Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாப்பாட்டுப் புராணம்! – சமஸ்!

Featured Replies

Shappaattu_puranam__81168_zoom.jpg

 

 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை)

Tamil_writer_Samas.JPG

திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் சேர்ந்த சமஸ் அவர்கள் தினமணி, விகடன், தி இந்து ஆகியவற்றில் பணியாற்றியவர். இந்த வருடம் சமஸ் அவர்களின் ”யாருடைய எலிகள் நாம்?” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது..
 
ஈட்டிங் கார்னரில் எழுதுவதற்காக தெரிந்த அளவு அல்லது ஏனோ தானோ என்று எழுதி விடாமல் வரையறைகளை வகுத்துக் கொண்டு, அதாவது பெரும்பாலானவர்களின் விருப்பமானதாக, செயற்கை பொருட்கள் கலப்படம் இல்லாதவையாக, முதல் தலைமுறை கடையாக இல்லாமல், தரத்தையும் சுத்தத்தையும் பேணுபவராக என ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டு தகவல்களை சேகரித்துள்ளார்.
 
மாவட்டவாரியாக பட்டியலிட்டு முதல்முறை சாதாரணமாக சென்று உண்ட பின்னர், பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை சென்று தரம், வரலாறு, பக்குவம் என அத்தனை தகவல்களையும் சேகரித்து சுவைப்பட சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் உணவகங்கள் அனைத்தும் பெரியவை அல்ல. ரோட்டுக்கடை முதல் விடுதி வரை அனைத்து தரப்பும் இடம்பெற்றுள்ளது. ஒரு ஊருக்கு செல்லும் போது இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
 
ஒரு கோப்பை டீயில் ஆரம்பித்து திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, கும்பகோணம் பூரி பாஸந்தி, பாம்பே பாதாம்கீர், கமர்கட் கடலைமிட்டாய் பொரி உருண்டை என சகலமும் விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.
 
Annapurna_Gowrishankar-Gandhipuram-Coimbatore.jpg
 
கோவை அன்னபூர்ணாவின் ரவா கிச்சடியும் சாம்பார் வடையும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர் பாகும் வாசிக்கும் போது கோவைக்காரியான எனக்கு பெருமையாக இருந்தது. தமிழக சமையல் முறைகளில் 1978ல் நீராவி முறையை அறிமுகப்படுத்தியவர்கள் கோவை அன்னபூர்ணாவை சேர்ந்தவர்கள் தானாம், அதே போல் நாட்டிலேயே முதல்முறையாக 1985ல் ஒரே மைய சமையலறை முறைக்கு மாறியதும் இவர்கள் தானாம்.
 
family%2Bdosa.jpg
 
சிறுவயதில் அன்னபூர்ணாவின் ஃபேமிலி தோசையை பார்த்து பிரமித்ததும், அவர்களின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை, சேவை என அப்பா பார்த்து பார்த்து வாங்கித் தந்ததும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் வாயில் போட்டாலே கரையும் மைசூர் பாகும் நினைவில் பசுமையாய் இன்றும் உள்ளன.
 
சமஸ் அவர்களின் கட்டுரைகள் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தை சுத்தியே உள்ளதும், ஆங்காங்கே இந்த வாரம் மிட்டாய் வாரம், ஐஸ்கிரீம் வாரம் என்று நாளிதழில் வந்தது என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதும் தான் திருஷ்டியாய் தெரிகிறது…:) மற்றபடி சமஸ் அவர்களின் ஈடுபாடு வரிக்கு வரி நமக்கு உணர்த்துகிறது.
 
பாராட்டுகள் சமஸ். மேலும் பல புத்தகங்கள் இவருடைய எழுத்தில் நாம் வாசிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

http://kovai2delhi.blogspot.ch/2015/02/blog-post.html

 

அறுசுவை (சமஸ்) - ஒரு இனிய ஆரம்பம் !!

