Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை!

Featured Replies

“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை!

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்"

"நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்"

இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை.

ஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக, மும்பை, டெல்லி, புனே ஆகிய பெருநகரங்களுக்கு பல தசாப்தங்களாக விற்கப்பட்டு வரும் பெண்களின் கதை இது.

செளதி அரபியாவுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவது குறித்து அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை உள்ளூர் காவல் துறை, தொடர்ந்து மறுத்து வருகிறது.

இப்படியான சூழலில் பிபிசி செய்தியாளர் ஹிருதயா விஹாரி அனந்தபூர் மாவட்டத்தில், பாலியல் தொழிலிருந்து மூன்று பெண்களை சந்தித்து உரையாடினார். இந்த பெண்கள் தாங்கள் எவ்வாறு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறத்தப்பட்டோம் என்று விஹாரியுடன் பகிரிந்து கொண்டார்கள்.

இனி அந்த பெண்களின் வார்த்தைகளில்:

"என் பெயர் ராமதேவி. என் 12 வயதில் என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள். நான் என் மாமியார் வீட்டில் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளானேன். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், எனக்கு எதிரான வன்முறை மட்டும் குறையவே இல்லை. என்னால் அந்த வலிகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் என் பிறந்தவீட்டிற்கு திரும்பி வந்துவிட்டேன்"

"அங்கு எனக்கு புஷ்பா என்னும் மாற்றுதிறனாளி தோழியானார். அவர் ஒரு விடுதியில் பணியாற்றி வந்தார்."

"அந்த நாட்களில் எங்கள் இருவருடனும் தினமும் ஒரு பெண் பேசுவார். ஒரு நாள் எங்களை திரைப்படத்திற்கு அவர் அழைத்தார். நான் என் குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு, அவருடன் திரைப்படம் பார்க்க சென்றேன்"

"ஆனால், அங்கு நாங்கள் மயக்கமடைந்தோம். விழித்து பார்த்தபோது, எங்களுக்கு அந்நியமான ஓர் இடத்தில் இருந்தோம். அங்கு அனைவரும் இந்தியில் பேசிக் கொண்டு இருந்தார்கள். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை. இந்தச் சூழலிலேயே மூன்று நாங்கள் இருந்தோம். பின்புதான் புரிந்தது, என்னையும், புஷ்பாவையும், அந்தப் பெண் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார் என்றும், நாங்கள் இப்போது மஹாராஷ்ட்ரா மாநிலமான பிவாண்டியில் இருக்கிறோம் என்றும். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மன்றாடினோம். ஆனால், எங்களுடைய அழுகுரல் யாருடைய செவியையும் எட்டவில்லை. என் ஆறு வயது மகளை நினைத்தபோது, எனக்கு அழுகை வந்தது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று நின்றேன்"

பாதிக்கப்பட்ட பெண்

"அவர்கள், நான் அணிந்திருந்த அனைத்து தங்க நகைகளையும் பறித்துக் கொண்டார்கள். என் தாலியைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவர்கள், மாற்றுதிறனாளியான புஷ்பாவையும் விட மறுத்தார்கள்"

"ஒரு நாள் அவர்கள் எங்களிடம் நன்றாக அலங்காரம் செய்துக் கொள்ள சொல்லி நிர்பந்தித்தார்கள். அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஆண்களை மகிழ்விக்க சொன்னார்கள்." என்று கூறும் போதே உடைந்து அழுகிறார்.

