Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்?

Featured Replies

மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்?

0
23131040_561310064249507_382378312997164

மன்னார்

ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. எனவே மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக அஞ்சலி செலுத்தும் போது மக்கள் அவர்களைப் பயமின்றி பின் தொடர்வார்கள் என்று நான் கட்டுரை எழுதி இருக்கிறேன். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அதே மக்கள் பிரதிநிதிகள் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தும் பொழுது ஏன் அவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது? ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை அவர்கள் ரிஸ்க் எடுப்பதாக கருதப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்; அதிகரித்து வரும் சிவில் ஜனநாயக வெளிக்குள் அதே அரசியல்வாதிகள் நினைவு கூர்தலை தமது வாக்கு வேட்டை அரசியலுக்காக பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுவதனாலேயே அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை அவர்கள் துணிந்து முன் வந்த பொழுது சமூகம் அவர்களை மதித்தது. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதனால் அவர்கள் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தும் பொழுது அவர்களுக்கு ஒப்பீட்டளவில் ஆபத்துக்கள் குறைவாக இருந்தன. எனவே அவர்கள் முன்னே செல்ல மக்கள் பின்னே சென்றார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அந்த அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் தங்களை உயிருள்ள மாவீரர்களாக காட்டிக்கொள்ள முற்பட்ட பொழுதே விமர்சனங்கள் எழுந்தன.

நிலைமாறு கால நீதியின் நான்கு தூண்களில் ஒன்றான இழப்பீட்டு நீதி என்ற பகுதிக்குள் நினைவு கூர்தலுக்கான உரிமை வலியுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு சின்னங்களை எழுப்பி நினைவு கூர்வதற்கு உரித்துடையவர்கள் என்று இழப்பீட்டு நீதி கூறுகிறது. எனினும் இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போது நினைவுகூர்தலை ஒழுங்குபடுத்திய ஒரு கத்தோலிக்க மதகுருவை அரச புலனாய்வு துறை விசாரணை செய்தது. இம்முறை கடந்த சில வாரங்களாக மாவீரர் நாளை ஒழுங்குபடுத்தி வரும் கட்சி சாரா சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை புலனாய்வு துறையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் கடந்த ஆண்டுகளை விடவும் இம்முறை அதிகரித்த அளவில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படலாம் என்றே தெரிகிறது.

23794928_1996197110591759_27434588373971

சாட்டி

இது விடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நிலமைகள் வேறுபடுகின்றன. தமிழ் பகுதியெங்கும் மாவீரர் நாளை ஒரு குடையின் கீழ் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இருப்பதாக தெரியவில்லை. கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் இவ்வேற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. இவர்களுக்கிடையே ஒருங்கிணைப்போ, மையப்படுத்தப்பட்ட திட்டமிடலோ இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு கிளம்பிய விமர்சனங்களை அடுத்து இம் முறை பொதுச்சுடரை அரசியல்வாதிகள் ஏற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே தெரிகின்றன. அச்சுடரை மாவீரர்களின் உறவினர்களே ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக காணப்படுகின்றது. அதே சமயம் அந்த உறவினரை எந்த அடிப்படையில் தெரிந்தெடுப்பது என்பதிலும் வாதப்பிரதிவாதங்கள் உண்டு.

கடந்த ஆண்டு பொதுச்சுடர் பற்றிய சர்ச்சை எழுந்த பொழுது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் என்னிடம் பின்வருமாறு கேட்டார். “மாவீரர்களின் உறவினர்கள் எல்லாருமே மாவீரர்களின் கனவுகனை சுமப்பார்கள் என்றில்லை இரத்தஉரித்துக்கள் எல்லாருமே இலட்சியத்தின் உரித்துக்களாகவும் இருக்க வேண்டும் என்றில்லை. எனவே அந்த இலட்சியத்தை ஏதோ ஒரு வழியில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் அரசியல்வாதி அப் பொதுச்சுடரை ஏற்றலாம் தானே” என்று. ஆனால் புலிகள் இயக்கத்தின் இலட்சியத்தொடர்ச்சி என்று கூறத்தக்க அரசியல்வாதிகள்; எத்தனை பேர் அரங்கில் உண்டு? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