சென்ற வருட பதிவர் திருவிழா சென்று இருந்தபோது அங்கு இருந்த புத்தக சந்தையை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு புத்தகம் கண்ணில் பட்டது.... "சாப்பாட்டுப்புராணம்". நான் வாங்கினேனே தவிர வேலை பளுவினால் படிக்க முடியவில்லை, அப்போது எனது அப்பா அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தவர், விரைவில் முடித்துவிட்டு ஒரு நாள் மாலையில் வெகு சுவாரசியமாக அந்த புத்தகத்தை பற்றி பேச ஆரம்பித்தார், கேட்க கேட்க எனக்கு ஆர்வம் தாளாமல் அந்த புத்தகத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன்.... பிரமாதமாக இருந்தது ! முதலில் அந்த உணவின் பூர்விகம், அதன் பின்னர் அந்த கடையின் பூர்விகம், பின்னர் அந்த உணவின் சுவை, முடிவாக அதன் செய்முறை ரகசியம் என்று செல்லும் இந்த உணவின் பயணம் வார்த்தையில் விவரிக்க முடியாத சுவை !!

புத்தகத்தின் ஆசிரியர் "சமஸ்" அவர்கள் நமது பாரம்பரிய உணவினை தேடி தேடி திரிந்து, தகவல்களை சேகரித்து கொடுத்த விதம் என்றும் நினைவில் வைக்கும் வகை. ஒரு புத்தகத்தில் இருக்கும் உணவை பற்றி படிக்கும்போதே உங்களுக்கு நாக்கில் நீர் வரவழைக்க வைக்கும் எழுத்தும், அதை சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் வரவைக்கும் நடை. உதாரணமாக திருவாரூர் அசோகா அல்வா கடையை பற்றி அவர் விவரிப்பதும், அந்த சுவையை போற்றி சொல்வதும், அதன் செய்முறை ரகசியம் என்று அந்த புத்தகம் உங்களை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும். அதை படித்து விட்டு அவரை பற்றி கூகுளில் தேடி பார்த்தால் நான் மட்டும் அல்ல இன்னும் நிறைய பேர் அவரது அந்த புத்தகத்தை படித்து ரசிகன் ஆகி இருக்கின்றனர் என்று தெரிந்தது. அப்போது மனதில் எழுந்ததுதான் நாம் ஏன் இந்த கடைகளை தேடி சென்று உண்ண கூடாது ? 2008 ல் அவர் இந்த கடைகளை பற்றி எழுதி இருக்கிறார் தினமணியில், இன்றும் அந்த கடைகள் இருக்குமா என்ற எனது சந்தேகத்தை தகர்த்து எரிந்தது காலத்தை கடந்த இந்த சுவை

எப்போதும் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் ஸ்பெஷல் என்ன என்று கேட்டு எழுதுகிறோம். அதில், இந்த சாப்பாட்டு புராணம் பற்றி தேடி போய் அப்படி என்ன சுவை என்று ஏன் எழுத கூடாது என்று தோன்றியது. நினைத்து பார்த்துவிட்டேனே ஒழிய அதை செயல்படுத்த மிகுந்த சிரமம் இருந்தது....... உதாரணமாக நான் மூன்று வேளை மட்டுமே சாப்பிட முடியும், ஒவ்வொரு உணவகத்திலும் அந்த நேரத்தில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ஊரும் கடையும் ஒவ்வொரு இடத்தில் என்று நிறைய சிரமம்....... ஆனால் அந்த சிரமத்தை எல்லாம் மீறி அந்த கடையை தேடி பிடித்து அந்த உணவை வாயில் வைத்தவுடன்.......சமஸ் சார், நீங்கள் ஒரு கலா ரசிகன் போங்கள் !! நிறைய பேர் இப்படி தேடி செல்ல நாம் சரியான விலாசம், அந்த கடை எப்படி இருக்கும், என்ன எல்லாம் கிடைக்கிறது, என்ன விலை என்றெல்லாம் எழுதினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த புதிய பகுதி. இது உணவகத்தை பற்றி வருவதால் "அறுசுவை" என்ற தலைப்பிலேயே எழுதலாம் என்று இருந்தாலும் இந்த பயணத்தை வித்யாசபடுத்தி காட்ட இனி சமஸ் சாப்பாட்டு புராணம் தேடி செய்த பயணம் மட்டும் "அறுசுவை (சமஸ்)" என்ற தலைப்பில் வரும்........ விரைவில் உங்களது நாவினை வசபடுத்த வருகிறது ! இந்த பகுதி அவரது புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கவே செய்யும் முயற்சி அன்றி வேறில்லை..!! வாருங்கள் தொடங்குவோம் ஒரு சுவையான பயணத்தை.......

imagesCAL5DFN2.jpg           imagesCAEHMWG7.jpg

untitled1.png       imagesCAU4UQO4.jpg

 

அவரது சாப்பாடுப்புராணம் பகுதியில் இருந்து ஒரு பகுதியை படித்தால் உங்களுக்கே புரியும்....... திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை !!

http://www.kadalpayanangal.com/2014/01/blog-post_22.html

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை!

