Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் மணியோசை

Featured Replies

தேர்தல் மணியோசை

மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு?   

ஆகவே, எல்லாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. இரவு பகலாக, ஓய்வு ஒழிச்சலின்றி, தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன.   
கூட்டணி அமைப்பது, இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டுவது, அவர்களை உஷார்ப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, மக்களைக் கவரக்கூடிய (ஏமாற்றக்கூடிய) தந்திரங்களை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது, அதற்கான வார்த்தைகளைத் தேடுவது.... என்று அரசியல் கட்சிகள் கடும் ‘பிஸி’யாகி விட்டன.   

அதிலும், இந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் (25 சதவீதம்) கூடுதலாக வலியுறுத்தப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு பெண்களைத் தயார்படுத்தும் வேலைகளும் கூடிவிட்டன.  

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற மக்களுக்குச் சிரிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. 

“தேர்தலுக்காக இப்படி உற்சாகமாக வேலை செய்கின்ற கட்சிகள், மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உஷாராகச் செயற்பட்டிருக்கலாமே” என்று எண்ணுகிறார்கள். “அப்பொழுதெல்லாம் இந்தக் கட்சிகளும் இந்தத் தலைவர்களும் எங்கே போயிருந்தார்கள்? இப்பொழுது தேர்தலுக்காகக் கூட்டு வைத்துக் கொள்கிறவர்களும் கூட்டணி அமைப்பவர்களும் சனங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூட்டு வைத்துக் கொள்ளவில்லையே; கூடிப் பேசவில்லையே? வரட்டும், வரட்டும், தேர்தலுக்கு வீடு தேடி வரட்டும். அப்பொழுது பார்த்துக்கொள்ளுவோம்” என்று தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள்.   


மக்களின் இந்தக் கொதிப்புப் புரிந்து கொள்ளக்கூடியதே; அதில் நியாயமும் உண்டு. ஆனால், அவர்கள் இந்தக் கொதிப்போடு, அது உண்டாக்கும் கோபத்தோடு, அவர்களுக்குள் உருவாகியிருக்கும் தீர்மானங்களோடு தொடர்ந்தும் இருக்க முடியாது.   

அதற்கிடையில், மக்களின் சிந்தனையைக் கொள்ளையிடும் ஆட்கள், களத்திலிறங்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள். இந்தக் கட்சிகளின் அடியாட்களாகவும் தொண்டரடிப்பொடிகளாகவும் இருக்கும் ஊடகங்களும் அபிப்பிராய உருவாக்கிகளும் மக்களின் கோபத்தையும் தீர்மானங்களையும் கரைத்து, திசை மாற்றி விடுவார்கள். இதற்காக ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மக்கள் அமைப்புகள் என்ற பெயர்களில் ஒரு பெரிய படை களமிறங்கும்.  

 அவர்கள், தேர்தல் கதைகளைப் பற்றி, தாங்கள் விரும்பும் கட்சிகள், கூட்டணிகளைப் பற்றிய புனைவுகளையெல்லாம் மக்களின் தலைக்குள்ளே நாசுக்காகத் திணிப்பார்கள். 
இப்பொழுதே இந்த வேலைகள், மெல்ல மெல்ல ஆரம்பமாகி விட்டன. சமூக வலைத்தளங்கள், வெகுஜன ஊடகங்கள் எல்லாம், இந்த மாயவலை விரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. 

  இனி ஊடகவியலாளர் சந்திப்புகள், அறிக்கைகள், கூட்டங்கள், தொலைக்காட்சி-  வானொலி விவாதங்கள், பேட்டிகள், அறிவிப்புகள், விளம்பரங்கள், ஆய்வுகள், கருத்துக் கணிப்புகள் என்று பெரியதொரு திருவிழாவே களை கட்டப்போகிறது. “தேர்தல் என்றாலே இப்படித்தானே. இதிலே என்ன புதிசாக இருக்கு? எதற்காக நாம் இதைப்பற்றி அலட்ட வேணும்?” என்று சிலர் கேட்கக்கூடும்.   

அப்படிச் சாதாரணமாக எண்ணிக்கொண்டு, நாம் இருந்து விடமுடியாது. இப்படித்தான், ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள்,‘அபாயகரமான தந்திரங்களால்’ திசை திருப்பப்படுகிறார்கள்; பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். 

அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் மட்டுமல்ல, இந்தக் கட்சிகளையும் இந்த அரசியல்வாதிகளையும் ஆதரித்துப் பேசும் ஆய்வாளர்கள், ஊடகங்கள், புத்திஜீவிகள், மக்கள் அமைப்புகள் போன்றவற்றாலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.   

மக்களைத் தோற்கடித்து, தலைவர்களையும் தரப்புகளையும் வெல்ல வைக்கிற காரியமே தொடர்ந்தும் நடக்கிறது; இப்பொழுதும் இதுதான் நடக்கப்போகிறது. 
ஆகவே, முடிந்தவரையில் இதை எதிர்ப்பதும், இந்த அபாயத்தைப் பற்றிச் சொல்வதும், நமது கடமையாகிறது. குறைந்தபட்ச அறத்தை, நீதியை, நியாயத்தைக் கொண்டிருக்கும் எவரும் செய்ய வேண்டிய காரியம் இது.   

இந்த அபாய நிலையைப்பற்றி, ஊடகங்களே முன்னின்று, மக்கள் நிலைநின்று, பேசவேண்டிய கடப்பாடுண்டு. ஆனால், அவை பெரும்பாலும் இதைச் சரியாகச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.   

ஏனென்றால், பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் பக்கசார்புடையவையாகவே உள்ளன. விதிவிலக்காக - மக்கள் நலன்சார்ந்து இயங்குகின்ற ஊடகங்களும் உண்டு. ஆனால், அவற்றில் உள்ள ஊடகவியலாளர்கள், அரசியல் சார்புடையவர்களாக இருக்கிறார்கள்.   
ஆகவே, அரசியல் சார்பு நிலைப்பட்டே ஊடகங்கள் இயங்கும் நிலையே அதிகமுண்டு.

முக்கியமாகத் தேர்தல் காலத்தில் ஊடகங்கள், மக்கள் நலனைக் குறித்துச் சிந்திப்பதை விடவும், தமது இலாபநட்டக் கணக்கைப் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாக உள்ளன. 
  
இத்தகைய பின்னணியிலேயே, தற்போதைய சூழலைப் பற்றி, நாம் பேச வேண்டியுள்ளது. ஒப்பீட்டளவில் இன்று, மக்களுக்குரிய அதிக பட்ச ஜனநாயகச் சாத்தியத்தைக் கொடுக்கக்கூடிய ஊடகங்கள் என்பது சமூக வலைத்தளங்களே.   

ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்ப் பரப்பிலுள்ள சமூக வலைத் தளங்களிலும் நோய்க்கூறுகள் பரவியுள்ளன. சில சந்தர்ப்பங்களில் மிகக் கீழான அளவுக்குச் சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இதனால், குறைந்தபட்சப் பொறுப்புணர்வும் கண்ணியமும் கூட இல்லாமல் போய்விடுகிறது.   

சமூக வலைத்தளங்களைப் போல, வெகுஜன ஊடகங்கள், எல்லை கடந்து பொறுப்பற்றுச் செயற்பட முடியாது. சட்டரீதியான பிரச்சினைகளில் சிக்க வேண்டியிருக்கும். சமூக வலைத்தளங்களில் இந்தப் பிரச்சினை குறைவு. ஆகவே, அவை எல்லை மீறி விடுகின்றன.   

யாருக்கும் கருத்துகளை முன்வைக்கும் உரிமை உண்டு. யாரும் யாரையும் ஆதரிக்கலாம்; நிராகரிக்கலாம். அதுவும் அவர்களுடைய உரிமை. 

ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படையான நியாயங்கள், தர்க்கபூர்வமான நிலைப்பாடுகள் அவசியமானவை. கண்ணியமும் பொறுப்புணர்வும் முக்கியம். 
ஏனெனில், தவறான எதுவுமே, மக்களை - சமூகத்தை பாதிக்கிறது. ஆகவே, முடிந்தவரையில் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, மக்களைப் பற்றிய அக்கறையுடையோர் முயற்சிக்க வேண்டும்.    

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி, தமிழ், முஸ்லிம் தரப்பு சூடாகியுள்ளது. இந்தப் பத்தியில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதைப்போல, கூட்டணிகளை அமைப்பதிலும் வியூகங்களை உருவாக்குவதிலும் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. பெண் வேட்பாளர்களைக் கண்டு பிடிப்பதற்காக பெரும்பாடெல்லாம்படுகின்றன. தினமும் புதுப்புதுச் சேர்க்கைகள் நடக்கின்றன. இது கணத்துக்குக் கணம் சூடான செய்திகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.   