2009 மேக்குப் பின்னரும் முன்னால் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தமது தியாகிகளை தனித்தனியாக நினைவு கூர்ந்து வருகின்றன. இன்று வரையிலும் ஒரு பொது தியாகிகள் தினத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந் நிலையில் மாவீரர் நாள் எனப்படுவது புலிகள் இயக்கத்திற்குரியது. அந்த நாளை அனுஸ்ரிப்பதும் துயிலும் இல்லங்களைப் பராமரிப்பதும் ஏதோ ஒரு விதத்தால் அந்த இயக்கத்தின் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுப்பதுதான். அதைக் கட்சி சாரா அமைப்புக்களோ சிவில் அமைப்புக்களோ முன் வந்து செய்வதில் அடிப்படையான வரையறை உண்டு. ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கான சட்டத் தடைகளும் பயங்கரவாத தடைச்சட்டமும் அப்படியே உண்டு. இந்நிலையில் புலிகளின் நேரடி அரசியல் வாரிசுகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தனி நபர்களோ அமைப்புக்களோ ஆபத்துக்குள்ளாகக் கூடிய அரசியல் சூழலே இப்பொழுதும் உண்டு. இந்த ஆபத்தை எதிர் கொண்டு ஓர் அமைப்பாக மேலெழுவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கும் ஒரு சூழலில்தான் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அந்த இடத்தை கைப்பற்றுகிறார்கள்.

6-1024x683.jpg

கிளிநொச்சி

சில மாதங்களுக்கு முன்பு துயிலுமில்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்றி அவற்றைப் பிரதேச சபைகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தாரர். துயிலுமில்லங்களை அவை முன்பு எப்படி இருந்தனவோ அப்படித்தான் பேண வேண்டுமென்றும் அங்கே உயிரியல் பூங்கா எதையும் உருவாக்கக்கூடாது என்றும் அதற்கு எதிர்ப்புக் காட்டப்பட்டது. ஆனால் பிரதேச சபைக்கூடாக உத்தியோகபூர்வமாக துயிலுமில்லங்களை நிர்வகிப்பதென்றால் உயிரியல் பூங்கா என்ற ஓர் உருமறைப்பு அவசியமென்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றைத் துயிலுமில்லங்களாகவே பேணுவதென்றால் அதற்கு சட்டத்தடைகள் உண்டு என்றும் அதைப் பிரதேச சபையால் செய்ய முடியாது என்றும் அப்பொழுது சுட்டிக்காட்டப்பட்டது.

அதேசமயம், அரசியல்வாதிகள் துயிலுமில்லங்களை தமது வாக்கு விளையும் வயல்களாக கையாளும் ஒரு நிலமையை கட்டுப்படுத்துவதும் கடினம. அவர்களுடைய தொழில் அதுதான். பூனை பாலைக் கண்டதும் தன் தியானத்தை கலைப்பது போல அரசியல்வாதிகளும் மக்கள் திரளும் எல்லாத் களங்களையும் தமது வாக்கு நோட்டை நோக்குநிலையில் இருந்தே கையாளுவார்கள். அதல்லாத இலட்சியவாத நோக்கு நிலையில் இருந்து நினைவுகூர்தலை செய்வதென்றால் அதற்கு மக்கள் இயக்கங்களையும், செயற்பாட்டு இயக்கங்களையும் தொடங்க வேண்டும். அவ்வாறான மக்கள் இயக்கமோ செயற்பாட்டு இயக்கமோ அற்றதோர் வெற்றிடத்தில் தான் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் துயிலுமில்லங்களை தத்தெடுக்கப் பார்க்கின்றார்கள்.