கண்ணீரை துடைத்தப்படி மீண்டும் அந்த துயர்மிகுந்த நாட்களை நினைவுகூறுகிறார், "ஆறு மாதங்கள் சென்றன. நான் தினமும் என் மகளை நினைத்து அழுவேன். அவர்கள் என் கரங்களையும், என் கால்களையும் கட்டி, என் கண்களில் மிளகாய் தூளை கொட்டினார்கள். என்னால் அந்த வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு என்றும் முறையாக நல்ல உணவு அளித்தது இல்லை. நான் அதுமாதிரியான சூழலில்தான் ஓராண்டுக்கு மேல் இருந்தேன்"

"நான் தொடர்ந்து அவர்களுடன் சண்டை இட்டு வந்தேன். இதனால் அவர்கள் என்னை அந்த இடத்தை விட்டு அனுப்ப ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் புஷ்பாவை அனுப்ப மறுத்துவிட்டார்கள். நான் புஷ்பாவிற்காக அவர்களிடம் சண்டையிட்டேன்."

"பின் அவளையும் அனுப்ப சம்மதித்தார்கள். எங்கள் பயண செலவாக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்."

இந்த துயரமான நாட்களிலிருந்து மீண்டு தன் வீட்டை அடைந்த போது அங்கு தனக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்ததாக கூறுகிறார் ராமதேவி.

"நான் என் வீட்டிற்கு சென்றபோது, என் பெற்றோர் நான் இறந்துவிட்டதாக நினைத்ததாக கூறினார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வந்தார்கள். இதன் காரணமாக அவர்களால், என் மகளுக்கு முறையான உணவளிக்க முடியவில்லை. நான் என் மகளை அணைத்து தூக்கி, `உன் அம்மா எங்கே என்று கேட்டபோது' அவள், `என் அம்மா இறந்துவிட்டார்' என்று கூறினாள். அந்த நாளை இப்போது நினைத்து பார்த்தாலும், என்னை அறியாமல் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது" என்று கூறியவர் அப்படியே மெளனம் ஆகிறார்.

"என் மகள் கூறிய அந்த வார்த்தைகளை கேட்டு, உண்மையாக அன்று இறந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம் என் தற்கொலை முடிவை மாற்றியது. ஆம்...நான் மட்டும் அல்ல, என்னைபோல பல பெண்கள் அந்த பாலியல் விடுதியில் இருக்கிறார்கள் தானே? நான் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்க எண்ணினேன். நான் எனக்கு நேர்ந்த அனைத்து விஷயங்களையும் சிவப்பு தன்னார்வ அமைப்பிடம் கூறினேன். அவர்களை அழைத்துக் கொண்டு பிவாண்டிக்கு சென்றேன். அங்கிருந்து முப்பது பெண்களை மீட்டோம்."

பாதிக்கப்பட்ட பெண்

"நான் இப்போது என் கணவருடன்தான் வசித்து வருகிறேன். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால், என் அண்டை வீட்டார் தொடர்ந்து என் கடந்த காலத்தை நினைவுப்படுத்தி என்னை வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்கள்.பக்கத்து வீட்டு ஆண்கள் என்னை தவறாக அழைக்கிறார்கள்"

வார்த்தைகளால் தொடர்ந்து காயப்படுத்தும் இவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்கிறார் ரமாதேவி.

மீண்டும் அவர் தன் கணவருடன் சேர்ந்துவிட்டார். அவர்கள் இருவரும் இப்போது தினக்கூலிக்களாக கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த மோசமான சூழ்நிலையிலிருந்து ரமா 2010ஆம் ஆண்டு மீட்கப்பட்டு விட்டாலும், அவருக்கு அரசு உதவிகள் கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. 2012ஆம் ஆண்டு அவருக்கு அரசு, நிவாரணமாக 10,000 கொடுத்தது.

பார்வதியின் கதை

"என் பெயர் பார்வதி. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும், நான் வீட்டுவேலை பணிக்காக ஒரு தரகர் மூலமாக செளதிக்குச் சென்றேன். எனக்கு வேறு வழியும் இல்லை, நான் உழைத்துதான் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற சூழ்நிலை. ஆனால், செளதி சென்றவுடன் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் என்பது எனக்கு புரிந்துவிட்டது"

"முதல் ஒரு வாரம் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன். பின் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். அந்த இடத்திற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும், என்னை பொறுத்த வரை அது ஒரு நரகம்."

