Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறுகிறார் இந்திய கிரிக்கெட் போராளி

Featured Replies

விடைபெறுகிறார் இந்திய கிரிக்கெட் போராளி

 

 
31CHPMUASHISHNEHRA1

ஆஷிஷ் நெஹ்ரா   -  THE HINDU

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முட்கள் நிறைந்த பாதையில் அதிகம் பயணித்தவர் என்று ஆஷிஷ் நெஹ்ராவைக் கூறலாம். 1999-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த நெஹ்ரா, மற்ற பந்து வீச்சாளர்களை விட அதிக காலம் இந்திய அணிக்காக ஆடியவர். ஆனால் இந்த 18 ஆண்டுகளில் அவர் விளையாடிய போட்டிகள் மிகவும் குறைவு. 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும், 26 டி 20 போட்டிகளிலும் மட்டுமே அவர் பங்கேற்றுள்ளார். அடிக்கடி காயம் அடைந்ததும், தேர்வாளர்கள் அவர் விஷயத்தில் காட்டிய பாரபட்சமுமே இதற்கு காரணம்.

1999-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆஷிஷ் நெஹ்ரா. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால் மீண்டும் அவரை அணிக்கு தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கங்குலி கேப்டன் ஆன பிறகு அவரது வாழ்க்கையில் வெளிச்சம் விழுந்தது. 2001-ம் ஆண்டு கங்குலி தலைமையில் ஜிம்பாப்வேக்கு பயணம் செய்த இந்தியக் குழுவில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது.

இந்த தொடரில் ஜாகிர் கானுடன் சேர்ந்து தொடக்க ஓவர்களில் நெஹ்ரா ஜாலம் செய்ய, கங்குலியின் பிரியத்துக்கு உரியவரானார். 2003-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த நெஹ்ரா, 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அதன் பின் சில போட்டிகளில் சொதப்ப, 2004-ம் ஆண்டில் தேர்வுக் குழுவினர் இவரைத் தூக்கி அடித்தனர். அதோடு காயங்களும் படுத்த, நெஹ்ராவின் பயணம் தடைபட்டது. ஆனால் நெஹ்ரா, போராடிக்கொண்டே இருந்தார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவரது செயல்பாடு இந்திய அணியின் அப்போதைய கேப்டன் தோனியையும், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனையும் ஈர்த்தது. இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருந்த ஜாகிர் கான் காயமடைய அவருடைய இடத்துக்கு நெஹ்ராவை கொண்டுவந்தது தோனி - கிர்ஸ்டன் கூட்டணி. இதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டில் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் நெஹ்ரா.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் வரை நெஹ்ராவுக்கு மீண்டும் வசந்த காலமாக இருந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய பந்துவீச்சின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நெஹ்ரா, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இப்போட்டியின்போது காயமடைந்த அவரால் சில காலம் விளையாட முடியாமல் போனது. அதன் பிறகு தேர்வுக்குழுவினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நெஹ்ரா, 5 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டுதான் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

ஒருபுறம் தேர்வுக் குழுவால் புறக்கணிக்கப்பட்ட நெஹ்ராவை மறுபுறம் காயங்களும் துரத்தின. 12 முறை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளான அவர் ஒவ்வொரு முறையும் கடுமையாக பயிற்சிகளைச் செய்து வேகப்பந்து வீச்சுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார். காயங்களை விட தேர்வுக்குழுவின் புறக்கணிப்புதான் நெஹ்ராவை சோர்வடைய வைத்தது. இதுபற்றி ஒருமுறை செய்தியாளரிடம், “ஒருவேளை என் முகம் தேர்வாளர் களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ” என்று நெஹ்ரா கூறியுள்ளார்.

38 வயதிலும் புயலாக பந்து வீசிவரும் நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களையும், 26 டி 20 போட்டிகளில் 34 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடை பெறவுள்ள டி 20 போட்டியுடன் இந்த போர் வீரன் கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுக்கிறார்.

“நன்றாகத்தானே பந்து வீசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓய்வு பெற ஏன் அவசரப்படுகிறீர்கள்” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும் நிலையில் ஓய்வு பெறுவதுதான் ஒரு விளையாட்டு வீரனுக்கு சிறப்பு சேர்க்கும். ஏன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும்வரை விளையாடக்கூடாது என்பதே என் கருத்து” என்று கூறியுள்ளார் நெஹ்ரா.

ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் பயிற்சியாளராகவோ வர்ணனையாளராகவோ புதிய அவதாரம் எடுப்பது குறித்து யோசித்து வருவதாக நெஹ்ரா கூறியுள்ளார். ஒரு வீரராக இல்லாவிட்டாலும், மற்ற வழிகளில் அவரது சேவை தொடரட்டும்.

http://tamil.thehindu.com/sports/article19960036.ece

  • தொடங்கியவர்

ஓய்வு பெறும் நெஹ்ரா: உடல் தகுதி பிரச்சனைகளை தாண்டி நிகழ்த்திய அசாத்திய சாதனைகள்

 

டெல்லியில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் முதல் டி20 போட்டியுடன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

ஓய்வு பெறும் நெஹ்ராபடத்தின் காப்புரிமைAFP Image captionஓய்வு பெறும் நெஹ்ரா

1999-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான நெஹ்ராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 18 ஆண்டுகள் கழித்து இன்றோடு முடிவடைகிறது.

2003 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்ற நெஹ்ரா, பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் நெஹ்ரா எடுத்துள்ளார்.

'நெஹ்ரா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்'

நெஹ்ராவின் பந்துவீச்சு மற்றும் அவரது சாதனைகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் , முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளருமான மதன்லால் பிபிசி தமிழிடம் பேசினார்.

''நெஹ்ராவின் பந்துவீச்சு நுணுக்கங்கள் மற்றும் வேகம் ஆகியவை எப்போதுமே பாராட்டுக்களை பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இந்திய அணியில் விளையாட நாங்கள் அவரை தேர்ந்தெடுத்தபோதே அவர் அணிக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்'' என்று மதன்லால் கூறினார்.

ஓய்வு பெறும் நெஹ்ரா: மறக்க முடியாத தருணங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி தனது உடல்தகுதி பிரச்சனைகளை மீறி நெஹ்ராவால் நீண்ட காலம் விளையாட முடிந்தது என்று மதன்லால் மேலும் தெரிவித்தார்.

''2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நெஹ்ரா அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 2011 உலக கோப்பையிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதே போல் பல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார்'' என்று மதன்லால் மேலும் கூறினார்.

மட்டைவீச்சாளர்களை அச்சுறுத்திய நெஹ்ரா - ஜாஹீர் இணை

''ஒரு நல்ல இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் இந்தியா ஈடுபட்டபோது அணியில் நெஹ்ரா முதன்முதலில் இடம்பெற்றார்.ஜாஹீர் கான் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவுக்காக நெஹ்ரா விளையாடி வருகிறார்'' என்று நெஹ்ரா குறித்த நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உடல் தகுதி பிரச்சனைகளை தாண்டி அசாத்திய சாதனைகள் நிகழ்த்திய நெஹ்ராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடல் தகுதி பிரச்சனைகளை தாண்டி அசாத்திய சாதனைகள் நிகழ்த்திய நெஹ்ரா

1999-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் நெஹ்ரா, பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெஹ்ராவின் மிக சிறப்பான பந்துவீச்சை யாரும் மறக்க இயலாது என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

நெஹ்ரா மற்றும் ஜாஹீர் ஆகிய இருவரும் இணைந்து பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், நெஹ்ராவின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

நெஹ்ராவின் அசாத்திய சாதனை

''சிறந்த ஃபீல்டர் இல்லை, அதே போல் உடல் தகுதி குறித்த பிரச்சனைகளை அதிகம் சந்தித்தவர் என்பது போன்ற பல விமர்சனங்கள் நெஹ்ரா மீது வைக்கப்பட்டாலும், தான் விளையாடிய அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கும் விருப்பமானவராகவே நெஹ்ரா திகழ்ந்தார்'' என்று அவர் மேலும் கூறினார்.

சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்த நெஹ்ராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்த நெஹ்ரா

டெஸ்ட் போட்டிகளில் நெஹ்ரா அதிகம் விளையாடதது இந்தியாவுக்கு இழப்பு என்று குறிப்பிட்ட விஜய் லோக்பாலி, ''தான் செய்துகொண்ட பல அறுவை சிகிச்சைகளையும் தாண்டி 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நெஹ்ரா விளையாடியதே மிகப் பெரிய சாதனை'' என்று தெரிவித்தார்.

