Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்

Featured Replies

10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல்

 

 
17CHPMUCHENNAIYINFC

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் சென்னையின் எப்சி அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.   -  படம்: பிடிஐ

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் கோலாகலமாக தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, எப்சி புனே சிட்டி, எப்சி கோவா, நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு எப்சி, டெல்லி டைனமோஸ் ஆகிய அணிகளுடன் இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக களமிறங்குகின்றன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 4 மாத காலம் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் உட்பட 95 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 17-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

புதன் முதல் சனிக்கிழமை வரையிலான ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை இரு ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாலை 5.30 மணிக்கு முதல் ஆட்டமும், இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டமும் நடைபெறும். சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் வரும் 19-ம்தேதி எப்சி கோவா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 10 கிளப்களும் இந்த சீசனுக்காக 77 சர்வதேச வீரர்கள், 166 உள்ளூர் வீரர்களை சுமார் ரூ.132.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இம்முறை விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாடும் லெவனில் கட்டாயம் 6 இந்திய வீரர்கள் இருக்க வேண்டும். அதிலும் ஆட்டத்தின் கடைசி வரை 6 இந்திய வீரர்கள் களத்தில் இருந்தாக வேண்டும்.

இந்த சீசனில் ஐஎஸ்எல் தொடர் புதிய வடிவம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்தத் தொடரை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனால் ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏஎப்சி கோப்பை தொடரில் நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறும். இந்த ஏஎப்சி கோப்பை தொடரானது ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கு இணையாக ஆசிய கண்டத்தில் நடைபெறும் முக்கியத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. கடந்த ஆண்டு இந்த இரு அணிகளும் தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டும் கேரளா அணியை வீழ்த்தி தான் கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியிருந்தது.

ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் இதுவரை 8 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தது. ஒரு ஆட்டத்தில் கேரளா வெற்றி பெற்றிருந்தது. இந்த 8 ஆட்டங்களிலும் கொல்கத்தா தரப்பில் 11 கோல்களும், கேரளா தரப்பில் 8 கோல்களும் அடிக்கப்பட்டன. 3 சீசன்களிலும் கொல்கத்தா அணி, வெளி இடங்களில் விளையாடும் முதல் ஆட்டத்தை வெற்றியுடனே தொடங்கி உள்ளது.

அதனால் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் அந்த அணி இந்த சீசனையும் வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். கேரளா அணியுடன் ஒப்பிடும் போது அனைத்து வகையிலும் கொல்கத்தா அணி பலமாகவே திகழ்கிறது. போட்டி நடைபெறும் கொச்சி நேரு விளையாட்டரங்கில் கொல்கத்தா அணி இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளது. வேறு எந்த அணியும் இங்கு இவ்வளவு அதிகமான கோல்களை அடித்தது இல்லை. மேலும் வெளி இடங்களில் நடைபெறும் ஆட்டங்களில் மற்ற அணிகளை விட கொல்கத்தா சிறப்பாக விளையாடும் திறன் கொண்டது.

கடந்த சீசனில் 7 ஆட்டத்தில் 4-ல் வெற்றியை பதிவு செய்திருந்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டங்களை டிராவும் செய்திருந்தது. அந்த அணிக்காக இம்முறை ராபின் சிங், யுஜென்சன், டேரன் கால்டிரியா, சங்கர் சாம்பிங்கிராஜ், கீகன் பெரிரா ஆகிய 5 இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். இவர்கள் ஐ லீக் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். இதனால் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

கேரளா அணி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. கடந்த சீசனில் அந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தை டிரா செய்த நிலையில், ஒரு ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டது. நட்சத்திர வீரரான வினீத் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சீசனில் அவர் 5 கோல்கள் அடித்திருந்தார். மேலும் கனடா வீரரான இயன் ஹூமியும் இந்த சீசனில் கேரளா அணிக்கு திரும்பி உள்ளார். முதல் சீசனில் கேரளா அணிக்காக விளையாடிய அவர் 5 கோல்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் கொல்கத்தா அணியில் இடம் பிடித்த அவர், 18 கோல்கள் அடித்து மிரட்டினார். தற்போது அவரது வருகை கேரள அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article20497068.ece

  • தொடங்கியவர்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடங்கியது: கேரளா-கொல்கத்தா ஆட்டம் டிரா

 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. கேரளா-கொல்கத்தா அணிகள் இடையிலான தொடக்க ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடங்கியது: கேரளா-கொல்கத்தா ஆட்டம் டிரா
கேரளா-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி
கொச்சி:

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா கொச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க விழா கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. இந்தி நடிகர் சல்மான்கான் நடன கலைஞர்கள் புடை சூழ பேட்டரி சைக்கிளில் மைதானத்தை வலம் வந்தார். பின்னர் அவரும், பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பும் கலக்கலாக நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

201711180841060609_1_gootgdx2._L_styvpf.jpg

அதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் சந்தேஷ் ஜின்கான், அட்லெடிகோ டி கொல்கத்தா கேப்டன் ஜோர்டி பிக்யூராஸ் மோன்டெல் ஆகியோர் விழா மேடைக்கு அழைக்கப்பட்டனர். கேரள அணியின் உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல நடிகர் மம்முட்டி ஆகியோரும் மேடைக்கு வருகை தந்தனர்.

