Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் இப்பொழுதும் தளம்புகிறாரா? -மக்கள் உணர்த்தும் செய்தி என்ன?

Featured Replies

விக்னேஸ்வரன் இப்பொழுதும் தளம்புகிறாரா? -மக்கள் உணர்த்தும் செய்தி என்ன?
 
C.V..jpg

விக்னேஸ்வரனின் நூல் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சம்பந்தனும் விக்கியும் ஒன்றாகத் தோன்றும் மேடை என்பதால் அது தொடர்பில் ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகையின் துவக்க விழாவில் இருவரும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். அந்த மேடையில் மாவைக்கு எரிச்சலூட்டும் கருத்துக்களை விக்கி தெரிவித்திருந்தார். அதன் பின் வேறு சில மேடைகளில் சம்பந்தரும் விக்கியும் ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் காலைக்கதிர் மேடையைப் போல விக்கியின் நூல் வெளியீட்டிலும் சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசப்படக் கூடும் என்ற ஆர்வம் கலந்த ஊகங்கள் பரவலாகக் காணப்பட்டன.

ஆனால் அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்கும் மாறாக கடந்த ஞாயிற்றுக் கிழமை வீரசிங்கம் மண்டபம் நிரம்பி வழியவில்லை. விழா தொடங்கிய போது குறைந்தளவு எண்ணிக்கையினரே காணப்பட்டார்கள். பின்னர் படிப்படியாக அரங்கு நிறையத் தொடங்கியது. ஆனாலும் விழா முடியும் வரையிலும் அரங்கு முழுமையாக நிரம்பவே இல்லை.

நூலை தொகுத்தவர் விக்கியின் மாணவரும் லண்டன் வாசியுமான ஒரு வழக்கறிஞர் இப்பொழுதும் கூட்டமைப்பு முக்கியஸ்தருமாக காணப்படும் அவர் அதே சமயம் விக்கிக்கு விசுவாசமாகவும் காணப்படுகிறார்.

பேச்சாளர்களில் ஒருவர் மருத்துவர் லக்ஸ்மன் என்பதாலும் விக்கி தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவர் என்பதாலும் வெளியீட்டு விழாவை பேரவையே ஒழுங்கு படுத்தியது என்ற ஒரு பிழையான அபிப்பிராயம் நிலவியது. ஆனால் விழாவை ஒழுங்கு படுத்தியதில் பேரவைக்கு பங்கு எதுவும் இல்லை.

பேரவை உறுப்பினர்களுக்கு விக்கினேஸ்வரனின் அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ் அனுப்பப் பட்டதோடு சரி. விழா ஒழுங்குகளை விக்கியின் அலுவலகமே செய்திருந்தது. அதனால்தான் போலும் அரங்கில் அதிகளவு அரச அலுவலர்களையும் அதிகாரிகளையும் காண முடிந்தது

சம்பந்தருக்கு விக்கி முதலில் மின்மடல் அனுப்பியிருக்கிறார். ஆனால் சம்பந்தர் மின்மடல்களை கிரமமாக பார்ப்பதில்லையாம். அவருடைய மகன் தான் பார்த்து தகவல் தெரிவிப்பதுண்டாம்.

திருகோணமலையில் சம்பந்தர் நின்றிருந்த வேளை விக்கி மின்மடலை அனுப்பியிருக்கிறார். திருகோணமலையில் சம்பந்தருக்கு மின்மடலைப் பார்க்க நேரம் இருக்கவில்லை அல்லது அதற்குரிய ஏற்பாடுகள் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விக்கிக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை.

பின்னர் இது பற்றி சம்பந்தருக்குக் கூறப்பட்டுள்ளது. விக்கியும் சம்பந்தரை தொடர்பு கொண்டிருக்கிறார். சம்பந்தர் சம்மதித்திருக்கிறார். ஆனால் அவர் சம்மதிப்பதிற்கிடையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சொர்ணராஜாவை விக்கி ஒழுங்கு படுத்தி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிந்திச் சம்மதித்த சம்பந்தரை விக்கி மதித்து வரவேற்று உரிய கௌரவத்தையும் கொடுத்திருக்கிறார்.

