னிடம் கடிதத்தை கொடுத்ததாகவும் லட்சுமணன் கூறினார். 4 பக்க கடிதத்தை அவர் நீதிமன்றத்தில் படித்தார். எம்.ஆர்.ராதா கைப்பட எழுதியிருந்த அந்த நீண்ட கடிதத்தின் ஒரு சில பகுதிகள் இவை:

‘ஜனவரி 8-ம் தேதி தந்தை பெரியார் தலைமையில் கூட்டம் நடந்து கொண் டிருந்தது. நம் தோழர்கள் உயிர்தானம் செய்ய வேண்டும் என்று நான் உரை யாற்றினேன். மகாநாடு முடிந்து நான் போகும்போது, ‘‘உயிர்தானம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாரே எம்.ஆர்.ராதா அவர்கள், இவர் முதலில் செய்தால் பிறகு நாம் செய்வோம்’’ என்று கிண்டலாகவும் சிரித்துக் கொண்டும் சிலர் பேசினார்கள். உயிர்தானம் செய்வதற்கு ஒரு இயக்கம் இந்த எலெக் ஷனுக்குள் நம் நாட்டில் தேவை. அதற்கு நான் தலைமை தாங்கத் தயார். நல்ல ஆட்சியை, நல்லவர்களைக் கவிழ்ப்பதற்குரிய சதிகாரர்களின் உயிரை ஒன்றோ, இரண்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உயிர்தானம் செய்யும் இயக்கத்தின் கொள்கை. நான் செய்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய வேண்டும். செய்வீர்களா?’

இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். வழக்கு நடந்து எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா தனது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கழுத்தில் கட்டுப்போட்டபடி இருக்கும் எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுத்து தேர்தல் பிரச்சார சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம்.வீரப்பன் யோசனை தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் படம் மட்டுமே இடம் பெற்ற சுவரொட்டிகள் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தின. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது.

‘தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…

‘தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிற்கும்...’

- தொடரும்...

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!

 

mgr11
mgr
mgr1
mgr11
mgr

M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...

 

mgr11
mgr1
mgr
mgr11
mgr1

M.G.R. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது TMX 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்

முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 64: மக்களின் அடிமை நான்!

 

mgr11
mgr1
mgr
mgr11
mgr1

M.G.R. எப்போதும் மக்களோடு மக்களாகவே இருந்தார். தமிழகத்தின் முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.

காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராள மானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப் பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

‘படகோட்டி’ படத்தில் ஒரு காட்சி. இரு மீனவ குப்பங்களுக்கிடையே பகை நிலவும். ஒரு குப்பத்தின் தலைவரான எம்.ஜி.ஆரும் எதிரி குப்பத்தைச் சேர்ந்த தலைவரின் மகளான நடிகை சரோஜா தேவியும் காதலிப்பார்கள். இதற்கு எம்.ஜி.ஆரின் குப்பத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் விருப்பப்படி தனது காதலை தியாகம் செய்ய எம்.ஜி.ஆர். முடிவு செய்வார்.

அதனால் வருத்தப்படும் சரோஜா தேவி, ‘‘எனது காதல் கருக வேண்டியதுதானா?’’ என்று கேட் பார். அதற்கு எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்…

‘‘நான் தனிமனிதனல்ல. மக்களுக்கு கட்டுப் பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.’’

அப்படி, மக்களின் அடிமையாக தன்னைக் கருதி சேவை செய்ததால்தான் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

 

எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’

http://tamil.thehindu.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 65: ஏழைப் பங்காளர்!

 

mgr11
mgr1
mgr
mgr11
mgr1

M.G.R. ஏழைப் பங்காளராகவும் எளியோரின் துயர் துடைப்பவராகவும் படங்களில் நடிப்பார். அதற்குக் காரணம், அடிப்படையிலேயே அவர் ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால், தனது குணநலனுக்கு ஏற்பவே, தான் நடிக்கும் பாத்திரங்களை தேர்வு செய்தார். அதோடு, சாதாரண மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக இருக்கும்.

எந்த விவசாயியும் உயிரே போனாலும் தன் நிலத்தைவிட்டுக் கொடுக்க மாட்டான். வெள்ளிவிழா படமான ‘உரிமைக்குரல்’ படத்தில் நிலத்துக்காக போராடி உரிமைக்குரல் கொடுக்கும் விவசாயியாக எம்.ஜி.ஆர். நடித்திருப் பார். கதைப்படி, கடனுக்காக நம்பியார் குடும்பத் திடம் எம்.ஜி.ஆரின் நிலம் அடகு வைக்கப்பட்டிருக் கும். அடகு வைக்கப்பட்ட நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க நம்பியார் முயற்சிப்பார். நிலம் ஏலத்துக்கு வரும். நகைகளை அடகு வைத்து பணத்தை எம்.ஜி.ஆர். கொண்டுவருவார்.

ஏலம் முடிவதற்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தனது கோபத்தைக் காட்டும் வகையிலும் ரேக்ளா வண்டியை வேகமாக ஓட்டி வந்து, வண்டியில் அமர்ந்தபடியே பணத்தை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது எம்.ஜி.ஆர். வீசும் ஸ்டைலே தனிதான்!

