Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர்

Featured Replies

மிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர்

 

#WeWantCMB#GoHomeEPSnOPS

 

p44b_1522755135.jpg‘‘தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில்  எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்?’’ என்றோம்.

‘‘காவிரிப் பிரச்னைக்கான ஆலோசனைக்கூட்டம்தான் அது. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்தாசன் பேசியபோது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி  தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். இதன்மூலம் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கலாம்’ என்றார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., ‘நம் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.  அ.தி.மு.க-வினர் ராஜினாமா செய்யட்டும், அதன்பிறகு நாம் ராஜினாமா செய்வோம் என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்குப் பிறகு நாம் ராஜினாமா செய்தால், அவர்களைப் பார்த்து ராஜினாமா செய்கிறோம் என்று சொல்வார்கள். ஆட்சியை அவர்கள் இழந்தால், காவிரிக்காக ஆட்சியை இழந்தோம் என்று பிரசாரம் செய்வார்கள்’ என்று சொன்னார். ஆனால், இந்த ஆலோசனைகளை டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், துரைமுருகன் ஆகியோர் ரசிக்கவில்லையாம்.’’

p44_1522755155.jpg

‘‘அப்படியா?’’

‘‘இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘தவறான முடிவு’ என்று சொன்னார்களாம் டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறனும். ‘தஞ்சை மாவட்டத்து விவசாயிகளை, குறிப்பாக ரங்கநாதனை நம் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டும்’ என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம். ‘ஜெயலலிதாவுக்குப் பாராட்டுவிழா நடத்தியவர் ரங்கநாதன். இப்போது டி.டி.வி.தினகரனுடன் இருக்கிறார்’ என்றார் தஞ்சாவூர் சந்திரசேகரன். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ‘நம் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கேற்கும். நம்முடன் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுக்கு மட்டும்தான் அழைப்பு’ என்றார். கனிமொழி பேசியபோது, ‘நம் எதிர்ப்பைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்தும் வண்ணம் போராட்டம் இருக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்துதான், ‘கறுப்புக்கொடி காட்டலாம்’ என்று முடிவெடுத்துச் சொன்னாராம் ஸ்டாலின்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஸ்டாலின் பேசியபோது, ‘தமிழர்களை நான்சென்ஸ் என்று சொன்னதற்காக நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டினோம். எமர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டினோம். அதுபோன்ற போராட்டமாக இதை நடத்துவோம்’ என்றாராம். மத்திய பாதுகாப்புத்துறை நடத்தும் கண்காட்சிக்கு வருகிறார் பிரதமர். சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை அருகே இதற்காகப் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுவருகிறது. ஏப்ரல் 11 முதல் 14 வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது. இதற்குத்தான் பிரதமர் வருகிறார்.’’

‘‘ஏப்ரல் 1-ம் தேதியன்று திடீரென கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைத் தமிழக உயர் அதிகாரிகள் சந்தித்தார்களே, என்ன விஷயம்?’’

‘‘தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை பற்றித்தான் பேசினாராம். ‘கவர்னர் அழைக்கிறார்’ என்று தகவல் போனதும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசரமாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியையும் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனையும் அழைத்தார். தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடந்தது. காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழகம் முழுக்க நடந்துவரும் போராட்டங்கள் பற்றி கவர்னர் கேட்பார் என இவர்கள் எதிர்பார்த்தனர். போராட்டங்கள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்றெல்லாம் விவரங்களைச் சேகரித்தனர். பிறகுதான், கவர்னரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களுடன் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனும் சேர்ந்துகொண்டார். இவர்கள் போனபோது, கவர்னர் கடுங்கோபமாக இருந்தாராம். அவர் கேட்ட கேள்விகளே வேறு!’’

‘‘என்ன கேள்விகள்?’’

‘‘விவகாரம் என்னவோ காவிரி பற்றியதுதான். ‘தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை ஆரம்பத்திலேயே அடக்காமல், தமிழக அரசு ஏன் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது? கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?’ என்று கேட்டாராம். மத்திய அரசின் உள்துறையிலிருந்து தன்னிடம் இதுபற்றி விசாரித்ததாகச் சொன்னாராம் கவர்னர். உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் சொன்ன பதில்களில் கவர்னர் திருப்தி அடையவில்லையாம்.’’

p44a_1522755197.jpg

‘‘அவர் என்ன எதிர்பார்க்கிறார்?’’