 

dosai.JPG

திருவானைக்கா.
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும் அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கிவிடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று... கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று... திரும்பத்திரும்பச் சாப்பிட அழைக்கும் 'பார்த்தசாரதி விலாஸ்' ஒரு ஜோடி நெய் தோசை.


                            தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம்பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ''என் பிள்ளைக்கு மூன்று வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடும்'' என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப்பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு, தான் மட்டும் திருட்டுத்தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும் தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தி இருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்கு கிடைப்பதேயில்லை. காலமெல்லாம் சுற்றித்திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும் அப்படியொரு தோசை 'பார்த்தசாரதி விலாஸ்' நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காகாரர்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.


                            திருவானைக்கா கோயில் சுற்றுச்சுவரையொட்டி ஈருக்கிறது மேலவிபூதி பிரகாரம். வீதியின் மையத்தில் 'பார்த்தசாரதி விலாஸ்'. 1943-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை, இன்றும் நாற்பதுகளில் உள்ள உணவகத்தின் அதே தோரணையில் இருக்கிறது. அதே கட்டடம், அதே மேஜைகள், அதே இருக்கைகள், அதே அடுக்களை, அதே விறகடுப்பு, அதே தோசைக்கல், அதே ருசி! சாப்பிட வருபவர்களிடம் ஒரு சம்பிரதாயமாக "என்ன வேண்டும்'' என்று கேட்கிறார்கள். அவர்களும் சம்பிரதாயமாக "நெய் தோசை'' என்று சொல்கிறார்கள். ஆனால், கடைக்குள் உள் நுழைந்தவுடனேயே தோசைக் கல்லில் மேலும் இரண்டு தோசைகள் போட்டுவிடுகிறார் சமையல்காரர். பொன்னிறத்தில் ஒரு குழல்போல சுருட்டி இலையில் வைக்கிறார்கள்... சமையல்காரரின் கைப்பக்குவம் ரேகையாய் தோசையில் ஓடுகிறது. தொட்டுக்கையாகத் தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, வெங்காய சாம்பார் தருகிறார்கள். ஆனால், முதல் தோசைக்கு இவை எதுவுமே தேவை இல்லை. நெய் மணத்தைத் தொட்டுக்கொண்டே சாப்பிட்டுவிடலாம். ஒரு ஜோடி தோசை. ஒன்று நெய் மணத்தைத் தொட்டுக்கொண்டு; மற்றொன்று சட்னி, சாம்பார் தொட்டுக்கொண்டு. திவ்யானுபவத்தை உணருவீர்கள்.

                            அக்காலத்தில் திருச்சிக்கு வரும் கச்சேரிக்காரர்களும் நாடகக்காரர்களும் இந்த திவ்யானுபவத்துக்காகவே கடைக்காரர்களுக்கு முன்னதாகவே சொல்லிவிடுவார்களாம். அவர்களுக்காக மாவு எடுத்துவைத்து, வந்தவுடன் தோசை சுட்டுக் கொடுப்பார்களாம் கடைக்காரர்கள். கடையை ஆரம்பித்த கே.ஏஸ். ஆனந்தநாராயணன், சுப்ரமண்யன் சகோதரர்கள் இன்று ஈல்லை. அவர்களுடைய மகன்கள் ஏ. வைத்தியநாதனும் எஸ். மணிகண்டனும் கடையை நிர்வகிக்கிறார்கள். தோசைபற்றிச் சொல்கிறார்கள்: "நான்கு பங்கு புழுங்கல் ஆரிசி, கால் பங்கு உருட்டு உளுந்து. இந்தக் கலவைதான். கையில் அள்ளினால் வழியாத பதத்தில் மாவை அள்ளிவிடுவோம். அதே பதத்தில் கல்லில் ஏறும். ஒரு இழுப்பு. தோசையில் பாருங்கள், ரேகை சொல்லும். வேக்காடு தெரியும் நேரத்தில் நெய் ஊற்றுவோம். தரமான வெண்ணெயாக வாங்கிப் பொங்கும் பதத்தில் உருக்கப்பட்ட நெய். மாறாத பக்குவமே மறக்க முடியாத தோசையாகிறது'' என்கிறார்கள் தோசை சகோதரர்கள்.

