Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” சூரிச் நகரில்

Featured Replies

‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’
Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20

image_5674b8f62a.jpg

கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச்  நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு:

கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவை நடத்தினீர்கள். இந்த வருடமும் அதே போன்றதொரு விழாவை ஒழுங்கு செய்துள்ளீர்கள். இப்படியான ஒரு விழாவை ஒழுங்கு செய்ய வேண்டும் எனும் நோக்கம் ஏன் வந்தது?

பதில்: சுவிசில் வாழும் இலங்கை மற்றும் சுவிஸ் மக்கள் கலந்து சிறப்பிக்கும் ஒருங்கிணைப்பு நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அந்த நிகழ்வை நடத்தினேன். கடந்த முறை விழாவில், இலங்கை மற்றும் சுவிசில் வாழும் மக்களில் அதிகமானோர் கலந்துகொண்டார்கள். இதுவே இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவொன்று முதன் முதலாக சுவிசில் நடந்தது எனலாம். அதை இம்முறை மீண்டும் நடத்த வேண்டும் என எண்ணுகிறேன்.

கேள்வி: கடந்த வருடம் நடைபெற்ற காலத்தில்தானா இம்முறை விழாவையும் நடத்த தீர்மானித்துள்ளீர்கள்?

பதில்: இம்முறை செப்டெம்பர் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் நடத்தவுள்ளோம்.

கேள்வி: கடந்த முறை நடைபெற்ற விழாவுக்கு எத்தனை பேர் அளவு வருகை தந்தார்கள்?

பதில்: 7,000 பேருக்கு மேல் வந்திருப்பார்கள். ஆனால், சுவிஸ் ஊடகங்கள் 10,000க்கும் மேற்பட்டோர் வந்ததாக  எழுதியிருந்தன.

கேள்வி: இந்த நிகழ்வுக்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர் மட்டும்தானா வந்தார்கள்?

பதில்: 60 சதவீதமானோர் புலம் பெயர்ந்து சுவிசில் வாழும் இலங்கையரும், 40 சதவீதமானோர் சுவிஸ் நாட்டவர்களும் வந்தார்கள் என சொல்ல முடியும். இம்முறை 50க்கு 50 சதவீதம் போல வருவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் எனும் போது, அதிகமாக வருகை தந்தோர் சிங்களவரா? தமிழரா? இஸ்லாமியரா?

பதில்: என்னை பொறுத்தவரை, எந்த இனமாக, எந்த மதமாக இருந்தாலும், இலங்கை வாழ் அனைவரும் இலங்கையர்தான். அவர்கள் தமிழரா? சிங்களவரா? இஸ்லாமியரா? மலேயரா? பறங்கியரா? எனும் வேறுபாடு இல்லை. இலங்கையில் பிறந்து வளர்ந்த அனைவரும் இலங்கையர்தான். அந்த வகையில், பங்குபற்றிய அனைவரையும் இலங்கையர் என்றே பார்க்கிறேன். பொதுவாக அனைவரும் சமமாக கலந்து கொண்டார்கள். சுவிசில் தமிழரது பரம்பல் அதிகம் என்பதால், அதிகமானோர் தமிழராக இருந்தார்கள்.

கேள்வி: எத்தனை வியாபார தளங்கள் இருந்தன?

பதில்: உணவகங்கள் - 28, வர்த்தக தளங்கள் - 24

கேள்வி: இவற்றை எடுத்தவர்கள் சுவிசில் வாழும் இலங்கையர்களா? அல்லது இலங்கையில் இருந்து இதற்காக வந்த இலங்கையரா?

பதில்: இலங்கையிலிருந்து இரு குழுக்கள் மட்டுமே  வந்திருந்தன. அவர்கள் மாணிக்க கற்கள் மற்றும் அலங்கார பொருட்களை கொண்டு வந்து கடைகளில் வைத்திருந்தார்கள். அடுத்தவர்கள் அனைவரும் சுவிசில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையரது கடைகளாகத்தான் இருந்தன. அத்தோடு, இலங்கையின் உல்லாச பிரயாண சபையினரும் வந்திருந்தார்கள். அவர்கள் இங்குள்ள பயண நிறுவனங்களை சந்தித்து உரையாடி, இலங்கைக்கான உல்லாச பயணிகளது வருகையை அதிகப்படுத்த சில பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். அவர்களோடு 15 டுவர் ஒபரேட்டர்கள் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களும் இங்கு உள்ள டுவர் ஒபரேட்டர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்கள்.

