Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதாநாயகன் திரை விமர்சனம்

Featured Replies

கதாநாயகன்  திரை விமர்சனம் 
card-bg-img
 

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது.

ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி ஒருவரை போட்டு அடிக்க, அதை கேத்ரின் அப்பா தட்டி கேட்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் விஷ்ணு அவரை காப்பாற்றாமல் பயந்து ஓடுகின்றார்.

அடுத்த நாள் கேத்ரினை விஷ்ணுவிற்கு பொண்ணு கேட்டு சரண்யா பொன்வண்ணன் செல்ல, அங்கு கேத்ரின் அப்பா உன் பையன் ஒரு கோழை என்று அவமானம் செய்கின்றார்.

இதன் பிறகு விஷ்ணு வீரமானாரா? கேத்ரினை கைப்பிடித்தாரா? என்பதை காமெடி அதகளத்தில் கூறியுள்ளார் முருகானந்தம்.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் கதையை கேட்டதும் ஏதோ சீரியஸ் படம் என்று நினைத்துவிடாதீர்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் தான் இந்த கதாநாயகன். விஷ்ணு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எப்படி பார்த்தோமோ அதேபோல் தான் இருக்கின்றார். ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தியவர், காமெடி படம் என்பதால் டேக் இட் ஈஸி என்று நடித்து செல்கின்றார்.

கேத்ரின் படம் முழுவதும் கிளாமர் தான், எந்த பக்கத்து வீட்டு பொண்ணு இப்படியெல்லாம் உடையணிவார் என்று தெரியவில்லை, எப்போதும் புல் மேக்கப்பில் அலங்கரிக்கின்றார். சூரி கண்டிப்பாக தன்னை பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளார். இன்னும் இங்கிலிஷை தவறாக பேசினால் ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என்ற எண்ணத்தை அவர் மறக்கவேண்டும்.

ஆனால், அனைத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்கின்றார், ஆனந்த்ராஜ் வந்த பிறகு தான் படம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. சொல்ல போனால் அதன் பிறகு தான் இது காமெடி படம் என்றே சொல்ல தோன்றுகின்றது. ஷேக் பாயாக இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சிரிப்பு சரவெடி.

இவருடைய கலாட்டாவை அடக்குவதற்குள் கிளைமேக்ஸில் மொட்டை ராஜேந்திரன் பாடகராக வந்து செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை. அதனால், என்னமோ படம் முடிந்து வெளியே வரும் போது கொஞ்சம் சிரித்த முகத்துடன் வரலாம்.

லட்சுமணின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. ஷான் ரோல்டனுக்கு கமர்ஷியல் படத்தில் இசையமைக்கும் போது கொஞ்சம் தடுமாறுகின்றார், பாடல்கள் ஏதும் ஈர்ப்பு இல்லை, சிங்கம் என்ற வில்லனுக்கு வரும் பிஜிஎம் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி ஆனந்த்ராஜ் வந்த பிறகு வரும் காட்சிகள், குறிப்பாக கடைசி அரை மணி நேரம்.

விஷ்ணுவை அடிக்க சிங்கம் என்ற ரவுடியின் ஆட்கள் துரத்துவது, அவர் அடிவாங்குவது என அந்த பகுதி கொஞ்சம் காமிக்காக செல்கின்றது.

படத்தின் வசனங்கள்.

பல்ப்ஸ்

முதல் பாதி அதிலும் குறிப்பாக சூரி காமெடி.

பாடல்கள் ஏதும் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் கதாநாயகன் முதல் பாதியில் சறுக்கினாலும், இரண்டாம் பாதியில் வெற்றி வாகை சூடுகின்றார்.

http://www.cineulagam.com/films/05/100859?ref=home

  • தொடங்கியவர்

நடிகர் விஷ்ணு விஷால் சூப்பர்... ஆனால், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்?! - கதாநாயகன் விமர்சனம்

 

``கெட்டவங்களை அடிக்கிறவன் மட்டும் தைரியசாலி இல்லை... கெட்டதைத் தட்டிக்கேட்டு அடி வாங்குறவனும் தைரியசாலிதான். ஆனா, இந்த ரெண்டும் இல்லாம ஓடி ஒளியிற ஒரு கோழைக்கு என் பொண்ணைத் தர மாட்டேன்'' - ஹீரோவைப் பார்த்து ஹீரோயினின் அப்பா பேச, சாமானியன் எப்படி ஹீரோவாகிறான் என்பதே இந்தக் `கதாநாயகன்' கதை. 

