Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?!

Featured Replies

46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?!

 
 

mgr_dmk_towel_4_10011.jpg

எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் தன் மக்கள் செல்வாக்கினால் உருவாக்கிய கட்சியின் 46 -வது ஆண்டு தொடக்க தினம் இன்று...!

 

தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆர் என்ற பெயரும் அ.தி.மு.க என்ற கட்சியும் தவிர்க்கமுடியாதவை. தமிழகத்தில், அண்ணா தலைமையில் உருவான திராவிட இயக்கத்தின் ஆட்சியை அவருக்குப்பின் வலுவாகத் தொடரச்செய்த பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு.  பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கைக்கொண்ட திராவிட உத்திகளிலிருந்து சற்று விலகிப் பயணிப்பதாக அ.தி.மு.க மீது கடந்த காலக் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. ஆனால், தேசியக் கட்சிகளின் வேர் தமிழக மண்ணில் ஆழ ஊடுருவ முடியாதபடி அரண் அமைத்ததில், அ.தி.மு.க என்ற கட்சிக்குப் பெரும் பங்குண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. 

திராவிட இயக்க நீட்சியாக தமிழகத்தில் பூத்த கட்சி அ.தி.மு.க என்றாலும் அது முற்றாக திராவிட இயக்கத்தின் சிந்தனையில் உருவானதல்ல; ஒரு தனிநபருக்கு எதிராக மக்களிடம் எழுந்த கொந்தளிப்பின் விளைவால் உருவானது. 

அ.தி.மு.க போன்று ஒரு தனிநபரின் ஆதிக்கத்தில் உருவான, தனிமனித ஆளுமையினால் மிகக் கட்டுக்கோப்பாக கடந்த காலத்தில் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சி இருந்ததாக வேறோர் உதாரணத்தை உலக அளவிலும் காண முடியாது. எம்.ஜி.ஆர் என்ற மக்கள் கவர்ச்சி மிக்க மனிதரின் அந்தச் சாதனையை அவருக்குப்பின் ஜெயலலிதா என்ற ஆளுமை கச்சிதமாகக் கைக்கொண்டது எம்.ஜி.ஆரையும் விஞ்சிய சாதனை என்றே கூறலாம். ஜனநாயகத்துக்கு விரோதமான விஷயமாக இது தெரிந்தாலும் இதுதான் ஒரு கட்சி தன் ஆயுளை நீட்டிக்க முக்கியக் காரணம் என்பதை தற்போது அ.தி.மு.க-வில் நடந்துவரும் குழப்பங்கள் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீர்க்கதரிசனத்தைப் பாராட்டியேஆகவேண்டும். 

எம்.ஜி.ஆர்அது 1950-களின் முற்பகுதி. அண்ணா என்ற கதாசிரியர் நாடகம் மற்றும் சினிமா உலகில் தன் அபாரமான எழுத்தாற்றலினால் புகழடைந்துகொண்டிருந்த நேரம். 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில், சிவாஜியாக வேடம் ஏற்று நடிக்க சிறந்த ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார் அண்ணா. அப்போது அவரது நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி, காஞ்சிபுரத்திலுள்ள அண்ணாவிடம் 'ராம்சந்தர்' என்ற நடிகரைக் கூட்டிவந்து அறிமுகப்படுத்தினார். சினிமாவில் கொஞ்சம் புகழடைந்துகொண்டிருந்த ராம்சந்தர், நெடிய உயரத்துடன் திரண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சுடன் நாடகக்காரருக்கே உரிய பளபள முகம். எனவே, அவரைப் பார்த்ததுமே அண்ணாவுக்குப் பிடித்துவிட்டது. “வசனம் ஏதாவது பேசிக்காட்டட்டுமா” என்றார் நடிகர். “தேவையில்லை. வசன பாடத்தைத் தருகிறேன். பயிற்சி எடுத்துவாருங்கள். நேரடியாக ரிகர்சலில் சந்திப்போம்'' என்றார் அண்ணா. நடிகரை ஒரே பார்வையில் கணித்துவிட்டார் அண்ணா. அண்ணாவை ஒரே செயலில் புரிந்துகொண்டார் நடிகர். இருவரும் கைக்குலுக்கிக்கொண்டு விடைபெற்றனர். அண்ணாவின் அந்த நாடகத்தில், அந்த நடிகர் நடிக்கமுடியாமல் போனாலும் காலம் அந்த இருவருக்கும் சேர்த்து ஒரு பெரிய கணக்கைப் போட்டு வைத்திருந்தது. அண்ணாவின் 'பணத்தோட்டம்' நாவலில் சொக்கிப்போன அந்த நடிகர், பின்னாளில் சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்தபோது அண்ணாவை நேசிக்க ஆரம்பித்திருந்தார். அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர், பெரியாருடன் முரண்பட்டு அண்ணா தொடங்கிய தி.மு.க  என்ற கட்சியில் 1951-ல் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க என்ற கட்சியை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச்செல்லும் பணியில் மனப்பூர்வமாகப் பங்காற்றினார். அண்ணாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து ராம்சந்தர் என்ற தன் பெயரை ஒரேநாளில், 'ராமச்சந்திரன்' என மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ராம்சந்தர், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆனார். பின்னாளில் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார்!