இதன் பின்னர் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கால்பந்தை போட்டி ஒருங்கிணைப்பு குழு சேர்மன் நிதா அம்பானியிடம் மம்முட்டி வழங்க, போட்டி முறைப்படி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
 
26467061.jpg


கலைநிகழ்ச்சிக்கு பிறகு இரவு 8 மணிக்கு அரங்கேறிய முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்சுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முனைப்பு காட்டினர். பந்து கொல்கத்தா பக்கமே (57 சதவீதம்) சற்று அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது.

ஆனால் இரண்டு அணியிலும் கோல் கீப்பர்கள் கச்சிதமாக செயல்பட்டதால் அனைத்து முயற்சிகளும் வீணாயின. குறிப்பாக கொல்கத்தா வீரர் அடித்த ஒரு நல்ல ஷாட்டை, கேரளா கோல் கீப்பர் பால் ராசுப்கா அருமையாக தடுத்து நிறுத்தினார். ஒரு கோலாவது விழாதா? என்று ஏக்கமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. ஐ.எஸ்.எஸ். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி கிடைக்காதது இதுவே முதல் முறையாகும்.

2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடக்கும் ஆட்டத்தில் அறிமுக அணியான ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொள்கிறது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/18084105/1129517/Kolkata-and-Kerala-Play-Out-a-Goalless-Draw-in-ISL.vpf

  • தொடங்கியவர்

இந்தியக் கால்பந்தில் ஐ.எஸ்.எல் பங்கு என்ன... ஐந்து மாதம் நடப்பதால் என்ன பலன்? #ISL

சென்னை நேரு மைதானத்தின் இருக்கைகள் தூசு தட்டப்பட்டுவிட்டது. எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறது பிராக்டீஸ் மைதானமான நேரு பார்க். ஹயாட் ஹோட்டலில் எங்கெங்கும் சென்னையின் எஃப்.சி கிளப் ஜெர்ஸிகள். ஓராண்டுக்குப் பின் சந்திக்கின்றனர் இரு கால்பந்து நிருபர்கள். ஆம், ஐ.எஸ்.எல் (ISL) வந்து விட்டது. நான்காவது சீசன். ஜாம்ஷெட்புர், பெங்களூரு எப்.சி என இரு புது அணிகள். ஆக, இந்தமுறை மொத்தம் பத்து அணிகள். இதுவரை பத்து வாரங்கள் மட்டுமே நடந்த சீசன் இப்போது ஐந்து மாதங்கள் நீள்கிறது. 2014 சீசனில் 70 நாள்களில் 61 போட்டிகள். அடுத்த  இரண்டு சீசன்களில் 79 நாள்களில் 61 போட்டிகள். ஆனால், இந்த முறை அப்படி அல்ல. 108 நாள்களில் 90 போட்டிகள். பிளே ஆஃப் இரு வாரங்கள் நடப்பது கணக்கில் சேராது. வீக் எண்ட் மட்டுமே அதிக மேட்ச் நடக்கும். கிட்டத்தட்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக் போல, ஸ்பெயினில் நடக்கும் லா லிகா போல...

ISL

 

ஒரு வழியாக இந்தியன் சூப்பர் லீக் (ISL), லீக் என்பதன் வடிவத்தை எட்டியுள்ளது. முற்றிலுமாக இல்லை. ஏனெனில், இன்னும் லீக் ஃபார்மட்டுக்குப் பொருந்தாத அரையிறுதி, ஃபைனல் என்ற நடைமுறை எல்லாம் இருக்கிறது. மற்றபடி, களத்தில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைத்திருப்பதும், எந்நேரமும் ஆறு இந்திய வீரர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதும் பாராட்டுக்குரியது. சென்னையின் எஃப்.சி போன்ற கிளப்கள் மார்க்கீ பிளேயர் என, ஃபீல்ட் அவுட்டான மொக்கை வெளிநாட்டு வீரர்களுக்கு லட்சங்களை செலவழிக்கவில்லை என்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் மற்ற கிளப்களும் சென்னையைப் பின்தொடரலாம். பிளேயர்களுக்கு மட்டுமல்லாது, அவர்கள் குடும்பத்தினரும் இந்தியாவில் மூன்று மாதம் இன்பச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கலாம்.

கடந்த முறை கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப்பை ஃபைனல் வரை கொண்டு சென்ற பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பெல், "இந்திய கால்பந்து அணி, FIFA தரவரிசையில் முன்னேற்றம் அடைய ஐ.எஸ்.எல்-தான் காரணம்’’ என்றார். அவர் சொல்வது ஒரு வகையில் உண்மை. இந்தமுறை அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜாம்ஷெட்புர் அணியில், ஏகப்பட்ட இந்திய முகங்கள். பெங்களூரு எஃப்.சி கிளப் ஐ-லீக்கில் இருந்து நேரடியாக ஐ.எஸ்.எல் தொடருக்கு ஷிஃப்டாகி இருப்பதும் இந்தியக் கால்பந்துக்கு நல்லது. ஏனெனில், கிளப் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் அவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. பெங்களூரு எஃப்.சி-யில்தான் சுனில் சேத்ரி, குர்ப்ரீத் சிங் சந்து போன்ற சீனியர் வீரர்கள் உள்ளனர். 