Katha-Nayagan-Movie-Stills-4_11400.jpg

 

தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் தம்பிதுரை (விஷ்ணு விஷால்). அதே அலுவலகத்தில் அட்டெண்டர் அண்ணாதுரை (சூரி). கண்மணியைக் (கேத்ரின் தெரசா) கண்டதும் தம்பிதுரை  காதல்வயப்படுகிறார். அலுவலக உதவியாளர் அண்ணாதுரை, அவரது காதலுக்கும் உதவியாக இருக்கிறார். பல (சோதனை) முயற்சிகளுக்குப் பிறகு ஹீரோயினுக்கும் காதல் வருகிறது. ஆனால், ஹீரோயினின் அப்பா, `தன் மகளை தைரியமான ஒரு ஆம்பளைக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன்’ என்கிறார். நாய் துரத்தலுக்கே தெருத் தெருவாக ஓடும் தம்பிக்கும் தைரியத்துக்கும் வெகுதூரம். அப்படிப்பட்டவர் என்ன செய்து தன் காதலியைக் கரம்பிடிக்கிறார் என்பதே மீதிக் கதை. 

`இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதியை சரக்குக்காக காலி குடோனுக்கு அழைத்துச் செல்லும் கேரக்டரில் நடித்த முருகானந்தம்தான், இந்தப் படத்தின் இயக்குநர். தனது முதல் படத்தை, ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி அளிக்கும்விதத்தில் எடுத்ததற்காக அவரைப் பாராட்டலாம். அதேபோல விஷ்ணு விஷால், கேத்ரீன், சூரி, அருள்தாஸ், ஆனந்தராஜ், `நான் கடவுள்' ராஜேந்திரன் என தன் காமெடி ஸ்க்ரிப்ட்டுக்குத் தோதான ஆள்களைத் திரட்டியவகையிலும் பாஸ் ஆகியிருக்கிறார். கூடுதலாக ‘நட்பு’க்காக தன் ஜாலிகேலி டீமில் விஜய் சேதுபதியையும் இணைத்திருக்கிறார். 

maxresdefault_1_11588.jpg

கமர்ஷியல் படங்களில், ஹீரோவுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் ஹீரோயின் பின்னால் சுற்றவிடுவார்கள். இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அரசாங்க வேலை ஒன்றைக் கொடுத்துச் சுற்றவிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே வேலை இல்லாமல் சுற்றும் ஆர்.ஐ இவராகத்தான் இருக்கும். அதேபோல், ஹீரோயினுக்கு எந்த வேலையும் இல்லை என்றாலும், தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றியபடி இருக்கிறார். சூரிக்கு, இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கப் போராடும் வழக்கமான காமெடி கேரக்டர். 

கமர்ஷியலுக்கு தன்னை தயார்செய்துவருகிறார் விஷ்ணு விஷால். அது ஓரளவுக்கு வொர்க்-அவுட்டாகியும் உள்ளது. வெறும் நடிகராக இருந்தபோது `இன்று நேற்று நாளை’, `முண்டாசுப்பட்டி’ எனத் தனித்துவ ஸ்க்ரிப்ட்களைத் தேர்ந்தெடுத்தவர், தயாரிப்பாளர் ஆனதும் லாஜிக் இல்லா காமெடி ஸ்க்ரிப்ட்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது ஏனோ? கேத்ரீனுக்கு, எல்லா காமெடிப் படங்களில் வரும் கிளாமர் கிறுக்குப் பெண் கேரக்டர்.  பாடல் காட்சிகளில் கிளாமராக வந்து போகிறார். ஆனால், படம் முழுவதும் ஒருவித கிரக்க முகபாவத்துடனேயே வலம் வருவது ஏன்? 