கேள்வி: இப்படியான ஒரு விழாவை முதன் முதலில் ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்வது மிக கடினமான ஒன்று. அதற்காக விளம்பரங்கள் செய்ய வேண்டும். அவை உங்களால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: கடந்த முறை விளம்பரங்களை அதிகமாக செய்ய முடியவில்லை. முதல் முறையாக செய்யும் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தன. இம்முறை சுவிசிலுள்ள ஊடகங்கள் முடிந்தளவு விளம்பரம் செய்து தந்து உதவுவதாக சொல்லியுள்ளார்கள். அதற்கு காரணம் சென்ற முறை நடந்த விழாவை பார்த்தவர்கள்,   அந்த விழா குறித்து பின்னர் நல்ல விமர்சனங்களை தந்திருந்தார்கள். எனவே, இம்முறை நிச்சயம் அவர்கள் எமக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: இம்முறை இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவை தனியாக இலங்கையருக்காக மட்டும்  மட்டுப்படுத்தாது, ஆசிய நாடுகளோடும் இணைத்து  விழாவை நடத்த உள்ளதாக அறிகிறேன். உண்மையா?

பதில்: நான் இம்முறை நடத்தும் இலங்கை காலாசார மற்றும் வர்த்தக விழாவுக்கு ஆசியாவின் உணவு வகைகளையும் அறிமுகம் செய்ய நினைத்தேன். இங்கு வாழும் இலங்கையர்கள் அதிகமாக வீடுகளில் இலங்கை உணவு வகைகளைத்தான் தினசரி சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்கள் ஒரு மாறுதலுக்காக ஏனைய நாட்டு உணவு வகைகளையும் ருசி பார்க்க விரும்பலாம். அதே போல ஏனைய நாட்டவர்களுக்கு எம் உணவு வகைகளை ருசி பார்க்க ஒரு சந்தர்ப்பமும் உருவாகும். அதனால் எனது தூதரகம் மூலம், சுவிசில் உள்ள ஆசிய நாட்டு தூதரங்களோடு தொடர்பு கொண்டு, ஏனைய ஆசிய நாட்டு உணவு பந்தல்களில் சமையல் செய்து வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய நினைக்கிறேன். இதன் போது அவர்களால் எமது கலாசார விழுமியங்களை அறியும் வாய்ப்பும் உருவாகும். அத்தோடு, அவர்களது சில கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி மகிழ அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க நினைக்கிறேன்.

கேள்வி: அதாவது பல்லின கலாசார விழாவாக கொண்டு வர முனைகிறீர்கள்?

பதில்: ஆம். ஆனால், பெரும் பகுதியானவை, இலங்கை கலாசார நிகழ்வாகத்தான் இருக்கும். அவர்களுக்கும் கலந்து கொள்ள சிறியதொரு வாய்ப்பு வழங்கப்படும்.

கேள்வி:  இப்படியான ஒரு நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், எப்படி உங்கள் மனதில் உருவானது?