ஏலம் முடிந்துவிட்டதாகச் சொல்லி தனக்குத் தான் அந்த நிலம் சொந்தம் என்று நம்பியார் உரிமை கொண்டாடுவார். நிலத்தில் உழச் செல்லும் எம்.ஜி.ஆரையும் தன் அடியாட்களுடன் வந்து தடுப்பார். கிளைமாக்ஸ் சண்டையில் கலப்பையை சுழற்றியபடியே எம்.ஜி.ஆர். சண்டைபோடும் அந்த வேகத்தையும் லாவகத்தையும் அவரால்தான் காட்ட முடியும்.

அந்த சண்டைக்கு முன்பாக தனது நிலத்துக் காக உணர்ச்சிபூர்வமாக எம்.ஜி.ஆர். பேசுவார். படத்தில் நம்பியாரின் பெயர் துரைசாமி. வசனத்தைப் பேசுவதற்கு முன் நம்பியாரை கோபத்துடன் ‘டேய் துரைசாமி’ என்று அழைத்து ஆரம்பிப்பார். தனி வாழ்க்கையில் மட்டுமல்ல; பொதுவாக படத்திலும்கூட எம்.ஜி.ஆர். யாரையும் ‘வாடா, போடா’ என்று பேச மாட்டார். ஆனால், இந்தக் காட்சியில் நம்பியாரை அவரே ‘டேய்’ போட்டு பேசுகிறார் என்றால், தாயாக மதிக்கும் தனது நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவன் மீதான விவசாயியின் நியாயமான கோபம் அதில் தெரியும்.

‘உரிமைக்குரல்’ படத்தில் ரசிகர்களின் உற்சாக அலப்பறைகளுக்கிடையே, மானமுள்ள விவசாயியின் குரலாக ஒலிக்கும் எம்.ஜி.ஆரின் குரல் அப்படியே இங்கே….

‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல், இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், 1974-ம் ஆண்டு வெளியான படம் ‘உரிமைக் குரல்’. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். மீது தாக்குதல் முயற்சிகள் நடந்தன. மேலே உள்ள எம்.ஜி.ஆர். பேசும் வசனம், அதற்கு மறைமுகமாக அவர் பதில் சொல்வது போலவும் இருக்கும். அதோடு, இன்றைய சூழலுக்கும் அந்த வசனம் பொருந்தும். மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டம் ஆகியவற்றால் நிலம் பறிபோவதைக் கண்டு தர்மாவேசம் அடைந்த விவசாயி பேசுவதுபோலவே இருக்கும்.

அதுதான் எம்.ஜி.ஆர். படங்களுக்கு... இல்லை, இல்லை பாடங்களுக்கு உள்ள சிறப்பு.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்

 

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சுமார் ரூ.325 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த, புதிதாக 3.31 லட்சம் பம்ப் செட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கச் செய்தார். மேலும் பயிர் பாது காப்பு இன்சூரன்ஸ் முறையை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.

10-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எம்.ஜி.ஆர் தொடரின் 61-ம் பாகத்தில், 1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் தந்தை பெரியார், எம்.ஆர்.ராதா ஆகியோர் பேசியதாக ‘ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்’ என்ற நூலில் ஆர்.எம்.வீரப்பன் கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தோம்.

அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். குறித்து அவ்வாறு எதுவும் பேசப்படவில்லை என்றும் இதுபற்றி 2006-ம் ஆண்டு ‘விடுதலை’ நாளிதழில் மறுப்பு வெளியிடப்பட்டதாகவும் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் அப்போதே தன்னை தொடர்பு கொண்டு, நூலின் அடுத்த பதிப்பில் திருத்தம் வெளியிடுவதாக கூறினார் என்றும் கலி.பூங்குன்றன் நமக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 66: கேட்காதவர்களுக்கும் உதவியவர்!

 

mgr
mgr11
mgr1
mgr
mgr11

M.G.R. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 67: மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்!

 

mgr1
mgr111
mgr11
mgr
mgr1
mgr111

M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.

1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!

இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

- தொடரும்...

படங்கள் உதவி: எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்

 

மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

http://tamil.thehindu.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 68 - சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்!

 

 
mgr1

M.G.R. தனது படங்களின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றார். படங்களின் கதை, வசனம், பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் பெயரே மக்களுக்கு நேர்மறையான, நல்ல செய்திகளை சொல்வதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது ஒரு வியாபாரமும் கூட. நேரடியாகவும் மறைமுகமா கவும் அந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் இருக்கின்றனர். அப்படி ஒரு தொழிலாக செய்யும்போது அதை லாப நோக்கோடுதான் செய்யமுடியும். லாபம் வந்தால்தான் அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் பிழைக்க முடியும். அதற்காக படங்களில் மசாலா விஷயங் கள் சேர்ப்பது தவிர்க்க முடியாதது. பொழுதுபோக்கும், வணிக வெற்றிக் கான லாப நோக்கமும் இருந்தாலும் கூட, அதிலும் ஒரு தர்மத்தை கடைபிடித்து சினிமாவின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். பதிய வைத்தார்.

சினிமா திரையரங்கு சென்று படம் பார்க் காதவர்களுக்கு கூட, சுவரொட்டிகளும் படத்தின் பெயரும் கண்களில்படும். எனவே, படத்தின் பெயரே நல்ல கருத்துக் களையும் உழைப்பின் மேன்மையையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதன் விளைவுதான் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலை காக்கும்', 'தொழிலாளி', 'விவசாயி' , 'நீதிக்குத் தலைவணங்கு', 'உழைக்கும் கரங்கள்'… என்று நீளும் அவரது படங்களின் பெயர்கள்.

mgr2_2863025a.jpg

எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.

அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.

லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.

''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழு வினர் வியந்தனர்.

mgr3_2863023a.jpg

'நல்ல நேரம்' படத்தில் உழைப்பின் மேன் மையை வலியுறுத்தும் வகையில் கவிஞர் புலமைப் பித்தன் எழுதிய ''ஓடி ஓடி உழைக் கணும்…' என்ற அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் உண்டு. எம்.ஜி.ஆரின் அழகும் இளமையும் கூடிய வழக்கமான சுறுசுறுப்பு, காட்சிக்கு கூடுதல் பிளஸ். இந்தப் பாடலில் கவனிக்கத் தவறக் கூடாத ஒரு விஷயம். மக்களுக்கு வித்தை காட்டிக் கொண்டே பாடும் இந்தப் பாடலின்போது, ஒரு இடத்தில் கைகளை தரையில் ஊன்றி எம்.ஜி.ஆர். மூன்று முறை 'பல்டி' அடிப்பார்.அப்போது, அவ ரது உள்ளங்கைகள் தரையில் பதியாது. விரல்களை மட்டுமே ஊன்றிக் கொள்வார். இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல் எடை முழுவதையும் விரல்களில் தாங்குகிறார் என்றால் அவரது விரல் களுக்கு உள்ள வலிமை புரியும்.

படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்தப் பாடலில் அமைந்த வரிகள்...

'நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்'

தொடரும்...

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 69 - அரசியல் வேறு, நிர்வாகம் வேறு

 

 
 
 
 
mgr%203
mgr

M.G.R. யாரிடமும் தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. எதிர்க்கட்சியினரையும் அரவணைத்தே சென்றவர். எதிர்க் கட்சித் தலைவரோடு நட்போடு இருந்ததற்காக அரசு அதிகாரி களை அவர் புறக்கணித்ததோ, பழிவாங்கியதோ இல்லை. தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் கூறும் நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராக இருந் தவர் வேங்கட சுப்பிரமணியம். தமிழக அரசின் கல்வித்துறையிலும் பணியாற்றியவர். சிறந்த கல்விமான். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை மிக்கவர். எம்.ஜி.ஆர். முதல்வர் ஆவதற்கு முன்பே அவரோடு அறிமுகம் உண்டு. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதேநேரம், திமுக தலை வர் கருணாநிதியின் தமிழுக்கும் ரசிகர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழக அரசின் கல்வித்துறையில் இணை இயக்குநராக வேங்கட சுப்பிர மணியம் பணியாற்றி வந்தார். அந்த சம யத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் விழா வில் வேங்கட சுப்பிரமணியம் கலந்து கொண்டதோடு, கருணாநிதியின் வீட்டுக் கும் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி கண், காது, மூக்கு வைத்து எம்.ஜி.ஆரிடம் சிலர் கூறினர்.

அப்போது கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இதுபற்றி தெரிவித்து, வேங்கட சுப்பிரமணியத்தை தன்னை வந்து சந்திக்கச் சொல்லுமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரை அவரது அலுவலகத்தில் வேங்கட சுப்பிரமணியம் சந்தித்தார். தான் கேள்விப்பட்ட விவரங் களை அவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதற்கு பதிலளித்த வேங்கட சுப்பிர மணியம், ‘‘திமுக தலைவரை அரசியல் வாதி என்ற பார்வையில் நான் சந்திக்க வில்லை. அவரது இலக்கிய நயம் மிக்க தமிழுக்கு நான் ரசிகன். அந்த வகையில் அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போதும், எனது அரசுப் பணிகள் பாதிக்காத வகையில் நேரம் ஒதுக்கியே அவரை சந்தித்தேன். இது தவறு என்று நீங்கள் கருதினால், தாங்கள் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

விஷயத்தை மூடிமறைக்காமல், மழுப்பாமல், தனது மனசாட்சிப்படி வேங்கட சுப்பிரமணியம் பேசியது எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. என்றாலும் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், ‘‘விளக்கத் துக்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என்றார். வேங்கட சுப்பிரமணியமும் தனது மனதில் இருந்ததை சொல்லிவிட்ட திருப்தியுடன் வெளியே வந்தார். இருந்தாலும் அவரது மனதில் ஒரு நெருடல்.

அதற்கு காரணம் இருந்தது. அந்த சமயத்தில் அவரது பதவி உயர்வு தொடர்பான கோப்பு முதல்வர் எம்.ஜி.ஆரின் பரிசீலனையில் இருந்தது. அந்தக் கோப்பின் போக்கு இனிமேல் எப்படி இருக்குமோ என்று அவருக்கு சந்தேகம். ஆனால், சில நாட்களிலேயே பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வேங்கட சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். நியமித்தார். புதிய பொறுப்பேற்றதும் முதல்வரை சந்தித்து நன்றி சொன்னார் வேங்கட சுப்பிரமணியம்!

அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை எம்.ஜி.ஆர். பழிவாங்கியதில்லை என்பதோடு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வுகளையும் தடுத்தது இல்லை. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்பதை உணர்ந்து எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.ஜி.ஆர்.!

தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க உள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நேரத்தில், அவர் தொடங்கிய கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதும் எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறப்புதான்.

