Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவின் பேச்சு

Featured Replies

விஜயகலாவின் பேச்சு
Vijayakala-UNP.jpg

2009ற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் வெள்ளி நாக்குகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறந்த பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையெனலாம். இருப்பவர்களில் பரவாயில்லாமல் பேசக்கூடியவர்கள் அல்லது பேச்சைத் தயாரித்துப் பேசுகிறவர்கள் என்று மிகச் சிலரைத்தான் கூறலாம்.

குறிப்பாகக் கூட்டமைப்புக்குள் தான் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். தனது பேச்சில் ஏதோ ஓர் அரசியல் செய்தி இருக்க வேண்டும் என்று சிந்தித்து பேச்சை முன் கூட்டியே தயாரித்து எழுதிக் கொண்டு வந்து வாசிப்பவர் விக்னேஸ்வரன். ஆனாலும் அவர் மேடையைத் தனது குரலால் கட்டிப்போடும் ஒரு பேச்சாளர் அல்ல. அவரோடு ஒப்பிடுகையில் சம்பந்தன் அழுத்தமான ஒரு பேச்சாளர் எனலாம். தான் கூற வரும் கருத்துக்கேற்ப குரலை ஏற்றியும் இறக்கியும் அழுத்தியும் நெகிழ்த்தியும் தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் பேச அவரால் முடியும்.

தனது வயதுக்குரிய தளர்ச்சியையும் மீறி அவர் பேசுவார். தனது பேச்சுக்குரிய குறிப்புக்களை எழுதிக் கொண்டு வந்து பேசுவார். மற்றவர் சுமந்திரன். இவரும் தான் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தயாரித்துப் பேசுகிறார் என்றே தோன்றுகிறது. அவருடைய குரல் தொனி மொழி உடல்மொழி என்பவற்றில் ஒருவித பயமின்மை இருக்கும் அவர் அனாயசமாகப் பேசுவார். சிறிதரனும் முக்கியமான உரைகளை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வருகிறார். தனது பேச்சு மற்றவர்களின் மனதில் பதிய வேண்டும் என்று அவரும் சிந்திக்கிறார்.

இவ்வாறு முன்கூட்டியே தயாரித்துப் பேசும் தலைவர்கள் கூட்டமைப்பிற்குள் மட்டுமல்ல கூட்டமைப்பிற்கு வெளியிலும் குறைவுதான். தாம் என்ன பேசுகிறோம் அதன் விளைவுகள் எவையெவை என்பவற்றைக் குறித்து பொறுப்புணர்வுடன் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சைப் பேசாதவர்களே தமிழ்ப்பரப்பில் அதிகம்
எனலாம்.

இந்த லட்சணத்தில் விக்னேஸ்வரன் எழுதிக் கொண்டு வந்து வாசிப்பதை சிலர் கிண்டலடிக்கிறார்கள். ஆனால் அப்படித் தனது பேச்சை எழுதிக் கொண்டு வந்திருந்திருந்தால் விஜயகலா மகேஸ்வரனுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது. விஜயகலா இது போல இதற்கு முன்னரும் பேசியிருக்கிறார். அவரும் பொறுப்புணர்வுடன் சிந்தித்து தனது பேச்சுக்ளைத் தயார்படுத்தும் ஒருவராகத் தெரியவில்லை.

வாக்குவேட்டை உத்தியாக வாக்காளர்களின் பொதுஉளவியலைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவர் இதற்கு முன்னரும் உரையாற்றியிருக்கிறார். அவர் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை பிள்ளையார் இன் விடுதியில் நடாத்தியது. இந்நிகழ்வில் புலிகள் இயக்கத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அது போலவே கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போது அங்கஜனும்ரூபவ், விஜயகலாவும் அறிக்கை விட்டார்கள். அதாவது தமது வாக்காளர்களின் பொது உளவியலை முன்னிட்டு புலிகள் இயக்கத்தைப் போற்ற வேண்டிய ஒரு தேவை தென்னிலங்கை மையக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

இப்படிப் பார்த்தால் விஜயகலா பேசியது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் அவர் ஒரு பிரதி அமைச்சராக இருந்து கொண்டு அப்படிப் பேசியதே பிரச்சினையாகியிருக்கிறது. அதையும் ஓர் அரச நிகழ்வில் இரண்டு அமைச்சர்கள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் நிறைய அரச அலுவலர்கள் மத்தியில் பேசியதே பிரச்சினையாகியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட அவரது பேச்சு ஒரு சர்ச்சையாகியதற்கு முக்கிய காரணம் அவர் அப்படிப் பேசிய கால கட்டம் தான்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அந்தப் பேச்சுக்கு ஒரு காலப் பொருத்தம் உண்டு. பெண்களுக்கு எதிரான இரண்டு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் உணர்ச்சிகரமாகக் காணப்பட்ட பொது உளவியலை முன்னிட்டு அவர் அப்படிப் பேசியிருக்கிறார். அது உடனடிக்கு அவருடைய பதவிக்கு ஆபத்தாக திரும்பியிருந்தாலும் நீண்ட கால நோக்கில் அது அவருடைய ஜனவசியத்தைப் பாதுகாத்திருக்கிறது. அதாவது அவருடைய வாக்கு வங்கியைப் பாதுகாத்திருக்கிறது. எனவே நீண்ட கால நோக்கில் குறிப்பாக தேர்தல் நோக்கு நிலையில் விஜயகலா தன்னைப் பலப்படுத்தியிருக்கிறார்.

இது யாழ்ப்பாணத்துக் களநிலவரத்தின் அப்படையில் ஆனால் தென்னிலங்கைக் களநிலவரத்தின் அடிப்படையிற் கூறின் விஜயகலா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கிளப்பியிருக்கும் ஒரு சர்ச்சைக்குட் சிக்கித் திணறிக் கொண்டிருந்த ராஜபக்ஷக்களுக்கு சிங்களப் பொது சனத்தின் உளவியலைத் திசைதிருப்ப ஒரு பிடி கிடைத்து விட்டது.

நியூயோர்க் ரைம்ஸின் செய்தி தற்செயலானது அல்ல. 2015 தேர்தல் காலத்தில் ராஜபக்ஷ சகோதரர்கள் சீனாவிடம் பெருந்தொகைப் பணம் பெற்றதாக அந்தச் செய்தி கூறுகிறது. இது ராஜபக்ஷக்ளுக்கு எப்படியெல்லாம் சீனா உதவியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு சான்றாகும். விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் சில கிழமைகளுக்கு முன் கோட்டாபய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பாது என்று கூறியிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி நியூயோர்க் ரைம்சின் செய்தி வந்திருக்கிறது.