பதில்: என்னைப் பொறுத்த வரை, இது ஒரு பெசன். இலங்கைக்காக எதையாவது செய்ய ஆசைப்படுகிறேன். நான் இங்கு வந்த காலம் தொட்டு இலங்கை மக்களுக்காக எதையாவது தொடர்ந்து செய்து வந்துள்ளேன். நான் இங்கு வந்த 1991களில் இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த காலத்தில், அதாவது இன்று போல இணையத்தளம் வழியாக, தகவல்களை அறிய முடியாதிருந்த  அந்த காலத்தில், இலங்கை பத்திரிகைகளை இறக்குமதி செய்து சுவிசில் விநியோகிக்கத் தொடங்கினேன். அதாவது ஞாயிறு பத்திரிகைகளைத்தான் அக்காலத்தில் கொண்டு வந்து விநியோகித்தேன். இங்கு இலங்கையர்களுக்கான விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு  சல கடைகள் மட்டுமே இருந்தன. அது அரசியல் தஞ்சம் பெற்று வந்தோரால் இலங்கைக்கு போகவோ, தொடர்புகளை ஏற்படுத்தவோ முடியாத காலம். இலங்கையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருந்தது. எனவே, அவர்களுக்கு தேவையான பத்திரிகைகளை கொண்டு வந்து கொடுத்தேன். அதன் பின் கார்கோ சேவை ஒன்றை தொடங்கினேன். அதாவது, சுவிசில் வாழ்வோருக்கு இங்கிருந்து இலங்கைக்கு குறைந்த செலவில் பொருட்களை அனுப்ப வேண்டிய ஒரு தேவை இருப்பதை உணர்ந்தேன். அதனடிப்படையில், மாதாந்தம் கண்டேனர்களில் கப்பல் வழியாக இங்கு உள்ளவர்கள் தரும் பொருட்களை, இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தாருக்கு அனுப்பும் கார்கோ சேவையை தொடங்கினேன். அது இதுவரை நடைபெற்று வருகிறது. இவை வியாபாரமாக இருந்தாலும், சேவை வழங்கும் ஒரு வியாபாரமாகவே அதை செய்தேன். அதுபோலவேதான் இந்த நிகழ்விலும் இலங்கை மக்கள் பயன் பெற வேண்டும் என்பதே என் அவா.

கேள்வி: நீங்கள் சுவிற்சர்லாந்துக்கு வந்த பின்னணியை சொல்வீர்களா?

பதில்: நான் 1980களில் சுவிசுக்கு வந்தேன். பேர்ண் நகரில் உள்ள ஹோட்டல் பெரய்ன் ஒன்று ஆசியர்களை ஹோட்டல் குறித்து கற்பதற்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சுவிசுக்கு வந்து  ஹோட்டல் மெனேஜ்மென்ட் குறித்து கற்றேன். அதை முடித்த காலத்தில் எனக்கு கென்யா நாட்டு தூதரகத்தில் பணிபுரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அங்கு 20 வருடங்கள் பணியாற்றினேன். அந்நேரத்தில்தான் பகுதி நேரமாக இப்படியான சில வியாபார விடயங்களை பொழுது போக்காக செய்யத் தொடங்கினேன்.

கேள்வி: கென்யா தூதரகத்தில் பணியாற்றிய நீங்கள்,  பின்னர் சூரிச் நகரில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் கௌரவ தூதராக (கொண்சுலேட்டாக), ஜெர்மன் மொழி பேசும் பகுதியில் பணியாற்றத் தொடங்குகிறீர்கள். அப்படியான வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பதில்: நாமிருக்கும் பகுதியில் உள்ளோர் இலங்கை தூதரக தேவைகளுக்காக ஜெனிவாவுக்கு போக வேண்டியிருந்தது. அது உண்மையிலேயே இங்குள்ளோருக்கு வெகு தூரமாக இருந்தது. சாதாரணமாக  குறைந்தது 300 கிலோ மீட்டர்  தூரம். இங்குள்ளோரது தேவைகளுக்காக அதிகாலையிலேயே அவர்கள் போக வேண்டி இருந்தது. அது உண்மையிலேயே அவர்களது ஒருநாள் விரயம். இது குறித்து கவலைப்பட்ட சிலர், சூரிச் போன்ற ஒரு பகுதியில்  ஒரு தூதரகம் இருந்தால் நல்லது என சொன்னார்கள். அதை நான் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தேன். அதேவேளை, சூரிச்சிலுள்ள வியாபார நிறுவன நாதன் அவர்களும், இது குறித்து என்னோடு கலந்துரையாடினார். இவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்த பின்தான் இலங்கை அரசாங்கமும் சுவிசின் அரசாங்கம் இணைந்து இப்பதவியை வகிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கேள்வி: இங்குள்ள மக்களுக்கு என்ன முக்கிய சேவை உங்களால் ஆற்றப்படுகிறது என சொல்வீர்களா?

