Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடம் தேடி -நிறவெறியும், படுகொலைகளும்

Featured Replies

சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” 

                                                                                                        —மார்டின் லூதர்கிங்

பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆனால் “திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே” என்பதுபோல ஆளும் அதிகார வர்க்கத்தின் பேராசைக்கும்,  பெருநிறுவன முதலாளிகளின் பெரும்பசிக்கும் இரையாகித் தன் சொந்த நிலத்தில் வாழ வழியற்றுக் காப்பாற்றவும் நாதியற்றுச் சொந்த, பந்தங்களை  இழந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திக்கற்று, திசை புரியாது, ஆதரவில்லாது அலையும் அகதிகளாகவும்,  பதியெழா நினைவுகளோடு புலம்பெயர்ந்து செல்லும்போது உடல் பக்குவப்படுதலில் அடையும் துன்பங்களைக் காட்டிலும் உள்ளம் பக்குவப்படுதல் அடையும் துன்பம் கொடியது. இருட்டினுள் உணராப் பொருள்போல அதை என்றுமே பிறரால் உணர முடியாது.

kurdish-refugees-motionage-art-and-desig

பதியெழா நினைவுகளோடு புலம்பெயர்ந்து செல்லும்போது உடல் பக்குவப்படுதலில் அடையும் துன்பங்களைக் காட்டிலும் உள்ளம் பக்குவப்படுதல் அடையும் துன்பம் கொடியது. படம்: fineartamerica

அந்த வகையிலே டொமினிக்கக் குடியரசும், சர்வாதிகாரி ரஃபேல் த்ருஜில்லோவும் ,  தி பட்டர்ஃபிளைஸ் (The Butterflies) அமைப்பின் நிறுவனர்களான மிராபல் சகோதரிகளும் வராலாற்றின் அழியாச் சுவடுகள்.

டொமினிக்கன் குடியரசு’ என்பது பெரிய ஆன்டிலஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும், பியூர்டோரிக்காவிற்குக மேற்கேயும், கியூபா மற்றும் ஜமாய்க்காவிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ள கரிபியன் தீவான கிஸ்பானியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு  இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது கைத்தி (HAITI)  உடன் அந்தத் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ‘தாய்னோ’(TAINO) இனப் பழங்குடியினர்தான் இத்தீவின் பூர்விக குடிமக்கள்.

08878.0001.det__0-701x500.jpg

டிசம்பர் 5, 1492 கொலம்பஸ் வருகைக்குப் பிறகு இந்நாடு ‘லா எஸ்பனோலா’ என்று பெயரிடப்பட்டதோடு கொலம்பஸின் மகனாகியா ‘டியாகோ’ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுக் காலனி ஆதிகத்தின் கீழ் வந்தது. படம்: gilderlehrman

டிசம்பர் 5, 1492 கொலம்பஸ் வருகைக்குப் பிறகு இந்நாடு ‘லா எஸ்பனோலா’ என்று பெயரிடப்பட்டதோடு கொலம்பஸின் மகனாகியா ‘டியாகோ’ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுக் காலனி ஆதிகத்தின் கீழ் வந்தது. 1496 ஆம் ஆண்டு இதன் தலைநகரம் ‘சான்டோ டொமிங்கோ’ என்று பெயரிடப்பட்டு ஐரோப்பியர்களின் நிரந்தரக் குடியேற்றமாகிப் போனது. இதுவே மேற்குலகில் ஐரோப்பியர்கள் குடியேறிய மிகப் பழமையான நகரம்.

caribbean_general_map-701x468.jpg

இதுவே மேற்குலகில் ஐரோப்பியர்கள் குடியேறிய மிகப் பழமையான நகரம். படம் :punta-cana

தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பியக்  கலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்கப்  பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிறித்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் பற்றி சரியான தகவல்கள் பற்றி  இன்றுவரை கிடைக்கவில்லை. மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் மெசுடொசோ எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்கக்  கலப்பு இனம் தோன்றத் தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர்.