ISL

இந்தமுறை ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வெல்லும் கிளப், ஏ.எஃப்.சி கோப்பையில் விளையாடத் தகுதிபெறும். இதன் மூலம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், ஆசிய அளவிலான கிளப்களுடன் போட்டிபோட வாய்ப்பு கிடைக்கும். அப்படி மோதும்போது இங்குள்ள கிளப் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். எல்லா அணிகளும் ஏ.எஃப்.சி கோப்பையில் விளையாடத் துடிக்கும். அதற்கு அவர்கள் முதலில் ஐ.எஸ்.எல் சாம்பியனாக வேண்டும். முன்பாவது எட்டு அணிகள். இந்தமுறை பத்து அணிகள் என்பதால், முதல் நான்கு இடங்கள் பிடிப்பதற்கே போட்டாபோட்டி இருக்கும். ஆக, ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு புள்ளியும் முக்கியத்துவம் பெறும். 

லீக் நடக்கும் காலம் அதிகரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் கிளப்களுக்கு நல்ல வருமானம். பிளேயிங் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கான செலவும் பெருவாரியாகக் குறைந்துள்ளது. முந்தைய சீசன்களில், மார்க்கீ வீரர் எனப்படும் ஓய்வுபெற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து கைகளைச் சுட்டுக் கொண்ட ஒரு கிளப் உரிமையாளர், இந்த முடிவை வரவேற்றுள்ளார். "சட்டையை முழுதாகக் கழற்றிவிடுவதை விட, அதில் சின்ன ஓட்டை இருந்தால் பரவாயில்லை’’ என்றார். அந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார். 

ISL

ஐ.எஸ்.எல் தொடரைப் பொறுத்தவரை, ஒளிபரப்பு உரிமம் மூலம் 45 சதவீதம், டிக்கெட் மூலம் 15 சதவீதம், ஸ்பான்சர்கள் மூலம் 40 சதவீதம் கிளப்களுக்கு வருமானம் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளப்களுக்கு ஸ்பான்சர் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையின் எஃப்.சி போல, மும்பை அணியும் மார்க்கீ பிளேயருக்குச் செலவழிக்காமல், வெளிநாட்டு வீரர்களின் சம்பளம் மூலம் ஏற்படும் செலவைக் குறைத்துள்ளது. போட்டிகள் வீக் எண்டில் மட்டும் என்பதால் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகம். இந்த வருமானம் இந்திய வீரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.

அடுத்து வீரர்கள்....புதன்கிழமையன்று மியான்மர் அணியுடன் இந்திய தேசிய அணி, ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடியது. ஜீஜே கோல் அடித்ததும் ரசிகர்கள் அவரது ஸ்டைலில் கைகளை உயர்த்திக் கொண்டாடினர். பைசுங் பூட்டியாவும், சுனில் சேத்ரியும் மட்டுமே தெரிந்த இந்திய ரசிகர்களுக்கு ஜீஜேவை அறிமுகப்படுத்தியது ஐ.எஸ்.எல்தான். அந்த அங்கீகாரமே அவரை இந்த இரண்டு ஆண்டுகளில் சூப்பர் ஸ்ட்ரைக்கராக, சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. தடுப்பாட்டக்காரர்கள் சந்தேஷ் ஜிங்கன், பிரதம் கோதல் என அனைவரையும் மைதானத்தில் உற்சாகப்படுத்துகின்றனர் ரசிகர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய அணி எங்கு, எந்தப் போட்டியில் விளையாடுகிறது என்பது பல மீடியாக்காரர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்று அவர்கள் ஆடும் போட்டி ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மைதானத்தில் ரசிகர்கள் பேனர் பிடித்து அமர்ந்திருக்கின்றனர். இந்திய உடையணிந்து ஆடும் வீரனுக்கு அதைவிட என்ன வேண்டும்!

ISL

இந்த அங்கீகாரம் மட்டுமே ஐ.எஸ்.எல் தொடரின் வெற்றி அல்ல. இளம் வீரர்களை அடையாளம் கண்ட வகையிலும் இந்திய அணிக்கு, இந்தத் தொடர் ஒரு சப்போர்டாக இருந்துள்ளது. போன சீசனில் சென்னையின் FC சோபிக்காத நிலையிலும், அசத்தல் ஹீரோவாக உருவெடுத்தார் டிஃபண்டர் ஜெர்ரி. அவர் மட்டுமல்ல, கீன் லீவிஸ்,  ஜிங்கன் எனப் பல்வேறு வீரர்களை லைம்லைட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இளம் வீரர்களை மெருகேற்றவேண்டும் என்ற நோக்கோடு, ஒவ்வோர் அணியும் குறைந்தபடசம் 2 'டெவலப்மென்ட் ' வீரர்களாவது இருக்கவேண்டும் என்ற விதியை அமல்படுத்தியுள்ளனர். அனிருத் தாபா, பொடோ போன்ற வீரர்கள் அடுத்த கட்டத்துக்குப் பயணிக்க, இந்தத் தொடர் மிகச்சிறந்த தளம்.

அணிகளின் கட்டமைப்பும் மாறியுள்ளது. எல்லா அணிகளும் அகாடமிகளை ஏற்படுத்தியுள்ளனர். கிராஸ்ரூட் லெவலிலிருந்து கால்பந்தை கற்றுக்கொடுப்பதுதான் எதிர்காலத்தில் இந்திய அணி ஜொலிப்பதற்கான ஒரே வழி. பெங்களூரு FC அணி, மற்ற ஐ.எஸ்.எல் அணிகளுக்கு முன்பாகவே அகாடமி அமைத்து அசத்தி வருகிறது. புனே அணி இன்னும் ஒரு படி மேலே போய் 18 வயதுக்குட்பட்டோர் அணி, பெண்கள் அணியெல்லாம் அமைத்து, பிரீமியர் லீக் க்ளப் போல் செயல்பட்டு வருகிறது. இவை, கால்பந்தின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அந்த விளையாட்டின் மீதான ஈர்ப்பையும் அதிகரிக்கும். அண்டர் 17 உலகக்கோப்பை சமீபத்தில்தான் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கால்பந்து தெரியாத பலரும் இந்தியா இந்தத் தொடரை நடத்தியதால், அதைபற்றிப் பேசினர். அடுத்த ஒரு மாதத்தில் ஐ.எஸ்.எல் நடக்கிறது. முதல் போட்டி நடக்கும் கொச்சி மைதானம் ஹவுஸ் ஃபுல். 