பதில்: நான் ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை பேசுவேன். எமது பிராந்தியத்தில் உள்ள தமிழர்களில் அநேகர் ஜெர்மன் மொழி ஆற்றல் உள்ளவர்கள். எனக்கு தமிழ் சற்று விளங்கும். ஆனால் பெரிதாக தெரியாது.   இங்கு வாழும் சில இலங்கையர்களுக்கு பெரியோருக்கு ஜெர்மன் மொழி அறிவு குறைந்திருந்தாலும், அவர்களது குழந்தைகளுக்கு ஜெர்மன் மொழி அறிவு அதிகம். பல இலங்கையர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவு, இந்நாட்டு மொழியை பேசுகிறார்கள். அதனால், அவர்களால் தங்களது பிரச்சினையை என்னோடு கலந்துரையாடுவது பெரிய பிரச்சினையே இல்லை. அடுத்து பெரும்பாலான இலங்கையருக்கு என்னை நன்கு தெரியும். சூரிச் என்பது  ஜெர்மன் பகுதியில் முக்கியமான ஒரு நகரம். எனவே, அவர்களுக்கு இந்த வசதி, பெரியதொரு வாய்ப்புதான். எமது சூரிச் தூதரகம், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது.

கேள்வி: சூரிச் தூதரகத்தில் நடைபேறும் சேவைகள் என்ன?

பதில்: கடவுச் சீட்டுகளை பெறுவதற்கு ஜெனீவா தூதரகத்துக்கு போகவே வேண்டும். அதற்கு மாற்றீடாக, அவர்களது விண்ணப்ப படிவத்தைப் பார்த்து அதை உறுதிப்படுத்தி கொடுப்பேன். அதை, அவர்கள் ஜெனீவா தூதரகத்துக்கு தபாலில் அனுப்ப முடியும். அவர்களால் முடியாத போது நாம் அனுப்பிக் கொடுப்போம். அதேநேரம், இங்குள்ள சிறைகளில் எம்மவர்கள் இருந்தால் போய் பார்ப்பேன். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து வருவேன். தேவையான போது உதவுவேன். என்னால் செய்ய முடியாத விடயங்களை பேர்லின் தூதரகத்துக்கு அல்லது ஜெனீவா தூதரகத்துக்கு அறிவிப்பேன். உண்மையிலேயே ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள தூதரகம்தான், சுவிற்சர்லாந்துக்குமான தூதரகம். ஜெனீவாவில் இருப்பது கூட ஒரு கொண்சுலேட் மற்றும் இலங்கைக்கான ஐநா மிசன் எனலாம். எமது தூதரகமும் ஒரு கொண்சுலேட்தான். எனது பதவியூடாக இலங்கைக்கான பொருளாதார முதலீட்டு திட்டங்களை இலங்கைக்கு  கொண்டு செல்ல உழைக்கிறேன். ஆனால், எனக்கு அரசியல் செய்ய அனுமதியில்லை. எமது மக்களின் தேவைகள் ஏதாவது இருந்தால் என்னால் முடிந்த அறிவுரை அல்லது உதவிகளை செய்வேன். சுவிசிலிருந்து சுற்றுலா செல்லும் இந்த நாட்டவருக்கான உதவிகளை செய்வேன். அத்தோடு இங்கிருந்து யாராவது இலங்கையில் பெரும் முதலீடுகளை செய்ய விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் விளக்கி அறிவுரை வழங்குவேன். இலங்கை போய் சந்திக்க வேண்டியோரது தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். எனது பணியான கௌரவ தூதர் என்ற வகையில், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதுவித ஊதியத்தையும் பெறுவதில்லை. இந்த பதவியை சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறேன்.

கேள்வி: இதைத் தவிர வேறேதாவது செய்கிறீர்களா?

பதில்: எனது MCS கம்பனி மூலம் கார்கோ சேவையொன்றை சுவிசில் நடத்துகிறேன். அதை நான்தான் நிர்வகிக்கிறேன். இங்கு வாழும் இலங்கையரது பொருட்களை இலங்கைக்கு அனுப்பிக் கொடுக்கும் சேவையை அது செய்கிறது. அத்தோடு இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு, சில வியாபாரங்களை செய்கிறேன். இலங்கையிலும் சில வியாபாரங்களையும் பல காலமாக செய்து வருகிறேன்.

கேள்வி: நீங்கள் சுவிசில் நடத்தப் போகும் அடுத்த விழாவில், புதிய உத்திகள் எதையாவது செய்ய உள்ளீர்களா?

