Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள்

Featured Replies

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள்
 

‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’ என்றவாறாக வைரமுத்துவின் வரிகள் இடம்பெற்றுள்ளன.   

அதேபோலவே, தற்போதைய கள நிலைவரங்களின் பிரகாரம், ‘புலி இருந்தாலும் பலம்; அது செத்தாலும் பலம்’ என்பது போல ஆகிவிட்டது. புலிகளின் மௌனத்தின் பின், புலிகளைத் தமிழ் மக்கள் மீள நினைக்க மறந்தாலும், புலிகளின் பகைவர்கள் அவ்வப்போது அவர்களைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.    

ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்த பிற்பாடு, நடைபெற்ற தேர்தல்களின் போது, மேடையமைத்து பிரசாரங்களில் ஈடுபட்டோர், வாக்கு வேட்டைக்காக புலிகளின் புரட்சி கீதங்களை இசைத்தனர். வடக்கு, கிழக்கில் அரசியல் நடத்தும் தமிழ்க்கட்சிகள் இவ்வாறான கீதங்களை இசைப்பது பெரிய விடயம் அல்ல.   

ஆனால், புலிகளைக் கொடிய பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்த, தற்போதும் செய்து வருகின்ற, ஐனாதிபதி தலைமை தாங்குகின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் கூட்டத்தில், புலிகளின் கீதங்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளன. அதுவும் இது யாழ்ப்பாணத்திலேயே நடைபெற்றுள்ளது.   

முகநூலில் புலிகளின் பாடல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றைத் தரவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால், சந்தியில் ஒலிபெருக்கி மூலம் ஒலி பரப்பியவர்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள்?   

இவ்வாறு புலிகளின் பாடல்களை ஒலிபரப்பியவர்கள்,  தாம் அரசியல் நன்கு செய்யத் தெரிந்த அரசியல்வாதிகள் எனக் கருதலாம். இதன் மூலமாகத் தமிழ் மக்களை வசியப்படுத்தலாம் எனவும் நினைக்கலாம். ஆனால் இங்கு, ஒலிபரப்பப்பட்ட ‘நித்திரையா தமிழா’ என்ற பாடலில், ‘அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமி இப்பூமி தானடா; அப்புகாமியை ஆள இங்கு நீ விட்டது ஏனடா’ என்ற வரிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.   

அடுத்து, ‘பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது; போகும் இடம் தெரியாமலே’ என்ற பாடல் 1995இல் இடம்பெற்ற (30.10.1995) யாழ்ப்பாணத்தின் பாரிய மக்கள் இடப்பெயர்வு வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளி வந்த பாடல் ஆகும்.   

இந்த இடப்பெயர்வுக்கு காரணமானவர்கள் அந்தக் காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்ட, சந்திரிகாவைத் தலைவியாகக் கொண்ட பொதுஜன முன்னணி ஆகும்.   

இதுவரை காலமும், தமிழ் மக்கள் வாக்களித்த தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களுக்கு ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை என்று உள்ளூராட்சித் தேர்தல் மேடைகளில், தேசியக் கட்சிகளின்  தமிழ்ப்  பிரதேச முகவர்கள் கூறுகின்றனர்.   

அவ்வாறெனின், இந்த அமைப்பாளர்கள் அல்லது முகவர்கள் தமது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வயிற்றில் அடித்து, அவர்களின் குடும்பத்தினர் பசித்திருக்க, அவர்கள் காலாகாலமாகத் தொழில்செய்த, வளமான கடல் வளத்தைத் தெற்குக்கு அள்ளிக் கொண்டு போய் இலட்சாதிபதியாகும் தென்பகுதி மீனவர்களின் அடாவடியை நிறுத்த முடியுமா? தற்போதும் வேகமாக நடந்து வரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியுமா?   

தமிழ் மக்களின் ஏகோபித்த நீண்ட கால அரசியல் அபிலாஷை சமஷ்டி (கூட்டாச்சி) ஆகும். ஆனால், தென்பகுதித் தலைமைகள் கூட்டாச்சிக்கு இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளார்கள். அடிக்கடி தென்பகுதித் தலைமைகள் தமது கூட்டங்களில் அழுத்திக் கூறி வருகின்றார்கள்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டிக்குச் சமமான அதிகாரத்தைக் கேட்கின்றது. தமிழர்கள்  அவ்வாறு கோரட்டும். ஆனால், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே தீர்வு என தென்பகுதித் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தெளிவாகச் சித்திரித்துக் கூறப்படுகின்றது; விளக்கப்படுகின்றது.    

தெற்கு சிங்களத் தலைமைகள் ஒற்றையாட்சி என்ற ஒற்றை வரியில், ஒய்யாரமாக ஒழித்து விளையாடுகின்றார்கள். இந்த அரசியல் விளையாட்டை இனியும் விளையாடுவார்கள்.   

ஆகவே, தமிழ் மக்களது மனதில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கும் சமஷ்டித் தீர்வு என்ற தீர்வுப் பெட்டகத்தை, தென்பகுதித் தேசியக் கட்சிகள்  வழங்கப் போவதில்லை என்பது மட்டும் நிறுத்திட்டமான உண்மை.   