கழகமும் எம்.ஜி.ஆரின் வெற்றியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு வளர்ந்தன.  ஒருமுறை அண்ணா தென்மாவட்டத்துக்குப் பயணம் செய்தபோது அவரது காரிலிருந்த கட்சிக்கொடியைக் கண்டு ஓடிவந்த மக்கள், ''டேய் நம்ம எம்.ஜி.ஆர் கட்சிக்கொடிடா...'' என காரை சூழ்ந்துகொண்டனர். கழகத்தின் வெற்றி அவர் கண்முன் தெரிந்தது. எம்.ஜி.ஆரைக் கட்சியில் இணைத்துக்கொண்டதற்காகப் பெருமைகொண்டார் அண்ணா!

எம்.ஜி.ஆரோ., கட்சியின் சின்னத்தையும், கட்சியின் தலைவர் அண்ணாவையும் தம் படங்களில் நூதனமாகப் புகுத்தி கட்சிக்குப் பிரசாரம் செய்தார். தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடையாளத்திலும் கட்சிக்கொடியையே வைத்தார். இப்படி பிரதிபலன் பார்க்காமல், கட்சிக்காக உழைத்தார் எம்.ஜி.ஆர். அதற்குப் பிரதி பலனாக எம்.ஜி.ஆருக்கு எம்.எல்.சி பதவியை வழங்கி கவுரவித்தார் அண்ணா.

ஒரு சட்டமன்றத்தேர்தலின்போது, ''கட்சி நிதியாக 1 லட்சம் ரூபாய் தருவதாக எம்.ஜி.ஆர் சொல்கிறார். அவர் ஒரு லட்சம் தரத்தேவையில்லை. ஒரு முறை மக்களிடம் அவர் முகத்தைக் காட்டி வாக்கு கேட்டாலே போதும்.... லட்சக்கணக்கான வாக்குகள் கட்சிக்கு விழும்” எனப் பெருமைப் படுத்தினார் அண்ணா. கட்சியின் வளர்ச்சிக்காக மேடைக்கு மேடை எம்.ஜி.ஆரை அண்ணா புகழ்ந்தது, கட்சியில் சிலரது கண்களை உறுத்தியது. அண்ணாவின் மனதில் இடம்பிடித்தவர்களை அப்புறப்படுத்துவதை அதிகாரபூர்வப் பணியாக செய்துவந்த அவர்கள் சிவாஜிகணேசன், சம்பத், கண்ணதாசன் என அந்நாளில் அடுத்தடுத்த விக்கெட்டுகளைக் கட்சியில் வீழ்த்திக்கொண்டிருந்தனர். அண்ணாவுக்கு இது கவலை தந்தாலும் தம்பிகளின் சொல்லை தட்டமுடியாதவராக இருந்தார். 1960-களின் மத்தியில், எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பு வலுத்தது. நிலைமை எல்லை மீறிப்போனநிலையில், தன் எரிச்சலைப் பதிவு செய்ய தன் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். ராஜினாமா அறிவிப்பு மூலம் அண்ணாவை அவமதித்துவிட்டார் எனப் பந்தை எம்.ஜி.ஆருக்கே திருப்பினர் அந்த 'தம்பிகள்'. இந்தத் தம்பிகளில் 'தல'யாக இருந்தவர் கருணாநிதி. இறுதியாக காமராஜர் பிறந்தநாள் விழாவில், கலந்துகொண்டதற்காக கண்டம் எழுந்தது. 