vol2-g2_1_4-rudeen-701x522.jpg

படம் : historyfiles

தொடர்ந்து இஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கக் குடியரசு, 1795 இல் ஃபிரான்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1808 இல் தலைநகரான ‘சான்டோ டொமிங்கோ’ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதலடி எடுத்து வைக்கப்பட்டது. ஆனால், இடையில் 1814 முதல் 1821 வரை இஸ்பானியர்கள் மீண்டும் தமது காலனித்துவத்தை இங்கு நிலைநாட்டினர். 1822 முதல் 1844 வரை கைத்தியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, 1844 ஆம் ஆண்டு ‘பீட்ரோ சந்தானா’ தலைமையில் டொமினிக்கன் குடியரசு உதயமானது. எனினும் கடுமையான உள்நாட்டுப் போர் நிகழ்ந்ததன் விளைவாக 1861 முதல் 1865 வரை மீண்டும் இஸ்பானியரின் காலனி ஆட்சிக்குள் சென்றது. உலகிலேயே காலனி ஆட்சியிலிருந்து வெளியேறி பின் மீண்டும் அதற்குள் சென்ற ஒரே நாடு இதுதான். 1865 ஆம் ஆண்டு இஸ்பெய்னிடமிருந்து முற்றாக விடுதலை பெற்ற ‘டொமினிக்கன் குடியரசு’ சுதந்திர அரசாகத் திகழ்ந்தது. எனினும் ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது. 1930 இல் இராணுவம் மேற்கொண்ட புரட்சியின் பலனாக இராணுவ ஆட்சி நிறுவப்பட்டு, பின்னர் தேர்தல் நடந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.

trujillo-12.gif

முப்பது ஆண்டு காலம் ‘ரஃபேல் த்ருஜில்லோ’ என்ற சர்வாதிகாரியின் கீழ் ஆட்சி நடந்ததுபடம்: mtholyoke

அதிலிருந்து முப்பது ஆண்டு காலம் ‘ரஃபேல் த்ருஜில்லோ’ என்ற சர்வாதிகாரியின் கீழ் ஆட்சி நடந்தது. அக்டோபர் 24, 1891 ஆம் ஆண்டு ‘சான் கிறிஸ்டோபல்’ நகரில் பிறந்த ‘ரஃபேல் த்ருஜில்லோ’ இளம் வயதில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு அதற்காகச் சிறை தண்டனை அனுபவித்து விட்டுப் பின்பு ‘42’ என்ற கொடூர குணம் படைத்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக உருவெடுத்தார். இடையில் எட்டாண்டுகாலம் (1916-1924) அமெரிக்காவின் கீழ் ஆட்சி இருந்தபோது 1918 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கித் தனது ஆளுமைத் திறன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் இராணுவத்தின் தலைமைத் தளபதி பொறுப்பினை எட்டினார். இவரது முப்பது ஆண்டு கால ஆட்சியில் நாடு பொருளாதார வளர்ச்சியில் சீரான நிலைத் தன்மையை அடைந்தபோதும் தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுப் பெரியளவில் மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. மாற்றுக் கருத்தை முன்வைக்கும் எதிர்கட்சிகளே இல்லை என்பதற்காகத் தொடர்ந்து பல படுகொலைகளை அரங்கேற்றினார்.  அதில் குறிப்பிடத்தக்கது 1937,அக்டோபர் 2 முதல் 8 வரை   ‘பார்சிலே படுகொலை (parseley massacre) என்றழைக்கப்படும்  கைத்தியினருக்கு எதிராக டோமினிக்க இராணவத்தை வைத்து அவர் நிகழ்த்திய மாபெரும் இனப்படுகொலை. கொடுங்கோல் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலகட்டங்களில் அத்தகைய கொடிய வலியோடு அழிக்க முடியாத நினைவுகளையும், தன் தாய்நாட்டின் விடுதலைக் கனவையும் சுமந்துகொண்டு அமெரிக்காவிற்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

Disputing-the-myth-of-the-Parsley-Massac

படம்: alchetron

விளைவு அரசுக்கெதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ‘தி பட்டர்ஃபிளைஸ்’ (வண்ணத்துப் பூச்சிகள்) என்ற இயக்கத்தைத் தொடங்கி ‘மிராபல் சகோதரிகள்’ என்றழைக்கப்படும் நான்கு டொமினிக்க சகோதரிகள் அந்த இயக்கத்தைச் சிறப்பாகத் தலைமையேற்று நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் அந்த இயக்கத்தில் இணைந்தனர். ஜனநாயகத்தின் முழு விடுதலையையும் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே இலக்காக இருந்தது.