தமிழ்த் தரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் பிரேமச்சந்திரன்) அணி பிரிந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி விலகிச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (12) யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நடத்திய சந்திப்பொன்றில் தெரிவிக்கும்போது, இந்த விலகலைப் பகிரங்கமாக நேரில் தெரிவித்திருக்கிறார். 

அதற்கான, தன் தரப்புக் காரணங்களை முன்வைத்த அவர், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன், ஒரு புதிய கூட்டை வைத்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார். 

இதை, அந்தச் சந்தர்ப்பத்தில் உடனிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் அணி) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணி உருவாகவுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.  

 இந்தப் புதிய கூட்டணியில், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான உரையாடல்கள் நடந்துள்ளதாக ஆனந்தசங்கரிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.   

இப்படி இந்தப் புதிய கூட்டணி அமையுமாக இருந்தால், அது எந்த அடிப்படையில் இணையும், வேலை செய்யும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், ஆனந்தசங்கரியும் கஜேந்திரகுமாரும் எதிரெதிர் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 

முன்னொரு காலத்தில், தமிழ்க் காங்கிரஸில் ஆனந்தசங்கரி இருந்தார் என்பது உண்மை என்றாலும், இப்போது அவர் வேறு அடையாளமுள்ள ஆள். ஆகவே இதற்கான  சாத்தியப்பாடுகள் குறைவானதே.   

ஆனால், ‘தேர்தலில் இதையெல்லாம் பார்க்க முடியுமா? இவர்கள் என்ன புரட்சிகரமான அரசியல் முன்னெடுப்பாளர்களா? இந்த அரசியலில் அயோக்கியன், யோக்கியன் என்ற பேதமெல்லாம் கிடையாது. எலெக்ஷன் எண்டு வந்தாலே எல்லோரும் அண்ணன் தம்பிதான்” என்று நீங்கள் சிம்பிளாக இதைக் கடந்து போய் விடலாம். நடைமுறையும் இப்படித்தான் உள்ளது. 

ஆனால், குறைந்த பட்சமாகவேனும் சிறிய அளவிலேனும் வேறுபாடுகள், நிலைப்பாடுகள் குறித்த தனித்தன்மைகள் இருக்க வேண்டாமா?   

இதேபோலத்தான், சுரேஷ் விலகிச் செல்வதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு, ஈ.பி.ஆர்.எல்.எவ் பின் இன்னொரு தரப்பான, வரதராஜப்பெருமாள் - சுகு ஸ்ரீதரன் அணியை உள்ளிழுக்கும் முயற்சியில் தமிழரசுக்கட்சி முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

அத்துடன், ஆனந்தசங்கரியை இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில், சுமந்திரன் தரப்பு வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவான தரப்பாக முன்னிலைப்படுத்துவதே இதனுடைய நோக்கமாகும். முன்னர் இருந்த பகைமையெல்லாம், தேர்தல் கூட்டு என்றவுடன் எப்படித்தான் காணாமல் போகிறதோ? இதனால்தான் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்கிறார்கள்?   

இப்படியே இன்னும் நம்பவே முடியாத பல புதிய பிரிவுகளும் கூட்டுகளும் அவற்றைப் பற்றிய செய்திகளும் என்று தேர்தல் விழாக்காலம் அமையப்போகிறது. 

இதற்குத் தோதாக, தமிழ் அரசியலில் பயன்படுத்தப்படும் சுயாட்சி, சமஷ்டி, வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிகாரப் பரவலாக்கம், போர்க்குற்ற விசாரணை (இதைச்சில தரப்புகள் பேசாமல் விடக்கூடிய சாத்தியங்களும் உண்டு) காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியற்கைதிகள் விடுதலை, படையினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு என்ற வாய்பாட்டு வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும் வேலையும் நடக்கப்போகிறது.   

இதில் எவை சாத்தியமாகும்? எவற்றைச் சாத்தியப்படுத்தலாம்? அவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது? என்ற விளக்கமோ அக்கறையோ யாருக்குமே இருக்கப்போவதில்லை. ஏனெனில், இவையெல்லாம் சாத்தியப்படுத்தப்பட்டாலென்ன? விட்டாலென்ன? யார் பிறகு இதைப்பற்றிக் கேட்கப்போகிறார்கள்?   