                            நெய் தோசை தந்த சிறு வயது நினைவுகளோடு ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குப் போனோம். பிரசாதம் பிரமாதமாக இருக்கும் என்றார்கள். அன்று நமக்குப் பிரசாதம் கிடைக்கவில்லை. ஜம்புகேஸ்வரரிடமே முறையிட்டுவிட்டோம்: "தினம்தினம் நீர் சாப்பிடுவது இன்றொரு நாள்கூட எமக்குக் கிடைக்காதா?'' ஜம்புகேஸ்வரர் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார்: "இடத்தைக் காலிப் பண்ணும். நான் தினம்தினம் சாப்பிடுவதை நீர் ஏற்கெனவே சாப்பிட்டாயிற்று!''

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...

http://writersamas.blogspot.ch/2013/04/blog-post_13.html

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

 

puthur.jpg

காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டி இருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது-ரசமானது!

                 மயிலாடுதுறை-சிதம்பரம் இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடையில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் இங்கு சாப்பிட இடம் கிடைக்கும் என்றும் ஒரு நண்பர் சொன்னார். பசிக்க ஆரம்பிக்காத ஒரு நண்பகல் வேளையில் புத்தூரை நோக்கிப் பயணமானோம். புத்தூர்க் கடை வீதியில் இறங்கி வழி கேட்ட நமக்கு, உள்ளூர்க்காரர் சுட்டிக்காட்டிய இடம் சற்றே பெரிய கீற்றுக் கொட்டகை. பெயர்ப் பலகைகூட இல்லை. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பந்தல் வழியை மறித்து நிற்கிறது கூட்டம். சாமர்த்தியமாக மெல்ல முன்னேற முயலும் நாம் நெருக்கி வெளியே தள்ளப்படுகிறோம். கூட்டத்திலிருந்து சப்தம் கிளம்புகிறது.

"நிக்கிறோம்ல. எடையில பூந்தா என்ன அர்த்தம்?''

"இல்ல, வெளியூரிலேருந்து வந்திருக்கோம்.''

"அப்ப, நாங்க எல்லாம் எங்கிருந்து வந்திருக்கோமாம்?''

"இல்ல. சாப்பிட வரல; எழுத வந்திருக்கோம்.''

"ஓஹோ! அப்படியா கத? அப்ப ஓரமாப் போய் நில்லு. நாங்கெல்லாம் சாப்பிட வந்திருக்கோம்; ரொம்பப் பசியோட. நாங்க சாப்பிட்டுப் போனதும் நீ எழுதிகிட்டுப் போ.''

இதற்கிடையே, கடையின் உள்ளேயிருந்து ஒரு குரல் வருகிறது.
"அய்யா, வரிசையில மொதல்ல நிக்கிற நாலு பேரு மட்டும் உள்ள வாங்க.''

                 நமக்கு முன்னுள்ள வரிசை மெல்ல கரைய, பின்னுள்ள வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்குள் கடைக்காரருக்கு நாம் தகவல் தெரிவிக்க, அவர் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார். கூட்டம் கொலை வெறியுடன் நம்மைப் பார்க்கிறது.

                 உள்ளே ரொம்பவும் சாதாரணமான மர பெஞ்சுகள், முக்காலிகளில் அமர்ந்து வியர்க்க விறுவிறுக்கக் கருமமே கண்ணாக கன ஜோராய் மீன் வறுவல், இறால் வறுவல் சகிதமாய்ச் சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது கூட்டம். ஏற்கெனவே கடைக்காரர்களால் உள்ளே அழைக்கப்பட்ட அந்த நால்வரைக் கவனிக்கிறோம். தயிர் போட்டுச் சாப்பிடுபவர்களுக்கு முன்பாக இடத்தைக் கைப்பற்றத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். நாம் கடைக்குப் பின்புறம் செல்கிறோம். கல்யாண வீட்டின் கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருக்கும் சமையல் கொட்டகைபோல் இருக்கிறது அந்தக் கடையின் சமையலறை. இறால், கோழி, வஞ்சிரம் மீன்களை வண்டியிலிருந்து இறக்கிக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மசாலா போட்டு அவற்றைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குழம்பு, வறுவல், பிரட்டல் என அதுஅது போய் சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர் வேறு சிலர். "இறாலுக்கு மெனக்கெடு அதிகம் சார். இறால் உரிக்கிறதுக்காகவே பத்து பேர் இருக்கோம்'' என்கிறார் அவர்களில் ஒருவர். சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருக்கும் மீன் குழம்பு வாசனை நம் நாசியைத் துளைக்கும் அந்த நேரத்தில் - ஈறால் வறுவல் "வா மகனே வா' என்று அழைக்கும் அந்த நேரத்தில் - பசி நம் வயிற்றில் பூதாகரமாய்க் கிளம்புகிறது. கடைக்காரர் சலுகையில் நமக்கும் ஓர் இடம் கிடைக்கிறது. அமர்கிறோம்.

