Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றியது எப்படி?- தமிழ் ஆசிரியை சிறப்பு பேட்டி

Featured Replies

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றியது எப்படி?- தமிழ் ஆசிரியை சிறப்பு பேட்டி

 
தமிழ் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன்

பிப்ரவரி 14, 2018. உலகமே காதலையும் அன்பையும் கொண்டாடிக்கொண்டிருந்த நாள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஃபோர்ட் லாடர்டேள் (Fort Lauderdale) நகரத்தில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியான பார்க்லாண்டில் இருக்கும் Marjory Stoneman Douglas மேல் நிலைப்பள்ளி வழக்கம் போல் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

மதியம் 2.30 மணி. பள்ளி முடிய அரை மணி நேரமே இருக்கும் சமயத்தில் இரண்டாம் தளத்தில் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் அல்ஜீப்ரா பாடத்தை முடித்துக்கொண்டிருந்த வேளையில் படபடபட-வென கீழ்தளத்திலிருந்து சரமாரியமாக சத்தம் வருவதை கேட்டார். அது என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கு முன்னரே அந்த கட்டிடத்தின் தீ எச்சரிக்கை மணி (Fire alarm) ஒலிக்கத் தொடங்கியது.

அவசரகால வெளியேற்றப் பயிற்சியின்படி மற்ற பள்ளி அறைகளிலிருந்து மாணவர்கள் வரிசையாக வெளியேறத் தொடங்கினார்கள். ஆனால், சாந்தியின் உள்ளுணர்வு அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. அவர் கேட்ட அந்தப் படபட சத்தங்களுக்கு அர்த்தம் தெரியாமல் தனது அரவணைப்பில் இருக்கும் மாணவர்களை வெளியே அனுப்ப மனம் இடம் கொடுக்கவில்லை.

அவர் உடனடியாக தனது வகுப்பறையின் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். பின்னர் விளக்குகளை அணைத்துவிட்டு மாணவர்களை சத்தம் செய்யாமல் அவர்களது மேசைகளுக்கு கீழ் ஒளிந்துக்கொள்ளுமாறு அன்பாக உத்தரவிட்டார்.

பக்கத்து அறையில் பயங்கரம்

மனதுக்குள் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், உடனடியாக தனது அறையின் ஜன்னல்களின் மேல் காகிதங்களை வைத்து மறைத்தார்.

இதைக் கண்டு பயந்துபோனார்கள் 13 , 14 வயதுள்ள சிறுவர்கள். ஆனால் சாந்தியோ "இது சும்மா ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் சம்பவமாக இருக்கும். நீங்க பயப்படாதீங்க" என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

ஒரு சில நிமிடங்களில் அவர்களுக்கு பக்கத்து அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் தெளிவாக கேட்கத் தொடங்கியவுடன், எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று. மூச்சு கூட விடாமல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள் அனைவரும்.

அடுத்த சில நொடிகளில் இவர்களது அறைக்கதவின் கைப்பிடி வேகமாக ஆடியது. யாரோ உள்ளே நுழைய முயற்சிப்பது தெரிந்து பீதியில் ஆழ்ந்தனர். பூட்டிய கதவை திறக்க இயலாமலும் உள்ளே இருட்டாய் இருந்ததாலும் இந்த அறை காலியாக இருப்பதாக நம்பி வெளியில் இருந்தவன் கடந்து சென்றான்.

தமிழ் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன்

அடுத்த பத்து நிமிடங்கள் தொடர் துப்பாக்கி சுடும் ஒலிகள் ஓயவில்லை. பின்னர் ஒரு மயான அமைதி நிலவிய நேரம் மறுபடியும் அறைக்கதவை திறக்க யாரோ முயன்றனர். ஸ்வாட் பிரிவு சிறப்பு காவலர்கள் என்று உறுமியவாறு கதவை திறக்க ஆணையிட்டனர். அனால் அந்த ஆசிரையையோ மாணவர்களை கை அசைவால், பதில் சொல்ல வேண்டாமென அறிவுறுத்தினார். சில நொடிகளில் ஜன்னலை உடைத்துக் கதவை திறந்து புயல் போல் உள்ளே நுழைந்தனர் காவலர்கள் - அந்த அறையில் இருந்து பாதுகாப்பாக அனைவரையும் ஒரே வரிசையில் வெளியேற்றினர்.

வழி எங்கும் ரத்தமும் சதையுமாய் தங்களது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் சடலங்களைத் தாண்டி நடந்து வந்த அந்த நாளைப் பற்றி விவரிக்கும் போதே குரலில் தடுமாற்றமும் கண்களில் ஒரு தாங்க முடியாத சோகமும் படர்ந்தது சாந்திக்கு. ஒரு மாதம் ஆகியும் இதைப் பற்றி யாரிடமும் பேச முன்வராத சாந்தி விஸ்வநாதன், முதல் முறையாராக பிபிசி தமிழுக்காக பேசினார்.

