Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி

Featured Replies

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி

 
Ani-696x460.jpg
 

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டம் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலிடத்தையும், சந்திரசேகரன் ஹெரினா மூன்றாவது  இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தாவுக்கு, இன்றைய போட்டியில் எதிர்பார்த்தளவு சோபிக்க முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் போது அவர் பயன்படுத்திய புதிய சப்பாத்தினால் இடது காலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தனது இலக்கினை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார்.

anitha-1-300x200.jpg

இதன்படி, ஆரம்பத்தில் 3.30 மீற்றர் உயரத்தை 2 ஆவது முயற்சியில் வெற்றி கொண்ட அனித்தா, அடுத்த இலக்காக 3.45 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்தார். எனினும், காலில் ஏற்பட்ட உபாதை மற்றும் வலி காரணமாக அவரால் அந்த இலக்கை அடைய முடியாது போனது. இறுதியில் 3.30 மீற்றர் உயரத்தை தாவி அவர் ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளுக்கான முதல் கட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், தேசிய சாதனை படைத்து 2 நாட்கள் செல்வதற்கு முன் இவ்வாறு அனித்தாவுக்கு உபாதையுடன் குறித்த தகுதிகாண் போட்டியில் பங்குபற்ற வேண்டிய எந்த தேவையும் கிடையாது. அவருக்கு காயத்திலிருந்து குணமடைந்து இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நடைபெறவுள்ள 2ஆவது தகுதிகாண் போட்டியில் தாரளமாக பங்குபற்றியிருக்கலாம். அவ்வாறான சூழ்நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துடன் அவர் போட்டியில் பங்குபற்றியிருந்தமை தொடர்பில் போட்டி நடுவர்கள் போட்டியின் பிறகு மைதானத்தில் வைத்து கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனவே, வட மாகாணத்துக்கு அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற ஒரேயொரு வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற அனித்தாவின், உபாதை மற்றும் உடற்தகுதி தொடர்பில் இனிவரும் காலங்களிலும் அவருடைய பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரன் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் 2 ஆவது கட்டம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் அல்லது ஜுன் மாதம் முற்பகுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள 3.60 மீற்றருக்கான இறுதி முயற்சியில் அனித்தா வெற்றிபெறுவார் என பெரிதும் நம்பப்படுகின்றது.

ஹெரினாவின் சிறந்த பதிவு

herina-2-300x200.jpgயாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு இளம் வீராங்கனயான சந்திரசேகரன் ஹெரினாவும் இன்றைய தினம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளுக்கான முதல் கட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.

எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தனது போட்டி சாதனையை 0.01 மீற்றரினால் தவறவிட்டு 2.90 மீற்றர் உயரத்தைத் தாவிய ஹெரினா, தேசிய மட்ட வீராங்கனைகள் பங்குபற்றிய இன்றைய போட்டியில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி 2  ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் தனது சிறந்த உயரத்தையும் இதன்போது பதிவு செய்தார்.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 3.00 மீற்றர் உயரத்தை 3 ஆவது முயற்சியில் வெற்றிகொண்ட ஹெரினா, 2 ஆவது சுற்றில் 3.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கான சவாலில் முதல் முயற்சியிலேயே வெற்றி கொண்டார்.

இதனையடுத்து மற்றுமொரு முயற்சியாக 3.20 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு ஹெரினா தீர்மானித்தார். எனினும், அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 3.10 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து மூன்றாவது  இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு விழாவுக்கு மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தமாக 71 போட்டிகள் நடைபெறவுள்ளது. எனினும் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு வீரர்களும் பங்குபற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்ட முடிவுகள்
Natfgf.jpg

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்ட முடிவுகள்

 
 

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் நேற்றைய தினம் (28) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 20 வருடங்கள் பழைமையான தேசிய சாதனையை வர்த்தக நிறுவனங்கள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நட்சத்திர குறுந்தூர வீரர் சுரன்ஜய டி சில்வா முறியடித்தார். அவர் குறித்த போட்டியை 20.69 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி

இதேநேரம், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், உபாதையுடன் போட்டிகளில் கலந்து கொண்டு 3.30 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை அனித்தா முறியடித்திருந்தார்.

  • 400 மீற்றரில் காலிங்க அபாரம்

400m-final.jpgதேசிய மட்டத்தில் முதல் 5 இடங்களிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (28) நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட காலிங்க குமாரகே, போட்டியை 46.08 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், இது காலிங்கவின் தனிப்பட்ட சிறந்த காலமாக பதிவாகியதுடன், தேசிய மட்டத்தில் பதிவாகிய 4ஆவது சிறந்த காலமாகவும் இடம்பிடித்தது.