அரசியலமைப்பு மாற்றப்படவில்லையென்றால் 2020 இல் அடுத்த அரசுத் தலைவருக்கான தேர்தலை வைக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து வருவதாக அமெரிக்கா கருதுவதனால்தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சில நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது. அப்படியொரு தேர்தல் களத்தில் ராஜபக்ஷக்ளை எதிர்கொள்வது கடினம் என்பது அமெரிக்காவுக்குத் தெரிகிறது.

எனவே தேர்தல் களத்தில் ராஜபக்ஷக்களைச் சந்திப்பதை விடவும் அதற்கு முன்னரே அவர்களை எப்படித் தடுக்கலாம் என்று அமெரிக்கா சிந்திக்கிறது. அமெரிக்கத் தூதுவரின் தலையீடு இதைத்தான் காட்டுகிறது. அத்தலையீட்டின் நீட்சியாகவே நியூயோர்க் ரைம்ஸின் செய்தியையும் பார்க்க வேண்டும். ராஜபக்ஷக்களை வெல்ல வைப்பதற்காக சீனா காசு கொடுத்தது என்று அச்செய்தி கூறுகிறது.

இது இலங்கைத்தீவின் அரசியலில் சீனாவின் தலையீட்டைக் காட்டுகிறது. இவ்வாறு அமெரிக்காவும் சீனாவும் தலையிடும் நிலையில்தான் இலங்கைத்தீவின் இறையாண்மை இருக்கிறது. ஆனால் இதுபற்றிக் கவலைப்படாத சிங்களக் கடும்போக்காளர்கள் விஜயகலாவின் விவகாரத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
இது தென்னிலங்கை அரசியலில் உள்ள ஒரு வழமைதான்.

சிங்களக் கட்சிகள் தமக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் இனவாதத்தைக் கிளப்பிப் பிரச்சினையைத் திசை திருப்பி விடுவார்கள். இனவாதம் மேலெழும்போது உட்கட்சி முரண்பாடுகளும் ஏனைய விவகாரங்களும் கீழே போய்விடும். விஜயகலா ஒரு தமிழ்ப்பெண் என்பதும் அவர் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயல்கிறார் என்பதும் இனவாதத்தைத் தூண்டப் போதுமானவை. இதில் விஜயகலா எந்தக் கட்சியின் ஆள் என்பது முக்கியத்துவமிழந்து விடும்.

நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டினால் அதிர்ந்து போயிருந்த ராஜபக்ஷக்கள் விஜயகலா போட்ட டம்மிக் குண்டை வெடிக்கச் செய்து சிங்கள வெகுசனத்தின் கவனத்தைத் திருப்பப் பார்க்கிறார்கள். விஜயகலாவின் டம்மிக்குண்டு எப்படிப்பட்ட தொடர் வெடிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அமைச்சர் மனோகணேசனின் குறிப்புக்கள் ஒரு சான்றாகும். விஜயகலாவின் பேச்சு வெளி வந்த உடன் மனோகணேசன் விஜயகலாவைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார்.

‘யாழில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். போதைவஸ்து கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. சினிமாப்பாணி வாள்வீச்சு நடக்கிறது. அரபுநாட்டு பாணியில் இந்த மனித மிருகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்க வேண்டிய போலீஸ் தூங்குகிறது.

இதையிட்டு பேசும்போது ஆத்திரத்தில் விஜகலா மகேஸ்வரன் புலிகளை பற்றி பேசிவிட்டார் என இங்கே தென்னிலங்கையில் சிலர் வானுக்கும் தரைக்கும் குதிக்கிறார்கள். உண்மையில் விஜகலாவை பற்றி அல்ல யாழில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்த நிலைமையை பற்றியே நாடு பேச வேண்டும்.’ என்று தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

ஆனால் ராஜபக்ஷக்கள் அந்த டம்மிக்குண்டைத் தொடர்ந்து வெடிக்க வைத்த போது மனோகணேசன் தனது முன்னைய நிலப்பாட்டிலிருந்து சற்றுப் பின்வாங்கி விட்டார். ‘விஜயகலா பொறுப்பில்லாத முறையில் பேசி அதன்மூலம் தன்னையும், தான் சார்ந்த மக்களையும் சட்ட மற்றும் அரசியல் சிக்கல்களில் மாட்டி வைத்து, தனது கட்சியையும் தர்ம சங்கடத்தில் சிக்க வைத்துள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் அமைதிரூபவ் இன சமத்துவம்ரூபவ் சகவாழ்வு என்று செயற்பட்டு, ஞானசாரர் போன்ற பேரினவாத கும்பலுக்கு கடந்த ஆட்சியில் கிடைத்தரூபவ் அரச ஆசீர்வாதம் இந்த ஆட்சியில் கிடைக்காமல் செய்ய உள்ளிருந்து போராடும் எம்மை போன்றவர்களையும் பலவீனப்படுத்தி விட்டார்.

விஜயகலா சிறுபிள்ளைத்தனமாக அழைப்பு விடுவதினாலேயே வடக்கில்-கிழக்கில் ஆயுத கிளர்ச்சி மீண்டும் உருவாக போவதில்லை என்று நாம் எவ்வளவு சிங்கள மொழியில் எடுத்து கூறினாலும்ரூபவ் ‘மீண்டும் புலிகள்’ என்ற கருத்து அரங்கேறும் சூழலை ஏற்படுத்தி விட்டார். (அவரது சிறுபிள்ளைத்தனம், இந்த
அரசுக்கு உள்ளே சிறுபிள்ளை அரசியல் செய்யும் இன்னொரு நபரான ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலிலேயே தெரிகிறது) ‘நியூயார்க் டைம்ஸ்’ சிக்கலில் மாட்டியிருந்த ராஜபக்ச அணிக்கு மூச்சு விட நேரம் தந்ததுடன், நேரடியாக தமிழ், முஸ்லிம் எதிர்ப்பு இனவாதம் பேசும் பொதுபல சேனை, ராவணபல சேனை, டான் பிரசாத் போன்ற சில்லறைகளை மீண்டும் அரங்குக்கு கொண்டு வந்து விட்டார்.