எம்.ஜி.ஆர்

மற்ற தலைவர்களுக்குச் சிக்கல் வந்தபோது பொறுமை காத்த அண்ணா, எம்.ஜி.ஆர் விஷயத்தில் அமைதி காக்கவில்லை. பாமர மக்களுக்கு தி.மு.க-வின் முகம் எம்.ஜி.ஆர்-தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். “மரத்தில் பழுத்துத் தொங்கியது கனி. அதை என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்” போன்ற வார்த்தைகள் மூலம் எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை தம்பிகளுக்கு அவ்வப்போது உணர்த்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். அண்ணாவின் தீர்க்கதரிசனம் 1967-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தெரிந்தது. தமிழகம் முழுக்க பம்பரமாகச் சுற்றி தேர்தல் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், பரங்கிமலை தொகுதியில், தானும் வேட்பாளராகக் களம் இறங்கினார். தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். தொண்டையில் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரின் புகைப்படம் தமிழக மக்களின் கருணையை உரசிப்பார்த்தது. விளைவு, தி.மு.க அந்தத் தேர்தலில், வெற்றிபெற்று முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

தி.மு.க-வில் இரு குழுக்கள் உருவாகிவிட்டதை இனம் கண்டு, கல்கண்டு தமிழ்வாணன் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதினர். கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மோதல் எனப் பத்திரிகைகள் எழுதின. அண்ணாவின் வார்த்தைகளுக்காக கருணாநிதியுடன் மோதல் போக்கை கைவிட்டதோடு போகிற இடங்களில் எல்லாம் 'தனக்கும் கருணாநிதிக்கும் பகை கிடையாது' எனக் கூறிவந்தார். இருவரும் திரைத்தொழிலில் முன்புபோல் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

இத்தனை பூசல்களுக்கிடையிலும் 1969-ல் அண்ணா மறைவுக்குப்பின் கட்சியின் தலைவராக கருணாநிதி வர உதவினார் எம்.ஜி.ஆர். மக்களிடம் சற்று விலகியே நிற்கும் நெடுஞ்செழியனை விட கருணாநிதி மேல் என இந்தப் போட்டியில், கருணாநிதியை ஆதரித்தார் எம்.ஜி.ஆர். பலரையும் ஆதரிக்கவைத்தார். கருணாநிதி கட்சியின் தலைவரானார். 1971 தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக ஊர்தோறும் சென்ற எம்.ஜி.ஆர், 'கருணாநிதி சிறந்த நிர்வாகி' என பிரசாரம் செய்தார். மீண்டும் தி.மு.க வெற்றிபெற்றது. தேர்தல் வெற்றிக்குப்பின் எம்.ஜி.ஆர் - கருணாநிதி மோதல் உச்சகட்டம் அடைந்ததாகப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதின. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளமுடியாமல், கருணாநிதி பிரச்னை கிளப்புவதாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் எழுதினர். 'தானே கட்சி என்பதுபோல், எம்.ஜி.ஆர் தலைமைக்கு விரோதமாக நடந்துகொள்கிறார்' எனக் கருணாநிதி ஆதரவு பத்திரிகைகள் எழுதின. தி.மு.க-வில் பூசல் வெடிக்கப்போவதாக நடுநிலை பத்திரிகைகள் எழுதின. தன்னைப்போலவே நடை உடை பாவனையுடன் கருணாநிதியின் மகன் சினிமாவில் நடிப்பது எம்.ஜி.ஆருக்கு உறுத்தலை தந்தது. தன் சினிமா ராஜ்யத்தைச் சரித்துவிட கருணாநிதி கணக்குப்போடுவதாகக் கருதினார் எம்.ஜி.ஆர். தமிழகம் முழுவதும் மு.க முத்துவுக்கு ரசிகர் மன்றங்கள் ஒரேநாள் இரவில் உருவானதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