ஆனால், இந்தத் தரப்புகள் ஒன்றும் அரசியலுக்கும் புதியவை அல்ல; இவை அத்தனையும் கடந்த காலத்தில் குப்பை கொட்டிய தரப்புகளே. 

 தமிழ்ச்சமூகம் இன்று சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியாமல், மேலும் புதிய பிரச்சினைகளை உற்பத்தியாக்கிய அதிவிசேடத் தரப்புகள். ஆகவே, கடந்த காலத்தில் தங்களின் செயற்திறனையும் மக்கள் நேயத்தையும் நிரூபித்தவையே, மக்கள் முன் செல்வதற்குத் தகுதியானவையாகும். குறைந்த பட்சமாக 
ஈ.பி.ஆர்.எல்.எவ்  (ஸ்ரீதரன்) அணி, மக்கள் நேயத்தோடு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அண்மைக் காலமாகச் செயற்பட்டதுண்டு. 

அதையும் தமது பெருங்கட்சிப் பண்பாட்டுக்குள், இந்தச் சேற்றுக்குள் இழுத்து, விழுத்தி விடுவதற்கே பெருங்கட்சிகள் முயற்சிக்கின்றன.   

பெருங்கட்சிப் பண்பாடென்பது, கட்சி நலனை, தலைமையின் பாதுகாப்பை, அதன் அடையாளத்தையே முன்னிலைப்படுத்தும். அத்தகைய ஒரு மரபு வலுப்பெற்று விட்டது. இதனால்தான், மக்களுடைய ஏனைய பல அடிப்படைப் பிரச்சினைகள் கவனிக்கப்படாமல், பேசப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

 மக்களுக்கான வேலை வாய்ப்பு, வீதிப்புனரமைப்பு (வன்னி, மற்றும் கிழக்கு மாகாணக் கிராமிய உள்ளக வீதிகள்), உடல் உறுப்புகளை இழந்தோர் நலனோம்பல், கிராமிய அபிவிருத்தி, விவசாயிகளின் பிரச்சினைகள், கடற்றொழிலாளர்களுடைய நெருக்கடி, வறுமை ஒழிப்பு அல்லது சமூகப் பொருளாதார விருத்தி, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சினைகள், தேவைகள், பனை,தென்னை வளத் தொழிலாளர்களின் பிரச்சினைகள், இடைவிலகும் மாணவர்கள் விவகாரம், இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான வீடு, தொழில், வாழ்வாதாரம், கல்வி போன்றவற்றுக்கான ஏற்பாடு, சமூக, பிரதேச வேறுபாடற்ற வளப்பகிர்வு, பொதுச் சுகாதாரம் மற்றும் சூழலியல், ஆறுகள், குளங்கள், காடுகள், வனஜீவராசிகள் பாதுகாப்பு (இயற்கை வளப் பேணுகை), பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகள் என எதைப்பற்றியும் இந்தக் கட்சிகள் அக்கறைப்படுவதில்லை; இனியும் இதுதான் நடக்கப்போகிறது.   

ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோரி, மக்களே தொடர்ந்தும் போராடவேண்டும். அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள். அரசியல்வாதிகள், அவ்வப்போது வந்து தலையைக் காட்டி விட்டுப் போய் விடுவார்கள்.  

இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்கப்போவதே இல்லை. இதெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் முதன்மைப் பிரச்சினைகளே. இவற்றின் பக்க விளைவுகள், பின்விளைவுகள்,சமூக விளைவுகள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. மிகப் பாதகமானவையே.   

ஆனால், இதை யாருமே பேசுவதில்லை. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பான பதவிகளில் இருப்போரும் குரல் கொடுக்கக்கூடிய புத்திஜீவிகளும் பேசாமல், கவனிக்காமலே உள்ளனர். இது எவ்வளவு பாரதூரமான பிரச்சினை. மிகப் பெரிய தவறு.   
இதற்குள்ளேயே உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள்....   

எனவே இந்தத் தேர்தலும், ஏற்கெனவே வந்து, கடந்து போன தேர்தல்களில் ஒன்றாகத்தான் அமையப்போகிறதா? அல்லது மக்கள் புதிய அடையாளங்களைத் தாம் தேர்தலில் வெல்லக்கூடிய, மக்கள் நலன் சார்ந்த தரப்புகளைத் தெரிவு செய்யப்போகிறார்களா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-மணியோசை/91-207108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.