வடக்கின் உண்மை சமூக சவால்களான வாள்வீச்சு கலாச்சாரம், பாலியல் வல்லுறவு, கொள்ளை, கொலை, போதை வியாபாரம் மற்றும் பாவனை உள்ளடங்கிய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பிரச்சினையை பின்னணிக்கு தள்ளி விட்டார்.’ என்று மனோகணேசன் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

இது தென்னிலங்கையில் மேற்படி விவகாரம் எந்தளவுக்கு ஊதிப் பெருப்பிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சான்று. அதே சமயம் விஜயகலாவின் விவகாரத்தை முன்வைத்து பேசிய ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்? 600 பொலீஸ்காரர்களைக் கொன்றவரை கட்சி முக்கியஸ்தராக வைத்துக் கொண்டு விஜயகலாவை அவர்கள் விமர்சித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதாவது கருணாவுக்கு கட்சியில் முக்கிய இடத்தை கொடுத்திருக்கும் ராஜபக்ஷக்கள் இந்த விடயத்தைத் தூக்கிப்பிடிக்க முடியாது என்பது ரணிலுடைய தர்க்கம். ஆனால் இந்த தர்க்கத்திற்குள் இனவாதம் உண்டு. ஏனெனில் கருணாவும் ஒரு தமிழர்தான். இது போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சக்களை விமர்சிக்கும் போது அவர்கள் கே.பி எனப்படும் பத்மநாதனுக்கு புகலிடம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பினர் விமர்சிப்பதுண்டு. அதாவது இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தங்களுக்கிடையில் மோதும் போது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது எதிர்த்தரப்பிற்குள் நிற்கும் தமிழ்களைத்தான் கருணா, டக்ளஸ், கே.பி என்ற இந்த வரிசையில் இப்பொழுது விஜயகலா புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

விஜயகலா அவர்களுடைய காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ்ப்பெண் அரசியல்வாதி. ஆனால் அது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. அமெரிக்காவும், சீனாவும் நேரடியாகத் தலையிடும் அளவிற்குத்தான் இலங்கைத்தீவின் இறையாண்மை உள்ளது. அதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் வெளிச்சக்திகள் இவ்வாறு இச்சிறிய தீவுக்குள் தலையிடுவதற்குக் காரணமே இனப்பிரச்சினைதான்.

விஜயகலாவை ஒரு விவகாரமாக மாற்றும் அதே பிரச்சினைதான். அந்தப் பிரச்சினை இருக்கும் வரைக்கும் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும்
இச்சிறிய தீவினுள் தலையிட்டுக் கொண்டேயிருக்கும்.

http://athavannews.com/?page_id=600055&cat=163570

  • தொடங்கியவர்

நாடாளுமன்றத்தைக் குலுக்கிய- அந்த நான்கு வார்த்தைகள்!!

 

vijayakala-720x430.jpg

 
 

யாழ்ப்­பா­ணம்–வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் மக்­கள் சேவை நிகழ்­வின்­போது இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆற்­றிய உரை­யில் வெளி­யி­டப்­பட்ட நான்கு வார்த்­தை­கள் பெரும் பூகம்­ப­மாக மாறி, ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வானேறி, நாடு முழு­வ­தும் இர­வோ­டி­ர­வா­கப் பரந்து அடுத்த நாளில் இடம்­பெற்ற நாடா­ளு­மன்ற அமர்­வையே அதிர்ந்து குலுங்க வைத்­து­விட்­டன.

அந்த வார்த்­தை­கள் ஒன்­றி­ணைந்து எதிர்க்­கட்­சி­யி­னர், பதி­னான்கு பேர்­கள் கொண்ட அணி, அரச தரப்­பி­னர், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னர் என எவ­ரை­யும் விட்­டு­வைக்­கா­மல் கொதித்­தெழ வைத்­து­விட்­டன.
பாது­காப்­புப் பிர­தி­ய­மைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­தனா அவை உண்­மைக்­குப் புறம்­பா­னவை என்­றும் அதற்­கெ­தி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளில் ஒரு­வ­ரான பைசல் முஸ்­தபா அது கட்­சி­யின் கருத்­தல்ல எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தனது மறுப்பை வெளி­யிட்­டார். ஜே.வி.பியின் விஜித ஹேரத் தேசத்­தி­டம் மன்­னிப்­புக் கேட்­க­வேண்­டு­மென முழங்­கி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­சிறி விஜ­ய­சே­கரா விஜ­ய­க­லாவை நாடா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்­டு­ மெ­னப் பொங்­கி­யெ­ழுந்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹரின் பெர்­னாண்டோ அது கட்­சி­யின் கருத்­தல்ல என்­றும் விஜ­ய­கலா மீது ஒழுங்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என­வும் தெரி­வித்­தார்.
இவ்­வாறு அரச தரப்­பி­னர், விஜ­ய­கலா பேசி­யி­ருந்த வார்த்­தை­கள் தேச­வி­ரோ­த­மா­னவை என்ற பாணி­யி­ல் பேச, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ அதற்­கும் தங்களுக்கும் சம்­பந்­த­மில்­லை­யெ­ன­வும் வலி­யு­றுத்த நாடா­ளு­மன்­றத்­தில் அம­ளி­து­மளி தொடர்ந்­தது.

 

விசா­ர­ணை­க­ளும் குழப்­பங்­க­ளும்
இந்த நிலை­யில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளி­யிட்ட கருத்­துக்­கள் அர­ச­மைப்­பின் ஏழா­வது விதிக்கு விரோ­த­மா­னதா என்­பது தொடர்­பாக சபா­நா­ய­கர் ஆராய்ந்து அது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அறி­வித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். ஆனால், மகிந்த அணி­யி­னரோ, விமல் வீர­வன்ச அணி­யி­னரோ அடங்­கிப் போக­வில்லை.
தொடர்ந்து குழப்­பங்­களை விளை­ வித்­த­து­டன் ஒரு கட்­டத்­தில் செங்­கோ­லை­யும் தூக்க முயன்­ற­னர். ஆனால், நாடா­ளு­மன்­றச் சேவ­கர்­க­ளின் தலை­யீட்­டால் அது தடுத்து நிறுத்­தப்­பட்­டது. எது­வுமே செய்ய முடி­யாத நிலை­யில் சபா­நா­ய­கர் நாடா­ளு­மன்ற அமர்வை இடை­நி­றுத்­தி­னார். அரை மணி­நே­ரம் கழித்து மீண்­டும் சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது சமாந்­த­ர­மா­கக் குழப்­ப­மும் தொடங்­கி­விட்­டது.
வேறு­வ­ழி­யின்றிச் சபா­நா­ய­கர் சபையை அடுத்­த­நாள் வரை ஒத்­தி­வைத்­தார். நான்கு வார்த்­தை­கள், செய­லல்ல, வாயி­லி­ருந்து வெளி­யே­றிய வெறும் வார்த்­தை­கள் ஒரு நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தின் கத­வு­களை இழுத்­துப் பூட்ட வைத்­து­விட்­ட­ன­வென்­றால், அந்த வார்த்­தை­கள் அவ்­வ­ளவு வலிமை வாய்ந்­த­வையா என எண்­ணத் தோன்­று­கி­றது.