இவ்வாறு அரசியல்வாதிகள் துயிலுமில்லங்களை தத்தெடுப்பதை விடவும் மாவீரரின் உறவினர்கள் அதை செய்தால் அது ஒப்பீட்டளவில் புனிதமாக இருக்கும் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனாலும் முன் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கேட்டது போல இரத்தஉருத்துக்கள் எல்லாருமே இலட்சிய உருத்துக்களாகவும் இருப்பார்கள் என்றில்லை. அதே சமயம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அதை செய்யும் போது வரும் ஆபத்துக்களை விடவும் உறவினர்களுக்கு குறைந்தளவு ஆபத்தே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உறவினர்கள் நினைவு கூர்தலைச் செய்யும் பொழுது அது அரசியலாக பார்க்கப்படாமல் ஒரு சடங்காக அல்லது ஆற்றுப்படுத்தலாக அல்லது தனிப்பட்ட துக்கம் கொண்டாடுதலாகவே அதிக பட்சம் பார்க்கப்படும். இது காரணமாகவே அரசியல்வாதிகள் செய்வதை விடவும் உறவினர்கள் அதை செய்யலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
23795428_552954981708980_349348962870982
ஆனால் இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். மாவீரர் என்று சொல்லப்படுவோர் தனிப்பட்ட காரணங்களுக்காக தம் உயிரை விடவில்லை ஒரு பொது இலட்சியத்திற்காக போராடிய ஓர் இயக்கத்தின் உறுப்பினர்களாகவே அவர்கள் உயிரை துறந்தார்கள். எனவே அவர்ளை நினைவு கூர்தல் என்பது எல்லா விதத்திலும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அரசியலற்ற ஓர் அமைப்பு அதை முன்னெடுக்க முடியாது. மாவீரர்களின் கனவிற்கு ஓரளவிற்கு கிட்டவாக வரும் ஓர் அமைப்போ கட்சியோ அல்லது மக்கள் இயக்கமோ அதை செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்கும் இது பொருந்தும். நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியான இழப்பீட்டு நீதிக்குக்கீழ் உரிய அமைப்புக்களை நிறுவி நினைவு நாட்களை அனுஸ்டிப்பதற்கு தமிழ் மக்கள் முழு உரித்துடையவர்களே. அப்படி ஒரு பொது அமைப்பு மாவீரர் நாளையும் துயிலுமில்லங்களையும் பொறுப்பேற்கும் பொழுது 2009 மேக்குப் பின்னரான புதிய அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்பவே மாவீரர் நாளை அனுஸ்ரிக்க வேண்டியிருக்கும்.

2009 மேக்கு முன்பு வரை புலிகள் இயக்கம் பலமாக இருந்த பொழுது அதன் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் மாவீரர் நாள் ஏறக்குறைய ஒரு வழிபாடு போல ஒழுங்கு செய்யப்பட்டது. உணர்ச்சிகரமான அந்நாளை நோக்கி பல வாரங்களுக்கு முன்பிருந்தே பொதுசன உளவியல் தயாராக்கப்படும். முடிவில் சுடர்களை ஏற்றுவதோடு அவ் வழிபாடு அதன் உச்சக்கட்டத்தை வந்தடையும். எனினும் போரின் இறுதி மாதங்களில் அந்த வழிபாடும் நெருக்கடிக்குள்ளாகியது. இடம் பெயர்வுகளின் பொழுது துயிலுமில்லங்கள் கைவிடப்பட்டன. தற்காலிகத் துயிலுமில்லங்களில் சவப்பெட்டிகளுக்கும் பஞ்சமேற்பட்டது. ஒரு சவப்பெட்டியே பல வித்துடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. வித்துடல்கள் பெட்டிகளின்றி புதைக்கப்பட்டன. ஒரு வித்துடலை வைத்த பெட்டி காய்வதற்கிடையில் பல வித்துடல்கள் வரிசையாக வந்து நின்றன. இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிகத் துயிலுமில்லத்தில் சவப்பெட்டிகள் காய்வதற்காக மரக்கிளைகளில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தன. அந்நாட்களில் மாவீரர் வழிபாடானது வழமை போல நடக்கவில்லை. தமிழில் தோன்றிய ஒரு நவீன வீர யுகத்தின் இறுதிக்கட்டம் அது