பதவிக்கு வருபவர்கள், எல்லோரை யும் அரவணைத்துச் சென்று அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டும் என்பதை விளக்குவது போல எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ திரைப்படத்தில் ஒரு காட்சி.

படத்தில் தனது அண்ணன் டி.கே.பகவதியின் முதலாளியான எஸ்.வி. ரங்காராவின் தவறுகளை தட்டிக் கேட்டதால் அண்ணனின் கோபத்துக்கு ஆளாகி, வீட்டை விட்டு வெளியேறி சேரிப் பகுதியில் எம்.ஜி.ஆர். தங்கியிருப் பார். அங்குள்ள மக்களின் விருப்பத்துக் கேற்ப, பஞ்சாயத்து தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெறுவார். சேர் மன் பதவிக்கு எம்.ஜி.ஆருக்கும் எஸ்.வி. ரங்காராவுக்கும் போட்டி நடக்கும்.

பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவோடு சேர்ம னாக எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்படு வார். தான் தேர்ந்தெடுக் கப்பட்டதற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்து பேசும்போது, தேர்தலில் தனக்கு எதிராக இருந்தவர்கள் உட்பட எல் லோரது ஆதரவையும் ஒத்துழைப்பை யும் கோருவார். எம்.ஜி.ஆரின் செழுமை யான ஜனநாயகப் பண்பை வெளிப்படுத் தும் அருமையான காட்சி அது.

தேர்தல் நேரத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களும் பரஸ்பர குற்றச் சாட்டுக்களும் எழுவது சகஜம்தான். அவையெல்லாம் தேர்தல் முடியும் வரைதான். ஜனநாயகத்தில் ஒவ் வொருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லோருமே நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தனது படத்துக்கு எம்.ஜி.ஆர். தேர்வு செய்த தலைப்புதான்… ‘நம்நாடு'.

mgr_4_2862784a.jpg

ராமாவரம் தோட்டத்து வீட்டில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.

 

mgr-1_2862783a.jpg

தேர்தலில் அதிமுக வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தொண்டர்கள் மகுடம் சூட்டியுள்ளனர். | படம்: ம.பிரபு

 

முதல்வராக இருந்தபோதும் அரசு காரை எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது இல்லை. தனக்கு சொந்தமான TMX 4777 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார். காருக்கு எரிபொருள் செலவையும் அரசிடம் அவர் கோரியது இல்லை. அந்த கார்தான் நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 70 - தமிழ்ப் புலமை மிக்கவர்!

 
mgr1
mgr
mgr11
mgr1
mgr

M.G.R. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.

சினிமா, அரசியல் என்று இரு துறை களிலும் முதல் இடத்தில் இருந் தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங் கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக் கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.

பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங் களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:

‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்

கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’

பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத் தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர் களுக்கு ஆசிரியர் திருக் குறளை கரும்பலகை யில் எழுதி பாடம் நடத் துவதுபோல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அத னால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக் கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும் பலகையில் எழுதப் பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவ னித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.

நீதியரசர் மு.மு.இஸ்மா யிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறு வடிவமாக விளங்கிய நடுநிலை தவ றாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலை வராகவும் பணியாற்றியவர்.

ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்ப ராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம் பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட் டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேச முடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.

இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.

பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங் களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!

எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.

அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத் துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...

‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;

சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’

mgr111_2866422a.jpg

எம்.ஜி.ஆருடன் நீதியரசர் மு.மு.இஸ்மாயில்.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழறிஞர் களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சையில் தமிழுக்கு என்றே தனியாக தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிதாகவும் எல்லா வசதிகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்!

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 71 - விளம்பரத்தை விரும்பாத உள்ளம்!

 

mgr11
mgr
mgr1
mgr11
mgr

M.G.R. ஜாதி, மத, இன, மொழி, மாநில எல்லைகளை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் உதவுவார். அதேநேரம் தமிழர்களையும் அவர்களது கலாசாரத்தையும் மற்ற மாநிலத்தவர் இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டார். பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யும் உதவியைவிட, தனது எதிர்ப்பையே முன்னிலைப்படுத்துவார்.

ஒருமுறை ஒடிசா மாநிலத்தில் (அப் போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.

அதற்காக, நடிகை வைஜெயந்தி மாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக் காட்சி யாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு வரு வாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர் களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித் தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத் தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.

வட மாநிலங்களில் ஓடிக்கொண்டி ருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப் பாடி வருவார். அருகே கதாநாயகி வைஜெயந்தி மாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய் திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.

படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம். ‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட படத் துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா ஏற் பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறிதுநேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத் தெரிவிப் பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப் பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்துகொள்ள லாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். திரை யரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாண வர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.

‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந் தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பை யும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்பட் டேன். என்னைப் போலவே தமிழ் மக் களும் வேதனை அடைந்துள்ளனர். நாட் டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளை யும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச் செய்யக் கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

அதேநேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும் அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.

நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.! ‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடி யாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன் கொடையாக அளித்தார்.

இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்க லாமே?’ என்று மாணவர்களுக்கு சந் தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.

ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

 

‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!