சக்தி மிக்க வார்த்­தை­கள்
‘புலி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டும்’ இவை­தான் அந்­தச் சக்தி வாய்ந்த வார்த்­தை­கள். இந்த வார்த்­தை­கள் நாடா­ளு­மன்ற அமர்வை இடை­நி­றுத்­தி­ய­து­டன் நின்­று­வி­ட­வில்லை. சபைக்கு வெளி­யே­யும் பல பிர­தி­ப­லிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தின. வட­மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இந்த வார்த்­தை­க­ளைக் கண்­டித்து கறுப்­புப் பட்­டி­ய­ணிந்து சபை அமர்­வில் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். சிஹல உறு­மய உட்­பட மூன்று சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­கள் விஜ­ய­கலா மீது முறைப்­பாடு செய்­துள்­ளன. இவை தொடர்­பாக விசா­ரிக்­கும்­படி சிறப்­புக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்­குப் பொலிஸ் மா அதி­பர் பணிப்­புரை ஒன்றை வழங்­கி­யுள்­ளார்.

விஜ­ய­க­லா­வுக்­கான ஆத­ரவு அணி
இந்த நான்கு வார்த்­தை­க­ளா­லும் தமது கட்­சி­பே­தங்­களை மறந்து பல தரப்­பி­ன­ரும் ஒன்று சேர்ந்­துள்ள வேளை­யில் மனோ கணே­சன் மட்­டும், ‘‘விஜயகலா­வின் கோபம் நியா­ய­மா­னது’’ என அடித்­துக் கூறி­யுள்­ளார். அதே­போன்று சுகா­தார அமைச்­சர் ராஜித சேன­ரத்­ன­வும் விஜ­ய­க­லா­வுக்கு ஆத­ர­வா­கக் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் விஜ­ய­க­லா­வின் கூற்று நியா­ய­மா­னது எனச் சில ஆதா­ரங்­க­ளு­டன் கூறி­யுள்­ளார். அதா­வது புலி­க­ளின் காலத்­தில் சூரி­யன் அஸ்­த­ம­மான பின்­பும் ஒரு பெண் நகை­கள் அணிந்தபடி பய­மின்றி வீதி­யால் போகும் நிலை இருந்­த­தென அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் எந்­த­வித கருத்­தை­யும் வெளி­யி­ட­வில்லை.
இறு­தி­யில் திரு­மதி விஜ­ய­கலா தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டிய பின்பு தனது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைத் தானே துறந்­துள்­ளார்.

விஜ­ய­கலா விட­யத்­தில் மாத்­தி­ரம் ஏன் கவ­னம்?
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­மைக்­கா­கச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுப் பின் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட கல­கொட அத்த ஞான­சார தேரர் நடத்­திய ஊடக சந்­திப்­பில் ‘ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு தந்­தி­ர­மான நரி என்­றும் – பிர­பா­க­ரன் அதைச் சொல்­லும்­போது தாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என­வும் இப்­போது தாங்­கள் பிர­பா­க­ர­னின் கூற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார். மேலும் ரணிலோ, மஹிந்­தவோ, மைத்­தி­ரியோ நாட்டை ஆளும் தகு­தி­யற்­ற­வர்­கள் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஞான­சா­ரர் பிர­பா­க­ர­னைப் புகழ்ந்­து­ரைத்­தது பற்றி தற்­ச­ம­யம் விஜய கலா­வுக்கு எதி­ராக துள்­ளிக் குதிப்­ப­வர்­கள் எவ­ரும் வாயைத் திறக்­க­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற ‘நீதி­ய­ர­சர் பேசு­கி­றார்’ என்ற புத்­தக வெளி­யீட்டு விழா­வில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன் விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தப் போராட்­டம் தொடர்ச்­சி­யான ஒடுக்­கு­மு­றை­கள் கார­ண­மா­கவே உரு­வா­ன­தெ­ன­வும், அது தோற்­க­டிக்­கப்­பட்­டா­லும் அதன் நியா­யத்தை யாரும் மறுத்து விட முடி­யா­தெ­ன­வும் தெளி­வா­கவே தெரி­வித்­தி­ருந்­தார். அங்கு உரை­யாற்­றிய வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னும் பிர­பா­க­ர­னின் இலட்­சி­யம் மழுங்­க­டிக்­கப்­ப­டக் கூடாது எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் சம்­பந்­தர் பற்­றியோ, விக்­னேஸ்­வ­ரன் பற்­றியோ எவ­ரும் கண்­ட­னக் குரல்­களை எழுப்­ப­வில்லை. ஏன் திரு­மதி விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக இவ்­வ­ளவு பெரும் எதிர்ப்பு என்ற கேள்வி எழு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கும்.

விஜ­ய­கலா பேசிய உரை­யின் சாரம்­சம் இது­தான்
‘ஒரு ஆறு­வ­ய­துச் சிறுமி பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுப் பின் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றாள். ஒரு பெண் கண­வ­னின் முன்­னி­லை­யில் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளாள். பெண்­ணின் வேத­னை­யைப் பெண்­க­ளா­லேயே உண­ர­மு­டி­யும். நாம் அச்­ச­மின்றி நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மா­னால் மீண்­டும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் உரு­வாக வேண்­டும். ஒரு அர­சி­யல்­வா­தி­யின் செல்­வாக்­கி­லேயே பல மதுக் கடை­க­ளுக்கு உரி­மம் வழங்­கப்­பட்­டது. இன்று பல குற்­றங்­க­ளுக்­குப் போதையே கார­ண­மா­யுள்­ளது’ எந்­த­வொரு தமி­ழ­ரைப் பார்த்­தும் இந்த உரை­யில் ஏதா­வது தவறு உள்­ளதா? என்று கேட்­டால் ஒரு சிறு தவ­றும் இல்லை என்றே பதில் வரும். ஏன் இத­ய­சுத்தி உள் மாற்­றி­னத்­த­வர்­க­ளும் தவ­றில்லை என்றே சொல்­வர். பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­க­ளில் மக்­கள் நம்­பிக்கை இழந்­துள்­ள­னர் என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

