Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோவியத் யூனியனின் உடைவும் அதன் அதிர்வுகளும்

Featured Replies

சோவியத் யூனியனின் உடைவும் அதன் அதிர்வுகளும்

 

உலகின் நவீன வரலாற்றில் இரண்டு வல்லரசுகள் ஆதிக்கம் செலுத் தியமையும், உலகநாடுகள் ஏதோ ஒருவல்லரசுக்கு ஆதரவாக, ஒருவல்லரசின் பக்கம் சார்ந்து செயற்பட்டமையும், இராணுவ கட்டமைப்புக்களில் இணைந்து செயலாற்றியமையும், முக்கியமான காலப் பகுதியாகவும் இந்த இரண்டு வல்லரசுகளும், ஒன்றுடன் ஒன்று நேரடியாக போர் புரியவில்லை. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் தகராறுகளில் இரண்டு வல்லரசுகளுமே ஏதோ ஒரு தரப்புக்கு அரசியல், இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வந்தன.  

ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனுமே மேற்குறிப்பிட்ட இரண்டு வல்லரசுகளாகும். இவ்வல்லரசுகள் ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி, முரண்பாடுகளை உக்கிரமாக்கிய நிலையில் உலக அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. நேரடியாக யுத்தம் புரியாமல் மூன்றாம் தரப்பினர் மூலம் நிறைவேற்றிய போர்க் காலத்தை ஆங்கிலத்தில் COLD WAR என அழைக்கப்பட்டது. இதையே தமிழில் பனிப்போர் என அழைக்கப்படுகிறது.

ரஷ்ய சாம்ராஜ்ஜியம் மன்னர் சாரின் ஆட்சியின்கீழிருந்தது 1917 ஆம் ஆண்டில் லெனின் என்கின்ற சித்தாந்த புரட்சிவாதியின் தலைமையில் ரஷ்ய போல்ஸிவிக் கட்சி, (கம்யூனிஸ்ட் கட்சி) தொழிலாளர், விவசாயிகளை அணிதிரட்டி ஆயுதப் புரட்சிமூலம் சார் மன்னனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. சோவியத் யூனியனின் தோற்றத்தை மகாகவிபாரதியார் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார். ஆங்கோர் எழுந்தது யுகப்புரட்சி அலறி வீழ்ந்தான் சார் மன்னன் என மகாகவி புரட்சியை வரவேற்றமை உற்று நோக்கத்தக்கது.

அவ்வாறான புரட்சி அரசு எவ்வாறு உடைந்ததனால் இன்று சர்வதேச அரசியலில் ஏற்பட்டமாற்றத்தை பார்ப்போம். ரஷ்யாவின் பெயர் சோசலிச சோவியத்துக்களின் ஒன்றி யங்களின் குடியரசு என்பதாகும். ரஷ்ய மொழி யில் சோவியத் என்றால் சபைகள் என்பதா கும். ஆங்கிலத்தில் Union of soviet socialist republics ஆகும். கால்மார்க்ஸ் என்கின்ற ஜேர்மனிய மேதையின் மார்க்சிச சித்தாந் தத்தின் அடிப்படையில் லெனின் உலகின் முதலாவது சோசலிச அரசை நிர்மாணித்ததால் மார்க்சிச சித்தாந்தம் மேலும் விரிவாக் கப்பட்டு மார்க்சிச லெனினிசம் என அழைக் கப்பட்டது. உலக அரசியல் வரலாற்றில் காலம் காலமாக நிலவிவந்த நிலவுடமை, முதலாளித்துவ பொருளாதார முறைமை சோவியத் ரஷ்யாவில் ஒழிக்கப்பட்டது. அமெரிக்கா, இந்தியா, இலங்கைஉட்படஅனைத்துஉலகநாடுகளிலும் மார்க்சிச லெனினிச கட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1924 இல் லெனின் இறந்த பின்னர் ஜோசப் ஸ்ராலின் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு அரசின் தலைவரானார். சோவியத் ரஷ்ய கைத்தொழில் துறையில் அபார முன்னேற்றங்களைக் கண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஹிட்லரின் ஜேர்மனியையும் அதன் நேச நாடுகளையும் தோற்கடித்தது. ஹிட்லரின் தோல்விக்கு ஸ்ராலினின் வழிகாட்டல் இன்றியமையாததாக காணப்பட்டது என வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளனர்.  