ஆகவே, அவர்கள் சார்பில் வடக்கு, கிழக்கு வாழ் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திடம் வாக்குக் கேட்கும் அவர்களது தமிழ் முகவர்கள், என்ன அரசியல்த் தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகின்றனர் என்பது முக்கியமாகும்.    

வெறுமனே வேலைவாய்ப்புகள் வழங்கல், தெருக்கள் அமைத்தல் - திருத்துதல், உதவித்திட்டங்கள் வழங்கல் என்பவற்றுக்கு அப்பால், தீர்வுத்திட்டம் தொடர்பில் இவர்களால் எவ்வளவு தூரம் பயனிக்க முடியும்?   

இறுதியுத்தம் நடைபெற்ற காலங்களில் (2009) தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதைத் தடுத்து நிறுத்தவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் வடக்கு தமிழ் அங்கத்தவர், உள்ளூராட்சி மேடையில் அண்மையில் தெரிவித்திருந்தார்.   

ஆனால், போர் ஓய்ந்த பின்னரும் தமிழர்கள் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவைகளை அழிக்கும் செயற்பாட்டில் அந்த நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவராகக் கடமையாற்றிய பெஞ்சமின் டிலக்ஸ் தெரிவித்துள்ளார்.   

இலங்கையில் நடைபெற்றது இனச் சுத்திகரிப்பே என்பதுடன் அது தற்போதும் தொடர்வதாக அவர் கூறியுள்ளார். ஆகவே, அவர்களால் அமைதிக் காலத்தில் நடைபெறும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தும் திராணி உள்ளதா?   

தற்போது உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டி, ஐக்கிய தேசியக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீட்டுத்திட்டம் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத அவல நிலையே நீடிக்கின்றது. அதற்கிடையில் மிகவும் அவசரமாக தமிழர் பூமியை அபகரிப்பு செய்யும் இத்திட்டத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா?   

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு என மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன.   

அதற்காக மஹிந்த (சுதந்திரக்கட்சி) ஆட்சி புரிந்த காலப் பகுதியில், வவுனியாவில் கொக்கச்சான்களம் எனும் தமிழ் மக்களின் பூர்வீக மண், போகஸ்வௌ எனச் சிங்கள நாமம் இடப்பட்டு, தற்போதைய சிங்களக் கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாகத் தெரிவு செய்தது, தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் வீடமைப்பு அமைச்சு ஆகும்.   

ஆகவே, தெற்கில் பேரினவாத தேசியக்கட்சிகள் அவ்வப்போது தமக்குள் வேற்றுமை பாராட்டினாலும், தமிழ் மக்களது ஆணி வேரை ஆட்டிப்படைக்கும் கைங்கரியங்களில் வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக, ஒருமித்துச் செயற்பட்டவர்கள் செயற்படுவார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.   

இந்தியாவின் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) ஆகிய மாநிலக் கட்சிகளே அங்கு ஆட்சியை அலங்கரிக்கின்றன. அதனை அறுத்தெறிய புதுடில்லியை மையமாகக் கொண்ட தேசியக் கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன.   

அதேபோலவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்க் கட்சிகள் அங்குள்ள பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்ற ஆசனங்களை முழுமையாகக் கைப்பற்றாமல் தடுப்பதற்கு, கொழும்பை யையமாகக் கொண்ட தேசியக் கட்சிகள் கங்கணம் கட்டி, சபதம் எடுத்து நிற்கின்றன.   

கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரைப் போட்டியிட்டு நடாத்தியது இந்த இரண்டு கட்சிகளும் ஆகும். 

எழுபது வருட காலமாக அரசியல்தீர்வு தொடர்பில், காலம் கடத்தும் மற்றும் தட்டிக்கழிக்கும் கைங்கரியத்தையும் அதேவேளை தமிழ் மக்களது வளமான இருப்பை இல்லாமல் ஒழிக்கும் திட்டத்தையும் கனகச்சிதமாக இவ்விரு கட்சிகளும் செய்கின்றன.   

ஆகவே, தமிழ் மக்களது இருப்பை அழிக்கின்றன என்பதை நன்கு விலாவாரியாக அறிந்தும் அறியாதது போல அக்கட்சிகளது தமிழ் முகவர்கள் பலவித பாசாங்கு காட்டி வடக்கு, கிழக்கில் வாக்கு யாசகம் கேட்கின்றனர்.  

முப்பது வருட கால அஹிம்சைப் போரிலும் முப்பது வருட ஆயுதப் போரிலும் அதற்காகப் போராடியவர்களின் கோரிக்கைகள் வெறும் வேலைவாய்ப்போ, வீதி அபிவிருத்தியோ, வாழ்வாதாரமோ அல்ல. மாறாகத் தமிழர்கள், தமது பிறப்புரிமையான, உயர்ந்த இலட்சியமான இறைமையுடன் கூடிய, நீடித்து நிலைத்த சுதந்திர வாழ்வு ஆகும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கண்ணாடி-வீட்டிலிருந்து-கல்-எறிபவர்கள்/91-211203

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.