''அண்மைக்காலமாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நெஹ்ரா அளித்து வரும் ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் மிகவும் பாராட்டுக்கு உரியது'' என்று அவர் குறிப்பிட்டார்.

1999-ஆம் ஆண்டு, இந்திய அணியில் முதன்முதலில் நெஹ்ரா விளையாடியபோது உடன் விளையாடியவர்கள் அனைவரும் ஏற்கனவே ஒய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் நெஹ்ராவின் சாதனைகள் மற்றும் போராட்டம் போற்றுதலுக்குரியது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நெஹ்ராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

 

http://www.bbc.com/tamil/sport-41828512

  • தொடங்கியவர்

ஆஷிஷ் நெஹ்ரா புத்திசாலி வீரர்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம்

 

 
02chpmuMemonto

ஆஷிஷ் நெஹ்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விராட் கோலி, தோனி.

ஆஷிஷ் நெஹ்ரா புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர் என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப் பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா, தனது சொந்த மைதானமான டெல்லி பெரோஷா கோட்லாவில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 38 வயதான அவர் 19 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார். ஓய்வு பெற்ற அவருக்கு இந்திய அணி வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “ஒரு வேகப் பந்து வீச்சாளராக 19 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியது பெரிய சாதனை. நான் விளையாடிய அணிகளில் புத்திசாலித்தனமாக வீரர்களில் நெஹ்ராவும் ஒருவர். எப்போதுமே அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதை விரும்பக்கூடியவர். ஆட்டத்தின்போது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார். அவர் விடைபெற்று செல்வதை பார்க்க வருத்தமாகவே உள்ளது. எனினும் இது அவரது சொந்த மைதானத்தில் நிகழ்கிறது” என்றார்.

ஆட்டம் தொடங்குதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

http://tamil.thehindu.com/sports/article19962550.ece

  • தொடங்கியவர்

அரங்கம் ஆர்ப்பரித்த நெஹ்ராவின் ஃபேர்வெல் நிமிடங்கள்! #ThankYouAshishNehra

Chennai: 

"ஆஷிஸ் நெஹ்ராவுக்கு யாராவது லாஸ்ட் ஓவர் கொடுப்பாங்களாடா?" என்று அடிதாங்கியைப் போட்டு மொத்து மொத்துனு மொத்துவார் 'மாரி' தனுஷ். தமிழ் சினிமாவில் கலாய்க்கப்பட்ட ஒரே கிரிக்கெட்டர் அவராகத்தான் இருப்பார். நெட்டிசன்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நெஹ்ராவும், அசோக் டிண்டாவும்தான் அவர்களின் பசிக்குத் தீனி. நெஹ்ராவின் படத்தைப் போட்டு '6 பாலுக்கு 37 ரன் வேணுமா? நம்புங்க..நான் இருக்கேன்' என்பதுபோன்ற உச்சகட்ட சர்காஸ்டிக் மீம்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. 'லார்ட் நெஹ்ரா' என்று வஞ்சனை இல்லாமல் வசைபாடப்பட்ட மனிதன் நேற்று ஒரே நாளில் 'நெஹ்ராஜி' ஆகிவிட்டார். சுமார் 42,000 ரசிகர்கள் ஸ்டேண்டிங் ஓவேஷன் (Standing ovation) கொடுக்க, இந்தியக் கேப்டன் விராட் கோலி தோளில் சுமக்க, தன் 'ட்ரேட் மார்க்' புன்னகை சிறிதும் மாறாமல் விடைபெற்றுள்ளார் ( #ThankYouAshishNehra). புன்னகை மாறாமல் 16 ஓவர்கள் ஃபீல்டிங் செய்து, 4 ஓவர்கள் பந்துவீசிச்சென்ற அந்த மனிதனின் கடைசி எமோஷனல் தருணங்கள்...