எம்.ஜி.ஆர்

கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிளவினால், லாபம் அடைய நினைத்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். 'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்புக்காக வெளிநாடு கிளம்பிய எம்.ஜி.ஆரை வழியனுப்பிவைக்க விமான நிலையத்துக்கு நேரில் வந்தார் முதல்வர் கருணாநிதி. 'அண்ணாவே நேரில் வந்ததுபோல் இருந்தது' என நெகிழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானபோது எல்லாமே தலைகீழாகிவிட்டிருந்தது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில், தனக்கும் முதல்வர் கருணாநிதிக்குமான மோதலை முதல்முறையாகப் போட்டுடைத்தார் எம்.ஜி.ஆர்.!

“அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். தி.மு.க மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி, மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிவரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன். பொருளாளர் என்ற முறையில், என்னிடம் அவர்கள் கணக்குக் காட்டவேண்டும்" எனப் பொங்கி வெடித்தார்.

தி.மு.க-வில் பரபரப்பு பற்றிக்கொண்டது. கருணாநிதிக்கு தகவல்போனது. அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்த பாராட்டு விழாவிலும் இதே பிரச்னையைக் கிளப்பினார் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில். ''எம்.ஜி.ஆர் என்றால் தி.மு.க.; தி.மு.க என்றால் எம்.ஜி.ஆர் என்றேன்.  உடனே ஒருவர், நாங்கள் எல்லாம் தி.மு.க இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவிருந்தால் நீயும் சொல். உனக்குத் துணிவில்லாததால், என்னைக் கோழையாக்காதே'' என்று தொடர்ந்து 45 நிமிடங்கள் தி.மு.க-வையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

எம்.ஜி.ஆர்மதுரையில் இருந்த கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்தத் தகவல் கொண்டு சேர்க்கப்பட, அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு தி.மு.க தலைமையிடமிருந்து அழைப்பு போனது. முதல்நாள் இரவே சென்னைக்குச் செயற்குழு உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். 'கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் எம்.ஜி.ஆர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி' மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் எம்.ஜி.ஆர்., மதியழகன், நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதல்வர் கருணாநிதி கைக்கு வந்தது. விறுவிறுவென காரியங்கள் நடந்தன. 'கட்சிக்கு விரோதமாக பொது இடங்களில் பேசியதால், எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்திருப்பதாக...' 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று பத்திரிகைகளுக்கு தி.மு.க  தரப்பிலிருந்து செய்தி சொல்லப்பட்டது.

அக்டோபர் 12 ஆம்தேதி கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேட்டிகள் அளித்து இன்னும் பரபரப்பைக் கூட்டினர். அதே தினத்தில், 'வருத்தம் தெரிவித்தால், நீக்கத்தை மறுபரிசீலனை செய்யும்' என தி.மு.க அறிவித்தது. 11 ஆம்தேதி மாறன் உள்ளிட்ட சிலர் மூலம் எம்.ஜி.ஆரிடம் பேசி சமரச முயற்சி எடுக்கப்பட்டது. 

இதனிடையே உடுமலைப்பேட்டையில், இசுலாமிய இளைஞர் ஒருவர், எம்.ஜி.ஆர் நீக்கத்தைக் கண்டித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப்பின் நிலைமை இன்னும் விபரீதமாகிப்போனது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் தி.மு.க-வினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்மீது வழக்குகளும் அதைத்தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தி.மு.க-வில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரிசெய்ய முயன்றனர். ஆனால், தி.மு.க-வினருக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குமிடையே நடந்த மோதல்கள் இந்த சமரசப் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. கோபமான எம்.ஜி.ஆர், தன்மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், வருத்தம் தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!