"பல ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்து வந்தார்கள். 90 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், பாலியல் வல்லுறவுக் கொள்ள முயற்சித்தார். அந்த முயற்சியிலிருந்து கடினப்பட்டு தப்பினேன்."

"அடுத்த நாள், உரிமையாளர் மகன் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அவர்கள் சிகரெட்டால் என் உடலில் நெருப்பு வைத்தார்கள். பின் என் மகன் வயது உடைய ஒரு சிறுவனுடன் படுக்க நிர்பந்தித்தார்கள். அந்த சிறுவனுடைய அப்பா மொபைல் ஃபோனில் ஆபாச படங்கள் காட்ட, அந்த சிறுவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்"

"அவர்கள் எனக்கு ஒரு வாரமாக உண்ண எதுவும் தரவில்லை. நான் கழிவறையில் வரும் நீரைத்தான் குடித்து வாழ்ந்தேன். அவர்களுடைய நிர்பந்தத்திற்கு, நான் உடன்பட மறுத்ததும் அவர்கள் என்னை வேறொரு வீட்டிற்கு மாற்றினார்கள். அது இன்னும் மோசமாக இருந்தது." என்கிறார் பார்வதி.

பாதிக்கப்பட்ட பெண்

"என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட அவர்கள் என்னை விடவில்லை. அவர்கள் வீட்டிற்கு எந்த விருந்தாளி வந்தாலும், அவர்களுடன் படுக்க நிர்பந்திக்கப்பட்டேன்."

"அவர்கள் பகலில் என்னை வீட்டு வேலைக்கரியாகவும், பகலில் படுக்கைக்கும் பயன்படுத்தினார்கள். இதை நான் என்னை செளதிக்கு அனுப்பிய தரகரை தொடர்பு கொண்டு கூறிய போது, அவர் இதற்காகதான் என்னை செளதிக்கு அனுப்பியதாக நெஞ்சில் எந்த ஈரமும் இல்லாமல் கூறினார். அதுமட்டுமல்ல, என்னை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறினார்."

நான் அவர்களுக்கு எதிராக தினம் தினம் கலகம் செய்தேன். இறுதியாக, அவர்கள் என்னை விடுவித்தார்கள். போலீஸ் உதவியினால் நான் இந்தியா வந்து சேர்ந்தேன்."

பார்வதி,"எனக்கு சரியான வேலை இங்கு கிடைக்கவில்லை. நான் கேராளவிற்கு, என் கணவருடன் செல்ல திட்டமிட்டுள்ளேன். அங்கு தினக்கூலி 500 ரூபாய்க்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அது கிடைக்கவில்லை என்றால், எனக்கு வேறு வழி இல்லை. பிச்சைதான் எடுக்க வேண்டும்" என்கிறார்.

2016 ஆம் ஆண்டு செளதி அரேபியாவிலிருந்து மீட்கப்பட்ட பார்வதிக்கு 2017 ஆம் ஆண்டு நிவாரணமாக அரசு 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.

லஷ்மியின் கதை

லஷ்மியை அவருடைய தாய்மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

"தாய்மாமா என்றாலும், அவர் எப்போதும் என்னை சந்தேக கண்ணுடன்தான் பார்ப்பார். என்னை துன்புறுத்தவும் செய்வார்" என்கிறார் லஷ்மி.

"ஒரு நாள் அவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி என்னை உயிருடன் கொளுத்த முயன்றார். ஆனால், அவர் பற்ற வைப்பதற்குள் அங்கிருந்து தப்பினேன். ஆனால், அப்போதும் அவர் என்னை விடவில்லை. அனைவர் முன்னும் என்னை நிர்வாணமாக்கி என்னை சாலையில் நிற்கவைத்தார்"

"என் நிலையை பார்த்த ஒரு பெண், ஹைதராபாத்தில் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறினார். அவர் பெயர் ரமணம்மா. இந்த நரகத்திலிருந்து உனக்கு விடுதலை கிடைக்கும். நீ ஹைதராபாத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று கூறினார்."