maxresdefault-701x526.jpg

படம் :tumblr

மிராபல் சகோதரிகள் டொமினிக்கக் குடியரசின் ‘சிபாவோ’ பகுதியின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள். த்ருஜில்லோ பெரும்பாலும் தன் உடற்பசிக்குப் பருவப் பெண்களை அடைய நினைக்கும் தவறான பழக்கம் உடையவர். இதில் மூன்றாவது பெண்ணான ‘மினர்வா’ ஒருமுறை த்ருஜில்லோவின் விருப்பத்தை மறுத்துவிட்டதால் பின்னாளில் அவர் சட்டம் படித்தும் அங்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகுதான் மக்களின் அடிப்படை உரிமைகளையும், விடுதலை உணர்வையும் மீட்டெடுக்க வேண்டி இப்படியொரு இயக்கத்தை அவர் ஏற்படுத்தினார். முதலில் நான்காவது சகோதரியான ‘மரியா தெரெசா’ அவரோடு இணைந்தார். தொடர்ந்து மூத்தவரான ‘பாத்ரியாவும்’, இரண்டாவது பெண்ணான ‘தீதியும்’ இந்த இயக்கத்தில் இணைந்தனர். முதலில் அவர்களுக்குள்ளாகவே “தி பட்டர்ஃப்ளைஸ்” என்று அழைக்கத் தொடங்கிப் பின்னாளில் அதுவே அவர்களது இயக்கத்தின் புனைப் பெயரானது. நவம்பர் 25, 1960 அன்று ‘பாத்ரியா’, ‘மினர்வா’, ‘மரியா தெரெசா’ மூவரும் அவர்களது ஓட்டுனரோடு மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தபோது த்ருஜில்லோவின் ஆட்களால் கொலை செய்யப்பட்டுப் பிறகு விபத்து ஏற்பட்டதுபோல் காட்டிக்கொள்ள அவர்களது வண்டி மலையிலிருந்து உருட்டி விடப்பட்டது. இவர்களது மரணத்திற்குப் பிறகு ‘தி பட்டர்ஃப்ளைஸ்’ இயக்கத்தில் இணைந்திருந்த மற்ற புரட்சியாளர்களால் போராட்டம் வலுத்தது. அதன் விளைவாக 1961 ஆம் வருடம் மே 30ஆம் தேதி ரஃபேல் த்ருஜில்லோ புரட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். மிராபல் சகோதரிகளைக் கௌரவிக்கும் வகையில் 1999 வருடம் கூடிய ஐ.நா பொதுக்குழு நவம்பர் 25 ஆம் தேதியை ‘அனைத்துலக மகளிருக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமாக’ அறிவித்தது. அதன் பிறகு 1978 முதல் இன்றுவரை டொமினிக்கக் குடியரசு முழுமையான விடுதலை பெற்ற ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. ஆனாலும் ஆட்சியும், அரசியலமைப்பும், ஆட்சியாளர்களும் மட்டுமே மாறியிருக்கிறார்கள்,  கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலும், மனித உரிமை மீறல்களும் டொமினிக்கக்  குடியரசு நாட்டில் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

pngbase645ee3dbe3c1640ece-701x368.png

ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலும், மனித உரிமை மீறல்களும் டொமினிக்கக்  குடியரசு நாட்டில் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. படம்: forharriet

காலங்கள் மாறலாம், சர்வதேசச் சட்டங்களும் மாறலாம், ஆனாலும்  உலக அமைதிக்கான முயற்சியை முன்னெடுப்பதுபோல்  நடித்துக் கொண்டிருக்கும் நாடுகளும், அதன் தலைவர்களுமே கூடப்  பல இனப் பேரழிவிற்குத் துணை போவதையும்,  தனது இனத்தின் அடையாளச் சுவட்டினைத் தொலைத்துவிட்டு அலைகின்ற அகதிகளின் புலம் பெயர்தலையும் இன்றுவரை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம், இருப்போம்!. இனப் படுகொலையும், மனித உரிமை மீறல்களும், அகதிகள் கடுந்துயரும் தொடர்  நிகழ்வே  விடுதலைப்  போராளிகளின் போராட்டமும், இறப்பும் சராசரி நிகழ்வாகக் கருதப்படும்வரை!, இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நிறம் கடந்து சக மனிதனை நேசிக்கத் தெரியாதவரை…………..

உசாத்துணைகள்:

  • pulitzercentre
  • Before we were free-  Julia Alvarez
  • In the Time of the Butterflies -Julia Alvarez
  • The feast of the Goat- Mario vargas llosa

https://roar.media/tamil/history/the-butterflies/

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.