 

mgr1
mgr11
mgr111
mgr
mgr1
mgr11

M.G.R. திரையுலகில் இருந்த காலத்தில் பிரபலமான நடிகர்களாக இருந்தும், சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததால் அவருடன் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் சிலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென தனி பாணியில் நடித்து மக்கள் கலைஞர் என்று புகழ் பெற்றவர் ஜெய்சங்கர். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். ராஜேந்திர குமார், தர்மேந்திரா நடித்து இந்தியில் வெளியான ‘ஆயி மிலன் கி பேலா’ என்ற படம்தான் தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ ஆனது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. 1966-ம் ஆண்டில் ‘பேசும் படம்’ பத்திரி கையில் விளம்பரமும் வெளியானது. ஜெய்சங்கர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு ‘வெள்ளிக் கிழமை ஹீரோ’ என்றே பெயர். அந்த அளவுக்கு பெரும்பாலும் வெள்ளிக் கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். ஒரே ஆண்டில் 16 படங் களில் கதாநாயகனாக நடித்தவர்.

திரைத்துறையில் மட்டுமின்றி; அர சியல் துறையிலும் எம்.ஜி.ஆர். பிஸி யாக இருந்ததால் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படும். இடையில், 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் வேறு. பல மாதங்கள் அவருக்கு படங்களில் நடிக்க முடியாத நிலை. ‘ஒரு தாய் மக்கள்’ படத் தயாரிப்பும் தாமதமாகி 1971-ம் ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து படம் வெளியானது.

பல படங்களில் நடித்து வந்த ஜெய் சங்கருக்கு எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல, கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அவர் நடித்த மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக முத்துராமன் நடித்தார்.

ஜெய்சங்கர் எந்தக் கட்சியையும் சாராதவர். பிற்காலங்களில் திமுக தலை வர் கருணாநிதி வசனம் எழுதிய சில படங்களில் நடித்தார் என்ற வகையில் அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கு கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின், 1974-ம் ஆண்டில் ஜெய்சங்கர் நடிப்பில், ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படம் வெளியானது. அதில் ஜெய்சங்கர் பேசும் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக அவர் பேசுவது போல இருக்கும்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்ட பின், தேர்தலை தமிழகம் எதிர் நோக்கியிருந்த நேரம். அப்போது வெளி யான ‘பணக்காரப் பெண்’ படத்தில், ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,  ராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா,  ராமச் சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே...’ என்ற டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இடம்பெறும். இந்தப் பாடலை படத்தில் ஜெய்சங்கர் பாடி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், ஜெய்சங்கர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகர் என்ற முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜெய்சங்கர் செய்தார். மற்றபடி, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி பழகியவர் அவர்.

சத்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப் பெண்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர்.தான்! அப்போது, எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகள் பற்றி அவருக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகள் கூறினார்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, அவரைப் பற்றி தனது கருத்தை ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். ‘‘எம்.ஜி.ஆரிடம் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராள குணம். திரையுலகிலும் அரசியலிலும் அவரவர்கள், தாங்கள் சார்ந்த கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிறருக்கு கொடுப்பதை விளம்பரத்துக்காகக் கொடுக்கிறார் என்று குறை கூறலாம். ஆனால், பிறருக்கு உதவும் அவரது உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் ரசிக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியாது’’ என்று ஜெய்சங்கர் தன்னிடம் கூறி யதை நினைவுகூர்கிறார் கே.பி.ராம கிருஷ்ணன்.

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ‘‘எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது கொடுத்திருப்பது நியாயம் தானா?’’ என்று ஜெய்சங்கரிடம் நிருபர் கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள் விரும்பினால் தவிர படம் ஓடாது. எம்.ஜி.ஆர். படங்கள் சில 25 வாரங்கள் தாண்டி ஓடுகின்றன. 35 வருடங்களாக சினிமாவில் நடித் துக் கொண்டிருக்கிறார். பல வருடங்க ளாக கதாநாயகனாக நடித்து வருகி றார். இன்னும் பல படங்களுக்கு கதா நாயகனாக ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஆக, மக்கள் ஏற்றுக் கொண் டார்கள் எனும்போது தேர்வுக் குழுவினர் ஏற்றுக் கொண்டதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ‘பாரத்’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று ஜெய்சங் கர் மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார்.

‘பாரத்’ விருது பெற்றதற்காக பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பில் சென் னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, ஜெய்சங்கரின் இந்தப் பேட்டி யைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘உண்மை எப்படி இருக்கிறது என்பதல்ல; அந்த உண்மையை வெளியில் சொல்ல துணிவு வேண்டும். அதற்காக ஜெய் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு தன்னைப் போலவே பிறருக்கு உதவும் ஜெய்சங்கரைப் பிடிக்கும். உண்மையையும் பிடிக்கும்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.

எம்.ஜி.ஆரோடு ஜெமினிகணேசன் நடித்த ஒரே படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முகராசி’. எம்.ஜி.ஆரின் அண்ணனாக ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 73 - காட்சி அமைப்பாளர்!

 

mgr
mgr11
mgr1
mgr111
mgr
mgr11

M.G.R. படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான். காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயா ரிப்பு. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக் குலைத்தன. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் விளங்கும் அணுசக்தி பற்றிய ரகசிய குறிப்பை வில்லன் கோஷ்டியிடம் இருந்து அதே ஜப்பானிலேயே எம்.ஜி.ஆர். மீட்பதுபோல காட்சி. இதற்காகவே, எம்.ஜி.ஆருக்கு சபாஷ் போடலாம்.