 

Let's football

https://www.vikatan.com/news/sports/108135-the-impact-of-isl-in-indian-football.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: சென்னையை வீழ்த்தியது கோவா

 

 
football

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வென்றது.
 சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா ஆரம்பத்திலேயே 3 கோல்கள் அடிக்க, இறுதி நேரத்தில் 2 கோல்கள் அடித்தது சென்னை.
 இரு அணிகளுக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோவா ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக இந்த சீசனின் முதல் கோல் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்தது.
 ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் பிரான்டன் ஃபெர்னான்டஸ் பாஸ் செய்த பந்தை கோல் கம்பத்துக்கு அருகே கடத்திச் சென்றார் ஃபெரான் டெலசியா, சென்னை வீரர் மற்றும் கீப்பரின் தடுப்பையும் தாண்டி அற்புதமாக கோலடித்தார்.
 29-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் மானுவேல் லான்ஸரோட்டே தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 39-ஆவது நிமிடத்தில் கோவா 3-ஆவது கோல் பதிவு செய்தது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா 3-0 என முன்னிலை வகித்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் 70-ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் இனிகோ ஸபாடெரியா தனது அணிக்கான கோல் கணக்கை தொடங்கினார்.
 தொடர்ந்து 84-ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் அகஸ்டோ கோலடிக்க, கோவாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனினும், தனது முன்னிலையை தக்க வைக்கும் வகையில் தடுப்பாட்டம் ஆடி, 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
 பெங்களூரு வெற்றி: இதனிடையே, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று தனது முதல் வெற்றியை ருசித்தது பெங்களூரு எஃப்சி அணி.
 அடுத்த ஆட்டம்: திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆட்டம் கிடையாது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/20/ஐஎஸ்எல்-சென்னையை-வீழ்த்தியது-கோவா-2811099.html

  • தொடங்கியவர்

சென்னையைத் தோற்கடித்த அந்த நான்கு தவறுகள்..! #VikatanExclusive #PoduMachiGoalu #LetsFootball #CHEGOA

ஐ.எஸ்.எல் நான்காவது சீஸனை, தோல்வியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எஃப்.சி (#CHEGOA). ஸ்கோர் என்னவோ 3 - 2 என கௌரவமான ஸ்கோர்தான். ஆனால், ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் சென்னை அணி எந்த அளவுக்குத் திணறியது என்று. 39 நிமிடத்தில் மூன்று கோல்கள் அடித்து சென்னையை ரணகளப்படுத்தியது கோவா. இரண்டாம் பாதியில் கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்து, கோவா கோல்கீப்பரின் தயவில் இரண்டு கோல்கள் அடித்து டீசன்டாக ஆட்டத்தை முடித்தது. ஆனால், சென்னையின் எஃப்.சி-யின் திட்டங்களும், அவற்றைச் செயல்படுத்திய விதமும் மிக மோசம். 38 நிமிடத்தில் மூன்று கோல்கள் விழக் காரணம் என்ன. ஒரு ஃபீல்டு கோல்கூட அடிக்க முடியாமல் போனது ஏன். இந்த மோசமான பெர்ஃபாமன்ஸின் காரணம் என்ன. இன்ச் பை இன்ச் அனாலிஸிஸ்...

#CHEGOA

 

`மெரினா அரினா' எனப்படும் நேரு மைதானத்தில் இருந்த 18,213 ஆதரவாளர்களும் முதல் பாதி முடிந்தபோது முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தனர். 14 நிமிட இடைவெளியில் மூன்று கோல்கள் அடித்திருந்தது கோவா. அவர்களின் கோல் போஸ்டையும் பெரிதாக நாம் முற்றுகையிடவில்லை. முதல் பாதியில் சென்னை அணி இவ்வளவு சொதப்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் இந்தச் சொதப்பல் பெர்ஃபாமன்ஸுக்குக் காரணம் பயிற்சியாளர் ஜான் க்ரிகரி வகுத்திருந்த வியூகங்கள்தான். அவர் செய்த நான்கு தவறுகள். 

தவறு 1:

க்ரகரி, நேற்றைய போட்டியில் பயன்படுத்தியது 3 - 4 - 3 ஃபார்மேஷன். அதாவது மூன்று டிஃபண்டர்கள், நான்கு நடுக்கள வீரர்கள், மூன்று ஃபார்வேர்டுகள். இந்த ஃபார்மேஷன் இப்போதுதான் பிரபலமடைந்துவருகிறது. பொதுவாக, கால்பந்து அணிகள் நான்கு டிஃபண்டர்கள்கொண்ட ஃபார்மேஷனையே பயன்படுத்துவார்கள். மூன்று டிஃபண்டர்கள் உள்ளடங்கிய ஃபார்மேஷனைப் பயன்படுத்த வேண்டுமெனில், ஒன்று வீரர்கள் அதற்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வீரர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையின் எஃப்.சி-யைப் பொறுத்தவரை இரண்டுமே இல்லை. டிஃபன்ஸில் ஆடிய தனசந்திரா சிங், செரேனோ, மெய்ல்சன் மூவருமே மூன்று டிஃபண்டர் ஃபார்மேஷனுக்குப் பழக்கப்படாதவர்கள்; ஒன்றாக இணைந்து விளையாடியதும் இல்லை. இந்த `செட்டப்'புக்கு மிகவும் முக்கியமான புரிதல் வீரர்களிடம் கொஞ்சமும் இல்லாதபோது அதைப் பயன்படுத்தியது பயிற்சியாளர் செய்த மிகப்பெரிய தவறு.