‘‘கவர்னர் டேபிளில் கிடந்த பத்திரிகையில் மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை ‘மார்க்’ செய்து வைத்திருந்தாராம். ‘நிலைமை இப்படி சீரியஸாகப் போகிறது. சென்னைக்கு அருகே பிரமாண்டமாக ராணுவ எக்ஸ்போ நடக்கவுள்ளது. அந்த விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார். அவர் வரும்போது, எதிர்ப்பு என்கிற பெயரில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுப்பீர்கள்?’ என்றாராம் கவர்னர். ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது’ என்று அடித்துப்பேசினார்களாம் அதிகாரிகள். அதை யெல்லாம் கேட்கும் மூடில் கவர்னர் இல்லை. ‘நான் எச்சரித்ததாக உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள்’ என்றாராம் கவர்னர்.’’

‘‘மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி அரசு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போகிறதே? அதுவும் கவர்னரின் கோபத்துக்குக் காரணமோ?’’

‘‘ஆமாம்! ஒரு மாநில அரசே முன்னின்று மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், நிச்சயமாகச் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும். அதைச் சமாளிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்துவார்கள். இதை மத்திய உள்துறைதான் முடிவு செய்யும். இதற்கு மாநில கவர்னரின் சிபாரிசும் தேவைப்படும். அப்படி சிபாரிசு அனுப்பச்  சொல்லி  கவர்னருக்கு உள்துறை யிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது. அதன் ஒரு கட்டம்தான், இந்தச் சந்திப்பு. இதை அப்படியே வெளியே சொல்லமுடியாது அல்லவா? அதனால், ‘சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவர்னர் ஆலோசனை’ என்று செய்தி பரப்பப்பட்டது.’’ 

‘‘மத்திய ரிசர்வ் போலீஸ் படை வருமா?’’

‘‘காவிரிப் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு காரணத்தைச் சொல்லி, மத்திய ரிசர்வ் படைகள் வரலாம். தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அவசரமாக டெல்லிக்குக் கிளம்பிப்போயிருக்கிறார். கவர்னர் அனுப்பும் சிபாரிசுடன், மத்திய அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அந்த அடிப்படையில் ரிசர்வ் போலீஸ் வரலாம். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இப்படி அனுப்பி வைக்கும் யோசனை இருக்கிறது. இதனாலேயே கவர்னர் ஏப்ரல் 2-ம் தேதி அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.’’

p44c_1522755173.jpg

‘‘தமிழக பி.ஜே.பி இந்தச் சூழலில் என்ன நிலையில் இருக்கிறது?’’

‘‘உள்கட்சிக் குழப்பங்கள் அதிகமாக உள்ளனவாம். தமிழக பி.ஜே.பி சார்பில் எம்.பி இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாயப் பிரிவுத்தலைவர் பொன்.விஜயராகவன் ஆகியோர்கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மூவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைப் பார்த்துக் கோரிக்கை மனு கொடுத்தார்கள் என்ற தகவலைக் கடந்த இதழிலேயே சொன்னேன். ‘இப்படி ஒரு குழு அமைத்துள்ளோம், டெல்லி போய் அமைச்சர்களைச் சந்திக்க இருக்கிறோம்’ என யாருக்கும் சொல்லவில்லையாம். நிதின் கட்கரியைச் சந்தித்துவிட்டு வந்தபிறகுதான் விஷயத்தையே வெளியில் சொன்னார்கள். ‘இப்படி ஒரு குழு இருப்பது பி.ஜே.பி-யின் மூத்த பிரமுகர்களுக்கே தெரியவில்லையே’ என்று கிண்டல் அடிக்கிறார்கள் கட்சிக்குள்.’’

‘‘இதில் தமிழிசை செளந்தர்ராஜன் இல்லையா?’’

‘‘அவர் அந்தக் குழுவில் இல்லையாம். கட்சிக்கு உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அதில் தமிழிசை, ஹெச்.ராஜா, கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோர் இருக்கிறார்கள். இவர்களுடனும் இந்தக் குழுவினர் பேசவில்லை. கோவை செல்வக்குமார் இல்லத் திருமண விழா நடந்தது. அப்போது, உயர்மட்டக் குழு நிர்வாகிகள் பலரும் வந்திருந்தார்கள். கூடிப் பேசினார்கள். ஆனால், காவிரிப் பிரச்னை பற்றிப் பேசவில்லை. கட்சியில் யாருக்கும் யாரோடும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதுதான் நிலைமை.’’

‘‘ஓஹோ!’’