                 எளிமையான உணவுப் பட்டியல். சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன் குழம்பு, இறால் குழம்பு, ரசம், கீரை, வெங்காயப் பச்சடி. அவ்வளவே. வறுவல், பிரட்டல் எல்லாம் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்; மிக முக்கியமாகக் கெட்டித் தயிரை. கேட்கக்கேட்கப் போடுகிறார்கள். புளிப்பு ஏறாமல் புளித்த தயிர் எப்படி ஈருக்கும்? அப்படி இருக்கிறது. வரிசையாய்க் குழம்பு, ரசம் ஊற்றிச் சாப்பிட்ட பின்னர், பொன்னி அரிசி சாதத்தில் கெட்டித் தயிரை நிறைய ஊற்றி வழியவழியப் பிசைந்து இறால் வறுவலையோ மீன் வறுவலையோ தொட்டுக்கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே... எத்தனையோ தொலைவிலிருந்து இந்தச் சின்ன கிராமத்துக் கடையைத் தேடி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரகசியம் புரிகிறது. அருகில் ஆமர்ந்திருந்த கடை ஊரிமையாளர் பி. ஜெயராமனிடம் பேசினோம். "அசைவச் சாப்பாடு சிறக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். மீனோ கறியோ எதுவென்றாலும் உயிர் விட்டு நீண்ட நேரமாகக் கூடாது. அதாவது கட்டு குலையக் கூடாது. சுத்தத்தில் பிசிறு கவுச்சி தங்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பாதி ருசி வந்துவிடும். எங்கள் கடையில் வீட்டுப் பக்குவத்தில் மசாலா அரைத்துப்போட்டு விறகு அடுப்பில் சமைக்கிறோம். தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாகச் சுண்டக் காய்ச்சி உறை எற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை'' என்றார் ஜெயராமன்.

                 வயிற்றைத் தள்ளிக்கொண்டு நாம் ஏழுந்த அடுத்த நொடி அந்த இடத்தில் துண்டு ஒன்று பறந்து வந்து விழுகிறது. திடுக்கிட்டுப் பார்க்கும் நம்மைப் பார்த்து துண்டை வீசியவர் சொல்கிறார்.
"என்ன மொறைக்குற, பசி வயித்தைக் கிள்ளுதுல்ல; நகருய்யா!''

'சாப்பாட்டுப் புராணம்' புத்தகத்திலிருந்து...

http://writersamas.blogspot.ch/2013/04/blog-post_27.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

ஞ்சாவூர் பக்கத்திலுள்ள சின்ன கிராமம் நடுக்கடை. இந்த ஊரைச் சேர்ந்த பக்ரூதீன் பாவாவுக்குக் குடும்பத் தொழில் சமையல். தாய், தந்தை ஆரம்பித்த உணவகத்தில் வியாபாரம் சரியில்லாததால், தன் தாய்மாமன் பாண்டிச்சேரியில் வைத்திருந்த உணவகத்துக்கு வேலைக்குப் போனார் பாவா. மாமா இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா செய்வதில் கெட்டிக்காரர். மாமாவிடம் தொழிலைக் கற்றுக்கொண்ட பாவா பின்னாளில், தஞ்சாவூர், கீழவாசலில் தன் பெயரையும் ஊர்ப் பெயரையும் இணைத்து ‘நடுக்கடை பாவா ஹலால் உணவக’த்தைத் தொடங்கினார்.