பெரியாரும் ராஜாஜியும் கூட இந்தப் பிரச்னையில், தலையிட்டனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.

அக்டோபர் 14 ஆம்தேதி திட்டமிட்டபடி தி.மு.க செயற்குழு கூடியது. 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால், கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர்மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்குவது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கை வைப்பதற்குச் சமம் எனக் கண்ணீர்விட்டபடி கூறினார் பெண் உறுப்பினர் ஒருவர். 

மறுதினம் 15 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், 277 பேர் எம்.ஜி.ஆர் நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில், எம்.ஜி.ஆர் நிரந்தரமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்படுகிறார் என அறிவித்தது தி.மு.க தலைமை.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர்., 'இதயவீணை' படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன்னுடைய 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்'க்கு வைத்த, திரைப்படங்களில் தி.மு.க-வையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக் கண்களை மறைத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த எம்.ஜி.ஆர்., 'கறிவேப்பிலைபோல் தான் தூக்கியெறியப்பட்டதை'த் தாங்கிக்கொண்டார். ஆனால், அவரது ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தி.மு.க-வினர் சகஜமாக நடமாட முடியாத நிலையை அவர்கள் உருவாக்கினார்கள். தி.மு.க தலைவர்களே கட்சிக்கொடிபோட்ட காரில் பயணிக்கப் பயந்தனர். எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,“கழகத்தை உடைக்க மத்திய அரசின் சதிக்கு உடந்தையாகிவிட்டார் எம்.ஜி.ஆர்” என்ற கருணாநிதி, அண்ணாவின் இதயக்கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால்தான் தூக்கித் தூர எறியவேண்டியதானது” எனத் தன் வார்த்தை ஜாலத்தோடு பதில்சொன்னார், கருணாநிதி.

எம்.ஜி.ஆர்

‘தான் இறந்தபின் தன் உடலில், தி.மு.க கட்சிக்கொடிதான் போர்த்தப்படவேண்டும்' என ஒருமுறை அண்ணாவும் கருணாநிதியும் இருந்த ஒரு மேடையில் உணர்ச்சிவயப்பட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், ஒரேநாள் இரவில், தி.மு.க உறுப்பினராகக் கூடத் தொடரமுடியாமல் போனது வரலாற்றின் துயரம்.

தன்னெழுச்சியாகத் தனக்குக் கிடைத்த மக்கள் வரவேற்பைக் கண்டு அக்டோபர் 17 ஆம்தேதி அண்ணாவின் பெயரில், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (அ.தி.மு.க) என்றக் கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். 19ஆம்தேதி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார்.

கொடியில் அண்ணா, கட்சியின் கொள்கை அண்ணாயிஸம்... இப்படி எங்கும் எதிலும் அண்ணாவை முன்னிறுத்தினார் எம்.ஜி.ஆர். கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில், கட்சியின் வேட்பாளர் மாயத்தேவர் பெற்ற வாக்குகள், எம்.ஜி.ஆருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆளும் தி.மு.க-வினரால் அ.தி.மு.க-வினர் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகினர். எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்மீது வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தன் பகுதியில், அ.தி.மு.க கட்சிக்கொடியை ஏற்ற முயன்ற சேலத்தைச் சேர்ந்த புலாவரி சுகுமாரன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். கட்சியை வளர்த்தெடுக்க இன்னும் பலர் உயிரை இழந்தனர். கை, கால்களை இழந்து முடமானார்கள். எம்.ஜி.ஆர் தனியொருவராக தமிழகம் முழுவதும் சுழன்றுவந்து கட்சியை வளர்த்தார். 

கட்சி ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளில், ஆட்சியைப்பிடித்தது அ.தி.மு.க.! 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று அ.தி.மு.க வென்றது. அருப்புக்கோட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

எம்.ஜி.ஆர்

“தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன்” என்றார் அண்ணா. அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிறைவேற்றிக்காட்டியவர் அண்ணாவால் இதயக்கனி என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அடுத்த 11 ஆண்டுகள் அவரே தமிழகத்தின் அசைக்கமுடியாத முதல்வராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு!