#CHEGOA

க்ரிகரி, 1998 - 2002ம் ஆண்டு வரை ப்ரீமியர் லீக்கில் ஆஸ்டன் விலா அணியின் மேலாளராக இருந்தவர். அப்போது அவர் இந்த ஃபார்மேஷனைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். அதனால், இங்கு அதைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், முதல் போட்டியிலேயே பயன்படுத்தியதுதான் மிகப்பெரிய தவறு. 1998-ம் ஆண்டில் ஆஸ்டன் விலா மேலாளர் ஆன புதிதில், அதுவரை அந்த அணி ஆடிய நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனைத்தான் பயன்படுத்தினார். அதன் பிறகு வீரர்களின் தன்மை அறிந்து அவர்களை தன் புதிய திட்டத்துக்குத் தயார்படுத்தினார். சென்னையின் அணியோடு அவர் இருந்த காலம் மிகவும் குறைவு. சென்னையில் பெய்த தொடர் மழையால், `ஃப்ரீ சீஸன்' போட்டிகளும் பயிற்சிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் போட்டியில் வீரர்களுக்குப் பழக்கப்பட்ட நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனோடு களமிறங்கி, பிறகு தன் ஐடியாவைச் செயல்படுத்தியிருக்கவேண்டும்.

தவறு 2:

இதைப் பயன்படுத்தியது சரி, வீரர்களையேனும் அதற்குத் தகுந்தாற்போல களமிறக்கினாரா, இல்லை. `விங் பேக்'கில் கொஞ்சமும் அனுபவமில்லாத, அதைப் பற்றிய ஐடியாவே இல்லாத தோய் சிங், வலது விங் பேக்கில். இனிகோ கால்டிரான், மிட் ஃபீல்டில். இந்த ஃபார்மேஷனில் ஆடும் இரண்டு மிட் ஃபீல்டர்களும் `பாக்ஸ் டு பாக்ஸ்' ஆட வேண்டும். அந்த பொசிஷனில் 35 வயது இனிகோ! இத்தனைக்கும் அவர் வலது விங்கில் ஆடும் டிஃபண்டர். தோய் சிங்கோ சென்ட்ரல் மிட் ஃபீல்டர். ஜெர்மன்ப்ரீத் சிங்குக்குக் காயம். நடுக்களத்தில் அனுபவ வீரர் வேண்டுமென்பதால், அங்கு இனிகோவைக் களமிறக்கியிருக்கிறார் க்ரிகரி. தோய் சிங்காலும் அந்த பொசிஷனில் ஜொலிக்க முடியவில்லை. இனிகோ கால்டிரானின் பெர்ஃபாமன்ஸைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்து, மூன்று நபர் டிஃபண்ஸில் தனசந்திரா சிங் - லெஃப்ட் பேக். அவருக்கும் அந்த ஃபார்மேஷனுக்கும் சுத்தமாக செட் ஆகவில்லை.

#CHEGOA

தவறு 3:

இன்று பல முன்னணி ப்ரீமியர் லீக் அணிகள் 3 - 4 - 3 தான் பயன்படுத்துகின்றன. அந்த மூன்று ஃபார்வேர்டுகளில் இருவர், ஸ்ட்ரைக்கருக்குப் பின்னால் கொஞ்சம் நெருக்கமாக, சென்டராக ஆடுவர். ஆனால், க்ரகரியின் திட்டம் இங்கும் வேறு மாதிரி இருந்தது. இடது விங்கில் ஆடிய போடோவும் சரி, வலதுபக்கம் ஆடிய மிஹெலிவிச்சும் சரி, மிகவும் `வொய்டா'க ஆடினார்கள். அகஸ்டோ, கால்டிரான் இருவருமே டிஃபண்சிவ் மைண்ட் செட் உடையவர்கள். இதனால் கோவாவின் சென்ட்ரல் பகுதியில் சென்னை அணியால் துளியும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய `க்ரியேட்டிவ் ஸ்பார்க்' சுத்தமாக மிஸ்ஸிங்.

தவறு 4:

இடது விங் பேக்கில் ஆடிய ஜெர்ரிக்கு 19 வயது. இடது விங்கராக ஆடிய அபோரிங்டோ போடோவுக்கு 18 வயது. இருவருமே நன்றாகத்தான் விளையாடினார்கள். ஆனால், சேர்ந்துதான் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இருவரும் இணைந்து இரண்டு முறை மட்டுமே `ஒன் - டூ' பாஸிங் செய்தனர். அவையும் கோவா டிஃபண்டர்களால் முறியடிக்கப்பட்டன. இரண்டாம் பாதியில் க்ரிகரி நெல்சன் இடது விங்கராக களம்கண்டார். ஜெர்ரியும் நெல்சனும் இணைந்தபோது சென்னை அணி இடது விங்கில் கொஞ்சம் அச்சுறுத்தியது. அணியின் `லைன்அப்'பை முடிவு செய்தபோதே பயிற்சியாளர் அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். 