இந்த உரையாடலுக்கு அவர் சம்மதித்ததற்கு முக்கிய காரணம் இனிமேல் இதுபோல பள்ளிக்கூட "மாஸ் ஷூட்டிங்ஸ்" எங்குமே நடக்கவே கூடாது, அதற்கான சட்டங்கள் மாற வேண்டும் என்று அவரது பள்ளி மாணவர்கள் தொடங்கியுள்ள இயக்கம் வெற்றியடைய அவரால் முடிந்த பங்களிப்பாக இது இருக்க வேண்டுமென்றார்.

அன்று பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து சுட்டவர் 19 வயது நிகோலஸ் கிருஸ். அதே பள்ளியில் இருந்து கடந்த வருடம் தவறான நடத்தைக்காக வெளியேற்றப்பட்ட அவர், பழிவாங்கும் விதமாகத்தான் இந்த கொடூர செயலை செய்திருப்பதாக கூறிக்கொள்கிறார்கள். அவர் பயன்படுத்தியது ஒரு AR 15 அசால்ட் ரைபிள். இது சட்டப்பூர்வகமாகத்தான் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன்

AR-15 ரக Assault Rifleகளை தடைச்செய்ய வேண்டும் என்பதுதான் பெரும்பாலான அமெரிக்கப்பள்ளி மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி மார்ச் 24 ஆம் தேதி அமெரிக்காவில் பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் ஒன்று கூடி "மார்ச் ஃபார் அவர் லைஃப்ஸ் (March for our lifes)" என்று வாஷிங்டனில் ஒரு பெரிய அணிவகுப்பு நடத்தினார்கள்.

பல தரப்புகளிலிருந்தும் மாணவர்களுக்கு ஆதரவு வந்த வண்ணம் இருந்தாலும் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பெரும் குழப்பமாகவே இருக்கிறது. இந்த கோரிக்கை இரண்டாவது சட்டத் திருத்தத்துக்கு எதிராக உள்ளதாக ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியினர் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆனால் மாணவர்களோ அப்படிச்சொல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் NRA (National Rifle Association) - வின் கைக்கூலிகளாக இருப்பதாலேயே இப்படி பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 350 மில்லியன் மக்கள் வாழும் அமெரிக்காவை வெறும் 5 மில்லியன் மக்களைக் கொண்ட NRA அமைப்பு இப்படி ஆட்டி வைப்பது மறுபடியும் காசுள்ளவன் கையில்தான் அதிகாரம் என்பது போல் உள்ளதாக கருத்து தெரிவித்தார் சாந்தி விஸ்வநாதன்.

தமிழ் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன்

"பாதுகாப்புக்காக தேவை என்றால் கைத் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். பல ரவுண்டுகள் சுடக்கூடிய அசால்ட் ரைஃபிள் எதற்கு? அந்தப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசார் வந்து எதிர்தாக்குதல் நடத்திய பிறகு கீழே போட்டுவிட்டுச் சென்ற அசால்ட் ஃரைபிளில் 180 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் மீதமிருந்து என்றால் அது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த துப்பாக்கியாக இருந்திருக்கும் என்று பாருங்கள்" என சுட்டிக்காட்டுகிறார் சாந்தி.

பள்ளியின் முன் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் நின்றிருந்த போதிலும் ஏன் இந்தச் சம்பவம் நடந்தது என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் அதுதொடர்பான வீடியோ வெளியான பிறகுதான் உண்மை வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

பீதியில் மாணவர்கள்

அந்தச் சம்பவத்தைப் பார்த்த பிறகு, மாணவர்கள் இன்னும் பீதியில்தான் இருப்பதாகவும், கழிவறைக்குச் செல்லக்கூட பயப்படுவதாகவும் சாந்தி தெரிவித்தார். தங்கள் கண் முன்னால் அவ்வளவு உயிர்கள் பலியான அந்த நினைவுகளுடன் அவர்கள் வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக, வாழ்க்கை முழுவதும் தொடரும் நினைவாகவே இருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இந்த இளம் மாணவர்களால் சட்டத்தில் மாற்றம் உருவாக்க முடியுமா? இனிமேல் இதுபோல் பள்ளிகளில் துப்பாக்கி சூடு (School Mass Shootings) நடக்காமல் தடுக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு, இப்போதைக்கு யாரிடமும் பதில் இல்லை.

http://www.bbc.com/tamil/global-43729213

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.