முன்னதாக, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு எம்.ஜி.ஆர். செல்வார். அங்கே ‘துஸித் தானி’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான ஓட்டல். அந்த ஓட்டலில் படக்குழுவினர் தங்கியிருந் தனர். ஓட்டலின் அழகைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அங்கேயே காட்சிகளை படமாக்க முடிவு செய்தார். படம் வெளி யானது 1973-ம் ஆண்டு. அந்தக் காலகட்டத்தில், கிராமங்களை விடுங் கள்; சிறிய நகரங்களில் கூட ஓட்டல் என்றால் குண்டு பல்பின் மங்கிய ஒளியில் கால் உடைந்த ஸ்டூல்களும், ஈக்கள் மொய்க்கும் மேஜையும், நசுங்கிய டம்ளர்களும்தான் நினைவுக்கு வரும். அதைத் தகர்த்தெறிந்து இப்படியெல் லாம்கூட இருக்குமா என்று வியக்க வைத்தது ‘துஸித் தானி’ ஓட்டல்.

எம்.ஜி.ஆரைப் பார்க்க தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா ‘துஸித் தானி’ ஓட்டலுக்கு வருவார். ஓட்டலின் முன் அறை யில் இருந்து வாயிலை பார்க்கும் கேமரா கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப் பது போலிருக் கும். மேட்டா, நேராக தன்னை சந்திப்பது போல காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்திருக் கலாம். ஆனால், ஓட்டலின் அழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி, (போலீஸ் அதிகாரி யாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் பெயர்) ஓட்டலின் முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் நடிகை மேட்டா ஓடி வரும்படி காட்சியை அமைத்திருப்பார். அப்போது ஓட்டலின் வேலைப்பாடுகள் மிக்க விதானத்துடன் கூடிய நீளமான வராண்டாவின் அழகை ரசிக்க முடியும்.

வராண்டாவை கடந்து வெளியே சென்றால் பரந்த இடம். அங்கே நடிகை சந்திரகலாவும் நாகேஷும் இருப்பார்கள். அங்கு மேட்டாவை எம்.ஜி.ஆர். அழைத்து வருவார். இவர் கள் நான்கு பேரும் இருக்கும் இடத்துக்கு பின்னே பச்சையும் நீலமுமாய் நீரில் மின் னும் நீச்சல் குளம். அதன் எதிர்க்கரையில் பீறிட்டு அடிக்கும் நீரூற்றுகள்.

லோ ஆங்கிளில் கேமராவை வைத்து படம்பிடித்திருப்பார்கள். இந் தக் காட்சியில்தான் ஓட்டல் ‘துஸித் தானி’யின் முழு பிரம்மாண்டமும் தெரியும். சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேகூட, 14 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடம்தான் பிரம்மாண்டம். ஒரு படத்தில் கதாநாயகன் சென்னை வருவதாக காண்பிக்கப் பட்டால் அந்த கட்டிடத் தைத்தான் காட்டுவார் கள். அதற்கே தியேட் டரில் சலசலப்பு ஏற்படும். அதைவிட பல அடுக்கு மாடி களைக் கொண்ட, பலமடங்கு பிரம்மாண்ட மான ‘துஸித் தானி’யை திரை யிலே பார்த்த மக்கள் வியப்பில் வாய் பிளந்தனர்.

அந்த அள வுக்கு கட்டிடங் களைக் கூட, மிகத் திறமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்து வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதனால் தான் அவரது படங்களில் ஒவ்வொரு ஃபிரேமையும் இன்றும் ரசிக்க முடிகிறது.

தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும். இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.

‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும். பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று. இதில் விசேஷம் என்னவென்றால், காட்சி யைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்று நிச்சயம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்...’ பாடலில் வரும் வரிகளை, எம்.ஜி.ஆர். படங்களை பார்க்கும்போது அனு பவத்தில் நாம் உணர முடியும். அந்த வரிகள்...

‘உள்ள மட்டும் அள்ளிக்கொள்ளும்

மனம் வேண்டும்,

அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.

 

ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘அடிமைப் பெண்’. இதற்கான விழாவில் கலந்து கொள்ள மும்பை சென்ற எம்.ஜி.ஆரிடம், ‘‘I am your fan’’ என்று கூறி பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூர் வாழ்த்தினார். ‘அடிமைப் பெண்’ கிளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக் காட்சியை தன்னால் கூட அப்படி படமாக்க முடியாது என்று ராஜ் கபூர் பாராட்டினார்.

http://tamil.thehindu.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!

 

 

mgr11
mgr1
mgr111
mgr
mgr11
mgr1

M.G.R.இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்களான குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்குச் சொல்வதோடு, தவறு செய்தாலும் அன்பால் அவர்களை திருத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது மானசீக குரு வாகக் கருதியவர்களின் திரை யுலக மேதை வி.சாந்தாராம் முக்கியமானவர். எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது, தமிழக அரசின் சார் பில் சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் திரைப்பட விழா கொண் டாடப்பட்டது. குழந்தைகள் படச் சங்கத் தின் தலைவராக அப்போது இருந்த சாந்தாராமும் விழாவில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கும்போது, ‘‘எனது மானசீக ஆசான் சாந்தாராம் அவர்களே!’’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான படங்களின் தேவையைப் பற்றி எம்.ஜி.ஆர். அருமை யாக உரையாற்றினார். குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்கள் தோன்றக் கூடாது என்றும் அதை விளக்க, தான் படித்த தமிழாக்கம் செய்யப்பட்ட வங்கமொழி சிறுகதையையும் கூறினார்.