அரசு மீது நம்­பிக்கை அற்­ற­தன் வெளிப்­பாடே இது
மல்­லா­கம் சகாய மாதா கோயி­லில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தில் இளை­ஞர் ஒரு­வர் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டி­டால் உயி­ரி­ழந்­தார். காயப்­பட்­ட­வர்­களை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்ற பொது மக்­கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர். சூடு நடத்­திய பொலிஸ் அதி­காரி நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கொக்­கு­வி­லில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மேல் துப்­பாக்­கிச் சூடு மேற்­கொண்ட சந்­தே­க­ந­பர்­க­ளில் மூவர் அரச தரப்­புச் சாட்­சி­யாக மாற்­றப்­பட்­டுப் பிணை­யில்வி டப்­பட்­டுள்­ள­னர். புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை­யின் முக்கிய சந்­தேக நபர் கொழும்­புக்­குத் தப்­பி­யோ­டு­வ­தற்கு உத­வி­ய­தா­கப் பொலிஸ் அதி­காரி தேடப்­பட்டு வரு­கி­றார்.

காரை­ந­க­ரல் சிறுமி ஒருத்தி கடற்­ப­டைச் சிப்­பாய் ஒரு­வ­ரால் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட வழக்­கில் சந்­தே­க­ந­பர்  இல்­லா­மல் வேறு நபர்­கள் அடை­யாள அணி வகுப்­புக்கு நிறுத்­தப்­பட்ட சம்­ப­வ­மும் அம்­ப­லத்­துக்கு வந்­தி­ருந்­தது. எத்­த­னையோ கொலைக் குற்­றங்­கள் தொடர்­பா­ன­வர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. பல கொலைக் குற்­ற­வா­ளி­கள் நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டி­விட்­ட­னர். இப்­ப­டி­யான நிலை­யில் மக்­கள் எப்­ப­டிப் பொலி­ஸாரை நம்ப முடி­யும்? நீதி­யை­யும், அமை­தி­யை­யும், அச்­ச­மின்­மை­யை­யும் விரும்­பும் ஒரு­வர் விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டு­மென விரும்­பு­வ­தில் என்ன பிழை?

விஜ­ய­க­லா­வைக் குற்­ற­வா­ளி­யாக்கி விரல் நீட்­டு­வோர் விடு­த­லைப் புலி­கள் காலத்­தைப்­போன்று சட்­ட­வி­ரோ­தச் செயல்­களை ஒழிக்­க­மு­டி­யு­மென உத்­த­ர­வா­தம் செய்ய முடி­யுமா?

அந்த நாலு வார்த்­தை­க­ளைக் கண்டு துள்­ளிக் குதிக்­கும் பேர் வழி­கள் கொலை, களவு, பாலி­யல் வன்­பு­ணர்வு, வாள்வெட்டுக்கள் போன்ற சட்­ட­வி­ரோ­தக் குற்­றங்­களை இல்­லா­தொ­ழிப்­பார்­களா? அது சாத்­தி­ய­மில்லை? ஏனெ­னில் அவர்­க­ளில் பல­ரும்­தான் இப்­ப­டி­யான குற்­றங்­கள் தொடர்­பாக விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­வர்­கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் இவர்­கள் தங்­கள் எதிர்ப்­பின் மூலம் அந்த வார்த்­தை­க­ளின் வலி­மையை ஏற்­றுக்­கொண்டு விட்­ட­னர் என்­பதே உண்மை.

http://newuthayan.com/story/17/நாடாளுமன்றத்தைக்-குலுக்கிய-அந்த-நான்கு-வார்த்தைகள்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
விஜயகலாவும் விடுதலைப் புலிகளும்
 
 

வடக்கில் தலைவிரித்தாடும் வன்முறைச் சம்பவங்களும் சமூக விரோதச் செயல்களும் இப்போது தேசிய அரசியலிலும் பரபரப்பைத் தோற்றுவித்திருக்கின்ற விடய‍ங்களாக மாறியிருக்கின்றன.  

வடக்கில், விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழ் மக்கள் நிம்மதியோடு இருந்த சூழலை நினைவுபடுத்தி, இப்போதுள்ள நிலையை எண்ணி, வருத்தம் கொள்வோரே அதிகம்.  

வடக்கில் பெருகிவிட்ட போதைப்பொருள் பயன்பாடு, வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் என்பன, இங்குள்ள மக்களைப் பல்வேறு வழிகளில் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றன.  

அத்தகைய சிந்தனைகளுக்கு, அரசியல் பிரமுகர்களும் கூட விதிவிலக்காக இல்லை.  
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று வெளியிட்ட கருத்து அவ்வாறானதொன்று தான்.  

அரசியல் நோக்கம் கருதியோ, ஆதங்கத்தின் வெளிப்பாடாகவோ அல்லது வாய் தடுமாறியோ- எத்தகைய காரணத்தை அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியினரோ கூறினாலும் கூட, அவர் வெளியிட்ட கருத்து, அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த பெரும்பாலானவர்களால் கைதட்டி வரவேற்கப்பட்டிருந்தது. அதற்காக, அரச அதிகாரிகளும் விசாரணையை எதிர்கொள்ளும் சூழலும் தோன்றியிருக்கிறது.  

அதிலிருந்தே, இப்போதுள்ள சூழலில், குடாநாட்டில் உள்ள மக்கள், விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்ததைப் போன்ற நிலைக்காக ஏங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  

விஜயகலா மகேஸ்வரனின் அந்தக் கருத்து, கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.  பொதுவாகவே, புலிப் பூச்சாண்டி காட்டிப் பிழைப்பு நடத்தப்படும் கொழும்பு அரசியலில், அவர்களின் வாய்க்கு, நல்ல தீனியாக வாய்த்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன். 

ஆனால், விஜயகலா மகேஸ்வரன், ஏன் இப்படியான கருத்தை வெளியிட்டார் என்பதை, ஆராய்ந்து பார்க்கக் கூடிய நிலையில், எந்தச் சிங்கள அரசியல்வாதியும் இல்லை.  