விழாவில் பேசிய சம்பந்தர் வழமை போல பிடி கொடாமல் பேசினார். விக்கியும் வழமை போல தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடாமல் பேசினார். ஆனால் சம்பந்தரை அழைத்ததன் மூலம் விக்கி சம்பந்தருக்கு ஏதோ ஒரு சமிக்ஞையைக் காட்ட விளைகிறார். அதே சமயம் தனது பேச்சில் ஐக்கியத்தை பற்றி அழுத்திக் கூறியதன் மூலம் சம்பந்தர் விக்கிக்கு எதையோ உணர்த்த முற்படுகிறார்.

ஐக்கியத்துக்கு கொள்கை முக்கியம் என்று விக்கி கூறுகிறார். அப்படியானால் எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர் சம்பந்தரை அழைத்தார்? சம்பந்தரோடு இனிமேலும் சுதாகரிக்கலாம் என்று நம்புவதனாலா? அல்லது சம்பந்தருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதாலா?

கூட்டமைப்பின் தொடக்க நிலையில் காணப்பட்ட ஐக்கியத்தை நினைவூட்டியதன் மூலம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீள இணைத்து ஓர் ஐக்கியத்தை உருவாக்கலாம் என்று விக்கி நம்பகிறாரா? எந்த அடிப்படையில் அப்படியொரு ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது? அந்த ஐக்கியத்திற்கு அவர் தலைமை தாங்க விரும்புகிறாரா? அல்லது சம்பந்தரின் தலைமையின் கீழ் அவர் அதில் இணைந்து செயற்படத் தயாரா?

இக்கேள்விகளுக்கு விக்கினேஸ்வரனே பதில் கூற வேண்டும். இன முரண்பாடுகள் தொடர்பில் அவர் மிகத் தெளிவாகவும் துணிச்சலாகவும் பேசி வருகிறார். ஆனால் தான் பேசும் அரசியலை நிறுவனமயப்படுத்தும் செய்முறைகள் தொடர்பில் மிகக் குழப்பமான சமிக்ஞைகளை வெளிக்காட்டி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரது நூல் வெளியீட்டிலும் அவ்வாறான குழப்பமான சமிக்ஞைகளே வெளிக்காட்டப்பட்டன.

முதலாவது குழப்பம் நீதியரசர் பேசுகிறார் என்பது நூலின் தலைப்பு. அவர் முன்பு நீதியரசராக இருந்தவர். ஆனால் இப்பொழுது முதலமைச்சர் – அதாவது அரசியல்வாதி.

ஒரே நேரத்தில் அரசியல்வாதியாகவும் நீதியரசராகவும் இருக்க முடியுமா? அதுவும் இலங்கைத் தீவின் இனமயப்பட்ட ஓர் அரசியற் சூழலில்?

முதலமைச்சராகத் தான் அவர் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு நீதியரசராக அல்ல. ஆனால் தன்னை ஒரு நீதியரசராகக் காட்டுவதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் காட்ட விளையும் சமிக்ஞைகள் எவை?

அபகீர்த்தி மிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் நீதியரசராக உயர்ந்த அவர் இப்பொழுது அந்தச் சட்டத்திற்கு முழுக்க முழுக்க எதிரான ஓர் அரசியலைப் பேசி வருகிறார்.

ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு அவர் பேசிவரும் அரசியலே அவரைப் பிரபல்யப் படுத்தியது. ஆனால் அந்த அடையாளத்தை ஏன் அவர் முதன்மைப்படுத்த விரும்பவில்லை? அல்லது சம்பந்தரும் சுமந்திரனும் உட்பட கூட்டமைப்பு முக்கியஸ்தர்களாகக் காணப்படும் பலரும் வழக்கறிஞர்கள்.