‘‘மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில் ‘தாமரை யாத்திரை’ போய்க்கொண்டிருக்கிறார் தமிழிசை. வேல் சங்கம ரத யாத்திரை போனார்     ஹெச்.ராஜா. இவர், கட்சிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசிவருகிறார். நிர்வாக வேலைகளில் பிஸியாகிவிட்டார் பொன்னார். இதற்கு மத்தியில் இல.கணேசனுக்கு மட்டும்தான் காவிரி ஞாபகம் வந்து இப்படிக் கிளம்பினார் என்கிறார்கள். ‘காவிரிக்காக கூடிப் பேசுவோம்’ என்று சிலர் முயற்சிகள் எடுத்தார் களாம். ‘எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது யார் வந்தீர்கள்?’ எனக் கேட்டாராம் ஹெச்.ராஜா. அதனால் யாரையும் ஒருங்கிணைக்க முடியவில்லையாம்.’’

p44d_1522755237.jpg

‘‘கட்சிக்குத் தேசியப் பொறுப்பாளர்கள் உண்டே?’’

‘‘தேசியச் செயலாளராக இருக்கும் முரளிதர் ராவ் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல கர்நாடகாவுக்கும் பொறுப்பாளர். தமிழக பி.ஜே.பி-க்கு அமைப்புப் பொறுப்பாளராக சந்தோஷ் என்பவர் இருக்கிறார். அவர், கர்நாடகாவைச் சேர்ந்தவராம். பிறகு எப்படிக் காவிரிப் பிரச்னையில் முடிவெடுக்க முடியும் என்று பி.ஜே.பி-க்குள்ளேயே கேட்கிறார்கள். இதில் தொண்டர்கள்தான் பாவம். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற அறிவிப்பை உடனே செய்யுங்கள்’ என்று கட்சித் தலைமையகமான கமலாலயத்துக்கு ஃபேக்ஸ் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்; போனில் கதறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை.’’

‘‘மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்கு என்ன காரணம்?’’

‘‘வேறென்ன? கர்நாடகா தேர்தல்தான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகாவுக்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் அதிகமாகக் கிடைத்தது. இது பெங்களூரு நகரின் தேவைக்காகத் தரப்பட்டது. இந்தத் தீர்ப்பைத் தன் சாதனையாகக் காட்டுவதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா வெற்றி பெற்றுவிட்டார். இதுதான் பி.ஜே.பி-க்குப் பயம் தந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி பாயும் பகுதியில் 87 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெங்களூரு நகரில் 28 தொகுதிகள் உள்ளன. 224 பேர்கொண்ட சட்டமன்றத்தில், இது கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கை. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைத்தால், இந்தத் தொகுதிகளை நாம் மறந்துவிட வேண்டியதுதான்’ எனக் கர்நாடக பி.ஜே.பி கருதுகிறது. பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கவுடா ஆகியோர் அமித் ஷாவிடம் இதைத் தீர்மானமாகச் சொல்லியுள்ளனர். இந்த நான்கு பேரின் எண்ணத்தை மீறி இப்போது மத்திய அரசு செயல்படாது என்பதே யதார்த்தம்.’’

‘‘டெல்லி பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டிலேயே உள்ள அ.தி.மு.க-விலேயே அவர்களுக்கு எதிரான கலகக்குரல் கேட்கத் தொடங்கிவிட்டதே... அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?’’

‘‘அதற்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்று தயாராக அவர்களிடம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும். அந்தத் தீர்ப்பு அநேகமாக தினகரன் அணிக்குத்தான் சாதகமாக இருக்கும். தினகரன் பக்கம் போன எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என உத்தரவு வந்தால், அதன்பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தர விடக்கூடும். அப்போது நடக்கும் ரணகளத்தையும், தற்போது தமிழகத்தில் இருக்கும் கொந்தளிப்பான சூழலையும் கருத்தில் வைத்து சட்டசபையை சஸ்பெண்டு செய்து வைப்பர். அதன்பிறகு, முழுமையாக டெல்லி பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில் தமிழகம் வந்துவிடும். இதுதான் டெல்லியில் ஆளும் பி.ஜே.பி-யின் முக்கியப் புள்ளிகள் வகுத்துள்ள திட்டம். இதை அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரே தெளிவுபடுத்தியுள்ளார். அதனால், எந்த நேரத்திலும் தமிழகத்தின் அரசியல் சூழல் முடக்கப்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.’’

‘‘ஓ... அதனால்தான் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘இந்த அரசு விரைவில் கவிழும்’ என்று குறிப்பிட்டுள்ளாரா?’’