வடக்கில் அதிகரித்திருக்கும் சமூக விரோதச் செயல்களும் வன்முறைகளும் தான், மீண்டும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கின்றன.  

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகியும் அந்தக் காலத்தை ஒரு பொற்காலமாக நினைவுகூரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை, பிரிவினையைத் தூண்டுதல் என்றோ, ஈழக் கோரிக்கையை கையில் எடுக்கிறார்கள் என்றோ, தப்பான முறையில் வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் தான் நடக்கின்றன.

போருக்குப் பின்னர், தமிழ் மக்களை நிரந்தரமாக, வாய்மூடி வைத்திருக்கச் செய்வதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிரந்தமாக நிறுத்தி வைத்திருப்பதற்காக, மீண்டும் ஒரு போராட்டம் பற்றிய சிந்தனைகளே வந்து விடக்கூடாது என்பதற்காக, பல்வேறு உபாயங்கள், அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும் வகுக்கப்பட்டன.  

பொதுவாகவே, போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வதற்கு வெளிப்படையானதும் இரகசியமானதுமான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படுவது வழக்கம். 

அத்தகைய திட்டங்கள், வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டமை உண்மை. அவ்வாறான செயற்றிட்டங்கள் பல அரசாங்கத்தால், இராணுவத்தால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டன. வேறு பல திட்டங்கள், இரகசியமாகவே முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய இரகசியத் திட்டங்களின் விளைவுகளே, வடக்கின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்ற பொதுவான கருத்து, பெருமளவானோரிடம் உள்ளது.  

அண்மைக்காலமாக, மீண்டும் குடாநாட்டில் வன்முறைகளும் சமூக விரோதச் செயல்களும் தலைவிரித்தாடத் தொடங்கிய போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று விதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  

முதலாவது, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தரப்பட்ட வேண்டும். அதன்மூலம், இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.  

இரண்டாவது, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை வெளியே கொண்டுவந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இத்தகைய செயல்களைத் தடுக்கலாம் என்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரப்போவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.  

மூன்றாவதாக, இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து. 

இந்த மூன்று கருத்துகளும் வெவ்வேறான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.  
மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் தரப்பட்டால், இவற்றை அடக்கி விடலாம் என்ற நம்பிக்கையில், முதலமைச்சர் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களைக் கூட, மாகாணசபையால் பயன்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் கொட்டி வருகிறார். பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குத் தரப்பட வேண்டும் என்பது, அவரது உறுதியான நிலைப்பாடு.    

போருக்குப் பின்னர், மத்திய அரசாங்கத்தால் தமிழ் மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாகாண அரசாங்கத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால், உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது முதலமைச்சரின் கருத்து.  

ஆனால், முதலமைச்சரின் கருத்துக்கும் அவரது நிலைப்பாட்டுக்கும் நேர்மாறாகவே, டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு உள்ளது.  டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில், முகாம்களுக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கும் இராணுவத்தினரை வெளியே கொண்டுவந்து, உலாவ விட வேண்டும். இராணுவத்தினரை வெளியே விட்டால், தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும் என்பது அவரது நினைப்பும் கணிப்பும்.  

அவர் அங்கம் வகித்த கடந்த ஆட்சியில், கிறீஸ் பூதங்கள் உலாவி, தமிழ் மக்களுக்குத் தொந்தரவு கொடுத்ததும், அந்தப் பூதங்கள், படை முகாம்களுக்குள்தான், ஓடி ஒளிந்து கொண்டதுமான குற்றச்சாட்டுகள், இன்னமும் தமிழ் மக்களால் மறக்கப்படவில்லை. வடக்கில், படையினர் தாராளமாக உலாவிய காலத்தில், எந்த வன்முறைகளும், சமூக விரோதச் செயல்களும் நடக்காதது போன்று இருக்கிறது, அவரது கருத்து.  

இப்போதும் கூட, வடக்கில் படையினரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும் தான், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று நம்பும் மக்கள், அதிகளவில் இருக்கிறார்கள். அதாவது, வடக்கில் படையினரை நிலைப்படுத்தி வைத்திருப்பது மற்றும் அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைக்காமல் வெளியே உலாவ விடும் நோக்கில், சில தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றனவோ என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது.  

ஆனால், இவர்கள் இருவரினது கருத்துகளில் இருந்து, முற்றிலும் வேறுபடுகிறது விஜயகலா மகேஸ்வரனின் நிலைப்பாடு. அது வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில், கோபத்தில், ஆதங்கத்தில் வெளிவந்தது. ஆனால் உண்மையானது. எனினும், அதனைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.   

அதாவது, மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்கவோ, வலுப்படுத்தவோ முடியாது. வெறும் பேச்சுக்கு அதனைக் கூறலாமே தவிர, நடைமுறைப்படுத்த முடியாது; அதற்கு சட்டமும் இடமளிக்காது.  

‘அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்ற பாணியில், தமிழ் மக்களுக்குத் தொந்தரவுகளைக் கொடுத்தால், அவர்கள், இராணுவ இருப்பையும் அவர்களின் தேவையையும் உணர்வார்கள் என்ற பாணியில் சிந்திக்கத் தலைப்பட்டால் அது ஆபத்தான விளைவுகளையே தரும் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது.  

அதாவது, வடக்கைக் கையில் வைத்திருப்பதற்கு, சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளைக் கையாள்வது- குறிப்பாக, இரகசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, எதிர்பார்க்கின்ற பலனைத் தராது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தோல்வி காணும் போது, இராணுவத்தின் தேவையை தமிழ் மக்கள் உணர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில், காரியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு மாறான தேவையே உணரப்பட்டிருக்கிறது.  

யார் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நம்பியிருந்தார்களோ, அவர்களின் தேவையையே தமிழ் மக்கள் உணரும் நிலை தோன்றியிருக்கிறது. அதாவது, புலிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நிலையைத் தோற்றுவித்திருப்பது, நிச்சயமாகத் தமிழ் மக்களல்ல.   

இது அரசாங்கத்தின், படைகளின் தோல்வியாகும். ஆனாலும், இதனை மறைத்துக் கொண்டு, இராணுவத்தை இறக்கி, நிலைமையைக் கட்டுப்படுத்துவோம் என்று இறங்கினால், அது மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.  