கதையின் களம் வங்கத்திலே இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். இரண்டு குழந்தைகள். ஒன்று இந்து, மற்றொன்று முஸ்லிம். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தினமும் விதவிதமாய் விளையாடி மகிழ்வார்கள். ஒருநாள் இன்று என்ன விளையாடுவது? என்று அவர்களுக்குள் விவாதம்.

‘‘அப்பா அம்மா விளையாட்டு’’ என்று யோசனை கூறியது ஒரு குழந்தை.

‘‘எத்தனை முறைதான் அதையே விளையாடுவது? அலுத்துவிட்டது’’ என்றது மற்றொரு குழந்தை.

‘‘சமையல் விளையாட்டு’’

‘‘ஊகூம், வேண்டாம்’’

பல விளையாட்டுக்களைப் பற்றி விவாதித்த பின்னர் இறுதியில் ஒரு குழந்தை கேட்டது, ‘‘கத்தி எடுத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு விளையாடலாமா?’’.

அந்தக் குழந்தையின் கேள்வியோடு கதை முடிகிறது.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர். குறிப் பிட்டு, குழந்தைகளுக்கு முன்மாதிரி களான நாம் எப்படி ஒற்றுமையாகவும் அன்போடும் இருக்க வேண்டும் என் பதையும் நல்ல சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ‘‘குழந்தை உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும். அதற்கு சாந்தாராம் பொருத்தமானவர்’’ என்று பாராட்டினார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி. மதுரையில் திமுக பிரமுகர் ஒருவருடைய மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம், சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத் தில் இருந்த எம்.ஜி.ஆர்., விழாவுக்கு வருவாரா என்று சந்தேகம். இரவு ஏழு மணி ஆகியும் எம்.ஜி.ஆர். வரவில்லை. நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங் கியது. கூட்டத்தினருக்கு ஏமாற்றம்.

சற்று நேரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரைவாக வந்த எம்.ஜி.ஆரின் கார், விழா நடந்த பள்ளி மைதான வளாகத்துக்குள் நுழைந்தது. இரவில் வந்த சூரியனைப் போல் வெளிச்ச மனிதராய் காரில் வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட கூட்டம் ஆர்ப்பரித்தது. பெரியவர் களே உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றபோது, சிறுவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா? திடீரென இரண்டு சிறுவர்கள் எம்.ஜி.ஆர். வந்த காரின் ஜன்னலில் கையை விட்டு தொங்கியபடி வந்தனர். சிறிது தூரம் சென்று மேடை அருகே கார் நின்றது.

காரில் இருந்து கோபத்துடன் வேக மாக இறங்கிய எம்.ஜி.ஆரைப் பார்த்து, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்கள் ஓட முயன்றனர். அந்த சிறுவர்களின் கைகளை சடாரென பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவர்களை ஓங்கி அறையப்போவதுபோல கையை ஓங்கினார். ஆனால், அடிக்கவில்லை. அந்த சிறுவர்களைப் பார்த்து, ‘‘ஏன் இப்படி காரில் தொங்கிக் கொண்டு வந்தீர்கள்? கொஞ்சம் தவறி யிருந்தால் விபரீதமாகி யிருக்குமே? உங்கள் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? இனிமேல் இப்படி செய்வீர்களா?’’ என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்த போதே பயத்தில் சிறுவர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர்.

அதற்குள் கூட்டம் எம்.ஜி.ஆரை சுற்றி நெருக்கியது. அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று முன்வரிசையில் அமரவைத்தனர். நாட்டிய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி தன் தாயின் பிடியில் இருந்து விடுபட்டு எம்.ஜி.ஆரை நோக்கி வர முயற்சித்தாள். அருகில் இருந்தவர்கள் அந்த சிறுமியை தடுத்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த சிறுமியை அருகில் அழைத்தார். வெட்கத்துடன் வந்த சிறுமியை தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு நாட்டியத்தை பார்த்தார். அந்த சிறுமிக்கு மகிழ்ச்சி ஒருபுறம், எல்லோ ரும் தன்னையே பார்க்கிறார்களே என்ற வெட்கம் மறுபுறம். புகைப் படங்கள் எடுக்கப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்தபடி வெட்கத்துடன் நகம் கடித்தபடி இருந்தாள் சிறுமி.

நிகழ்ச்சி முடிந்தபின், நாட்டியம் ஆடிய திமுக பிரமுகரின் மகளை எம்.ஜி.ஆர். பாராட்டி பரிசளித்தார். அவர் பேசும்போது, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்களின் செயலைப் பற்றிக் கூறிவிட்டு, ‘‘குழந்தைகள் அக்கறையாக கவனமுடன் வளர்க்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். கார் வந்து கொண்டிருக்கும்போதே கையை விடச் சொல்லி சத்தம்போட்டால் பதற்றத்தில் சிறுவர்கள் கையை விட்டு சக்கரத்தில் மாட்டி விபரீதம் ஆகியிருக்கும் என்பதால்தான் காரில் இருந்து இறங்கிய பின் அவர்களைக் கண்டித்ததாக தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, பயத்துடன் கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே அவர்களின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு புறப்பட்டார். தங்களது தவறுக்கு மன்னிப்பு கிடைத்துவிட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் சிறுவர்கள் முகத்தில் மின்னியது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் இடம்பெற்ற ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்…’ என்ற அருமையான தாலாட்டுப் பாடலில் வரும் வரிகள் இவை...