23844641_1601889136556495_75801375557961

விஸ்வமடு

.புலிகள் இயக்கம் பலமாக இருந்தது வரை மாவீரர் நாள் உரையை அதன் தலைவர் ஆற்றினார். பிரதான பொதுச்சுடரையும் அவரே ஏற்றினார். ஏனைய பொதுச்சுடரை தளபதிகள் ஏற்றினர். ஆனால் 2009 மே மாதத்தோடு அந்த யுகம் முடிவிற்கு வந்து விட்டது. 2009 மேக்கு முன்பு மாவீரர் நாள் எப்படி அனுஸ்டிக்கப்பட்டதோ அதை அப்படியே நூறு வீதம் பின்பற்றி இனிவரும் காலங்களில் அனுஸ்டிப்பது கடினம். மாவீரர் நாள் பேருரையை ஆற்றுவது யார்? பிரதான பொதுச்சுடரை ஏற்றுவது யார்? போன்ற கேள்விகளைச் சுற்றி எழக்கூடிய விவாதங்கள் யாவும் இறந்தவர்களை அவமதிப்பவைகளாகவே அமைய முடியும். புலிகள் இயக்கம் எந்தவோர் அரசியல் இலக்கை முன்வைத்துப் போராடியதோ அந்த இலக்கிற்கு ஒப்பீட்டளவில் கிட்டவாக வரும் ஒரு கட்சி அல்லது ஓர் அமைப்பு மேலெழும் பொழுது காலம் மேற்படி கேள்விகளுக்குரிய பதிலைக் கண்டுபிடிக்கக்கூடும்.

அப்பொழுதும்கூட 2009 மேக்கு முன்பு அனுஸ்டிக்கப்பட்டதைப் போல அந்த நாளை அனுஸ்டிக்க முடியாது. தழிலில் தோன்றிய ஒரு நவீன வீரயுகத்தின் காப்பியகால நினைவுகளாக அவை காலப்போக்கில் மாறி விடும். எனவே மாவீரர் நாளும் உட்பட ஏனைய எல்லா நினைவு நாட்களையும் புதிய காலத்தின் புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப அனுஸ்டிப்பதே பொருத்தமாக இருக்கும். ஒரு வீர யுகத்தை இப்பொழுதும் அபிநயிக்க நினைப்பது அரசியல்க் கோமாளிகளையே உருவாக்கும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அரசியல் அரங்கில் நடப்பவை அவ்வாறுதான் காணப்படுகின்றன. பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்கள் ஆகி விட்டார்கள். அவர்களில் சிலர் இறந்த காலத்தைத் தத்தெடுக்கப் பார்க்கிறார்கள்.

23472301_563523360694844_227085277001116

மன்னார்

இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களும் அதை ஆதரிக்கும் தமது கட்சித்; தலைமையை பம்மிக்கொண்டு ஆதரிப்பவர்களும் அல்லது எதிர்க்கத் திராணியற்றவர்களும் விக்னேஸ்வரனை கவிழ்க்க நினைப்பவர்களும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுக்களில் காணப்படுகிறார்கள். இடைக்கால அறிக்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துவது என்பது ஓர் அக முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் இது ஓர் அகமுரண்பாடு அல்ல. இது மிகத் தெளிவான ஒரு வாக்கு வேட்டை உத்தி. மாவீரர் நாளுக்குப் பின் மறைப்பெடுத்துக்கொண்டு இடைக்கால அறிக்கையோடு தம்மை சுதாகரித்துக்கொள்வது என்பது தமது வாக்காளர்களையும், மாவீரர்களையும் ஏமாற்றுவதுதான். ஓர் உத்தியாகத்தானும் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் எவரும் மாவீரர் நாளை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் நினைவு நாளையும் எந்தவொரு தியாகிகள் தினத்தையும் ஒழுங்குபடுத்தத் தகுதியற்றவர்களே.

ஆட்சி மாற்றத்தின் பின்னரான அதிகரித்த சிவில் ஜனநாயக வெளி எனப்படுவது தமிழ் மக்களுக்கு நினைவு கூர்வதற்கான ஒரு வெளியை ஓரளவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல நிலைமாறுகால நீதியின் வரையறைகளைப் பரிசோதிப்பதற்கும் அது உதவியுள்ளது. அது மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசாங்கத்தின் முகமூடிகளைக் கண்டுபிடிப்பதற்கும் அது உதவியுள்ளது. அது மட்டுமல்ல தமிழ்த் தலைவர்களின் கையாலாகாத் தனத்தையும், வழிஞ்சோடித் தனத்தையும், நபுஞ்சகத் தனத்தையும் அது தோலுருத்திக் காட்டியுள்ளது. இந்த வரிசையில் மாவீரர் நாளும் தமிழ் மிதவாத அரங்கிலுள்ள நடிப்புச் சுதேசிகளையும், வாய்ச்சொல் வீரர்களையும் இரட்டை நாக்கர்களையும் அம்பலப்படுத்தப் போகின்றதா?

http://www.nillanthan.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.