பயிற்சியாளர் செய்த தவறுகள் இருக்கட்டும், வீரர்கள்...  தோய் சிங், தனசந்திரா போன்ற வீரர்கள் ஜொலிக்க முடியாமல்போனதற்கு க்ரிகரியின் முடிவுகளையே காரணமாகச் சொல்லலாம். ஆனால், அந்த 18,000 ரசிகர்களும் ஏகோபித்து ஆதரித்த ரஃபேல் அகஸ்டோ திறமையாக ஆடினாரா. கேப்டன் செரேனோ என்ன செய்தார். துணை கேப்டனும், லிவர்பூல் அணியின் முன்னாள் வீரருமாகிய இனிகோ கால்டிரான் தனது தேர்வை நிரூபித்தாரா. கடந்த சீஸனில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய ஜெர்ரி நேற்று ஜொலித்தரா. நிச்சயமாக இல்லை. மிகவும் எதிர்பார்த்த இந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டம்தான் ஆடினர். ஆட்டத்தின் போக்கில், அவர்கள் இழைத்த தவறுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள்...

#CHEGOA

சீன் 1 : கோவாவின் இரண்டாவது கோல்

கோவாவின் பகுதியிலிருந்து பந்தை ட்ரிபிள் செய்து முன்னேறுகிறார் கோவா வீரர் லான்சரோட்டி. கால்டிரான், அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பாஸ் செய்ய வேண்டும். வலது விங்கில் மந்தர் ராவ் தேசாய். ஜெர்ரி அவரை மார்க் செய்யவில்லை. லான்சரோட்டிக்கு அருகில் வருகிறார் எடுவாட்ரோ பெலேஸ். அவரை மார்க் செய்யவேண்டிய அகஸ்டோ, லான்சரோட்டிக்குப் பின்னால் இருக்கிறார். வலதுபக்கம் பிராண்டன் ஃபெர்ண்டான்ஸ். தோய் சிங், செரேனோ இருவரும் அவரை ஃப்ரீயாக விட்டுவிடுகின்றனர். தனசந்திரா சிங் கோரோமினாஸைச் சரியாக கவர் செய்யாமல்போக, அவர் வேகமாக முன்னேறுகிறார். இப்படி லான்சரோட்டிக்கு நான்கு ஈஸி ஆப்ஷன்கள். அந்த அளவுக்குக் தூங்கிக்கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள்.

கோரோவுக்கு பாஸ் போகிறது. பாக்ஸுக்குள் சென்று ஷூட் செய்கிறார். கரன்ஜித் தடுத்துவிடுகிறார். அடுத்து தேசாய் வசம் சிக்குகிறது பந்து. இப்பவும் ஜெர்ரி தவறான இடத்தில் பிராண்டன் வளைந்து நெளிந்து அடிக்கிறார். அதையும் கரஜ்னித் தடுத்துவிட, லான்சரோட்டியை நோக்கிச் செல்கிறது பால். இப்போதும் அவருக்கு அதே நான்கு ஆப்ஷன்கள் இருக்கின்றன. பிராண்டனுக்கு பாஸ் போடுவது மட்டும் கொஞ்சம் சிரமம். மற்றபடி மற்ற மூன்று ஆப்ஷன்களும் சுலபமானவையே. என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கின்றனர், பாக்ஸுக்குள் இருந்த ஆறு சென்னை வீரர்கள். இது ஒருபுறமிருக்க, ரஃபேல் அகஸ்டோ - சென்னை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த வீரர் ஜாகிங் செய்துகொண்டிருக்கிறார். லான்சரோட்டி, கோரோவுக்கு முதல் பாஸைப் போட்டபோது அவருக்கு பத்து அடி பின்னால்தான் இருந்தார் அகஸ்டோ. பாஸ் போட்ட ஒன்பதாவது நொடி, மீண்டும் பாக்ஸுக்குள் அவரிடமே சென்றது பந்து. அகஸ்டோ இன்னும் பாக்ஸைக்கூட நெருங்கவில்லை. ஒரு பெனால்டி கோல் அடித்ததற்கு கொண்டாடித் தீர்த்துவிட்டோம் இதையெல்லாம் மறந்துவிட்டு. மூன்று ஆப்ஷன்கள் இருந்தும் அவரே ஷூட் செய்ய, 29 நிமிடத்தில் இரண்டு கோல்கள் லீட் எடுத்தது கோவா. 

#CHEGOA

சீன் 2 : கோவாவின் மூன்றாவது கோல்

38-வது நிமிடம். அஹ்மதிடம் பந்தை எளிதாக இழக்கிறார் அகஸ்டோ. கோரோவின் பாஸ் லான்சரோட்டியை அடைகிறது. இடதுபுறம் தேசாய் ஃபுல் ஃப்ரீ. கேப்டன் செரேனோ ஆளையே காணவில்லை. மூன்றாவது கோல். இந்த சீஸனில் இந்தியரின் முதல் கோல். 38 நிமிடத்தில் ஆட்டத்தையே முழுமையாக இழந்திருந்தது சென்னையின் எஃப்.சி. செரேனோ இப்படிப் பல தருணங்களில் காணாமல்போனார். மெய்ல்சன் அவ்வப்போது அதை பேலன்ஸ் செய்துகொண்டிருந்ததால், கோவா அணியின் கோல் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

சீன் 3: 65-வது நிமிடம். 