                           தஞ்சாவூரில் நேரக்கடைகள் பரவலான காலம் அது. ஒவ்வொரு நேரக்கடையும் ஒவ்வோர் ஐட்டத்தைப் பிரபலமாக்கிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இரவு நேரக் கடையாக தொடங்கப்பட்ட தன் கடையின் பிரதான  ஐட்டமாக இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயாவை பாவா அறிமுகப்படுத்தினார். இடியாப்பத்துக்கு அசைவத் தொட்டுக்கை தரும் வழக்கம் அப்போது கடைகளில் இல்லை. நீங்கள் வற்புறுத்திக் கேட்டால் புரோட்டாவுக்கு வைத்திருக்கும் குருமாவில் கொஞ்சம் தருவார்கள். வீடுகளிலும்கூட இஸ்லாமியர்கள் வீடுகளில் - விசேஷ நாட்களில் மட்டுமே நீங்கள் சூடான இடியாப்பத்தையும் சுவையான கறித் தொட்டுக்கையையும் சாப்பிட முடியும். இடியாப்பத்துக்கு இந்நிலை ஏன்றால், ஆட்டுக்கால் சமாச்சாரம் இன்னும் மோசம். ஆட்டுக்காலைச் சுத்தப்படுத்த பயந்துகொண்டு அதன் பெயரைக் கேட்டாலே பல பெண்கள் ஓட்டம் எடுப்பதுண்டு. இந்தப் பின்னணியில், இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயாவை அறிமுகப்படுத்திய பாவாவுக்குக் கிடைத்த வரவேற்புபற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன? அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரில் உள்ள நண்பரைப் பார்க்க நீங்கள் இரவு வேளையில் சென்றால் அவர் சாப்பிட உங்களை அழைத்துச்செல்லும் இடம்  ‘பாவா கடை’யாகவே இருக்கும். அந்த அளவுக்குப் பிரபல்யம்!

                           இடைப்பட்ட காலத்தில் பாவா இறந்துவிட்டார். கடை இப்போது கீழ வீதிக்கு மாறிவிட்டது. கடையை பாவாவின் மருமகன் பாவாஜி நடத்திவருகிறார். காலச்சூழலில் ஏராளமான மாற்றங்கள். ஆனால், இடியாப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் மாறவில்லை. உரலில் மாவு இடித்து, செப்புப் பாத்திரத்தில் வெந்நீர் போட்டு, மூங்கில் தட்டுகள் மேல் இடியாப்பம் சுடும் பாவா பாராம்பரியத்தை பாவாஜி நினைவுகூர்கிறார்.

                           இடியாப்ப மாவைப் பிசைபவரிடம்,  ‘‘கை தாங்கும் பக்குவத்தில் வெந்நீர் இருந்தால் போதும். ஈடியாப்பம் பூப்போல வரும்’’ என்கிறார். இடையிடையே, கொதித்துக்கொண்டிருக்கும் ஆட்டுக்கால் பக்குவத்தைப் பார்த்துவிட்டு வருகிறார்.  ‘‘கொதியில் மூட்டு பிரிய வேண்டும்; எலும்பிலிருந்து கறி கழல வேண்டும்; ஆட்டுக்காலுக்கு அதுதான் பக்குவம்’’ என்கிறார்.  ‘‘சுத்தப்படுத்துவது சிரமமில்லையா?’’ என்கிறோம். ‘‘கொதிக்கும் வெந்நீரில் நனைத்துக் கத்தியால் சுத்தப்படுத்துவோம்; ஒரு முடி தங்காது’’ என்கிறார்.

                           மூட்டு கழன்ற ஆட்டுக்கால்களை ஓர் அடுப்பிலிருந்து இன்னோர் அடுப்புக்கு மாற்றுகிறார்கள் (சூடு பக்குவமாம்). தேங்காய், பட்டைக் கிராம்பு, மசாலா கலந்த பாயா, தன் மணத்தை அந்த வீதியெங்கும் பரப்புகிறது. எங்கெங்கோ இருக்கும் இடியாப்பப் பிரியர்களை அந்த மணம் கடையை நோக்கி இழுத்து வருகிறது.  மூங்கில் தட்டிலிருந்து நேராகச் சாப்பிடுவோர் தட்டுக்குப் போகின்றன பூப்போன்ற இடியாப்பங்கள்; பற்களை "வா, வா'' என்று வம்புக்கு இழுக்கின்றன ஆட்டுக்கால்கள். ஏதோ பால் ஊற்றி சர்க்கரை தொட்டுச் சாப்பிடுவதுபோல பாயா ஊற்றி ஆட்டுக்கால் தொட்டு இடியாப்பம் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர் எல்லோரும். நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்... கடைக்காரர் நம்மிடம் ரசீதைக் கொண்டுவந்து நீட்டுகிறார்!

http://writersamas.blogspot.ch/2013/06/blog-post.html

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.