Ashish Nehra

 

தவான், ரோஹித்தின் அதிரடியைப் பார்க்கவோ, தோனி பறக்கவிடும் ஹெலிகாப்டர் ஷாட்டை ரசிக்கவோ ஃபெரோஸ் ஷா கோட்லா அரங்கம் நிரம்பவில்லை. மண்ணின் மைந்தன் கோலியைப் பார்க்கக்கூட இல்லை. விராட் கோலி எனும் பெயர் பள்ளி வருகைப் பதிவேட்டில் இருந்த காலத்திலேயே, இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய அந்த பௌலருக்கு விடைகொடுக்கத்தான் கூடியிருந்தார்கள் டெல்லிவாசிகள். டாஸ் வென்று கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங் என்றதுமே, உச்சகட்ட ஆனந்தம். நெஹ்ரா கடைசியாகப் பந்துவீசி விடைபெற வாய்ப்பு. தவான் - ரோஹித் இணை வழக்கம்போல் சரவெடி வெடிக்கிறது. ரோஹித் நேற்று டி வில்லியர்ஸ் போல் அடித்த சிக்ஸர்கள்கூட யாரையும் அதிசயிக்கவில்லை. அது ஸ்க்ரீனில் ஓடியபோது, 'நெஹ்ராவைக் காட்டுங்கய்யா' என்ற ஏக்கம்தான். தவான் நியூசிலாந்து பந்துவீச்சை வழக்கம்போல ஆஃப் சைடில் விட்டு விளாசியபோதும் அதே ஏக்கம். அவ்வப்போது அதைத் தணிக்க, கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பியபோதெல்லாம் தீபாவளி கொண்டாடியது, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த டெல்லி.

தவான், ரோஹித் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தபோதும், 'எப்போ 20 ஓவர் முடியும்' என்ற ஆசைதான். ஒருவழியாக தோனியின் முதல் பால் சிக்ஸர், கோலியின் கிளாசிக்கல் சிக்ஸர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, தங்கள் நகரில் இன்னதொரு சரித்திர நிகழ்வை அரங்கேற்றக் காத்திருந்தனர் டெல்லி ரசிகர்கள். கேரி சோபர்ஸின் அதிக ரன் சாதனையை ஜெஃப் பாய்காட் விஞ்சியது இங்குதான். பிராட்மேனின் 29 செஞ்சுரி சாதனையை கவாஸ்கர் சமன் செய்ததும், அவரது 34 சத சாதனையை சச்சின் முறியடித்ததும் இந்த மைதானத்தில்தான். ஒரே இன்னிங்ஸில் பாகிஸ்தானின் பத்து விக்கெட்டுகளையும் பண்டலாகக் கும்பிளே கட்டிச் சென்ற சாதனையும், அந்த ஜாம்பவான் ஓய்வு பெற்ற நிகழ்வும் கூட இந்த மக்களுக்கு முன்புதான். அந்த வரிசையில் அடுத்ததாக....ஆஷிஸ் நெஹ்ராவின் ஓய்வு!

Nehra

202 என்னும் இலக்கை டிஃபண்ட் செய்யவேண்டும். ஆனால் டி-20க்கு இதுவொன்றும் அசாத்திய ஸ்கோர் இல்லை. பந்தைக் கையில் எடுத்துவிட்டு, ரன்-அப் பார்த்துவிட்டு, ஃபீல்டர்களை செட் செய்கிறார் ஆஷிஸ். கண்களில் சற்று கலக்கம். மற்ற பௌலர்களைப் போல் அல்லாமல், கால்களை சற்று அகட்டி வைத்துக்கொண்டு அவர் ஓடிவரும் அந்த 'யுனிக் ரன்-அப்' கிரிக்கெட் அரங்கில் காணப்படுவது அதுதான் கடைசி. ஊரில் கிரிக்கெட் ஆடும்போது, ஜாகிர் கான் போல் குதித்துக்கூட சரியாக வீசிய அந்த இடதுகை பௌலர்களால், இவரைப்போல் அந்த வித்யாசமான ரன்-அப் எடுத்து பெர்ஃபெக்டாக எளிதில் வீசிட முடிந்ததில்லை. அப்படியான அந்த ஸ்பெஷல் ரன்-அப் தனது ஃபேர்வெல்லை எதிர்நோக்கியிருந்தது. மைதானம் முழுதும் 'வி மிஸ் யு நெஹ்ராஜி' என்ற பதாகைகள். எமோஷன்கள் பொங்கத் தொடங்கியது.