சென்னை அணி சொதப்பியது தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, முன்களத்திலும்தான். கால்டிரான் கொடுத்த லாங் பாஸை ஜெர்ரிக்குத் தட்டிவிட்டு முன்னேறுகிறார் நெல்சன். இப்போது ஜெர்ரியின் வசம் பந்து. 3 - 4 - 3 ஃபார்மேஷனுக்கு முக்கியமானதே co-ordinationதான். ஒரு வீரரிடம் பந்து இருக்கும்போது, பாஸ் செய்ய அவருக்கு மூன்று ஆப்ஷன்களாவது இருக்க வேண்டும். அதுவும் நடுக்களத்தில் இருக்கையில் குறைந்தது மூன்று ஆப்ஷன்கள் இருக்க வேண்டும். ஆனால், ஜெர்ரிக்கு அந்த ஆப்ஷன்கள் இல்லை. மிட் ஃபீல்டர்கள் பிக்ரம்ஜித், அகஸ்டோ இருவரும் கம்பெனி கொடுக்கவில்லை. வலதிலிருந்து இடது சென்டர் பேக் பொசிஷனுக்கு மாறியிருந்த கேப்டன் செரேனோவும் அட்ரஸ் இல்லை. ஜீஜே-வுக்கு பாஸ் கொடுத்தால் possession இழக்க நேரிடும். போடோ வொய்டாக இருக்கிறார். ஜெர்ரியை நோக்கி நகராமல் அப்படியே நிற்கிறார். பாஸ் கொடுக்கக்கூடிய ஒரே ஆப்ஷன் நெல்சன். அவர் இருப்பது offside-ல். என்ன செய்வான் அந்த 19 வயது இளைஞன். ஜீஜேவுக்குத் தூக்கி பாஸ் போட, டிஃபண்டர்களின் பிரஷரால் எதுவும் செய்ய முடியவில்லை.

#CHEGOA

இந்த மூன்று சம்பவங்களிலேயே அகஸ்டோ, கால்டிரான், ஜெர்ரி, செரேனோ என நம்பிக்கை நாயகர்கள் அனைவரின் பெர்ஃபாமன்ஸும் தெரிந்துவிட்டது. ஜெர்ரி ஃபார்வேர்டு கேமில் கொஞ்சம் நம்பிக்கை அளித்தாலும் டிஃபண்ஸில் கோட்டைவிட்டார். முதல் கோல் விழவும் அவர் செய்த தவறுதான் காரணம். சென்னையின் கார்னர் க்ளியர் செய்யப்பட, காலில் இருந்த பந்தை அவர் தாரைவார்த்துக்கொடுக்க, கவுன்டர் அட்டாக்கில் இந்த சீஸனின் முதல் கோலை அடித்தார் கோரோமினாஸ். செரேனோ ஏரியல் பால்கள் ஜெயித்தாலும் அடிக்கடி காணாமல்போயிருந்தார். அகஸ்டோ இரண்டு, மூன்று நல்ல மூவ்கள் செய்தார். ஆனால், அணியிலேயே மிக மோசமான பெர்ஃபாமன்ஸ் அவருடையதுதான். நடுக்களத்தை மொத்தமாக கோவாவுக்குப் பரிசளித்துவிட்டார். ஜீஜே - இரண்டு ஸ்டிரைக்கர்களுள் ஒருவராக ஜொலிப்பவர், out and out ஸ்ட்ரைக்கராக ஆடத் திணறுகிறார். 

 

இப்படி, பயிற்சியாளர் முதல் நட்சத்திர வீரர்கள் வரை அனைவரின் ஆட்டமும் சொதப்பலே. இந்த ஆட்டத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது, 18 வயது போடோ மற்றும் க்ரகரி நெல்சன் ஆகியோரின் ஆட்டம்தான். போடோ பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஓரளவு நம்பிக்கை கொடுத்துள்ளார். இந்தத் தோல்வி இருக்கட்டும், அடுத்த போட்டியில் வெற்றிபெற தவறுகளைத் திருத்திக்கொள்வதில்தான் இருக்கிறது. டிஃபன்ஸும் நடுக்களமும் தரம் உயர்ந்தால் மட்டுமே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வெல்ல முடியும்.

https://www.vikatan.com/news/sports/108350-reason-for-chennaiyin-fcs-loss-against-goa.html

  • தொடங்கியவர்

சூப்பர் கிங்ஸ் போல மாஸ் கம்பேக் கொடுத்த சென்னையின் எஃப்.சி! #ISL2017 #LetsFootball

 
 
Chennai: 

ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், அடுத்த போட்டியில் தெறிக்கவிடுவதுதான் சி.எஸ்.கே ஸ்டைல். அவர்களைப் போலவே நேற்றிரவு நடந்த போட்டியில் பட்டையைக் கிளப்பியது சென்னையின் எஃப்.சி அணி. நான்காவது ஐ.எஸ்.எல் சீசனின் முதல் போட்டியில் கோவாவிடம் தோற்றிருந்த நிலையில், நேற்று நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியைப் பந்தாடி, இத்தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னையின் எஃப்.சி. ரஃபேல் அகஸ்டோ, முகமது ரஃபி இருவரும் கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. #ISL2017 

ISL

 

வென்றது எப்படி?