இந்த நிலைமையை அரசாங்கம், யதார்த்தமான வழிகளில் கையாளத் தவறினால் அது, பேராபத்தில் தான் போய் முடியும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விஜயகலாவும்-விடுதலைப்-புலிகளும்/91-218645

  • தொடங்கியவர்
‘உள்ளத்தைக் கொட்டினார்; உள்ளதைக் கொட்டினார்’
 
 

தமிழ் மக்கள், தங்களது உயிரிலும் மேலாகப் போற்றித் துதிக்கும் கலாசாரம், பண்பாடு ஆகியவை, அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே என்றுமில்லாதவாறு, பெரும் சவால்களுக்கு ஆட்பட்டுள்ளன.  அன்றாடம் எண்ணிலடங்காத, பலவித சமூக விரோத செயற்பாடுகளுக்கு, முகம் கொடுத்து வருகின்றது.   

திடீர் சுற்றிவளைப்புகள், கைதுகள், சித்திரவதைகள் , வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், விமானக் குண்டு வீச்சுகள், எறிகணைத் தாக்குதல்கள், விழுப்புண்கள்,   மரணம், தொடர் இடப்பெயர்வுகள் என 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழர்களது வாழ்வு, இருள்மயமாகக் கழிந்தது.   

ஆனால், நாட்டில் தற்போது சமாதானம், சகவாழ்வு, நலவாழ்வு நல்லாட்சி மலர்ந்துள்ளது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால், போரால் ஏற்படுத்தப்பட்ட பலவிதமான மனவடுக்களை, மனதில் சுமந்த வண்ணம் அல்லல்படுகின்றது தமிழர் சமூதாயம்.  போதிய ஆற்றுப்படுத்தல்கள் இன்றி, அனாதரவான நிலையில் உள்ளது.  

இது இவ்வாறிருக்க, பனையால் வீழ்ந்தவனை மாடு மிதித்தது போல, தற்போது தமிழர் பிரதேசங்களில், அதிகரித்த மதுப் பாவனை, போதைப் பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் வாள் வெட்டுக் கும்பல், திருட்டுக் கும்பல் எனத் தொடர்ந்து, விடாது துரத்தும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளால், திக்குமுக்காடிச் சிதைவுக்கு உட்படுகின்றது தமிழர் வாழ்வு. இதன் உச்சக்கட்டமாக,  உயிர் வாழ்தலே ஊசலாடுகின்றது.   

மொத்தத்தில், யுத்த காலத்திலும் யுத்தம் இல்லாத காலத்திலும் தமிழ் மக்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தோ(ற்றுவிக்கப்பட்டு)ன்றி உள்ளது.   

இவ்வாறான சமூகப் பிறழ்வுப் பிரச்சினைகள், புலிகள் காலத்தில் பூச்சியத்தை அண்மித்த நிலையில் அல்லது பூச்சிய நிலையில் காணப்பட்டது எனக் கூறலாம். இதை மய்யப்படுத்தியே, ‘புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்; அவர்கள் உருவானால், இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் போகும்’ எனச் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.  

நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பின்தள்ளி, தற்போது இதுவே நாட்டின், பிரதான பேசுபொருள். அனைத்து மொழித் தினசரி செய்தித்தாள்களின் முக்கிய செய்தி.   

சரி, விஜயகலாவின் பேச்சு, வில்லங்கமான பேச்சு; விவகாரமான பேச்சு; விவரம் அறியாத பேச்சு, சிறுபிள்ளைத்தனமான பேச்சு; சிங்கள மக்களை உசுப்பேற்றும் பேச்சு என எவ்வாறாகவேனும் எடுத்துக் கொள்ளட்டும்.   

புலிகள் மௌனித்து பத்து ஆண்டுகள் கடந்தும், தமிழ்ச்சமூகத்திலுள்ள சாதாரண பொதுமகன் தொடக்கம், ஓர் இராஜாங்க அமைச்சர் வரை, புலிகள் தொடர்பில் ஏன் சிந்திக்கின்றனர் என, எந்தச் சிங்கள மகனும் இன்னமும் சிந்திக்கவில்லை.   

ஏன், புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது என்று கூடச் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு சிந்திக்க, பௌத்த சிங்கள கடும் போக்குவாதம் இம்மியளவும் இடமளிக்கவும் இல்லை.  

பலமடங்கு அதிகரித்த ஆட்பலத்தால், ஆயுத பலத்தால் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்தாலும், அவர்களது ஆன்மாவை அனுக முடியவில்லை. இனியும், அவ்வாறு அணுக முடியப்போவதில்லை என்பதையே  அண்மைய நிகழ்வுகள், ஆணித்தரமாகக் கட்டியம் கூறி நிற்கின்றன.   

உண்மையில், இவ்வாறு கூச்சல், குழப்பம் இட்டு, மற்றவரில் தவறுகளைக் கண்டுபிடிப்போர், தங்களது 70 ஆண்டுகாலத் தவறுகளை, மானசீகமாக ஒரு கணம் எண்ணியிருந்தால், ஆயுதப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்தும், சொற்போர் பிடிக்க வேண்டிய தேவையில்லை; மல்லுக்கட்ட வேண்டிய அவசியமில்லை.   

கடந்த மூன்று தசாப்த கொடிய யுத்தத்தின் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெடிய மன உளைச்சலை, இம்மியளவும் பொருட்படுத்தாது, அதனது வேதனைகளைப் புரிந்துகொள்ள விளையாது, அதன் ஊடே தங்கள் அரசியல் விளைச்சலை முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களையே ஆட்சியாளர்கள்  தீட்டுகின்றனர்.    

தமிழ் மக்களையும் இந்த நாட்டின் சம பங்குதாரர்களாகக் கருதி, அவர்களையும் அணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல, கொழும்பு எப்பொழுதும் தயாரில்லை என்பதை மீண்டும் ஒரு முறை சிங்களம் தெளிவாக காண்பித்து உள்ளது.   

இதற்கிடையில், விஜயகலாவின் உரையைக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடிவுரை எழுத முயல்கின்றது. 

சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு, சிங்களப் பௌத்த வாக்குகள் மிகவும் முக்கியமானவை; பொன்னானவை. அவற்றை இழப்பது, தம் அரசியல் வாழ்வை இழப்பதற்கு ஒப்பானது.   

அதனடிப்படையில், “ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையைப் பாதுகாப்போம் போன்ற கொள்ளைகளின்  பிரகாரம் நாம் செயற்படுவோம்” என விஜயகலா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க தெளிவாகத் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம், சிங்களப் பௌத்தர்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அவர்கள் அச்சத்தையும் தனது அச்சத்தையும் நீக்கியுள்ளது.   