பதில்: இது மாதிரியான விழாக்கள் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையரின் முதலாவது பரம்பரைக்கான விழாவாக நான் கருதவில்லை. இது, அடுத்து வரும் பரம்பரைக்கான விழாவாகவே நான் கருதுகிறேன். இரண்டாவது பரம்பரையில் உள்ளோர், எமது நாட்டு கலாசாரத்தால் முழுமையாக உள்வாங்கப்பட்டோராக இருக்க மாட்டார்கள். சில வேளையில், ஒரு பக்க கலாசாரத்தை மட்டுமே கண்டிருப்பார்கள். இலங்கை நாடு, தமிழ் - சிங்கள - முஸ்லிம் - பறங்கியர் - மலே போன்ற பல்லின கலாசாரம் கொண்ட நாடாகும். அந்த பல்லின தன்மையை இங்கு ஒரே இடத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் அனைத்து மக்களுக்குள்ளும், இன நல்லிணக்கம் ஒன்றைக் கொண்டு வரலாம். இவற்றை சுவிஸ் மக்களும் அறிந்து கொள்வார்கள். அதோடு கண்டிய நடனம் - பரதநாட்டியம் - இசை நிகழ்ச்சிகள் - பாசன் சோ ஆகியவற்றை, விழாவில்
இடம்பெற வைத்துள்ளோம். அத்தோடு, கடைகளும், உணவங்களும் கடந்த ஆண்டு போலவே இருக்கும்.

கேள்வி: இந்த விழாவுக்காக கட்டணம் அறவிடப்படுகிறதா?

பதில்: இல்லை. பிரவேசக் கட்டணம் கிடையாது. ஆனால், அவர்கள் எதையாவது வாங்கினால் அல்லது உணவு மற்றும் குடிபான வகைகளை பணம் செலுத்தியே பெற வேண்டும். அது எமக்கு செலுத்துவதாகாது. அது, கடைகளை போட்டுள்ளவர்களுக்கு செலுத்துவதாகும்.

கேள்வி: இந்த விழா, எத்தனை நாட்கள் நடைபெறவிருக்கிறது?

பதில்: 3 நாட்கள். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும்.

கேள்வி: இறுதியாக புலம் பெயர்ந்து சுவிசில் வாழும் இலங்கையருக்கு கூற விரும்புவது என்ன?

பதில்: நாங்கள் இலங்கையில் பல்வேறு இனங்களாக கருதப்படலாம். அதாவது, அங்கு தமிழ் - சிங்கள - முஸ்லிம் - பறங்கியர் - மலே என பிரிந்து இருப்பினும், வெளிநாடுகளுக்கு வந்த பின், நாங்கள் அனைவரும் இலங்கையர் எனத்தான் கூறுகிறோம். இந்நாடுகளில் உள்ள சட்டங்கள் மற்றும் கலாசாரத்தை மதித்து, நாம் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். அத்தோடு, 2,000 வருடங்களுக்கு மேலான எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, இங்கு நாமெல்லோரும்  ஒற்றுமையாக வாழ பழக வேண்டும்.

image_117747009c.jpgimage_0f2e5f5297.jpgimage_a5b33f72e4.jpgimage_c933818fe6.jpg

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எமது-கலாசாரத்தை-மறக்காமல்-இருக்க-வேண்டும்/91-202300

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா! சுவிற்சர்லாந்தில்

 
இலங்கை ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா! சுவிற்சர்லாந்தில்
 

இலங்கை, ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா பிரம்மாண்டமான முறையில் இந்த வருடமும் சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலாச்சார நிகழ்வு இந்த மாதம் 8, 9, மற்றும் 10ஆம் திகதிகளில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநகரில் இடம்பெறவுள்ளது.

இலங்கை, சுவிற்சர்லாந்து வியாபார சமூகம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெரும் இந்த நிகழ்வில் 30 உணவு கடைகள், 30 வர்த்தக கடைகள் என வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும், கலாச்சார உடைகள் என்பனவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையின் கலாச்சார தனித்துவத்தை பேணும் கண்டிய நடனம், பரத நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்து சிறுவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளன.

2222222222222.jpg1111111111111111.jpg444444444444444444.jpg3333333333333333333.jpg

 

 

http://newuthayan.com/story/25823.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.