இதற்கு முன் முன்னாள் வீரர்களான சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் மற்றும் பிரசன்ன அமரசேகர ஆகியோர் 400 மீற்றரில் தேசிய மட்டத்தில் சிறந்த காலங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியின் நடப்புச் சம்பியனும், 2016 தெற்காசிய விளையாட்டு விழாவிவ் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு வீரரான திலிப் ருவன், 46.39 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது சிறந்த காலத்துடன் 2ஆவது இடத்தையும், 47.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த ஏ. பிரேமகுமார 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

  • உபமாலி, நதீஷாவின் சிறந்த காலம்

upamali-1.jpgபெண்களுக்கான 400 மீற்றரில் கலந்து கொண்ட உபமாலி ரத்னகுமாரி, 53.31 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தையும், நதீஷா ராமநாயக்க, 54.18 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். அதேநேரம் இவ்விரு வீராங்கனைகளும் தமது சிறந்த காலங்களையும் இதன்போது பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், அண்மைக்காலமாக இலங்கைக்கு பரா மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வென்று கொடுக்கின்ற அமரா இந்துமதியும் இப்போட்டியில் கலந்துகொண்டார். குறித்த போட்டியை 1 நிமிடமும் 02.92 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.

  • அதிவேக வீரர்களாக ஹிமாஷ, சுகந்தி முடிசூடல்

trials-day-2.jpgஆசிய விளையாட்டு விழாவுக்கு மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டத்தில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை நட்சத்திர குறுந்தூர ஹிமாஷ ஏஷான் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

எனினும், குறித்த போட்டிப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதல் 3 இடங்களில் உள்ள சுரன்ஜய டி சில்வா, மொஹமட் அஷ்ரப் ஆகியோர் இத்தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

இதேநேரம், பெண்கள் பிரிவில், ஹெப்டத்லன் (7 அம்சப் போட்டிகள்) போட்டிகளின் நடப்பு சம்பியனான லக்‌ஷானி சுகந்தி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். குறித்த போட்டியை 11.98 செக்கன்களில் அவர் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • தட்டெறிதலில் ஆஷிக் அபாரம்

Aashiq-discuss.jpgஇலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ZTM ஆஷிக், 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 42.28 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கடற்படையைச் சேர்ந்த பி. ஜயவர்தன 51.10 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தையும், இலங்கை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த எஸ். நிரோஷன 42.05 மீற்றர் தூரத்தை எறிந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

  • பாசிலுக்கு ஆறுதல் வெற்றி

udayar.jpgஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் பாசில் உடையார் பங்குபற்றியிருந்தார்.

போட்டிகளில் முதல் நாளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாசில் உடையார், 22.01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 22.10 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றிய பாசில், தகுதிகாண் சுற்றில் 10.89 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தையும், இறுதிப் போட்டியில் 10.76 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் 2ஆவது கட்டம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் அல்லது ஜுன் மாதம் முற்பகுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெறும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தெற்காசிய போட்டிகளுக்கான முதல் வட மாகாண வீரர் பிரகாஷ்ராஜ்

 

எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு தகுதிபெற்ற முதல் வட மாகாண வீரராக வரலாற்றில் இடம்பிடித்த யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ்

 

  • தொடங்கியவர்
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்
South-Asia-Junior-Competition-2018.jpg

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்

 
 

மூன்றாது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு தமிழ் பேசும் வீர, வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது அத்தியாயம் எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்தொடர் 20 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக மாத்திரமே நடைபெறுகின்றது.

 

 

இந்நிலையில், 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர். அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு இம்முறை 4 தமிழ் பேசுகின்ற வீரர்களும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்திருந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொள்ளும் வீரர்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்கின்ற வீரர்களுக்கும் 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி, அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் எதிர்பார்த்ததை விட வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில், வட மாகாணத்தில் இருந்து 2 வீரர்கள், கிழக்கிலிருந்து ஒரு வீராங்கனை மற்றும் மலையகத்தில் இருந்து ஒரு வீரருக்கும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

5,000 மீற்றரில் வவுனியாவின் கிந்துஷன்

kinthusan-2.jpg

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஏனைய வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவநாதன் கிந்துஷன், 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில்

ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களிலும், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, கனிஷ; மெய்வல்லுனர் போட்டித் தொடர் வரலாற்றில் முதற்தடவையாக நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்த கிந்துஷன், இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியனஷிpப் போட்டித் தொடரின் இறுதி நாளான மே மாதம் 6ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.

 

 

தட்டெறிதலில் ஹார்ட்லியின் பிரகாஷ்ராஜ்

Untitled-43.jpgகடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ், 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (39.73 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்த அவர், ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான அடைவுமட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் யாழ். ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவரும், 2013 முதல் அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரனின் பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற பிரகாஷ்ராஜ், எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தட்டெறிதல் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்.