கதாநாயகன்

சூரியின் நடிப்பு, இந்தப் படத்தில் கவனிக்கவைக்கிறது. அவர் கொடுக்கும் வித்தியாசமான முகபாவனைகள், வாய்ஸ் மாடுலேஷன்ஸுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால், இங்கிலீஷைத் தவறாக உச்சரிக்கும் காமெடியை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள் சூரி? சில காட்சிகளில் வந்தாலும், விஜய் சேதுபதி செம ரகளை!

துபாய் ஷேக்காக ஆனந்தராஜ், இயல்பான உடல்பாவனையில் சிரிக்கவைக்கிறார். சிங்கராக வரும் `நான் கடவுள்' ராஜேந்திரன், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பாட்டு பாடுவதும், அவர் குரலில் அந்தப் பாடல்களைக் கேட்பதும் ரசிகர்களுக்கு புது அனுபவம். டான் சிங்கத்தின் அடியாள் அருள்தாஸ், வழக்கத்துக்கு மாறாக காமெடியில் ஸ்கோர் செய்கிறார். 

Katha-Nayagan-Movie-Photos-5_11206.jpg

‘ஓர் அம்மாஞ்சி வில்லன்களை விரட்டியடிக்கும் ஹீரோவாக எப்படி மாறினான்’ என்ற கதையை நோக்கி நகரும் திரைக்கதையில் சுவாரஸ்யகத்துக்காக சேர்த்திருக்கும் கிளைக்கதை காட்சிகள்தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். விஷ்ணுவை ஹீரோவாக மாற்றத் தேவையான வில்லனை இயக்குநர் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால் டிவிட்ஸ்டுகளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் அந்த டாக்டர் எபிசோட், ஷேக் போர்ஷன் ஆகியவை தனித்தனியாக பார்க்க நன்றாக இருந்தாலும் அவை கதையின் ஓட்டத்துக்கு ஸ்பீட் பிரேக். அந்தக் காட்சிகளையும் கதையுடன் இன்னும் இறுக்கமாக கனெக்ட் செய்து இருந்தால் படமும் பரபரவென்று இருந்திருக்கும், காமெடியும் நல்ல ஃப்ளோவில் அமைந்திருக்கும். 

ஷான் ரோல்டனின் இசையில், `தெனமும் ஓன் நெனப்பு பேபி...’ மற்றும் ‘பையன் மனசைப் பந்தாடும் லேடி...’ பாடல்கள் தாளம் போடவைக்கின்றன. கமர்ஷியல் படங்களில் பாடல் காட்சிகளுக்குப் பின்னால் வைக்கும் ஃபோகஸ் லைட்டை படம் முழுக்க வைத்து நம்மைச் சோதிக்கும் ஒளிப்பதிவாளர் லட்சுமண், டாஸ்மாக் ஃபைட் சீனில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

 

`பாஸ், உங்க கறியை விட்டுட்டுப் போறீங்களே...’, `யூ ஸீ... ஊசியெல்லாம் போட்டாச்சிப்பா...’, `நாம எப்போவாச்சும்தான் பிரியாணி சாப்பிடுவோம், இவனுங்க எப்போதுமே பிரியாணி சாப்பிடுவானுங்க...’ இப்படி ஆங்காங்கே வரும் கவுன்டர்களை படம் முழுக்கத் தூவியிருந்தால் இந்தக் கதாநாயகன் காமெடியில் இன்னும் கலக்கியிருப்பான்.

http://cinema.vikatan.com/movie-review/101746-kathanayagan-movie-review.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: கதாநாயகன்

 

 
kathanayaganreviewjpg

ஒரு பயந்தாங்கொள்ளி கதாநாயகன், காதலியின் கரம்பிடிப்பதற்காக துணிச்சல்காரனாக மாறுவதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘கதாநாயகன்’.