ஞாயிற்றுக்கிழமை மாலை கோவா அணிக்கெதிராக இந்த சீசனைத் தொடங்கியது சென்னை அணி. புதிய பயிற்சியாளர் கிரிகரியின் திட்டங்கள் கைகொடுக்காமல் போக, 34 நிமிடங்களில் 3 கோல்கள் வாங்கியது. 3-4-3 ஃபார்மேஷனில் டிஃபன்ஸ், மிட்ஃபீல்ட் என அனைவரும் சொதப்பினர். முன்களமும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. எதிரணியின் தவறுகளால் இரண்டாம் பாதியில் எப்படியோ 2 கோல்கள் கிடைத்தது. ஆனால், நேற்றைய போட்டியில் பக்காவாகத் திட்டமிட்டுத் தூக்கியது சென்னையின் எஃப்.சி.

பெரும்பாலான கால்பந்து அணிகள் பயன்படுத்தும், ரிஸ்க் இல்லாத 4-2-3-1 ஃபார்மேஷன். 4 நபர் டிஃபன்ஸுக்குத் திரும்பியது சென்னை. 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். கடந்த போட்டியில் சொதப்பிய தனசந்ரா சிங் வெளியே. சப்ஸ்டிட்யூட்டாகக் களமிறங்கி அசத்திய நெல்சன், பிக்ரம்ஜித் இருவரும் உள்ளே. அதிரடி காட்டினார் கிரகரி. செரேனோ - மெய்ல்சன் டிஃபன்ஸிவ் கூட்டணி அரணாக நின்றது. பாக்சுக்குள் நார்த் ஈஸ்ட் வீரர்கள் அடித்த லாங் பாஸ்களை பக்காவாக டீல் செய்தார் கேப்டன் செரேனோ. ஃபுல்பேக் இருவரும் பக்கா. இனிகோ கால்டிரான் டிஃபன்ஸ், ஃபார்வெர்ட் இரண்டிலும் ஆசம்! 

ISL

முந்தைய போட்டியில் தடுமாறக் காரணமே நடுகளம்தான். இந்தப் போட்டியில் டிஃபன்ஸிவ் மைண்ட்செட் கொண்டவர்களான பிக்ரம்ஜித் சிங், தனபால் கனேஷ் இருவரும் அந்தக் குறையைப் பூர்த்தி செய்தனர். நார்த் ஈஸ்ட் வீரர்கள் நடுகளத்தில் வித்தை காட்ட முடியாத வகையில் சிறப்பாக விளையாடினர். ஃப்ரான்செஸ்கோ ஃப்ரான்கோ, நெல்சன் இருவரும் முன்களத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு பிரச்னையாக இருந்தனர். 

11-வது நிமிடம். நார்த் ஈஸ்ட் அணியிடமிருந்து பந்தைக் கைப்பற்றி, அற்புதமாக 'ஒன்-டூ' பாஸ் செய்தனர் கிரகரி நெல்சன், ரஃபேல் அகஸ்டோ இருவரும். அகஸ்டோ ட்ரிபிள் செய்து, பாக்சினுள் நின்றுகொண்டிருந்த ஜீஜேவுக்கு lofted pass கொடுத்தார். அந்தப் பாஸை க்ளியர் செய்ய நினைத்து, நார்த் ஈஸ்ட் டிஃபண்டர் அப்துல் ஹக்கு ஹெட் செய்ய, அது சரியாகப் படாமல் கோல் போஸ்டினுள் விழுந்து 'own கோல்' ஆனது. 

நடுகளத்தில் பந்தை வசப்படுத்தியிருந்த பிக்ரம்ஜித் சிங், வலது புறமிருந்து இடது பக்கம் பந்தை 'க்ராஸ்' செய்தார். க்ரிகரி நெல்சனால் அதை கோலாக மாற்ற முடியாது. எனவே, அவர் அருகில் நின்றிருந்த ஜீஜேவுக்குச் செல்லும் வகையில், மெதுவாக 'ஹெட்' செய்தார். ஆனால், நார்ட் ஈஸ்ட் டிஃபண்டரின் காலில் பட்டு பந்து 'டிஃப்ளக்ட்' ஆனது. சட்டென்று சுதாரித்துக்கொண்ட ரஃபேல் அகஸ்டோ, இடது காலால் ஷூட் செய்து, அணியின் இரண்டாவது கோலை அடித்தார். 24 நிமிடங்களில் 2 கோல் முன்னிலை பெற்றது சென்னை.

ISL

84-வது நிமிடத்தில் நெல்சனை, நிர்மல் சேத்ரி foul செய்ய சென்னை அணிக்கு பாக்சுக்கு அருகிலேயே ஃப்ரீ-கிக் கிடைத்தது. ஸ்பெய்ன் வீரர் ஜாமி கேவிலான்  அதை இடது டாப் கார்னரைக் குறிவைத்து அடித்தார். நார்ட் ஈஸ்ட் கோல்கீப்பர் ரெஹனேஷ், அதைத் தடுக்க முயல, அவர் கையிலும், கோல்போஸ்டிலும் பட்டு பந்து rebound ஆனது. ஜீஜேவுக்குப் பதிலாகக் களமிறங்கிய முகமது ரஃபி ஹெடர் மூலம் கோலடித்து அசத்தினார். 

 

அடுத்த போட்டியில் சென்னை அணி, புனேவை சந்திக்கிறது.  இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ள சென்னை அணி, இந்த ஓய்வுக்குப் பிறகு அதே வேகத்தில் பாய்வது அவசியம்.

https://www.vikatan.com/news/sports/108816-chennaiyin-fc-beats-north-east-united.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.