ஈட்டி எறிதலில் கிழக்கின் உதயவானி

Uthayavani-193x300.jpgபோரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய மாணவி நாகேந்திரம் உதயவானி, 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட உதயவானி, 34.92 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

 

 

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் 4ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட உதயவானி, முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தின் அனுபவமிக்க பயிற்சியாளரும், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். விஜயனீதன் மற்றும் 2007இல் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கே.எம் ஹாரிஸின் வழிகாட்டலுடன் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த உதயவானி, சர்வதேச அரங்கில் தனது முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை அணி சார்பாக போட்டியிடவுள்ளார்.

800 மீற்றரில் பதுளையின் அரவிந்தன்

aravindh-2.jpgஇம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சந்திரகுமார் அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 53.46 செக்கன்களில் நிறைவுசெய்து தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான ஆண்களுக்கான 800 மீற்றர் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

 

 

மலையக விளையாட்டுத்துறையில் முன்னிலை பாடசாலையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி சார்பாக இவ்வாறு சர்வதேச மட்டப் போட்டியொன்றுக்குத் தெரிவாகிய முதல் வீரர் என்ற பெருமையையும் அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன், அன்று முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.

தேசிய மட்டத்தில் 800 மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பெரும்பாலும் தென் பகுதி மற்றும் மத்திய மலைநாட்டு வீரர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனினும், கடந்த 3 வருடங்களாக டி.எஸ் விதானரகேவிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற அரவிந்தன், தன்னுடைய அயராத முயற்சி, பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலையின் ஒத்துழைப்புடன் தன்னுடைய திறமைகளை தேசிய மட்டப் போட்டிகளில் வெளிக்காட்டி முதற்தடவையாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீரராக இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையிலிருந்து 84 வீரர்கள்

3-id.jpgபோட்டிகளை நடாத்தும் நாடு என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக நடைபெறவுள்ள 38 போட்டிகளுக்கும் தலா 3 வீரர்களை இலங்கை களமிறக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக 14 தனி நபர் போட்டிகள் உள்ளடங்கலாக 4X100 மற்றும் 4 X400 அஞ்சலோட்டங்களிலும் இலங்கை அணி போட்டியிடவுள்ளது.

இதேநேரம், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.09 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்திய புனித பேதுரு கல்லூரியின் ஹிரூஷ ஹஷானுக்கும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 வயதுப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் உயரம் பாய்தல் வீரர் எஸ்.டி அமரசிங்க, சிலாபம் புனித மேரி கல்லூரியின் ஈட்டி எறிதல் வீரர் துருஷ்மின கிரிஷ்மால் மற்றும் மாவனல்லை ரன்திவல மகா வித்தியாலயத்தின் 1500 மீற்றர் ஓட்ட வீரர் தம்மிக விஜேசூரிய ஆகியோருக்கும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வாய்ப்பு வழங்க தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராகத் தெரிவாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வீரராக கண்டி, அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் அதிக பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அருண, அண்மைக்காலமாக 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெற்றிகளை பதிவுசெய்துவந்தார்.

இந்நிலையில், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தகுதிச் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தொடர்ந்து புதிய சாதனைகளை முறியடித்த அவர், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்து கொண்டார்.

 

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 46.59 செக்கன்களில் நிறைவுசெய்து 14 வருடங்களுக்குப் பிறகு புதிய போட்டி சாதனையும் படைத்தார்.

இதேவேளை, பெண்கள் பிரிவில் வயது குறைந்த வீராங்கனைகளாக கதானை புனித செபஸ்டியன் கல்லூரியின் தட்டெறிதல் வீராங்கனை ஹேஷானி மஹேஷிகா, நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியின் 4X400 அஞ்சலோட்ட வீராங்கனை காவின்தி சன்ஞனா மற்றும் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் போட்டி சாதனை நிகழ்த்திய இப்பாகமுவ மத்திய கல்லூரியின் உயரம் பாய்தல் வீராங்கனை என். பல்லேகம ஆகியோர் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து 59 வீரர்கள்

all-countries-flag.jpg2ஆவது தடவையாகவும் இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

முன்னதாக அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு கொழும்பு சுகதாஸ மைதானத்தில் நடைபெற்றது. அதனையடுத்து இறுதியாக 2013ஆம் ஆண்டு இந்தியாவின் ரான்ஞ்சியில் நடைபெற்றதுடன், இலங்கையிலிருந்து சுமார் 40 வீரர்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதன்பிறகு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்ட போதிலும் நிதிப்பற்றாக்குறை, மைதான வசதிகள் கிடைக்காமையினால் அதை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து 59 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 12 வீரர்களும், மாலைத்தீவுகளிலிருந்து 8 வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனினும், ஆப்கானிஸ்தானிலிருந்து எந்தவொரு வீரர்களும் பங்குபற்றமாட்டார்கள் என அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இறுதியாக….

எனவே இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் ஜப்பானின் கிபு நகரில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடர் மற்றும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது.

இதேவேளை, போதிய வளங்கள், சரியான பயிற்சிகள் இல்லாமல் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி முதற்தடவையாக சர்வதேச போட்டியொன்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ள தமிழ் பேசுகின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.