ஆகவே, ஒற்றையாட்சியில் சிங்கள தேசம் ஒற்றுமைப்பட்டு உள்ளது. எனவே, வரவுள்ள அரசமைப்பு ஒற்றையாட்சியை ஒட்டியதாவே அமையும் என எதிர்பார்க்கலாம். 

பழைய அரசமைப்பின் பிரதியே, புதிய ஒற்றையில் வரப்போகின்றது. இது தமிழ் மக்களின் வளர்ச்சியை ஓரம் கட்டும்; இருப்பை  ஒழித்துக் கட்டும்.   

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், “தமிழ் மக்களது, வலிக்கான நியாயமான நிவாரணியாக, அரசமைப்பு அமையும்” என நீண்ட காலமாகக் கூறி வருகின்றார். 

அரசியல் தீர்வு (அரசமைப்பு), அபிவிருத்தி என்பன வழமை போன்று, வெறும் கண் துடைப்பு நாடகங்கள் ஆகும்.   

அங்கே, தமிழ் மக்களது பாதுகாப்பு, தமிழ் மக்களது நிலத்தின், தமிழ் மொழியின், பொருளாதாரத்தின் பாதுகாப்பு என அவர்களது ஒட்டு மொத்த இருப்பின் பாதுகாப்பு என்பன தொக்கி நிற்கும் வினாக்கள் ஆகும்.  இந்நிலையில், விஜயகலா விவகாரம் பல படிப்பினைகளைத் தமிழ் மக்களுக்குத் தெளிவாக உறைக்கும் படியாக, உரத்து நிற்கின்றது. 

அண்ணளவாக, சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக, கணவன் - மனைவி என இருவரும் கடுமையான பல நெருக்குவாரங்களுக்கு மத்தியில், உயிரைப் பறிகொடுத்து, யாழ்ப்பாணத்தில் கட்டி வளர்த்த கட்சியால், அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் நன்மைகள் கிட்டவில்லை.   

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக வீற்றிருந்தும், தமிழர் பிரதேசங்களில் வீழ்ந்திருக்கும் சிறுவர், பெண்கள் விகார விவகாரங்களைத் தூக்கி நிமிர்த்த முடியாமல் போய் விட்டது. அதன் குற்ற உணர்வே, கையறு நிலையே அவரின் பேச்சு.   

கொழும்பின் மனது சற்றேனும் நோகாது, அடக்கம் ஒடுக்கமாகப் பவ்வியமாக அவர்களுக்குச் சேவகம் செய்தால், பல பட்டங்கள், பதவிகள் காலடி தேடி வரும். 

அதனை விடுத்து, தமிழ் மக்களது நியாயப்பாடுகளுக்காகக் குரல் கொடுத்தால், அவர்களது காலடி பதம் பார்க்கும். இதுவே, பலருக்கும் நடந்தது; கடைசியாக விஜயகலாவுக்கும் நடந்துள்ளது.    

பல ஆயிரக்கணக்கில் முப்படையினர் ஏப்பமிட்ட தமிழ் மக்களது விவசாய நிலங்களையும் அடாத்தாக படை ஆசிர்வாத்துடன் சிங்கள விவசாயிகளால் கடந்த காலங்களில் பறித்தெடுத்த தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் குறித்த விவகாரத்தை அரசாங்கத்தின் முன் கொண்டுசென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நியாயம் கேட்க, தேசியப் பட்டியல் மூலமாக, மத்திய அரசாங்கத்தின் பிரதி விவசாய அமைச்சராக இருக்கும் அங்கஜன் இராமநாதனால் முடியுமா?   

தொல்பொருள்,  வனபரிபாலன திணைக்களங்களால் பல்வேறு வழிகளிலும் விழுங்கப்படும் தமிழ் மக்களது காணிகளைத் தடுக்து நிறுத்த முடியுமா? மீட்டுக் கொடுக்க முடியுமா? இந்நிலையில், தமிழ் மக்களுக்கு, சிங்களப் பெருந் தேசியக் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைப்பது என்பது தொடுவானம் போன்றதாகவே  உள்ளது.   

ஆகவே, ஈழத்தமிழ் இனம், தனது விடுதலையை வென்றெடுக்க இனி, என்ன செய்யப் போகின்றது என்பதே உணர்வுள்ள யாவரின் முக்கிய கேள்வி ஆகும்.   

விடை இலகுவானது; ஆனால் நடைமுறைக்கு முற்றிலும் கடினமானது. அதுவே, தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை தொடர்பாகச் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், சாதாரன பொதுமக்கள் என அனைவரும் கதைத்துக் கதைத்து, அலுத்துப் போய் விட்டார்கள்; வெறுத்துப்போய் இருக்கின்றார்கள்.   

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இன்றி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள், அடக்கிக் காட்டுகின்றோம் என அரசாங்கத்துக்கு சவால் விட்டிருக்கின்றார் வடக்கு முதலமைச்சர்.   

“எங்கள் குரல்கள் வலிமையற்றவை; ஆதலால் குரல்வளை நசுக்கப்படுகின்றோம். எம்மிடம் அதிகாரம் இல்லை; ஆதலால் எமக்கான பாதுகாப்பும் எம்மிடம் இல்லை. எமக்கான மரியாதை இல்லை; ஆதலால் புறக்கணிக்கப்படுகின்றோம்.  இறுதியாக எம்மிடம் ஒற்றுமை இல்லை; ஆதலால் பலமாக ஒடுக்கப்படுகின்றோம் -  அடக்கப்படுகின்றோம். எங்கள் நியாயங்கள், அவர்களது வலிமைக்கு முன்னால் தோற்று விட்டன. ஆகவே, உண்மையான நேரிய பாதை கொண்ட தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை ஒன்றே, மீண்டும் தலை நிமிர வழி வகுக்கும். ஆதலால் வலி நீங்கும்”   

முன்னாள் இராஜாங்க அமைச்சர், ஆற்றாமையால் தனது உள்ளத்தில் உறைந்திருந்ததைக் கொட்டினார். இதன் காரணமாக, இந்நாள் முதலமைச்சர்  உண்மையாக உள்ளதைக் கொட்டினார். அவ்வளவு மட்டுமே. இதில் வேறு என்னதான் உள்ளது?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உள்ளத்தைக்-கொட்டினார்-உள்ளதைக்-கொட்டினார்/91-218788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.