தாலுகா ஆபீஸில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் விஷ்ணு விஷால். சாலையைக் கடப்பது, கூட்டமான பேருந்தில் பயணிப்பது என சப்பையான விஷயங்களுக்குகூட பயந்து நடுங்குபவர். பக்கத்து வீட்டுப் பெண் கேத்ரின் தெரசா மீது காதல் வயப்படுகிறார். அவரோ, ‘‘பெற்றோருடன் வந்து பெண் கேள்’’ என்கிறார். அடுத்த நாளே அவரது வீட்டில் ஆஜராகும் விஷ்ணுவுக்கு அதிர்ச்சி. விஷ்ணு ஒரு அட்டைக்கத்தி வீரன் என்பதை ஏற்கெனவே அறிந்த கேத்ரினின் அப்பா, ‘‘வீரனுக்குதான் பெண்ணைக் கொடுப்பேன். உன்னைப் போன்ற கோழைக்கு அல்ல’’ என்று கூறி திருப்பி அனுப்புகிறார். கூனிக்குறுகும் விஷ்ணு விஷால், ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தாரா, இல்லையா? என்பது மீதிக் கதை.

தமிழ் சினிமா இதுவரை சித்தரித்த நிழல் உலக தாதாக்கள், ரவுடிகளைக் கிண்டலடித்த விதம் உயர் தரமான நகைச்சுவை விருந்து. ஆனால், மது அருந்திய பிறகுதான் பத்து ரவுடிகளை அடித்து வீழ்த்த கதாநாயகனுக்கு தைரியம் வருவதாகக் காட்டுவதை ஜீரணிக்கமுடியவில்லை. மேலும், நக்கலடிக்கும் கதாபாத்திரங்களை சிறுபான்மையினராகக் காட்டியதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை நுழைத்திருக்கிறார் இயக்குநர் த.முருகானந்தம். இரண்டு கேங்ஸ்டர் கும்பல்கள், விஷ்ணு - சூரி நகைச்சுவை, விஜய் சேதுபதியின் கவுரவ வேடம் என படத்தில் தனித்தனியாக பல டிராக்குகள் ஓடுகின்றன. அவற்றை இணைக்க இயக்குநர் பகீரதப் பிரயத்தனம் செய்தும், முழுமையான திரைக்கதையாகத் திரையில் விரியவில்லை.

சில தமிழ்த் திரைப்படக் காட்சிகள், பாடல்களை நினைவுபடுத்தி சிரிக்கவைத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், எந்த புதுமையும் இல்லாததால், வெறும் ‘கிச்சுகிச்சு’ காட்சிகளாக நகர்கின்றன. ஒருகட்டத்தில், மற்ற காட்சிகள் தரும் அயற்சியால், இந்த நகைச்சுவையே பரவாயில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர் ரசிகர்கள். முதல் பாதியில் விஷ்ணு - கேத்ரின் காதல் காட்சிகள், பாடல்கள் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன.

இரண்டாம் பாதியில் இந்த சித்ரவதை தொடராமல் ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சூரி, இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் விஜய் சேதுபதி ஆகியோர் காப்பாற்றி விடுகின்றனர். ஓஷோவின் கருத்துகளை விளக்கும் மருத்துவராக வரும் விஜய் சேதுபதி அதிக கைதட்டல் அள்ளுகிறார். இருட்டிலேயே அமர்ந்துகொண்டு சிகரெட் புகைத்தபடி சிவப்புநிற காண்டஸா வின்டேஜ் காரில் வரும் ‘சிங்கம்’ தாதா, அவர் புகைத்துவிட்டுப் போடும் சிகரெட்டை காலால் மிதித்து அணைக்கும் அவரது வலது கையான அருள்தாஸ், இறுதியில் ‘மைக் மோகனாக’ வந்து கர்ண கொடூர குரலால் தாக்குதல் நடத்தும் பாடகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் படத்தின் இறுதிவரை சிரிக்க வைக்கிறார்கள். குறும்பும் நக்கலும் கொப்பளிக்கும் வசனங்கள் ஓரளவு ஈர்க்கின்றன. ஷான் ரோல்டனில் இசையில் ‘உன் நினைப்பு பேபி’ பாடல் கவர்கிறது.

கேலி, கிண்டல், நையாண்டிப் படம்தான் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கும் இயக்குநர் அதை முழுமையாகத் திரையில் கொண்டுவரத் தவறியதால், காமெடியன் ஆகிவிட்டான் ‘கதாநாயகன்’.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19654835.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.