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே;

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

 

‘தூங்காதே தம்பி தூங்காதே…’, ‘திருடாதே பாப்பா திரு டாதே…’, ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா…’ என்பன போன்ற, குழந்தை களுக்கு அறிவுரை சொல் லும் திரைப்படப் பாடல்கள் எம்.ஜி.ஆர். படங் களில்தான் அதிகம் இடம் பெற்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் 100 | 75 - முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!

 

 
mgr
mgr11
mgr1
mgr
mgr11

M.G.R. படங்களின் பாடல்களில் இருந்து பத்து பாடல்களை பட்டியலிடுமாறு அவரது ரசிகர்களிடம் கூறினால், பெரும்பாலோர் முதலாவதாக குறிப்பிடுவது ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்…’ பாடலாகத்தான் இருக்கும். அந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் திலீப் குமார் நடிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.!

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடித்திருப்பார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்…’ பாடலில் எம்.ஜி.ஆரின் சுறு சுறுப்பு வியக்க வைக்கும். சாட்டையை சுழற்றியபடி ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.

அதிலும் ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும். தரையில் சுழலும் எம்.ஜி.ஆர்., ஒரு கையை ஊன்றி, மறு கையை உயர்த்தி மேலே பார்த்தபடி கொடுக்கும் அந்த போஸ் அவருக்குத்தான் வரும். தெலுங்கில் என்.டி.ராமராவும் இந்தியில் திலீப் குமாரும் நடித்துள்ள இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் எனர்ஜி லெவலே தனி என்பது புரியும்.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்து திலீப் குமாரை நாகிரெட்டி சந்தித்து பேசினார். திலீப் குமாருக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆரைத் தெரியும். சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘இன்ஸானியத்’ என்ற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார். அதில் திலீப் குமார், நடிகை பீனா ராய், நடிகர் ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எஸ்.வாசனை பார்க்க இவர்கள் மூவரும் ஒருமுறை சென்னை வந்தனர். எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பதை வாசனிடம் திலீப் குமார் தெரிவித்தார். அதற்கு வாசன் ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் திலீப் குமார், பீனாராய், ஜெயந்த் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்து கவுரவித்தார்.

தான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து, தான் ரசித்த பல காட்சிகளை திலீப் குமார் குறிப்பிட்டு பாராட்டினார். தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், மும்பை (அப்போது பம்பாய்) போன்று இந்தியாவின் பிற நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைக் கண்டு ‘‘எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போன்று வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இல்லை’’ என்றும் பாராட்டினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் எடுப்பது தொடர்பாக திலீப் குமாரை நாகிரெட்டி மும்பையில் சந்தித் துப் பேசியபோது, படத்தைப் பார்க்க திலீப் குமார் விருப்பப்பட்டார். அதற்கா கவே சென்னை வந்தார். குறிப்பிட்ட நாளில் வாஹினி ஸ்டுடியோவில் உள்ள சிறிய தியேட்டரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் திரையிடப்பட்டது. நாகிரெட்டியின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் சென் றார். திலீப் குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பின்னர், ‘‘படம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், நான் நடிக்க விரும்ப வில்லை’’ என்று திலீப் குமார் கூறிவிட்டார். ‘‘ஏன்?’’ என்று வியப்புடன் கேட்டார் நாகிரெட்டி.

‘‘எம்.ஜி.ஆர். இரண்டு பாத்திரங்களை யும் சிறப்பாக செய்திருக்கிறார். அது போல என்னால் முடியாது’’ என்றார் திலீப் குமார்.

அவரை அப்படியே அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் பெரிய நடிகர். இந்தியில் எவ்வளவோ சாதனை கள், பிரமாதமான படங்கள் பண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் இந்தப் படத்தை இந்தி யில் செய்தால் படம் பெரிய ‘ஹிட்’ ஆகும். ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் உங்கள் பாணியில் பண்ணுங்கள்’’ என்று கூறி உற்சாகப்படுத்தினார். பின்னர், இந்தி யில் திலீப் குமார் நடிக்க ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற அந்தப் படமும் வெற்றிகர மாக ஓடியது. அந்தப் படத்தில் திலீப் குமார் நடித்ததற்கு எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த உற்சாகம்தான் காரணம்.

பின்னர், 1969-ம் ஆண்டு பொங்கல் நாளில் சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று திலீப் குமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு சுவையான சம்பவம்.

சிலை திறப்பு விழாவில் எஸ்.எஸ்.வாச னும் கலந்து கொண்டார். அவர் தீவிர காங்கிரஸ் அபிமானி. அவர் பேசும்போது, ‘‘கலைவாணர் சிலையை திறக்க இப் போதுதான் வேளை வந்துள்ளது’’ என் றார். இறுதியில் பேசிய அண்ணா, ‘‘சிலையை திறக்க இப்போதுதான் வேளை வந்திருப்பதாக வாசன் கூறு கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ள இந்த வேளையைத்தான் அவர் குறிப்பிடு கிறார்’’ என்று கூறி, உடல் நலம் குன்றிய அந்த நிலையிலும் நகைச்சுவை குன்றா மல் பேசினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

 

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.