வழக்கறிஞர்கள் மத்தியில் தன்னை ஒரு நீதியரசராக திரும்பத் திரும்ப நினைவூட்டுவதன் மூலம் வழக்கறிஞர்களை விடத் தான் மேலானவர் என்று காட்ட விளைகிறாரா? மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் முன்பு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவராகவுமிருந்த சிவகரன் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஒரு முறை பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘அவர் ஒரு நீதிபதி நீங்கள் எல்லாம் வழக்கறிஞர்கள். அவர் உங்களை மதிக்க மாட்டார்’ என்று.

இரண்டாவது குழப்பம் விழா ஏற்பாடு. ஒரு சராசரி நூல் வெளியீடாகவே அது காணப்பட்டது. சிறப்புப் பிரதிகளை பெறுவதற்கென்று குறிப்பிடத்தக்க அளவு புரவலர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். காசுக்காரர்களைக் கூப்பிட்டு நூலை விற்றுத்தான் புத்தக வெளியீட்டுச் செலவை சமாளிக்க வேண்டியிருந்ததா?

அதே சமயம் தமிழ் பரப்பில் முக்கியமான நூல்களை வெளியிடும் போது முதற் பிரதி அல்லது சிறப்புப் பிரதியினை யாரோ ஒரு முக்கிய ஆளுமைக்கே வழங்குவதுண்டு. காசுக்காரர்களைப் பட்டியலிட்டு அழைப்பது ஒரு வித சமானியத்தனம்தான்.

காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர்கள், காணிகளை மீட்கப் போராடும் மக்கள், அரசியல் கைதிகள் போன்றோருக்கே அவர் முதலமைச்சர். அவர்களையெல்லாம் மறந்து விட்டு காசுக்காரர்களையும் பிரமுகர்களையும் கூப்பிட்டு சிறப்புப் பிரதிகளை வழங்கியது ஏன்?

மூன்றாவது குழப்பம் ஊடகத்துறை தொடர்பானது. விக்கினேஸ்வரனின் எழுச்சியும், பேரவையின் எழுச்சியும், வலம்புரி பத்திரிகையின் எழுச்சியும், ஏறக்குறைய சமாந்தரமானவை. பேரவை தோன்ற முன்பு நிலவிய கூட்டமைப்புக்குச் சாதாகமான ஓர் ஊடகச் சூழலை மாற்றியமைத்ததில் வலம்புரிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

குறிப்பாக விக்கினேஸ்வரனை மேலுயர்த்தியது அதிகபட்சம் வலம்புரிதான். ஆனால் வலம்புரி ஆசிரியருக்கு சிறப்புப் பிரதி வழங்கப்படவில்லை. அதே சமயம் கூட்டமைப்பின் ஐக்கியத்தை வலியுறுத்தும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருக்கு சிறப்புப் பிரதி வழங்கப்பட்டது. வலம்புரி ஆசிரியர் பிரதிகள் வழங்கப்பட முன்னரே அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார்.

நான்காவது குழப்பம் டக்ளஸ் தேவானந்தவுக்கும் சந்திரகுமாரின் அணிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்? அவ்வாறு வரவேற்று அழைத்து விட்டு தேவானந்தாவை விமர்சித்ததன் மூலம் முதலமைச்சர் எப்படிப்பட்ட சமிக்ஞைகளை காட்ட விளைகிறார்?

இவை போல பல குழப்பங்கள் அந்த விழாவில் காணப்பட்டன. எனினும் அந்த விழாவானது சம்பந்தப்பட்ட பல தரப்புகளுக்கு பல்வேறு செய்திகளை உணர்த்தியிருக்கிறது. ஒரு புதிய கட்சியை அல்லது ஒரு புதிய கூட்டை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட விக்கி இப்பொழுதும் சமரசத்துக்குத் தான் தயார் என்ற செய்தியை சம்பந்தருக்கு உணர்தியிருக்கிறார்.