அ.தி.மு.க என்ற கட்சி உருவான 46 ஆவது ஆண்டு தொடக்க தினம் இன்று.  அ.தி.மு.க வரலாற்றில் கடந்த ஆண்டுகளை விட இந்த வருடத்தின் தொடக்க தினத்தை ஒருவகையில் சிறப்பானதாகச் சொல்லலாம். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிலிருந்து எம்.ஜி.ஆர்., அவருக்குப்பின் ஜெயலலிதா என இருபெரும் தலைவர்களால் ஒற்றைத் தலைமையுடன் வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் அ.தி.மு.க.! ஆனால், முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத் தினத்தில், ஒற்றை ஆளுமைத்தலைமை என்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயலிலிருந்து விடுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ற இரு தலைவர்களால் அ.தி.மு.க வழிநடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியினரான தினகரன் தரப்பினர் ‘நாங்கள்தான் அ.தி.மு.க’ என்று கூறி வருகின்றனர். வாரிசு அரசியலை பெரும்பாலான கட்சிகள் பின்பற்றிவரும் நிலையில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு கட்சியை வாரிசுகள் அல்லாதவர்கள் உரிமை கொண்டாடுவதும்கூட ஒருவிதத்தில் ஜனநாயகத்தின் ஓர் ஆரோக்யமான போக்காகவே கருதப்படுகின்றது.

 

ஜனநாயகம் என்பது ஒருவர் முடிவெடுத்து பலர் அதைப் பின்பற்றுவது அல்ல; தவறுகளை இடித்துரைப்பதும் அதற்கானத் தீர்வுகளைக் கலந்துபேசி முடிவெடுப்பதுமே ஆகும். ஒருவருடைய கருத்துக்கு, மாற்றுக்கருத்து என ஒன்று இல்லாதுபோனால், அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அ.தி.மு.க-வில் கடந்த 45 ஆண்டுகளாக நடந்துவந்தது இந்த ஜனநாயக விரோதம்தான். அண்ணா போற்றி வளர்த்த ஜனநாயகம் அவரது பெயரைத் தாங்கிய கட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயமே!

http://www.vikatan.com/news/tamilnadu/105212-this-is-the-day-when-admk-founded-beore-45-years.html

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்!

 
 

மிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான்  தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த ஒருவார காலத்துக்குள் அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இன்று அக்கட்சி தொடங்கப்பட்ட 46-வது ஆண்டு தினம். 

எம்.ஜி.ஆர்

 

அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்'  நாடகத்தில் நடிப்பதற்காக  அண்ணாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அவர் மீது பெரும் காதல்கொண்டார். அண்ணாவின் அழைப்பை ஏற்று 1953-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். 60 களின் மத்தியில் அண்ணாவின் காலத்திலேயே கருணாநிதிக்கும் அவருக்கும் முரண்பாடுகள் உருவானதாகச் சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அண்ணா மறைவுக்குப்பின் இந்த பிணக்கு முற்றியே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்ற திரையுலக பங்காளிகளுக்கிடையே எழுந்த மோதலின் பின்னணியாக  அரசியல், தனிப்பட்ட பிரச்னை என சுமார் அரை டஜன் காரணங்கள் ஒளிந்திருந்தன என்கிறார்கள். இந்த காரணங்களினால் மோதல் முற்றிய நிலையில்தான் எம்.ஜி.ஆர் நீக்கம் என்கிற தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு நடந்தது. 1971 சட்டமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்ற இருநண்பர்கள் தங்களுக்குள் இருந்த பகையை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரே அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டாலும் அவர்களுக்கிடையேயான முரண்களை பத்திரிகைகள் அவ்வப்போது எழுதியேவந்தன.

எம்.ஜி.ஆர்இந்த நிலையில்தான் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி.... 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....

“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்

அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

எம்.ஜி.ஆர்

இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

எம்.ஜி.ஆர்

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

 

நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்.

http://www.vikatan.com/news/tamilnadu/105222-this-is-why-mgr-suspended-from-dmk-in-october-10th-1972.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.