அத்துடன் அணுகுண்டைதயாரித்த இரண்டாவது நாடு சோவியத் ரஷ்யாவேயாகும். இதன் காரணமாகவும், இரண்டாம் உலகயுத்தத்தைவென்ற நாடுகளான படியாலும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் தெரிவுசெய்யப்பட்டன. இந்தப் பின்னணியில் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை தெரிந்து கொண்டால், அதன் உடைவும் தாக்கமும் பற்றி அறிவது இலகுவாக இருக்கும். சோவியத் யூனியனின் தன்னிகரில்லாத் தலைவர் ஸ்ராலின் 1953 இல் இறந்ததன் பின்னர் குருசேவ் தரைவரானார். குருசேவின் கொள்கைகள் சீனாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சீனத் தலைவர் மா ஓ சேதுங், குருசேவ் சோவியத் தலைமைப்பீடத்தினரையும் திரிபுவாதிகள் என விமர்சித்தனர். சீன, சோவியத் கருத்து வேறுபாடு உலக நாடுகளில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோவியத் ஆதரவு, சீன ஆதரவு கட்சிகள் என உடைத்தன.

பிரஸ்னோவுக்குப் பின்னர் யுரி அன்ரோபேவ் மைக்கல் கொர்பச்சேவ் சோவியத் யூனியனின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சோவியத் ஒன்றியங்களின் கலைப்புக்கும் சோவியத் யூனியன் என்ற உலக வல்லரசின் உடைவுக்கும் காரணகர்த்தாவாக கோர்பச்சேவ் குறிப்பிடப்படுகிறார். இவர் மார்கழி 26 1991 ஆம் தினத்தில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு உள்ளதாக பிரகடனம் செய்தார். அதன்படி முன்னைய சோவியத் குடியர சுகள் சுதந்திர நாடுகளாயின அவர் ஜனாதி பதி பதவியை இராஜினாமா செய்ததுடன் ஜனாதிபதி அலுவலகத்தை இல்லாது ஒழித்தார். அவர் புதிய ரஷ்ய பிரதம ரான பொறிஸ் ஜெல்சினிடம் தமது அதிகாரங்களைக் கையளித்தார். இவற் றில் முக்கியமானவையாதெனில் அணுகுண்டு, ஏவுகணைகள், ஏவும் இரகசிய இலக்கங்கள் ஆகும். லேனின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்ட சோவியத் யூனியனை, உலகின் முதலாவது சமதர்ம நாட்டை இல்லாதொழித்த பெருமை கொர்பச்சேவ்கே உரியது. அவருடைய மகத்தான சேவைக்காக நோபல் பரிசு (சமாதானத்துக்கான) 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அமெரிக்காவாலும் ஏனைய முதலாளித்துவ நாடுகளாலும் முடியாதுபோன காரியத்தை கொர்பச்சேவ் நிறைவேற்றிவைத்தார். 

முன்னையசோவியத் குடியரசுகளாக எஸ்ரோனியா, லத்வியா, லிதுவேனியா, கசகஸ்தான், கிறிஸ்கஸ்தான், ரஜிகிஸ்தான், ரெக்மெனிஸ்தான், உஷ்பெகிஸ்தான், பெலாறஸ், மல்டோவா, உக்ரைன், ஆத்மீனியா, அசர்பைஜான், ஜோர்ஜியா-ரஷ்யாவுடன் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுவுடமை எனும் அமைப்பை நிறுவின. சோவியத் ரஷ்யா கலைக்கப்பட்ட தினத்தன்று சோவியத் ரஷ்யா கொடியினை கொர்பச்சேவ் இறக்கிவைத்தார். மீண்டும் சார் மன்னரின் புரட்சிக்கு முந்திய கொடி ஏறப்பட்டது.