அதே சமயம் சம்பந்தர் ஐக்கியத்தை வலியுறுத்தியதன் மூலம் விக்கி கட்சியிலிருந்து பிரிந்து போவதை விரும்பவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். குறிப்பாக மேற்படி நூலை தொகுத்தது இப்பொழுதும் கூட்டமைப்பின் லண்டன் கிளைக்குத் தலைராக உள்ள ஒருவர்.

கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களில் ஒருவர். அவ்வாறான அக்கறையை வெளிக்காட்டும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியரை சிறப்புப் பிரதி பெறத் தெரிவு செய்ததன் மூலமும் ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது.

எனவே கூட்டமைப்பின் ஐக்கியத்தை அதாவது விக்கியை தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள்ளேயே தக்க வைக்கும் அக்கறையை கொண்டவர்கள் சம்பந்தருக்கும் விக்கிக்கும் ஒரு செய்தியை உணர்த்த முற்படுகிறார்கள்.

அதே சமயம் மேடையில் வைத்து விக்கி தனது நிலைப்பாடு எது என்பதை உணர்த்தியிருந்தார். அவரைப் போலவே தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகரான மருத்துவர் லக்ஸ்மனும் தனது நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்தியிருந்தார்.

சிறப்புரையாற்றிய சம்பந்தர் தான் ஐக்கியத்திற்குத் தயார் என்ற செய்தியை உணர்த்தியிருந்தார். இவ்வாறு அரசியல் வாதிகளும் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் தத்தமது செய்திகளை உணர்த்திய அந்த அரங்கில் சாதாரண சனங்களும் தமது செய்தியை உணர்தியிருந்தார்கள்.

வழமையாகப் பேரவைக் கூட்டங்களிற்கென்று ஒரு சனக் கூட்டம் வருவதுண்டு. ஆனால் கடந்த ஞாயிற்றுக் கிழமை அக்கூட்டம் ஒப்பீட்டளவில் குறைந்தளவே வந்திருந்தது. அன்றைய நாள் அதிகளவு அரச அலுவலர்களும் முழுக்கைச் சேட்டும் சப்பாத்தும் அணிந்த அதிகாரிகளும் அரங்கினுள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

இவர்களைத் தவிர சிறப்புப் பிரதி பெறுவோர் அரசியல் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் போன்றோரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒப்பீட்டளவில் குறைந்தளவு தொகையில் தான் விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் வந்திருந்தார்கள்.

இதற்கு முன் நடந்த பேரவைக் கூட்டத்திலும் இத்தொகை குறைவாகத்தான் காணப்பட்டது. அதாவது மண்டபம் நிரம்பி வழியும் அளவுக்கு சனத்தொகை அலை மோதவில்லை. இது எதைக் காட்டுகிறது?

சாதாரண சனங்கள் சலிப்படைந்து வருகிறார்கள். விக்கினேஸ்வரனின் தளம்பலான செயற்பாடும் இதற்கு ஒரு காரணம். ஒரு தலைவர் தனது ஜனங்களுக்கு தெளிவான துலக்கமான சமிக்ஞைகளை வழங்க வேண்டும்.

ஆனால் விக்கினேஸ்வரனோ மிகத் தெளிவாகப்  பேசுகிறார். ஆனால் ஒரு புறம் தனது அரசியலை நிறுவனமயப்படுத்த தயங்குகிறார். துணிந்து அடியெடுத்து வைத்து தனது ஆதரவாளர்களை வழிநடத்த அவர் இன்று வரையிலும் தயாரில்லை. இக்குழப்பமான சமிக்ஞைகளால் சாதாரண சனங்கள் குழப்பமடைகிறார்கள். எனவே கூட்டங்களுக்கு வரும் தொகையும் குறைந்து வருகிறது. இது விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு அவர்களுடைய ஆதரவாளர்கள் உணர்த்தியிருக்கும் ஒரு கூரான செய்தி!

http://athavannews.com/?page_id=600055&cat=162901&post=696714

  • தொடங்கியவர்

இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.