"உழைத்துதான் நாம் உண்ண வேண்டும், நாம் நம் பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்று என்னிடம் கூறுவார். அவர் அளித்த நம்பிக்கையில் நான் அவருடன் ஹைதராபாத்திற்கு வீட்டு வேலைக்காக சென்றேன். இதனை நான் என் வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லவில்லை."

பாதிக்கப்பட்ட பெண்

"நான் இதற்கு முன்னால் ஹைதராபாத்தை பார்த்ததில்லை. நாங்கள் கடேரி வழியாக தர்மாவரம் சென்றடைந்தோம். அங்கு என்னை இரண்டு ஆண்கள் சந்தித்தார்கள். அவர்கள் எனக்கு புர்கா அளித்து அணிந்துக் கொள்ள சொன்னார்கள். நான் ஏன் என்று அவர்களை கேட்டதற்கு, ரமணம்மா பதில் கூறினார். என்னை யாராவது பார்த்துவிட்டால் என்னை மீண்டும் அழைத்து சென்று விடுவார்கள் என்றார். அதனால் நானும் அவர் கூறியதுபோல, புர்கா அணிந்துக் கொண்டேன். அங்கிருந்து ரயிலில் பயணமானோம். பின் தான் புரிந்தது, என்னை அவர்கள் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லவில்லை டெல்லிக்கு அழைத்து செல்கிறார்கள் என்று"

"நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், என்னை இன்னொரு பெண் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஏறத்தாழ 40 பெண்கள் அந்த இடத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிந்து இருந்தார்கள். உதட்டு சாயம் பூசி இருந்தார்கள். சிகை அலங்காரம் செய்து இருந்தார்கள்."

"அது டெல்லியில் உள்ள ஜிவி சாலை. அன்று மாலையே என்னை அலங்காரம் செய்ய ஓர் அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நான் ஏன் என்று வினவிய போது, மற்றப் பெண்களை போல நானும் மாற வேண்டும் என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு அச்சமாக இருந்தது."

"அன்று இரவு என்னை இங்கு அழைத்து வந்தவர் அங்கு வந்தார். என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்த நாள் வேறு ஒருவருடன் படுக்க என்னை நிர்பந்தித்தார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்."

"நான் ஒரு மாதம் அவர்களுடன் போராடினேன். அவர்கள் எனக்கு உணவு அளிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் என்னை நிர்பந்தப்படுத்தி ஒரு இருக்கையில் அமர வைத்து, என்னை கட்டிப்போட்டார்கள். என் விழிகளில் மிளகாய் பொடி தூவினார்கள். என் வாயில் அதிகமான மிளகாய் பொடியை திணித்தார்கள்."

"பின் அவர்களின் கட்டளைக்கு எந்த விருப்பமும் இல்லாமல் அடிப்பணிந்தேன். என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த முடிவை எடுத்தேன். ஆனால், அதன் பின்னான நாட்கள் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அவர்கள் என் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தார்கள். அவர்களின் கிறுக்குத்தனமான விருப்பங்களுக்கு என்னை இணங்கச் சொல்லி நிர்பந்தம் கொடுத்தார்கள்."

"அதற்கு நான் மருத்தால், கிளர்ச்சியூட்டும் போதை மருந்துகளை எனக்கு செலுத்தினார்கள்."என்கிறார்.

அந்த வீட்டின் காவலாளி எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, என்னை அங்கிருந்து தப்பிக்க வைத்தார். ஆனால், நான் கேடு காலம் வீட்டிற்கு சென்றாலும், அங்கு யாரும் என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. நான் சில காலம் தனியாக வாழ்ந்தேன். என்னை ஏமாற்றி விற்ற அந்த மனிதருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தேன். ஆனால், அவரை போலீஸ் சில நாட்களில் வெளியே விட்டது. வேலைவாய்ப்பு என்ற பெயரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்கிறார் லஷ்மி.

"நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால், இன்னும் பல பெண்கள் அதுபோன்ற இடங்களில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எங்கள் ஊரில் வறட்சி இல்லை என்றால், நாங்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் என்கிறார். எங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்."

லஷ்மி இந்த நரகத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு தப்பினார். ஆனால், அரசு உதவிகள் கிடைக்க பல காலம் ஆனது. அவருக்கு 2017 ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் அரசு உதவி கிடைத்தது. இப்போது தினக்கூலியாக தனித்து வாழ்ந்து வருகிறார்.

வறட்சி... எங்கும் வறட்சி

பெண் கடத்தல் என்பது நாடெங்கும் பல பகுதிகளில் நடக்கிறது. ஆனால், ராயல்சீமாவில் அது நடப்பதற்கு பிரத்யேக காரணம் உள்ளது. வறட்சிதான் அந்தக் காரணம் என்கிறார் சிவப்பு என்னும் அரசுசாரா அமைப்பின் நிறுவனர் பகுஜா.

பவன் கல்யாணை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்கள்படத்தின் காப்புரிமைBHANUJA Image captionபவன் கல்யாணை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்கள்

இந்த அமைப்பு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்கும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறது.

அவர் சொல்கிறார், மழை இன்மையால், இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பலர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதனால், பல பெண்கள் தரகர்களிடும் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.

இதுவரை நாங்கள் 318 பெண்களை போலீஸ் மற்றும் சிபிசிஐடி உதவியுடன் மும்பை, டெல்லி, பிவாண்டி உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் பாலியல் விடுதிகளிலிருந்து மீட்டுள்ளோம் என்று பிபிசியிடம் பேசிய பகுஜா தெரிவித்தார்.

வறட்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரசு இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர், அரசு இதில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.

அதுபோல போலீஸூம் இதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். தைரியத்தில்தான், தரகர்கள் சிறையிலிருந்து வந்ததும் மீண்டும் அவர்கள் இந்த தொழிலில் இறங்குகிறார்கள்.

காவல் துறையிலேயே சிலர், பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி வழக்கை திரும்ப பெற வைக்கிறார்கள் என்றும் குற்றம் சுமத்துகிறார்.

"இந்த கடத்தலுக்கு எதிராக போராடுவதால், 2015 ஆம் ஆண்டு என் வீடு கொளுத்தப்பட்டது. நல்லவேளையாக, அன்று யாரும் வீட்டில் இல்லை. பின், சந்தேகத்திற்குரிய சிலர் மீது போலீஸில் புகார் கொடுத்தேன்" என்கிறார்.

ஒரு தரகர் அவர் மீது அளித்த புகாரினை திரும்ப பெற அழுத்தம் கொடுத்தார். இதற்காக அவர் 10 லட்சம் வரை தருவதாக கூறினார் என்கிறார் பகுஜா.

காவல் துறை என்ன சொல்கிறது?

முன்பு ஒரு காலத்தில் இதுபோல நிகழ்ந்தது. இப்போது இந்த குற்றங்கள் நடைபெறுவது இல்லை என்கிறார் அனந்தபூர் காவல்துறை கண்காணிப்பாளார் அசோக்.

பிபிசியிடம் பேசிய அவர், காவல்துறை இதில் அதிக கவனம் செலுத்தி, இந்த குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றார்.

மேலும் அவர், வளைகுடா நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்பட்டதாக எங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என்கிறார்.

மேலும் அவர், இந்தப் பகுதியில் கடத்தல் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு காவல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக கூறுகிறார்.

அதுமட்டும் அல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், 1500 பெண் தன்னார்வலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/india-42996275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.