வரலாற்றில் சோவியத் யூனியனின் சமாதிக்கு வழிவகுத்தவர் கொர்பச்சேவ் எனக் கூறப்பட்டாலும் ஸ்ராலின் என்கின்ற இரும்பு மனிதரின் மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த குருசேவையே சமாதிக்கு முதல் கல்பதித்தவராக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனத் தலைவர் மா ஓவின் மேதாவிலாசம் பலநாடுகளிலும் இந்தியா உள்ளடங்கலாக பரவியமைக்கு மா ஓவின் குருசேவ் மீதான விமர்சனமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. மார்க்சிச கொள்கையில் இருந்து விலகியதைமா ஓ திரிபுவாதம் என கோடிட்டு காட்டியுள்ளார். அவரின் தூரதிருஷ்டியான பார்வையும் மார்க்சிச லெனினிசத்தை மேலும் ஒருபடி உயர்த்த வேண்டும் என்கின்ற வேட்கையும் சோவியத் தலைவரான குருசேவை நிராகரிப்பதற்கான காரணமாகும்.

அமெரிக்க சி.ஐ.ஏ உளவுத் துறைவேறு மேற்கத்தேய நாடுகளின் உளவுத் துறைகளுக்கும் சோவியத் உடைவில் பாரிய பங்கு உண்டு. உலகம் பூராகவும் முதலாளித்துவ பொருளாதார முறைமையும் ஒரேயொரு நாட்டில்,சோவியத் யூனியனில், பொதுவுடமை பொருளாதார கொள்கையையும் இயங்கியமையை சர்வதேச முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ராலினின் மறைவுக்குப் பின்னர் சோவியத் யூனியனில், பொருளாதார வளர்ச்சி குன்றியது. கைத்தொழில் விவசாயத் துறைகளின் உற்பத்தித் திறன் குறைந்தது. சோவியத் மக்கள் பெரும் பொருளாதாரசுமைகளைத் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக முன்னைய வல்லரசு சோவியத் யூனியன் மார்கழி 31 ஆம் திகதி 1991 ஆம் ஆண்டு இல்லாதொழிந்தது. அதற்குப் பதிலாக ரஷ்ய கூட்டமைப்பு உருவாகியது. சோசலிச பொருளாதாரக் கொள்கை அதாவது மத்தியில் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைக்குப் பதிலாக சந்தைப் பொருளாதார முறைமை உருவாகியது. சோவியத் யூனியன் காலத்தில் அமுலில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு ஆட்சிக்குப் பதிலாக ஜனநாயக முறைமை மீள புதுப்பிக்கப்பட்டது. 70 வருடங்களாக சோசலிச பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி பின்னர் அது கைவிடப்பட்டு சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறுதல் அடையும்போது ஏராளமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பொருளாதாரத்தைச் சீரமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. மொத்தத் தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்தது. வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்தது. முன்னர் ஆயுத உற்பத்திக்கும் கனரக பண்டங்களின் உற்பத்திக்கும் முன்னுரிமை கொடுத்த கைத்தொழில்துறை இலகு பண்டங்களுக்கும் நுகர்வுப் பண்டங்களுக்கும் மாறுவதில் பல இடர்கள் ஏற்பட்டன. பொருட்கள் சேவைகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. விலைக்கட்டுப்பாட்டுமுறைகள் அமுல் செய்யப்பட்டன. பல வர்த்தக நிலையங்களிலும் சுப்பர் மார்க்கட்டிலும் பொருட்களைக் கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

