Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிப்பாதசரம்!… - இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்)

அகரன்June 17, 2018
வெள்ளிப்பாதசரம்!…  ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்)

சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது.

thumbnail_Ilankaiyarkone.jpg?resize=197%

தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி ‘மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ’ என்று கெஞ்சினாள். அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. ‘எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது’ என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு ‘பயப்பிடாமல் என்னோட வா’ என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.

கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டே சென்றாள். ஐந்து வயதுச் சிறுமியைப் போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு ‘கெந்தல்’ போட வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது… செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க் கொண்டிருந்தான். யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினாலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தன. மனஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாகவே இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொண்டான். அவளுடைய கலகலத்த வாயும், விடையில்லா ஒரு கேள்வியைக் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்க மாட்டாதது போல் ஒசியும் நூலிடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும், மணங்களும், புதுமைகளும் மறைந்திருக்கும். ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும், புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன! ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது! செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபாபெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன.

செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் – அதுதானோ வல்லிபுரப்பெருமாள்? திருமாலின் திருமண பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள் ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர். செல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர். தவிற்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்து கொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரந் தலைகள்அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு தன் உடலை உராய்ந்து கொண்டு ‘எல்லாருக்கும் பைத்தியம் பாருங்கோ’என்றாள். மௌனியான செல்லையா மௌனம் கலைந்து, ‘போதும் இனி,வாணை வெளியாலை போவம்’ என்றான். வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும், வைரத்தையும் பொடியாக்கிச் சிதறி விட்டது போன்ற அந்தஅகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்புவெள்ளம் பாய்வது போல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச்சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.

சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால்அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒருகைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி ‘ஒண்டுக்குநாலு’க்காரன், ‘ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக்காசு’ என்று ஓலமிட்டான். நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற்கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது.செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒருகண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப் பட்டிருந்த புதுமாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல் போன்ற ஒரு தகடும் தொங்கிக் கொண்டிருந்தன. முகப்பில் சிங்க முகம். அதுபோன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை… அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். குவளை மலரைப் பழித்த அவளது விழிகள் ‘காஸ்லைட்’ ஒளியில் அகலவிரிந்து பளபளத்தன. அவளிடம் சாதாரணமான காற்சங்கிலி கூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒருபாதசரத்தை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனத்தில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின… அதை எப்படியும் வாங்கி விட வேண்டும்! அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.

‘முப்பத்தைந்து ரூபாய். வேறு விலை கேட்க வேண்டாம்’ செல்லையாவின் மடியில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது. ‘இருபத்தைந்து தரலாம். சாமானைக் குடுத்துப்போடு’ ‘தம்பி! இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவராது ராசா. கடைசி விலை, முப்பது ரூபாய். குடுப்பீரா?’ ‘சரி இந்தா…’ பாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின. வெண்மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றிவந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்கவில்லை. நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. ‘இனி வண்டிலடியில் போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு, திருவிழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்’ என்று இருவரும் முடிவு செய்தனர்.

செல்லையா அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றான். கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள். ‘ஐயோ! காற் சங்கிலியைக் காணேல்லை…’ ‘என்ன… வடிவாய்ப் பார்!’ ‘ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்திட்டுது’ ‘கொஞ்சம் கவனமாய் வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு. ஊதாரி நாய்!’ மறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக் கொண்டான். குண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூனைப் போல நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. மூன்றுமாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு..! அவள் மனத்தில் கோபம், அவமானம், துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கண்களில் நீர் மல்கியது. ‘போதும், உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்’ செல்லையா ஒரு படி கீழே இறங்கினான். ‘நல்லம்மா ஆத்திரத்திலை சொல்லிப் போட்டன். இஞ்சை பார்….’ ‘வேண்டாம். இப்பவே போகவேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியாக் கால் நடையாய்ப் போறன். வழியிலை காறுக்குள்ளை, வசுவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்’ செல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப் பூட்டினான். அவன் ஆண் மகன். மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் ‘கடக், கடக்’ என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடியபனைமரங்கள் மௌனப் பூதங்கள் போல்a-7.jpg?resize=300%2C171

வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன. செல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம் கொண்டது போல் ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக்கொண்டு பறந்தது… ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா? நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும்! அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக் கொண்டால் என்ன..? கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்..? தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக் கொள்ளவில்லையே… கால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக்கொண்டு, வண்டியின் கீழ் ஓடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப காரியம்! ஒரு கஷ்டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே… எல்லாம் அவளுடைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன? மாடு களைப்பினால் பலமாக மூச்சு வாங்கியது.

நெல்லியடிச் சந்தியில், ஒருபூவரச மரத்தின் கீழ் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக்கப் பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் ‘கட கட’ என்ற சத்தத்தை விட, மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது. செல்லையா மாட்டின் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க்கடை இருந்த பக்கமாகச் சென்றான். அவனுடையமடியில் ஒரு ஐந்துசதம்தான் இருந்ததென்பது நல்லம்மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன் பிறகு ஒன்றுமே இல்லை… ‘ஐயோ அவருக்குஎவ்வளவு பசியாயிருக்கும், வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே…’ என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள். ‘பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்து விடுவேன். நீ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம்’ அவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது… கண்கள்பொருமி உவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தைபோல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக்கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது… செல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு, அவளுடைய முகத்தைப் பார்த்தான்… அவளுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன்மனம் அவாவியது. ‘என்ன நல்லம்…’ நல்லம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில், நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது. ‘ஒண்டுமில்லை. உங்களுக்குப் பசி இல்லையே? வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்…’ செல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான்.

மாட்டின் வெண்டயம் மறுபடியும் பனந்தோப்புகளில் எதிரொலித்தது. வல்லைவெளி! இந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும் வேகமாய் ஓடி வந்த மாடு, தன் சுதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது. பேய்க் காற்று ‘ஹோ’ என்று சுழன்றடித்தது. வானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடை, ஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில்தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத்தகடு போன்ற சந்திர தீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது. சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்தவெளிப் பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நவநாகரிக முறைகளால் நலிந்து படாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது. எங்கோ வெகு தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவை நோக்கி நகர்ந்து வந்தது… செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, ‘அது என்ன?’ என்று கேட்டாள். ‘ஆரோ மீன் பிடிகாரர் சூள்கொண்டு போகிறான்கள்’ என்று ஒரு பொய் சொல்லி மழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான். அந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற்றப் பக்கத்தில் போய் ‘பக்’கென்று அவிந்தது….

செல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது. அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. மெய்மறந்த ஒருமகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, ‘ஞானகுமாரி’ என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான்… அவனுக்குப் பசியில்லை. தாகம் இல்லை. தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிட முடியும்?.

 

http://akkinikkunchu.com/?p=58739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.