கொஞ்சம் சுமாராகத்தான் தொடங்கினார். ஆனால், ஒவ்வொரு பந்துக்கும் கோட்லாவில் ரசிகர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. 1 வைடு, 1 பவுண்டரி வீதம் முதல் ஓவரில் 5 ரன்கள். அவரது இரண்டாவது ஓவரின் முதல் பந்து. லெக் சைட் வீசிய ஷார்ட் பாலை முன்ரோ ஃபைன் லெக் பக்கம் அடிக்க முயல, க்ளவுசில் உரசிச் செல்கிறது. டைவ் அடித்த தோனியின் க்ளவுசிலும் பட்டு கேட்ச் மிஸ்ஸாகிறது. மிகவும் கடினமான வாய்ப்பு. தன் கடைசிப் போட்டியின் ஃபேர்வெல் விக்கெட் மிஸ். வருந்தவில்லை. தன் கன்னம் சுருங்கி, பற்கள் தெரிய உதிர்க்கும் அதே சிரிப்பு. ஐந்தாவது பந்து... கவர் திசையில் முன்ரோ தூக்கி அடிக்க, முந்தைய ஓவரில் தன் சூப்பர்மேன் கேட்சால் குப்திலை வெளியேற்றிய ஹர்டிக் பாண்டியா, அதைப் பிடிக்க பின்நோக்கி ஓடுகிறார். கேட்ச் ட்ராப். ஒரே ஓவரில் இரண்டு வாய்ப்புகள். கோவமோ, ஆதங்கமோ சிறிதுமில்லை. புன்னகை மாறவில்லை. அதுதான் நெஹ்ரா!

Nehra

8-வது ஓவரை வீச மீண்டும் வந்தார். ஆஃப் ஸ்டிக்குக்கு வெளியே வரிசையாக 3 ஷார்ட் பால்கள். நான்காவது பால், திடீரென்று லெக் ஸ்டிக் லைனில் போட்டு வில்லியம்ஸனுக்கு ஷாக் தந்தார். அவர் மிட் ஆஃப் நோக்கி பந்தை அடிக்க, Air-ல் இருந்த பந்தைப் பாய்ந்து பிடிக்கக் கோலி முயல, கஷ்டமான சான்ஸ்தான்... ஆனால், மீண்டும் கையில் பட்டு மிஸ். கோலியின் அந்த முயற்சியைப் பாராட்டி நெஹ்ரா குரல் எழுப்ப, 'இந்த மனுஷனுக்காக ஒரு கேட்சாவது பிடிங்கடா' என்று கோட்லாவே ஏங்கியது. புன்னகை மாறாமல் ஃபீல்டிங் செய்யப் போனார். 16-வது ஓவர், சௌதியின் காலில் பட்டு ஃபைன்-லெக் பக்கம் பந்து விரைய, காலால் அதை 'சிப்' செய்து பிடித்து நெஹ்ரா த்ரோ செய்ய, கோலி முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மெர்சல் ஆனார்கள்.

How's that for footy skills from our very own Nehraji? What do you make of that @YUVSTRONG12 ;) #INDvNZ pic.twitter.com/YaTeJk5d0t

— BCCI (@BCCI) November 1, 2017

ஆட்டத்தின் கடைசி ஓவர். 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி 6 பந்துகள். தன் கடைசிப் போட்டியில் முத்திரை பதிக்கவேண்டும் என்றுதான் எந்த வீரனும் விரும்புவான். வேறு எந்தப் பந்துவீச்சாளராக இருந்திருந்தாலும் யார்க்கர்கள் பறந்திருக்கும். விக்கெட் தேவையில்லை. காரணம், இவர் விக்கெட்டுகளுக்காக விளையாடியதில்லை. தேசத்தின் வெற்றிக்காக விளையாடியவர். 6 பந்துகளில் 61 ரன்கள் எனும்போது அணி வென்றுவிட்டது. இனி விக்கெட் எதற்கு. ஸ்டம்புக்கு அருகிலிருந்து ஷார்ட் ரன்-அப் எடுத்து ஓடிவந்து வீசினார். தன் ஒவ்வொரு பந்தையும் அனுபவித்தார். அந்த ஓவர் முழுதும் நின்றிருந்த ரசிகர்கள், தங்கள் மொபைல்போன் டார்ச்சை அடித்து அவருக்கு Send off கொடுக்கத் தயாரானார்கள். ஒன்று, இரண்டு, மூன்று...ஐந்தாவது பந்து வீசியதும், அந்தக் கண்கள் கொஞ்சம் கலங்கியது. கோலியின் கைகள் ரசிகர்களை நோக்கி எழும்ப, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. 