ரஷ்ய நாணயமான ரூபிள் பெறுமதி இழந்தது. ஏனைய முன்னைய சோவியத் குடியரசுகளும் சுதந்திர நாடுகள் ஆகிய பின் ரூபிளையே தொடர்ந்து பாவித்தன. ரூபிளுக்கான தேவைகள் அதிகரித்தன. மேலும் ரூபிள் பெறுமதி இழந்தது. ரஷ்ய அரசாங்கம் தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு சிரமப்பட்டது. பல மாதங்களாக தொழிலாளர்களுக்கு வேதனங்கள் வழங்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்கம் நிலைமையைச் சமாளிப்பதற்கு புதிய தாள்களை வெளியிட்டது. பணவீக்கம் மேலும் அதிகரித்தது. குற்றச் செயல்கள், களவு போன்றவை மிகமிக அரிதாகவே முன்னைய சோவியத் யூனியனில் இடம்பெற்றன. தற்போதைய ரஷ்யாவில் குற்றச்செயல்கள் பெருகின. களவு, மோசடிகள் அதிகரித்தன. ஒருசிறிய குழு அரசியல் ஆதிக்கப் பின்னணியில் செல்வந்தர்களாகியது. திருவள்ளுவ முனிவரின் நல்குரவு எனும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் வந்து படும் என்ற குறளுக்கு அமைய ரஷ்யாவில் பலவித துன்பங்கள் ஏற்பட்டன. முன்னைய சோவியத் யூனியனில் தொழிற்சாலைகள் வெறுமனே பண்டங்களை உற்பத்திசெய்யும் நிலையங்களாக மட்டுமே இயங்கவில்லை சமூக நன்மைகளையும் வழங்கின. சிறுவர் பராமரிப்பு, தடுப்பூசி திட்ட அமுலாக்கல், வீடமைப்பு வசதிகள் போன்றவை தொழிற்சாலை நிர்வாகங்களாலேயே கையாளப்பட்டது. ரஷ்யாவில் புதிய அரச கட்டமைப்பு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. 1995 இல் IMF சர்வதேச நாணயநிதியம் வழங்கிய கடன்களும் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் பெற்ற அதிகரித்த வருமானங்களும் முதல் முறையாக பொருளாதார நெருக்கடிகளைத் தணித்தன.

இது இவ்வாறிருக்க அரசியல் தாக்கங்கள் வேறுவிதமாக இருந்தன. முன்னர் மத்திய குழு ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த குழு மாறியதால் ஜனாதிபதிக்கும் ரஷ்ய பாராளுமன்றமான டுமாவுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரம் பாராளுமன்றத்தால் சவாலுக் குட்படுத்தப்பட்டது. அதேபோன்று பாராளுமன் றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி கேள்விக் குள்ளாக்கினார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரஷ்ய சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் அளவிற்கு விசயம் முற்றியது. எனினும் ஜனாதிபதியே அதிகாரம் மிக்கவர் என்ற நிலைமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்னைய சோவியத் குடியரசுகள் சுதந்திர நாடுகளின் பொதுவுடமை எனும் அமைப்பை நிறுவின. எனினும் பொருளாதாரத்திலும் வளங்களிலும் முன்னணியில் இருந்த ரஷ்யாவின் தலையீடு ஏனைய நாடுகளில் காணப்பட்டது. ஐரோப்பிய யூனியன் போன்று இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு விரிவாக்கப்பட்டது. எனினும் சிலநாடுகள் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணின. ரஷ்யாவின் தலையீடு உக்ரேனில் கிரிமியா பகுதியை சுதந்திர நாடாக்க முயன்றமை நல்ல உதாரணமாகும்.  

வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தளவில் சோவியத் யூனியன் உடைந்தவுடன் அதிபர் ஜெல்சின் அமெரிக் காவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத் தினார். பின்னர் சில சர்வதேச பிரச்சினை களான ஈரான், ஈராக், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் வகிபாகம் ரஷ்யாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இன்றைய ரஷ்யா சீனாவுடன் மிக நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி அமெரிக்காவை சில சமயங்களில் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. இன்றைய சிரிய நிலைமை இதற்கு நல்ல உதாரணமாகும்.  

உலகின் மிகச் செல்வந்த நாடாகவும் இராணுவபலம் பொருந்திய நாடாகவும் அணு ஆயுதநாடாகவும் விஞ்ஞான அறிவுத் துறைகளில் முதன்மைநாடாகவும் விளங்கிய சோவியத் ரஷ்யா இன்று பல்லைப் பிடுங்கிய சிங்கமாக உலகின் ஒரே வல்லரசு அமெரிக்கா என்ற நிலைக்குக் காரணமாக விளங்குகின்றது.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-03#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.