‘‘ஆம். அவர் முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்த ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள மணலூர்பேட்டையில் தென்பெண்ணை யாற்றின் குறுக்கே பாலம் கட்ட, மத்திய அரசின் நிதி பெற்றுத்தந்தார். இப்போது அந்தப் பாலம் கட்டும் வேலைகள் நிறைவ டைந்துவிட்டன. இதையடுத்து, அவருக்கு அங்கு பாராட்டு விழா நடைபெற்றது. விஜயகாந்த் மிகவும் சோர்வாகப் பேசினார். ஆனால், விவரமாகப் பேசினார். ‘வெல்லக்கட்டி உடைவதைப்போல், வெல்லமண்டி பழனி சாமியின் ஆட்சியும் உடைந்து கவிழும்’ என்றார்.’’

‘‘விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?’’

‘‘சில நாள்களுக்குமுன் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது, அவர் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தாராம். ‘நான் சட்டசபையில் கைநீட்டிப் பேசினேன் அல்லவா! அதில் ஆத்திரமடைந்து எனக்குச் சூனியம் வைத்துவிட்டார்கள்’ என்று கூறினாராம்’’ என்றபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: தி.விஜய், என்.ஜி.மணிகண்டன், எஸ்.தேவராஜன். வி.ஸ்ரீனிவாசுலு, கே.ஜெரோம்  


p44e_1522755045.jpg

dot_1522755061.jpg 60:40. இந்த விகிதம் எடப்பாடி ஐடியாவாம். கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் அ.தி.மு.க-வுக்கு 60%. தி.மு.க-வுக்கு 40%. இந்த விகிதத்தில் பதவிகளைப் பிரித்துக்கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் போயிருக்கிறது. ஒருவேளை, அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தற்போது ஜெயிக்கும் அ.தி.மு.க-வினரை வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள் அல்லவா? இது எடப்பாடியின் கணக்கு.

dot_1522755061.jpg மன்னார்குடியைச் சேர்ந்தவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். சசிகலாவின் உறவினர்தான். திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை முழு அதிகார பலத்துடன் எதிர்க்கும்படி எடப்பாடி இவருக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம். கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் பல இடங்களில் காமராஜ் வைத்துதான் சட்டமாம்.

dot_1522755061.jpg சென்னை அண்ணா சாலை கிளப் ஒன்றுக்கு முதல்வர் எடப்பாடி, மின்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மூவரும் தினமும் மாலை நேரத்தில் போகிறார்கள் என்கிற பேச்சு அ.தி.மு.க வட்டாரத்தில் பரவியது. உண்மை அதுவல்ல! அந்த மூவரின் பெயர்களைச் சொல்லி மூன்று மீடியேட்டர்கள்தான் அங்கே போகிறார்கள் என்பதை மோப்பம் பிடித்ததாம் உளவுத்துறை. பெரிய பெரிய டீல்களை மூவரும் முடிக்கிறார்கள். ‘பஸ்’ அடைமொழியுடன் கூடிய பிரமுகர், ‘பட்டுக்கோட்டை’ என்கிற பெயருடன் ஒருவர், ஈரோடு நபர் ஒருவர் ஆகியோர்தான் அந்த மூன்று மீடியேட்டர்கள். 

dot_1522755061.jpg கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் மலையாள மாந்திரீகத்தின் மீது திடீரென ஆர்வம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கேரள - தமிழக எல்லையில் ஓர் ஊரில் இரவு நேர பூஜைகள் நடக்கின்றனவாம். ‘‘அரசியலில் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை. எதிர்காலத்தை பிக்கல் பிடுங்கல் இல்லாமல் ஓட்ட இதுதான் ஒரே வழி’’ என்று அவர் சொல்லித் திரிகிறாராம்.


உண்மையை விசாரிக்கும் உளவுத்துறை!

p44f_1522755099.jpg

டிட்டர் குருமூர்த்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதில், ‘‘ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்வதற்குமுன்பு ஓ.பி.எஸ் என்னைச் சந்தித்துவிட்டுத்தான் போனார். அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டும் என நான் வலியுறுத்தினேன். சசிகலா குடும்பத்தை எனக்குப் பிடிக்கவில்லை; அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன். 2017 ஜனவரி 8-ம் தேதி தினகரன் என்னைச் சந்தித்தபோது, அவர்களை அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அத்வானிக்கு நான் நெருக்கம், அவர் வீட்டுக்குள் என்னைக் கேட்காமல் எதுவும் நடக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் கேட்ட மத்திய-மாநில உளவுத்துறைகள் தலையைப் பிய்த்துக்கொண்டதுடன், அவர் சொன்ன விஷயங்களின் உண்மைத்தன்மை பற்றி விரிவாக விசாரித்து அறிக்கை தயாரிக்கும் வேலையிலும் இறங்கியுள்ளன.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.