Ashish Nehra

கடைசிப் பந்து... 'Will that be a fairytale farewell?' - ஹர்ஷா போக்லேவின் அந்த வார்த்தை மெய்யாக, டிவி, ஹாட்ஸ்டார் முன் இருந்தவர்களெல்லாம் பிராத்தனை செய்ய, கோட்லாவில் இருந்த ரசிகர்களின் மனங்கள் உற்சாகச் சத்தங்களிடையே ஊமைகளாகியிருந்தன. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அந்த ஃபுல் டாஸ் வீசப்பட, அதிலும் விக்கெட் இல்லை. ஆனால், அந்தப் புன்னகை மட்டும் மாறவே இல்லை. மைதானத்தைச் சுற்றி ரசிகர்களுக்கு நன்றி செலுத்தியபோதும், கோலி, தவான் தோள்களில் வலம் வந்தபோதும் தன்னுள் எழுந்த உணர்வுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு அவர் சிரிக்க, இத்தனை நாள்கள் அவரைப் பார்த்துச் சிரித்த கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களும் அழத்தான் செய்தனர். 

"உங்களால் மறக்க முடியாத பெர்ஃபாமென்ஸ் எது? இங்கிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பையில் வீழ்த்திய ஆறு விக்கெட்டுகளா?" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்க, "அதுமட்டுமல்ல. நிறைய இருக்கிறது. எனக்கு என்றுமே விக்கெட்டுகள் திருப்தியளித்ததில்லை. 10 ஓவர்கள் நன்றாக வீசியிருப்பேன். விக்கெட் கிடைத்திருக்காது. ஆனால், அந்தச் செயல்பாடு திருப்தியளிக்கும். மோசமான ஃபுல்டாஸ் பந்துக்கோ, ஒரு ஃபீல்டரின் அற்புதமான கேட்ச் மூலமோ கூட விக்கெட் கிடைக்கும். ஆனால், அது என்னைத் திருப்திபடுத்தாது" என்று அவர் கூறியபோது ஒரு கிரிக்கெட் வீரனாக உயர்ந்து நின்றார் நெஹ்ராஜி!

#ThankYouAshishNehra

அவரைத்தான் இத்தனை ஆண்டுகள் நாம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கியுள்ளோம். மீம்ஸ்களால் புண்படுத்தியுள்ளோம். ஆனால், அந்தப் புன்னகை கடைசிவரை மாறியதில்லை. காரணம், அவர் கடைசிவரை இந்தியாவின் வெற்றிக்காக மட்டுமே ஆடினார். 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியபோது சச்சினை மட்டும்தானே கொண்டாடினோம். 10 ஓவர்கள் பந்துவீசி, 3 பவுண்டரிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 39 டாட் பால்கள் வீசி, 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் வெற்றிக்காக, அந்தக் கடைசி விக்கெட்டுக்காக டைவ் அடித்து, விரல் உடைந்து வெளியேறியபோதும் புன்னகைத்த அந்த மனிதனைத்தான் நாம் இத்தனை நாள்களாக அவமரியாதை செய்துள்ளோம்.

Farewell to the man of the moment - Ashish Nehra #ThankYouAshishNehra pic.twitter.com/onuPCxU4r6

ஓய்வு பெறும் கடைசி நாளன்று, 'வி மிஸ் யூ நெஹ்ராஜி' என்று பதாகைகள் பிடித்தால் அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றியா? ஒன்று மட்டும் உண்மை, இந்தியா நேற்று பெற்ற வெற்றியோ, ட்விட்டரில் வலம் வந்த #ThankYouAshishNehra என்ற ஹேஷ்டேகோ, கோலியும், தவானும் தோளில் சுமந்ததோ, கோட்லா மைதானத்தில் பதாகைகள் பிடித்ததோ, டிவியில் பார்த்து கைதட்டியதோ... அல்ல. அவரது திறமையை உணர்ந்த அந்த நொடி நம் மனதில் எழும் குற்ற உணர்வே, நாம் அவருக்குச் செய்யும் மரியாதை! 

http://www.vikatan.com/news/sports/106618-ashish-nehras-last-international-match.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.